சந்ததி இடைவெளியை நீங்கள் மூடமுடியுமா?
உலகம் முழுவதிலுமுள்ள பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளில் அவர்கள் காணும் மனப்போக்கினால் கலக்கமடைகிறார்கள். அவர்கள் வளர்ந்து வரும்போது அநேகமாக தங்களை விட்டு விலகிச் செல்வதைப் பெற்றோர் காண்கிறார்கள். ஒரு சந்ததி இடைவெளி உருவாகிறது. இது கடினமாயும் சிலருடைய விஷயத்தில் இதை இணைப்பது கூடாத காரியமாயும் இருக்கிறது. ஒருவேளை நீங்கள் இந்தப் பிரச்னையை எதிர்பட்டு, இதைக் குறித்துக் கவலைப்படுகிறவராக இருக்கலாம்.
ஏன் இடைவெளி?
பெற்றோர்களும் பிள்ளைகளும் அவர்களால் முடிந்த அளவு ஒருவரோடொருவர் பேசுவதில்லை என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஏன்? பிள்ளைகள் ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சியைப் பார்ப்பதில் 2 மணிநேரம் செலவிடும் போது, அவர்கள் தங்கள் அப்பாவோடு பேசுவதற்கு 25 நிமிடங்களையும் அம்மாவோடு பேசுவதற்கு 40 நிமிடங்களையும் மட்டுமே செலவழிக்கிறார்கள் என்பது ஜப்பானிய அரசாங்கத்தின் ஒரு கருத்தறிவிப்பாக இருக்கிறது.
அநேக குடும்பங்களில் பொருளாதார அழுத்தங்களின் காரணமாக, தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள பெற்றோர் இருவரும் வேலைக்குப் போக வேண்டிய அவசியம் இருப்பது மற்றொரு காரணமாகும். இது பிள்ளைகளோடு குறைவான அளவே நேரத்தைச் செலவிட அனுமதிக்கிறது. இதன் விளைவாக பெற்றோர்களும் பிள்ளைகளும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தாலும் அந்நியர்களாக மாறிவிடுகிறார்கள். சில சமயங்களில், பேச்சுத் தொடர்பு கொள்ள முயற்சி செய்யப்பட்டாலும் கூட சரியான புரிந்து கொள்ளுதல் இல்லாததால் தவறான திசையில் அது போய் விடுகிறது. ஒரு செய்தித் தாளின் தலையங்கம் சுட்டிக் காட்டிய விதமாகவே, அடிக்கடி பெற்றோர்கள், “கஷ்டப்பட்டு படி” அல்லது “உன் மேசையை ஒழுங்காக வை” என்பதாக அதிகாரத்தோடு உத்தரவுகளை மட்டுமே போட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது தானே ஒரு நபரைக் கட்டியெழுப்புவதோ அல்லது சந்ததி இடைவெளியை இணைப்பதோ இல்லை.
இடை வெளியை மூடுவது எப்படி
கனடாவில் பருவ வயதில் மனகுழப்பமடைந்திருந்த அநேகருக்கு ஆலோசனையைக் கொடுத்திருந்த ஒரு மனிதனின் ஆலோசனை: “செவி கொடுத்துக் கேட்க, செவி கொடுத்து கேட்க மனமுள்ள பெற்றோரே [கூச்சமான சுபாவமுள்ள பருவ வயதினருக்கு] மிகச் சிறந்த மருந்தாக இருக்கிறார்கள். பைபிளும் கூட “கேட்கிறதற்கு தீவிரமாயும் பேசுகிறதற்குப் பொறுமையாயும் கோபிக்கிறதற்கு தாமதமாயும் இருக்கும்”படியாகப் புத்திச் சொல்லுகிறது. (யாக்கோபு 1:19) எரிச்சலுடன் “அமைதியாயிரு!” அல்லது “நீ என்னைத் தொந்தரவு செய்து கொண்டிருக்கிறாய்!” என்பதாகச் சொல்லி பிள்ளையின் வாயை அடக்கி விடுவதே அநேகமாக பெற்றோர் செய்யும் தவறாக இருக்கிறது. பிள்ளையானவன் ஒவ்வொரு சமயமும் பேச முயற்சி செய்யும்போது, அவன் அடக்கப்படுவதாக உணர்ந்தால், படிப்படியாக தன்னுடைய பெற்றோரிடம் வருவதை அவன் நிறுத்திக்கொள்வான். சந்ததி இடைவெளி ஒன்று உருவாவது நிச்சயமாகிவிடும்.
