வாழ்க்கை சரிதை
ஆதரவற்ற அநாதைக்கு ஓர் அன்பான தகப்பன்
டிமிட்ரிஸ் சிடிராபூலாஸ் சொன்னபடி
“போ, அந்த ஆயுதத்தை எடுத்துச் சுடு” என்று கர்ஜித்தபடியே துப்பாக்கியை என் முன்னால் வைத்தார் அந்த அதிகாரி. நான் அமைதியாக மறுத்தேன். அவருடைய துப்பாக்கியிலிருந்து பறந்த தோட்டாக்கள் என் தோளைப் பதம் பார்த்ததைக் கண்ட மற்ற வீரர்கள் குலைநடுங்கிப் போனார்கள். சாவு என்னைத் தழுவுவதைப் போலத் தோன்றியது. என்றாலும், நான் உயிர் பிழைத்தது சந்தோஷமான விஷயம். இப்படிப் பலமுறை செத்துச் செத்துப் பிழைத்திருக்கிறேன்.
துருக்கியிலுள்ள கப்பத்தோக்கியாவில் கேய்செரி என்ற இடத்திற்கு அருகே வாழ்ந்து வந்த என் குடும்பம் ஒரு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தது. இப்பகுதியில் வாழ்ந்த சிலர் பொ.ச. முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவர்களாக ஆகியிருந்தார்கள். (அப்போஸ்தலர் 2:9) ஆனால், இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நிலைமைகள் ரொம்ப மாறியிருந்தன.
அகதியான பின் அநாதை
நான் 1922-ல் பிறந்தேன், சில மாதங்களுக்குப் பிறகு இனப் பிரச்சினையின் காரணமாக என்னுடைய குடும்பத்தார் அகதிகளாக கிரீஸுக்கு ஓடினார்கள். பீதியில் என்னுடைய பெற்றோர் சொத்து சுகங்களையெல்லாம் விட்டுவிட்டு கைக்குழந்தையான என்னை மட்டும் தூக்கிக் கொண்டு சென்றார்கள். விவரிக்க முடியாத கஷ்டங்களை எல்லாம் அனுபவித்த பிறகு, பரிதாபமான நிலையில் வட கிரீஸில் உள்ள டிராமாவுக்கு அருகே கிரியா கிராமத்தை அடைந்தார்கள்.
எனக்கு அப்போது நான்கு வயது இருக்கும். எனக்கு ஒரு தம்பியும் அப்போதுதான் பிறந்திருந்தான். அந்தச் சமயத்தில் எங்கள் அப்பா இறந்துவிட்டார். அவருக்கு 27 வயதுதான், ஆனாலும் அந்தக் கொடிய காலப்பகுதியில் அனுபவித்த கஷ்டங்களால் அவர் அந்தளவுக்குத் தளர்ந்துவிட்டார். அம்மா பயங்கரமான பிரச்சினைகளை எதிர்ப்பட்டார்கள். சீக்கிரத்தில் அவர்களும் உயிர்விட்டார்கள். நிர்க்கதியாக நின்ற நானும் என் தம்பியும் ஒவ்வொரு அநாதை இல்லமாக பந்தாடப்பட்டோம். கடைசியாக, எனக்கு 12 வயதிருக்கும்போது, தெசலோனிக்கேயில் உள்ள ஓர் அநாதை இல்லத்துக்கு அனுப்பப்பட்டேன். அங்கே மெக்கானிக் வேலைக்கான பயிற்சியைப் பெற்றேன்.
அநாதை இல்லங்களில், பாசத்தை காசுக்கும்கூட காண முடியாத ஒரு சூழலில் நான் வளர்ந்து வந்தபோது, ஏன் சிலர் மட்டும் இவ்வளவு கஷ்டத்தையும் அநியாயத்தையும் அனுபவிக்க வேண்டியிருக்கிறது என்று யோசித்திருக்கிறேன். இப்படிப்பட்ட மோசமான நிலைமையை கடவுள் ஏன் அனுமதிக்கிறார் என்று என்னை நானே கேட்டுக்கொள்வேன். கடவுள் சர்வவல்லவர் என்று எங்களுடைய வேத பாட வகுப்பில் சொல்லிக் கொடுத்தனர். ஆனால், தீமை புரையோடிப் போயிருப்பதற்கு சரியான காரணம் எதையும் சொல்லவில்லை. கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச்தான் மிகச் சிறந்த மதம் என்று ஒரு பிரபல மந்திர வாக்கியம் கூறியது. “ஆர்த்தடாக்ஸ் மதம்தான் சிறந்த மதம் என்றால், ஏன் எல்லாரும் இதில் சேரவில்லை?” என்று அவர்களிடம் நான் கேட்டபோது, அதற்கு எந்தத் திருப்திகரமான பதிலும் கிடைக்கவில்லை.
