யெகோவாவை பிரியப்படுத்துவதுதான் என் ஒரே இலட்சியம்
தியாடரஸ் நீராஸ் சொன்னபடி
சிறைச்சாலையில் நான் இருந்த அறையின் கதவு படாரென்று திறந்தது; “நீராஸுன்றது யாரு?” என ஒரு அதிகாரி கத்தினார். நான்தான் என சொன்னபோது, “எந்திரி, நாங்க உன்னை கொல்லப் போறோம்” என அவர் உத்தரவிட்டார். 1952-ம் வருடம் கிரீஸிலுள்ள கொரிந்து ராணுவ முகாமில் இது நடந்தது. என் உயிர் ஏன் இப்படி ஊசலாடிக் கொண்டிருந்தது? அதை விளக்குவதற்கு முன்பு, என் குடும்பத்தைப் பற்றி கொஞ்சம் சொல்கிறேன்.
என்னுடைய அப்பாவை சுமார் 1925-ம் வருடத்தில் பைபிள் மாணாக்கர்கள் சந்தித்தனர்; யெகோவாவின் சாட்சிகள் அன்று அவ்வாறே அழைக்கப்பட்டனர். விரைவில் அப்பா அவர்களில் ஒருவராக ஆனார்; தன்னுடைய நம்பிக்கைகளை தன் எட்டு சகோதர சகோதரிகளுக்கும் தெரிவித்தார்; அவர்கள் எல்லாருமே சத்தியத்தை ஏற்றுக்கொண்டனர். அதேபோல அவருடைய பெற்றோரும் ஏற்றுக்கொண்டனர். கொஞ்சநாளுக்கு பிறகு, அப்பா திருமணம் செய்தார்; 1929-ம் ஆண்டு நான் கிரீஸிலுள்ள ஆகிரின்யோவில் பிறந்தேன்.
கிரீஸ் இரத்தக் கண்ணீர் வடித்த நாட்கள் அவை! ஆரம்பத்தில் சர்வாதிகாரியான ஜெனரல் மெடாக்ஸாஸ் மக்களை ஆட்டிப்படைத்தான்; பிறகு, 1939-ல் இரண்டாம் உலகப்போர் வெடித்த சிறிது நாட்களுக்குள் இந்நாட்டை நாசிக்கள் ஆக்கிரமித்தனர். நோயும் பசியும் தலைவிரித்தாடியது. புடைத்த சடலங்களை சிறிய தள்ளுவண்டிகளில் அள்ளிச் சென்றனர். உலகில் அக்கிரமம் தாங்கமுடியாத அளவுக்கு சென்றது; கடவுளுடைய ராஜ்யம் வராமல் தாக்குப்பிடிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது.
ஒப்புக்கொடுத்து கடவுளை சேவித்தல்
1942 ஆகஸ்ட் 20-ம் தேதி, தெஸ்ஸலோனிகிக்கு வெளியே ஒரு கூட்டம் நடத்துவதற்காக எங்களில் சிலர் கூடினோம். பிரிட்டிஷ் யுத்த விமானங்கள் நகரெங்கும் குண்டு வீசுவதைப்பற்றி எங்களுடைய நடத்தும் கண்காணி தெரிவித்தார்; ‘சபை கூடிவருதலை . . . விட்டுவிடாமல்’ இருக்கவேண்டும் என்ற அறிவுரைக்கு கீழ்ப்படிவதால் எப்படி பாதுகாக்கப்படுகிறோம் என்பதை வலியுறுத்திக் காட்டினார். (எபிரெயர் 10:25) அந்த நிகழ்ச்சி கடற்கரையோரமாக நடைபெற்றது; முழுக்காட்டுதல் எடுத்தவர்களில் நானும் ஒருவன். நாங்கள் தண்ணீரிலிருந்து வெளியேறி வரிசையாக நின்றோம், நாங்கள் செய்திருந்த தீர்மானத்தைப் பாராட்டி கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் பாட்டு பாடினர். அப்பப்பா, மறக்கமுடியாத நாள் அது!
அதற்குப்பிறகு, கொஞ்சநாள் கழித்து, நானும் இன்னொரு பையனும் வீட்டுக்குவீடு ஊழியம் செய்து கொண்டிருந்தபோது, போலீஸ்காரர்கள் எங்களை கைது செய்து ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். நாங்கள் கம்யூனிஸ்டுகளாக கருதப்பட்டோம் என்றும், பிரசங்கிக்கக் கூடாது என்றும் திரும்பத் திரும்ப சொல்லி அடித்தனர்; “முட்டாப்பசங்களா, உங்க யெகோவாவும் ஸ்டாலினும் ஒண்ணுதான்டா!” என்றும் கூறினர்.
