சவுல்—கர்த்தர் தெரிந்துகொண்ட பாத்திரம்
தர்ஷு பட்டணத்தைச் சேர்ந்த சவுல், ஒருகாலத்தில் கிறிஸ்தவர்களை துன்புறுத்திய கொலைபாதகன். ஆனால் கர்த்தர் அவனுக்காக வித்தியாசமான ஓர் எதிர்காலத்தை வைத்திருந்தார். எதை சவுல் மிகத் தீவிரமாக எதிர்த்தானோ அதற்கே ஒரு முக்கிய பிரதிநிதியாகவிருந்தான். இயேசு சொன்னார்: “அவன் [சவுல்] புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்.”—அப்போஸ்தலர் 9:15.
‘கொடுமை செய்கிறவனாயிருந்த’ சவுல், இரக்கம் காண்பிக்கப்பட்டு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் ‘தெரிந்தெடுக்கப்பட்ட பாத்திரமாக’ ஆனபோது அவனுடைய வாழ்க்கை அடியோடு மாறியது. (1 தீமோத்தேயு 1:12, 13) ஸ்தேவானை கல்லெறிந்து கொல்வதிலும் இயேசுவின் மற்ற சீஷர்களை தாக்குவதிலும் சவுலிடமிருந்து பிரவாகம் போல வெளிப்பட்ட சக்திகள், அவன் கிறிஸ்தவ அப்போஸ்தலன் பவுலாக மாறியபோது முற்றிலும் வித்தியாசமான நோக்கத்திற்கு திசை திருப்பிவிடப்பட்டன. சவுலிடத்தில் இனிய பண்புகள் இருப்பதை இயேசு கண்டார் என்பதில் சந்தேகமில்லை. என்ன பண்புகள்? யார் அந்த சவுல்? மெய் வணக்கத்தை முன்னேற்றுவிப்பதில் அவனுடைய பின்னணி எப்படி அவனை பொருத்தமானவனாக ஆக்கியது? அவனுடைய அனுபவத்திலிருந்து நாம் எதையாவது கற்றுக்கொள்ள முடியுமா?
சவுலின் குடும்பப் பின்னணி
பொ.ச. 33 பெந்தெகொஸ்தேக்கு பிறகு ஸ்தேவானை கொலைசெய்த சமயத்தில், சவுல் ஒரு ‘வாலிபன்.’ சுமார் பொ.ச. 60-61-ல் பிலேமோனுக்கு கடிதம் எழுதுகையில், அவர் ‘முதிர்வயதுள்ளவராய்’ இருந்தார். (அப்போஸ்தலர் 7:58; பிலேமோன் 8) பண்டைய காலத்தில் வயதை கணக்கிடும் முறைப்படி, ‘வாலிபன்’ என்பது 24-க்கும் 40-க்கும் இடைப்பட்ட வயதையும், ஆனால் ‘முதிர்வயது’ என்பது 50 முதல் 56 வயதையும் அர்த்தப்படுத்தியிருக்கலாம் என அறிஞர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். ஆகவே, இயேசு பிறந்த சில வருடங்களுக்குப் பின்பு ஒருவேளை சவுல் பிறந்திருக்கலாம்.
அந்தச் சமயத்தில் யூதர்கள் உலகின் பல பாகங்களில் சிதறி இருந்தனர். கைப்பற்றப்படுதல், நாடுகடத்தப்படுதல், அடிமைத்தனம், வியாபாரம், குடிபெயர்தல் போன்ற காரணங்களால் யூதேயாவிலிருந்து எட்டு திக்கும் பரவியிருந்தனர். அவருடைய குடும்பத்தார் குடிபெயர்ந்து சென்ற யூதர்களாக இருந்தபோதிலும், நியாயப்பிரமாணத்தோடு அவர்களுக்கு இருந்த உண்மையான ஈடுபாட்டை சவுல் வலியுறுத்திக் காட்டினார். அவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “நான் எட்டாம் நாளில் விருத்தசேதனமடைந்தவன், இஸ்ரவேல் வம்சத்தான், பென்யமீன் கோத்திரத்தான், எபிரெயரில் பிறந்த எபிரெயன், நியாயப்பிரமாணத்தின்படி பரிசேயன்.” சவுல் தன்னுடைய கோத்திரத்தைச் சேர்ந்த பிரபலமானவரின்—இஸ்ரவேலின் முதல் ராஜாவின்—பெயரையே தனக்கும் வைத்திருந்தார். பிறப்பில் ஒரு ரோமனாக இருந்ததால், தர்ஷு பட்டணத்து சவுலுக்கு பவுலுஸ் என்ற லத்தீன் பெயரும் இருந்தது.—பிலிப்பியர் 3:5; அப்போஸ்தலர் 13:21; 22:25-29.
