ஆவிக்குரிய பலவீனத்தைக் கண்டுணர்ந்து களைவது எப்படி?
ட்ராய் பட்டணத்திற்கு எதிராக நடந்த ட்ரோஜன் போரில், கிரேக்க போர்வீரர்களில் ஆக்கிலஸ் என்பவரே படுதைரியசாலி என சொல்கிறது கிரேக்க புராணக்கதை. ஆக்கிலஸ் குழந்தையாக இருந்தபோது, அவருடைய தாயார் அவரை ஸ்டிக்ஸ் நதியில் முழுக்கியெடுத்தார். இதனால், அவருடைய தாயார் அவரைப் பிடித்திருந்த இடத்தைத் தவிர வேறு இடத்தை காயப்படுத்த முடியாதபடி செய்தார் என புராணக்கதை சொல்கிறது. இவ்வாறு, ஆக்கிலஸின் குதிகால் என்பது வழக்கச்சொல்லாயிற்று. ட்ராய் அரசன் ப்ரியமினுடைய குமாரனாகிய பாரிஸ் எய்த அம்பு குறிதவறாமல் குதிகால்மீதே தாக்கி ஆக்கிலஸை கொன்றது.
கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் போர்வீரர்கள்; இவர்கள் ஆவிக்குரிய போரில் ஈடுபட்டிருக்கிறார்கள். (2 தீமோத்தேயு 2:3) “மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு” என விளக்குகிறார் அப்போஸ்தலன் பவுல். ஆம், வேறு யாருமல்ல, பிசாசாகிய சாத்தானும் பேய்களுமே நம்முடைய எதிரிகள்.—எபேசியர் 6:12.
“யுத்தத்தில் வல்லவர்” என்று விவரிக்கப்பட்டிருக்கும் யெகோவா தேவனிடமிருந்து நமக்கு உதவி கிடைக்காதிருந்தால், இது சாத்தானுடைய கை ஓங்கிய போராகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. (யாத்திராகமம் 15:3) நம்முடைய கொடிய பகைவர்களிடமிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள ஆவிக்குரிய சர்வாயுதவர்க்கம் நமக்குக் கொடுக்கப்படுகிறது. இதன் நிமித்தமே அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு ஊக்குவித்தார்: “நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.”—எபேசியர் 6:11.
யெகோவா தேவன் அருளிய ஆயுதங்கள் மிகச் சிறந்த தரமுடையவை; எந்தவித ஆவிக்குரிய தாக்குதல்களையும் தாங்கவல்ல ஆற்றலுடையவை. பவுல் குறிப்பிடும் ஆயுதங்களின் பட்டியலை சற்று பார்வையிடுங்கள்: சத்தியம் என்னும் அரைக்கச்சை, நீதி என்னும் மார்க்கவசம், நற்செய்திக்குரிய பாதரட்சை, விசுவாசம் என்னும் பெரிய கேடகம், இரட்சணியம் என்னும் தலைச்சீரா, ஆவியின் பட்டயம். இதைவிட சிறந்த வேறெந்த படைக்கலனை ஒருவன் எதிர்பார்க்க முடியும்? இத்தகைய போர்க்கவசம் பூண்ட கிறிஸ்தவ போர்வீரன் வெல்லமுடியாத சூழ்நிலையிலும் வெற்றிவீரனாக வெளிவரமுடியும்.—எபே. 6:13-17.
யெகோவா அருளும் போர்க்கவசம், மிகச் சிறந்த தரமானதாகவும் பாதுகாப்புக்குரிய மூலாதாரமாகவும் நமக்கு இருக்கிறபோதிலும் நாம் கவலையீனமாக இருந்துவிடக்கூடாது. யாருமே வெல்ல முடியாது என தோன்றிய ஆக்கிலஸை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். அவருக்கு இருந்ததைப் போலவே நமக்கும்கூட ஒரு பலவீனம்—ஆக்கிலஸின் குதிகால்—இருக்கலாம் அல்லவா? எதிர்பாராமல் நாம் தாக்கப்பட்டால், அது நம்முடைய உயிருக்கே உலை வைக்கலாம்.
