ஆஸ்திரேலியாவில் நான் உண்மையான செல்வத்தைக் கண்டுபிடித்தேன்
அது ஏப்ரல் 1971 ஆக இருந்தது. ஆஸ்திரேலியாவில் ஏழு வருடங்களைச் செலவழித்தப் பிறகு என்னுடைய குடும்பத்தைப் பார்க்க நான் சமீபத்தில்தானே கிரீஸுக்குத் திரும்பியிருந்தேன். அது மாலைப் பொழுதாக இருந்தது, நான் காரீஸ் கிராம சதுக்கத்தில் ஒரு சிற்றுண்டிச்சாலையின் மேசையில் அமைதியாக அமர்ந்துகொண்டிருந்தேன். அப்போது உள்ளூர் பாதிரியும் மேயரும் வந்து எனக்கு எதிர்ப்புறத்தில் அமர்ந்துகொண்டனர். என்னோடு வாக்குவாதம் செய்ய அவர்கள் ஆவலாயிருந்தது தெளிவாக தெரிந்தது.
சாதாரணமான ஒரு வாழ்த்துதல்கூட சொல்லாமல், பாதிரி நான் பணம் சேர்ப்பதற்காகவே ஆஸ்திரேலியாவில் குடியேறியதாக என்னைக் குற்றஞ்சாட்டினார். இது எனக்கு ஆச்சரியமாயிருந்தது என்று சொல்வது வேண்டுமென்றே குறைத்துக்கூறுவதாக இருக்கும். நான் முடிந்தவரை அமைதியாக, ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துவந்த போது, பணத்தை விட மிக அதிக மதிப்புள்ள செல்வத்தை என்னால் பெறமுடிந்தது என்பதாக பதிலளித்தேன்.
என்னுடைய பதில் அவரை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது, ஆனால் நான் எதை அர்த்தப்படுத்தினேன் என்பதை அறிந்துகொள்ளவேண்டும் என்று அவர் வற்புறுத்தினார். மற்ற காரியங்களோடுகூட, கடவுளுக்கு ஒரு பெயர் இருப்பதை நான் கற்றுக்கொண்டேன் என்பதாக நான் பதிலளித்தேன். சிறிதும் பயப்படாமல் நேருக்கு நேர் அவரைப் பார்த்து, “இதை நீங்கள் எனக்குக் கற்பிக்க தவறிவிட்டீர்கள்,” என்று சொன்னேன். அவர் பதில் சொல்வதற்கு முன்பாக, “இயேசு மாதிரி ஜெபத்தில் ‘உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக,’ என்று ஜெபிக்கும்படியாக நமக்குக் கற்பித்தபோது, குறிப்பிட்ட கடவுளுடைய பெயரை நீங்கள் தயவுசெய்து எனக்குச் சொல்வீர்களா?” என்று நான் கேட்டேன்.—மத்தேயு 6:9.
வாக்குவாதத்தைப் பற்றிய செய்தி கிராம சதுக்கத்தில் வேகமாக பரவியது, பத்து நிமிடங்களுக்குள் சுமார் 200 பேர் கூடிவிட்டார்கள். பாதிரி அசெளகரியமாக உணர ஆரம்பித்தார். கடவுளுடைய பெயரைப் பற்றிய என்னுடைய கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை, மேலுமான பைபிள் கேள்விகளுக்கு அவரிடம் சரியான பதில்கள் இல்லை. ஓசோ என்ற ஒரு கிரேக்க மதுபானத்தை இன்னும் கொண்டுவரும்படி பணியாளை அடிக்கடி அழைத்துக்கொண்டிருந்தது அவருடைய சங்கடத்தை வெளிப்படுத்தியது.
சுவாரசியமாக இரண்டு மணிநேரங்கள் கடந்துசென்றன. என்னுடைய அப்பா என்னைத் தேடிக்கொண்டு வந்துவிட்டார், ஆனால் நடந்துகொண்டிருப்பதை பார்த்தபோது, ஒரு மூலையில் அமைதியாக உட்கார்ந்து அந்தக் காட்சியைக் கவனித்துக்கொண்டிருந்தார். உற்சாகமூட்டும் கலந்தாலோசிப்பு இரவு 11:30 வரை தொடர்ந்தது, அப்போது குடிபோதையில் ஒரு மனிதன் கோபமாக கூச்சல்போட ஆரம்பித்தான். அப்பொழுது பிந்திய மணிநேரமாகிவிட்ட காரணத்தால் நாம் அனைவரும் வீட்டுக்குப் போக வேண்டும் என்று கூட்டத்தாரிடம் நான் யோசனைக் கூறினேன்.