தன் தகப்பன்வழி மூதாதையரில் ஒருவர் குடியுரிமை பெற்றிருந்ததால் சவுல் ஒரு ரோமனாக பிறந்தார். எப்படி? அநேக சாத்தியங்கள் இருக்கின்றன. பிறப்பால் மட்டுமல்ல, விசேஷ தகுதிகளுக்காக, வெறுமனே அரசியல் தகுதிக்காக, அல்லது அரசாங்கத்திற்கு ஆற்றிய குறிப்பிடத்தக்க சேவைக்காக தனிநபர்களுக்கு அல்லது தொகுதிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டிருக்கலாம். ரோமனிடமிருந்து விடுதலை பெறும் அல்லது ரோம பிரஜையால் விடுதலை செய்யப்பட்ட ஓர் அடிமை பெறும் சுதந்திரம் அவனை ஒரு ரோமனாக்கும். அதைப் போலவே ரோம இராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஒருவரும் குடியுரிமை பெறமுடியும். ரோம குடியேற்ற பகுதிகளில் வசித்த உள்ளூர் வாசிகளும் காலப்போக்கில் ரோம பிரஜைகளாக முடியும். குறிப்பிட்ட சில காலங்களில், பெரும் தொகை கொடுத்து குடியுரிமை வாங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. குடியுரிமை எப்படி சவுலின் குடும்பத்திற்கு கிடைத்தது என்பது இன்னும் புதிராகவே இருக்கிறது.
ரோம மாகாணமாகிய சிலிசியாவின் (இப்பொழுது தென் துருக்கியில் இருக்கிறது) தலைநகரும் முக்கிய நகருமான தர்ஷு பட்டணத்திலிருந்து வந்தவர் சவுல் என்பது நமக்குத் தெரியும். அந்தப் பகுதியில் யூத சமுகத்தினர் பெருமளவில் வசித்துவந்தபோதிலும், அங்கிருந்த புறமத கலாச்சாரத்தை சவுல் நன்கு அறிந்திருப்பார். தர்ஷு பட்டணம் கிரேக்கர்களின் கல்வி மையமாக புகழ்பெற்றிருந்தது. அதோடு செல்வச் செழிப்புமிக்க பெரிய பட்டணமாகவும் விளங்கியது. முதல் நூற்றாண்டு ஜனத்தொகையை 3,00,000-க்கும் 5,00,000-க்கும் இடைப்பட்ட எண்ணிக்கை என மதிப்பிடுகின்றனர். அது, ஆசியா மைனர், சிரியா, மெசப்பதோமியாவுக்கு இடைப்பட்ட முக்கிய நெடுஞ்சாலையில் வியாபார கேந்திரமாக திகழ்ந்தது. தர்ஷு பட்டணம் செழிப்பான வியாபாரத்திற்கும் செழுமையான சமவெளிக்கும் பேர்பெற்றிருந்தது. அங்கே தானியங்களும் திராட்சையும் சணலும் விளைந்தன. அதன் செழிப்பான நெசவுத் தொழிலிலிருந்து வெள்ளாட்டு ரோமத்தாலான துணி கிடைத்தது; இதைக் கொண்டுதான் கூடாரங்கள் செய்யப்பட்டன.
