நித்திய ஜீவனுக்கான ஒரே வழி
“நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்.”—யோவான் 14:6.
1, 2. நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் பாதையை இயேசு எதற்கு ஒப்பிட்டார், அவருடைய உதாரணத்தின் முக்கியத்துவம் என்ன?
இயேசு தம்முடைய புகழ்மிக்க மலைப்பிரசங்கத்தில், நித்திய ஜீவனுக்கு போகும் வழியை வாசல் வழியாக நுழையும் பாதைக்கு ஒப்பிடுகிறார். ஜீவனுக்கான இந்த வழி சுலபமான ஒன்றல்ல என இயேசு வலியுறுத்திக் கூறுவதை கவனியுங்கள். அவர் கூறினார்: “இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். [நித்திய] ஜீவனுக்கு போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.”—மத்தேயு 7:13, 14.
2 இந்த உவமையின் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்துகொள்கிறீர்களா? ஜீவனுக்கு வழிநடத்தும் ஒரேவொரு பாதையே அல்லது வழியே இருக்கிறது என்பதையும் அதிலிருந்து விலகிவிடாமல் இருப்பதற்கு நம் பங்கில் கவனம் தேவை என்பதையும் அது சுட்டிக்காட்டவில்லையா? அப்படியென்றால் நித்திய ஜீவனுக்கான அந்த ஒரே வழி எது?
இயேசு கிறிஸ்து வகிக்கும் பாகம்
3, 4. (அ) நம்முடைய இரட்சிப்பில் இயேசு வகிக்கும் முக்கிய பங்கை பைபிள் எவ்வாறு காட்டுகிறது? (ஆ) மனிதவர்க்கம் நித்திய ஜீவனை அடைய முடியும் என்பதை கடவுள் எப்பொழுது முதலாவதாக வெளிப்படுத்தினார்?
3 அந்த வழியைக் குறித்ததில் இயேசு முக்கிய பாகம் வகிக்கிறார் என்பது தெளிவாக இருக்கிறது. அப்போஸ்தலன் பேதுரு கூறினார்: “அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய [இயேசுவுடைய] நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை.” (அப்போஸ்தலர் 4:12) அதைப் போலவே அப்போஸ்தலன் பவுலும் சொன்னார்: “தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்.” (ரோமர் 6:23) தாம் மட்டுமே நித்திய ஜீவனுக்கான வழி என்பதை இயேசுவே வெளிப்படுத்தினார், ஏனெனில் அவர் சொன்னார்: “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்.”—யோவான் 14:6.
4 ஆகவே, நித்திய ஜீவன் இயேசுவினால்தான் கிடைக்கிறது என்பதையும் இவ்விஷயத்தில் அவரே முக்கிய பங்கு வகிக்கிறார் என்பதையும் நாம் ஒத்துக்கொள்வது மிகவும் முக்கியம். எனவே, அவருடைய பங்கை நாம் சற்று கூர்ந்து ஆராய்வோமாக. ஆதாம் பாவம் செய்ததற்குப் பிற்பாடும், மனிதவர்க்கம் நித்திய ஜீவனைப் பெறமுடியும் என்பதை யெகோவா தேவன் எப்போது சுட்டிக்காட்டினார் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆதாம் பாவம்செய்த பிறகு உடனடியாக அதைப்பற்றி கூறினார். மனிதவர்க்கத்தின் இரட்சகராக இயேசு கிறிஸ்துவால் வரும் ஏற்பாடு எவ்வாறு முதலில் முன்னறிவிக்கப்பட்டது என்பதை நாம் இப்பொழுது ஆராய்வோமாக.
வாக்குப்பண்ணப்பட்ட வித்து
5. ஏவாளை வஞ்சித்த சர்ப்பத்தை நாம் எவ்வாறு அடையாளம் கண்டுகொள்ளலாம்?
