குடும்பத்தோடு நேரத்தை செலவிடுகிறீர்களா?
“வேலையில் ஒரே பிஸி, பிள்ளைகளோடு விளையாடுவதில்லை என்றாலும் ஜப்பானிய அப்பாமார்மீது அன்பு.” சில வருஷங்களுக்கு முன்பு இந்தத் தலைப்புச் செய்தியை தாங்கிவந்தது மைனிச்சி ஷிம்பூன் செய்தித்தாள். ஓர் அரசாங்க நிறுவனம் நடத்திய சுற்றாய்வில், கடைசிகாலத்தில் தங்களுடைய அப்பாவை கவனித்துக்கொள்ள ஆசை இருக்கிறது என ஜப்பானிய பிள்ளைகளில் 87.8 சதவீதத்தினர் தெரிவித்ததாக அந்தக் கட்டுரை அறிக்கை செய்தது. ஆனால் அந்தச் செய்தித்தாளின் ஆங்கில பதிப்பில், அதே விஷயம் வேறொரு தலைப்புச் செய்தியின்கீழ் வெளிவந்தது. அது இவ்வாறு அச்சிடப்பட்டிருந்தது: “அப்பாக்கள், மகன்கள்: புறக்கணிக்கப்படும் குற்றச்சாட்டு.” ஜப்பானிய செய்தித்தாளை போலில்லாமல், இதே சுற்றாய்வின் மற்றொரு அம்சத்தை இந்தக் கட்டுரை சிறப்பித்து காட்டியது: ஒவ்வொரு வேலைநாளும் ஜப்பானிய அப்பாமார் தங்கள் பிள்ளைகளுடன் 36 நிமிடங்களே செலவிடுகின்றனர். மற்ற நாடுகளிலுள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் செலவிடும் நேரத்தை கவனியுங்கள்: மேற்கு ஜெர்மனி 44 நிமிடங்கள், ஐக்கிய மாகாணங்கள் 56 நிமிடங்கள்.
தங்களுடைய பிள்ளைகளோடு சிறிது நேரமே செலவிடுவது அப்பாமார் மட்டுமல்ல, வேலைக்கு போகும் அம்மாமாரும்தான். உதாரணமாக, குடும்ப பாரத்தை தாங்க ஒற்றையாக இருக்கும் அநேக அம்மாமாரும் வேலைபார்க்க வேண்டியிருக்கிறது. அதன் விளைவு? பெற்றோர்கள்—அப்பாமாரும் அம்மாமாரும்—பிள்ளைகளோடு செலவிடும் நேரத்தில் சரிவு.
12,000-க்கும் அதிகமான அமெரிக்க டீனேஜர்களை வைத்து 1997-ல் நடத்தப்பட்ட ஓர் ஆராய்ச்சி பின்வரும் விஷயத்தை கண்டுபிடித்தது: பெற்றோர்களுடன் நெருங்கிய உறவு வைத்துக்கொள்ளும் இளைஞர்கள் உணர்ச்சிப்பூர்வ அழுத்தத்தால் அவதியுறுவதும், தற்கொலை எண்ணங்கள் தலைதூக்குவதும், வன்முறையில் இறங்குவதும், அல்லது போதைப் பொருட்களுக்கு அடிமையாவதும் குறைவே. பெரியளவில் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்களில் ஒருவர் இவ்வாறு சொன்னார்: “பிள்ளைகளுடன் பெற்றோர்கள் நேரம் செலவழித்தால் தவிர, பிள்ளைகளுக்கு தேவைப்படும் சமயத்தில் அவர்களோடு இருந்தால் தவிர, அவர்களுடன் ஒரு நெருங்கிய உறவு சாத்தியமில்லை.” உங்கள் பிள்ளைகளுடன் உரையாடவும் கொஞ்சி மகிழவும் நேரம் செலவிடுவது மிக மிக முக்கியம்.
