உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w99 10/1 பக். 22-25
  • யெகோவாவிற்கு உரியதை கொடுத்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவாவிற்கு உரியதை கொடுத்தல்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • படித்ததைப் பழக்கத்தில்
  • தடைகளையும் மீறி பிரசங்கம்
  • ஐதோனோஹோரியில் ஊழியம்
  • கடும் துன்புறுத்துதல்
  • எதிர்ப்பின் மத்தியிலும் வளர்ச்சி
  • யெகோவாவின் அன்புக் கரங்களின் கீழ்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • 50 ஆண்டுகளுக்கு மேற்பட்டு‘கடந்து வருதல்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • ஆஸ்திரேலியாவில் நான் உண்மையான செல்வத்தைக் கண்டுபிடித்தேன்
    விழித்தெழு!—1994
  • “தங்கத்துக்குப் பதில் நான் வைரங்களைக் கண்டுபிடித்தேன்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
w99 10/1 பக். 22-25

யெகோவாவிற்கு உரியதை கொடுத்தல்

டிமோலியன் வாசிலியூ சொல்கிறார்

ஐதோனோஹோரி கிராமத்தில் கடவுளுடைய வார்த்தையை பிரசங்கித்ததற்காக நான் கைதுசெய்யப்பட்டேன். போலீஸ்காரர்கள் என் ஷூக்களை கழற்றிவிட்டு, உள்ளங்காலில் லத்தியினால் அடி அடியென அடித்தனர். அவர்கள் காலில் அடித்தது உச்சந்தலை வரை அதிர்ந்தது. என் சுயநினைவை இழக்கும் வரை அடித்தனர். இப்படி சித்திரவதை செய்வது கிரீஸில் அப்போது சகஜம்தான். ஏன் இப்படி? இதை விலாவாரியாக விளக்குவதற்கு முன் நான் எப்படி பைபிள் பிரசங்கியானேன் என முதலில் சொல்கிறேன்.

நான் 1921-ல் பிறந்தேன். கொஞ்ச காலத்திற்குள் வட கிரீஸின் ரோடோலிவோஸ் பட்டணத்திற்கு குடும்பமாக குடிபெயர்ந்தோம். இளவயதில் உல்லாச வாழ்வை நாடி சிற்றின்ப சேற்றில் வீழ்ந்தேன். 11 வயதிலேயே சிகரெட் என் விரல் இடுக்கில் இடம்பிடித்தது. அதன் பிறகு பாட்டில், சீட்டு, பார்ட்டி, கும்மாளம் கூத்து இவையே என் அனுதின வாழ்க்கை அட்டவணையாகிப்போனது. இவையில்லா இரவுகளே இல்லை. சங்கீத ஞானம் கொஞ்சம் இயற்கையாகவே இருந்ததால் ஒரு இசைக்குழுவில் சேர்ந்தேன். ஒரு வருடத்திற்குள் கிட்டத்தட்ட எல்லா இசைக்கருவிகளும் எனக்கு அத்துப்படியாகிப்போனது. இத்தனைக்கும் மத்தியில் படிப்பில் அக்கறை காட்டினேன், நீதி நேர்மையையும் நேசித்தேன்.

1940-ம் ஆண்டின் ஆரம்பக் கட்டம். இரண்டாம் உலகப்போர் தீவிரமான சமயம். ஒரு சிறுமியின் சவ அடக்கத்திற்காக எங்கள் இசைக்குழுவை அழைத்திருந்தார்கள். அங்கு சொந்தபந்தங்களும் நண்பர்களும் கதறிக் கதறி அழுதுகொண்டிருந்தார்கள். ஆறுதல்படுத்த முடியாத அவர்களது துக்கம் என் நெஞ்சை பிழிந்தது. ‘நாம் ஏன்தான் சாகிறோம்? கொஞ்ச காலம் இருந்துவிட்டு சாவதுதான் வாழ்க்கையா? எப்படி தெரிந்துகொள்வது?’ எனக்குள் இப்படி பலப்பல கேள்விகள் உதித்தன.

