‘மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்’
ச வுல், புகழின் உச்சியிலிருந்த ஒரு நகரத்தைச் சேர்ந்தவர். பிறந்தது தொட்டே ரோம குடிமகன் என்ற அந்தஸ்தைப் பெற்றிருந்தார். அவர் பிரபலமான குடும்பத்தைச் சேர்ந்தவரெனத் தெரிகிறது. முதல் நூற்றாண்டில் கிடைத்த மிகச்சிறந்த கல்வியை அவர் பயின்றிருந்தார். அவர் குறைந்தபட்சம் இரண்டு மொழிகளைச் சரளமாகப் பேசினார். அவர் ஒரு பரிசேயனாக அதாவது பிரசித்தி பெற்ற யூத மதப்பிரிவைச் சேர்ந்தவராகவும் இருந்தார்.
பரிசேயராக இருந்த சவுல் சாமானியர்களைத் துச்சமாகப் பார்த்திருப்பார்; தானொரு நீதிமான் என்ற கர்வத்துடன் நடந்திருப்பார். (லூக்கா 18:11, 12; அப்போஸ்தலர் 26:5) அவரைப் போன்ற பரிசேயர்கள் மற்றவர்களைவிட தாங்கள் ஒருபடி மேலே இருப்பதாக நினைத்தார்கள். பேரும் புகழும் பெறுவதிலேயே குறியாய் இருந்தார்கள், புகழ் பரப்பும் பட்டப்பெயர்களைச் சூட்டிக்கொள்ள ஆசைப்பட்டார்கள். (மத்தேயு 23:6, 7; லூக்கா 11:43) அத்தகைய ஆட்களோடு ஒட்டி உறவாடியதே சவுலின் அகங்காரத்திற்குக் காரணமாய் இருந்திருக்கலாம். அவர் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவதில் தீவிரம் காட்டியவர் என்பது நமக்குத் தெரியும். அப்போஸ்தலனாகிய பவுலாக மாறிய அவர் பல வருடங்களுக்குப் பிறகு, தான் ஒருசமயம் ‘தூஷிக்கிறவனும் துன்பப்படுத்துகிறவனும் கொடுமை செய்கிறவனுமாய்’ இருந்ததாகச் சொன்னார்.—1 தீமோத்தேயு 1:13.
ஆம், சவுல் ஒரு கிறிஸ்தவராக, அப்போஸ்தலன் பவுலாக மாறினார்; அவர் ஆளே அடியோடு மாறினார். ஒரு கிறிஸ்தவ அப்போஸ்தலனாக ‘பரிசுத்தவான்களெல்லாரிலும் சிறியவராக’ இருந்தாரென அவர் தாழ்மையோடு தெரிவித்தார். (எபேசியர் 3:8) அவர் திறம்பட்ட சுவிசேஷகனாக இருந்தார்; ஆனாலும் அதற்காக அவர் தனக்குப் புகழ் சேர்க்கவில்லை. மாறாக, எல்லாப் புகழையும் கடவுளுக்கே சேர்த்தார். (1 கொரிந்தியர் 3:5-9; 2 கொரிந்தியர் 11:7) ‘நீங்கள் . . . உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொள்ளுங்கள் அதாவது [அணிந்து கொள்ளுங்கள்]’ என்று சக கிறிஸ்தவர்களுக்கு ஆலோசனை வழங்கியவர் பவுல்தான்.—கொலோசெயர் 3:12.
இந்த ஆலோசனை நம் 21-ஆம் நூற்றாண்டுக்குப் பொருந்துமா? மனத்தாழ்மை காட்டுவதால் ஏதாவது பலனுண்டா? மனத்தாழ்மை என்ற குணம் உண்மையிலேயே பலத்திற்கு அடையாளமா?
சர்வவல்ல படைப்பாளர் தாழ்மையுள்ளவரா?