மறுபட்சத்தில், ஏதாவது ஒரு வேலையைத் திட்டமிட்டு அதைக் குடும்பமாக சேர்ந்து செய்யலாம். வீட்டில் பழுது பார்க்கும் வேலையாக, ஓர் அறையை மறுபடியுமாக அலங்கரிப்பதாக, இதுவரையில் கவனிக்ப்படாத ஓர் இடத்துக்கு வர்ணம் பூசுவதாக அல்லது தோட்டத்தில் செடி வளர்ப்பதாக இருக்கலாம் ஒருவேளை தாயோடு சமையல் செய்வதாக அல்லது தகப்பனோடு உடைந்துபோன கருவியைப் பழுது பார்ப்பதாக, அது அவ்வளவு சிறிய ஒரு விஷயமாக இருக்கலாம். பெற்றோர்களும் பிள்ளைகளுமாகச் சேர்ந்து ஒரு காரியத்தில் ஈடுபடுவதே முக்கியமான காரியமாக இருக்கிறது. இது பேச்சுத் தொடர்புகளுக்குச் சாதகமான ஒரு சூழ்நிலையை உருவாக்குகிறது. இது பேச்சுத் தொடர்புக்குச் சாதகமான ஒரு சூழ்நிலையை உருவாக்குகிறது, ஆனால் உங்கள் பிள்ளைகள் செய்யும் வேலையில் அதிகமாகக் குறைகளைக் காணாதபடிக்கு அல்லது அவர்களிடமிருந்து அதிகத்தை எதிர்பார்க்காதபடிக்கு நீங்கள் கவனமுள்ளவர்களாயிருக்க வேண்டும்.
நிச்சயமாகவே ஒரு பிள்ளை தன்னுடைய வயதிலுள்ள தன் நண்பர்களோடு விளையாடவே விரும்புவான். ஆனால் இங்கு தானே சந்ததி இடைவெளியை இணைப்பதற்காக அல்லது அதைத் தவிர்ப்பதற்காகப் பிள்ளை விட்டுக்கொடுக்க வேண்டியவனாக இருக்கிறான். பெற்றோர்களும் கூட தங்களுடைய நேரத்தில் கொஞ்சத்தை விட்டுக்கொடுக்கவேண்டும். இது எதையாவது இழப்பதை அர்த்தப்படுத்தலாம். ஆனாலும் இது, பெற்றோர் தன்னுடைய பிள்ளைகளுக்குக் கொடுக்கக்கூடிய எந்த ஒரு பொருளையும்விட வெகு அதிக முக்கியமானதாக இருக்கிறது.
உதவி எங்கிருந்து வரக்கூடும்?
ஒரு பிள்ளையினுடைய வாழ்க்கையின் முற்பகுதி பெரும்பாலும் அவனுடைய பெற்றோர்களோடு மாத்திரமே செலவிடப்படுவதால், விலைமதிப்புள்ள வளர்ச்சிக்குரிய இந்த வருடங்களை நீங்கள் நிச்சயமாகவே வீணாக்க விரும்ப மாட்டீர்கள்.
என்றபோதிலும் உங்களுடைய பிள்ளைகளுக்கு எதைக் கற்பிப்பது என்பதைக் குறித்ததில் நீங்கள் சற்றுத் தடுமாற்றமான நிலையில் இருக்கலாம் மனிதன் அறிந்தவற்றில், மனிதன் நேர்த்தியான அறிவுரைகளின் ஊற்றுமூலமாக இருப்பதை அநேக பெற்றோர்கள் கண்டிக்கிறார்கள். பைபிளை உபயோகித்து, உயர்ந்த ஒழுக்கத் தராதரங்களையும், கடின உழைப்பையும், தன்னடக்கத்தையும் அதிகாரத்துக்கு மரியாதையையும் இன்னும் மற்ற அநேக சிறந்த குணங்களையும் உங்கள் பிள்ளைகள் அபிவிருத்தி செய்ய நீங்கள் உதவக்கூடும். இன்று பூமி முழுவதிலும் தங்களுடைய பிள்ளைகளைப் பயிற்றுவிப்பதில் பைபிளைப் பின்பற்றும் இலட்சக்கணக்கான பெற்றோர்கள் நீதிமொழிகள் 22:6-ன் உண்மையை உணர்ந்திருக்கிறார்கள். அது சொல்கிறது: “பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து அவன் முதிர் வயதிலும் அதை விடாதிருப்பான்.”