கிரீஸில் உள்நாட்டுப் போர் மூண்ட சமயம் அது; கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான அலை மேலோங்கியிருந்தது. அடுத்த நாள் கிரிமினல்களைப்போல் எங்கள் கையில் விலங்குமாட்டி எங்கள் வீடுகள் வழியாய் ஊர்வலமாக கொண்டுசென்றனர். ஆனால் நான் எதிர்ப்பட்ட சோதனை இதோடு முடிந்துவிடவில்லை.
ஸ்கூலில் விசுவாசப் பரிட்சை
1944-ன் துவக்கத்தில் நான் ஸ்கூலில்தான் படித்துக் கொண்டிருந்தேன்; தெஸ்ஸலோனிகி நாசிக்களின் பிடியில்தான் இன்னும் இருந்தது. ஸ்கூலில் எங்களுக்கு மதப்பாடத்தை நடத்திய புரபஸர் ஒரு கிரேக்க ஆர்த்தடாக்ஸ் பாதிரி; ஒருநாள், அன்று படித்த பாடத்திலிருந்து சில கேள்விகளைக் கேட்கப்போவதாக என்னிடம் சொன்னார். “அவன் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்டியன் இல்ல” என்று மற்ற பிள்ளைகள் கத்தினார்கள்.
“அப்படின்னா, வேற எந்த மதத்தில இருக்கான்?” என புரபஸர் கேட்டார்.
“நான் ஒரு யெகோவாவின் சாட்சி,” என பதிலளித்தேன்.
புரபஸருக்கு வந்ததே கோபம், “ஆட்டு மந்தைக்குள்ள ஒரு ஓநாய்,” என கத்திக்கொண்டே, என்னைப் பிடித்திழுத்து பளாரென்று அறைவிட்டார்.
‘ஆடு ஓநாய்ய அடிக்கமுடியுமா?’ என்று நான் மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.
சிலநாளுக்கு பிறகு, நாங்கள் ஏறக்குறைய 350 பேர் மத்தியானச் சாப்பாட்டுக்காக டேபிள்களில் உட்கார்ந்திருந்தோம். “நிராஸ் இப்போது ஜெபம் செய்வான்” என்று சூப்பர்வைசர் சொன்னார். மத்தேயு 6:9-13-ல் பதிவு செய்யப்பட்டுள்ள ‘பரமண்டல ஜெபத்தை,’ அதாவது இயேசு தம் சீடர்களுக்கு கற்றுக்கொடுத்த ஜெபத்தை சொன்னேன். நான் அந்த ஜெபத்தை சொன்னது சூப்பர்வைசருக்கு பிடிக்கவில்லை; “உன்னை யாரு இந்த ஜெபத்தை சொல்லச்சொன்னா?” என்று உட்கார்ந்த இடத்திலிருந்தே கோபமாக கத்தினார்.
“ஏன்னா, நான் ஒரு யெகோவாவின் சாட்சி” என சொன்னேன். உடனே அவரும் என்னை பிடித்திழுத்து அறைந்தார். அதே நாளில் வேறொரு ஆசிரியர் தன்னுடைய ஆபிஸ் ரூமுக்கு என்னை கூப்பிட்டு, “சபாஷ், நீராஸ், நீ நம்பறதுல உறுதியா இரு, மத்தவங்களுக்காக அத விட்டுக்கொடுத்துறாத” என்றார். அன்றிரவு, அப்போஸ்தலன் பவுலின் வார்த்தைகளைச் சொல்லி அப்பா என்னை தேற்றினார்: “கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.”—2 தீமோத்தேயு 3:12.
நான் ஹைஸ்கூல் முடித்தபோது, என் வாழ்க்கைத் தொழிலை தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. கிரீஸில் உள்நாட்டுப்போர் தொடர்ந்தது; கிறிஸ்தவ நடுநிலை வகிப்பை கடைப்பிடித்ததால் எனக்கும் பிரச்சினைகள் வந்தன. (ஏசாயா 2:4; மத்தேயு 26:52) கடைசியில் 1952-ன் ஆரம்பத்தில், கிரேக்க வரலாற்றின் மிக குரூரமான காலகட்டத்தில் ஆயுதம் ஏந்தி போரில் ஈடுபட மறுத்ததற்காக 20 ஆண்டு சிறைதண்டனை அளிக்கப்பட்டேன்.