உங்களுடைய ஆவிக்குரிய கவசத்தை பரிசோதியுங்கள்
ஒலிம்பிக் பனிச்சறுக்கு விளையாட்டில் இருமுறை தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றவரும் மிக திடகாத்திரமானவராய் இருந்தவருமான ஒருவர், பயிற்சியின்போது திடீரென விழுந்து செத்தார். அதற்கு சிலகாலத்திற்குப் பிறகு, த நியூ யார்க் டைம்ஸில் வருத்தகரமான ஒரு செய்தி அறிவிக்கப்பட்டது: “மாரடைப்பு ஏற்பட்ட 6,00,000 அமெரிக்கர்களில் பாதிப்பேருக்கு முன்னறிகுறிகள் ஏதுமில்லை.” நம்முடைய உடல்நிலையைப் பற்றி நாம் எப்படி நினைக்கிறோம் என்பதை வைத்து அதை தீர்மானிக்க முடியாது என்பது தெளிவாயுள்ளது.
நம்முடைய ஆவிக்குரிய ஆரோக்கியத்தை குறித்ததிலும் இதுவே உண்மை. பைபிளின் அறிவுரை: “தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.” (1 கொரிந்தியர் 10:12) நம் ஆவிக்குரிய கவசம் மிகச் சிறந்ததாக இருக்கிறபோதிலும், பலவீனம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் நாம் பாவத்தில் பிறந்திருக்கிறோம். கடவுளுடைய சித்தத்தைச் செய்ய வேண்டுமென்ற நம் தீர்மானத்தை நம்முடைய அபூரண இயல்பு எளிதில் அடக்கி ஆட்கொள்ளக்கூடும். (சங்கீதம் 51:5) நமக்கு நல்லெண்ணம் இருந்தாலும், வஞ்சிக்கும் நம் இதயம் நம்மை ஏமாற்றிவிடலாம். இதனால், நம் பலவீனத்திற்குக் கவனம் செலுத்தாமல் எல்லாம் சரியாகத்தான் உள்ளது என நினைத்து நம்மைநாமே எளிதில் வஞ்சித்துக்கொள்வோம்.—எரேமியா 17:9; ரோமர் 7:21-23.
மேலும், எது சரி, எது தவறு என்பதை குறித்ததில் குழப்பமிக்க ஓர் உலகில் நாம் வாழ்கிறோம். சரியா தவறா என்பது அவரவர் ரசனைக்கேற்ப தீர்மானிக்கப்படலாம். இந்த வகையான சிந்தனையே விளம்பரங்களிலும் பிரபல பொழுதுபோக்கிலும் தொலைக்காட்சியிலும் முன்னேற்றுவிக்கப்படுகிறது. கவனமாக இராவிட்டால், நம்முடைய சிந்தனையை மாற்றி ஆவிக்குரிய கவசத்தைப் பலவீனப்படுத்தலாம் என்பது தெளிவாக இருக்கிறது.
இத்தகைய ஆபத்தான நிலைமைக்குள் வீழ்ந்துவிடாதிருக்க பைபிளின் இந்த அறிவுரைக்கு நாம் செவிகொடுக்க வேண்டும்: “நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்; உங்களை நீங்களே பரீட்சித்துப் பாருங்கள்.” (2 கொரிந்தியர் 13:5) இப்படி செய்தால், பகைவர்கள் நம் பலவீனங்களைக் கண்டுபிடித்து நம்மை தாக்குவதற்கு முன்பு அவற்றை சரிப்படுத்திக்கொள்ள முடியும். எனினும், இத்தகைய பரிசோதனையை நாம் எப்படி செய்வது? இந்தச் சுயபரிசோதனையில் நாம் கவனிக்க வேண்டிய சில அறிகுறிகள் யாவை?
