“தங்கத்துக்குப் பதில் நான் வைரங்களைக் கண்டுபிடித்தேன்”
மிக்கேலிஸ் காமிநாரிஸ் சொன்னபடி
தங்கத்தைத் தேடிக்கொண்டு தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்ற நான் ஐந்து வருடங்களுக்குப்பின், மிக அதிக மதிப்புள்ள ஏதோவொன்றோடு தாயகம் திரும்பிக்கொண்டிருந்தேன். இப்பொழுது நான் உடைமையாக பெற்று பகிர்ந்துகொள்ளவிரும்பும் அந்த செல்வத்தைப்பற்றி உங்களுக்குச் சொல்லுகிறேன்.
நான் 1904-ல் அயோனியா சமுத்திரத்திலுள்ள கிரேக்க தீவாகிய செஃபலோனியாவில் பிறந்தேன். அதற்குப்பின் விரைவில் என்னைப் பெற்றவர்கள் இருவரும் இறந்துபோனார்கள், ஆகவே நான் ஒரு அனாதையாக வளர்ந்துவந்தேன். நான் உதவிக்காக ஏங்கினேன், அடிக்கடி கடவுளிடம் ஜெபிக்கவும் செய்தேன். கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுக்கு நான் தவறாமல் சென்றபோதிலும், பைபிளைப் பற்றி எதுவுமே அறியாதவனாக இருந்தேன். எந்த ஆறுதலையும் நான் காணவில்லை.
1929-ல் நான் வெளிநாடு சென்று குடியேறி மேம்பட்ட ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள தீர்மானித்தேன். வறட்சியாக இருந்த என்னுடைய தீவை விட்டு புறப்பட்டு இங்கிலாந்து வழியாக தென் ஆப்பிரிக்காவுக்கு கப்பலில் பிரயாணம் செய்தேன். 17 நாட்கள் கடலில் இருந்தப் பின்பு, தென் ஆப்பிரிக்காவிலுள்ள கேப் டெளனை அடைந்தேன், இங்கே என் சொந்த நாட்டைச் சேர்ந்த ஒருவர் என்னை உடனடியாக வேலைக்கு அமர்த்திக்கொண்டார். என்றபோதிலும், பொருள் செல்வத்தால் நான் ஆறுதலைக் கண்டடையவில்லை.
அதிக மதிப்புமிக்க ஒன்று
தென் ஆப்பிரிக்காவில் நான் சுமார் இரண்டு ஆண்டுகள் இருந்த சமயத்தில் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் நான் வேலைசெய்யுமிடத்துக்கு வந்து கிரேக்க மொழியில் எனக்கு பைபிள் இலக்கியங்களை அளித்தார். அதில் மரித்தோர் எங்கே இருக்கின்றனர்? (ஆங்கிலம்) மற்றும் ஒடுக்குதல்—அது எப்போது முடிவுக்கு வரும்? (ஆங்கிலம்) என்ற சிறு புத்தகங்கள் அடங்கியிருந்தன. நான் எந்தளவுக்கு ஆவலோடு அவற்றை வாசித்தேன் என்பது எனக்கு பசுமையாக நினைவில் இருக்கிறது; மேற்கோள் காட்டப்பட்டிருந்த எல்லா வசனங்களையும் நான் மனப்பாடம்கூட செய்தேன். ஒருநாள் என்னோடு வேலைபார்ப்பவரிடம் நான் சொன்னேன்: “இத்தனை வருடங்களாக தேடிக்கொண்டிருந்ததை நான் கண்டுபிடித்துவிட்டேன். தங்கத்துக்காக நான் ஆப்பிரிக்கா வந்தேன், ஆனால் தங்கத்துக்குப் பதில் நான் வைரங்களைக் கண்டுபிடித்தேன்.”
கடவுளுக்கு யெகோவா என்ற தனிப்பட்ட ஒரு பெயர் இருக்கிறது, அவருடைய ராஜ்யம் பரலோகங்களில் ஏற்கெனவே ஸ்தாபிக்கப்பட்டுவிட்டது, மேலும் இந்தக் காரிய ஒழுங்குமுறையின் கடைசி நாட்களில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்ற காரியங்களை நான் அதிக சந்தோஷத்தோடு கற்றுக்கொண்டேன். (சங்கீதம் 83:17; தானியேல் 2:44; மத்தேயு 6:9, 10; 24:3-12; 2 தீமோத்தேயு 3:1-5; வெளிப்படுத்துதல் 12:7-12) யெகோவாவின் ராஜ்யம் மனிதவர்க்கத்திலுள்ள எல்லா இனத்தாருக்கும் முடிவில்லாத ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும் என்பதைக் கற்றறிந்தது எத்தனை கிளர்ச்சியூட்டுவதாய் இருந்தது! அருமையான இந்தச் சத்தியங்கள் உலகம் முழுவதிலும் பிரசங்கிக்கப்பட்டுவரும் உண்மை என்னைக் கவர்ந்த மற்றொரு காரியமாகும்.—ஏசாயா 9:6, 7; 11:6-9; மத்தேயு 24:14; வெளிப்படுத்துதல் 21:3, 4.