என்றாலும், எங்களுடைய ஆசிரியர் பைபிளை வெகுவாக மதித்தார். அது ஒரு பரிசுத்த புத்தகம் என்று அடிக்கடி எங்களிடம் கூறினார். அந்த அநாதை இல்லத்தின் இயக்குனரும் அதேபோல் பைபிளை மதித்தார். ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக மத ஆராதனைகளில் பங்கெடுப்பதை அவர் தவிர்த்தார். இதைப் பற்றி நான் விசாரித்தபோது அவர் ஒருகாலத்தில் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படித்ததாக சொன்னார். ஆனால் அந்த மதத்தினரைப் பற்றி எனக்கு அப்போது எதுவுமே தெரியாது.
எனக்கு 17 வயதாயிருக்கையில், தெசலோனிக்கே அநாதை இல்லத்தில் என்னுடைய படிப்பு முடிந்தது. அது இரண்டாம் உலகப் போர் வெடித்த சமயம். கிரீஸ், நாசிக்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. பசிக் கொடுமை தாங்காமல் மக்கள் தெருக்களில் செத்துமடிய ஆரம்பித்தனர். சாதாரண கூலி வேலை செய்து உயிர் பிழைக்க கிராமப்புறத்திற்கு ஓடினேன்.
என் கேள்விகளுக்கு பைபிள் பதிலளித்தல்
ஏப்ரல் 1945-ல் நான் தெசலோனிக்கேவுக்கு திரும்பினேன். பல அநாதை இல்லங்களில் என்னோடு கூட வசித்த என் பால்ய சிநேகிதனின் அக்காவான பாஷாலியா என்னைச் சந்தித்தார். தன் தம்பியைக் காணவில்லை என்றும், அவனைப் பற்றிய விவரம் ஏதாவது எனக்குத் தெரியுமா என்றும் கேட்டார். பேச்சுவாக்கில், தான் ஒரு யெகோவாவின் சாட்சி என்பதையும் மனிதர்கள் மேல் கடவுள் அக்கறையுள்ளவராக இருக்கிறார் என்பதையும் குறிப்பிட்டார்.
வெறுப்பில் இருந்த நான் அதை பலமாக எதிர்த்தேன். சின்ன வயதிலிருந்தே நான் ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறேன்? நான் ஏன் அநாதையானேன்? நமக்கு மிகவும் தேவைப்படும்போது கடவுள் எங்கே போய்விடுகிறார்? என்றெல்லாம் எதிர்வாதம் செய்தேன். “இந்த நிலைமைக்கெல்லாம் கடவுள்தான் காரணம்னு உன்னால் அடித்துச் சொல்ல முடியுமா?” என்று என்னைக் கேட்டுவிட்டு, கடவுள் மக்களுக்கு கஷ்டத்தைக் கொடுப்பதில்லை என்பதை பைபிளிலிருந்து அவர் காண்பித்தார். படைப்பாளர் மனிதர்களை நேசிக்கிறார், சீக்கிரத்தில் நிலைமைகளைச் சரிசெய்வார் என்பதைப் புரிந்து கொள்ள இது எனக்கு உதவியது. ஏசாயா 35:5-7, வெளிப்படுத்துதல் 21:3, 4 போன்ற வசனங்களைப் பயன்படுத்தி, சீக்கிரத்தில் போர், சச்சரவு, வியாதி, மரணம் ஆகியவை நீக்கப்படும் என்றும், விசுவாசமுள்ள ஜனங்கள் இந்த பூமியில் என்றென்றும் வாழ்வார்கள் என்றும் அவர் காண்பித்தார்.