கிறிஸ்தவ நடுநிலைவகிப்பு பரிட்சிக்கப்பட்டது
மெசலாங்கியனிலும் கொரிந்துவிலும் உள்ள ராணுவ முகாமில் சிறைவைக்கப்பட்டேன்; அரசியலை ஆதரிப்பதற்காக போர்வீரனாவதை பைபிளில் பயிற்றுவிக்கப்பட்ட என் மனசாட்சி அனுமதிக்காது என அங்கேயிருந்த ராணுவ கமாண்டர்களிடம் தெரிவித்தேன். 2 தீமோத்தேயு 2:3-ஐ சுட்டிக்காட்டி, “நான் ஏற்கெனவே இயேசுவின் போர்ச்சேவகனாய் இருக்கிறேன்” என்பதை விளக்கினேன். ஆனாலும், நீ ஏன் போர் செய்யத் தயங்குகிறாய் என்று சும்மா சும்மா தொல்லைக் கொடுத்தார்கள். அப்போது, “நான் தீர்க்கமாய் யோசித்துதான் முடிவெடுத்தேன். கடவுளுடைய சித்தத்தைச் செய்ய என்னை அர்ப்பணித்துவிட்டேன். போர் செய்வதைப் பற்றி என்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியாது” என்று பதிலளித்தேன்.
அதன் விளைவாக, கட்டாய வேலை செய்யும்படி தண்டனை கொடுத்தார்கள்; 20 நாட்கள் ஒருநாள்விட்டு ஒருநாள்தான் சாப்பாடு போட்டார்கள்; இரண்டு மீட்டர் நீளமும் ஒரு மீட்டர் அகலமும்கூட இல்லாத ஒரு சிறிய அறையின் சிமெண்ட் தரையில் தூங்கச் சொன்னார்கள். இந்த சின்ன ரூமில் நான் மட்டுமல்ல என்னோடு இன்னும் இரண்டு சாட்சிகளும் இருந்தனர்! இந்த கொரிந்து முகாமிலிருந்தபோதுதான் சிறை அறையிலிருந்து என்னை கொல்வதற்கு அழைத்துச் சென்றார்கள்.
மரண தண்டனை கொடுக்கப்படுகிற இடத்தை நெருங்கியபோது, “கடைசியா, ஏதாச்சும் சொல்லனும்னு நினைக்கிறயா?” என்று அதிகாரி கேட்டார்.
“இல்லை.”
“உங்க வீட்டுல இருக்கிறவங்களுக்கு ஒரு லெட்டர் எழுதக்கூட உனக்கு விருப்பமில்லையா?”
“இல்லை, என்னை சாகடிச்சுடுவீங்கன்னு அவங்களுக்கு முன்னாடியே தெரியும்” என நான் பதிலளித்தேன்.
நாங்கள் சிறைக்கு வெளியே வந்தோம்; என்னிடம் சுவர்ப்பக்கமாக திரும்பி நிற்கும்படி கட்டளையிட்டார்கள். பிறகு, சுடும்படி வீரர்களை உத்தரவிடுவதற்கு பதிலாக, “உள்ளே கூட்டிட்டு போ” என்று அதிகாரி சொன்னார். இது வெறும் கண்துடைப்புதான். நான் எந்தளவுக்கு உறுதியாய் இருக்கிறேன் என்பதை பரிட்சிப்பதற்காக கொலை செய்யப்போவதைப்போல் பாவனை செய்தார்கள்.
பின்பு, மாக்ரானிஸாஸ் தீவுக்கு அனுப்பப்பட்டேன்; அங்கு பைபிளைத் தவிர எந்த பிரசுரத்தையும் வைக்க அனுமதிக்கவில்லை. ஒரு சிறிய வீட்டில் 13 சாட்சிகளை அடைத்து வைத்திருந்தனர்; கிட்டத்தட்ட 500 கிரிமினல் கைதிகளிடமிருந்து பிரித்து, எங்களை தனியே வைத்திருந்தனர்; இருந்தாலும், எப்படியோ பிரசுரங்கள் எங்களிடம் வந்து சேர்ந்தன. உதாரணமாக, ஒருநாள் எனக்கு ஒரு டப்பா நிறைய லூக்கூம்யா (பிரசித்திபெற்ற மிட்டாய்) அனுப்பப்பட்டது. லூக்கூம்யாவை டேஸ்ட் பண்ணுவதற்கு இன்ஸ்பெக்டர்களுக்குள் ஒரே போட்டி; இதனால் அதற்கு அடியில் இருந்த காவற்கோபுரத்தை பார்க்கத் தவறிவிட்டார்கள். “வீரர்கள் லூக்கூம்யா சாப்பிட்டார்கள், நாங்கள் காவற்கோபுரம் ‘சாப்பிட்டோம்!’” என ஒரு சாட்சி தமாஷாக கூறினார்.