நான் சீக்கிரத்தில் கேப் டெளனிலிருந்த உவாட்ச் டவர் சங்கத்தின் கிளை அலுவலகத்தின் விலாசத்தைக் கண்டுபிடித்து அதிகமான பைபிள் இலக்கியங்களைப் பெற்றுக்கொண்டேன். எனக்கென்று சொந்தமாக பைபிளின் ஒரு பிரதியைப் பெற்றுக்கொண்ட போது நான் விசேஷமாக மகிழ்ச்சியடைந்தேன். நான் வாசித்த காரியங்கள் சாட்சி கொடுக்க என் ஆவலைத் தூண்டின. லிக்ஸ்சுரியன் என்ற என்னுடைய சொந்த ஊரிலிருந்த என்னுடைய உறவினர்கள், நண்பர்கள், மற்றும் எனக்குப் பழக்கமானவர்களுக்கு பைபிள் பிரசுரங்களை அனுப்பிவைப்பதன் மூலம் நான் இதைச் செய்ய ஆரம்பித்தேன். என்னுடைய படிப்புகளிலிருந்து, யெகோவாவைப் பிரியப்படுத்த ஒருவர் தன்னுடைய வாழ்க்கையை அவருக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும் என்பதை நான் படிப்படியாக புரிந்துகொண்டேன். ஆகவே நான் உடனடியாக அதற்காக ஜெபிக்க ஆரம்பித்தேன்.
ஒரு சமயம் நான் யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு கூட்டத்திற்கு சென்றேன், ஆனால் எனக்கு ஆங்கிலம் தெரியாததால் ஒன்றுமே புரியவில்லை. போர்ட் எலிஸபெத்தில் அநேக கிரேக்கர்கள் இருப்பது எனக்கு தெரியவந்தபோது, நான் அங்கே இடம் மாறி சென்றேன், ஆனால் கிரேக்க மொழி பேசும் சாட்சிகள் எவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகவே ஒரு முழுநேர சுவிசேஷகராக ஆவதற்காக கிரீஸுக்கு திரும்பிவிட தீர்மானித்தேன். ‘என்ன ஆனாலும்சரி எப்படியாவது நான் கிரீஸுக்கு திரும்பிப்போவேன்,’ என்பதாக எனக்கு நானே சொல்லிக்கொண்டது எனக்கு நினைவிலிருக்கிறது.
கிரீஸில் முழுநேர ஊழியம்
1934-ன் வசந்தத்தில், டுவிலியோ என்ற இத்தாலிய பிரயாணிகளின் கப்பலில் பயணம் செய்துகொண்டிருந்தேன். பிரான்ஸிலுள்ள மார்செய்ல்-ஐ நான் அடைந்து அங்கே பத்து நாட்கள் தங்கியிருந்த பின்பு, பாட்ரிஸ் என்ற பிரயாணக் கப்பலில் கிரீஸுக்குப் புறப்பட்டேன். நடுக்கடலில் கப்பல் பழுதாகிவிட்டது, இரவில் சமுத்திரத்திற்குள் உயிர்காப்புப் படகுகளை கீழே இறக்கும்படியாக உத்தரவு கொடுக்கப்பட்டது. அப்போது எப்படியாவது கிரீஸை அடையவேண்டும் என்ற தீர்மானத்தை நினைத்துக்கொண்டேன். என்றபோதிலும் ஒரு இத்தாலிய நீராவிப்படகு ஒன்று எங்களை இத்தாலியிலுள்ள நேபிள்ஸ்-க்கு கட்டி இழுத்துக்கொண்டுபோனது. பின்னால் நாங்கள் கடைசியில் கிரீஸிலுள்ள பிரேயஸுக்கு வந்துசேர்ந்தோம்.
அங்கிருந்து நான் ஆதன்ஸுக்கு சென்று அங்கே உவாட்ச் டவர் சங்கத்தின் கிளை அலுவலகத்துக்குப் போனேன். கிளை கண்காணியான அதனாசியோஸ் காரநாசியோஸ் என்பவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, முழுநேர பிரசங்க வேலை நியமிப்பை நான் கேட்டுப் பெற்றுக்கொண்டேன். அடுத்த நாள் கிரீஸின் தலைநிலப்பரப்பின் தென் பகுதியான பெலோபொனெஸ் என்ற இடத்திற்கு பயணப்பட்டுக் கொண்டிருந்தேன். அந்த முழு மாகாணமும் என்னுடைய தனிப்பட்ட பிராந்தியமாக எனக்கு நியமிக்கப்பட்டது!