ஆதரவளிக்கும் குடும்பத்தைக் கண்டடைதல்
பாஷாலியாவின் தம்பி கொரில்லா படையினருடன் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தான் என்று கேள்விப்பட்டேன். ஆறுதல் சொல்வதற்காக அவர்களுடைய வீட்டிற்குப் போனேன். ஆனால், அவர்கள் எனக்கு வேதப்பூர்வ ஆறுதலை அளித்தார்கள். பைபிளிலிருந்து இன்னுமதிக ஆறுதலளிக்கும் விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்காக மறுபடியும் அவர்களைச் சந்தித்தேன். விரைவில், படிப்பிற்காகவும், வணக்கத்திற்காகவும் இரகசியமாக கூடிவந்து கொண்டிருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய சிறு தொகுதி ஒன்றின் பாகமாக ஆனேன். சாட்சிகள் சமூகத்தில் விலக்கி வைக்கப்பட்டிருந்த போதிலும், அவர்களுடன் தொடர்ந்து கூடிவர தீர்மானித்தேன்.
மனத்தாழ்மையுள்ள கிறிஸ்தவர்களைக் கொண்ட அந்தத் தொகுதியில், நான் இழந்திருந்த அன்பையும் பாசத்தையும் கண்டேன். எனக்கு அத்தியாவசியமாயிருந்த ஆன்மீக ஆதரவையும் உதவியையும் அவர்கள் அளித்தார்கள். சுயநலமில்லாத, கரிசனையுள்ள நண்பர்களை அங்கே கண்டடைந்தேன். எனக்கு மனமுவந்து உதவியளிக்கவும், ஆறுதலளிக்கவும் அவர்கள் தயாராயிருந்தார்கள். (2 கொரிந்தியர் 7:5-7) எல்லாவற்றிற்கும் மேலாக, அன்பான பரலோக தகப்பனாக நான் கருத ஆரம்பித்திருந்த யெகோவாவுடன் நெருங்கி வர எனக்கு உதவி கிடைத்தது. அன்பு, கரிசனை, ஆழ்ந்த அக்கறை போன்ற அவருடைய குணங்கள் என்னை அவரிடமாக ஈர்த்தன. (சங்கீதம் 23:1-6) கடைசியில், ஓர் ஆன்மீக குடும்பத்தையும், அன்பான தகப்பனையும் நான் கண்டுபிடித்து விட்டேன்! நான் மிகவும் நெகிழ்ந்துபோனேன். விரைவில், யெகோவாவுக்கு என்னை ஒப்புக்கொடுக்க தூண்டப்பட்டேன். செப்டம்பர் 1945-ல் முழுக்காட்டப்பட்டேன்.
கிறிஸ்தவ கூட்டங்களில் கலந்து கொண்டபோது என்னுடைய அறிவு ஆழமானது மட்டுமின்றி என்னுடைய விசுவாசமும் பலப்பட்டது. போக்குவரத்து வசதி எதுவும் இல்லாத காரணத்தால், எங்களில் பலர் கிராமத்திலிருந்து கூட்டம் நடக்கும் இடத்திற்கு மூன்று மைல் தூரம் நடந்தே சென்றோம். ஆன்மீக விஷயங்களை பேசிக்கொண்டே நடந்து சென்றதை என்றுமே மறக்க முடியாது. 1945-ன் பிற்பகுதியில், முழுநேர பிரசங்க வேலையைப் பற்றி கேள்விப்பட்டதும், அந்த வேலையில் ஈடுபட ஆரம்பித்தேன். யெகோவாவுடன் நெருக்கமான உறவை வைத்துக்கொள்வது அத்தியாவசியமாக இருந்தது; ஏனென்றால், என்னுடைய விசுவாசமும் உண்மைத்தன்மையும் விரைவில் அற்றுப் போகுமளவுக்கு சோதனை வரவிருந்தது.
எதிர்ப்பால் வந்த எதிர்விளைவு
நாங்கள் கூட்டங்கள் நடத்திய இடத்தை போலீஸ் அடிக்கடி துப்பாக்கி முனையில் சோதனையிட்டது. கிரீஸில் உள்நாட்டுக் கலகம் மூண்டதால் அங்கே இராணுவ சட்டம் அமல்படுத்தப்பட்டது. எதிர்க் கட்சியினர் ஒருவரையொருவர் காட்டுமிராண்டித்தனமாக தாக்கினர். குருமார்கள் இந்தச் சூழ்நிலையை சாதகமாக்கிக் கொண்டனர். எப்படியெனில், யெகோவாவின் சாட்சிகள் எல்லாம் கம்யூனிஸ்டுகள் என்று அதிகாரிகளை நம்ப வைத்து, எங்களைக் கடுமையாக துன்புறுத்தும்படி செய்தார்கள்.
