யெகோவா தமது வழியை காண்பிப்பதற்காக சந்தோஷப்படுங்கள்
“கடவுளுடைய வழி பரிபூரணமானது; யெகோவாவின் வசனம் புடமிடப்பட்டது.”—2 சாமுவேல் 22:31, NW.
1, 2. (அ) எல்லா மனிதருக்கும் வேண்டிய அடிப்படை தேவை என்ன? (ஆ) யாருடைய முன்மாதிரியை பின்பற்ற வேண்டும்?
வழிநடத்துதல்—இது எல்லா மனிதருக்கும் வேண்டிய ஓர் அடிப்படை தேவை. உண்மையில், நம் வாழ்வை செவ்வனே வழிநடத்த நமக்கு உதவி தேவை. உண்மைதான், எது சரி எது தவறு என்பதை பகுத்துணர நமக்கு ஓரளவு புத்திக்கூர்மையையும் மனசாட்சியையும் யெகோவா வழங்கியிருக்கிறார். ஆனால் நம்முடைய மனசாட்சி நம்பகமான வழிகாட்டியாக இருக்க வேண்டுமாகில், அதை பயிற்றுவிக்க வேண்டும். (எபிரெயர் 5:14) நல்ல தீர்மானமெடுக்க வேண்டுமாகில், நம்முடைய மனதுக்கு சரியான தகவலும்—அத்தகவலை சீர்தூக்கிப் பார்க்க பயிற்றுவிப்பும்—தேவை. (நீதிமொழிகள் 2:1-5) அப்படியிருந்தபோதிலும், வாழ்க்கையே அநிச்சயமாக இருப்பதால், நாம் ஆசைப்பட்டபடியெல்லாம் நடக்காமல் நம் தீர்மானங்கள் தோல்வியுறலாம். (பிரசங்கி 9:11, NW) என்ன எதிர்காலம் என்பதை அறிய நம்மிடம் நம்பகமான வழிகாட்டி இல்லை.
2 இந்தக் காரணங்களாலும் வேறுபல காரணங்களாலும், தீர்க்கதரிசியாகிய எரேமியா இவ்வாறு எழுதினார்: “கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்.” (எரேமியா 10:23) இதுவரை வாழ்ந்தவர்களிலேயே மிகப் பெரிய மனிதராகிய இயேசு கிறிஸ்து, வழிநடத்துதலை ஏற்றுக்கொண்டார். அவர் சொன்னார்: “பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்.” (யோவான் 5:19) அப்படியானால், நம்முடைய வழிகளை நடத்துவதற்கு இயேசுவை பின்பற்றுவதும் யெகோவாவை நோக்கியிருப்பதும் எவ்வளவு ஞானமானது! தாவீது ராஜா இவ்வாறு பாடினார்: “கடவுளுடைய வழி பரிபூரணமானது; யெகோவாவின் வசனம் புடமிடப்பட்டது. அவரை புகலிடமாக நாடும் அனைவருக்கும் கேடகமாயிருக்கிறார்.” (2 சாமுவேல் 22:31, NW) நம்முடைய சொந்த ஞானத்தில் நடப்பதற்குப் பதில் யெகோவாவின் வழியில் நடக்க முயன்றால், பரிபூரண வழிநடத்துதல் நமக்குக் கிடைக்கும். கடவுளின் வழியை தள்ளிவிடுவது நம்மை பேராபத்தில் தள்ளிவிடும்.
யெகோவா வழி காட்டுகிறார்
3. ஆதாம் ஏவாளை யெகோவா எவ்வாறு வழிநடத்தினார், என்ன எதிர்பார்ப்பை அவர்களுக்கு கொடுத்தார்?
3 ஆதாம் ஏவாளின் விஷயத்தை சற்று கவனித்துப் பாருங்கள். அவர்கள் பாவமில்லாதவர்களாய் இருந்தபோதிலும், அவர்களுக்கு வழிநடத்துதல் தேவைப்பட்டது. எழில்மிகு ஏதேன் தோட்டத்தில் ஆதாம் தன் இஷ்டம்போல் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும் என்று யெகோவா அவனை விட்டுவிடவில்லை. மாறாக, அவன் என்னென்ன வேலை செய்ய வேண்டும் என்று கடவுளே திட்டமிட்டார். முதலாவதாக, விலங்குகளுக்கு ஆதாம் பெயரிட வேண்டியிருந்தது. பின்பு, நீண்ட நாளைய இலக்குகளையும் ஆதாம் ஏவாளுக்கு யெகோவா கொடுத்தார். அவர்கள் பூமியைக் கீழ்ப்படுத்தி, அதை தங்களுடைய சந்ததியாரால் நிரப்பி, அதோடு விலங்கினங்களை கவனித்துக்கொள்ள வேண்டியிருந்தது. (ஆதியாகமம் 1:28) இது ஓர் இமாலய வேலை, ஆனால் அதன் பலனோ விலங்கினங்களோடு ஒருமித்து வாழும் பரிபூரண மனிதரால் நிரப்பப்பட்ட உலகளாவிய பரதீஸ். எப்பேர்ப்பட்ட அற்புதமான எதிர்பார்ப்பு! மேலும், ஆதாமும் ஏவாளும் உண்மையுடன் யெகோவாவின் வழியில் நடந்துகொண்டிருக்கையில், அவரோடு தொடர்பு கொண்டிருப்பர். (ஆதியாகமம் 3:8-ஐ ஒப்பிடுக.) தொடர்ந்து படைப்பாளருடன் தனிப்பட்ட உறவு வைத்திருப்பது—ஆ, அது எப்பேர்ப்பட்ட மகத்தான சிலாக்கியம்!