மதம் மனிதவர்க்கத்துக்கு என்ன செய்திருக்கிறது (ஆங்கிலம்) என்ற புத்தகம் அப்போதுதான் வெளியிடப்பட்டது; அது எங்கள் கையில் கிடைத்தது; ஆங்கிலம் தெரிந்திருந்த சாட்சி ஒருவர் அதை மொழிபெயர்த்தார். நாங்கள் எல்லோரும் சேர்ந்து காவற்கோபுரத்தைப் படித்தோம், கூட்டங்களை இரகசியமாக நடத்தினோம். நாங்கள் சிறையை பள்ளியாகவும், ஆவிக்குரியத் தன்மையை பலப்படுத்துவதற்கான வாய்ப்பாகவும் கருதினோம்; எல்லாவற்றிற்கும் மேலாக, நாங்கள் காண்பித்த உத்தமத்தன்மை யெகோவாவை பிரியப்படுத்துகிறது என்பதை நினைத்து அதிக சந்தோஷப்பட்டோம்.
கிழக்கு பிலப்பனிஸாஸிலுள்ள டைரிந்தாவில்தான் நான் கடைசியாக சிறை வைக்கப்பட்டேன். சக கைதி ஒருவரோடு பைபிள் படிப்பை நடத்தியபோது ஜெயில் காவலர் ஒருவர் உன்னிப்பாக கவனிப்பதை நான் பார்த்திருக்கிறேன். பல வருடங்கள் கழித்து அதே நபரை தெஸ்ஸலோனிகியில் சந்தித்தபோது ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியம்! அவர் இப்போது ஒரு சாட்சி. பிறகு, அவருடைய பிள்ளைகளில் ஒருவன் சிறைக்கு சென்றான். காவலராக இல்லை, கைதியாக. நான் என்ன காரணத்துக்காக சிறையில் போடப்பட்டேனோ அதே காரணத்துக்காகத்தான் அவனும் போடப்பட்டான்.
விடுதலைக்கு பிறகு மும்முரம்
உண்மையில் எனக்கு 20 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது; ஆனால் நான் மூன்று ஆண்டுகளிலேயே விடுதலை செய்யப்பட்டேன். விடுதலையான பிறகு, ஆதன்ஸில் வாழலாம் என முடிவு செய்தேன். ஆனால் எனக்கு நுரையீரல் உறையழற்சி (pleurisy) நோய் வந்தது; எனவே தெஸ்ஸலோனிகிக்கே மறுபடியும் செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளானேன். இரண்டு மாதங்கள் கட்டில் கிடையாகிவிட்டேன். பின்பு கூலா என்ற அழகிய பெண்ணை சந்தித்தேன். டிசம்பர் 1959-ம் ஆண்டு நாங்கள் திருமணம் செய்தோம். 1962-ம் ஆண்டு அவள் பயனியர் சேவை செய்யத் துவங்கினாள்; யெகோவாவின் சாட்சிகளின் முழுநேர ஊழியர்கள் அவ்வாறுதான் அழைக்கப்படுகின்றனர். மூன்று ஆண்டுகள் கழித்து நானும் பயனியராக ஆனேன்.
1965-ம் ஆண்டு ஜனவரியில் ஆவிக்குரியவிதமாக சபைகளை சந்தித்து பலப்படுத்துவதற்காக வட்டார வேலையில் நியமிக்கப்பட்டோம். அதே ஆண்டு கோடையில், ஆஸ்திரியாவில் உள்ள வியன்னாவில் முதன்முதலாக பெரிய மாவட்ட மாநாட்டில் கலந்துகொள்ளும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது. கிரீஸில் தடையுத்தரவின் காரணமாக நாங்கள் இரகசியமாக காட்டுக்குள்ளேதான் மாநாடு நடத்தினோம்; எனவே, இது எங்களுக்கு மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. 1965-ன் முடிவில், ஏதன்ஸில் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளைக் காரியாலயத்தில் சேவிப்பதற்காக அழைக்கப்பட்டோம். இருந்தாலும், என் உறவினர்கள் சிலருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைபாட்டால், 1967-ம் ஆண்டு நாங்கள் திரும்பிவிட்டோம்.