5 வாக்குப்பண்ணப்பட்ட இந்த இரட்சகரைப் பற்றி அடையாள அர்த்தத்தில் யெகோவா தேவன் தெரியப்படுத்தினார். ஏவாளிடம் நயமாக பேசி தடைசெய்யப்பட்ட கனியை புசிக்கத் தூண்டுவதன் மூலம் கடவுளுக்கு கீழ்ப்படியாமல் போகச்செய்த “சர்ப்பத்தை” பார்த்து தண்டனை தீர்ப்பை வழங்கியபோது இதை அவர் தெரியப்படுத்தினார். (ஆதியாகமம் 3:1-5) நிச்சயமாகவே, அந்தச் சர்ப்பம் சொல்லர்த்தமான பாம்பு அல்ல. அவன் வல்லமை வாய்ந்த ஆவி சிருஷ்டி; ‘பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பு’ என பைபிளில் அடையாளம் காட்டப்படுகிறான். (வெளிப்படுத்துதல் 12:9) ஏதேன் தோட்டத்தில் ஏவாளை வஞ்சிப்பதற்கு சாத்தான் கீழ்த்தரமான ஒரு மிருகத்தைத் தன் வாயாக பயன்படுத்தினான். அதனால், சாத்தானுக்கு எதிராக தீர்ப்பு கூறுகையில் யெகோவா தேவன் அவனிடம் சொன்னார்: “உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் [ஸ்திரீயின் வித்து] உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்.”—ஆதியாகமம் 3:15.
6, 7. (அ) அந்த ‘வித்துவை’ பிறப்பித்த ஸ்திரீ யார்? (ஆ) வாக்குப்பண்ணப்பட்ட வித்து யார், அவர் எதை சாதிக்கிறார்?
6 சாத்தான் பகைக்கும் அல்லது விரோதிக்கும் இந்த “ஸ்திரீ” யார்? வெளிப்படுத்துதல் 12-ம் அதிகாரத்தில் ‘பழைய பாம்பு’ யாரென அடையாளம் காட்டப்படுவது போலவே சாத்தான் பகைக்கும் அந்த ஸ்திரீயும் அடையாளம் காட்டப்படுகிறாள். முதலாம் வசனத்தில், அவள் “சூரியனை அணிந்திருந்தாள், அவள் பாதங்களின் கீழே சந்திரனும், அவள் சிரசின்மேல் பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடமும் இருந்தன” என்று சொல்லப்படுவதை கவனியுங்கள். உண்மையுள்ள தேவதூதர்கள் அடங்கிய பரலோக அமைப்பிற்கு அந்த ஸ்திரீ அடையாளமாக இருக்கிறாள். அவள் பிறப்பிக்கும் “ஆண்பிள்ளை,” இயேசு கிறிஸ்துவை ராஜாவாகக் கொண்டு ஆளப்படும் கடவுளுடைய ராஜ்யத்தைக் குறிக்கிறது.—வெளிப்படுத்துதல் 12:1-5.
7 அப்படியானால், ஆதியாகமம் 3:15-ல் குறிப்பிடப்பட்டுள்ள, சாத்தானுடைய ‘தலையை நசுக்கி’ அவனுக்கு மரண அடி கொடுக்கும் அந்த ஸ்திரீயின் “வித்து” அல்லது சந்ததி யார்? ஒரு கன்னியினிடத்தில் அற்புதகரமாக பிறக்கும்படி கடவுள் பரலோகத்திலிருந்து அனுப்பிய மனிதனாகிய இயேசுவே அவர். (மத்தேயு 1:18-23; யோவான் 6:38) இந்த வித்தாகிய இயேசு கிறிஸ்து, உயிர்த்தெழுப்பப்பட்ட பரலோக அரசராக சாத்தானை ஜெயிப்பதில் தலைமைதாங்குவார் என வெளிப்படுத்துதல் 12-ம் அதிகாரம் சொல்கிறது. பின்பு, வெளிப்படுத்துதல் 12:10 கூறுவதுபோல, அவர் ‘நமது தேவனுடைய ராஜ்யத்தையும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரத்தையும்’ ஸ்தாபிப்பார்.