4. ஆதாமும் ஏவாளும் எவ்வாறு நம்பிக்கையிலும் உண்மைப் பற்றுறுதியிலும் தவறினார்கள், அதனால் வந்த படுபயங்கர விளைவுகள் என்ன?
4 ஏதேனில் இருந்த நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை முதல் மானிட ஜோடி புசிப்பதை யெகோவா தடைசெய்தார். அவருக்கு தங்களுடைய கீழ்ப்படிதலை—யெகோவாவின் வழியில் நடப்பதற்கான தங்களுடைய ஆசையை—செயலில் காட்டுவதற்கு இது ஓர் உடனடி வாய்ப்பை தந்தது. (ஆதியாகமம் 2:17) ஆனால் விரைவிலேயே அந்தக் கீழ்ப்படிதல் பரீட்சிக்கப்பட்டது. சாத்தான் வஞ்சக வார்த்தைகளோடு அணுகினான்; அந்தச் சமயத்தில், ஆதாம் ஏவாள் தொடர்ந்து கீழ்ப்படிந்திருக்க வேண்டுமாகில், யெகோவாவுக்கு அவர்கள் உண்மைப் பற்றுறுதியை காண்பித்து அவருடைய வாக்குறுதிகளில் நம்பிக்கை வைக்க வேண்டியிருந்தது. வருத்தகரமாக, அவர்கள் உண்மைப் பற்றுறுதியையும் நம்பிக்கையையும் காண்பிப்பதில் தவறிவிட்டார்கள். ஏவாளுக்கு சாத்தான் சுதந்திரத்தைக் கொடுத்து யெகோவா பொய் சொல்வதாய் அவரை தவறாக குற்றஞ்சாட்டியபோது, அவள் வஞ்சிக்கப்பட்டு கடவுளுக்கு கீழ்ப்படியாமல் போனாள். ஆதாம் அவளை பின்பற்றி பாவத்திற்குள் வீழ்ந்தான். (ஆதியாகமம் 3:1-6; 1 தீமோத்தேயு 2:14) அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பு படுபயங்கரமாய் இருந்தது. யெகோவாவின் வழியில் நடந்து அவருடைய சித்தத்தைப் படிப்படியாக நிறைவேற்றுவது அவர்களுக்கு பொங்கிவழியும் மகிழ்ச்சியை தந்திருக்கும். மாறாக, சாவு அவர்களை வாரிக்கொண்டு போகும்வரை அவர்களுடைய வாழ்க்கை ஏமாற்றத்தாலும் வேதனையாலும் நிறைந்திருந்தது.—ஆதியாகமம் 3:16-19; 5:1-5.
5. யெகோவாவின் நீண்ட நாளைய நோக்கம் என்ன, உண்மையுள்ள மனிதர்கள் அந்த நிறைவேற்றத்தைக் காண எவ்வாறு உதவுகிறார்?
5 இருப்பினும், இந்தப் பூமியை பரிபூரண, பாவமற்ற மனிதர்களின் பரதீசு வீடாக ஆக்க நினைத்த தம்முடைய நோக்கத்தை யெகோவா மாற்றிவிடவில்லை. (சங்கீதம் 37:11, 29) அவருடைய வழியில் நடந்து அந்த வாக்குறுதியின் நிறைவேற்றத்தைக் காண நம்பிக்கையோடு இருப்போருக்கு பரிபூரண வழிநடத்துதல் கொடுப்பதில் அவர் ஒருபோதும் தவறிவிடவில்லை. “வழி இதுவே, இதிலே நடவுங்கள்” என்ற யெகோவாவின் சப்தம் செவிகளுள்ள நமக்கு பின்னால் கேட்கிறது.—ஏசாயா 30:21.