அந்த இரண்டு வருடத்தில், நாங்கள் பலமுறை கைது செய்யப்பட்டோம். நான்கு மாதம் வரையான சிறைத் தண்டனையை ஆறு முறை பெற்றோம். ஏற்கெனவே சிறைகள் அரசியல் கைதிகளால் நிரம்பி வழிந்ததால், நாங்கள் விடுவிக்கப்பட்டோம். எதிர்பாராமல் கிடைத்த சுதந்திரத்தைப் பயன்படுத்தி பிரசங்க வேலையைத் தொடர்ந்தோம். ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு ஒரே வாரத்தில் மூன்று முறை நாங்கள் கைது செய்யப்பட்டோம். சகோதரர்கள் பலர் யாருமில்லாத தீவுகளுக்கு நாடுகடத்தப்பட்டதை அறிந்தோம். அப்படிப்பட்ட சோதனையை சந்திக்கும் அளவிற்கு என்னுடைய விசுவாசம் உறுதியாக இருக்குமா?
போலீசாருடைய கண்காணிப்பில் நான் வைக்கப்பட்டபோது சூழ்நிலைகள் மிகக் கடினமாக ஆயின. என்னைக் கண்காணிப்பதற்காக, அதிகாரிகள் தெசலோனிக்கேவுக்கு அருகிலிருந்த ஈவாஸ்மாஸ் கிராமத்திற்கு என்னை அனுப்பினர். அங்கே ஒரு காவல் நிலையம் இருந்தது. சற்று அருகில் இருந்த ஓர் அறையை நான் வாடகைக்கு எடுத்தேன். பணம் சம்பாதிப்பதற்காக, தெருத் தெருவாகச் சென்று செம்பு பாத்திரங்களை பாலிஷ் செய்யும் வேலையைச் செய்ய ஆரம்பித்தேன். சுற்று வட்டாரத்திலிருந்த கிராமங்களில் பயனியராக நான் சேவை செய்தபோது, போலீசுக்கு சந்தேகம் வராதபடி மக்களை வீடுகளில் சென்று சந்திக்க இந்த வேலை வசதியாய் இருந்தது. இதன் விளைவாக, அநேகர் நற்செய்தியைக் கேட்டு, நல்ல விதமாக பிரதிபலித்தார்கள். காலப்போக்கில், பத்துக்கும் மேற்பட்டோர் யெகோவாவுக்கு தங்களை ஒப்புக்கொடுத்தார்கள்.
பத்து ஆண்டுகள், எட்டு சிறைகள்
1949-ன் இறுதிவரை, நான் போலீசின் கண்காணிப்பில் இருந்தேன். பிறகு முழு நேர ஊழியத்தில் பங்கெடுக்க வேண்டுமென்ற ஆவலில் தெசலோனிக்கேவுக்குத் திரும்பினேன். பிரச்சினைகள் ஓய்ந்தது என்று நிம்மதிப் பெருமூச்சுவிட்ட சமயத்தில், எதிர்பாராத விதமாக, 1950-ல் இராணுவத்தில் சேரும்படியாக ஆணையிடப்பட்டேன். என்னுடைய கிறிஸ்தவ நடுநிலைமையின் காரணமாக, “யுத்தத்தைக் கற்பதுமில்லை” என்பதில் உறுதியாக இருந்தேன். (ஏசாயா 2:4) இவ்வாறாக, கிரீஸிலுள்ள மிகக் கொடூரமான சிறைச்சாலைகளுக்குச் செல்லும் வேதனையான என் நீண்ட பயணம் தொடங்கியது.
இவை எல்லாம் டிராமா நகரத்தில் ஆரம்பித்தன. என்னுடைய சிறைவாசத்தின் முதல் வாரத்தில், கட்டாயப் படைத்துறைப் பணிக்கு புதிதாக சேர்க்கப்பட்ட வீரர்களுக்காக, குறிபார்த்து சுடும் பயிற்சியை ஆரம்பித்தார்கள். ஒருநாள், பயிற்சியளிக்கும் இடத்திற்கு நான் அழைத்துச் செல்லப்பட்டேன். அதிகாரிகளில் ஒருவர் துப்பாக்கியை எனக்கு முன்னால் வைத்து சுடும்படி ஆணையிட்டார். நான் மறுத்தபோது, என்னை நோக்கி சுட ஆரம்பித்தார். நான் இணங்கிப்போக மாட்டேன் என்பதைக் கண்ட மற்ற அதிகாரிகள் என்னை காட்டுமிராண்டித்தனமாக குத்த ஆரம்பித்தார்கள். சிகரெட்டைப் பற்றவைத்து என்னுடைய உள்ளங்கையில் வைத்து அழுத்தி அணைத்தார்கள். உயிர்போகிற மாதிரி வலியெடுத்தது. அதன்பிறகு என்னைத் தனிச் சிறையில் தள்ளி அடைத்தார்கள். இப்படியே மூன்று நாட்கள் கழிந்தது. சிகரெட் சூட்டின் தழும்புகள் பல ஆண்டுகளுக்கு அப்படியே என் கைகளில் இருந்தன.
இராணுவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்பாக, கிரீட்டில் உள்ள இராக்லியனில் இருக்கும் இராணுவ முகாமுக்கு மாற்றப்பட்டேன். என்னுடைய உத்தமத்தன்மையைக் குலைத்துப்போடுவதற்காக, என்னை கண்மண் தெரியாமல் அடித்தார்கள். விட்டுக்கொடுத்து விடுவேனோ என்ற பயத்தில், என்னைப் பலப்படுத்தும்படி பரலோகத் தகப்பனிடம் ஊக்கமாக மன்றாடினேன். எரேமியா 1:19-ல் உள்ள வார்த்தைகள் என்னுடைய மனதிற்கு வந்தன: “அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.” இதமளிக்கும் “தேவ சமாதானம்” எனக்கு அமைதியையும் சமாதானத்தையும் கொடுத்தது. யெகோவாவை முழுமையாக நம்புவதே ஞானமானது என்பதை நான் புரிந்து கொண்டேன்.—பிலிப்பியர் 4:6, 7; நீதிமொழிகள் 3:5.
அதைத் தொடர்ந்து வந்த வழக்கு விசாரணையில், எனக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. யெகோவாவின் சாட்சிகள் “தேசத்தின் மிக மோசமான எதிரிகளாக” கருதப்பட்டனர். கனியாவுக்கு வெளியே இருந்த இட்சிடின் கிரிமினல் சிறைச்சாலையில் ஒரு தனி அறையில் என்னுடைய ஆயுள் தண்டனை துவங்கியது. இட்சிடின் என்பது ஒரு பழைய கோட்டை, அதிலிருந்த என்னுடைய அறையில் ஒரே எலி மயம்! ஒரு பழைய, கந்தலான போர்வையை எடுத்து தலை முதல் கால் வரை போர்த்திக்கொண்டேன்; அதனால் அந்த எலிகள் என் மேல் ஊர்ந்தபோதும் என் உடம்பில் படவில்லை. பிறகு நிமோனியாவால் கடுமையாக நோய்வாய்ப்பட்டேன். நான் சூரிய வெளிச்சத்தில் உட்கார வேண்டும் என்பதாக மருத்துவர் கூறினார். இதனால் அந்த வளாகத்தில் இருந்த அநேக கைதிகளுடன் சம்பாஷிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. என்றபோதிலும், என்னுடைய நிலைமை மோசமடைந்தது. என்னுடைய நுரையீரலில் இரத்தப்போக்கு அதிகம் ஏற்பட்டதால், இராக்லியன் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டேன்.
உடன் கிறிஸ்தவர்களாலான என்னுடைய ஆவிக்குரிய குடும்பத்தார் எனக்கு உதவி தேவைப்பட்ட நேரத்தில் மீண்டும் ஓடோடி வந்தார்கள். (கொலோசெயர் 4:11) இராக்லியனில் இருந்த சகோதரர்கள் என்னை தொடர்ச்சியாக சந்தித்து ஆறுதலும் உற்சாகமும் அளித்தார்கள். ஆர்வம் காட்டுவோருக்கு சாட்சி கொடுப்பதற்காக எனக்கு பிரசுரங்கள் தேவை என்று அவர்களிடம் கூறினேன். அவர்கள் கொடுத்த பிரசுரங்களை மறைத்து வைக்க உதவியாக இரட்டை அடிப்புறத்தைக் கொண்ட பெட்டியைக் கொண்டுவந்தார்கள். அந்தச் சிறையில் தங்கியிருந்த சமயத்தில் குறைந்தது ஆறு கைதிகள் உண்மை கிறிஸ்தவர்களாவதற்கு உதவ முடிந்ததைக் குறித்து எவ்வளவாக சந்தோஷப்பட்டேன்!