பேச்சு இடைவெளி
முக்கியமாக, வீட்டைவிட்டு வெகு தொலைவில் வேலைபார்க்கும் பெற்றோரைக் கொண்ட குடும்பங்களில் பேச்சுத்தொடர்பு முறிந்துபோவதற்கு அதிக சாத்தியம் உள்ளது. நிச்சயமாகவே, பேச்சு இடைவெளி என்பது வெகு தூரத்தில் வேலைபார்க்கும் பெற்றோர்களுடைய குடும்பங்களுக்கு மட்டுமே மட்டுப்பட்டதல்ல. சில பெற்றோர்கள் குடும்பத்தோடு வீட்டில் வசித்துவந்தாலும் இதே கதைதான், ஏனெனில் ‘விடிஞ்சா போனால் அடைஞ்சா வீடு திரும்புவதால்’ தங்களுடைய பிள்ளைகளோடு பேச முடிவதில்லை. பேச்சுத்தொடர்பு குறைவுபடுவதை ஈடுகட்ட பெற்றோர்கள் சிலர் வாரயிறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் குடும்பமாக நேரத்தை செலவிடுகின்றனர். தங்களுடைய பிள்ளைகளுடன் “தரமான” நேரம் செலவழிப்பதாக சொல்கின்றனர்.
ஆனால், அளவில் குறைவுபடுவதை தரத்தால் ஈடுகட்ட முடியுமா? ஆராய்ச்சியாளர் லாரன்ஸ் ஸ்டைன்பெர்க் பதிலளிக்கிறார்: “பொதுவாக, பெற்றோருடன் அதிக நேரத்தை செலவிடும் பிள்ளைகள் குறைந்தளவு நேரத்தை செலவிடும் பிள்ளைகளைவிட சிறந்து விளங்குகிறார்கள். அந்த நேர இழப்பை சரிகட்டுவது அதிக கஷ்டம் போல் தோன்றுகிறது. தரமான நேரத்திற்கு மிதமீறிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.” இப்படித்தான் பர்மிய பெண் ஒருத்தியும் உணருகிறாள். அவளுடைய கணவர்—ஒரு ஜப்பானிய மனிதனைப் போல—ஒவ்வொரு நாளும் ஜாமக்கோழி கூவும் நேரத்தில்தான் வீடு திரும்புகிறார். சனி ஞாயிறன்று தன்னுடைய குடும்பத்துடன் நேரம் செலவிட்டாலும், அவருடைய மனைவி சொல்கிறாள்: “சனி ஞாயிறுல வீட்டில் இருந்தாலும், வாரம்பூரா குடும்பத்தோடு இல்லாததை ஈடுகட்ட முடியாது. . . . வாரம் முழுக்க கொஞ்சம்கூட சாப்பிடாம எல்லா சாப்பாட்டையும் சனி ஞாயிறுல சாப்பிட்டுவிட முடியுமா?”
மனசாட்சிப்பூர்வமான முயற்சி தேவை
குடும்பத்தில் நல்ல பேச்சுத்தொடர்பை காத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வது செய்வதைவிட ரொம்ப சுலபம். ஆனால் வயிற்று பாட்டுக்கும் குடும்பத்தின் தேவைகளை கவனித்துக் கொள்ளவும் வேண்டியிருப்பதால் ஒரு தகப்பனோ வேலைக்கு போகும் தாயோ குடும்பத்தோடு நேரம் செலவிடுவது அவ்வளவு சுலபமல்ல. வீட்டைவிட்டு வெகுதூரம் சென்று சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்திலுள்ள அநேகர் தொலைபேசி மூலமாகவோ கடிதம் மூலமாகவோ தவறாமல் தொடர்புகொள்கின்றனர். ஆனால் வீட்டோடு சேர்ந்திருந்தாலும் இல்லாவிட்டாலும், குடும்பத்தோடு நல்ல பேச்சுத்தொடர்பை காத்துக்கொள்ள மனசாட்சிப்பூர்வமான முயற்சி தேவை.
குடும்பத்தோடு பேச்சுத்தொடர்பு கொள்வதை அசட்டை செய்கிற பெற்றோர் தங்களுடைய புறக்கணிப்புக்கு என்றாவது ஒருநாள் கூலி கொடுத்தே ஆகவேண்டும். தன்னுடைய குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்காத, அவர்களோடு சேர்ந்து சாப்பிடக்கூட செய்யாத ஒரு தகப்பன் பயங்கர விளைவுகளை எதிர்ப்பட்டார். அவருடைய மகன் முரடனாக மாறினான், அவருடைய மகளோ கடையிலிருந்து திருடியபோது கையும் களவுமாக பிடிபட்டாள். ஒரு ஞாயிற்றுக்கிழமை அந்தத் தகப்பன் கோல்ஃப் விளையாட செல்வதற்கு ரெடியாகிக் கொண்டிருந்தபோது, அவருடைய மகன் தன் உணர்ச்சிகளை கொட்டித் தீர்த்தான்: “இந்த வீட்டுல எல்லாமே அம்மாதானா? எதுக்கெடுத்தாலும் அம்மாதான். ஆனால் நீங்க . . . ,” என அந்தப் பையன் புலம்பினான்.