சிலர் யெகோவாவின் வழியில் நடந்தனர்
6. பூர்வத்தில் யெகோவாவின் வழியில் நடந்த இரண்டு மனிதர் யார், அவர்களுக்கு கிடைக்கும் பலன் என்ன?
6 பைபிள் பதிவின்படி, ஆதாம் ஏவாளின் சந்ததியில் சிறுபான்மையினரே யெகோவாவின் வழியில் நடந்தனர். அவர்களில் முதலானவர் ஆபேல். அவருக்கு அகால மரணம் நேரிட்டபோதிலும், யெகோவாவின் தயவோடு இறந்தார். இதனால் கடவுளுடைய ஏற்ற சமயத்தில் ‘நீதிமான்கள் உயிர்த்தெழுப்பப்படுவதில்’ பங்குகொள்ளும் நிச்சயமான எதிர்பார்ப்பு அவருக்கு இருக்கிறது. (அப்போஸ்தலர் 24:15) பூமிக்கும் மனிதவர்க்கத்திற்குமான யெகோவாவின் மகத்தான நோக்கம் கடைசியில் நிறைவேறுவதை அவர் காண்பார். (எபிரெயர் 11:4) யெகோவாவின் வழியில் நடந்த மற்றொருவர் ஏனோக்கு. இந்தக் காரிய ஒழுங்குமுறையின் கடைமுடிவைப் பற்றி அவர் உரைத்த தீர்க்கதரிசனம் யூதா புத்தகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. (யூதா 14, 15) ஏனோக்கும்கூட தன் ஆயுளை முழுமையாக அனுபவிக்க முடியாமல் போயிற்று. (ஆதியாகமம் 5:21-24) என்றபோதிலும், “தேவனுக்குப் பிரியமானவனென்று அவன் . . . சாட்சிபெற்றான்.” (எபிரெயர் 11:5) அவன் மரிக்கையில், ஆபேலைப் போல, உயிர்த்தெழுதல் நம்பிக்கையும் யெகோவாவின் நோக்கங்கள் நிறைவேறுவதை காண்போர் மத்தியில் இருக்கும் நம்பிக்கையையும் கொண்டிருந்தார்.
7. நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் எவ்வாறு யெகோவாவுக்கு உண்மைப் பற்றுறுதியைக் காண்பித்து, அவரில் நம்பிக்கை வைத்தார்கள்?
7 ஜலப்பிரளயத்திற்கு முன்னான உலகம் துன்மார்க்கத்தில் மேலும் மேலும் மூழ்கிக்கொண்டிருக்கையில், யெகோவாவுக்கு கீழ்ப்படிதல் அதிகமதிகமாய் விசுவாசப் பரீட்சையாக ஆனது. அந்த உலகத்தின் முடிவில், ஒரு சிறுதொகுதியினர் மாத்திரமே யெகோவாவின் வழியில் நடந்துகொண்டிருந்தனர். நோவாவும் அவருடைய குடும்பத்தினரும் கடவுளுக்கு செவிசாய்த்து, அவர் சொன்னதை நம்பினார்கள். அவர்களுக்கு முன்வைக்கப்பட்ட வேலைகளை உண்மையோடு நிறைவேற்றினார்கள், மேலும், அந்நாளைய உலகத்து தீயவர்களோடு இழுப்புண்டு போகாமல் இருந்தார்கள். (ஆதியாகமம் 6:5-7, 13-16; எபிரெயர் 11:7; 2 பேதுரு 2:5) அவர்கள் காண்பித்த உண்மைப் பற்றுறுதிக்கும் நம்பகமான கீழ்ப்படிதலுக்கும் நாம் நன்றியுடன் இருக்கலாம். அதன் காரணமாக, அவர்கள் ஜலப்பிரளயத்தில் தப்பிப்பிழைத்து நம்முடைய முன்னோர்களானார்கள்.—ஆதியாகமம் 6:22; 1 பேதுரு 3:20.
8. இஸ்ரவேல் ஜனத்தாருக்கு, கடவுளுடைய வழியில் நடப்பது எதை உட்படுத்தியது?
8 காலப்போக்கில், உண்மையுள்ள யாக்கோபின் சந்ததியாரோடு யெகோவா உடன்படிக்கை செய்தார், அவர்கள் அவருடைய விசேஷ ஜனமாக ஆனார்கள். (யாத்திராகமம் 19:5, 6) எழுத்து வடிவிலான சட்டம், ஆசாரியத்துவம், தொடர்ந்து தீர்க்கதரிசன வழிநடத்துதல் ஆகியவற்றின் வாயிலாக யெகோவா தம்முடைய உடன்படிக்கையின் ஜனங்களுக்கு வழிநடத்துதல் கொடுத்துவந்தார். ஆனால் அந்த வழிநடத்துதலைப் பின்பற்றுவது இஸ்ரவேலரை பொறுத்தது. இஸ்ரவேலரிடம் தம்முடைய தீர்க்கதரிசி இவ்வாறு சொல்லும்படி யெகோவா செய்தார்: “இதோ, இன்று நான் உங்களுக்கு முன்பாக ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் வைக்கிறேன். இன்று நான் உங்களுக்குக் கற்பிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தீர்களானால் ஆசீர்வாதமும், எங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படியாமல், இன்று நான் உங்களுக்கு விதிக்கிற வழியை விட்டுவிலகி, நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றுவீர்களானால் சாபமும் வரும்.”—உபாகமம் 11:26-28.