சவுலின் கல்வி
சவுல் அல்லது பவுல், கூடாரம் கட்டுவதன் மூலம் தன்னையும் தன்னுடைய மிஷனரி வேலையையும் ஆதரித்துக்கொண்டார். (அப்போஸ்தலர் 18:2, 3; 20:34) கூடாரம் கட்டும் தொழில் அவருடைய சொந்த பட்டணமாகிய தர்ஷுசுக்கு பழக்கப்பட்ட ஒன்று. கூடாரம் கட்டும் தொழிலை சவுல் இளைஞனாக இருந்தபோது தன்னுடைய தந்தையிடமிருந்து கற்றிருக்கலாம்.
சவுலுக்கு இருந்த மொழி அறிவு—முக்கியமாக ரோம பேரரசின் பொதுமொழியாக இருந்த கிரேக்கில் புலமை பெற்றிருந்தது—அவருடைய மிஷனரி வேலைக்கு மிகவும் கைகொடுத்து உதவியது. (அப்போஸ்தலர் 21:37–22:2) அவர் பேசிய கிரேக்க மொழி மிகச் சிறந்தது என அவருடைய எழுத்துக்களை பகுப்பாய்வு செய்பவர்கள் சொல்கின்றனர். அவருடைய சொல்வளம் இலக்கிய நயமிக்கதாகவோ புலமைமிக்கதாகவோ இல்லை, ஆனால் அவர் அடிக்கடி மேற்கோள் காட்டிய அல்லது சுருக்கியுரைத்த எபிரெய வேதாகமத்தின் கிரேக்க மொழிபெயர்ப்பாகிய செப்டுவஜின்டை பிரதிபலிக்கிறது. இந்த அத்தாட்சியின் அடிப்படையில், ஒருவேளை யூத பள்ளியில் கிரேக்க மொழியில் சவுல் ஆரம்பக் கல்வியாவது பயின்றிருக்க வேண்டும் என பல்வேறு அறிஞர்கள் கருதுகின்றனர். “பண்டைய காலத்தில் மேம்பட்ட கல்வியை—அதுவும் கிரேக்க கல்வியை—இலவசமாக பயில முடியாது. பொருளாதார வசதி ஏதாவது இருந்திருக்க வேண்டும் என கருதப்படுகிறது” என சொல்கிறார் அறிஞர் மார்ட்டின் ஹெங்கல். சவுல் புகழ்மிக்க குடும்பத்திலிருந்து வந்தார் என்பதை அவர் பெற்ற கல்வியே பறைசாற்றுகிறது.
சவுலுக்கு ஏறக்குறைய 13 வயதாக இருந்தபோது, எருசலேமில்—தன்னுடைய வீட்டிலிருந்து சுமார் 840 கிலோமீட்டர் தூரத்தில்—தன்னுடைய பள்ளிப் படிப்பை தொடர்ந்திருக்கலாம். அவர் கமாலியேலின்—பரிசேய பாரம்பரியத்தில் மிகவும் உயர்வாக மதிக்கப்பட்ட பிரபல ஆசானின்—பாதத்தருகே கல்வி கற்றார். (அப்போஸ்தலர் 22:3; 23:6) அந்தப் படிப்பு—இன்றைய பல்கலைக்கழக படிப்பிற்கு சமம்—யூத மதத்தில் புகழ்பெறுவதற்கான வாய்ப்பு எனும் வாசலை திறந்து வைத்தது. a
நன்கு பயன்படுத்திக்கொண்ட திறமைகள்
கிரேக்க பண்பாட்டிலும் ரோம நகரத்திற்குரிய யூத குடும்பத்திலும் பிறந்த சவுல் மூன்று கலாச்சாரங்களை சேர்ந்தவர். பெருநகர வாழ்க்கையும் பன்மொழி புலமையும் பின்னணியாக பெற்ற அவரை ‘எல்லாருக்கும் எல்லாமாகும்படி’ செய்தது என்பதில் சந்தேகமில்லை. (1 கொரிந்தியர் 9:19-23) அவர் பெற்றிருந்த ரோம குடியுரிமை, பிற்பாடு தன்னுடைய ஊழியத்தை சட்டப்படி ஆதரிப்பதற்கும் ரோம பேரரசின் உயர் அதிகாரி முன்பு நற்செய்தியை பிரசங்கிப்பதற்கும் அவருக்கு உதவியது. (அப்போஸ்தலர் 16:37-40; 25:11, 12) நிச்சயமாகவே, சவுலின் பின்னணி, கல்வி, ஆள்தன்மை ஆகியவை உயிர்த்தெழுந்த இயேசுவுக்கு தெரிந்திருந்தன; அனனியாவிடம் இயேசு சொன்னார்: “நீ போ; அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான். அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபட வேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன்.” (அப்போஸ்தலர் 9:13-16) சவுலின் வைராக்கியம் சரியான திக்கில் செலுத்தப்பட்டபோது, தொலைதூர பிராந்தியங்களுக்கு ராஜ்ய செய்தியை பரப்புவதில் அது ஒரு கருவியாக இருந்தது.