மனத்தாழ்மையைப்பற்றி பேசும்போது கடவுளுடைய கருத்தை மனதில்கொள்வது அவசியம். ஏன்? ஏனெனில் அவரே நம் உன்னத பேரரசர், நம் படைப்பாளர். அவர் எல்லாம் வல்லவர்; நாமோ வரம்புக்குட்பட்டவர்கள் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். நாம் அவரைச் சார்ந்து வாழ்கிறோம். பூர்வ காலத்தில் வாழ்ந்த ஞானியாகிய எலிகூ இவ்வாறு சொன்னார்: ‘சர்வவல்லவரை நாம் கண்டுபிடிக்கக்கூடாது; அவர் வல்லமையில் பெருத்தவர்.’ (யோபு 37:23) எல்லையின்றி பரந்து விரிந்திருக்கும் இப்பிரபஞ்சத்தைப்பற்றி சிந்தித்துப் பார்த்தாலே போதும், அதுவே நமக்குத் தாழ்மையைக் கற்பிக்கும், அல்லவா? “உங்கள் கண்களை ஏறெடுத்துப் பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்ணி, அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே; அவருடைய மகா பெலத்தினாலும், அவருடைய மகா வல்லமையினாலும், அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது” என ஏசாயா தீர்க்கதரிசி சொல்கிறார்.—ஏசாயா 40:26.
யெகோவா தேவன் சர்வவல்லவராக இருப்பதோடு, தாழ்மையுள்ளம் படைத்தவராயும் இருக்கிறார். அவரிடம் தாவீது ராஜா இவ்வாறு ஜெபித்தார்: “உம்முடைய ரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய காருணியம் [அதாவது, மனத்தாழ்மை] என்னைப் பெரியவனாக்கும்.” (2 சாமுவேல் 22:36) தமக்குப் பிரியமாக நடக்க முயலுகிற அற்ப மனிதரிடம் கடவுள் அக்கறை காட்டுகிறார், இரக்கம் காட்டுகிறார்; இதுதானே அவர் தாழ்மையுள்ளவர் என்பதைத் தெரிவிக்கிறது. தமக்குப் பயந்து நடப்போருக்கு அன்புடன் உதவுதற்காக, ஒரு கருத்தில் யெகோவா பரலோகத்திலிருந்து குனிந்து பார்க்கிறார் என்றே சொல்லலாம்.—சங்கீதம் 113:5-7.
அதுமட்டுமல்ல, மனத்தாழ்மையாய் நடக்கிற தம்முடைய ஊழியர்களை அவர் உயர்வாய் மதிக்கிறார். அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு எழுதினார்: “பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.” (1 பேதுரு 5:5) அகந்தையை கடவுள் எப்படிக் கருதுகிறாரென பைபிள் எழுத்தாளர் ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “மனமேட்டிமையுள்ளவனெவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்.” (நீதிமொழிகள் 16:5) அப்படியானால், மனத்தாழ்மை பலத்திற்கு அடையாளமாக இருப்பது எப்படி?
மனத்தாழ்மை எது அல்ல
மனத்தாழ்மையாய் நடப்பதும் சிறுமைப்படுத்தப்படுவதும் ஒன்றல்ல. பண்டைய கலாச்சாரங்கள் சிலவற்றில், பரிதாபமாகவும் தாழ்ந்த நிலையிலும் அதோகதியாக நின்ற ஓர் அடிமையே தாழ்மையான நபராகக் கருதப்பட்டார். அதற்கு நேர்மாறாக, மனத்தாழ்மையோ ஒருவருக்கு மதிப்பைப் பெற்றுத் தருகிறதென பைபிள் வலியுறுத்திக் காட்டுகிறது. உதாரணமாக, சாலொமோன் ஞானி இவ்வாறு எழுதினார்: “தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்.” (நீதிமொழிகள் 22:4) அதுமட்டுமல்ல, சங்கீதம் 138:6-ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்; மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார்.”
தாழ்மையாய் நடந்துகொள்ளும் ஒருவர் எந்தத் திறமைகளும் இல்லாதவர் என்றோ சாதனைகள் புரியாதவர் என்றோ அர்த்தமாகாது. உதாரணமாக, தாம் யெகோவாவின் ஒரேபேறான மகன் அல்ல என்று இயேசு கிறிஸ்து ஒருபோதும் சொல்லிக்கொள்ளவில்லை; பூமியில் தாம் செய்த ஊழியம் அப்படியொன்றும் முக்கியமானதல்ல என்பதுபோல காட்டிக் கொள்ளவுமில்லை. (மாற்கு 14:61, 62; யோவான் 6:51) இருந்தாலும், தாம் செய்த நற்செயல்களுக்கான புகழை தம் பிதாவுக்கே அர்ப்பணித்தார்; அதோடு, தம் பிதாவிடமிருந்து பெற்ற வல்லமையை மற்றவர்கள்மீது அதிகாரம் செலுத்தவோ அவர்களை ஒடுக்கவோ பயன்படுத்துவதற்குப் பதிலாக அவர்களுக்குச் சேவை செய்யவும் உதவவுமே பயன்படுத்தினார்; இவ்விதங்களில் அவர் மனத்தாழ்மையைக் காட்டினார்.