ஏன் சிலர் யெகோவாவின் வழியை விட்டுவிட்டனர்
9, 10. என்ன சூழ்நிலையின் நிமித்தமாக இஸ்ரவேலர் யெகோவாவில் நம்பிக்கை வைத்து அவரிடம் உண்மைப் பற்றுறுதியை வளர்த்துக்கொள்ள வேண்டியிருந்தது?
9 ஆதாம் ஏவாளைப் போலவே, இஸ்ரவேலரும் யெகோவாவில் நம்பிக்கை வைத்து அவருக்கு உண்மைப் பற்றுறுதியோடு இருக்க வேண்டியிருந்தது. இஸ்ரவேல் ஒரு சிறிய தேசம், சண்டையிடும் நாட்டவர்கள் அவர்களை சூழ்ந்திருந்தனர். தென்மேற்கே எகிப்தியரும் எதியோப்பியரும் இருந்தனர். வடகிழக்கே சீரியரும் அசீரியரும் இருந்தனர். அண்டை அயலில் பெலிஸ்தரும் அம்மோனியரும் மோவாபியரும் ஏதோமியரும் வாழ்ந்துவந்தனர். ஏதாவதொரு சமயத்தில் அவர்கள் அனைவருமே இஸ்ரவேலருக்கு விரோதிகளாய் இருந்தார்கள். மேலும், அவர்கள் அனைவரும் பொய் மதத்தைச் சேர்ந்தவர்கள்—விக்கிரக கடவுட்களை வழிபட்டனர், சோதிடம் பார்த்தனர், சிலருடைய வழிபாட்டில் படுமோசமான பாலியல் சடங்குகளும் பிள்ளைகளை கொடூரமாய் பலியிடும் பழக்கமும் இருந்தன. பெரிய குடும்பங்களையும் செழிப்பான அறுவடைகளையும் போரில் வெற்றியையும் தரும்படி இஸ்ரவேலின் அண்டை நாட்டவர் தங்களுடைய கடவுட்களை நோக்கியிருந்தார்கள்.
10 இஸ்ரவேலர் மட்டுமே ஒரே கடவுளை—யெகோவாவை—வணங்கினர். அவர்கள் தம்முடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால், பெரிய குடும்பங்களையும் செழிப்பான அறுவடைகளையும் சத்துருக்களிடமிருந்து பாதுகாப்பையும் தந்து அவர்களை ஆசீர்வதிப்பதாக வாக்குறுதி அளித்தார். (உபாகமம் 28:1-14) வருத்தகரமாக, இஸ்ரவேலிலுள்ள அநேகர் இதைச் செய்ய தவறிவிட்டார்கள். யெகோவாவின் வழியில் நடந்தவர்களில் அநேகர் தங்களுடைய உண்மைத்தன்மைக்காக பாடுபட்டார்கள். சிலர் வதைக்கப்பட்டார்கள், பரிகசிக்கப்பட்டார்கள், வாரினால் விளாசப்பட்டார்கள், சிறையிடப்பட்டார்கள், கல்லெறியப்பட்டார்கள், சக இஸ்ரவேலரால் கொலையும் செய்யப்பட்டார்கள். (அப்போஸ்தலர் 7:51, 52; எபிரெயர் 11:35-38) உண்மையுள்ளோருக்கு அது எப்பேர்ப்பட்ட பரீட்சையாக இருந்திருக்க வேண்டும்! ஆனால், ஏன் அநேகர் யெகோவாவின் வழியிலிருந்து விலகிப்போனார்கள்? இஸ்ரவேலர் சரித்திரத்தின் இரண்டு உதாரணங்கள் அவர்களுடைய தவறான சிந்தையை அறிந்துகொள்வதற்கு நமக்கு உதவும்.
ஆகாஸின் மோசமான முன்மாதிரி
11, 12. (அ) சீரியா அச்சுறுத்தியபோது, ஆகாஸ் எதைச் செய்ய மறுத்துவிட்டான்? (ஆ) பாதுகாப்புக்காக எந்த இரண்டு பேருடைய உதவியை ஆகாஸ் நாடினான்?