நேருக்கு நேரான இந்தச் சந்திப்புக்குக் காரணம் என்ன? பாதிரியும் மேயரும் என்னிடம் வாக்குவாதம் செய்ய ஏன் முயற்சிசெய்தார்கள்? கிரீஸின் இந்தப் பகுதியில் நான் வளர்ந்துவந்ததைப் பற்றிய சுருக்கமான பின்னணித் தகவல் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவிசெய்யும்.
ஆரம்பகால பெருங்கஷ்டங்கள்
நான் பெலப்போனிசோஸில் காரீஸ் கிராமத்தில் 1940-ல் டிசம்பர் மாதம் பிறந்தேன். நாங்கள் மிகவும் ஏழைகளாக இருந்தோம், பள்ளிசெல்லாத போது நான் என் அம்மாவோடு நெல் வயலில் முழங்கால் அளவு தண்ணீரில் நின்றுகொண்டு நாள் முழுவதும் வேலைபார்த்து வந்தேன். நான் தொடக்கப்பள்ளியை 13 வயதில் முடித்தபோது, ஒரு பணி பயில்பவனாக என்னைச் சேர்த்துவிட என் பெற்றோர் ஏற்பாடு செய்தனர். குழாய்கள் சரிசெய்பவனாகவும் ஜன்னல் அமைத்துக்கொடுப்பவனாகவும் வேலையில் பயிற்சி பெறுவதற்கு என்னை வேலையில் அமர்த்தியவருக்கு என்னுடைய பெற்றோர் ஏறக்குறைய அவர்களுடைய மொத்த ஆண்டு வருமானமாக இருந்த 500 கிலோகிராம் கோதுமையையும் 20 கிலோகிராம் எண்ணெயையும் கொடுத்தனர்.
பணி பயில்பவனாக வாழ்க்கை—வீட்டிலிருந்து பல மைல் தொலைவில் வாழ்ந்துகொண்டு அடிக்கடி விடியற்காலை முதல் நள்ளிரவு வரையாக வேலைசெய்துகொண்டிருந்த வாழ்க்கை—மிகவும் கடினமாக இருந்தது. சிலசமயங்களில் வீடு திரும்பிவிடலாம் என்று நான் யோசித்ததுண்டு, ஆனால் அதை நான் என் பெற்றோருக்குச் செய்ய முடியாது. எனக்காக அவர்கள் அத்தனை தன்னலமற்ற தியாகத்தைச் செய்திருக்கின்றனர். ஆகவே என்னுடைய பிரச்னைகளைப் பற்றி அவர்களுக்கு ஒருபோதும் தெரியப்படுத்தவே இல்லை. எனக்கு நானே இவ்வாறு சொல்லிக்கொண்டேன்: ‘எவ்வளவு கடினமாக ஆனாலும் நீ விடா முயற்சிசெய்ய வேண்டும்.’
ஆண்டுகளினூடாக, அவ்வப்போது என்னுடைய பெற்றோரை நான் சென்று பார்க்க முடிந்திருக்கிறது, கடைசியாக எனக்கு 18 வயதாயிருக்கையில் நான் என்னுடைய பணி பயிலும் பயிற்சியை முடித்தேன். பின்னர் வேலை வாய்ப்பு அதிகமிருந்த தலைநகரான ஆதன்ஸ்க்குச் செல்ல தீர்மானித்தேன். அங்கே எனக்கு வேலை கிடைத்தது, ஓர் அறையை வாடகைக்கு எடுத்து தங்கினேன். ஒவ்வொரு நாளும் வேலைக்குப் பிறகு, நான் வீட்டுக்கு வந்து, எனக்கு வேண்டியதை சமைத்துக்கொண்டு, வீட்டைச் சுத்தம் செய்து எனக்குக் கிடைத்த கொஞ்ச ஓய்வுநேரத்தை ஆங்கிலம், ஜெர்மன் மற்றும் இத்தாலி மொழி கற்றுக்கொள்வதில் செலவிட்டேன்.
