உள்ளப்பூர்வமாய் பணிவு காட்டுவது எப்படி?
உள்ளப்பூர்வமாய் பணிவு காட்டுபவர்கள், கடவுள் பார்வையில் தங்கமானவர்கள். யாக்கோபு எழுதினார்: ‘தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.’ (யாக்கோபு 4:6) யாக்கோபு, எபிரெய வேதங்களிலுள்ள பல கருத்துக்களை நினைவில்கொண்டு இதை எழுதியிருக்கலாம். “கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்; மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார்.” “நரரின் மேட்டிமையான கண்கள் தாழ்த்தப்படும், மனுஷரின் வீறாப்பும் தணியும்; கர்த்தர் ஒருவரே . . . உயர்ந்திருப்பார்.” “இகழ்வோரை அவர் [கடவுள்] இகழுகிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார்.”—சங்கீதம் 138:6; ஏசாயா 2:11; நீதிமொழிகள் 3:34.
அப்போஸ்தலனாகிய பேதுருவும் பணிவோடிருப்பதன் மேன்மையைக் குறிப்பிட்டு எழுதினார்: “நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.”—1 பேதுரு 5:5.
மனத்தாழ்மையில் கிறிஸ்துவின் முன்மாதிரி
பணிவோடு இருப்பதில் அப்படியென்ன நன்மை, சிறப்பு என நீங்கள் கேட்கலாம். உண்மை கிறிஸ்தவர்களாயிருக்க பாடுபடுகிறவர்களுக்கு, இதற்கான பதில் கடினமானதல்ல. அதுதான் அடிப்படையே: பணிவோடு இருப்பது கிறிஸ்துவைப் போல் இருப்பதைக் குறிக்கிறது. பரலோகத்திலிருந்து பூமிக்கு வந்து தேவதூதர்களுக்கும் தாழ்வான ஒரு மனிதனாய் வாழவேண்டிய தனித்தன்மை வாய்ந்த நியமிப்பை ஏற்றுக்கொள்வதன் மூலம் இயேசு பணிவைக் காட்டினார். (எபிரெயர் 2:7) அவர் கடவுளுடைய குமாரனாய் இருந்தும், மத எதிரிகள் தம்மீது குவித்த இழிவுகளை சகித்தார். எண்ணற்ற தேவதூதர்களை உதவிக்காக அழைக்கும் வல்லமை அவருக்கிருந்தது. இருந்தாலும் சோதனைகளின்போது அவர் தம் நிதானத்தை இழக்கவேயில்லை.—மத்தேயு 26:53.
இறுதியில் இயேசு அவமானப்படுத்தப்பட்டு கழுமரத்தில் அறையப்பட்டார், ஆனாலும் தம் பிதாவுக்கு உண்மையுள்ளவராய் நிரூபித்தார். ஆகவே பவுல் அவரைப் பற்றி இவ்வாறு எழுதினார்: “கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது; அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.”—பிலிப்பியர் 2:5-8.
அப்படியென்றால் நாம் எவ்வாறு உள்ளப்பூர்வமான பணிவைக் காட்டலாம்? தினசரி வாழ்க்கையில் நாம் எவ்வாறு ஆணவமற்று மனத்தாழ்மை காட்டலாம்?
பணிவுள்ளவர் நடந்துகொள்ளும் முறை
வேலை செய்கையில், அதாவது ஆபீஸிலும் சரி கிறிஸ்தவ ஊழியம் செய்கையிலும் சரி எவ்வாறு பணிவைக் காட்டலாம் என்பதற்கு இப்போது கவனம் செலுத்தலாம். வேலை நல்ல விதமாய் நடக்க, டைரக்டர்களும் மானேஜர்களும் சூப்பர்வைஸர்களும் தேவைப்படலாம். தீர்மானங்கள் எடுக்கவும் ஒருவர் வேண்டும். இவர்களிடம் நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள்? “இவரென்ன பெரிய இவரா, நேத்து வந்துட்டு இப்ப என்கிட்டயே வந்து இப்படிச் செய் அப்படிச் செய்னு சொல்றாரு. அவரவிட நான் எவ்வளவு வருஷமா இந்த வேலய செஞ்சுகிட்டு வர்ரேன்” என நினைக்கிறீர்களா? ஆம், உங்கள் மனதில் கர்வம் குடியிருந்தால், பணிவு வரவேண்டிய இடத்தில் ஆத்திரம் வரும். ஆனால் பணிவுள்ளவரோ, ‘ஒன்றையும் வாதினாலாவது வீண் பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே மற்றவர்களை தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ண’ கடும் முயற்சி செய்கிறார்.—பிலிப்பியர் 2:3.