8. (அ) தம்முடைய ஆதி நோக்கம் சம்பந்தமாக கடவுள் அளிக்கும் புதிய ஒன்று என்ன? (ஆ) கடவுளுடைய புதிய அரசாங்கத்தில் யார் உட்பட்டுள்ளனர்?
8 இயேசு கிறிஸ்துவின் அதிகாரத்திலுள்ள இந்த ராஜ்யம், மனிதர்கள் பூமியில் நித்திய ஜீவனை அனுபவிக்க வேண்டும் என்ற கடவுளுடைய ஆதி நோக்கத்திற்கு இசைவாக அவர் கொடுத்த புதிய ஒன்று. சாத்தானுடைய கலகத்திற்கு பிறகு, இந்தப் புதிய அரசாங்கத்தின் மூலம் துன்மார்க்கத்தின் கெட்ட விளைவுகள் அனைத்தையும் சரிசெய்வதற்காக யெகோவா உடனடியாக நடவடிக்கை எடுத்தார். இந்த அரசாங்கத்தில் தாம் மட்டுமே தனியாக இருக்கமாட்டார் என இயேசு பூமியில் இருக்கும்போது வெளிப்படுத்தினார். (லூக்கா 22:28-30) பரலோகத்தில் அவரோடு சேர்ந்து ஆட்சி செய்வதற்காக மனிதவர்க்கத்திலிருந்து மற்றவர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவ்வாறாக, அவர்கள் ஸ்திரீயினுடைய வித்தின் இரண்டாவது பாகம் ஆவர். (கலாத்தியர் 3:16, 29) இயேசுவோடு உடன் அரசர்களாக ஆளுபவர்கள்—அனைவரும் பூமியிலிருக்கும் பாவமுள்ள மனிதவர்க்கத்தின் மத்தியிலிருந்து எடுக்கப்பட்டவர்கள்—1,44,000 பேர்.—வெளிப்படுத்துதல் 14:1-3.
9. (அ) இயேசு ஒரு மனிதனாக பூமியில் ஏன் பிறந்தார்? (ஆ) பிசாசு செய்த வேலையை இயேசு எவ்வாறு ரத்து செய்துவிட்டார்?
9 என்றபோதிலும், அந்த ராஜ்யம் ஆளுகைசெய்ய ஆரம்பிப்பதற்கு முன்பு அந்த வித்தின் முக்கிய பாகமாகிய இயேசு கிறிஸ்து பூமியில் பிறக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஏன்? ஏனென்றால் ‘பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கு’ அவர் யெகோவா தேவனால் நியமிக்கப்பட்டிருந்தார். (1 யோவான் 3:8) ஆதாமை பாவஞ்செய்ய தூண்டியதும் சாத்தானின் வேலையே. அது ஆதாமுடைய சந்ததியினர் அனைவருமே பாவத்தையும் மரணத்தையும் பரிசாக பெறும்படியான தீர்ப்பை கடவுள் வழங்கும்படி செய்தது. (ரோமர் 5:12) இயேசு தம்முடைய உயிரை மீட்கும் பொருளாக கொடுப்பதன் மூலம் சாத்தானின் வேலையை ரத்து செய்துவிட்டார். இவ்வாறு, பாவ, மரண தண்டனை தீர்ப்பிலிருந்து மனிதவர்க்கத்தை விடுவிப்பதற்கான ஓர் அடிப்படையை அளித்து, நித்திய ஜீவனுக்கான வழியை திறந்து வைத்தார்.—மத்தேயு 20:28; ரோமர் 3:24; எபேசியர் 1:7.
கிரயபலி சாதிப்பவை
10. இயேசுவும் ஆதாமும் எவ்வாறு ஒத்திருந்தனர்?