கட்டுக்கடங்காத உற்சாகத்தோடு நான் பட்டணம் பட்டணமாக, கிராமம் கிராமமாக, பண்ணை பண்ணையாக, ஒதுக்கமாக இருந்த தனித்தனி வீடுகளுக்கு சென்று பிரசங்க வேலையை செய்ய துவங்கினேன். விரைவில் மைக்கேல் டிரியான்டாஃபிலோபாலோஸ் என்னோடு சேர்ந்துகொண்டார்; இவர் 1935 கோடையில்—முழுநேர ஊழியத்தை நான் ஆரம்பித்து ஓரிரு ஆண்டுகளான பின்பு—என்னை முழுக்காட்டினார்! பொது போக்குவரத்து வசதி அங்கில்லை, ஆகவே நாங்கள் எல்லா இடங்களுக்கும் நடந்தே சென்றோம். எங்களுக்கு மிகப் பெரிய பிரச்சினையாக இருந்தது பாதிரிமாரிடமிருந்து வந்த எதிர்ப்பாகும்; எங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்யத் துணிந்தனர். இதன் விளைவாக நாங்கள் அதிகமான தப்பெண்ணங்களை எதிர்ப்பட்டோம். என்றபோதிலும், இடையூறுகளின் மத்தியிலும், சாட்சிகொடுக்கப்பட்டது, யெகோவாவின் பெயர் எல்லா இடங்களிலும் விளம்பரப்படுத்தப்பட்டது.
எதிர்ப்பை சகித்திருத்தல்
ஒருநாள் காலை மலைப்பாங்கான மாவட்டமாகிய ஆர்கேடியாவில் பிரசங்கித்துக்கொண்டிருந்த போது, நான் மாகோலியானா கிராமத்தை அடைந்தேன். ஒரு மணிநேரம் சாட்சிகொடுத்தப் பின்பு, சர்ச் மணியோசை எனக்குக் கேட்டது, அவர்கள் என் நிமித்தமாக மணி அடித்திருக்கிறார்கள் என்பதை நான் விரைவில் உணர்ந்துகொண்டேன்! கிரீக் ஆர்த்தடாக்ஸ் துறவிகள் மடத்தலைவரின் (பிஷப்புக்கு அடுத்த ஸ்தானத்தில் இருக்கும் ஒரு சர்ச் பிரமுகர்) தலைமையில் ஒரு கூட்டம் கூடிற்று. நான் வேகமாக என்னுடைய சிறுபெட்டியை மூடிவிட்டு மெளனமாக யெகோவாவிடம் ஜெபித்தேன். திரளான பிள்ளைகள் பின்னால் வர, துறவிகள் மடத்தலைவர், நேராக என்னிடத்திற்கு வந்தார். “இவன்தான்! இவன்தான்!” என்பதாக அவர் கூச்சல்போட ஆரம்பித்தார்.
பிள்ளைகள் என்னைச் சுற்றி வளைத்துக்கொண்டார்கள், பாதிரி முன்னால் அடியெடுத்து வைத்து தன்னுடைய துருத்திக்கொண்டிருந்த பெரிய தொப்பையினால் என்னைத் தள்ள ஆரம்பித்து, ‘ஒருவேளை நான் கறைப்பட்டிருப்பேனோ’ என்பதற்காக முன்னெச்சரிக்கையாக என்னைத் தன்னுடைய கையால் தொட தனக்கு விருப்பமில்லை என்பதாகச் சொன்னார். “அவனை அடியுங்கள்! அடியுங்கள்!” என்பதாக அவர் கத்தினார். நல்லவேளையாக அந்தச் சமயம் பார்த்து ஒரு போலீஸ் அதிகாரி அங்கு வந்தார், எங்கள் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றார். ஒரு கலகத்தைத் தூண்டிவிட்டதற்காக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு அபராதமாக 300 டிராக்மாஸ் தொகையும் நீதிமன்ற செலவுகளும் வசூலிக்கப்பட்டது. நான் விடுவிக்கப்பட்டேன்.