வயதில் சிறியவரிடமிருந்தோ ஒரு பெண்ணிடமிருந்தோ ஆலோசனை வந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? நீங்கள் பணிவுள்ளவர் என்றால், அவர்கள் சொல்வதைக் குறித்து யோசிக்கவாவது செய்வீர்கள். கர்வமுள்ளவர் என்றால், எரிந்து விழுவீர்கள் அல்லது ஆலோசனையை காதிலேயே போட்டுக்கொள்ள மாட்டீர்கள். அழிவுக்கு வழிநடத்தும் புகழ்ச்சியையும் போலிப் பாராட்டுகளையும் விரும்புவீர்களா? அல்லது நன்மைக்கு வழிவகுக்கும் நல்ல புத்திமதிகளை விரும்புவீர்களா?—நீதிமொழிகள் 27:9; 29:5.
கஷ்டங்களை எதிர்ப்படுவது உங்களுக்கு சவாலாய் தெரிகிறதா? அதைச் சமாளிப்பதற்கும் சகித்திருப்பதற்கும் மனத்தாழ்மை உங்களுக்கு உதவும். யோபுவிற்கும் இதுவே உதவியது. உங்களுக்கு தற்பெருமை இருந்தால், விரக்தியடைவீர்கள். வேதனையான சமயங்களிலும், மரியாதைக் குறைவாக நடத்திவிட்டதாக நினைக்கும்போதும் கோபம் பொத்துக்கொண்டு வரும்.—யோபு 1:22; 2:10; 27:2-5.
பணிவு, அன்புகாட்டவும் மன்னிக்கவும் தூண்டும்
“ஸாரி, தப்பு உங்கமேலயில்ல என்மேலதான்” என்று சிலரால் சொல்லவே முடியாது. ஏன்? பயங்கரமான தலைக்கனம்! ஆனாலும் கணவன் மனைவி பிரச்சினையை உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால், மனம்விட்டு மன்னிப்பு கேட்கும்போது பிரச்சினை பஞ்சாய் பறந்துவிடுவதை எவ்வளவு முறை பார்க்கிறோம்.
உங்களைப் புண்படுத்தியவரை மன்னிக்க நீங்கள் தயாரா? அல்லது கர்வத்தால் நாட்கணக்காகவும் மாதக்கணக்காகவும் மனக்கசப்பை வளர்த்துக்கொண்டு, அவரிடம் முகம்கொடுத்து பேசவும் மறுக்கிறீர்களா? வஞ்சம் தீர்க்கும் எண்ணத்தில் கடும் விரோதத்தையும் வளர்க்கிறீர்களா? இப்படிப்பட்ட கடும் விரோதத்தால் சிலர் கொலையும் செய்திருக்கிறார்கள். இன்னும் சிலர் மற்றவர்களது நற்பெயரை “கொலை” செய்திருக்கிறார்கள். பணிவுள்ளவரோ இதில் எதையும் செய்வதில்லை. மாறாக, அவர் அன்பினால் மன்னிக்கிறார். ஏன்? ஏனென்றால் அன்பு தீங்கை மனதில் பேணி வளர்க்காது. இஸ்ரவேலர்கள் தங்கள் ஆணவத்தை விட்டொழிக்கும் பட்சத்தில் யெகோவா மன்னிக்கத் தயாராயிருந்தார். இயேசுவைப் பணிவோடு பின்பற்றுவோர் மீண்டும் மீண்டும் மன்னிக்கத் தயாராயிருக்கிறார்கள்!—யோவேல் 2:12-14; மத்தேயு 18:21, 22; 1 கொரிந்தியர் 13:5.
