மிகச் சிறந்த ஜீவ வழியில் சங்கமமாதல்
உலக ஜனத்தொகை இப்படியே ராக்கெட் வேகத்தில் உயர்ந்துகொண்டிருந்தால் சீக்கிரத்தில் அறுநூறு கோடியை தொட்டுவிடும். அனைவருமே ஒருகொடியில் பூத்த மலர்களாக இருந்தபோதிலும், ஞானமும் அன்பும் நிறைந்த படைப்பாளருக்கு தாங்கள் கணக்குக்கொடுக்க வேண்டிய உலகளாவிய குடும்ப அங்கத்தினர்கள் என்பதை பெரும்பாலானோர் ஒத்துக்கொள்வதாக தெரியவில்லை. தேசங்கள், இனங்கள், கலாச்சாரங்கள் ஆகியவற்றிற்கு இடையே ஒற்றுமையின்மையும் சண்டையும் காணப்படுவது இந்த சோக நிலைமைக்கு துயரமான அத்தாட்சி.
இன்றைய நிலைமைகளைப் பார்த்தால், உலக ஒற்றுமை என்பது நிலவை கையில் ஏந்த நினைப்பது போல இருக்கிறது. கொலம்பியாவின் உலக சரித்திரம் (ஆங்கிலம்) இவ்வாறு குறிப்பிடுகிறது: “எப்படி ஒன்றாக கூடி வாழ்வது என்ற முக்கியமான கேள்விக்கு, இந்த உலகத்தார் புதிதாய் ஒன்றும் சொல்லப்போவதில்லை; அவர்களிடம் எந்தவொரு புதிய கருத்தும் இல்லை.”
ஆனால், பூமியில் வாழும் அனைவர் மத்தியிலும் ஒற்றுமையைக் கொண்டுவருவதற்கு ஒரு புதிய கருத்து அவசியமில்லை. ஒற்றுமைக்கான வழியை பைபிள் காட்டுகிறது. அது, பூமியையும் அதில் வாழும் அனைத்து உயிர்களையும் படைத்தவருடைய வணக்கத்தை மையமாக கொண்டுள்ளது. சிந்தையிலும் நோக்கத்திலும் வாழ்க்கை முறையிலும் உண்மையான ஒற்றுமை ஏற்கெனவே கடவுளுடைய ஜனங்களிடம் செழித்தோங்குகிறது. 233 தேசங்களில் வாழும் ஐம்பத்தைந்து லட்சத்திற்கும் அதிகமானோர் கடவுள் காட்டும் ஜீவ வழியே மிகச் சிறந்த வழி என்ற உறுதியான நம்பிக்கையில் ஒற்றுமையுடன் திகழ்கிறார்கள். சங்கீதக்காரனைப் போலவே அவர்கள் ஜெபிக்கிறார்கள்: ‘[யெகோவாவே] உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்.’—சங்கீதம் 86:11.
இவ்வாறு தூய வணக்கத்தில் மக்கள் ஒன்றுபடுவார்கள் என்று தீர்க்கதரிசியாகிய ஏசாயா வெகுகாலத்திற்கு முன்பே முன்னறிவித்தார். அவர் எழுதினார்: “கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள். திரளான ஜனங்கள் புறப்பட்டுவந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.”—ஏசாயா 2:2, 3.
யெகோவாவின் சாட்சிகளுடைய ஒற்றுமையே தனிதான். உலகம் முழுவதிலுமுள்ள 85,000-க்கும் அதிகமான சபைகளில், ஒவ்வொரு வாரமும் ஒரே விதமாக ஆவிக்குரிய உணவை அவர்கள் உட்கொள்கிறார்கள். (மத்தேயு 24:45-47, NW) ஆனால், 1998-ன் மத்திபம் முதற்கொண்டு 1999-ன் ஆரம்பம் வரை, சாட்சிகள் தங்களுடைய ஒற்றுமையை மற்றொரு முறையிலும், அதாவது மூன்று நாட்கள் நடைபெற்ற “கடவுள் காட்டும் ஜீவ வழி” மாவட்ட மாநாட்டிற்கு உலகம் முழுவதிலுமிருந்து ஒன்றுகூடி வந்ததன்மூலமும் காண்பித்திருக்கிறார்கள். 13 நாடுகளில் சர்வதேச மாநாடுகள் நடைபெற்றன. இதற்காக திரளான பிரதிநிதிகள் பல்வேறு பாகங்களிலிருந்து ஒன்றுகூடி வந்திருந்தனர். இவற்றை தவிர மாவட்ட மாநாடுகளும் நடைபெற்றன. இந்த இரண்டுவித மாநாடுகளுமே ஒரே விதமான ஆன்மீக நன்மைகளையே பொழிந்தன.
யெகோவாவால் போதிக்கப்படுவதற்காக ஆடிட்டோரியங்களுக்கும் ஸ்டேடியங்களுக்கும் வெள்ளம் போல் திரண்டு வந்த மகிழ்ச்சி ததும்பிய, அழகிய ஆடைதரித்த இந்தப் பிரதிநிதிகளைக் கண்டது இன்பம் பொங்கும் அனுபவமே! அமெரிக்காவிலுள்ள மிச்சிகனில் நடத்தப்பட்ட சர்வதேச மாநாட்டிற்கு வந்திருந்த பிரதிநிதி ஒருவருடைய வார்த்தைகள் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. அவள் சொன்னாள்: “உலகம் முழுவதிலுமிருந்து—செக் குடியரசு, பார்படோஸ், நைஜீரியா, ஹங்கேரி, இங்கிலாந்து, நெதர்லாந்து, எத்தியோபியா, கென்யா, இன்னும் மற்ற அநேக நாடுகளிலிருந்து—வந்திருந்த நம்முடைய சகோதரர்கள் ஒருவரையொருவர் கட்டித்தழுவியதைப் பார்த்தது என்னே ஆனந்தம்! சகோதரர்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தியதாலும் மிகப் பெரிய கடவுளாகிய யெகோவா மீது அன்பு செலுத்தியதாலும் ஒற்றுமையுடன் கூடிவந்தார்கள்; அந்தச் சந்தர்ப்பங்களில் அவர்களது விழிகளில் ஆனந்தக் கண்ணீர் பெருகுவதை காண்பது கண்கொள்ளாக் காட்சி.” உலகம் முழுவதிலும் லட்சக்கணக்கானோர் அனுபவித்த மாநாட்டு நிகழ்ச்சிநிரல் பற்றிய ஆய்வு அடுத்தக் கட்டுரையில்.
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.