“யெகோவா,” “யாவே”—எது சரி?
“கலப்படம்,” “கலவை,” “விசித்திரம்.” இப்படிப்பட்ட கடுமையான வார்த்தைகளை உபயோகிக்க பைபிளின் எபிரெய கல்விமான்களை எது தூண்டியது? “ஜெஹோவா” என்பது கடவுளுடைய பெயரின் சரியான ஆங்கில உச்சரிப்பா இல்லையா என்ற விவாதமே தூண்டியது. நூறு வருடங்களுக்கும் மேலாக, இந்தக் கருத்துவேறுபாடு முற்றுப்பெறாமல் தொடர்ந்திருக்கிறது. இன்று, பெரும்பான்மையான கல்விமான்கள் “யாவே” என்ற ஈரசை உச்சரிப்பையே ஆதரிக்கின்றனர். ஆனால் “யெகோவா” என்ற உச்சரிப்பு உண்மையிலேயே ‘விசித்திரமானதாக’ தோன்றுகிறதா?
கருத்துவேறுபாடுகளின் ஆரம்பத்தில்
பைபிளின்படி, கடவுள்தாமே தம்முடைய பெயரை மனிதர்களுக்குத் தெரிவித்தார். (யாத்திராகமம் 3:15, தி.மொ.) கடவுளுடைய பூர்வ கால ஊழியர்கள் அந்தப் பெயரை தாராளமாக உபயோகித்ததற்கு பைபிள் ஆதாரம் அளிக்கிறது. (ஆதியாகமம் 12:8; ரூத் 2:4; தி.மொ.) பிற தேசத்தாருக்கும்கூட கடவுளுடைய பெயர் தெரிந்திருந்தது. (யோசுவா 2:9, தி.மொ.) குறிப்பாக, நாடுகடத்தப்பட்டிருந்த யூதர்கள் விடுதலையாகி வந்து, வேறு நாட்டவரோடு தொடர்புகொள்ள ஆரம்பித்தபின் அவர்களுக்குத் தெரிய வந்தது. (சங்கீதம் 96:2-10; ஏசாயா 12:4; மல்கியா 1:11; தி.மொ.) “பாபிலோனிலிருந்து விடுதலையானதிலிருந்து முதல் நூற்றாண்டு வரை, வெளிநாட்டவர்களில் அநேகர் யூதர்களுடைய மதத்திடம் கவரப்பட்டார்கள் என்பதற்கு போதுமான ஆதாரம் இருக்கிறது” என்று தி இன்டர்பிரிட்டர்ஸ் டிக்ஷ்னரி ஆஃப் த பைபிள் கூறுகிறது. என்றபோதிலும், பொ.ச. முதல் நூற்றாண்டில் கடவுளுடைய பெயர் சம்பந்தமாக ஒரு மூடநம்பிக்கை தலைதூக்க ஆரம்பித்தது. யூத தேசத்தவர் கடவுளுடைய பெயரை வெளிப்படையாக உபயோகிப்பதை நிறுத்துவதில் இது முடிவடைந்தது; அதுமட்டுமா அதை உச்சரிக்கவே கூடாது என சிலர் தடைவிதித்தனர். இதனால்தான் அப்பெயர் எப்படி உச்சரிக்கப்பட்டு வந்தது என்ற விவரமே தெரியாமல் போனது. அது உண்மையிலேயே தெரியாமல் போனதா?
பெயர் எதை வெளிப்படுத்துகிறது?
יהוה என எபிரெய மொழியில் கடவுளுடைய பெயர் எழுதப்படுகிறது. வலமிருந்து இடமாக வாசிக்கப்படும் இந்த நான்கு எழுத்துக்கள், டெட்ராகிரமாட்டன் என பொதுவாக அழைக்கப்படுகின்றன. பைபிளில் காணப்படும் அநேக ஆட்களின் பெயர்களிலும் இடங்களின் பெயர்களிலும் கடவுளுடைய பெயரின் சுருக்கமான வடிவம் காணப்படுகிறது. இந்தச் சிறப்புப் பெயர்கள் கடவுளுடைய பெயர் எப்படி உச்சரிக்கப்பட்டது என்பதற்கு ஏதேனும் விதத்தில் சில துப்புகளைக் கொடுக்குமா?