சவுலை ஒரு விசேஷித்த வேலைக்காக இயேசு தெரிந்துகொண்டது கிறிஸ்தவ சரித்திரத்தில் ஓர் ஒப்பற்ற சம்பவம். ஆனால், இன்றைய கிறிஸ்தவர்கள் அனைவரிடமும் தனிப்பட்ட திறமைகளும் பண்புகளும் இருக்கின்றன, அவற்றை நற்செய்தியைப் பரப்புவதில் பயன்படுத்தலாம். இயேசு தம்மிடம் எதிர்பார்த்ததை சவுல் புரிந்துகொண்டபோது, அவர் பின்வாங்கவில்லை. ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிக்க தன்னால் இயன்ற அனைத்தையும் செய்தார். இதுவே உங்களுடைய விஷயத்திலும் உண்மையா?
[அடிக்குறிப்புகள்]
a கமாலியேலிடமிருந்து சவுல் பெற்ற கல்வியையும் அதன் முறையையும் பற்றி தெரிந்துகொள்ள காவற்கோபுரம் ஜூலை 15, 1996, பக்கங்கள் 26-9-ஐக் காண்க.
[பக்கம் 30-ன் பெட்டி/படம்]
ரோம குடியுரிமை பதிவுசெய்தலும் சான்றிதழும்
முறைப்படி பிறந்த ரோம பிரஜைகளுடைய பிள்ளைகளை பதிவுசெய்வதை இரண்டு சட்டங்களால் அகஸ்துராயன் ஏற்படுத்தினார். ஒன்று பொ.ச. 4-லும் மற்றொன்று பொ.ச. 9-லும் அமல்படுத்தப்பட்டது. பதிவுசெய்தல் பிறந்த 30 தேதிக்குள் செய்யப்பட வேண்டும். அந்த மாகாணத்திலுள்ள குடும்பம், தகுந்த பொது-ஆவண அலுவலகத்திலுள்ள மேஜிஸ்ட்ரேட் முன்பு உறுதிமொழி எடுக்க வேண்டும். அந்தக் குழந்தை முறைப்படி பிறந்தது என்றும் ரோம பிரஜை என்றும் குறிப்பிட வேண்டும். பெற்றோரின் பெயர்கள், பாலினம், குழந்தையின் பெயர், பிறந்த தேதி ஆகியவையும் பதிவுசெய்யப்பட வேண்டும். இந்தச் சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்பே, குடிமதிப்பு எழுதுவதன் மூலம் ரோம நகராட்சிக்குள்ளும், குடியேற்றத்திற்குள்ளும் வசித்துவந்த பிரஜைகளை பதிவுசெய்வது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டது.