மற்ற இளைஞருடைய ஒழுக்கமற்ற பேச்சும் நடத்தையும் என்னை சங்கடப்படுத்தியதால் நான் அவர்கள் கூட்டுறவைத் தவிர்த்தேன். ஆனால் இது என்னை மிகவும் தனிமையாக உணரச்செய்தது. எனக்கு 21 வயதானபோது நான் இராணுவ சேவை செய்ய எதிர்பார்க்கப்பட்டேன், அந்தச் சமயத்தில் மொழிகள் பயில்வதைத் தொடர்ந்தேன். பின்னர், 1964 மார்ச் மாதம், படையைவிட்டு விலகிக்கொண்டபோது, ஆஸ்திரேலியாவில் குடியேறி மெல்போர்னில் தங்கினேன்.
ஒரு புதிய தேசத்தில் மதப்பற்றுள்ள தேடுதல்
வேலை எனக்கு விரைவில் கிடைத்தது, கிரேக்க நாட்டிலிருந்து குடிபுகுந்த அலெக்ஸான்டிராவை நான் சந்தித்தேன், வந்துசேர்ந்த ஆறு மாதங்களுக்குள் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். பல வருடங்களுக்குப் பிறகு, 1969-ல் வயதான ஒரு பெண்மணி, யெகோவாவின் சாட்சிகளில் ஒருத்தி, எங்கள் வீட்டுக்கு வந்து காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளை அளித்தாள். பத்திரிகைகள் அக்கறையூட்டுவதாக இருப்பதை நான் கண்டேன், ஆகவே அவற்றைத் தூக்கி எறிந்துவிடவேண்டாம் என்று என் மனைவியிடம் சொல்லி, அவற்றை பத்திரமாக ஓரிடத்தில் வைத்தேன். ஒரு வருடத்துக்குப் பின்பு வேறு இரண்டு சாட்சிகள் வந்து எனக்கு இலவச வீட்டு பைபிள் படிப்பை நடத்த முன்வந்தார்கள். நான் ஏற்றுக்கொண்டேன், வேதாகமத்திலிருந்து நான் கற்றுக்கொண்டவை என்னுடைய வாழ்க்கையில் இருந்த வெறுமையை நிரப்புவதற்காக நான் தேடிக்கொண்டிருந்த அதே காரியங்களாக இருந்தன.
நான் சாட்சிகளோடு படித்துக்கொண்டிருப்பதை என்னுடைய பக்கத்து வீட்டுக்காரி கண்ட உடனே, சுவிசேஷக் குழுவினர் (Evangelists) மேம்பட்ட மதமாக இருப்பதாகச் சொல்லி என்னை அவர்களிடம் போகச் சொன்னாள். இதன் விளைவாக, சுவிசேஷக் குழுவிலிருந்த ஒரு மூப்பரோடும்கூட நான் படிக்க ஆரம்பித்தேன். விரைவில் சுவிசேஷகர்களுடைய கூட்டங்களுக்கும் சாட்சிகளுடைய கூட்டங்களுக்கும் செல்ல ஆரம்பித்தேன், ஏனென்றால் உண்மையான மதத்தைக் கண்டுபிடிக்க நான் தீர்மானமாயிருந்தேன்.
அதேசமயத்தில், கிரேக்க வளர்ப்புக்குத் தகுதியாக, நான் ஆர்த்தடாக்ஸ் மதத்தை அதிக ஆழமாக ஆராய ஆரம்பித்தேன். ஒரு நாள் நான் மூன்று கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுகளுக்குச் சென்றேன். முதல் சர்ச்சுக்குச் சென்று என்னுடைய நோக்கத்தை நான் விளக்கியபோது, பாதிரி, கதவு பக்கமாக தன் கையை மெதுவாக நீட்டினார். அவ்விதமாக செய்துகொண்டே, நாங்கள் கிரேக்கர் என்றும் சாட்சிகளோடு அல்லது சுவிசேஷ குழுவோடு கூட்டுறவுக்கொள்வது தவறு என்றும் அவர் விளக்கினார்.
அவருடைய மனநிலை எனக்கு ஆச்சரியமாக இருந்தது, ஆனால் நான் யோசித்தேன்: ‘ஒருவேளை இந்தக் குறிப்பிட்ட பாதிரி சர்ச்சின் நல்ல ஒரு பிரதிநிதியாக இருக்கமாட்டார்.’ இரண்டாவது சர்ச் பாதிரியும் இதே விதமாக பிரதிபலித்தபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் ஒவ்வொரு சனிக்கிழமை மாலையும் இறையியலர் ஒருவர் சர்ச்சில் பைபிள் படிப்பு வகுப்பு நடத்துவதாக என்னிடம் சொன்னார். நான் மூன்றாவது சர்ச்சை முயற்சித்த போது, நான் மேலுமாக ஏமாற்றமடைந்தேன்.