10 இயேசுவின் உயிர், பரலோகத்திலிருந்து ஒரு பெண்ணின் கருப்பைக்குள் மாற்றப்பட்டது. இதனால், ஆதாமின் பாவத்தால் கறைபடாத ஒரு பரிபூரண மனிதனாக அவர் பிறந்தார். பூமியில் என்றும் வாழ்வதற்கான வாய்ப்பு அவருக்கு இருந்தது. அதைப்போலவே ஆதாமும் பூமியில் நித்திய ஜீவனை அனுபவிக்கும் எதிர்பார்ப்புடன் ஒரு பரிபூரண மனிதனாக படைக்கப்பட்டான். அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு எழுதுகையில், இந்த இரண்டு மனிதர்களுக்கும் இடையே இருந்த ஒற்றுமை அவருடைய மனதில் இருந்தது: “முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது, பிந்தின ஆதாம் [இயேசு கிறிஸ்து] உயிர்ப்பிக்கிற ஆவியானார். முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த[வர்].”—1 கொரிந்தியர் 15:45, 47.
11. (அ) ஆதாமாலும் இயேசுவாலும் மனிதவர்க்கத்துக்கு சம்பவித்தது என்ன? (ஆ) இயேசுவின் பலியை நாம் எவ்வாறு நோக்க வேண்டும்?
11 இந்த இரண்டு மனிதர்களுக்கு, அதாவது இதுவரை பூமியில் வாழ்ந்தவர்களுள் பரிபூரணமான இரண்டு மனிதர்களுக்கு இடையே இருந்த ஒற்றுமையை பைபிள் வலியுறுத்திக் காட்டுகிறது. ‘ஈடான மீட்கும் பொருளாக எல்லாருக்காகவும் தம்மையே [இயேசு] கொடுத்தார்’ என அது சொல்கிறது. (1 தீமோத்தேயு 2:6) இயேசு யாருக்கு ஈடாக இருந்தார்? பாவம் செய்வதற்கு முன் பரிபூரண நிலையிலிருந்த ஆதாமுக்குத்தானே! முதல் ஆதாமின் பாவம், முழு மனித குடும்பத்தையும் மரணம் எனும் கல்லறைக்கு அழைத்துச் சென்றது. ‘பிந்தின ஆதாமின்’ பலி, பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுவித்து நாம் என்றும் வாழ்வதற்கான அடிப்படையைத் தருகிறது! இயேசுவின் பலி எவ்வளவு மதிப்புமிக்கது! அப்போஸ்தலன் பேதுரு குறிப்பிட்டார்: “நீங்கள் . . . அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்பட[வில்லை].” மாறாக, பேதுரு விளக்கினார்: “குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்க[ள்].”—1 பேதுரு 1:18, 19.
12. மரணத்திற்கு கண்டனம் செய்யப்பட்டிருப்பதை நீக்குவதைப் பற்றி பைபிள் எவ்வாறு விவரிக்கிறது?
12 மரணத்திற்கு கண்டனம் செய்யப்பட்டிருக்கும் மனித குடும்பத்தின் நிலை எவ்வாறு சரி செய்யப்படும் என்பதை பைபிள் மிக அழகாக விவரிக்கிறது. அங்கு இவ்வாறு வாசிக்கிறோம்: “[ஆதாமின்] ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே [மரணத்தில் முடிவடைந்த இயேசுவின் முழு உத்தமத்தன்மையினாலே] எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று. அன்றியும் ஒரே மனுஷனுடைய [ஆதாமுடைய] கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய [இயேசுவுடைய] கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.”—ரோமர் 5:18, 19.
ஒளிமயமான எதிர்காலம்
13. என்றும் வாழ்வதைப் பற்றிய எண்ணமே அநேகருக்கு ஏன் கசக்கிறது?
13 கடவுளின் இந்த ஏற்பாடு நம்மை எவ்வளவாய் மகிழ்விக்க வேண்டும்! ஓர் இரட்சகர் நமக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது உங்களை மெய்சிலிர்க்க வைக்கிறதா? அமெரிக்க மாநகர் ஒன்றில் நடத்தப்பட்ட சுற்றாய்வில், “என்றும் வாழும் வாழ்க்கையை நீங்கள் விரும்புவீர்களா?” என்ற கேள்வி கேட்கப்பட்டது. பதிலளித்தவர்களில் 67.4 சதவீதத்தினர் “இல்லை” என கூறியது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். என்றும் வாழ விருப்பமில்லை என அவர்கள் ஏன் கூறினர்? ஏனென்றால், இன்று பூமியில் வாழ்க்கை ஒரே அக்கப்போராக இருப்பதால்தான். “200 வயதில் பார்க்க எப்படி இருப்பேன் என்ற எண்ணமே எனக்கு சகிக்கவில்லை” என ஒருவர் கூறினார்.
