சரித்திரம் படைத்த சந்திப்பு ஒரு தீவை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது
கியூபா—கரீபியன் கடலில் குடியிருக்கும் அழகிய தீவு. என்றும் அனுபவியாத ஆன்மீக புத்துணர்ச்சியில் ஆனந்தம் பாடியது. 1998-ம் ஆண்டு அயரப்போகும் வேளை. இந்த மேற்கிந்திய தீவில் வாழும் யெகோவாவின் சாட்சிகளுக்கு நீண்டகாலம் ஏங்கிக்கொண்டிருந்த ஆசீர்வாதத்தை அள்ளி வழங்கியது. 30-க்கும் அதிகமான ஆண்டுகளுக்குப் பிறகு, யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு அங்கத்தினர்கள்—அவர்களோடு மற்ற 15 பிரதிநிதிகள்—அந்த மண்ணில் காலடிவைத்தனர். இவர்களின் தாயகம்: ஆஸ்திரேலியா, இத்தாலி, கிரேட் பிரிட்டன், ஆஸ்திரியா, நியூ ஜீலாந்து, பியூரிடோ ரீகோ, பெல்ஜியம்.
இது, அங்கிருந்த ராஜ்ய பிரஸ்தாபிகளாகிய 82,258 பேருக்கும் இவர்களோடு 1998-ன் இளவேனிற் காலத்தில் நடைபெற்ற கர்த்தருடைய இராப்போஜனத்தில் கலந்துகொண்ட 87,890 பேருக்கும் சரித்திர புகழ்மிக்க சம்பவமாக திகழ்ந்தது.
1998 டிசம்பர் 1 முதல் 7-ல் லாயிட் பாரி, ஜான் பார், கெரிட் லோஷ் ஆகியோர் ஹவானாவிலுள்ள பெத்தேல் குடும்பத்தைச் சந்தித்தனர். கியூபாவில் நடைபெற்ற “கடவுள் காட்டும் ஜீவ வழி” மாவட்ட மாநாடுகள் சிலவற்றிலும் கலந்துகொண்டனர். அங்குள்ள பயணக் கண்காணிகளைச் சந்திப்பதற்கும் கியூபாவின் அரசாங்க அதிகாரிகளோடு நன்கு அறிமுகமாவதற்கும் வாய்ப்பு கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.
“அது எனக்கும் என் மனைவிக்கும் எங்கள் வாழ்நாளில் இதுவரை ஏற்பட்டிராத ஓர் ஆவிக்குரிய அனுபவம். சத்தியத்தின்மீது கியூபாவிலுள்ள நம் அன்பான சகோதர சகோதரிகள் வைத்திருக்கும் வைராக்கியம் பொங்கி வழிகிறது! உலகளாவிய நம் சகோதர கூட்டுறவு எவ்வளவு அருமையானது என்ற எண்ணமே நான் திரும்பி வருகையில் என்னை ஆக்கிரமித்திருந்தது!” என்று சொன்னார் ஜான் பார். “பெரும் சிறப்புமிக்க அந்த வாரம், அங்கிருக்கும் நம் சகோதரர்களுடைய சூழலை நன்கு புரிந்துகொள்ள எனக்கு உதவியது” என்று கூறினார் லாயிட் பாரி.
கடந்த ஐந்து வருட காலப்பகுதியில், யெகோவாவின் சாட்சிகளுக்கு அதிக மத சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. இதுவே தொடர கியூபாவின் அதிகாரிகளும் விரும்புகிறார்கள் என்பதை அவர்களுடைய வார்த்தைகளும் ஒருவரை நம்ப வைக்கிறது.
செப்டம்பர் 1994-ல் ஹவானாவிலுள்ள பெத்தேலில் அச்சடிப்பு ஆரம்பிக்கப்பட்டது. மீண்டும் யெகோவாவின் சாட்சிகளால் கூட்டங்கள் நடத்தவும் வீடுவீடாக பிரசங்கிக்கவும் முடிந்தது. பிறகு 1998-ல், மூன்று ஆளும் குழு அங்கத்தினர் உட்பட, 18 பேர் அடங்கிய யெகோவாவின் சாட்சிகளின் சர்வதேச பிரதிநிதி குழு சந்திப்பதற்கு அந்நாட்டு அதிகாரிகள் அனுமதியளித்தனர்.
