‘பலியைவிட கீழ்ப்படிதலே சிறந்தது’
பண்டைக் கால இஸ்ரவேலில் முதன்முதல் அரியணையில் அமர்ந்த அரசர்தான் சவுல். அவர் ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசர், என்றாலும் கடைசியில் கீழ்ப்படியாமல் போய்விட்டார்.
சவுல் என்ன தவறுகள் செய்தார்? அவற்றைத் தவிர்த்திருக்க முடியுமா? அவரது வாழ்க்கை வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும்போது நாம் எவ்வாறு பயனடையலாம்?
அரசர் அறிமுகப்படுத்தப்படுகிறார்
சவுல் ஆட்சிபீடத்தில் அமருவதற்கு முன்பு, சாமுவேல் தீர்க்கதரிசி இஸ்ரவேலில் இறைவனுடைய பிரதிநிதியாக இருந்தார். இப்போது, சாமுவேலுக்குத் தள்ளாடும் வயது, அவருடைய மகன்களும் கடவுளுக்கு உத்தமமாய் நடக்கவில்லை. அதேசமயத்தில், எதிரிகளும் தேசத்திற்கு அச்சுறுத்தலாக இருந்துவந்தார்கள். தங்களை நியாயம் விசாரிக்க... யுத்தத்தில் வழிநடத்திச் செல்ல... ஓர் அரசர் வேண்டுமென்ற கோரிக்கையை இஸ்ரவேலின் மூப்பர்கள் சாமுவேல் முன் வைத்தார்கள். அப்போது, சவுலை அரசராக அபிஷேகம் செய்யச் சொல்லி சாமுவேலுக்கு யெகோவா கட்டளையிட்டார்; அதோடு, அவரிடம் இவ்வாறு கூறினார்: “அவன் என் ஜனத்தைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பான்.”—1 சா. 8:4-7, 20; 9:16.
சவுல் ‘இளமையும் அழகும்’ உள்ளவராய் இருந்தார். இருந்தாலும், புற அழகைத் தவிர அக அழகும் அவரிடம் பளிச்சிட்டன. ஆம், அவர் தாழ்மையுள்ளவராகவும் இருந்தார். உதாரணமாக, “நான் இஸ்ரவேல் கோத்திரங்களிலே சிறிதான பென்யமீன் கோத்திரத்தான் அல்லவா? பென்யமீன் கோத்திரத்துக் குடும்பங்களிலெல்லாம் என் குடும்பம் அற்பமானது அல்லவா? நீர் இப்படிப்பட்ட வார்த்தையை என்னிடத்தில் சொல்வானேன்” என்று சாமுவேலிடம் சவுல் கேட்டார். அவருடைய தகப்பன் கீஸ் “மகா பராக்கிரமசாலி,” என்றாலும் தன்னையும் தன்னுடைய குடும்பத்தையும் பற்றி சவுல் பெருமையடிக்கவில்லை.—1 சா. 9:1, 2, 21; பொது மொழிபெயர்ப்பு.
சவுலை யெகோவா அரசராக தேர்ந்தெடுத்திருக்கிறார் என எல்லாருக்கும் முன்பு சாமுவேல் பிரகடனப்படுத்தியபோது சவுல் நடந்துகொண்ட விதத்தைக் கவனியுங்கள். சவுலை சாமுவேல் முதலில் தனியாக அபிஷேகம் செய்து, அவரிடம் இவ்வாறு கூறினார்: ‘உன் கைக்கு வந்ததை நீ செய். ஆண்டவர் உன்னோடு இருக்கிறார்.’ அதற்குப்பின், யெகோவாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசர் யாரெனத் தெரியப்படுத்துவதற்காக எல்லா மக்களையும் தீர்க்கதரிசி கூடிவரச் செய்தார். ஆனால், யார் அந்த அரசர் என்பதை சாமுவேல் அடையாளம் காட்ட முயன்றபோது அவரைக் காணவில்லை. சவுல் வெட்கப்பட்டு ஒளிந்துகொண்டார். அப்போது, அவர் எங்கே இருக்கிறார் என யெகோவா சுட்டிக்காட்டினார், பின்பு சவுல் அரசராக அறிவிக்கப்பட்டார்.—1 சா. 10:7, 20-24.