நாங்கள் ஒரு புதிய பிராந்தியத்துக்கு செல்லும்போது, தங்குமிடமாக ஒரு பெரிய நகரத்தைத் தெரிந்துகொண்டு அங்கிருந்து நான்கு மணிநேர நடைப்பயண தூரத்திலிருக்கும் எல்லா பிராந்தியங்களிலும் ஊழியம் செய்தோம். அப்படியென்றால் விடிந்தும் விடியாமல் இருக்கையிலேயே கிளம்பி மாலையில் இருட்டியபிறகு வீடு திரும்புவதை இது அர்த்தப்படுத்தியது, பொதுவாக ஒவ்வொரு நாளும் ஓரிரண்டு கிராமங்களை நாங்கள் சந்தித்தோம். சுற்றுவட்டாரத்திலிருந்த கிராமங்களில் ஊழியம் செய்து முடித்தப்பிறகு, நாங்கள் தங்கியிருந்த நகரத்தில் பிரசங்கித்துவிட்டு மற்றொரு பிராந்தியத்துக்குச் சென்றோம். பாதிரிமார் மக்களை எங்களுக்கு எதிராக தூண்டிவிட்டதன் காரணமாக நாங்கள் அடிக்கடி கைதுசெய்யப்பட்டோம். மத்திப கிரீஸில் பார்நாஸிஸ் பகுதி போலீஸார் என்னை பல மாதங்களாக தேடிவந்தனர். என்றபோதிலும், அவர்களால் ஒருபோதும் என்னைக் கைதுசெய்ய முடியவில்லை.
ஒருநாள் சகோதரர் டிரியான்டாஃபிலோபாலோஸும் நானும் பாவோட்டியா மாவட்டத்தில் உள்ள மியுரிக்கி கிராமத்தில் பிரசங்கித்துக் கொண்டிருந்தோம். கிராமத்தை இரண்டு பகுதிகளாக பிரித்துக்கொண்டு, செங்குத்தாக ஏறுகிற சரிவுகளிலுள்ள வீடுகளை நான் சந்திக்க ஆரம்பித்தேன், ஏனென்றால் நான் அவரைவிட வயதில் இளையவனாக இருந்தேன். திடீரென்று கீழேயிருந்து கூச்சல் சப்தம் கேட்டது. கீழே வேகமாக ஓடிவருகையில், ‘சகோதரர் டிரியான்டாஃபிலோபாலோஸை அடித்துக்கொண்டிருக்கிறார்கள்,’ என்பதாக நான் நினைத்துக்கொண்டேன். உள்ளூர் காப்பிக்கடையில் கிராமவாசிகள் கூடியிருந்தார்கள், ஒரு பாதிரி கோபங்கொண்ட ஒரு எருதைப் போல மேலும் கீழுமாக நடந்துகொண்டிருந்தார், “இந்த ஆட்கள் எங்களை ‘சாத்தானின் வித்து’ என்றழைக்கிறார்கள்,” என்பதாக அவர் கத்திக்கொண்டிருந்தார்.
பாதிரி சகோதரர் டிரியான்டாஃபிலோபாலோஸின் தலையில் ஒரு கைத்தடியால் அடித்ததால் அது உடைந்தே போயிற்று, இரத்தம் அவர் முகத்தில் வழிந்துகொண்டிருந்தது. நான் இரத்தத்தைத் துடைத்துவிட்ட பிறகு நாங்கள் அங்கிருந்து தப்பிச்சென்றோம். நாங்கள் தீப்ஸ் நகரை வந்தடைய மூன்று மணிநேரங்கள் நடந்தோம். அங்கே ஒரு மருத்துவமனையில் காயத்துக்கு சிகிச்சை செய்துகொண்டு, நாங்கள் நடந்த சம்பவத்தை போலீஸிடம் சொன்னோம், ஒரு வழக்கு பதிவுசெய்யப்பட்டது. என்றபோதிலும், பாதிரிக்கு அதில் தொடர்பு இருந்தது, அவர் கடைசியில் குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்.
லூக்கஸ் நகரில் நாங்கள் ஊழியஞ்செய்துகொண்டிருந்தபோது, அந்தப் பகுதியிலுள்ள அரசியல் தலைவர்களில் ஒருவரின் தொண்டர்கள் எங்களைக் “கைதுசெய்து” கிராமத்தின் காப்பிக்கடைக்கு கொண்டுவந்தார்கள்; அங்கே சட்டப்படி அல்லாமல் சூழ்ச்சியாக அமைக்கப்பட்ட ஒரு நீதிமன்றத்தில் நாங்கள் குற்றஞ்சாட்டப்பட்டோம். அரசியல் தலைவரும் அவருடைய ஆட்களும் மாறி மாறி எங்களிடமாக வந்து பெரிய லெட்சரே அடித்துக்கொண்டிருந்தார்கள்—ஆவேசமாக பொரிந்துதள்ளிக் கொண்டிருந்தார்கள்—முஷ்டியால் குத்துவதுபோல பாவனைசெய்து எங்களை மிரட்டிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் எல்லாரும் குடித்து வெறித்திருந்தார்கள். நண்பகல் முதல் சூரியன் மறையும்வரையாக அவர்கள் எங்களுக்கு எதிராக வசைமாரி பொழிந்துகொண்டிருந்தார்கள், ஆனால் நாங்கள் குற்றமற்றவர்கள் என்பதைச் சொல்லிவிட்டு யெகோவா தேவனின் உதவிக்காக மெளனமாக ஜெபித்துக்கொண்டிருந்ததால் அமைதியாகவும் சிரித்த முகத்தோடும் இருந்தோம்.