ஆனால் பெற்றோர் எவ்விதமாக தங்களுடைய பிள்ளைகளுக்குப் பைபிளை அறிமுகப்படுத்தலாம்? பிள்ளைகள் சிறியவர்களாக இருக்கையில், பைபிளை ஒன்றாகச் சேர்ந்து வாசிப்பது வெகு சுலபமான காரியமாகும். இவ்விதமாக செலவிடப்படும், நேரம் அதிக பிரயோஜனமாக இருக்கும். ஏனென்றால் அநேகமாக பிள்ளைகள் தாராளமாகப் பேச ஆரம்பிப்பார்கள். இவ்விதமாக ஒருவருக்கொருவர் நல்லெண்ணத்தையும் நம்பிக்கையையும் வளர்த்துக்கொள்ள முடியும்.
பிள்ளைகள் கதைகள் விரும்புகிறார்கள். பைபிள், கதைகள் நிறைந்த புத்தகமாக, இருக்கிறது. உவாட்ச்டவர் சொஸைட்டி வெளியிட்டிருக்கும் என்னுடைய பைபிள் கதை புத்தகம், பெற்றோர்களும் பிள்ளைகளும் பைபிளோடு அறிமுகமாவதற்கு உதவி செய்யும் மிகச் சிறந்த பிரசுரமாக இருக்கிறது. அநேக பெரிய வண்ணப்படங்களோடு கூட இந்தப் புத்தகத்தில் பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ள முக்கிய சம்பவங்களைக் கால வரிசைப்படி காண முடிகிறது.
யெகோவாவின் சாட்சிகளால் விநியோகிக்கப்படும் மற்றொரு நேர்த்தியான கருவி, பெரிய போதகருக்கு செவி கொடுத்தல் என்ற தலைப்பையுடைய புத்தகமாக இளம் பிள்ளைகளோடு சேர்ந்து படிப்பதற்காக இவை திட்டமிடப்பட்டிருக்கின்றன. வாழ்க்கையில் அவர்களுக்கு உதவி செய்ய இன்றியமையாத நியமங்களை இவை கற்பிக்கின்றன. ஒரு சில அதிகாரங்களின் “உண்மைப் பேசாத இருவர்,” “கொடுப்பதிலேயே அதிக சந்தோஷம்.” “இந்த விஷயங்களை உங்களுடைய பிள்ளைகளோடு கலந்து பேசுவது, பைபிளின் போதகங்களை நீங்களும் உங்களுடைய பிள்ளைகளும் நல்லவிதத்தில் புரிந்து கொள்ள உதவி செய்யும்.
ஒருவேளை உங்களுடைய பிள்ளைகள் பருவ வயதில் இருக்கலாம் அப்படியானால், “உன் இளமை-அதை மிக நன்றாய்ப் பயன்படுத்துதல்,” என்ற புத்தகம் பெற்றோராகிய உங்களுக்கு, உங்களுடைய பிள்ளைகளோடு பேசுவதற்கு ஓர் அற்புதமான கருவியாக இருக்கும் வளரிளைமைப் பருவத்தினரின் பிரச்னைகளைப் பற்றி நடைமுறையாக இந்தப் புத்தகம் பேசுகிறது. இந்த அதிகாரங்களைப் பாருங்கள். “ஆண்மை பருவத்துக்கு வளருதல்”, “பெண்மை பருவத்துக்கு வளருதல்”, “எப்படிப்பட்ட நண்பர்கள் உனக்கு வேண்டும்?” “வாழ்க்கையிலிருந்து உனக்கு வேண்டியதென்ன?”
இப்படிப்பட்ட புத்தகங்களை வெறுமென வாசிப்பதுதானே முழுமையான பதிலாக இருக்கிறது என்று நாங்கள் சொல்ல முயற்சி செய்யவில்லை. ஆனால் சரியான திசையில் இது ஒரு ஆரம்பமாக இருக்கிறது. பெற்றோர்கள் தாங்கள் போதிய அளவு முயற்சி செய்வதை உறுதி செய்து கொள்ளலாம். (எபேசியர் 6:4) பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் ஒரு பிரகாசமான எதிர்கால நம்பிக்கையும், ஐக்கியப்பட்ட ஒரு குடும்பமும் இதன் முடிவான பலனாக இருக்கும். உங்களுடைய வீட்டில் இப்படிப்பட்ட ஒரு ஏற்பாட்டை ஆரம்பிக்க உதவி செய்வதற்கு யெகோவாவின் சாட்சிகள் மகிழ்ச்சியுள்ளவர்களாக இருப்பார்கள்.-யோவான் 17:3. (g86 7/22)