போர்க்களத்தில்
சவுல் ஒரு கோழை என மற்றவர்கள் நினைத்திருக்கலாம்; ஆனால், சீக்கிரத்திலேயே தான் அஞ்சா நெஞ்சம் படைத்தவர் என்பதை நிரூபிக்க ஆரம்பித்தார். இஸ்ரவேலருடைய ஒரு நகரத்தை அம்மோனியர் அச்சுறுத்தியபோது ‘தேவனுடைய [சக்தி] அவர்மேல் செயல்பட ஆரம்பித்தது.’ அவர் படைவீரர்களைக் கூடிவரும்படி உத்தரவிட்டு... அவர்களை ஒழுங்குபடுத்தி... போருக்கு வழிநடத்திச் சென்று... வெற்றி கண்டார். ஆனால், ‘இன்று யெகோவா இஸ்ரவேலுக்கு இரட்சிப்பை அருளினார்’ என்று சொல்லி அவருக்கே புகழ்மாலை சூட்டினார்.—1 சா. 11:1-13.
சவுலிடம் நல்ல குணங்களும் கடவுளின் ஆசியும் குடிகொண்டிருந்தன. அதோடு, யெகோவாவின் சக்திதான் தனக்கு உதவுகிறது என்பதையும் உணர்ந்திருந்தார். என்றாலும், இஸ்ரவேலரும் அவர்களின் ராஜாவும் வெற்றிமேல் வெற்றி பெற எது முக்கியம்? “நீங்கள் கர்த்தருடைய வாக்குக்கு விரோதமாய்க் கலகம் பண்ணாமல் கர்த்தருக்குப் பயந்து, அவரைச் சேவித்து, அவருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்தால், நீங்களும் உங்களை ஆளுகிற ராஜாவும் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றுகிறவர்களாயிருப்பீர்கள்” என்று இஸ்ரவேலரிடம் சாமுவேல் சொன்னார். இஸ்ரவேலர் கடவுளுக்கு உண்மையாய் இருந்தால் எது உறுதி? “கர்த்தர் தம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தம் தமது ஜனத்தைக் கைவிடமாட்டார்” என்பது உறுதி; ஏனென்றால், ‘கர்த்தர் உங்களைத் தமக்கு ஜனமாக்கிக்கொள்ளப் பிரியமாயிருந்தார்’ என்று சாமுவேல் சொன்னார்.—1 சா. 12:14, 22.
கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற கீழ்ப்படிதல் ரொம்ப முக்கியம், அன்றும் சரி இன்றும் சரி. யெகோவாவின் ஊழியர்கள் அவருடைய ஆணைகளுக்கு அடிபணியும்போது அவர் ஆசி வழங்குகிறார். ஆனால், அடிபணியாவிட்டால் ...?
“அறிவீனமாய் செயல்பட்டீர்”
பெலிஸ்தருக்கு எதிராக சவுல் எடுத்த அடுத்த கட்ட அதிரடி நடவடிக்கையினால் அவர்களிடமிருந்து பலமான எதிர்ப்பைச் சந்தித்தார். அவர்கள் சவுலுக்கு எதிராக ‘கடற்கரை மணலளவு வீரர்களோடு திரண்டுவந்தனர்.’ “இஸ்ரயேலர் தங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியினால் இன்னலுற்று குகைகளிலும், புதர்களிலும், பாறைகளிலும், பள்ளங்களிலும் ஒளிந்து கொண்டனர்.” (1 சா. 13:5, 6, பொ.மொ.) இப்போது சவுல் என்ன செய்வார்?
பலிசெலுத்த கில்காலில் சவுலைச் சந்திப்பதாக சாமுவேல் அவரிடம் சொல்லியிருந்தார். சவுல் காத்திருந்தார், சாமுவேல் வர தாமதிப்பதுபோல் தெரிந்தது, சவுலின் வீரர்களும் அவரைவிட்டுச் சிதறிப்போனார்கள். அதனால், சவுலே துணிந்து பலி செலுத்தினார். ஆனால், அடுத்த கணமே சாமுவேல் வந்துவிட்டார். சவுல் செய்ததைக் கேட்ட சாமுவேல்: “‘நீர் அறிவீனமாய்ச் செயல்பட்டீர். உம் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைப்படி நீர் நடக்கவில்லை. இல்லையேல், ஆண்டவர் இஸ்ரயேல்மீது உமது அரசை என்றென்றும் நிறுவியிருந்திருப்பார். ஆனால் உமது அரசு நிலைக்காது. ஆண்டவர் தம் மனத்திற்கு ஏற்ப ஒருவரைத் தமக்கெனத் தேடி அவரையே தம் மக்களின் தலைவராக நியமித்துள்ளார். ஏனெனில் ஆண்டவர் கட்டளையின்படி நீர் நடக்கவில்லை’ என்றார்.”—1 சா. 10:8; 13:8-14, பொ.மொ.