அந்த வார்த்தைகள் தகப்பனை சிந்திக்க வைத்தன. அதனால், ஆரம்பத்தில் குடும்பத்தோடு சேர்ந்து காலை டிஃபன் சாப்பிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். முதலில் அவரும் அவருடைய மனைவியும் மட்டுமே சேர்ந்து சாப்பிட்டார்கள். நாளாக ஆக அவர்களுடைய பிள்ளைகளும் சேர்ந்துகொண்டார்கள். சாப்பாட்டு மேஜை வட்டமேஜை மாநாடாக மாறியது. இது மாலைநேர சாப்பாட்டையும் சேர்ந்து சாப்பிட வழிவகுத்தது. இவ்விதமாக, மூழ்கவிருந்த தன் குடும்ப கப்பலை அவர் பாதுகாத்தார்.
கடவுளுடைய வார்த்தை தரும் உதவி
பிள்ளைகளுடன் உரையாட பெற்றோர்கள் நேரம் செலவிடும்படி பைபிள் உற்சாகப்படுத்துகிறது. தீர்க்கதரிசியாகிய மோசே மூலம் இஸ்ரவேலருக்கு இந்தக் கட்டளை கொடுக்கப்பட்டது: “இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக. இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பே[சு].” (உபாகமம் 6:4-7) ஆம், பிள்ளைகளுடைய மனதிலும் இருதயத்திலும் கடவுளுடைய வார்த்தைகளை பதியவைக்க விரும்பினால், குடும்பமாக சேர்ந்து நேரத்தை செலவிட பெற்றோராகிய நாம்தாமே முதலில் முயற்சியெடுக்க வேண்டும்.
முன்பு குறிப்பிடப்பட்ட 1997-ம் வருட சுற்றாய்வு 12,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க இளைஞரை வைத்து நடத்தப்பட்டது. அக்கறைக்குரிய விஷயம் என்னவென்றால், “ஒரு மதத்தை சேர்ந்தவர்கள் என்று சொன்ன ஆட்களில் . . . கிட்டத்தட்ட 88 சதவீதத்தினர் மதமும் ஜெபமும் பாதுகாப்பை தருவதாக அறிக்கை செய்தனர்” என அந்தச் சுற்றாய்வு வெளிப்படுத்தியது. வீட்டில் தகுந்த மத போதனை கொடுப்பது போதைப்பொருள் துஷ்பிரயோகம், உணர்ச்சிப்பூர்வ அழுத்தம், தற்கொலை, வன்முறை, இன்னும் இதுபோன்ற பழக்கங்களிலிருந்து இளைஞர்களைப் பாதுகாக்கிறது என்பது மெய் கிறிஸ்தவர்கள் கண்டறிந்த உண்மை.
குடும்பமாக சேர்ந்திருக்க நேரத்தை கண்டுபிடிப்பது மகா கஷ்டம் என சில பெற்றோர்கள் நினைக்கின்றனர். முக்கியமாக துணையின்றி தனியாக தவிக்கும் அம்மாமார் இவ்விதமாய் நினைக்கின்றனர். அவர்களுக்கு தங்களுடைய பிள்ளைகளுடன் சேர்ந்து சந்தோஷமாக நேரத்தைக் கழிக்க ஆசைதான், ஆனால் என்ன செய்வது? வேலைக்கும் போகவேண்டுமே. குடும்பமாக குழுமியிருக்க அருமையான நேரத்தை அவர்கள் எப்படி கண்டுபிடிப்பது? “நடைமுறையான ஞானத்தையும் யோசிக்கும் திறமையையும் காத்துக்கொள்” என்று பைபிள் உற்சாகப்படுத்துகிறது. (நீதிமொழிகள் 3:21, NW) குடும்பத்திற்காக நேரத்தை செலவழிக்க பெற்றோர்கள் “யோசிக்கும் திறமையை” பயன்படுத்தலாம். எப்படி?