அதன் பிறகு ஒருசில நாட்கள் இருக்கும். என் வீட்டு ஷெல்ஃபில் புதிய ஏற்பாடு ஒன்று கண்ணில் பட, ஆவலுடன் அதை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். மத்தேயு 24:7-ஐ படித்தபோது அது நம் காலத்தைப் பற்றித்தான் பேசுகிறது என்பது விளங்க ஆரம்பித்தது. அதில் இயேசு கிறிஸ்து மகா யுத்தங்கள் நடக்கும் என சொல்லியிருந்தார். தமது பிரசன்னத்தின் அடையாளங்களில் ஒன்றாக இதைக் குறிப்பிட்டிருந்தார். அதன்பின் வாரக்கணக்காக இந்த புதிய ஏற்பாட்டை நிறைய தடவை திரும்பத் திரும்ப படித்தேன்.

1940-ஆண்டு டிசம்பர் மாதம். பக்கத்தில் வசித்துவந்த ஒரு விதவையையும் அவளது ஐந்து பிள்ளைகளையும் பார்க்க சென்றேன். அவர்கள் வீட்டு பரணில் ஒரு கட்டு புத்தகம் கிடந்தது. அதில் ஒன்று, விருப்பமான அரசாங்கம் என்ற குட்டிப் புத்தகம். உவாட்ச் டவர் பைபிள் அண்ட் ட்ராக்ட் சொஸைட்டி பிரசுரித்தது. அந்த முழு புத்தகத்தையும் படித்து முடிக்கும்வரை நான் பரணைவிட்டு இறங்கவே இல்லை. நான் படித்ததெல்லாம் நூற்றுக்கு நூறு உண்மையென நம்பினேன். ‘கடைசிநாட்கள்’ என பைபிள் சொல்லும் காலத்தில்தான் நாம் வாழ்கிறோம்; யெகோவா தேவன் சீக்கிரத்தில் இந்தப் பொல்லாத உலகை அழிப்பார்; நீதியுள்ள புதிய உலகத்தை கொண்டுவருவார். இவை எல்லாமே உண்மையென நம்பினேன்.​—2 தீமோத்தேயு 3:1-5; 2 பேதுரு 3:13.

உண்மையுள்ளவர்கள் பூங்காவனம்போன்ற பூமியில் என்றென்றும் வாழ்வார்கள்; கடவுளுடைய ராஜ்யத்தின்கீழ் அந்தப் புதிய பூமியில் துன்பமோ மரணமோ இருக்காது என்பதற்கு பைபிளிலிருந்து அத்தாட்சி கொடுக்கப்பட்டிருந்தது. இதுதான் என்னை மிகவும் கவர்ந்தது. (சங்கீதம் 37:9-11, 29; வெளிப்படுத்துதல் 21:3, 4) படிக்கப் படிக்கவே கடவுளிடம் நன்றி சொல்லி ஜெபித்தேன். ‘நான் என்னென்ன செய்ய வேண்டுமென சொல்லிக்கொடுங்கள்’ என்றும் கேட்டேன். யெகோவா தேவனை மனதார வழிபட வேண்டும், அதற்கு அவர் தகுந்தவர் என்பது தெளிவாக புரிந்தது.​—மத்தேயு 22:37.

படித்ததைப் பழக்கத்தில்

அப்போதே சிகரெட், குடி, சீட்டாட்டம் எல்லாவற்றையும் மூட்டைக்கட்டி எறிந்தேன். அந்த விதவையின் ஐந்து பிள்ளைகளையும் என் தம்பி தங்கைகள் மூன்று பேரையும் ஒன்றாக சேர்ந்து உட்காரவைத்து, அந்தக் குட்டிப் புத்தகத்தில் இருந்து நான் கற்றுக்கொண்டதை எல்லாம் சொல்லிக்கொடுத்தேன். இப்படி அரைகுறையாக கற்றுக்கொண்டதை நாங்கள் எல்லாரும் மற்றவர்களுக்குச் சொல்ல ஆரம்பித்தோம். நாங்கள் யெகோவாவின் சாட்சிகள் என்று அழைக்கப்பட்டோம். உண்மையில் நாங்கள் ஒரு சாட்சியையும் அதுவரை சந்தித்ததே கிடையாது. ஆரம்பத்திலிருந்தே, நான் கற்றுக்கொண்ட அருமையான விஷயங்களை மற்றவர்களுக்குச் சொல்வதில் மாதா மாதம் நூறு மணிநேரத்துக்கும் மேலாக செலவழித்தேன்.