இதற்கிடையே, உள்நாட்டுச் சண்டை முடிவுக்கு வந்தது, என்னுடைய தண்டனையும் பத்து வருடங்களாகக் குறைக்கப்பட்டது. என்னுடைய சிறைவாசத்தின் மீதிப் பாகத்தை ரிதிம்னா, ஜென்டி கூலெ, காஸான்ட்ரா போன்ற இடங்களில் இருந்த சிறைச்சாலையில் கழித்தேன். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளை எட்டு சிறைகளில் கழித்த பிறகு, நான் விடுவிக்கப்பட்டேன். அதன் பிறகு, தெசலோனிக்கேவுக்கு திரும்பி என்னுடைய அன்பான கிறிஸ்தவ சகோதரர்களின் அரவணைக்கும் கரங்களில் தஞ்சமடைந்தேன்.
கிறிஸ்தவ சகோதரத்துவத்தின் அரவணைப்பில் ஆவிக்குரிய செழுமை
அந்தச் சமயத்தில் கிரீஸில் இருந்த சாட்சிகள் ஓரளவு சுதந்திரத்தோடு கடவுளை வணங்க முடிந்தது. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு உடனடியாக முழு நேர ஊழியத்தில் ஈடுபட ஆரம்பித்தேன். சீக்கிரத்தில் மற்றொரு ஆசீர்வாதம் கிடைத்தது. யெகோவாவை நேசித்து, பிரசங்க ஊழியத்தில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வந்த விசுவாசமுள்ள கிறிஸ்தவ சகோதரியான காட்டீனாவை சந்தித்தேன். அக்டோபர் 1959-ல் திருமணம் செய்து கொண்டோம். எங்களுடைய மகள் அகாப்பீ பிறந்ததும், எனக்கென்று ஒரு கிறிஸ்தவ குடும்பத்தைக் கொண்டிருந்ததும் ஓர் அநாதையாகக் கழிந்த என்னுடைய கடந்த காலக் காயங்களுக்கு அருமருந்தாக அமைந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக, நம் அன்பான பரலோக தகப்பன் யெகோவாவின் பாதுகாப்பான கவனிப்பின் கீழ் சேவை செய்வதில் எங்களுடைய குடும்பம் திருப்தியைக் கண்டடைந்தது.—சங்கீதம் 5:11.
மோசமான பொருளாதார சூழ்நிலையின் காரணமாக, பயனியர் சேவையை நிறுத்திவிடும் நிர்பந்தத்திற்கு ஆளானேன். என்றாலும் முழுநேர சேவையைத் தொடர்ந்து செய்த என் மனைவிக்கு முழு ஆதரவு அளித்தேன். 1969-ல் யெகோவாவின் சாட்சிகளுடைய சர்வதேச மாநாடு ஜெர்மனியில் உள்ள நூரெம்பர்க்கில் நடந்த போது என் வாழ்வில் மிக முக்கிய சம்பவம் ஒன்று நடந்தது. அங்கே செல்வதற்காக பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பித்தேன். இரண்டு மாதங்கள் ஆகியும் எனக்கு பாஸ்போர்ட் கிடைக்காததால் என்னுடைய மனைவி அதைக் குறித்து விசாரிக்க காவல் நிலையத்திற்குச் சென்றாள். அந்த போலீஸ் அதிகாரி தன்னுடைய மேசையில் இருந்து ஒரு பெரிய ஃபைலை எடுத்து, “ஜெர்மனியில் உள்ளவர்களை மதம் மாற்றுவதற்காகவா இவருக்கு பாஸ்போர்ட் கேட்கிறீர்கள்? அதெல்லாம் நடக்காது! இவர் ரொம்ப ஆபத்தானவர்” என்றார்.
யெகோவாவின் உதவியோடும், சில சகோதரர்களின் உதவியோடும் நான் ஒரு குரூப் பாஸ்போர்ட்டில் சேர்க்கப்பட்டு, அந்த அருமையான மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றேன். அதில் கூடிவந்தவர்களுடைய எண்ணிக்கை 1,50,000-ஐத் தாண்டியது. இந்த சர்வதேச ஆவிக்குரிய குடும்பத்தை யெகோவாவின் ஆவி வழிநடத்தி ஒன்றுபடுத்தியதை என்னால் கண்ணாரக் காண முடிந்தது. என்னுடைய மீதமுள்ள வாழ்க்கையில்கூட இந்த கிறிஸ்தவ சகோதரத்துவத்தின் மதிப்பை இன்னுமதிகமாக போற்றுவேன்.