அறிகுறிகளைக் கண்டுணர்தல்
நம்முடைய தனிப்பட்ட படிப்பு பழக்கங்களில் மந்தமாவது ஆவிக்குரிய பலவீனத்தை காட்டும் ஒரு பொது அறிகுறி. இன்னும் அதிகம் படிக்க வேண்டும் என சிலர் ஆசைப்படுகின்றனர், ஆனால் எப்படியோ நேரம் கிடைக்காமல் போய்விடுகிறது என்பதாக உணரலாம். இன்றைய பிஸி வாழ்க்கையில், இத்தகைய மோசமான நிலைமைக்குள் வீழ்வது எளிதே. ஆனால் இதிலும் மோசமான விஷயம் என்னவென்றால், தங்களால் முடிந்தபோதெல்லாம் பைபிளை வாசிக்க முடிகிறது, கிறிஸ்தவ கூட்டங்களுக்கு சிலநேரம் செல்ல முடிகிறது, அதனால் தாங்கள் ஒன்றும் அவ்வளவு மோசம் இல்லை என விளக்கம் கொடுப்பதே.
இத்தகைய நினைப்பே தன்னைத்தானே வஞ்சித்துக்கொள்ளும் ஒரு வகை. தான் நிம்மதியாக உட்கார்ந்து சாப்பிட முடியாத அளவுக்கு தலைக்கு மேல் வேலை இருக்கிறது, அதனால் அவ்வப்போது ஒருவாய் போட்டுக்கொள்வதாக நினைக்கிற மனுஷனைப் போல இது இருக்கிறது. வாஸ்தவம்தான், அவன் பட்டினி கிடப்பதில்லை. ஆனால் இப்பவோ அப்பவோ அவனுக்கு ஏதாவது சீக்கு வரலாம். அதுபோலவே, சத்துள்ள ஆவிக்குரிய உணவை தவறாமல் உட்கொள்ளாவிடில், நம்முடைய ஆவிக்குரிய கவசத்தில் விரைவில் ஓட்டைகள் விழலாம். உலகியல் சார்ந்த பிரச்சாரங்களும் மனப்பான்மைகளும் நம்மை சதா தாக்கிக்கொண்டே இருப்பதால், உயிரை ஆபத்திற்குள்ளாக்கும் சாத்தானின் தாக்குதல்களுக்கு நாம் எளிதில் பலியாகிவிடலாம்.
ஆவிக்குரிய பலவீனத்தின் மற்றொரு அறிகுறி, நம்முடைய ஆவிக்குரிய போரின் அவசரத்தன்மையை உணராமல் இருப்பதாகும். சமாதான காலத்தில், ஒரு போர்வீரன் சாவகாசமாக இருக்கலாம், போரின் அபாயத்தை அவன் உணருவதில்லை. ஆகையால், ஆயத்தமாக இருக்க வேண்டிய உணர்வில்லாமல் இருக்கலாம். போருக்குச் செல்லும்படி திடீரென அழைக்கப்பட்டால், ஒருவேளை தயாராக இரான். ஆவிக்குரிய விஷயத்திலும் இதுவே உண்மை. அவசர உணர்வை நாம் நழுவவிட்டால், எய்யப்படும் ஏவுகணையின் தாக்குதலை தடுத்து விலக்க ஆயத்தமில்லாமல் போய்விடலாம்.
எனினும், இந்த நிலைக்குள் வீழ்ந்துவிட்டோம் என்று நாம் எப்படி சொல்ல முடியும்? உண்மை நிலையை வெளிப்படுத்தும் கேள்விகள் சிலவற்றை நம்மை நாமே கேட்டுக்கொள்ளலாம்: பிக்னிக் போவதற்கு இருக்கும் ஆசை ஊழியத்திற்கு போவதற்கும் இருக்கிறதா? ஷாப்பிங் செல்வதற்கு அல்லது டெலிவிஷன் பார்ப்பதற்கு நேரம் செலவிட மனமுள்ளவனாக[ளாக] இருக்கிறதுபோல், கூட்டங்களுக்காகத் தயாரிப்பதற்கு நேரம் செலவிட மனமுள்ளவனாக[ளாக] இருக்கிறேனா? கிறிஸ்தவனாக[ளாக] மாறியபோது விட்டுவிட்ட பழக்கங்களை மீண்டும் தொடரும் எண்ணம் எனக்கு இருக்கிறதா? மற்றவர்கள் சொகுசான வாழ்க்கை நடத்துவதைக் கண்டு நான் பொறாமைப்படுகிறேனா? இவை சிந்திக்க வைக்கும் கேள்விகள், ஆனால் நம்முடைய ஆவிக்குரிய கவசத்தில் ஏதாவது உடைசல் இருந்தால் அவற்றை கண்டுபிடிக்க உறுதுணை புரிகின்றன.