பலத்திற்கு அடையாளம்
தாம் செய்த ‘பலத்த செய்கைகள்’ மூலம் இயேசு கிறிஸ்து தம் காலத்து மக்களுக்கு அறியப்பட்டார் என்பதில் சந்தேகமில்லை. (அப்போஸ்தலர் 2:22) ஆனாலும், சிலர் அவரை ‘மனுஷரில் தாழ்ந்தவராக’ கருதினார்கள். (தானியேல் 4:17) அவர், ஆரவாரமற்ற எளிய வாழ்க்கை வாழ்ந்ததோடு மனத்தாழ்மையின் மதிப்பைக் குறித்தும் பலமுறை கற்பித்தார். (லூக்கா 9:48; யோவான் 13:2-16) என்றாலும், மனத்தாழ்மையைக் காட்டியதால் அவர் எவ்விதத்திலும் பலவீனமான நபராகிவிடவில்லை. அவர் அஞ்சாநெஞ்சோடு தம் தகப்பனின் பெயருக்கு ஆதரவாகப் பேசினார், தம் ஊழியத்தையும் செய்து முடித்தார். (பிலிப்பியர் 2:6-8) அவரைத் துணிவுமிக்கச் சிங்கமாக பைபிள் வர்ணிக்கிறது. (வெளிப்படுத்துதல் 5:5) மனத்தாழ்மை என்ற குணம் ஒழுக்க நெறிகளை உறுதியாய் கடைப்பிடிப்பதோடு சம்பந்தப்பட்டிருப்பதாக இயேசுவின் உதாரணம் காட்டுகிறது.
நாம் உண்மையான மனத்தாழ்மையைக் காட்ட பாடுபடுகிற அதே சமயத்தில், தாழ்மையை நம் வாழ்க்கையின் அங்கமாக்குவது சாமானியமல்ல என்பதையும் உணர்ந்துகொள்கிறோம். சுலபமான போக்கில் செல்வதற்கோ பாவ மனச்சாய்வுகளுக்கு அடிபணிந்து விடுவதற்கோ பதிலாக எப்போதும் கடவுளுடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிவதை இது உட்படுத்துகிறது. மனத்தாழ்மையை வளர்த்துக் கொள்வதற்கு ஒழுக்க நெறிகளை உறுதியாய் கடைப்பிடிப்பது அவசியம். ஏனெனில், தன்னலமின்றி யெகோவாவைச் சேவிப்பதற்காகவும் மற்றவர்களுடைய தேவைகளைக் கவனிப்பதற்காகவும் நம்முடைய நலன்களை இரண்டாம்பட்சமாக வைப்பது அவசியம்.
மனத்தாழ்மையினால் விளையும் பலன்கள்
மனத்தாழ்மை என்பது அகந்தையோ தற்பெருமையோ இல்லாததைக் குறிக்கிறது. நம்மைநாமே எதார்த்தமாகச் சீர்தூக்கிப் பார்த்தால், அதாவது நம்முடைய பலங்களையும் பலவீனங்களையும் நம் வெற்றிகளையும் தோல்விகளையும் சீர்தூக்கிப் பார்த்தால் தாழ்மையான உள்ளத்தை வளர்த்துக்கொள்ள முடியும். இதன் சம்பந்தமாக பவுல் சிறந்த அறிவுரையைக் கொடுத்துள்ளார். அவர் இவ்வாறு எழுதினார்: “உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், . . . தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும்.” (ரோமர் 12:3) இந்த அறிவுரையைப் பின்பற்றுகிற ஒருவர் மனத்தாழ்மையுள்ளவராக இருப்பார்.