என்றாலும், இரண்டாவது சர்ச் நடத்திவந்த பைபிள் படிப்பு வகுப்புக்கு நான் செல்ல தீர்மானித்து, அடுத்த சனிக்கிழமை அங்கே சென்றேன். பைபிள் புத்தகமாகிய அப்போஸ்தலர் வாசிக்கப்படுகையில் அதைப் பின்பற்றிவாசித்து மகிழ்ந்தேன். பேதுருவுக்கு முன்னால் கொர்நேலியு முழங்காலிடுவது பற்றிய பகுதி வாசிக்கப்பட்ட போது, இறையியலர் வாசிப்பை நிறுத்தி, கொர்நேலியுவின் வணக்கச் செயலை பேதுரு சரியாகவே ஏற்க மறுத்தார் என்று சுட்டிக்காட்டினார். (அப்போஸ்தலர் 10:24-26) அந்தச் சமயத்தில் நான் என் கையை உயர்த்தி எனக்கு ஒரு கேள்வி இருப்பதாக சொன்னேன்.
“சரி, நீ என்ன தெரிந்துகொள்ள விரும்புகிறாய்?”
“அப்போஸ்தலன் பேதுரு வணங்கப்படுகையில் மறுக்கிறாரென்றால், நாம் ஏன் அவருடைய உருவப்படங்களை வைத்து அவற்றை வணங்குகிறோம்?”
அங்கே பல நொடிகள் நிசப்தம் நிலவியது. பின்னர் ஏதோ ஒரு குண்டு வெடித்தது போல இருந்தது. கோபம் கொழுந்துவிட்டெறிந்தது, “நீ எங்கிருந்து வந்தாய்?” என்று குரல்கள் எழும்பின. இரண்டு மணிநேரங்களுக்கு அதிக கூச்சலோடுகூட அங்கு காரசாரமாக விவாதம் நடந்தது. கடைசியாக, நான் கிளம்பிய போது, வீட்டுக்கு எடுத்துசெல்ல எனக்கு ஒரு புத்தகம் கொடுக்கப்பட்டது.
அதைத் திறந்தபோது, நான் வாசித்த முதல் வார்த்தைகள்: “நாம் கிரேக்கர்கள், நம்முடைய மதம் நம்முடைய பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்காக இரத்தம் சிந்தியிருக்கிறது.” கடவுள் கிரேக்க மக்களுக்கு மட்டுமே உரியவரல்ல என்பதை நான் அறிந்திருந்தபடியால் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச்சோடு கொண்டிருந்த உறவுகளை நான் உடனடியாக துண்டித்துவிட்டேன். அப்போது முதற்கொண்டு நான் சாட்சிகளோடு மட்டுமே என்னுடைய பைபிள் படிப்பைத் தொடர்ந்தேன். ஏப்ரல் 1970-ல் நான் யெகோவாவுக்கு என்னுடைய ஒப்புக்கொடுத்தலை தண்ணீர் முழுக்காட்டுதல் மூலம் அடையாளப்படுத்தினேன், என்னுடைய மனைவி ஆறு மாதங்களுக்குப் பிற்பாடு முழுக்காட்டப்பட்டாள்.
கிராம பாதிரியோடு தொடர்பு
அந்த வருடத்தின் முடிவிலே, கிரீஸிலிருந்த என்னுடைய சொந்த கிராமத்து பாதிரி, கிராமத்துச் சர்ச்சைப் பழுதுபார்ப்பதற்கு உதவிசெய்யும்படி பணம் கேட்டு கடிதம் அனுப்பியிருந்தார். பணத்தை அனுப்புவதற்குப் பதிலாக நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம் புத்தகத்தையும் நான் இப்பொழுது யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக இருப்பதையும் நான் சத்தியத்தைக் கண்டுபிடித்துவிட்டதாக நம்புவதையும் விளக்கி ஒரு கடிதத்தையும் அவருக்கு அனுப்பி வைத்தேன். என் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட போது, ஆஸ்திரேலியாவில் குடிபுகுந்த ஒருவர் கலகம் செய்திருப்பதாக அவர் சர்ச்சில் அறிவிப்பு செய்தார்.