நமக்கு இருக்கும் பாதுகாப்பான கவசம் ஆவிக்குரிய ஒன்று. அதனால் கடவுளுடைய ஆவி நம் வாழ்க்கையில் தடையின்றி தாராளமாக செயல்பட வேண்டும். இது, நம்முடைய எல்லா செயல்களிலும் கடவுளுடைய ஆவியின் கனிகளை எந்தளவுக்கு வெளிப்படுத்துகிறோம் என்பதால் புலப்படுகிறது. உங்களுக்குப் பிரியமில்லாத ஒன்றை மற்றவர்கள் செய்கையிலோ சொல்கையிலோ நீங்கள் சட்டென்று எரிச்சலடைகிறீர்களா அல்லது மன அமைதி இழந்துவிடுகிறீர்களா? அறிவுரையை ஏற்றுக்கொள்ள கஷ்டமாக இருக்கிறதா, அல்லது மற்றவர்கள் எதற்கெடுத்தாலும் உங்கள்மீது குற்றம் கண்டுபிடிப்பதாக உணருகிறீர்களா? மற்றவர்களுடைய ஆசீர்வாதங்களை அல்லது சாதனைகளை கண்டு நீங்கள் பொறாமைப்படுகிறீர்களா? மற்றவர்களோடு, முக்கியமாய் உங்களுக்குச் சமமானவரோடு ஒத்துப்போவதை கடினமாக காண்கிறீர்களா? நேர்மையுடன் நம்மைநாமே எடைபோட்டு பார்ப்பது நம்முடைய வாழ்க்கை கடவுளுடைய ஆவியின் கனிகளால் நிரம்பியிருக்கிறதா அல்லது மாம்சத்தின் கிரியைகளால் நிரம்பியிருக்கிறதா என்பதை காண நமக்கு உதவும்.—கலாத்தியர் 5:22-26; எபேசியர் 4:22-27.
ஆவிக்குரிய பலவீனத்தை மேற்கொள்ள உறுதியான நடவடிக்கைகள்
ஆவிக்குரிய பலவீனத்தின் அறிகுறிகளைக் கண்டறிவது ஒரு விஷயம், அவற்றை எதிர்ப்பட்டு திருத்துவதற்கு நடவடிக்கைகள் எடுப்பது முற்றிலும் வேறொரு விஷயம். பிரச்சினைக்கு ஏதாவது சாக்குப்போக்கு சொல்லவோ அதை நியாயப்படுத்தவோ குறைத்துக்காட்டவோ அல்லது அப்படி எதுவுமே நடக்கவில்லை என மறுக்கவோ பலர் மனம் சாய்வது வருந்தத்தக்கதே. அது எவ்வளவு ஆபத்தானது—அறைகுறையான கவசத்தை அணிந்துகொண்டு போருக்குச் செல்வதைப்போல் இருக்கிறது! இத்தகைய ஒரு போக்கு, சாத்தானின் தாக்குதலுக்கு நம்மை எளிதில் பலியாக்குகிறது. மாறாக, நாம் கவனிக்கும் எந்தக் குறைபாடுகளையும் திருத்துவதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும், அதுவும் உடனடியாக எடுக்கவேண்டும். என்ன செய்யலாம்?—ரோமர் 8:13; யாக்கோபு 1:22-25.
கிறிஸ்தவ மனதையும் இதயத்தையும் அடக்கியாளும் ஓர் ஆவிக்குரிய போரில் நாம் ஈடுபட்டிருப்பதால், நம்முடைய திறமைகளைப் பாதுகாப்பதற்கு நம்மால் இயன்ற எல்லாவற்றையும் செய்ய வேண்டும். நம் ஆவிக்குரிய ஆயுதங்களில், இருதயத்தைப் பாதுகாக்கிற ‘நீதியென்னும் மார்க்கவசமும்,’ நம் மனதைப் பாதுகாக்கிற, ‘இரட்சணியமென்னும் தலைச்சீராவும்’ இருக்கின்றன என்பதை மறந்துவிடாதீர்கள். இவற்றை திறம்பட பயன்படுத்தக் கற்றுக்கொள்வதிலேயே நம் வெற்றி தோல்வி சார்ந்திருக்கலாம்.—எபேசியர் 6:14-17; நீதிமொழிகள் 4:23; ரோமர் 12:2.