குடும்பப் பொறுப்புகளைக் கவனித்துக்கொண்டே, சுவிசேஷ வேலையிலும் சுறுசுறுப்பாக இருந்தோம். ஒருநாள், என் சித்தப்பா மகன் காஸ்டாஸிடம் பேசிக் கொண்டிருந்தேன்; கடவுளுடைய அமைப்பின் அழகையும், அதில் நிலவும் அன்பு, ஒற்றுமை, கடவுளுக்கான கீழ்ப்படிதல் ஆகியவற்றையும் விவரித்தேன். “கடவுள்னு ஒருவர் இருந்தாதான் இதெல்லாம் நல்லாயிருக்கும்” என அவன் சொன்னான். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை ஆராய்ந்து பார்க்கும்படி நான் கொடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டான். ஆகஸ்ட் 1969-ல் ஜெர்மனி நியூரம்பர்க்கில் நடக்கிற யெகோவாவின் சாட்சிகளுடைய சர்வதேச மாநாட்டுக்கு நாங்கள் போவோம் என தெரிவித்தேன். அவனும் வருவதாக சொன்னான். எங்களுடன் பைபிளைப் படித்துக் கொண்டிருந்த அவனுடைய நண்பன் ஆலேகோஸ்ஸும் உடன் வருவதாக சொன்னான்.
நியூரம்பர்க் மாநாடு மெய்சிலிர்க்க வைத்த கண்கொள்ளா காட்சியாக இருந்தது! ஹிட்லர் தன் ராணுவ வெற்றிகளைக் கொண்டாடிய அதே பெரிய ஸ்டேடியத்தில் மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு வந்திருந்தோரின் உச்ச எண்ணிக்கை 1,50,000-க்கும் அதிகம்; எல்லா நிகழ்ச்சிகளிலும் யெகோவாவினுடைய ஆவியின் உதவி இருந்ததை நாங்கள் உணர்ந்தோம். அதற்குப்பிறகு, காஸ்டாஸும் ஆலேகோஸ்ஸும் விரைவில் முழுக்காட்டுதல் பெற்றனர். இருவரும் இப்போது கிறிஸ்தவ மூப்பராக சேவிக்கின்றனர்; இருவருடைய குடும்பங்களும் சாட்சிகளாக இருக்கின்றன.
ஆர்வம்காட்டிய ஒரு பெண்மணியுடன் நான் பைபிள் படிப்பை நடத்தினேன். சாட்சிகள் என்னதான் நம்புகிறார்கள் என்பதை தான் பரிசோதிக்க விரும்புவதாக அவருடைய கணவர் தெரிவித்தார். பிறகு, ஒரு விவாதத்திற்காக கிரேக்க ஆர்த்தடாக்ஸ் இறைமையியலாளர் மிஸ்டர் ஸாகோஸையும் அழைத்திருப்பதாக சொன்னார்; இருவரிடமும் சில கேள்விகளைக் கேட்க விரும்பினார். மிஸ்டர் ஸாகோஸ் ஒரு பாதிரியாரையும் கூட்டிக் கொண்டு வந்தார். அப்பெண்ணின் கணவர் இவ்வாறு பேச ஆரம்பித்தார், “முதல்ல, மிஸ்டர் ஸாகோஸ் என்னோட மூனு கேள்விகளுக்கு பதில் சொல்லனும்.”
எங்களுடைய கலந்துரையாடல்களில் நாங்கள் பயன்படுத்திய பைபிள் மொழிபெயர்ப்பை கையில் தூக்கிவைத்துக் கொண்டு, “முத கேள்வி, இது எல்லாரும் பயன்படுத்தற பைபிள்தானா, இல்ல, சாட்சிகளோட பைபிளா?” என்று கேட்டார். அந்த பைபிள் அதிகாரப்பூர்வமான பைபிள் மொழிபெயர்ப்புதான் என்றும், யெகோவாவின் சாட்சிகள் “பைபிளை நேசிப்பவர்கள்” என்றும் மிஸ்டர் ஸாகோஸ் பதிலளித்தார்.
அவர் இவ்வாறு தொடர்ந்தார், “இரண்டாவது கேள்வி, யெகோவாவின் சாட்சிகள் ஒழுக்கமானவங்களா?” தன் மனைவி எத்தகைய ஆட்களோடு தொடர்பு வைத்திருக்கிறாள் என்பதை அவர் உண்மையில் அறிய விரும்பினார். சந்தேகமில்லாமல் அவர்கள் ஒழுக்கமானவர்கள்தான் என்று இறைமையியலாளர் பதிலளித்தார்.