கிரேக்க ஆர்த்தடாக்ஸ் பாதிரி ஒருவர் எங்களைப் பற்றி புகார் செய்ய மேயரிடம் சென்றார். ஆனால் சில நாட்களுக்கு முன்புதான் ஓர் இளம் சாட்சி, தொலைந்துபோன ஒரு குதிரையை கண்டுபிடித்து அதன் சொந்தக்காரர்களிடம் ஒப்படைத்திருந்தார். இந்த விஷயம் எங்களுக்கே அப்போது தெரியாது. அவரது நேர்மையால் அந்த மேயருக்கு சாட்சிகள்மேல் தனி மரியாதை ஏற்பட்டது. ஆகவே அந்தப் பாதிரி சொல்வதை அவர் காதுகொடுத்துக் கேட்கவே இல்லை.

1941-ம் ஆண்டு அக்டோபர் மாதம் என நினைக்கிறேன். மார்க்கெட்டில் சாட்சிகொடுத்துக்கொண்டு இருந்தேன். பக்கத்து ஊரில் ஒரு யெகோவாவின் சாட்சி இருப்பதாக ஒருவர் சொன்னார். அந்தச் சாட்சியின் பெயர் க்றிஸ்டாஸ் ட்ரியான்டாஃபிலூ. முன்னாள் போலீஸ்காரராம். அவரை பார்க்கச் சென்றேன். 1932 முதற்கொண்டு சாட்சியாக இருப்பதாக அவர் சொன்னார். பழைய உவாட்ச் டவர் புத்தகங்களை அள்ளிக்கொடுத்தார். பெரும் புதையலை கண்டெடுத்த சந்தோஷம் எனக்கு! ஆவிக்குரிய முன்னேற்றம் செய்ய இவை உறுதுணையாய் இருந்தன.

கடவுளுக்கு என் வாழ்வை சமர்ப்பித்ததை 1943-ல் முழுக்காட்டுதல் மூலம் வெளியரங்கமாக தெரியப்படுத்தினேன். அப்போது அக்கம்பக்கத்து கிராமங்கள் மூன்றில்​—டிராவிஸ்காஸ், பாலியோகோமி, மாவ்ரோலோஃபாஸ் ஆகிய கிராமங்களில்​—பைபிள் படிப்புகளை நடத்திவந்தேன். அதற்கு த ஹார்ப் ஆஃப் காட் என்ற புத்தகத்தைப் பயன்படுத்தினேன். இறுதியாக இந்த இடத்தில் யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகள் நான்கு உருவாவதைப் பார்க்கும் பாக்கியத்தைப் பெற்றேன்.

தடைகளையும் மீறி பிரசங்கம்

1944-ல் கிரீஸ், ஜெர்மானிய ஆக்கிரமிப்பிலிருந்து விடுதலை பெற்றது. கொஞ்ச காலத்திற்குள் ஏதன்ஸில் அமைந்திருந்த உவாட்ச் டவர் சொஸைட்டியின் கிளைக்காரியாலயத்தோடு தொடர்புகொண்டோம். நற்செய்தி அதுவரை எட்டியிராத ஓர் பிராந்தியத்தில் ஊழியம் செய்யும்படி கிளைக்காரியாலயம் என்னை அழைத்தது. அங்கு குடிபெயர்ந்து சென்றேன். மூன்று மாதங்கள் ஒரு பண்ணையில் வேலை பார்த்தேன். அதன்பின் மீதமுள்ள ஒன்பது மாதங்களையும் ஊழியத்திற்கே சமர்ப்பித்தேன்.