“நீதியென்னும் மார்க்கவசத்தை” சரியான முறையில் அணிந்துகொள்வதற்கு, நாம் நீதியை விரும்பி அக்கிரமத்தை வெறுக்கிறோமா என இடைவிடாமல் கவனித்துப் பார்ப்பது அவசியம். (சங்கீதம் 45:7; 97:10; ஆமோஸ் 5:15) உலக தராதரங்களுக்கு இணையாக நம்முடைய தராதரங்களும் மட்டமாக சென்றுவிட்டனவா? ஒருகாலத்தில் எட்டிக்காயாக தோன்றிய பொழுதுபோக்குகள்—அவை நிஜ வாழ்க்கையிலோ டெலிவிஷனிலோ திரைப்படங்களிலோ புத்தகங்களிலோ பத்திரிகைகளிலோ சித்தரிக்கப்படுபவையாக இருந்தாலும்சரி—இப்போது பலாச்சுளையாக இனிக்கின்றனவா? நாம் நீதியை விரும்புவோமாகில், மக்கள் பாராட்டும் சுதந்திரமும் உலக அறிவும் உண்மையில் மறைமுகமான ஒழுக்கக்கேடே என்பதை காண அது நமக்கு உதவிசெய்யும்.—ரோமர் 13:13, 14; தீத்து 2:12.
“இரட்சணியமென்னும் தலைச்சீராவை” அணிந்துகொள்வது, அற்புதமான எதிர்கால ஆசீர்வாதங்களை மனதில் தெளிவாக வைத்து, இந்த உலகத்தின் மினுமினுப்பாலும் கவர்ச்சியாலும் நெறிதவற நம்மை அனுமதியாமல் இருப்பதை உட்படுத்துகிறது. (எபிரெயர் 12:2, 3; 1 யோவான் 2:16) இந்த மனப்பான்மை பொருளாதார இலாபத்திற்கு அல்லது சொந்த அனுகூலத்திற்கு மேலாக ஆவிக்குரிய அக்கறைகளை முதலில் வைக்க நமக்கு உதவும். (மத்தேயு 6:33) ஆகவே, கவசத்தை சரியாக அணிந்திருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள நம்மைநாமே இவ்வாறு நேர்மையாக கேட்டுக்கொள்ள வேண்டும்: வாழ்க்கையில் நான் எதை நாடித்தேடுகிறேன்? எனக்கு திட்டவட்டமான ஆவிக்குரிய இலக்குகள் இருக்கின்றனவா? அவற்றை அடைய நான் என்ன செய்கிறேன்? அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களில் மீதிபேராக இருந்தாலும்சரி, பேரெண்ணிக்கையான ‘திரள் கூட்டத்தாராக’ இருந்தாலும்சரி, பவுலின் மாதிரியை நாம் பின்பற்ற வேண்டும். அவர் சொன்னார்: “அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, . . . இலக்கை நோக்கித் தொடருகிறேன்.”—வெளிப்படுத்துதல் 7:9; பிலிப்பியர் 3:13, 14.
நம்முடைய ஆவிக்குரிய கவசத்தைப் பற்றிய பவுலின் விவரிப்பு இந்த அறிவுரையோடு முடிகிறது: “எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்.” (எபேசியர் 6:18) இது, ஆவிக்குரிய எந்த பலவீனத்தையும் மேற்கொள்ளவோ தடுக்கவோ இருக்கும் நம்பகமான இரண்டு படிகளைக் குறிப்பிடுகிறது: யெகோவாவுடன் நல்ல உறவை வளர்த்துக்கொள்ளுங்கள், உடன் கிறிஸ்தவர்களுடன் நெருங்கிய பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
“சகல விதமான” வேண்டுதல்களோடும் (நம்முடைய பாவங்களை அறிக்கையிடுதல், மன்னிப்புக்காக வேண்டுதல், வழிநடத்துதலுக்காக விண்ணப்பித்தல், ஆசீர்வாதங்களுக்காக நன்றி செலுத்துதல், இருதயப்பூர்வ துதிகள் ஆகியவற்றோடு) “எந்தச் சமயத்திலும்” (பலர் முன்னும், ஒதுக்கிலும், தனிமையிலும், இயல்பாகவும்) யெகோவாவிடம் திரும்பும் பழக்கம் நமக்கு இருக்கையில், அவரிடம் நெருங்கி வருகிறோம். அதுவே நமக்குக் கிடைக்கக்கூடிய மிகப் பெரிய பாதுகாப்பு.—ரோமர் 8:31; யாக்கோபு 4:7, 8.