அதற்குப் பிறகு, ஆஸ்திரேலியாவில் மகன்களைக் கொண்டிருந்த தாய்மார்கள் அது தங்களுடைய மகனா என்று பாதிரியிடம் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். என்னுடைய அம்மா அவருடைய வீட்டுக்கே சென்று தனக்குச் சொல்லும்படியாக கெஞ்சினாள். “வருந்தத்தக்க விதமாக அது உங்கள் மகனே,” என்று அவர் சொன்னார். பின்னால் அம்மா தன்னிடம், என்னைப் பற்றி இதைச் சொல்வதைவிட அவர் தன்னைக் கொன்றிருந்தால் மேலாக இருந்திருக்கும் என்று சொன்னாள்.
கிரீஸுக்கு திரும்பிவருதல்
எங்களுடைய முழுக்காட்டுதலுக்குப் பிறகு, என் மனைவியும் நானும் கிரீஸுக்குத் திரும்பி வந்து பைபிளிலிருந்து நாங்கள் கற்றுக்கொண்டிருந்த நல்ல காரியங்களைப் பற்றி எங்களுடைய குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் சொல்ல விரும்பினோம். ஆகவே ஏப்ரல் 1971-ல், எங்களுடைய ஐந்து வயது மகள் திமித்ராவோடு நீண்ட ஒரு விடுமுறையில் திரும்பிவந்தோம். எங்களுடைய சொந்த கிராமம் காரீஸிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிப்பாரிசியா என்ற பட்டணத்தில் தங்கினோம். எங்களுடைய சுற்றுப்பயண விமான டிக்கட்டுகள் ஆறு மாத காலம் செல்லுபடியாகக்கூடியதாக இருந்தது.
வீட்டுக்கு வந்த இரண்டாவது நாள் இரவு, அம்மா அழ ஆரம்பித்துவிட்டார்கள், நான் தவறான பாதையில் சென்று குடும்பப் பெயருக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டதாக கண்ணீரோடு என்னிடம் சொன்னார்கள். அழுதும் விம்மியும் என்னுடைய “தவறான” பாதையிலிருந்து திரும்பிவிடும்படியாக கெஞ்சிக் கேட்டார்கள். பின்னர் மயங்கி என் கைகளில் விழுந்துவிட்டார்கள். நான் வெறுமனே குழந்தைப்பருவம் முதற்கொண்டு அவர்கள் எனக்கு அத்தனை அன்பாக போதித்து வந்தக் கடவுளைப்பற்றிய அறிவைக் கூட்டிக்கொண்டிருக்கிறேன் என்பதாக அடுத்த நாள் விளக்கி அவர்களோடு நியாயங்காட்டி பேச நான் முயற்சிசெய்தேன். அதைத் தொடர்ந்து வந்த அந்த மாலையில்தான் உள்ளூர் பாதிரியோடும் கிராம மேயரோடும் அந்த மறக்கமுடியாத சந்திப்பு நிகழ்ந்தது.
ஆதன்ஸில் வாழ்ந்துவந்த என் இரண்டு தம்பிகளும் ஈஸ்டர் விடுமுறைக்காக வந்திருந்தனர். அவர்கள் இருவரும் நான் ஒரு குஷ்டரோகி என்பது போல என்னைத் தவிர்த்தனர். இருப்பினும், ஒரு நாள் இரண்டு பேரில் மூத்தவன் செவிகொடுத்துக் கேட்க ஆரம்பித்தான். பல மணிநேர கலந்தாலோசிப்புக்குப் பின்னர், நான் பைபிளிலிருந்து அவனுக்குக் காண்பித்த அனைத்தையும் தான் ஒப்புக்கொள்வதாகச் சொன்னான். அந்த நாள் முதற்கொண்டு, குடும்பத்திலுள்ள மற்றவர்கள் முன்னிலையில் எனக்கு ஆதரவாகவும் பேசிவந்தான்.
அதற்குப்பிறகு என்னுடைய தம்பியோடு தங்குவதற்காக ஆதன்ஸுக்கு நான் அடிக்கடி சென்றேன். நான் செல்லும் ஒவ்வொரு சமயமும், நற்செய்தியைக் கேட்பதற்காக அவன் மற்ற குடும்பங்களை அழைப்பான். பின்னால் அவனும் அவனுடைய மனைவியும் அவர்கள் பைபிள் படிப்புகள் நடத்திய மற்ற மூன்று குடும்பங்களோடு சேர்ந்து கடவுளுக்குத் தங்களுடைய ஒப்புக்கொடுத்தலைத் தண்ணீர் முழுக்காட்டுதல் மூலம் அடையாளப்படுத்தியது எனக்கு அதிகமான சந்தோஷத்தைக் கொண்டுவந்தது!