அதே வருடம் எனக்கு சந்தோஷ “போனஸ்” வந்து குவிந்தது. என் அம்மாவும் அந்த விதவையும் அவளது கடைசி மகள் மாரியான்தியைத் தவிர மற்ற பிள்ளைகளும் முழுக்காட்டுதல் எடுத்தார்கள்! நவம்பரில் மாரியான்தியின் நேசக்கரம் பற்றினேன். அவள் 1943-ம் ஆண்டே முழுக்காட்டுதல் எடுத்திருந்தாள். முப்பது வருடங்களுக்குப் பிற்பாடு, அதாவது 1974-ல் அப்பாவும் முழுக்காட்டுதல் எடுத்தார்.

1945-ன் ஆரம்பத்தில், காவற்கோபுர பத்திரிகையின் ஸ்டென்ஸில் பிரதி ஒன்றை கிளைக்காரியாலயம் முதன்முதலில் அனுப்பியது. அதில், “புறப்பட்டுச் சென்று எல்லா தேசத்தாரையும் சீஷராக்குங்கள்” என்ற சிறப்புக் கட்டுரை இருந்தது. (மத்தேயு 28:19, த எம்ஃபடிக் டையக்ளாட்) மாரியான்தியும் நானும் உடனடியாக புறப்பட்டோம். ஸ்ட்ரைமான் நதியின் கிழக்கே தொலைதூர பிராந்தியங்களில் ஊழியம் செய்ய சென்றோம். அதன்பின் மற்ற சாட்சிகளும் எங்களோடு சேர்ந்துகொண்டார்கள்.

கிராமங்களுக்குச் செல்ல மைல்கணக்காக மலைகளையும் சிறு பள்ளத்தாக்குகளையும் கடந்துசெல்ல வேண்டும். அதுவும் வெறுங்காலிலேயே நடந்து செல்வோம். ஏனென்றால் ஷூ தேய்ந்துவிட்டால் போடுவதற்கு எங்களிடம் வேறு இல்லை. 1946-லிருந்து 1949 வரை உள்நாட்டுப் போர் கிரீஸை நாசமாக்கியது. பயணம் செய்வது உயிருக்கே ஆபத்தானதாய் இருந்தது. நட்ட நடு ரோட்டிலேயே பிணங்கள் கிடக்கும்.

இதையெல்லாம் பார்த்துச் சோர்ந்துவிடுவதற்குப் பதிலாக, தொடர்ந்து விறுவிறுப்போடு ஊழியம் செய்தோம். “நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன், தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்” என சங்கீதக்காரனைப் போலவே நானும் பல தடவை யோசித்திருக்கிறேன். (சங்கீதம் 23:4) இந்தச் சமயத்தில் அடிக்கடி வாரக்கணக்காக வீட்டைவிட்டு சென்றுவிடுவோம். மாதம் 250 மணிநேரம்கூட சிலசமயம் ஊழியம் செய்திருக்கிறேன்.