அந்திப்பொழுதில் இரண்டு போலீஸ்காரர்கள் எங்களை வந்து காப்பாற்றினார்கள். அவர்கள் எங்களைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று மரியாதையுடன் நடத்தினார்கள். தன்னுடைய செயல்களை நியாயப்படுத்துவதற்காக அரசியல் தலைவர் அடுத்த நாள் வந்து நாங்கள் கிரீஸ் நாட்டு அரசருக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்வதாக எங்கள்மீது குற்றஞ்சாட்டினார். ஆகவே இரண்டு போலீஸ்காரர்களின் துணையோடு நாங்கள் கூடுதலான விசாரணைக்காக லாமியா நகருக்கு கொண்டுசெல்லப்பட்டோம். நாங்கள் ஏழு நாட்கள் காவலில் வைக்கப்பட்டு, பின்னர் விசாரணைக்காக கையில் விலங்கிடப்பட்டு லாரிசா நகருக்கு அழைத்துச்செல்லப்பட்டோம்.
நாங்கள் அங்கு வரப்போவதை முன்கூட்டியே அறிந்திருந்த லாரிசாவிலிருந்த எங்கள் கிறிஸ்தவ சகோதரர்கள் எங்கள் வருகைக்காக காத்திருந்தனர். அவர்கள் எங்களுக்குக் காண்பித்த மிகுதியான பாசம் காவலர்களுக்கு ஒரு சிறந்த சாட்சி கொடுத்தது. யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராகவும் முன்னாள் படைத் துணைத்தலைவராகவும் இருந்த எங்கள் வழக்கறிஞர் நகரத்தில் நன்கு பிரபலமான ஒருவராக இருந்தார். அவர் நீதிமன்றத்துக்கு வந்து எங்களுக்காக வாதாடிய போது, எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தவறென அம்பலப்படுத்தப்பட்டு, நாங்கள் விடுதலை செய்யப்பட்டோம்.
யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசங்க வேலைக்குக் கிடைத்த பொதுவான வெற்றி, எதிர்ப்பு தீவிரமாக்கப்படுவதற்கு வழிநடத்தியது. மதம் மாற்றுவதைத் தடைசெய்யும் சட்டங்கள் 1938-லும் 1939-லும் அமலுக்கு வந்தன, இதற்காக மைக்கேலும் நானும் அநேக நீதிமன்ற வழக்குகளில் உட்பட்டவர்களானோம். அதற்குப்பின்பு, நாங்கள் அநேகரின் கவனத்தை இழுக்காதபடி இருப்பதற்காக கிளை அலுவலகம், எங்களைத் தனித்தனியே ஊழியம் செய்யும்படியாக ஆலோசனை கூறியது. ஒரு துணையில்லாமல் ஊழியம் செய்வது கடினமாக இருப்பதை நான் கண்டேன். என்றபோதிலும், யெகோவாவில் நம்பிக்கை வைத்து, அட்டிக்கா, போட்டியா, பத்தோட்டிஸ், யூபியா, அட்டோலியா அக்கார்நானியா, யூரிட்டானியா மாகாணங்களிலும் பெலோபொனெஸ் மாகாணத்திலும் நடந்தே சென்று ஊழியஞ்செய்தேன்.
இந்தக் காலப்பகுதியில் எனக்கு உதவிசெய்தது, யெகோவாவில் நம்பிக்கை வைத்த சங்கீதக்காரனின் அழகான வார்த்தைகளே: “உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன். என்னைப் பலத்தால் இடைகட்டி என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே. அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, என்னுடைய உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார்.”—சங்கீதம் 18:29, 32, 33.
1940-ல் இத்தாலி கிரீஸின்மீது போர்தொடுத்தது, அதற்குப்பின் விரைவில் ஜெர்மன் படைகள் தேசத்தின்மீது படையெடுத்தன. போர்க்கால படைத் துறைச்சட்டம் அறிவிக்கப்பட்டது, உவாட்ச் டவர் சங்கத்தின் புத்தகங்கள் தடைசெய்யப்பட்டன. அவை கிரீஸிலிருந்த யெகோவாவின் சாட்சிகளுக்கு கடினமான காலங்களாக இருந்தன; இருப்பினும் அவர்கள் வியப்பூட்டும் வகையில்—1940-ல் 178 சாட்சிகளிலிருந்து 1945-ல் இரண்டாம் உலகப் போரின் முடிவுக்குள் 1,770-க்கு—அதிகரித்தனர்!