சந்தோஷ சங்கமம்
ஹவானாவிலுள்ள ஹோசே மார்டீ விமான நிலையத்தில் அவர்கள் வந்திறங்கியபோது, அரசாங்க அதிகாரிகளின் குழுவும் பெத்தேல் குடும்ப அங்கத்தினர்களின் கூட்டமும் அவர்களை இன்முகத்துடன் வரவேற்றது. ஆளும் குழுவின் அங்கத்தினர் மில்டன் ஹென்ஷெல் கடைசியாக 1961-ல் கியூபாவிற்கு விஜயம் செய்ததை நினைவுகூர்ந்த ஒரு சகோதரரும் வரவேற்றவர்களின் குழுவில் இருந்தார். அப்போது அவருக்கு 12 வயது, இப்போதோ பயணக் கண்காணி.
பெத்தேல் குடும்பத்தை பிரதிநிதி குழுவினர் சந்தித்தபோது, ஒரு சகோதரர் இந்த நிகழ்ச்சிக்காகவே வளர்த்திருந்த கிலாடியோலஸ், ரோஜா, மல்லிகை, மஞ்சள், சிகப்புநிற டெய்சி பூச்செண்டுகள் அவர்களை வரவேற்றன. பெத்தேல் குடும்பத்தினர் அவர்களை வரவேற்றபோது கன்னங்களில் ஆனந்தக் கண்ணீர்! பிறகு கியூபாவின் ஸ்பெஷாலிடியான பன்றியிறைச்சி வறுவல், சோறு, அவரை, சாலட், பழங்கள், மாக்கோவுடன் (பூண்டும் ஆலிவ் எண்ணெயும் சேர்த்து செய்யப்பட்ட ஒருவகை சாஸ்) யூக்காவும் அடங்கிய அறுசுவை உணவை அனுபவித்தனர். உணவிற்கு பிறகு, பெத்தேல் சேவையின் மதிப்பைப் பற்றி ஆளும் குழு அங்கத்தினர் ஒவ்வொருவரும் ஊக்கமூட்டும் ஒரு பேச்சை கொடுத்தனர். குறிப்பாக, சகோதரர் லோஷ் ஸ்பானிய மொழியில் சகோதரர்களிடம் பேசுகையில் அவர் சொன்ன குறிப்புகள் இதயத்தைத் தொட்டன. அந்தப் பெத்தேல் குடும்பத்தில் 48 பேர் நிரந்தரமாகவும் 18 பேர் தற்காலிகமாகவும் வாலண்டியர்களாக சேவை செய்கின்றனர்.
கியூபாவிலுள்ள சகோதரர்களுக்கான புத்தகங்களும் பைபிள்களும் இத்தாலியில்தான் அச்சடிக்கப்படுகின்றன. ஆனால் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளின் கருப்பு வெள்ளை வெளியீடுகள், இரண்டு டியூப்ளிகேட்டர் மிஷின்களில் அங்கேயே அச்சிடப்படுகின்றன. அந்த நெரிசலான இடத்தில், தேவையான அனைத்து பத்திரிகைகளையும் அச்சடிக்க நீண்ட நேர கடின உழைப்பு அவசியமாகும். இவ்வாறு அந்த வாலண்டியர்கள் விசேஷித்த விதத்தில் யெகோவாவுக்கு செய்யும் தங்கள் சேவையை மதிக்கிறார்கள்.—2 கொரிந்தியர் 4:7.