வாரங்கள் வேகமாக கடந்தன, எங்களுடைய ஆறு மாதங்கள் முடிவதற்கு சற்று முன்னால் எங்களுடைய கிராமத்திலிருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு சபையில் சேவை செய்துவரும் ஒரு சாட்சி சந்தித்தார். அந்தப் பகுதியில் பிரசங்க வேலையில் உதவிதேவைப்படுவதை சுட்டிக்காட்டி நிரந்தரமாக அங்கேயே தங்கிவிடுவதைப் பற்றி நான் யோசித்ததுண்டா என்று கேட்டார். அன்றிரவு அந்தச் சாத்தியத்தைக் குறித்து என்னுடைய மனைவியோடு கலந்துபேசினேன்.
தங்கிவிடுவது கடினமாக இருக்கும் என்பதை இருவரும் ஒப்புக்கொண்டோம். ஆனால் பைபிள் சத்தியத்தை மக்கள் கேட்பதற்கு அதிகமான தேவையிருப்பது தெளிவாக இருந்தது. கடைசியாக குறைந்தபட்சம் ஓரிரு ஆண்டுகளாவது தங்கிவிடுவது என்று நாங்கள் தீர்மானித்தோம். என்னுடைய மனைவி ஆஸ்திரேலியாவுக்கு திரும்பிப்போய் எங்களுடைய வீட்டையும் காரையும் விற்றுவிட்டு அவளால் முடிந்த உடைமைகளை எடுத்துவந்தாள். எங்களுடைய தீர்மானத்தைச் செய்த பிறகு, நாங்கள் அடுத்த நாள் காலை நகரத்துக்குள் சென்று ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தோம். உள்ளூர் துவக்கப் பள்ளியில் எங்கள் மகளையும் சேர்த்துவிட்டோம்.
எதிர்ப்பு வெடிக்கிறது
விரைவில் உண்மையான போரே எங்கள் மீது தொடுக்கப்பட்டது. காவல் துறை, பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து எதிர்ப்பு வந்தது. பள்ளியில் திமித்ரா சிலுவைப் போட மறுத்தாள். பள்ளி அதிகாரிகள் அவளைப் பயமுறுத்தி இணங்கவைக்க முயற்சிப்பதற்கு போலீஸை அழைத்தார்கள், ஆனால் அவள் உறுதியாக இருந்தாள். நான் முதல்வரை வந்து பார்க்க அழைக்கப்பட்டேன், அவர் திமித்ராவை அழைத்துக்கொண்டு நான் வெளியேறும்படியாக எனக்கு உத்தரவு பிறப்பித்திருந்தப் பேராயரிடமிருந்து வந்த ஒரு கடிதத்தை எனக்குக் காண்பித்தார். இருப்பினும், நான் முதல்வரோடு கொண்டிருந்த நீண்ட கலந்தாலோசிப்புக்குப் பின்னர், அவள் பள்ளியில் தொடர்ந்திருக்க அனுமதிக்கப்பட்டாள்.
காலப்போக்கில், யெகோவாவின் சாட்சிகளுடைய ஓர் அசெம்பிளிக்குச் சென்றிருந்த ஒரு தம்பதி கிப்பாரிசாவிலிருப்பதை நான் கேள்விப்பட்டேன், அவர்களுடைய அக்கறையை எங்களால் புதுப்பிக்க முடிந்தது. என்னுடைய மனைவியும் நானும் பைபிள் படிப்புகளுக்காக எங்களுடைய வீட்டுக்கு அருகாமையிலுள்ள கிராமத்திலிருக்கும் சாட்சிகளை அழைத்தோம். இருப்பினும், சீக்கிரத்தில், காவல் துறையினர் வந்து எங்கள் அனைவரையும் விசாரிப்பதற்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். உரிமம் இல்லாமல் என் வீட்டை நான் வணக்கத்துக்குரிய ஓரிடமாக பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டப்பட்டேன். ஆனால் நாங்கள் காவலில் வைக்கப்படாத காரணத்தால் எங்கள் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வந்தோம்.