பெத்தேலில் சேவை செய்வது
1945-ல், ஆதன்ஸிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தில் சேவிக்கும்படியாக நான் அழைக்கப்பட்டேன். “தேவனுடைய வீடு” என்று பொருள்படும் பெத்தேல் அப்பொழுது லாம்பார்டெள தெருவில் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தது. கீழ்த்தளத்தில் அலுவலகங்களும் அடித்தளத்தில் அச்சகமும் இருந்தன. அச்சகத்தில் ஒரு அச்சியந்திரமும் ஒரு கத்தரிப்பு இயந்திரமும் இருந்தன. அச்சாலையில் முதலில் இரண்டு பேர் மட்டுமே வேலைசெய்தனர், ஆனால் சீக்கிரத்தில் வேலையில் உதவிசெய்வதற்காக பெத்தேலுக்கு வெளியே இருந்த சாட்சிகளும் வர ஆரம்பித்தார்கள்.
1945-ல் நியூ யார்க், புருக்லினில் உள்ள உவாட்ச் டவர் சங்கத்தின் தலைமைக் காரியாலயத்தோடு தொடர்பு மறுபடியுமாக ஸ்தாபிக்கப்பட்டது; அந்த வருடம் கிரீஸில் ஒழுங்கான அடிப்படையில் மறுபடியும் நாங்கள் காவற்கோபுரம் அச்சடிக்க ஆரம்பித்தோம். பின்னர், 1947-ல் 16 டென்டோ தெருவுக்கு எங்கள் கிளை அலுவலகத்தை மாற்றினோம், ஆனால் அச்சகம் இன்னும் லாம்பார்டெளவிலேயே இருந்தது. பின்னால் அச்சகம் லாம்பார்டெள தெருவிலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்த ஒரு சாட்சிக்கு சொந்தமான தொழிற்சாலைக்கு மாற்றப்பட்டது. ஆகவே கொஞ்ச காலம், நாங்கள் இந்த மூன்று இடங்களுக்கும் இடையில் போய் வந்துகொண்டிருந்தோம்.
டென்டோ தெருவில் நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து அதிகாலையில் புறப்பட்டு அச்சகம் இருக்கும் இடத்துக்கு பயணம் செய்தது எனக்கு நினைவில் இருக்கிறது. அங்கே பிற்பகல் 1 மணி வரையாக வேலைசெய்துவிட்டு, அச்சடிக்கப்பட்ட தாள்கள் எடுத்துச்செல்லப்படும் லாம்பார்டெள தெருவுக்கு நான் செல்வேன். அங்கே இந்தத் தாள்கள் கையால் பத்திரிகைகளாக மடிக்கப்பட்டு, தைக்கப்பட்டு, கத்தரிக்கப்பட்டன. அதற்குப் பின்பு, போஸ்ட் ஆபிஸிக்குப் போய், தயாராக இருக்கும் பத்திரிகைகளை மூன்றாவது மாடிக்கு எடுத்துச்சென்று அவற்றை வகைப்படுத்திப் பிரித்து, தபாலில் அனுப்பி வைப்பதற்காக ஸ்டாம்புகளை அவற்றில் ஒட்டுவதற்கு அஞ்சல் அலுவலக பணியாளர்களுக்கு உதவிசெய்வோம்.
1954-க்குள் கிரீஸில் சாட்சிகளுடைய எண்ணிக்கை 4,000-க்கும் மேலாக அதிகரித்துவிட்டதால் கூடுதலான பெரிய கட்டடங்கள் தேவைப்பட்டன. ஆகவே, நாங்கள் ஆதன்ஸ் நகரின் உட்பகுதியில் கார்டாலி தெருவில் இருந்த புதிய மூன்று மாடி பெத்தேலுக்கு மாறிச்சென்றோம். 1958-ல் சமையலறையின் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்படியாக நான் கேட்டுக்கொள்ளப்பட்டேன், இது 1983 வரையாக என் பொறுப்பில் இருந்தது. இதற்கிடையில், 1959-ல் நான் எலிஃப்தீராவை மணந்துகொண்டேன், யெகோவாவின் சேவையில் அவள் உண்மையான ஒரு உதவியாளாக இருந்துவந்திருக்கிறாள்.