“மூனாவது கேள்வி, யெகோவாவின் சாட்சிகளுக்கு சம்பளம் கொடுக்கிறாங்களா?” என்று தன் கடைசி கேள்வியை தொடுத்தார். “இல்லை” என இறைமையியலாளர் பதிலளித்தார்.
“என் கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைச்சிடுச்சு, நானும் ஒரு முடிவுக்கு வந்துட்டேன்” என அவர் சொன்னார். பிறகு, அவரும் பைபிளைப் படிப்பதில் சேர்ந்து கொண்டார்; விரைவில் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக முழுக்காட்டப்பட்டார்.
வளமும் வெகுமதியும் நிறைந்த வாழ்க்கை
ஜனவரி 1976-ம் ஆண்டு வட்டாரக் கண்காணியாக நான் மறுபடியும் சேவிக்கத் தொடங்கினேன். சுமார் ஆறு ஆண்டுகள் கழித்து, கிரீஸில் புது வகையான பிரசங்கிப்பை முன்நின்று நடத்தும் சிலாக்கியம் பெற்றேன்; அதுதான் தெருவில் சாட்சி கொடுத்தல். பிறகு, அக்டோபர் 1991-ல் நானும் என் மனைவியும் விசேஷ பயனியராக சேவிக்கத் துவங்கினோம். ஒருசில மாதங்கள் கழித்து, க்வாட்ருபல் பைபாஸ் (quadruple bypass) இருதய சிகிச்சை செய்யப்பட்டது. அது வெற்றிகரமாக முடிந்ததற்காக தேவனுக்கு நன்றி சொல்கிறேன். இப்போது என் உடல்நிலை தேறியுள்ளது; முழுநேர பிரசங்க வேலையில் மீண்டும் ஈடுபடுகிறேன். தெஸ்ஸலோனிகியில் உள்ள சபை ஒன்றில் மூப்பராக சேவை செய்கிறேன்; மருத்துவ உதவி தேவைப்படுகிறவர்களுக்காக உள்ளூர் ஹாஸ்பிடல் லையசன் கமிட்டியிலும் வேலை செய்கிறேன்.
என் வாழ்க்கையை பின்னோக்கிப் பார்க்கையில், நம் பரலோகத் தகப்பனுக்கு பிரியமானதைச் செய்வது எவ்வளவு திருப்தியளிக்கிறது என்பதை அறிகிறேன். “என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவுகொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து” என்ற உள்ளத்தை தூண்டும் அழைப்பை ஒருகாலத்தில் ஏற்றுக்கொண்டதற்காக நான் இன்று அதிக ஆனந்தமடைகிறேன். (நீதிமொழிகள் 27:11) யெகோவாவின் அமைப்புக்குள் வரும் உண்மையுள்ள மக்களின் எண்ணிக்கை உலகளாவிய அளவில் அதிகரித்து வருவதைப் பார்ப்பது மனதுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. பைபிள் சத்தியத்தால் மக்களை விடுவிப்பதிலும், நீதியுள்ள புதிய உலகிற்குள் நித்திய வாழ்வெனும் வாய்ப்பைத் திறப்பதிலும் பங்குகொள்வது உண்மையில் பெரும் பாக்கியமே!—யோவான் 8:32; 2 பேதுரு 3:13.
யெகோவாவின் இளம் ஊழியர்களை முழுநேர சேவையை இலக்காக வைத்து, அதில் தங்கள் நேரத்தையும் பலத்தையும் செலவிடும்படி நாங்கள் எப்போதும் உற்சாகப்படுத்துகிறோம். யெகோவாவில் நம்பிக்கை வைத்து, அவருடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்குவதில் பேரின்பத்தைக் கண்டடைவதே ஆத்ம திருப்தியளிக்கும் வாழ்க்கை!—நீதிமொழிகள் 3:5; பிரசங்கி 12:1.
[பக்கம் 21-ன் படங்கள்]
(இடமிருந்து வலம்)
1965-ம் ஆண்டு பெத்தேல் சமையலறையில் சேவித்தல்
1970-ல் தடையுத்தரவின் மத்தியிலும் பேச்சு கொடுத்தல்
1959-ல் என் மனைவியுடன்
[பக்கம் 23-ன் படங்கள்]
என் மனைவி கூலாவுடன்