அமெரிக்கா, வாஷிங்டன், டி.சி.-யிலுள்ள வெஸ்லி தியாலஜிக்கல் செமினரியின் முன்னாள் பேராசிரியர் ஜார்ஜ் புச்சன்னன் என்பவர், இதற்கான துப்புகளைக் கொடுக்க முடியும் என்றே கூறுகிறார். “பூர்வ காலங்களில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு பெயர் சூட்டுகையில் கடவுட்களுடைய பெயரையும் சேர்த்தே வைத்தனர். அதாவது, அந்தக் கடவுளுடைய பெயர் எப்படி உச்சரிக்கப்பட்டதோ அவ்வாறே தங்களுடைய பிள்ளைகளின் பெயர்களையும் அவர்கள் உச்சரித்திருப்பார்கள். ஆட்களுடைய பெயர்களில் டெட்ராகிரமாட்டன் பயன்படுத்தப்பட்டது; கடவுளுடைய பெயரின் மத்தியில் உச்சரிக்கப்படும் உயிரெழுத்தை அவர்கள் எப்போதும் உபயோகித்தனர்” என பேராசிரியர் புச்சன்னன் விளக்குகிறார்.
பைபிளில், கடவுளுடைய பெயர் சுருக்கமான வடிவில் ஆட்களின் பெயர்களில் காணப்படுகிறது; அதற்கு இதோ சில உதாரணங்கள். யோனத்தான் என்பது எபிரெய பைபிளில் யோஹ்னத்தான் அல்லது யெஹோனத்தான் என்பதாக இருக்கிறது; “யாஹோ அல்லது யாஹோவா தந்திருக்கிறார்” என்பது அதற்கு அர்த்தம் என கூறுகிறார் பேராசிரியர் புச்சன்னன். எபிரெயுவில் தீர்க்கதரிசியாகிய எலியாவின் பெயர் எலையா அல்லது எலியாஹு என்பது. பேராசிரியர் புச்சன்னனின்படி அந்தப் பெயருக்கு, “யாஹோ அல்லது யாஹோவா என் தேவன்” என்பது அர்த்தம். அதைப்போலவே, யோசபாத்தின் எபிரெயப் பெயர் யெஹோஷஃபாட், அதற்கு “யாஹோ நியாயந்தீர்த்தார்” என்பது அர்த்தம்.
“யாவே” என்ற டெட்ராகிரமாட்டனின் ஈரசை உச்சரிப்பில் ஓ என்ற உயிரெழுத்து ஒலிக்கு கடவுளுடைய பெயரில் இடமில்லை. கடவுளுடைய பெயர் அடங்கிய அநேக பைபிள் பெயர்களில், முழுமையான வடிவிலும் சுருக்கமான வடிவங்களிலும் இந்த மத்திய உயிரெழுத்து ஒலி வருகிறது. உதாரணம், யெகோ(க+ஓ)னத்தான் மற்றும் யோ(ய+ஓ)னத்தான். கடவுளுடைய பெயரைக் குறித்து பேராசிரியர் புச்சன்னன் இவ்வாறு கூறுகிறார்: “எங்கேயும் ஓ அல்லது ஹோ என்ற உயிரெழுத்து விடப்படவில்லை. சில சமயங்களில் இந்த வார்த்தை சுருக்கமான வடிவில் ‘யா’ என தோன்றியிருக்கிறது ஆனால் ஒருபோதும் ‘யாவே’ என அல்ல. . . . டெட்ராகிரமாட்டன் ஓரசையில் உச்சரிக்கப்படும்போது அது ‘யா’ அல்லது ‘யோ.’ மூவசையில் உச்சரிக்கப்படுகையில் அது ‘யாஹொவா’ அல்லது ‘யாஹோவா.’ ஈரசையாக எப்போதாவது சுருக்கப்படுகையில் அது ‘யாஹொ’”—பிப்ளிக்கல் ஆர்கியாலஜி ரிவ்யூ.