மறுபடியுமாக எதிர்ப்பை சகித்துக்கொள்ளுதல்
1967-ல் இராணுவ குழு ஒன்று ஆட்சியைக் கைப்பற்றியது, மறுபடியுமாக எங்கள் பிரசங்க வேலைக்கு தடைகள் விதிக்கப்பட்டன. என்றபோதிலும், எங்களுடைய நடவடிக்கைகளின்மீது வைக்கப்பட்ட தடைகளைச் சமாளிப்பதில் எங்களுக்கு ஏற்கெனவே இருந்த முன்னனுபவத்தின் காரணமாக, நாங்கள் சமாளித்துக்கொண்டு இரகசியமாகவும் வெற்றிகரமாகவும் தொடர்ந்து செயல்பட்டு வந்தோம்.
தனியார் வீடுகளில் எங்களுடைய கூட்டங்களை நாங்கள் நடத்திக்கொண்டு, வீட்டுக்கு வீடு ஊழியத்தில் முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டோம். என்றபோதிலும், நம்முடைய சகோதரர்கள் அடிக்கடி கைதுசெய்யப்பட்டார்கள், நீதிமன்ற வழக்குகளும் பெருகின. எங்களுடைய வழக்கறிஞர்கள் தேசத்தின் பல்வேறு பாகங்களில் நடத்தப்பட்ட விசாரணைகளைக் கையாளுவதற்காக எப்பொழுதும் அங்குமிங்குமாக ஓய்வின்றி பயணம் செய்துகொண்டிருந்தனர். எதிர்ப்பின் மத்தியிலும், பெரும்பாலான சாட்சிகள் விசேஷமாக வாரத்தின் இறுதி நாட்களில் தங்கள் பிரசங்க வேலையை ஒழுங்காக செய்துவந்தார்கள்.
ஒவ்வொரு சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமையிலும் அந்த நாளுக்குரிய எங்கள் பிரசங்க வேலை முடிந்த பிறகு, எங்களுடைய தொகுதியில் யாராவது தவறிவிட்டார்களா என்பதை அறிய சரிபார்த்துக்கொண்டோம். பொதுவாக காணாமற்போனவர்கள் அருகாமையில் இருந்த காவல் நிலையத்தில் பிடித்து வைக்கப்பட்டிருந்தார்கள். ஆகவே நாங்கள் அவர்களுக்கு கம்பளிகளையும் உணவையும் எடுத்துக்கொண்டு சென்று அவர்களை உற்சாகப்படுத்தி வந்தோம். மேலுமாக, எங்கள் வழக்கறிஞர்களுக்கு தகவல் கொடுத்து வந்தோம்; திங்கட்கிழமை அவர்கள் காவலில் வைக்கப்பட்டிருந்தவர்களுக்காக வாதாடுவதற்காக வழக்குத்தொடருபவருக்கு முன்பாக ஆஜராவார்கள். சத்தியத்தினிமித்தமாக நாங்கள் துன்பமனுபவித்த காரணத்தால் நாங்கள் மகிழ்ச்சியாக இந்த நிலைமையை எதிர்ப்பட்டோம்!
தடையுத்தரவு சமயத்தில் பெத்தேலில் எங்கள் அச்சுவேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஆகவே ஆதன்ஸின் புறநகர்ப் பகுதியில் எலிஃப்தீராவும் நானும் வாழ்ந்துவந்த வீடு அச்சகம் போல ஆனது. எலிஃப்தீரா கனமான ஒரு தட்டச்சுப் பொறியைப் பயன்படுத்தி காவற்கோபுர பத்திரிகையை பிரதிகள் எடுத்தாள். கார்பன் தாளோடு அவள் பத்து தாள்களை ஒரே சமயத்தில் தட்டச்சுப் பொறியினுள் செருகி வைத்து, எழுத்துக்கள் அச்சாகும்பொருட்டு ஓங்கி ஓங்கி அடிக்கவேண்டியிருந்தது. பின்னர் தாள்களை நான் ஒன்றாக சேர்த்து தைத்துவிடுவேன். ஒவ்வொரு மாலையும் தொடங்கி இது இரவு வெகுநேரம் வரையாக சென்றது. நாங்கள் குடியிருந்த வீட்டுக்கு கீழ்வீட்டில் ஒரு போலீஸ்காரர் இருந்தார், ஆனால் அவர் ஏன் ஒருபோதும் எங்களை சந்தேகிக்கவில்லை என்பது இன்னும் எங்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது.