14. என்றும் வாழ்வது ஏன் இன்பமான ஒன்றாக இருக்கும்?
14 என்றபோதிலும், வியாதி, வயோதிபம், மற்ற துயரங்கள் ஆகியவை நிறைந்த உலகில் மக்கள் என்றும் வாழ்வார்கள் என பைபிள் கூறவில்லை. மாறாக, சாத்தானால் உண்டான எல்லா பிரச்சினைகளையும் கடவுளுடைய ராஜ்யத்தின் அரசராகிய இயேசு அடியோடு ஒழித்துவிடுவார். பைபிள் சொல்கிறபடி, கடவுளுடைய ராஜ்யம் இந்த உலகிலுள்ள ஒடுக்கும் ‘ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி நிர்மூலமாக்கும்.’ (தானியேல் 2:44) அந்தச் சமயத்தில், இயேசு தம்மைப் பின்பற்றுவோருக்கு கற்றுக்கொடுத்த ஜெபத்திற்கு பதிலளிக்கும் விதமாக, கடவுளுடைய “சித்தம்” “பரலோகத்தில் செய்யப்படுவதுபோல” பூமியிலும் செய்யப்படும். (மத்தேயு 6:9, 10) இந்தப் பூமியிலிருந்து எல்லா துன்மார்க்கத்தையும் துடைத்தழித்தப் பிறகு, கடவுளுடைய புதிய உலகில் இயேசுவின் மீட்கும் பலியின் நன்மைகள் முழுமையாக பொருத்தப்படும். ஆம், தகுதியுள்ளவர்கள் அனைவரும் பூரண ஆரோக்கியம் அடைவார்கள்!
15, 16. கடவுளுடைய புதிய உலகில் எப்படிப்பட்ட நிலைமைகள் இருக்கும்?
15 பின்வரும் பைபிள் வார்த்தைகள் கடவுளுடைய புதிய உலகில் வாழும் மக்களுக்குப் பொருந்தும்: “இவர்களின் மேனி இளைஞனதைப்போல் ஆகட்டும்; இவர்கள் இளமையின் நாள்களுக்குத் திரும்பட்டும்.” (யோபு 33:25, பொது மொழிபெயர்ப்பு) பைபிள் கொடுக்கும் மற்றொரு வாக்குறுதியும் நிறைவேறும்: “அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம். அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்.”—ஏசாயா 35:5, 6.
16 இதை சற்று சிந்தித்துப் பாருங்கள்! அந்தச் சமயத்தில் நம்முடைய வயது என்னவாக இருந்தாலும்—80, 800 அல்லது இன்னும் அதிக வயதாக இருந்தாலும்—நம் சரீரம் புதுப்பொலிவுடன் ஆரோக்கியமாக இருக்கும்! அது, பைபிள் இவ்வாறு வாக்குறுதி அளிப்பதைப் போல இருக்கும்: “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை.” அந்தச் சமயத்தில் இந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படும்: “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.”—ஏசாயா 33:24; வெளிப்படுத்துதல் 21:3, 4.
17. மக்களை குறித்ததில் கடவுளுடைய புதிய உலகில் என்ன சாதனைகளை நாம் எதிர்பார்க்கலாம்?