11 பொ.ச.மு. எட்டாம் நூற்றாண்டில் யூதாவின் தெற்கு ராஜ்யத்தின்மீது ஆகாஸ் ஆட்சி செய்தான். அவனுடைய ஆட்சியில் சமாதானம் இல்லை. ஒரு சந்தர்ப்பத்தில், சீரியாவும் இஸ்ரவேலின் வடக்கு ராஜ்யமும் அவனுக்கு எதிராக போரில் கூட்டுச்சேர்ந்து கொண்டன. அதனால் ‘ராஜாவின் இருதயமும் அவன் ஜனத்தின் இருதயமும் நடுங்கியது.’ (ஏசாயா 7:1, 2) ஆனால், ஆகாஸுக்கு யெகோவா ஆதரவளித்து அவன் தம்மை சோதித்துப் பார்க்கும்படி அழைத்தார்; இருப்பினும், ஆகாஸ் அதை அப்படியே நிராகரித்துவிட்டான். (ஏசாயா 7:10-12) அதன் விளைவாக, யூதா போரில் தோல்வியுற்றது, அதுமட்டுமல்லாமல் அநேகர் போரில் மாண்டனர்.—2 நாளாகமம் 28:1-8.
12 யெகோவாவை சோதித்துப்பார்க்க ஆகாஸ் மறுத்துவிட்டபோதிலும், அசீரியா ராஜாவிடமிருந்து உதவி கேட்காமல் இல்லை. அப்படியும் யூதா தொடர்ந்து அதன் அண்டை நாட்டவருடைய கைகளில் சிக்கித் தவித்தது. அசீரியாவும்கூட ஆகாஸுக்கு எதிராக திரும்பி அவனை ‘நெருக்கினபோது,’ “சீரியா ராஜாக்களின் தெய்வங்கள் அவர்களுக்குத் துணை செய்கிறபடியினால், அவர்கள் எனக்கும் துணைசெய்ய அவர்களுக்குப் பலியிடுவேன் என்று சொல்லி, தன்னை முறிய அடித்த தமஸ்குவின் தெய்வங்களுக்கு அவன் பலியிட்டான்.”—2 நாளாகமம் 28:20, 23.
13. சீரியாவின் கடவுட்களிடம் திரும்புவதன் மூலம் ஆகாஸ் எதைக் காண்பித்தான்?
13 பிந்தைய நாட்களில், இஸ்ரவேலிடம் யெகோவா இவ்வாறு சொன்னார்: “பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே. ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்.” (ஏசாயா 48:17, 18) சீரியாவின் கடவுட்களிடம் சென்றதால், ‘நடக்கவேண்டிய வழியிலே நடப்பதிலிருந்து’ ஆகாஸ் எவ்வளவு தூரம் விலகிவிட்டான் என்பதை காட்டினான். புறதேசத்தாரின் சிந்தையால் முற்றிலும் தவறாக வழிநடத்தப்பட்டான், பாதுகாப்புக்காக யெகோவாவை நாடுவதற்குப் பதில் பொய்யான ஊற்றுமூலங்களை நோக்கியிருந்தான்.
14. பொய் கடவுட்களிடம் திரும்பியதற்கு ஏன் ஆகாஸுக்கு எந்தச் சாக்குப்போக்கும் இல்லை?
14 சீரியா உட்பட, புறதேசத்து கடவுட்கள் “ஒன்றுக்கும் உதவாத கடவுட்களாக” நீண்ட காலமாகவே காண்பிக்கப்பட்டுள்ளனர். (ஏசாயா 2:8, NW) முன்பு தாவீது ராஜாவின் ஆட்சி காலத்தில், சீரியர்கள் தாவீதின் வேலைக்காரர்களாக ஆனபோது சீரியாவின் கடவுட்களைவிட யெகோவாவின் உன்னதத்தன்மை தெளிவாக காணப்பட்டது. (1 நாளாகமம் 18:5, 6) ‘தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனாகிய’ யெகோவா மாத்திரமே, உண்மையான பாதுகாப்பை கொடுக்க முடியும். (உபாகமம் 10:17) ஆனால், யெகோவாவுக்கு ஆகாஸ் புறமுதுகு காட்டி, பாதுகாப்புக்காக புறதேசத்து கடவுட்களை நோக்கியிருந்தான். அதன் விளைவு யூதாவுக்குப் பேரழிவாக இருந்தது.—2 நாளாகமம் 28:24, 25.
எகிப்தில் எரேமியாவும் யூதர்களும்
15. எரேமியாவின் நாளில் எகிப்திலுள்ள யூதர்கள் எந்த விதத்தில் பாவம் செய்தனர்?