மாநாட்டின் முக்கிய அம்சங்கள்
பதினெட்டு பேர் அடங்கிய அந்தப் பிரதிநிதிக் குழுவினர், காமாகுவே, ஹவானா, ஹோல்க்வின் ஆகிய இடங்களில் நடந்த மாவட்ட மாநாடுகளில் கலந்துகொள்வதற்காக மூன்று தொகுதியாக பிரிந்துசென்றனர். மாநாடு நடந்த ஒவ்வொரு இடத்திலும் சகோதர சகோதரிகள் அடங்கிய ஒரு பெரிய தொகுதி ஒவ்வொரு நாளும் வரும்படி அழைக்கப்பட்டிருந்தனர். இதில் அநேக பயனியர்களும் மூப்பர்களும் அடங்குவர். அது ஒரு விசேஷமான நிகழ்ச்சி என்று மட்டுமே உள்ளூர் சாட்சிகளிடம் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் ஆளும் குழு அங்கத்தினர்கள் வருவார்கள் என்பதை அறியாதிருந்தனர். வெள்ளிக்கிழமை காலை இந்த அருமையான சகோதரர்களும் அவர்களுடைய மனைவிகளும் வாடகை பஸ்ஸிலிருந்து இறங்கியதைப் பார்த்தபோது அவர்கள் அடைந்த மகிழ்ச்சியைக் கற்பனை செய்து பாருங்கள்!
அதிகாரிகளுடைய அனுமதியுடன் சகோதரர்களால் கட்டப்பட்ட திறந்தவெளி மன்றங்களில்தான் மாநாடுகள் நடத்தப்பட்டன. ஹவானாவில் நடந்த மாநாட்டின் நுழைவாயிற் கல்லில் “சங்கீதம் 133:1” என பொறிக்கப்பட்டிருந்தது. “இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது” என்ற வசனத்தை அந்த வார்த்தைகள் சகோதரர்களுக்கு நினைப்பூட்டின. மாநாட்டின்போது நன்மையும் இன்பமுமான கிறிஸ்தவ கூட்டுறவை சகோதரர்கள் அந்த இடங்களில் அனுபவித்தது முற்றிலும் உண்மையே.
பேச்சுகளும் பேட்டிகளும் மிகவும் சிறப்பாக இருந்ததென பிரதிநிதிகள் கூறினர். பூர்வ பாபிலோனில் நிகழ்ந்த, தானியேல் 3-ம் அதிகாரத்திலுள்ள பைபிள் கதை அடிப்படையிலான நாடகமும் அவர்களுடைய மனதை கவர்ந்தது. ஒரு சகோதரி கூறினார்: “எல்லாருடைய நடிப்புமே சூப்பர். பின்னணி குரலுக்கு இசைவாக அவ்வளவு துல்லியமாய் அவர்கள் நடித்ததால் குரல் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டது போன்றே தோன்றவில்லை. . . . பொல்லாத பாபிலோனியன் பார்ப்பதற்கே கொடூரமாக இருந்தான். அந்த மூன்று எபிரெயர்களும் உண்மையில் உறுதியாகவும் திடதீர்மானமாகவும் இருந்தனர்.”
மத விஷயங்கள் சம்பந்தப்பட்ட பிரதிநிதிகளும் அரசாங்க அதிகாரிகள் வேறு சிலரும் ஆஜராகியிருந்தனர். சகோதரர்களின் ஒழுங்கமைப்பையும் நன்னடத்தையையும் அவர்கள் பாராட்டினர். வருகை தந்திருந்த பிரதிநிதிகளுக்கு கியூபா அதிகாரிகள் அளித்த சிறப்பான வரவேற்புக்கு சகோதரர் பாரி தன்னுடைய இதயங்கனிந்த நன்றியை தெரிவித்தார். சொற்பொழிவுகளுக்கான பாராட்டையும் மாநாடு நடத்த அதிகாரிகள் அனுமதி அளித்ததற்காக நன்றியையும் தெரிவிக்க குழுமியிருந்த சகோதரர்கள் எழுந்து நின்று நீண்ட நேரம் கரவொலி எழுப்பினார்கள். “இவ்வளவு அருமையாக இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவேயில்லை. சிறியளவில் நடந்த சர்வதேச மாநாடு மாதிரியே இருந்தது! அருமையிலும் அருமை! யெகோவா தம்முடைய வாக்குறுதிகளை நிறைவேற்ற வல்லவர் என்பதை இது நிரூபித்திருக்கிறது” என ஒரு கிறிஸ்தவ குடும்பத்தினர் கூறினர்.