எனக்கு வேலை ஒன்று அளிக்கப்பட்டபோதிலும், ஆயர் இதைப் பற்றி கேள்விப்பட்ட உடனே, என்னை அவர் வேலையிலிருந்து நீக்காவிடில் என்னுடைய முதலாளியின் கடையை மூடிவிடப்போவதாக மிரட்டினார். குழாய்கள் சீர்செய்யும் மற்றும் உலோக தகடு பொருட்கள் செய்யும் ஒரு கடை விற்பனைக்கு வந்தது, அதை எங்களால் வாங்க முடிந்தது. உடனடியாக இரண்டு பாதிரிகள் வந்து எங்கள் வியாபாரத்தை மூடிவிடப்போவதாக மிரட்டினார்கள், ஒருசில வாரங்களுக்குப் பிறகு, எங்களுடைய குடும்பம் சமூகத்திலிருந்து தள்ளிவைக்கப்பட வேண்டும் என்று தலைமை பிஷப் உத்தரவிட்டார். கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச்சிலிருந்து தள்ளிவைக்கப்பட்ட எவரும் அப்போது முழுமையாக ஒதுக்கப்பட்டவராக நடத்தப்பட்டார். எவரும் உள்ளே வருவதைத் தடைசெய்வதற்காக காவல்துறை அதிகாரி ஒருவர் எங்கள் கடைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்தார். வாடிக்கையாளர் எவரும் இல்லாதபோதிலும், நாங்கள் விடாப்பிடியாக கடையை ஒவ்வொரு நாளும் திறந்துவைத்திருந்தோம். எங்களுடைய இக்கட்டான நிலை விரைவில் பட்டணம் எங்கும் பேசப்படலானது.
கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டோம்
ஒரு சனிக்கிழமை மற்றொரு நபரும் நானும் அருகாமையிலுள்ள பட்டணத்தில் சாட்சிகொடுப்பதற்காக அவருடைய மோட்டார்வண்டியில் புறப்பட்டோம். அங்கே போலீஸ் எங்களை நிறுத்தி காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றார், வார இறுதி முழுவதிலுமாக சிறைக்காவலில் வைக்கப்பட்டோம். திங்கட்கிழமை காலை கிப்பாரிசியாவுக்கு திரும்ப ரயில் மூலம் கொண்டுவரப்பட்டோம். நாங்கள் கைதுசெய்யப்பட்ட செய்தி பரவியது, போலீஸ் துணையோடு நாங்கள் வந்திறங்குவதைக் காண ரயில் நிலையத்தில் ஒரு கூட்டம் கூடிவிட்டிருந்தது.
கைரேகை அடையாளங்களை எடுத்துக்கொண்டப்பின், குற்றவியல் அரசு வழக்கறிஞரிடம் நாங்கள் அழைத்துச்செல்லப்பட்டோம். காவல் துறையினர் கிராம மக்களிடம் கேட்டு எங்களுக்கு எதிராக தொகுத்திருந்த குற்றச்சாட்டுகளைச் சப்தமாக வாசிக்கப் போவதாக சொல்லி அவர் விசாரணையை ஆரம்பித்தார். “இயேசு கிறிஸ்து 1914-ம் வருடம் ராஜாவாகிவிட்டார் என்று அவர்கள் எங்களுக்குச் சொன்னார்கள்,” என்பதாக முதல் குற்றச்சாட்டு சொன்னது.
“எங்கிருந்து இந்த விநோதமான எண்ணம் உங்களுக்கு கிடைத்தது?” என்பதாக குற்றவியல் வழக்கறிஞர் சண்டைப்போடும் விதமாக கேட்டார்.
நான் முன்னால் அடியெடுத்து வைத்து அவர் தன் சாய்வுமேசையில் வைத்திருந்த பைபிளை எடுத்து மத்தேயு அதிகாரம் 24-க்கு திருப்பி அவர் அதை வாசிக்கும்படி கேட்டுக்கொண்டேன். அவர் ஒரு கணம் தயங்கினார், ஆனால் பின்னர் பைபிளை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். ஒருசில நிமிடங்கள் வாசித்தபிறகு, அவர் உற்சாகத்தோடு சொன்னார்: “ஹே, இது உண்மையாக இருந்தால், அப்பொழுது நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஒரு துறவிமடத்தில் சேர்ந்துவிட வேண்டும்!”
“வேண்டாம்,” என்று நான் அமைதியாக சொன்னேன். “நீங்கள் பைபிள் சத்தியத்தைக் கற்றுக்கொண்டு பின்னர் மற்றவர்களும் சத்தியத்தைக் கண்டுபிடிக்க உதவவேண்டும்.”
ஒருசில வழக்கறிஞர்கள் வந்தனர், அந்த நாளில் அவர்களில் சிலருக்கு நாங்கள் சாட்சிகொடுக்கக்கூடியவர்களாக இருந்தோம். வேடிக்கை என்னவென்றால், இது மற்றொரு குற்றச்சாட்டில் விளைவடைந்தது—மதம் மாற்றுதல்!