15 தம்முடைய ஜனங்கள் உண்மை பற்றுறுதியை காண்பிப்பதில் படுமோசமாக தவறியதால், பாபிலோனியர் பொ.ச.மு. 607-ல் எருசலேமையும் அதன் ஆலயத்தையும் அழிப்பதற்கு யெகோவா அனுமதித்தார். தேசத்திலுள்ள பெரும்பாலானோர் பாபிலோனுக்கு நாடுகடத்திச் செல்லப்பட்டார்கள். ஆனால் சிலர், அங்கேயே விட்டுச்செல்லப்பட்டார்கள். அவர்களில் ஒருவர்தான் தீர்க்கதரிசியாகிய எரேமியா. கெதலியா என்ற ஆளுநர் கொலை செய்யப்பட்டபோது, இந்தத் தொகுதியினர் எகிப்துக்குத் தப்பியோடினர், அவர்களுடன் எரேமியாவையும் கூட்டிச்சென்றனர். (2 இராஜாக்கள் 25:22-26; எரேமியா 43:5-7) அங்கே, பொய் தெய்வங்களுக்கு பலிசெலுத்த ஆரம்பித்தார்கள். உண்மையற்ற யூதர்களிடம் எரேமியா ஊக்கமாக நியாயங்காட்டி பேசினார், ஆனாலும் அவர்கள் பிடிவாதமாக இருந்தார்கள். அவர்கள் யெகோவாவிடம் திரும்ப மறுத்துவிட்டார்கள், தொடர்ந்து ‘வானராக்கினிக்கு’ தூபங்காட்டுவோம் என விடாப்பிடியாக கூறினார்கள். ஏன்? ஏனெனில் இதைத்தான் அவர்களும் அவர்களுடைய முற்பிதாக்களும் ‘யூதா பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் செய்[தார்கள்]; அப்பொழுது அவர்கள் அப்பத்தினால் திருப்தியாகி, ஒரு பொல்லாப்பையும் காணாமல் வாழ்ந்திருந்தார்கள்.’ (எரேமியா 44:16, 17) அதோடு யூதர்கள் இவ்வாறு வாதாடினார்கள்: “நாங்கள் வானராக்கினிக்கு தூபங்காட்டாமலும், அவளுக்குப் பானபலிகளை வார்க்காமலும் போனது முதற்கொண்டு, எல்லாம் எங்களுக்குக் குறைவுபட்டது; பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் அழிந்துபோனோம்.”—எரேமியா 44:18.
16. எகிப்திலுள்ள யூதர்களுடைய நியாயம் ஏன் முற்றிலும் தவறாக இருந்தது?
16 ஆசைப்பட்டதையே மனம் தக்கவைத்துக்கொள்கிறது! உண்மை நிலை என்ன? சொல்லப்போனால், யெகோவா தேவன் தங்களுக்கு தந்த தேசத்தில் யூதர்கள் பொய் கடவுட்களுக்கு பலிசெலுத்தினார்கள். சிலசமயங்களில், ஆகாஸின் நாளில் செய்ததுபோல, விசுவாச துரோகத்தின் காரணமாக துன்பப்பட்டார்கள். ஆனால், யெகோவா தம்முடைய உடன்படிக்கையின் ஜனத்தாரோடு ‘நீடிய சாந்தமாய்’ இருந்தார். (யாத்திராகமம் 34:6; சங்கீதம் 86:15) மனந்திரும்பும்படி தம்முடைய தீர்க்கதரிசிகளை அவர்களிடம் அனுப்பினார். சிலசமயங்களில், ராஜா உண்மையுள்ளவராய் இருந்தபோது, யெகோவா அவரை ஆசீர்வதித்தார். அதனால், அவரது ஆட்சிக்குட்பட்ட பிரஜைகளில் அநேகர் உண்மையற்றவர்களாய் இருந்தபோதிலும், அந்த ஆசீர்வாதத்திலிருந்து நன்மையடைந்தார்கள். (2 நாளாகமம் 20:29-33; 27:1-6) தங்களுடைய தாயகத்தில் அனுபவித்த செழுமையெல்லாம் பொய் கடவுட்களிடமிருந்து வந்தது என்று எகிப்திலுள்ள யூதர்கள் உரிமைபாராட்டியது எவ்வளவு தவறு!
17. யூதா தனது தேசத்தையும் ஆலயத்தையும் ஏன் இழந்தது?