17 எல்லையற்ற கற்கும் திறமையுடன் நம்முடைய அற்புதகரமான மூளையைப் படைத்தபோது நம் சிருஷ்டிகர் நோக்கம் கொண்டிருந்ததற்கு இசைவாக நாம் அதை அந்தப் புதிய உலகில் பயன்படுத்த முடியும். நாம் செய்யக்கூடிய அற்புதகரமான காரியங்களை சற்று கற்பனை செய்து பாருங்கள்! நம்மை சுற்றிலும் நாம் காணும் அனைத்தையும் பூமியில் கொட்டிக்கிடக்கும் வளங்களைப் பயன்படுத்தி அபூரண மனிதர்களே தயாரித்தவை—செல்லுலார் ஃபோன்கள், மைக்ரோ ஃபோன்கள், கடிகாரங்கள், பேஜர்கள், கம்ப்யூட்டர்கள், விமானங்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம். இவற்றில் எதுவும் இந்த அண்டத்தின் தொலைதூரத்திலிருந்து கொண்டுவரப்பட்ட பொருட்களால் செய்யப்படவில்லை. வரவிருக்கும் பூமிக்குரிய பரதீஸில் முடிவில்லாத வாழ்க்கை நமக்கு முன்னால் இருக்க, படைப்பு திறனுக்கான எல்லையற்ற வாய்ப்புகள் நமக்கிருக்கும்!—ஏசாயா 65:21-25.
18. கடவுளுடைய புதிய உலகில் ஏன் வாழ்க்கை சலிக்கவே சலிக்காது?
18 வாழ்க்கை சலிப்பூட்டுவதாகவும் இருக்காது. இப்பொழுதேயும்கூட, நாம் பல்லாயிரக்கணக்கான தடவை உணவு அருந்தியிருக்கிறபோதிலும், அடுத்த வேளை உணவை ஆவலோடு எதிர்பார்க்கிறோம். மனித பரிபூரணத்தில் இருக்கையில், பரதீஸிய பூமியின் சுவையான விளைச்சலை நாம் இன்னும் முழுமையாக அனுபவிப்போம். (ஏசாயா 25:6) பூமியிலுள்ள எண்ணற்ற மிருகஜீவன்களை “சீராட்டுவதிலும்,” கதிரவனின் கண்கவர் அஸ்தமனங்களையும் கம்பீரமான மலைகளையும் ஆடிவரும் ஆறுகளையும் பச்சைப் பசேலென்ற சமவெளிகளையும் பார்ப்பதிலும் நாம் நித்திய ஆனந்தத்தை அனுபவிப்போம். உண்மையில், கடவுளுடைய புதிய உலகில் வாழ்க்கை ஒருபோதும் சலிக்கவே சலிக்காது.—சங்கீதம் 145:16.
கடவுளுடைய எதிர்பார்ப்பை பூர்த்திசெய்தல்
19. கடவுளுடைய பரிசாகிய ஜீவனைப் பெற சில தேவைகள் இருக்கின்றன என நாம் நம்புவது ஏன் நியாயமானது?
19 உங்கள் பங்கில் எந்த முயற்சியும் செய்யாமல் அப்படிப்பட்ட ஒரு பரதீஸில் கடவுளுடைய மகத்தான பரிசாகிய நித்திய ஜீவனை பெற நீங்கள் எதிர்பார்ப்பீர்களா? கடவுள் நம்மிடமிருந்து எதையாவது எதிர்பார்ப்பது நியாயமாக இருக்கிறது அல்லவா? ஆம் நிச்சயமாகவே. அந்தப் பரிசை கடவுள் வெறுமனே நம்மிடம் தூக்கி எறிவதில்லை. அவர் அதை நம்மிடம் நீட்டுகிறார், நாம் முன்சென்று அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதில் முயற்சி உட்பட்டிருக்கிறது. அப்படியானால், இளைஞனாகிய அந்தப் பணக்கார அதிபதி இயேசுவிடம் கேட்ட அதே கேள்வியையே நீங்களும் ஒருவேளை கேட்கலாம்: “நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும்”? அல்லது, பிலிப்பியிலிருந்த ஒரு சிறைக்காவலன் அப்போஸ்தலன் பவுலிடம் கேட்டவாறு நீங்கள் கேட்கலாம்: “இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும்”?—மத்தேயு 19:16; அப்போஸ்தலர் 16:30.
20. நித்திய ஜீவனைப் பெற முக்கியமான தேவை என்ன?