சாட்சிகளை மற்றவர்கள் நன்கு அறிந்துகொள்ள அந்த மாநாடுகள் வாய்ப்பளித்தன. பஸ் ஓட்டுநர் ஒருவர் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் மாநாட்டிற்கு வந்திருந்தார். யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி பல விஷயங்களை கேள்விப்பட்டதாகவும் ஆனால் அவர்கள் உண்மையில் நல்ல, சமாதானமான மக்கள் என்பதை இப்போது அறிந்துகொண்டதாகவும் கூறினார்.
“எங்கள் வாழ்வில் மறக்க முடியாதவை”
கியூபா மக்கள் காண்பித்த கரிசனையும் நட்புறவும் பிரதிநிதிகளை திக்குமுக்காட செய்தது. கியூபா நாட்டவர் சுறுசுறுப்பானவர்கள், ஒழுக்கமானவர்கள், தயவானவர்கள். “முன்பின் அறியாதவர்களே எங்களுக்கு அடிக்கடி உதவினார்கள்” என பிரதிநிதி ஒருவர் கூறினார்.
கியூபாவிலுள்ள உடன் விசுவாசிகளின் அன்பும் விசுவாசமும் மகிழ்ச்சியும் பிரதிநிதிகளை வெகுவாக கவர்ந்தது. பெருந்தடைகள் மத்தியிலும் யெகோவாவை தங்கள் கோட்டையாக கொண்டிருக்கின்றனர். (சங்கீதம் 91:2) ஜான் பார் கூறினார்: “நான் கியூபாவிற்கு சென்றது இதுதான் முதல் தடவை. அநேக விஷயங்கள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தின—நாட்டின் அழகும், நான் சந்தித்த மக்களின் இனிய சுபாவம், எல்லாவற்றையும்விட கியூபா விசுவாசிகளுடைய சந்தோஷம் பொங்கும் உணர்ச்சியும் என்னைக் கவர்ந்தன. அவர்களைப் போல ராஜ்ய பாடல்களை உணர்ச்சிபொங்க யாரும் பாடியதை கேட்டதுமில்லை, ஆவிக்குரிய காரியங்கள் தங்கள் இதயத்தைத் தொடுகையில் நீண்ட நேரம் கைத்தட்டுவதை என் வாழ்க்கையில் பார்த்ததுமில்லை. இவை எங்கள் வாழ்வில் மறக்க முடியாதவை. அவை என்றும் எங்கள் நெஞ்சைவிட்டு நீங்காதிருக்கும்.”
“திரளான தீவுகள் மகிழக்கடவது” என சங்கீதம் 97:1 கூறுகிறது. கியூபாவில் வாழும் யெகோவாவின் சாட்சிகள் கடவுளை வணங்க கிடைத்திருக்கும் அதிகமான சுதந்திரத்திற்காகவும் இந்த சர்வதேச பிரதிநிதி குழுவின் விசேஷ சந்திப்பிற்காகவும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
[பக்கம் 8-ன் படம்]
அரசாங்க அதிகாரிகளுக்கு பைபிள்களை பரிசாக வழங்க ஆளும் குழு அங்கத்தினர்கள் கையெழுத்திடுகின்றனர்
[பக்கம் 8-ன் படம்]
கியூபாவில் நடந்த, “கடவுள் காட்டும் ஜீவ வழி” விசேஷ மாவட்ட மாநாடுகளுக்கு அநேக குடும்பங்கள் வந்திருந்தன
[பக்கம் 8-ன் படம்]
1994-ல் ஹவானாவிலுள்ள பெத்தேல் மீண்டும் திறக்கப்பட்டது