17 பொ.ச.மு. 607-க்கு முன்பு, யூதாவின் ஜனங்களை யெகோவா இவ்வாறு உந்துவித்தார்: “என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்; நான் உங்களுக்குக் கற்பிக்கும் எல்லா வழியிலும், நீங்கள் உங்களுக்கு நன்மையுண்டாகும்படிக்கு நடவுங்கள் என்கிற விசேஷத்தையே அவர்களுக்குச் சொல்லிக் கட்டளையிட்டேன்.” (எரேமியா 7:23) அந்த யூதர்கள் தங்களுடைய ஆலயத்தையும் தேசத்தையும் இழந்தது சரியே. ஏனெனில் ‘யெகோவா தங்களுக்கு கட்டளையிட்ட எல்லா வழியிலும்’ நடக்கத் தவறிவிட்டார்கள். சாவுக்கேதுவான அந்தத் தவறை செய்யாமலிருக்க நாம் உறுதியாக இருப்போமாக.
தம்முடைய வழியில் நடப்போரை யெகோவா ஆசீர்வதிக்கிறார்
18. யெகோவாவின் வழியில் நடப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?
18 இன்று, கடந்தகாலத்தைப் போலவே, யெகோவாவின் வழியில் நடப்பது உண்மைப் பற்றுறுதியை—அவரை மாத்திரமே சேவிக்க வேண்டும் என்ற திடதீர்மானத்தை—தேவைப்படுத்துகிறது. அது நம்பிக்கையை—யெகோவாவின் வாக்குறுதிகள் நம்பத்தக்கவை, அது நிச்சயமாக நிறைவேறும் என்ற முழு விசுவாசத்தை—தேவைப்படுத்துகிறது. யெகோவாவின் வழியில் நடப்பது கீழ்ப்படிதலை—வழிவிலகாமல் அவருடைய சட்டங்களை பின்பற்றுவதை, அவருடைய உயர்ந்த தராதரங்களைக் கடைப்பிடிப்பதை—தேவைப்படுத்துகிறது. “கர்த்தர் நீதியுள்ளவர், நீதியின்மேல் பிரியப்படுவார்.”—சங்கீதம் 11:7.
19. இன்று அநேகர் எந்தக் கடவுட்களை வழிபடுகின்றனர், என்ன விளைவுகளுடன்?
19 ஆகாஸ் பாதுகாப்பிற்காக சீரியாவின் கடவுட்களை நோக்கியிருந்தான். ‘வானராக்கினி’—பூர்வ மத்திய கிழக்கில் பரவலாக வழிபட்ட ஒரு தேவதை—பொருளாதார செழுமையை அருளுவாள் என இஸ்ரவேலர் எகிப்தில் இருக்கையில் நம்பியிருந்தனர். இன்று, அநேக கடவுட்கள் சொல்லர்த்தமான விக்கிரகங்கள் அல்ல. யெகோவாவை சேவிப்பதற்கு பதில் ‘உலகப்பொருளை’ சேவிப்பதை இயேசு எச்சரித்தார். (மத்தேயு 6:24) ‘விக்கிரகாராதனையான பொருளாசையை’ பற்றி அப்போஸ்தலன் பவுல் பேசினார். (கொலோசெயர் 3:5) “அவர்களுடைய தேவன் வயிறு” என்றும் பேசினார். (பிலிப்பியர் 3:19) ஆம், இன்று மக்கள் வழிபடும் முக்கிய கடவுட்கள் பணமும் பொருளாதார காரியங்களுமே. சொல்லப்போனால், பெரும்பாலானோர்—மதப்பற்றுள்ள அநேகர்—“நிலையற்ற ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை” வைக்கிறார்கள். (1 தீமோத்தேயு 6:17) இந்தக் கடவுட்களை சேவிக்க அநேகர் கடுமையாக உழைக்கின்றனர், சிலர் அதற்கான பலன்களை—சொகுசான வீடுகளில் வாழ்தல், ஆடம்பரமான பொருட்களை அனுபவித்தல், கொழுமையான உணவு சாப்பிடுதல் போன்ற பலன்களை—அறுவடையும் செய்கின்றனர். ஆனால், அனைவருமே இப்படிப்பட்ட செழுமையை அனுபவிப்பதில்லை. என்றாவது ஒருநாள் இவற்றை அனுபவிப்பவர்களும் இந்தக் காரியங்கள் திருப்தியற்றவை என்பதை காண்கின்றனர். அவை அநிச்சயமானவை, தற்காலிகமானவை, ஆவிக்குரிய தேவைகளை திருப்தி செய்வதில்லை.—மத்தேயு 5:3.
20. என்ன சமநிலையை நாம் காத்துக்கொள்ள வேண்டும்?