நம்முடைய நலனைவிட மற்றவர்களுடைய நலனுக்கு மனதார முக்கியத்துவம் கொடுப்பதும்கூட மனத்தாழ்மையைக் காட்டுவதாகும். கடவுளுடைய ஆவியின் ஏவுதலால் கிறிஸ்தவர்களுக்கு பவுல் இவ்வாறு அறிவுரை வழங்கினார்: ‘ஒன்றையும் வாதினாலாவது [அதாவது, பகையோடு] வீண் பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.’ (பிலிப்பியர் 2:3) இது இயேசு கொடுத்த பின்வரும் கட்டளைக்கு இசைவாக இருக்கிறது: “உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.”—மத்தேயு 23:11, 12.
ஆம், தாழ்மையுள்ளம் படைத்தவர்களை கடவுள் உயர்வாய்க் கருதுகிறார். சீஷனாகிய யாக்கோபு இந்தக் குறிப்பை வலியுறுத்தி இவ்வாறு எழுதினார்: “கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.” (யாக்கோபு 4:10) கடவுளால் உயர்த்தப்படுவதை யார்தான் விரும்ப மாட்டார்?
மக்கள் தொகுதியாக இருந்தாலும்சரி, தனி நபர்களாக இருந்தாலும்சரி அவர்களிடையே மனத்தாழ்மை இல்லாதபோது பெரும் குழப்பங்களும் சண்டைகளும் ஏற்பட்டிருக்கின்றன. மறுபட்சத்தில், மனத்தாழ்மை காட்டுவதால் நல்ல பலன்கள் விளைகின்றன. கடவுளைப் பிரியப்படுத்துகிறோம் என்ற இதமான உணர்வை நாம் அனுபவிப்போம். (மீகா 6:8) மன நிம்மதியும் பெறுவோம். ஏனெனில், மனத்தாழ்மையுள்ளவர் கர்வமுள்ளவரைவிட அதிக சந்தோஷமும் திருப்தியும் உள்ளவராய் இருப்பார். (சங்கீதம் 101:5) அதோடு, நம் குடும்பத்தாரிடமும் நண்பர்களிடமும் நம்மோடு வேலை செய்பவர்களிடமும் சுமூகமான உறவைக் காத்துக் கொள்ளவும் அன்பாக நடந்துகொள்ளவும் முடியும். ஒத்துப்போகாதவராகவோ பிடிவாதக்காரராகவோ இருப்பது கோபத்திற்கும் பாசம் அற்றுப்போவதற்கும், வன்மத்துக்கும் மனக்கசப்புக்குமே வழிவகுக்கும்; மனத்தாழ்மையுள்ளவர் அப்படிப்பட்ட குணங்களைக் காட்ட மாட்டார்.—யாக்கோபு 3:14-16.
ஆம், மற்றவர்களோடு சுமூகமாக நடந்துகொள்வதற்கு மனத்தாழ்மை எனும் குணத்தை வளர்த்துக்கொள்வதே சிறந்த வழி. சுயநலமும் போட்டி மனப்பான்மையும் நிறைந்த இவ்வுலகில் சவால்களைச் சமாளிப்பதற்கு இக்குணம் நமக்கு உதவும். ஒரு காலத்தில் ஆணவத்தோடும் அகந்தையோடும் நடந்த அப்போஸ்தலன் பவுல், கடவுளுடைய உதவியோடு அத்தகைய குணங்களைக் கைவிட்டார். அதுபோல, அகந்தையோ மற்றவர்களைவிட ‘நான்தான் உசத்தி’ என்ற எண்ணமோ நம்மில் சற்றேனும் தலைதூக்கினால் அவற்றை நாம் கட்டுப்படுத்த வேண்டும். “அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை” என பைபிள் எச்சரிக்கிறது. (நீதிமொழிகள் 16:18) பவுலின் முன்மாதிரியையும் ஆலோசனையையும் பின்பற்றும்போது, ‘மனத்தாழ்மையை அணிந்துகொள்வது’ எவ்வளவு சிறந்தது என்பதை நாம் உணர்ந்துகொள்வோம்.—கொலோசெயர் 3:12.
[பக்கம் 4-ன் படம்]
ஆணவத்தையும் அகந்தையையும் பவுல் விட்டொழித்தார்
[பக்கம் 5-ன் படத்திற்கான நன்றி]
Anglo-Australian Observatory/David Malin Images
[பக்கம் 7-ன் படம்]
மற்றவர்களிடம் சுமூகமாக நடந்துகொள்ள மனத்தாழ்மை நமக்கு உதவுகிறது