ஐதோனோஹோரியில் ஊழியம்

1946-ல், நாங்கள் ஊழியம் செய்த கிராமங்களில் ஒன்று ஐதோனோஹோரி. மலை உச்சியில் அமைந்திருந்த கிராமம் அது. அங்கு ஒரு ஆளை சந்தித்தோம். கிராமத்திலிருந்த இரண்டு பேர் பைபிளைப் பற்றி தெரிந்துகொள்ள ஆவலாயிருந்ததாய் அவர் சொன்னார். இருந்தாலும் அக்கம்பக்கத்தாருக்கு பயந்து, அவர்களது வீட்டைக் காட்ட மறுத்துவிட்டார். இருந்தாலும் நாங்கள் எப்படியோ வீட்டைக் கண்டுபிடித்துவிட்டோம். நல்ல உபசரிப்பு கிடைத்தது. அதுமட்டுமல்ல, சில நிமிடத்தில் ஹாலில் கூட்டம் நிரம்பி வழிந்தது! எல்லாரும் அவர்களது சொந்தபந்தங்களும் நெருங்கிய நண்பர்களும்தான். அவர்கள் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திரும்பாமல் உட்கார்ந்தது உட்கார்ந்தபடி கூர்மையாக கவனித்துக் கேட்டதைப் பார்த்து நானே அசந்துவிட்டேன். யெகோவாவின் சாட்சிகள் எப்போதுதான் வருவார்களோ என காத்துக்கொண்டிருந்ததாய் அவர்கள் சொன்னார்கள். ஆனால் ஜெர்மானிய ஆக்கிரமிப்பின்போது அந்தப் பகுதியில் யாருமே இல்லை. அப்படியென்றால் இவர்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது?

இந்த இரண்டு குடும்பத் தலைவர்களும், அங்கிருந்த கம்யூனிஸ கட்சியின் முக்கிய பிரமுகர்களாய் இருந்தார்களாம். கம்யூனிஸ கருத்துக்களை கிராமத்தினரிடையே புகுத்தினார்களாம். அதன் பிறகுதான் உவாட்ச் டவர் சொஸைட்டி பிரசுரித்த அரசாங்கம் என்ற புத்தகம் இவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. அதைப் படித்தபின், நீதியுள்ள நிறைவான அரசாங்கத்திற்கான ஆசையை பூர்த்திசெய்யப்போவது கடவுளது ராஜ்யம் மட்டுமே என தெளிவாய் புரிந்துகொண்டார்கள்.

நடுராத்திரி வரை இவர்களோடும் இவர்களது வீட்டில் கூடிவந்தவர்களோடும் பேசிக்கொண்டிருந்தோம். இவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பைபிளிலிருந்து விடைகளைக் காட்டியதால் பூரண திருப்தியடைந்தார்கள். ஆனால் சில நாட்களில் அந்தக் கிராமத்து கம்யூனிஸவாதிகள் என்னைக் கொன்றுபோட திட்டம் தீட்டினார்கள். அவர்களது தலைவர்கள் மாறிவிட்டதற்கு என்னைக் காரணங்காட்டினார்கள். இன்னொரு இன்ட்ரஸ்டிங்கான சமாச்சாரம், அந்த ராத்திரி கூடி வந்தவர்களில், வீட்டைக் காட்ட மறுத்துவிட்ட அந்த ஆளும் இருந்தார். அவர் ஆர்வம் குன்றாமல் தொடர்ந்து பைபிளைப் படித்து, முழுக்காட்டுதல் எடுத்து, பிற்பாடு கிறிஸ்தவ மூப்பரும் ஆனார்.

கடும் துன்புறுத்துதல்

இந்த முன்னாள் கம்யூனிஸவாதிகளைச் சந்தித்து கொஞ்ச காலம்தான் ஆகியிருக்கும். இரண்டு போலீஸ்காரர்கள் நாங்கள் கூட்டம் நடத்திவந்த வீட்டிற்குள் ஆவேசமாய் நுழைந்தார்கள். துப்பாக்கி முனையில் எங்கள் நால்வரை கைதுசெய்து போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றார்கள். அங்கிருந்த போலீஸ் அதிகாரிக்கும் கிரேக்க ஆர்தடாக்ஸ் குருமார்களுக்கும் நெருங்கிய தொடர்பிருந்தது. ஆகவே அவர் எங்களை கண்டபடி பேசினார். கடைசியில், “உங்கள இப்ப என்ன செய்யலாம்?” என கேட்டார்.

“நல்லா சாத்து சாத்துண்ணு சாத்த வேண்டியதுதான்” என கோரஸாக கத்தினார்கள் எங்களுக்குப் பின் நின்றுகொண்டிருந்த போலீஸ்காரர்கள்.