தொடர்ந்து நடைபெறும் விஸ்தரிப்பில் களிகூருதல்
கிரீஸில் 1974-ல் குடியாட்சி மறுபடியுமாக நிலைநாட்டப்பட்டது, எங்களுடைய பிரசங்க வேலை மறுபடியுமாக வெளியரங்கமாக செய்யப்பட்டது. இருந்தபோதிலும், எங்கள் வேலை தடைசெய்யப்பட்டிருந்த அந்த ஏழு வருடங்களின்போது, 6,000-க்கும் மேற்பட்ட புதிய சாட்சிகளின் மகத்தான ஒரு அதிகரிப்பை நாங்கள் அனுபவித்தோம்; 17,000-க்கும் மேற்பட்ட ராஜ்ய அறிவிப்பாளர்களின் மொத்த எண்ணிக்கையை எட்டியிருக்கிறோம்.
எங்களுடைய ஒழுங்கான அச்சு வேலையையும்கூட கிளை அலுவலக கட்டடத்தில் செய்ய ஆரம்பித்துவிட்டோம். இதன் விளைவாக, கார்டாலி தெருவில் இருந்த பெத்தேல் கட்டடம் மிகவும் சிறியதாக ஆகிவிட்டது. ஆகவே ஆதன்ஸின் மார்யூஸ் புறநகர் பகுதியில் 2.5 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. 27 படுக்கை அறைகள், ஒரு தொழிற்சாலை, அலுவலகங்கள் மற்றும் மற்ற கட்டடங்கள் இடம் பெற்ற புதிய பெத்தேல் கட்டடங்கள் கட்டப்பட்டன. அக்டோபர் 1979-ல் இவை பிரதிஷ்டை செய்யப்பட்டன.
காலம் கடந்தபோது எங்களுக்கு இன்னும் அதிக இடவசதி தேவையாக இருந்தது. ஆகவே ஆதன்ஸுக்கு வடக்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் 54 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. அந்த இடம் எலியோனாவில், மலைகளையும் நீர்வளமுள்ள பள்ளத்தாக்குகளையும் காண முடிந்த இடத்தில், ஒரு குன்றின்பக்கமாக இருக்கிறது. அங்கே, ஏப்ரல் 1991-ல் ஒவ்வொன்றும் எட்டு பெத்தேல் உறுப்பினர்களுக்கு இடவசதி அளிக்கக்கூடிய 22 வீடுகள் அடங்கிய மிகவும் பெரிய கட்டடம் ஒன்றை நாங்கள் பிரதிஷ்டை செய்தோம்.
60-க்கும் மேலான ஆண்டுகளை முழுநேர ஊழியத்தில் செலவழித்தப் பின்பு, இன்னும் நல்ல உடலாரோக்கியத்தால் நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன். மகிழ்ச்சிகரமாக, நான் ‘முதிர்வயதிலும் புஷ்டியும் பசுமையுமாயிருக்கிறேன்.’ (சங்கீதம் 92:15) மெய் வணக்கத்தாரின் எண்ணிக்கையில் மகத்தான அதிகரிப்பை என் சொந்த கண்களால் காண நான் உயிரோடிருப்பதற்காக விசேஷமாக யெகோவாவுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஏசாயா தீர்க்கதரிசி இத்தகைய ஒரு அதிகரிப்பை முன்னுரைத்தார்: “உன்னிடத்துக்கு ஜாதிகளின் [“தேசங்களின்,” NW] பலத்த சேனையைக் கொண்டுவரும்படிக்கும், . . . உன் வாசல்கள் இரவும்பகலும் பூட்டப்படாமல் எப்பொழுதும் திறந்திருக்கும்.”—ஏசாயா 60:11.
சகல தேசங்களிலும் இருந்து வரும் லட்சக்கணக்கான ஆட்கள் யெகோவாவின் அமைப்புக்குள் திரண்டுவருவதையும் மகா உபத்திரவத்தில் கடவுளுடைய புதிய உலகிற்குள் தப்பிப்பிழைப்பது எவ்வாறு என்பது போதிக்கப்படுவதையும் காண்பதும் எத்தனை அதிசயமாயிருக்கிறது! (2 பேதுரு 3:13) இந்த உலகம் அள்ளிக்கொடுக்கும் எதையும் காட்டிலும் முழுநேர ஊழியம் அதிக மதிப்புள்ளதாக எனக்கு நிரூபித்துள்ளது என்பதை உண்மையாகவே என்னால் சொல்லமுடியும். ஆம், தங்கத்தினாலான பொக்கிஷங்களை அல்ல, ஆனால் மதிப்பிட்டுக்கூற முடியாத அளவுக்கு என்னுடைய வாழ்க்கையை சிறப்பாக்கியிருக்கும் ஆவிக்குரிய வைரங்களை நான் கண்டுபிடித்தேன்.
[பக்கம் 23-ன் படம்]
மிக்கேரிஸ், எலிஃப்தீரா காமிநாரிஸ்
(வலது) லாம்பார்டெள தெருவில் இருந்த அச்சாலை