அந்த வருடத்தில், எங்களுக்கு மூன்று நீதிமன்ற வழக்குகள் இருந்தன, ஆனால் கடைசியாக எல்லா குற்றச்சாட்டுகளிலிருந்தும் நாங்கள் விடுவிக்கப்பட்டோம். வெற்றியானது எங்களிடமாக மக்களுடைய மனநிலையைப் பொறுத்தவரையில் வெறுப்பை மேற்கொள்ள உதவியதாக தோன்றியது. அப்போதிலிருந்து அவர்கள் எங்களை அதிக தாராளமாக அணுக ஆரம்பித்து கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றி நாங்கள் சொல்லவிருந்ததை செவிகொடுத்துக் கேட்டனர்.
கடைசியாக கிப்பாரிசியாவிலிருக்கிற எங்களுடைய சிறிய படிப்பு தொகுதி ஒரு சபையாக உருவானது. ஒரு கிறிஸ்தவ மூப்பர் எங்கள் புதிய சபைக்கு மாற்றப்பட்டார், நான் உதவி ஊழியனாக நியமிக்கப்பட்டேன். விரைவில் எங்கள் வீட்டில் நடந்துகொண்டிருந்த கூட்டங்களுக்கு 15 சுறுசுறுப்பான சாட்சிகள் ஒழுங்காக வந்துகொண்டிருந்தனர்.
திரும்ப ஆஸ்திரேலியாவுக்கு
இரண்டு வருடங்களும் மூன்று மாதங்களும் கடந்துவிட்ட போது, நாங்கள் ஆஸ்திரேலியாவுக்கு திரும்பிவிட தீர்மானித்தோம். இங்கு வருடங்கள் வேகமாக கடந்துபோய்விட்டன. என்னுடைய மகள் திமித்ரா விசுவாசத்தைக் காத்துக்கொண்டு மெல்போர்ன் சபையிலுள்ள ஓர் உதவி ஊழியரைத் திருமணம் செய்துகொண்டிருக்கிறாள். நான் இப்பொழுது மெல்போர்னில் கிரேக்க-மொழி சபையில் ஒரு மூப்பராக சேவை செய்து வருகிறேன், என்னுடைய மனைவியும் என்னுடைய 15 வயது மகள் மார்த்தாவும் அங்கே ஆஜராகின்றனர்.
கிப்பாரிசியாவில் நாங்கள் விட்டுவந்த சிறிய சபை இப்பொழுது பெரிய சபையாக வளர்ந்திருக்கிறது, தகுதியுள்ள அநேகர் பைபிள் சத்தியங்களுக்குத் தங்கள் இருதயங்களைத் திறந்திருக்கின்றனர். நான் 1991 கோடையின் போது, கிரீஸுக்கு சில வாரங்கள் சென்றிருந்தபோது கிப்பாரிசியாவில் நான் கொடுத்த பைபிள் பொதுப் பேச்சுக்கு 70 பேர் வந்திருந்தனர். மகிழ்ச்சிக்குரிய விதமாக, குடும்ப எதிர்ப்பின் மத்தியிலும் என்னுடைய தங்கை மரியா யெகோவாவின் ஓர் ஊழியக்காரியாக ஆகியிருக்கிறாள்.
ஆஸ்திரேலியாவில் உண்மையான செல்வத்தைப் பெற்றுக்கொள்வதற்கு—நம்முடைய படைப்பாளர் யெகோவா தேவனைப் பற்றியும் அவருடைய ராஜ்ய ஆட்சியைப் பற்றிய அறிவையும் புரிந்துகொள்ளுதலையும் பெற்றுக்கொள்வதற்கு—வாய்ப்பு கிடைத்தமைக்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கைக்கு இப்பொழுது உண்மையான நோக்கமிருக்கிறது, நானும் என்னுடைய குடும்பமும் கடவுளுடைய பரலோக அரசாங்கத்தின் ஆசீர்வாதங்கள் பூமி முழுவதிலும் பரவியிருக்கப்போகும் அந்தச் சமீப எதிர்காலத்துக்காக காத்திருக்கிறோம்.—ஜார்ஜ் காட்ஸிக்காரோநிஸ் சொன்னபடி.
[பக்கம் 23-ன் படம்]
கிப்பாரிசியா, ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பி வந்தபிறகு நான் வாழ்ந்த இடம்
[பக்கம் 23-ன் படம்]
என்னுடைய மனைவி அலெக்ஸான்டிராவுடன்