அப்போது ராத்திரி வெகு நேரம் ஆகிவிட்டது. போலீஸ்காரர்கள் எங்களை பேஸ்மண்டில் தள்ளி பூட்டிவிட்டு பக்கத்தில் மது அருந்த சென்றுவிட்டார்கள். நன்றாக குடித்து போதையேறிய பிறகு மறுபடியும் வந்தார்கள். என்னை மேல் மாடிக்கு இழுத்துச் சென்றார்கள்.

அவர்களைப் பார்த்த மாத்திரத்தில், எந்த விநாடியும் என்னைக் கொன்றுபோட்டு விடுவார்கள் என புரிந்துகொண்டேன். ஆகவே கடவுளிடம் ஜெபித்தேன். என்ன நடந்தாலும் தாங்கிக்கொள்வதற்கு சக்திகொடுக்குமாறு கேட்டேன். அவர்கள் மரத் தடிகளை எடுத்து, நான் ஆரம்பத்தில் சொன்னபடி என் உள்ளங்கால்களில் அடி அடியென அடித்தார்கள். பிறகு மற்ற இடங்களிலும் அடிக்க ஆரம்பித்தார்கள். அதன்பின் மறுபடியும் பேஸ்மண்டில் என்னைத் தூக்கியெறிந்துவிட்டு, அடுத்த ஆளை இழுத்துச்சென்று அதேவிதமாய் அடிக்க ஆரம்பித்தார்கள்.

அவர்கள் திரும்பி வருவதற்குள் மற்ற இரு இளம் சாட்சிகளையும் தைரியப்படுத்தினேன். சோதனையைத் தாங்கிக்கொள்ள அவர்களை தயார்படுத்தினேன். ஆனால் என்னைத்தான் மறுபடியும் மேல் மாடிக்கு இழுத்துச் சென்றார்கள். என் உடைகளைக் கழற்றிவிட்டு அந்த ஐந்து போலீஸ்காரர்களும் சுமார் ஒரு மணிநேரம் என்னை செமத்தியாக அடித்தார்கள். ஆர்மி பூட்ஸோடு என் தலையில் ஏறி மிதித்தார்கள். அதன்பின் மறுபடியும் என்னை கீழே இழுத்துச்சென்று தள்ளிவிட்டார்கள். அங்கு கிட்டத்தட்ட 12 மணிநேரம் பேச்சுமூச்சு இல்லாமல் கிடந்தேன்.

அதன்பின் ஒருவழியாக விடுதலை செய்யப்பட்டோம். அக்கிராமத்திலிருந்த ஒரு குடும்பம் ராத்திரி தங்க இடம் கொடுத்து எங்களைக் கவனித்துக்கொண்டது. மறுநாள் வீடு திரும்புவதற்காக அங்கிருந்து புறப்பட்டோம். அடிவாங்கியதால் கைகால் எல்லாம் தளர்ந்துபோயிருந்தது. உடம்பில் கொஞ்சமும் சக்தியில்லை. ஆகவே கால்நடையாக இரண்டு மணிநேரத்தில் போய் சேர்ந்திருக்க வேண்டியது, எட்டு மணிநேரம் எடுத்தது. என் உடம்பெல்லாம் கண்ணிப்போய் வீங்கியிருந்ததால் என் மனைவி மாரியான்திக்குக்கூட என்னை அடையாளம் தெரியவில்லை.

எதிர்ப்பின் மத்தியிலும் வளர்ச்சி

1949-ல், உள்நாட்டுப் போர் இன்னும் நடந்துகொண்டிருந்தது. நாங்கள் தெசலோனிக்காவிற்கு குடிபெயர்ந்தோம். அங்கு நான்கு சபைகள் இருந்தன. அதில் ஒன்றில் துணை சபை ஊழியராக நியமிக்கப்பட்டேன். ஒரு வருடத்திற்குப் பிற்பாடு சபை பெரும் வளர்ச்சியடைந்ததால் இன்னொரு சபை உருவானது. நான் சபை ஊழியராக அதாவது நடத்தும் கண்காணியாக நியமிக்கப்பட்டேன். ஒரு வருடத்திற்குப் பிற்பாடு இந்தப் புதிய சபையும் எண்ணிக்கையில் இரட்டிப்பாக, மேலுமொரு சபை உருவானது!