என்னுடைய அருமைத் தோழியும் அன்பு மனைவியுமாக இருந்த காட்டீனா 1977-ல் இறந்துவிட்டாள். என்னுடைய மகளை பைபிள் நியமங்கள் அடிப்படையில் வளர்ப்பதற்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். ஆனால் நான் தனியே விடப்படவில்லை. என்னுடைய ஆவிக்குரிய குடும்பம் மறுபடியும் எனக்கு உதவியளித்தது. அந்தக் கஷ்டமான காலப்பகுதியில் சகோதரர்கள் அளித்த ஆதரவுக்காக நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். அவர்களில் சிலர் என்னுடைய மகளை கவனித்துக் கொள்வதற்காக சில சமயம் எங்களுடைய வீட்டிற்கு குடிமாறி வந்தும் தங்கினார்கள். அவர்களுடைய சுயதியாக அன்பை என்றுமே மறக்க மாட்டேன்.—யோவான் 13:34, 35.
அகாப்பீ வளர்ந்து பெரியவளானபோது, எலியாஸ் என்ற சகோதரரை மணந்தாள். அவர்களுடைய நான்கு மகன்களும் சத்தியத்தில் இருக்கிறார்கள். சமீப வருடங்களில், நான் பலமுறை ஸ்டிரோக்கினால் பாதிக்கப்பட்டேன். என்னுடைய உடல்நிலை மோசமடைந்தது. என்னுடைய மகளும் அவளுடைய குடும்பத்தாரும் என்னை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள். மோசமான உடல்நிலையிலும் கூட சந்தோஷப்படுவதற்கு எனக்கு அநேக காரணங்கள் இருக்கின்றன. ஒரு காலத்தில் முழு தெசலோனிக்கேவிலும் நூறு சகோதரர்கள் மட்டுமே இருந்தார்கள். அப்போது அவர்கள் சகோதரர்களின் வீடுகளில் இரகசியமாக கூடி வந்ததை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். தற்போது அந்தப் பகுதியில் சுமார் ஐந்தாயிரம் வைராக்கியமான சாட்சிகள் இருக்கிறார்கள். (ஏசாயா 60:22) மாநாடுகளின் போது, இளம் சகோதரர்கள் என்னைச் சந்தித்து, “எங்க வீட்டுக்கு பத்திரிகைகளை கொண்டு வருவீங்களே ஞாபகமிருக்கா?” என்று கேட்பார்கள். பெற்றோர்கள் இந்த பத்திரிகைகளைப் படிக்காவிட்டாலும் அவர்களுடைய பிள்ளைகள் அவற்றைப் படித்து ஆன்மீக ரீதியில் முன்னேறினார்கள்!
யெகோவாவுடைய அமைப்பின் முன்னேற்றத்தைப் பார்க்கையில், நான் பட்ட கஷ்டங்களெல்லாம் வீண்போகவில்லை என்று உணருகிறேன். வாலிப பிராயத்தில் தங்களுடைய பரலோகத் தகப்பனை நினைவுகூரும்படி என்னுடைய பேரப்பிள்ளைகளுக்கும் மற்ற பிள்ளைகளுக்கும் எப்போதுமே சொல்கிறேன்; யெகோவா அவர்களைக் கைவிடவே மாட்டார் என்பதையும் கூறுவேன். (பிரசங்கி 12:1) ‘திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பன்’ என்ற தம்முடைய வார்த்தையை யெகோவா என் விஷயத்தில் நிறைவேற்றினார். (சங்கீதம் 68:5) சிறுவயதில் ஆதரவற்ற அனாதையாக இருந்தபோதிலும், நாளடைவில் ஓர் அன்பான தகப்பனைக் கண்டடைந்தேன்!
[பக்கம் 22-ன் படம்]
டிராமா சிறைச்சாலையில் சமையல்காரனாக பணிபுரிந்தபோது
[பக்கம் 23-ன் படம்]
1959-ல் எங்களுடைய திருமண நாளின் போது காட்டீனாவுடன்
[பக்கம் 23-ன் படம்]
1960-களின் பிற்பகுதியில் தெசலோனிக்கேவுக்கு அருகில் இருந்த ஒரு காட்டில் நடந்த மாநாடு
[பக்கம் 24-ன் படம்]
1967-ல் என் மகளுடன்