சவுலுக்கு விசுவாசம் குறைந்துவிட்டது; அதனால், பலி செலுத்துவதற்கு சாமுவேல் வரும்வரை காத்திருக்காமல் துணிகரமாய் கடவுளுடைய கட்டளையை மீறினார். இஸ்ரவேலின் முன்னாள் படைத்தளபதி கிதியோனுக்கும் சவுலுக்கும் எவ்வளவு வித்தியாசம்! 32,000 படைவீரர்களை 300-ஆக குறைக்கும்படி கிதியோனிடம் யெகோவா சொன்னார்; சொன்னபடியே கிதியோனும் செய்தார். ஏன்? யெகோவாமீது அவருக்கு விசுவாசம் இருந்தது. யெகோவாவின் உதவியுடன் 1,35,000 எதிரி வீரர்களைத் தோற்கடித்தார். (நியா. 7:1-7, 17-22; 8:10) சவுலுக்கும் யெகோவா உதவி செய்திருப்பார். ஆனால், சவுல் கீழ்ப்படியாமல் போனதால் இஸ்ரவேலைப் பெலிஸ்தர் சூறையாடினார்கள்.—1 சா. 13:17, 18.
நெருக்கடியான சூழ்நிலையில், நாம் எப்படித் தீர்மானம் எடுப்போம்? விசுவாசத்தை இழந்தவர்களின் கண்ணோட்டத்தில் பார்த்தால் கடவுளுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் போவது சரிதான் என்று தோன்றலாம். சாமுவேல் இல்லாத பட்சத்தில், தான் செய்தது சரியே என சவுல் நினைத்திருக்கலாம். ஆனால், கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெறத் துடிப்பவர்கள் எந்தவொரு விஷயத்திற்கும் பைபிள் நியமத்தைப் பின்பற்றுவதே சரியான வழி.
சவுலை யெகோவா நிராகரிக்கிறார்
அமலேக்கியரோடு யுத்தம் செய்தபோது சவுல் இன்னொரு தவறையும் செய்துவிட்டார். இஸ்ரவேலர் எகிப்திலிருந்து புறப்பட்டு வந்தபோது அமலேக்கியர் அவர்களைத் திடீரென தாக்கினார்கள்; அதனால், கடவுள் அவர்களைக் கண்டனம் செய்திருந்தார். (யாத். 17:8; உபா. 25:17, 18) அதோடு, நியாயாதிபதிகளின் காலத்தில் மற்றவர்களோடு கூட்டுச் சேர்ந்துகொண்டு கடவுளுடைய மக்களைத் திரும்பவும் தாக்கினார்கள். (நியா. 3:12, 13; 6:1-3, 33) ஆகவே, அமலேக்கியரை அடியோடு ஒழித்துக்கட்டும்படி சவுலுக்கு யெகோவா கட்டளையிட்டிருந்தார்.—1 சா. 15:1-3.
யெகோவாவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து எதிரிகளான அமலேக்கியரைத் துடைத்தழிக்க வேண்டும், அவர்களுக்குச் சொந்தமானதையெல்லாம் அழிக்க வேண்டும்; ஆனால் சவுல் என்ன செய்தார்? அவர்களுடைய அரசனை சிறைபிடித்து, கொழுத்த மிருகங்களையெல்லாம் சொந்தமாக்கிக் கொண்டார்! சாமுவேல் இதைப் பற்றிக் கேட்டபோது சவுல் எப்படிப் பதில் அளித்தார்? “ஜனங்கள் ஆடுமாடுகளில் நலமானவைகளை உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படிக்குத் தப்பவைத்தார்கள்” என்று சொல்லி மக்கள்மீது பழி போட்டார். சவுல் அந்த மிருகங்களைப் பலி செலுத்துவதற்காக ஓட்டி வந்தாரோ இல்லையோ, கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் போனார். அவர் இனிமேலும் ‘தன்னுடைய பார்வைக்குச் சிறியவராய்’ இல்லை. அதனால்தான், சவுல் கீழ்ப்படியவில்லை என்று இறைவனின் தீர்க்கதரிசி சுட்டிக்காட்டினார். ‘கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதல் உத்தமம். . . . நீர் கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தபடியினாலே, அவர் உம்மை ராஜாவாயிராதபடி புறக்கணித்துத் தள்ளினார்’ என்று சாமுவேல் சொன்னார்.—1 சா. 15:15, 17, 22, 23.
யெகோவா தம் சக்தியையும் ஆசியையும் சவுலிடமிருந்து எடுத்துக்கொண்ட பிறகு, “ஒரு பொல்லாத ஆவி” இஸ்ரவேலின் முதல் அரசரை ஆட்டிப்படைக்க ஆரம்பித்தது. தாவீதின்மீது, அதாவது பிற்காலத்தில் யெகோவா முடிசூட்டப்போகும் மனிதன்மீது, அவர் சந்தேகப் பார்வை வீசினார், பொறாமைப்பட்டார். ஏன், தாவீதைக் கொலை செய்யக்கூட பலதடவை முயன்றார். ‘[யெகோவா] தாவீதோடு இருக்கிறார்’ என்பதை சவுல் அறிந்து “தான் உயிரோடிருந்த நாளெல்லாம் தாவீதுக்குச் சத்துருவாயிருந்தான்” என்று பைபிள் சொல்கிறது. இன்னும் சொல்லப்போனால், ஒரு மிருகத்தை வேட்டையாடுவது போல் தாவீதை வேட்டையாடினார்; 85 ஆசாரியர்களையும் சில பெண்களையும் பிள்ளைகளையும்கூட தீர்த்துக் கட்டினார். யெகோவா சவுலை கைவிட்டதில் ஆச்சரியமே இல்லை!—1 சா. 16:14; 18:11, 25, 28, 29; 19:10, 11; 20:32, 33; 22:16-19.
பெலிஸ்தர் திரும்பவும் தாக்க வந்தபோது சவுல் உதவிக்காக சூனியக்காரியிடம் குறிகேட்க சென்றார். அடுத்த நாள், போரில் படுகாயமடைந்து தற்கொலை செய்துகொண்டார். (1 சா. 28:4-8; 31:3, 4) இஸ்ரவேலின் முதல் அரசருடைய கீழ்ப்படியாத போக்கைப் பற்றி பைபிள் இப்படி விவரிக்கிறது: “சவுல் தம் துரோகங்களை முன்னிட்டு மடிந்தார். அவர் ஆண்டவர் கட்டளையைக் கடைப்பிடிக்காமல் அவருக்குத் துரோகம் செய்தார். மேலும் இறந்தோர் ஆவியிடம் ஆலோசனை கேட்டார்; ஆனால், ஆண்டவரிடம் ஆலோசனை கேட்கவில்லை.”—1 நா. [குறிப்பேடு] 10:13, 14, பொ.மொ.
பலியைவிட யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதே சிறந்தது என்பதை சவுலின் உதாரணம் காட்டவில்லையா? “நாம் கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதே அவர்மீது அன்பு காட்டுவதாகும்; அவருடைய கட்டளைகள் பாரமானவை அல்ல” என்று அப்போஸ்தலன் யோவான் எழுதினார். (1 யோ. 5:3) நாம் எப்போதுமே இதை மறந்துவிடக்கூடாது: கடவுளோடு காலமெல்லாம் நட்புறவு வைத்துக்கொள்ள கீழ்ப்படிதலே ஆணிவேர்.
[பக்கம் 21-ன் படம்]
ஆரம்பத்தில் சவுல் தாழ்மையுள்ளம் படைத்தவராய் இருந்தார்
[பக்கம் 23-ன் படம்]
‘பலியைவிட கீழ்ப்படிதலே சிறந்தது’ என்று சவுலிடம் சாமுவேல் ஏன் சொன்னார்?