தெசலோனிக்காவில் யெகோவாவின் சாட்சிகளது வளர்ச்சியால் எதிரிகள் எரிச்சலடைந்தார்கள். ஒருநாள் 1952-ல், வேலை முடித்துவிட்டு திரும்பியபோது என் வீடு சாம்பலாக கிடந்தது. மாரியான்தி எப்படியோ உயிர் தப்பிவிட்டாள். அன்றைய சாயங்காலம் கூட்டத்திற்கு அழுக்குத் துணியுடனேயே சென்றோம். எல்லாவற்றையும் இழந்துவிட்ட சோகக் கதையை கேட்ட கிறிஸ்தவ சகோதரர்கள் காட்டிய இரக்கத்தையும் செய்த உதவிகளையும் விவரிக்க வார்த்தைகள் இல்லை.

1961-ல், பயணக் கண்காணியாக்கப்பட்டேன். வாராவாரம் ஒவ்வொரு சபையாக சந்தித்து, சகோதரர்களை உற்சாகப்படுத்த வேண்டும். அடுத்த 27 ஆண்டுகளுக்கு, நானும் என் மனைவியும் மாசிடோனியா, த்ரேஸ், தெஸலி ஆகிய இடங்களிலுள்ள வட்டாரங்களிலும் மாவட்டங்களிலும் சேவித்தோம். என் கண்களாக திகழ்ந்த எனதருமை மனைவி 1948-ல் பார்வையிழந்தாள். ஆனாலும் மற்றவர்கள் ஆவிக்குரிய பார்வைபெற தன் சோதனைகளை எல்லாம் தூசியாக உதறிவிட்டு என்னோடு தொடர்ந்து தைரியமாக சேவையில் பங்குகொண்டாள். அவளும் அநேக தடவை கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டாள். அதன்பின் அவள் உடல்நலம் சீர்குலைய ஆரம்பித்தது. வெகு நாட்களாக புற்றுநோயோடு போராடி, இறுதியில் 1988-ல் நோயிடம் தோற்றுப்போனாள். என்னவள் உயிர் பிரிந்தது.

அதே வருடம் நான் தெசலோனிக்காவில் விசேஷ பயனியராக நியமிக்கப்பட்டேன். யெகோவாவிற்கு சேவைசெய்ய ஆரம்பித்து 56 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. இப்போதும் என்னால் கடினமாக உழைத்து, ஊழியத்தின் எல்லா அம்சங்களிலும் பங்குகொள்ள முடிகிறது. வாராவாரம் 20 பைபிள் படிப்புகள்கூட நடத்தியிருக்கிறேன்.

மிகப் பெரிய கல்வித் திட்டம் நம் காலத்தில் ஆரம்பித்திருக்கிறது, அது யெகோவாவின் புதிய உலகம் வரையும் அதன்பின் ஆயிரம் ஆண்டுகளுக்கும் தொடரும் என்பதை தெளிவாய் புரிந்திருக்கிறேன். ஏனோதானோ என்றிருப்பதற்கோ காரியங்களைத் தள்ளிப்போடுவதற்கோ நமது இச்சைகளைத் தீர்த்துக்கொள்ள நேரத்தை செலவழிப்பதற்கோ இது காலமே அல்ல. நான் ஆரம்பத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற உதவியதற்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். ஏனெனில் மனதாரவும் பயபக்தியோடும் சேவை செய்வதற்கு யெகோவா ஒருவரே முற்றிலும் தகுந்தவர்.

[பக்கம் 24-ன் படம்]

தடைசெய்யப்பட்ட சமயத்தில் பேச்சுக்கொடுத்தபோது

[பக்கம் 25-ன் படம்]

என்னவள் மாரியான்தியுடன்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்