தகுந்த முறையில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த ஆவணங்களை எடுத்துப்பார்ப்பதன் மூலம் ஒருவருடைய தகுதியை நிரூபிக்க முடியும். சான்றளிக்கப்பட்ட இத்தகைய பதிவேடுகளை மடிக்கக்கூடிய மரப்பலகைகள் போன்ற சிறிய பலகைகளில் பெற முடியும். ரோம குடியுரிமை தனக்கு இருப்பதாக பவுல் சொன்னபோது, அதை சான்றிதழ் மூலம் உறுதிப்படுத்தியிருக்க முடியும் என சில அறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். (அப்போஸ்தலர் 16:37; 22:25-29; 25:11) ரோம குடியுரிமை கிட்டத்தட்ட “புனித பண்பாக” கருதப்பட்டது, அதை வைத்திருப்பவருக்கு அநேக சலுகைகள் கிடைத்தன. அதனால் இப்படிப்பட்ட ஆவணங்களில் திருட்டுத்தனமாக மாற்றங்களைச் செய்வது மாபெரும் குற்றம். ஒருவருடைய தகுதியைக் குறித்து போலி சான்று வழங்குபவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
[படத்திற்கான நன்றி]
Historic Costume in Pictures/Dover Publications, Inc., New York
[பக்கம் 31-ன் பெட்டி/படம்]
சவுலின் ரோம பெயர்
ஒவ்வொரு ரோம ஆண் பிரஜையின் பெயருக்கும் குறைந்தபட்சம் மூன்று அம்சங்கள் இருந்தன. அவனுக்கு முதல் பெயர் ஒன்று இருந்தது, அடுத்ததாக குடும்பப் பெயர் (தன்னுடைய குலம் அல்லது கோத்திரத்தோடு சம்பந்தப்பட்ட) ஒன்று இருந்தது, அதோடு ஒரு பட்டப்பெயரும் இருந்தது. இதற்கு ஒரு சிறந்த உதாரணம் கேயுஸ் ஜூலியஸ் சீஸர். பைபிள் முழு ரோம பெயர்களையும் சொல்வதில்லை, ஆனால் அகிரிப்பாவுக்கு மார்கஸ் ஜூலியஸ் அகிரிப்பா என்ற பெயர் இருந்ததாக வரலாற்று ஆதாரங்கள் காட்டுகின்றன. கல்லியோனின் பெயர் லூஸியஸ் ஜூனியஸ் கல்லியோன். (அப்போஸ்தலர் 18:12; 25:13) மூன்று பெயர்களில் கடைசி இரண்டு பெயர்களைக் கொண்ட நபர்களுக்கான பைபிள் உதாரணங்கள்: பொந்தியு பிலாத்து (கல்வெட்டு கீழே), செர்கியு பவுல், கிலவுதியு லீசியா, பொர்க்கியு பெஸ்து.—அப்போஸ்தலர் 4:28; 13:7; 23:26; 24:27.
பவுலுஸ் என்பது சவுலுடைய முதல் பெயரா அல்லது அவருடைய பட்டப்பெயரா என்பதை உறுதிப்படுத்த எந்த ஆதாரமுமில்லை. ஒரு நபரை அவருடைய குடும்பத்தினரும் பழக்கமானவர்களும் வேறொரு பெயரால் அழைப்பது சர்வசாதாரணம். சவுல் என்ற பெயரைப் போன்று ரோம பெயரல்லாத ஒன்றை மாற்றுப்பெயராக பயன்படுத்தலாம். “[சவுல்] என்பதை ரோம பெயர் என ஒருபோதுமே அழைக்க முடியாது” என்று சொல்கிறார் ஒரு அறிஞர். “ஆனால் ஒரு ரோம பிரஜைக்கு அவருடைய சொந்த பெயர் புனைப்பெயராக கொடுக்கப்பட்டிருந்தால் தாராளமாக அவ்வாறு அழைக்கலாம்.” பன்மொழி பேசப்படும் இடங்களில், ஒருவர் தன்னுடைய பெயர்களில் எதைப் பயன்படுத்த விரும்புகிறார் என்பதை சூழ்நிலைமை தீர்மானிக்கலாம்.
[படத்திற்கான நன்றி]
Photograph by Israel Museum, ©Israel Antiquities Authority