பணிவுள்ளவர் ‘மற்றவர்களை கனம்பண்ணுவதில் முந்திக்கொள்கிறார்.’ (ரோமர் 12:10) நியூ இன்டர்நேஷனல் வர்ஷன் சொல்கிறது: “மற்றவர்களை உங்களிலும் அதிகமாக கனம் பண்ணுங்கள்.” நீங்கள் மற்றவர்களைப் புகழ்ந்து, அவர்களது திறமைகளையும் ஆற்றல்களையும் போற்றுகிறீர்களா? அல்லது அவர்களது பெயரை கெடுக்கும் நோக்கத்தில் குறைகாண்பதிலேயே எப்போதும் குறியாக இருக்கிறீர்களா? உங்களால் மற்றவர்களை மனமார பாராட்ட முடியுமா? அது உங்களுக்கு கஷ்டமாக இருந்தால், கர்வமும் உங்களைக் குறித்தே நிச்சயமற்ற உணர்வும் ஒருவேளை காரணமாய் இருக்கலாம்.
கர்வமுள்ளவர் பொறுமையற்றவர். பணிவுள்ளவரோ பொறுமையும் சகிப்புத்தன்மையும் மிக்கவர். நீங்கள் எந்த ரகம்? தொட்டதற்கெல்லாம் கோபித்துக்கொள்கிறீர்களா? இக்குணம் நீடிய பொறுமைக்கு நேர் எதிர்மாறானது. நீங்கள் பணிவோடிருந்தால், உங்களையே உசத்தியாக நினைக்கமாட்டீர்கள். இயேசுவின் சீஷர்கள் தங்களை மிக உசத்தியாக நினைத்துக்கொண்டபோது என்ன நடந்தது என்பது ஞாபகமிருக்கிறதா? அவர்களிலேயே மிக முக்கியமானவர் யார் என்பதைப் பற்றி மிகவும் காரசாரமாக விவாதித்தனர். அவர்கள் எல்லாருமே ‘அப்பிரயோஜனமான ஊழியக்காரர்’ என்பதை மறந்துவிட்டார்கள்!—லூக்கா 17:10; 22:24; மாற்கு 10:35-37, 41.
பிரெஞ்சு எழுத்தாளர் வோல்டயர், மனத்தாழ்மையை “உள்ளப்பூர்வமான பணிவு, . . . கர்வமென்ற விஷத்தை முறிக்கும் மருந்து” என விவரித்தார். ஆம், பணிவு என்பது தன்னைத்தானே தாழ்த்துவது. பணிவுள்ளவர் அடக்கமானவர், ஆணவமுள்ளவர் அல்ல. மற்றவர்களை மிகவும் மரியாதையோடும் தயவோடும் நடத்துபவர்.
ஏன் பணிவோடிருக்க முயற்சி செய்யவேண்டும்? ஏனென்றால் பணிவுள்ளவர்கள்மீது கடவுள் பிரியப்படுகிறார். அவரது வழிநடத்துதலைப் பெற உதவும் குணமும் இதுதான். தீர்க்கதரிசியாகிய தானியேலை யெகோவா ‘மிகவும் பிரியமானவனாக’ கருதியதற்கு ஒரு காரணம் அவர் காட்டிய பணிவே. அதனால்தான் தேவதூதனின் மூலம் அவருக்கு தரிசனமும் காட்டினார். (தானியேல் 9:23; 10:11, 19) பணிவு அநேக வெகுமதிகளைக் கொடுக்கும். ஆருயிர் தோழர்கள் கிடைப்பார்கள். அதைவிட முக்கியமாக, யெகோவாவின் ஆசீர்வாதமும் கிடைக்கும். “தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்.”—நீதிமொழிகள் 22:4.
[பக்கம் 7-ன் படம்]
பணிவோடு மன்னிப்பு கேட்பது சுமுகமாக வாழ உதவும்