20 உண்மைதான், இந்தக் காரிய ஒழுங்கின் கடைசி நாட்களில் வாழ்கிற நாம் யதார்த்தமானவர்களாக இருக்க வேண்டும். பொருளாதார விதத்தில் நம்முடைய குடும்பங்களுக்கு தேவையானதை கொடுக்க நியாயமான நடவடிக்கைகளை நாம் எடுப்பது அவசியம். ஆனால், கடவுளை சேவிப்பதற்கு மாறாக பணம் பணம் என அதையே நாடித்தேடுதல், அல்லது இதுபோன்ற பிற காரியங்களாகிய ஆடம்பர வாழ்க்கை வாழ்வதன் பேரிலேயே அதிக முக்கியத்துவம் வைப்போமாகில், ஒருவகையான விக்கிரகாராதனையில் நாம் வீழ்ந்துவிட்டோம், இனிமேலும் யெகோவாவின் வழியில் நடப்பவர்களாக இருக்க மாட்டோம். (1 தீமோத்தேயு 6:9, 10) ஆனால், உடல்நிலை, பொருளாதார, அல்லது வேறு பிரச்சினைகளை நாம் எதிர்ப்படுகையில் என்ன செய்வது? கடவுளை சேவிப்பதே தங்களுடைய பிரச்சினைகளுக்கு காரணம் என குறைகூறிய எகிப்திலுள்ள யூதர்களைப் போலில்லாமல் இருப்போமாக. அதற்கு மாறாக, ஆகாஸ் செய்யத் தவறியதை, அதாவது யெகோவாவை பரீட்சித்துப் பார்ப்பதை நாம் செய்வோமாக. வழிநடத்துதலுக்காக உண்மைப் பற்றுறுதியுடன் யெகோவா தேவனை நோக்கியிருப்போமாக. நம்பிக்கையுடன் அவருடைய வழிநடத்துதலை பொருத்திப் பயன்படுத்துவோமாக! எல்லா சூழ்நிலைமையையும் சமாளிப்பதற்குரிய பலத்திற்காகவும் ஞானத்திற்காகவும் ஜெபிப்போமாக! அப்பொழுது, யெகோவாவின் ஆசீர்வாதத்திற்காக நம்பிக்கையுடன் காத்திருக்கலாம்.
21. யெகோவாவின் வழியில் நடப்பவர்களுக்கு என்னென்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும்?
21 இஸ்ரவேல் சரித்திரத்தை கவனிக்கையில், அவருடைய வழியில் நடந்தவர்களை யெகோவா அபரிமிதமாக ஆசீர்வதித்தார். தாவீது ராஜா இவ்வாறு பாடினார்: “கர்த்தாவே, என் சத்துருக்களினிமித்தம் என்னை உம்முடைய நீதியிலே நடத்தி, எனக்கு முன்பாக உம்முடைய வழியைச் செவ்வைப்படுத்தும்.” (சங்கீதம் 5:8) பிற்பாடு ஆகாஸை அலைக்கழித்த அண்டை தேசத்தவர்கள்மீது அவருக்கு யெகோவா வெற்றி தேடித்தந்தார். சாலொமோன் ஆட்சியில், எகிப்தில் இருக்கையில் யூதர்கள் வாஞ்சித்த சமாதானத்தையும் செழுமையையும் இஸ்ரவேலருக்கு கொடுத்து கடவுள் அவர்களை ஆசீர்வதித்தார். ஆகாஸின் மகன் எசேக்கியாவுக்கு, வலிமைமிக்க அசீரியாவின்மீதும் யெகோவா வெற்றி தேடித்தந்தார். (ஏசாயா 59:1) ஆம், ‘பாவிகளுடைய வழியில்’ நில்லாமல் கடவுளுடைய சட்டத்தில் பிரியமாயிருந்த உண்மைப் பற்றுறுதியுள்ளவர்களிடம் யெகோவாவின் கரம் குறுகியதாய் இல்லை. (சங்கீதம் 1:1, 2) அதுவே இன்றும் உண்மையாக இருக்கிறது. ஆனால், நாம் யெகோவாவின் வழியில் நடக்கிறோம் என்பதில் எப்படி இன்று உறுதியாக இருக்கலாம்? இது அடுத்த கட்டுரையில் சிந்திக்கப்படும்.
ஞாபகமிருக்கிறதா?
◻ நாம் யெகோவாவின் வழியில் நடக்க வேண்டுமாகில் என்னென்ன பண்புகள் இன்றியமையாதவை?
◻ ஏன் ஆகாஸின் சிந்தை தவறாக இருந்தது?
◻ எகிப்திலுள்ள யூதர்களின் நியாய விளக்கத்தில் என்ன தவறு?
◻ யெகோவாவின் வழியில் நடப்பதற்கான திடதீர்மானத்தை நாம் எவ்வாறு பலப்படுத்திக்கொள்ளலாம்?
[பக்கம் 13-ன் படம்]
யெகோவாவை நோக்கியிருப்பதற்குப் பதிலாக, ஆகாஸ் சீரியாவின் கடவுட்களை நோக்கியிருந்தான்