ஹீப்ரூ அண்ட் கால்டி லெக்ஸிகன் டு தி ஓல்ட் டெஸ்டமெண்ட் ஸ்கிரிப்சர்ஸ் என்ற தன் நூலில் 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த எபிரெய கல்விமான் கேசேனியுஸ் சொன்னதைப் புரிந்துகொள்ள இந்தக் குறிப்புகள் நமக்கு உதவுகின்றன: “יְהוָֹה [யெ-ஹோ-வா] என்பதே [கடவுளுடைய பெயரின்] சரியான உச்சரிப்பு என்று சொல்பவர்கள் ஆதாரத்துடன்தான் தங்கள் கருத்தை ஆதரித்து வாதிடுகின்றனர். இந்த விதத்தில் சுருக்கமாக உபயோகிக்கப்படும் יְהוֹ [யெ-ஹோ] மற்றும் יוֹ [யோ] போன்ற அசைகளில் ஆரம்பமாகும் அநேக சிறப்புப் பெயர்கள் வெகு திருப்தியான விளக்கத்தைக் கொடுக்கின்றன.”
இருந்தபோதிலும், தன்னுடைய சமீபத்திய மொழிபெயர்ப்பான மோசேயின் ஐந்தாகமங்கள் (ஆங்கிலம்) என்பதில் எவரெட் ஃபாக்ஸ் என்பவர் இதைக் குறிப்பிட்டார்: “[கடவுளுடைய] எபிரெய பெயருக்கான ‘சரியான’ உச்சரிப்பை வெளிக்கொணருவதற்காக முன்பும் சரி, தற்போதும் சரி எடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றியடையவில்லை; அவ்வப்போது காதில் விழுந்த ‘யெகோவா’ சரியா, அல்லது புலமை சார்ந்த வாசகமான ‘யாவே’ சரியா என்பது தீர்வாக நிரூபிக்கப்படவில்லை.”
கல்விமான்களின் வாதம் தொடர்கதையாய் தொடரப்போவதில் சந்தேகமேதுமில்லை. மஸோரெட்டுகள் எபிரெய வார்த்தைகளுக்கு உயிரெழுத்துக் குறிகளை பயன்படுத்துவதற்கு முன்பே உண்மை கடவுளின் பெயரை உச்சரிப்பதை யூதர்கள் நிறுத்திவிட்டனர். எனவே, ய்ஹ்வ்ஹ் [YHWH (יהוה)] என்ற மெய்யெழுத்துக்களுக்கு இடையே எந்த உயிரெழுத்துக்கள் உபயோகிக்கப்பட்டன என்பதை எந்த விதத்திலும் முழுமையாக அறிய முடியாது. ஆனால், பைபிள் கால சரித்திர புருஷர்களின் பெயர்களுடைய சரியான உச்சரிப்பு நிலைத்திருக்கிறது; அவை கடவுளுடைய பெயரின் பூர்வ உச்சரிப்பை அறிய ஆணித்தரமான துப்பை அளிக்கின்றன. இந்த உண்மையின் அடிப்படையில் “யெகோவா” என்ற உச்சரிப்பு ‘விசித்திரமானது’ அல்ல என்பதை சில கல்விமான்களாவது ஒப்புக்கொள்கின்றனர்.
[பக்கம் 31-ன் படங்கள்]
“யெகோவா” என்பதே கடவுளுடைய பெயரின் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உச்சரிப்பு