20 இயேசு, தம் மரணத்திற்கு முந்தைய இரவு தம் பிதாவிடம் செய்த ஜெபத்தில் இதற்கான ஒரு தேவையைப் பற்றி கூறினார். “ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்.” (யோவான் 17:3) நித்திய ஜீவனை சாத்தியமாக்கிய யெகோவாவையும் நமக்காக மரித்த இயேசு கிறிஸ்துவையும் பற்றிய அறிவை எடுத்துக்கொள்வது நியாயமான தேவைதான் அல்லவா? ஆனால் இத்தகைய அறிவை பெறுவது மட்டுமே போதாது.
21. விசுவாசத்தை காண்பிக்க வேண்டிய தேவையை நாம் பூர்த்திசெய்கிறோம் என்பதை எவ்வாறு காட்டலாம்?
21 பைபிள் சொல்கிறது: “குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான்.” அது மேலும் சொல்கிறது: “குமாரனுக்கு கீழ்ப்படியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும்.” (யோவான் 3:36) உங்களுடைய வாழ்க்கையில் மாற்றம் செய்து, கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக உங்கள் வாழ்க்கையை கொண்டுவருவதன் மூலம் நீங்கள் குமாரனில் விசுவாசம் வைக்கிறீர்கள் என்பதைக் காட்டலாம். நீங்கள் பின்பற்றிவந்த தவறான எந்த வழியையும் தள்ளிவிட்டு, கடவுளுக்குப் பிரியமானதை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்போஸ்தலன் பேதுரு கட்டளையிட்டதை நீங்கள் செய்ய வேண்டும்: “கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் வரும்படிக்கு . . . உங்கள் பாவங்கள் நிவிர்த்தி செய்யப்படும் பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள்.”—அப்போஸ்தலர் 3:19.
22. இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதில் என்ன செயல்கள் உட்பட்டுள்ளன?
22 இயேசுவில் விசுவாசத்தை அப்பியாசிப்பதன் மூலமே நித்திய ஜீவனை அனுபவிக்க முடியும் என்பதை ஒருபோதும் மறக்காதிருப்போமாக. (யோவான் 6:40; 14:6) ‘[இயேசுவின்]’ அடிச்சுவடுகளை நெருக்கமாக பின்பற்றுவதன்’ மூலம் அவரில் விசுவாசம் வைக்கிறோம் என்பதை நாம் காட்டுகிறோம். (1 பேதுரு 2:21, NW) இதைச் செய்வதில் என்ன உட்பட்டுள்ளது? கடவுளிடம் ஜெபம் செய்கையில் இயேசு கூறினார்: “தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன்.” (எபிரெயர் 10:7) கடவுளுடைய சித்தத்தைச் செய்ய ஒப்புக்கொண்ட இயேசுவின் மாதிரியைப் பின்பற்றி உங்களுடைய வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுப்பது இன்றியமையாதது. அதற்கு பிறகு, இயேசுதாமே செய்ததுபோல, அந்த ஒப்புக்கொடுத்தலை தண்ணீர் முழுக்காட்டுதல் மூலம் அடையாளப்படுத்த வேண்டும். (லூக்கா 3:21, 22) இப்படிப்பட்ட நடவடிக்கை எடுப்பது முற்றிலும் நியாயமானதே. “கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது” என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (2 கொரிந்தியர் 5:14, 15) எந்த விதத்தில்? நமக்காக தம்முடைய உயிரையே கொடுப்பதற்கு இயேசுவை அன்பு தூண்டியது. அவரில் விசுவாசம் வைப்பதன்மூலம் இயேசுவுக்கு செவிகொடுக்க அது நம்மை தூண்ட வேண்டும் அல்லவா? ஆம், மற்றவர்களுக்கு உதவ தம்மையே தந்த அவருடைய அன்பான முன்மாதிரியை பின்பற்றுவதற்கு நம்மை தூண்ட வேண்டும். கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்கே கிறிஸ்து வாழ்ந்தார்; அதைப் போலவே நாமும் செய்ய வேண்டும், இனிமேலும் நமக்காக வாழக்கூடாது.
23. (அ) ஜீவனை பெறுகிறவர்கள் எதில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்? (ஆ) கிறிஸ்தவ சபையில் இருப்பவர்களிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறது?