“சகல பரிசுத்தவான்களுக்காகவும்,” அதாவது நம்முடைய உடன் கிறிஸ்தவர்களுக்காகவும் ஜெபிக்கும்படி அறிவுரை கூறப்படுகிறோம். துன்புறுத்துதலையோ இக்கட்டுகளையோ அனுபவிக்கிற தூர தேசங்களிலுள்ள நம்முடைய ஆவிக்குரிய சகோதரர்களை நாம் ஜெபங்களில் நினைவுகூரலாம். ஆனால், தினமும் நம்மோடு சேர்ந்து வேலைசெய்யும் கிறிஸ்தவர்களைப் பற்றியதென்ன? இயேசு தம்முடைய சீஷர்களுக்காக ஜெபித்ததுபோல், அவர்களுக்காகவும் ஜெபிப்பது தகுந்தது. (யோவான் 17:9; யாக்கோபு 5:16) அத்தகைய ஜெபங்கள் நம்மை நெருங்கிவரச் செய்து, “பொல்லாங்கனின்” தாக்குதல்களை எதிர்த்து நிற்கும்படி நம்மை பலப்படுத்தும்.—2 தெசலோனிக்கேயர் 3:1-3, NW.
முடிவாக, அப்போஸ்தலன் பேதுருவின் இந்த அன்பான அறிவுரையை உறுதியாக மனதில் வையுங்கள்: “எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்.” (1 பேதுரு 4:7, 8) மற்றவர்களுடைய மற்றும் நம்முடைய அபூரணங்கள், நம்முடைய இதயங்களிலும் மனங்களிலும் நுழைந்து முட்டுக்கட்டைகளாக அல்லது இடையூறுகளாக ஆகும்படி விடுவது வெகு எளிது. இந்த பலவீனத்தை சாத்தான் நன்றாக அறிந்திருக்கிறான். “ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்” என்ற பழமொழிக்கு ஏற்ப பிரிவினையை உண்டாக்கி வெல்வது அவனுடைய வஞ்சக சூழ்ச்சிகளில் ஒன்று. ஆகையால், ஊக்கமான அன்பால் அத்தகைய பாவங்களை உடனடியாக மூடிப்போட்டு நாம் ‘பிசாசுக்கு இடங்கொடாமல்’ இருக்க வேண்டும்.—எபேசியர் 4:25-27.
இப்போது ஆவிக்குரிய விதத்தில் பலமாக வைத்துக்கொள்ளுங்கள்
உங்கள் தலைமுடி கலைந்திருப்பதை அல்லது உங்கள் டை கோணலாக இருப்பதை நீங்கள் கவனிக்கையில் என்ன செய்கிறீர்கள்? கூடிய விரைவில் அவற்றை பெரும்பாலும் சரிசெய்வீர்கள். இத்தகைய தாறுமாறான தோற்றங்கள் அவ்வளவு முக்கியமானவையல்ல என நினைத்து அப்படியே விட்டுவிடுவோர் வெகு சிலரே. ஆவிக்குரிய பலவீனங்களைக் குறித்ததிலும் அவ்வாறே விரைவாக செயல்படுவோமாக. அலங்கோலங்கள் ஆட்களின் கண்டன பார்வையை வரவழைக்கலாம், ஆனால், திருத்தப்படாமல் விடப்படுகிற ஆவிக்குரிய குறைபாடுகள் யெகோவா கண்டனம் செய்வதில் விளைவடையலாம்.—1 சாமுவேல் 16:7.