வேலைக்குப் போய் நாள்முழுக்க கஷ்டப்பட்டு களைத்துப்போன தாயாக நீங்கள் இருந்தால், சாப்பாடு தயாரிப்பதில் உங்களுக்கு கூடமாட ஒத்தாசை செய்ய உங்கள் பிள்ளைகளிடம் கேட்டால் என்ன? இப்படி ஒன்றுசேர்ந்து நேரத்தை செலவழிப்பது ஒருவரோடொருவர் நெருங்கிவர வாய்ப்பளிக்கும். ஆரம்பத்தில், உங்களுடைய பிள்ளைகளை வேலையில் ஈடுபடுத்துவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடலாம். ஆனால் அது ஜாலியாகவும் நேரத்தை மிச்சப்படுத்துவதாகவும் இருப்பதை போகப்போக நீங்களே காண்பீர்கள்.
சனி ஞாயிற்றுக் கிழமைகளில் செய்யவேண்டிய வேலைகளின் ஒரு பெரிய பட்டியலே அப்பாவாகிய உங்களிடம் இருக்கலாம். இந்த வேலைகளில் சிலவற்றை ஏன் உங்களுடைய பிள்ளைகளோடு சேர்ந்து செய்யக்கூடாது? நீங்கள் ஒன்றுசேர்ந்து வேலை செய்யும்போது அவர்களோடு பேசலாமே. அவர்களுக்கு பிரயோஜனமான பயிற்சியளித்த மாதிரியும் இருக்கும், அவர்களோடு நேரம் செலவிட்ட மாதிரியும் இருக்கும். உங்களுடைய பிள்ளைகளின் மனதில் கடவுளுடைய வார்த்தையைப் பதியவைக்க, ‘நீங்கள் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், நடக்கிறபோதும்’—சொல்லப்போனால், கிடைக்கும் எல்லா சந்தர்ப்பத்திலும்— அவர்களிடம் பேசும்படி பைபிள் உங்களை உற்சாகப்படுத்துகிறது. உங்களுடைய பிள்ளைகளோடு ஒன்றுசேர்ந்து வேலைசெய்யும்போது பேச்சுத்தொடர்பு கொள்வது “நடைமுறையான ஞானத்தை” காண்பிப்பதாக இருக்கும்.
குடும்பத்தோடு நேரத்தை செலவிடுவது நித்திய நன்மைகளைத் தருகிறது. “ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு” என பைபிள் நீதிமொழி ஒன்று சொல்கிறது. (நீதிமொழிகள் 13:10) உங்களுடைய குடும்பத்துடன் உரையாட நேரத்தை ஒதுக்குங்கள். இப்படி செய்தால், அன்றாட வாழ்க்கையின் சவால்களை சமாளிக்க உங்களால் ஞானமான வழிநடத்துதல் கொடுக்க முடியும். இன்று கொடுக்கும் இப்படிப்பட்ட வழிநடத்துதல் நாளை நிறைய நேரத்தை மிச்சப்படுத்தும், மனவேதனையிலிருந்தும் உங்களை காக்கும். மேலும், உங்களுடைய சந்தோஷத்திற்கும் அவர்களுடைய சந்தோஷத்திற்கும் உறுதுணை புரியும். இப்படிப்பட்ட வழிநடத்துதல் கொடுப்பதற்கு, கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் உள்ள ஞான ஊற்றிலிருந்து மொண்டெடுக்க வேண்டும். உங்களுடைய பிள்ளைகளுக்கு கற்பிக்கவும் குடும்ப காரியங்களை சரியாக நிர்வகிக்கவும் அதை பயன்படுத்துங்கள், பலனடையுங்கள்.—சங்கீதம் 119:105.
[பக்கம் 4-ன் படம்]
பெற்றோருடன் நெருங்கிய உறவு வைத்துக்கொள்ளும் இளைஞர்கள் உணர்ச்சிப்பூர்வ அழுத்தத்தால் அவதியுறும் வாய்ப்பு குறைவு
[பக்கம் 5-ன் படம்]
உங்களுடைய குடும்பத்தோடு நேரம் செலவிடுவது நித்திய நன்மைகளைத் தருகிறது
[பக்கம் 6-ன் படம்]
உங்கள் பிள்ளையோடு சேர்ந்து வேலை செய்தால் அவர்களோடு பேசலாம், பயிற்சியும் கொடுக்கலாம்