23 அத்தோடு எல்லாம் முடிந்துவிடுவதில்லை. பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே நாளில் 3,000 பேர் முழுக்காட்டுதல் பெற்றபோது அவர்கள் “சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.” எதில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்? “அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும் . . . உறுதியாய்த் தரித்திருந்தார்கள்” என லூக்கா விளக்குகிறார். (அப்போஸ்தலர் 2:41, 42) ஆம், பைபிள் படிப்பிற்காகவும் கூட்டுறவிற்காகவும் அவர்கள் ஒன்றுகூடி இவ்வாறு கிறிஸ்தவ சபையில் அல்லது அதன் பாகமாக சேர்க்கப்பட்டனர். ஆவிக்குரிய போதனையை பெறுவதற்கு ஆரம்பகால கிறிஸ்தவர்கள் கூட்டங்களுக்கு தவறாமல் ஆஜரானார்கள். (எபிரெயர் 10:25) யெகோவாவின் சாட்சிகள் அதையே இன்றும் செய்கிறார்கள், அவர்களுடன் இந்தக் கூட்டங்களில் கலந்துகொள்ளும்படி உங்களையும் அழைக்கிறார்கள்.
24. ‘உண்மையான ஜீவன்’ என்றால் என்ன, எப்படி, எப்பொழுது அது நிறைவேறும்?
24 ஜீவனுக்கு வழிநடத்தும் இந்தக் குறுகலான பாதையில் இன்று லட்சக்கணக்கானோர் செல்கின்றனர். இந்தக் குறுகலான பாதையில் தொடர்ந்து செல்வதற்கு முயற்சி தேவை! (மத்தேயு 7:13, 14) பவுல் தன்னுடைய கனிவான வேண்டுகோளில் இதைச் சுட்டிக்காண்பித்தார்: “விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்.” ‘உண்மையான ஜீவனைப் பற்றிக்கொள்ள’ இந்தப் போராட்டம் தேவை. (1 தீமோத்தேயு 6:12, 19, NW) அந்த ஜீவன், ஆதாமுடைய பாவத்தால் நமக்கு வந்த துன்பங்களும் துயரங்களும் வேதனைகளும் நிறைந்த இந்த வாழ்க்கை அல்ல. மாறாக, இந்தக் காரிய ஒழுங்குமுறை அழிக்கப்பட்ட பிறகு, யெகோவா தேவனிலும் அவருடைய குமாரனிலும் அன்புகூருகிறவர்களிடத்தில் கிறிஸ்துவின் கிரய பலி பொருத்தப்படுகையில் நிஜமாகப்போகும் கடவுளுடைய புதிய உலகில் வாழ்க்கையே அது. கடவுளுடைய மகத்தான புதிய உலகில் நாம் அனைவரும் ‘உண்மையான ஜீவனாகிய’ நித்திய ஜீவனை தெரிந்தெடுப்போமாக.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ ஆதியாகமம் 3:15-ல் சொல்லப்பட்டுள்ள சர்ப்பம், ஸ்திரீ, வித்து யார்?
◻ எந்த விதத்தில் ஆதாமுக்கு இயேசு ஒத்திருந்தார், கிரயபலி எதை சாத்தியமாக்கியது?
◻ கடவுளுடைய புதிய உலகை நீங்கள் அனுபவித்து மகிழத்தக்கதாக்கும் எந்த அம்சத்தை எதிர்பார்க்கலாம்?
◻ கடவுளுடைய புதிய உலகில் வாழ்வதற்கு நீங்கள் பூர்த்திசெய்ய வேண்டிய தேவைகள் என்ன?
[பக்கம் 10-ன் படம்]
வாலிபருக்கும் வயோதிபருக்கும் முடிவில்லா வாழ்க்கைக்கு இயேசுவே ஒரே வழி
[பக்கம் 11-ன் படம்]
கடவுளுடைய தகுந்த நேரத்தில், வயோதிபர் வாலிபத்திற்கு திரும்புவார்கள்