ஆவிக்குரிய எந்த பலவீனத்தையும் அடியோடு அகற்றி, ஆவிக்குரியபிரகாரம் பலமாய் வைத்துக்கொள்ள நமக்கு தேவையான எல்லாவற்றையும் யெகோவா அன்புடன் அளித்திருக்கிறார். நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை கிறிஸ்தவக் கூட்டங்கள், பைபிள் பிரசுரங்கள், அக்கறைகாட்டும் முதிர்ச்சியுள்ள உடன் கிறிஸ்தவர்கள் மூலம் இடைவிடாமல் நினைப்பூட்டுகிறார், ஆலோசனைகளையும் வழங்குகிறார். நம் பங்கில் அவற்றை ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையில் பொருத்திப் பயன்படுத்த வேண்டும். இதற்கு முயற்சியும் சுயகட்டுப்பாடும் தேவை. ஆனால், அப்போஸ்தலன் பவுல் நேர்மையுடன் சொன்னதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்: “நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன். மற்றவர்களுக்குப் பிரசங்கிக்கும் நானே ஆகாதவனாய்த் தள்ளப்படாதபடி என் சரீரத்தை ஒடுக்கி அடிமையாக்கிக்கொள்ளுகிறேன்.”—1 கொரிந்தியர் 9:26, 27, தி.மொ.
விழிப்புள்ளோராக இருங்கள், ஆவிக்குரிய “ஆக்கிலஸின் குதிகால்” ஏற்பட ஒருபோதும் அனுமதியாதீர்கள். மாறாக, நம்முடைய ஆவிக்குரிய எந்த பலவீனத்தையும் கண்டுணர்ந்து, அதை களைந்துபோடுவதற்கு தேவைப்படுவதை இப்போது நாம் மனத்தாழ்மையுடனும் தைரியத்துடனும் செய்வோமாக.
[பக்கம் 19-ன் சிறு குறிப்பு]
“நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்; உங்களை நீங்களே பரீட்சித்துப் பாருங்கள்.”—2 கொரிந்தியர் 13:5.
[பக்கம் 21-ன் சிறு குறிப்பு]
“ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்.”—1 பேதுரு 4:7, 8.
[பக்கம் 20-ன் பெட்டி/படம்]
உங்களைக் கேட்டுக்கொள்ளுங்கள்
◆ ஷாப்பிங் செல்வதற்கு அல்லது டெலிவிஷன் பார்ப்பதற்கு நேரம் செலவிட மனமுள்ளவனாக[ளாக] இருக்கிறதுபோல், கூட்டங்களுக்காகத் தயாரிப்பதற்கு நேரம் செலவிட மனமுள்ளவனாக[ளாக] இருக்கிறேனா?
◆ மற்றவர்களது சொகுசான வாழ்க்கையை கண்டு நான் பொறாமைப்படுகிறேனா?
◆ பிரியமில்லாத ஒன்றை மற்றவர்கள் செய்கையிலோ சொல்லுகையிலோ நான் சட்டென்று எரிச்சலடைகிறேனா அல்லது மன அமைதி இழந்துவிடுகிறேனா?
◆ அறிவுரையை ஏற்றுக்கொள்ள கஷ்டமாக இருக்கிறதா, அல்லது மற்றவர்கள் எதற்கெடுத்தாலும் என்மீது குற்றம் கண்டுபிடிப்பதாக உணருகிறேனா?
◆ மற்றவர்களோடு ஒத்துப்போவதை கடினமாக காண்கிறேனா?
◆ உலக தராதரங்களுக்கு இணையாக என்னுடைய தராதரங்களும் மட்டமாக சென்றுவிட்டனவா?
◆ திட்டவட்டமான ஆவிக்குரிய இலக்குகள் எனக்கு இருக்கின்றனவா?
◆ ஆவிக்குரிய இலக்குகளை அடைய நான் என்ன செய்கிறேன்?
[பக்கம் 18-ன் படத்திற்கான நன்றி]
ஆக்கிலஸ்: From the book Great Men and Famous Women; ரோம படைவீரர்கள் மற்றும் பக்கம் 21: Historic Costume in Pictures/Dover Publications, Inc., New York