நேரமும் நித்திய காலமும்—நாம் முழுமையாக புரிந்திருக்கிறோமா?
“நேரம் என்பது மனிதனால் புரிந்துகொள்ள முடியாத வினோதமான ஒன்றாக தோன்றுகிறது” என ஓர் என்ஸைக்ளோப்பீடியா கூறுகிறது. எனவே நேரத்தை எளிய வார்த்தைகளில் விளக்க முற்பட்டால் தோல்விதான் மிஞ்சும். நேரம் “கடந்து போகிறது,” “செல்கிறது,” “பறந்துபோகிறது,” நாம் “காலவோட்டத்தில்” பயணம் செய்கிறோம் என்றெல்லாம் கூறலாம். ஆனால் உண்மையில் எதைப்பற்றி பேசுகிறோம் என அறியாமலேயே நாம் பிதற்றிக்கொண்டிருக்கலாம்.
நேரம், “இரண்டு நிகழ்ச்சிகளுக்கு இடையிலான தூரம்” என விளக்கப்படுகிறது. ஆனாலும், நேரம் நிகழ்ச்சிகளை சார்ந்தில்லை என்பதே நாம் அனுபவத்தால் கண்டறிந்த உண்மை. ஏதோவொரு காரியம் நிகழ்ந்தாலும் நிகழாவிட்டாலும் நேரம் தன் போக்கில் போய்க்கொண்டே இருக்கிறது. ‘நேரம் என ஒன்றுமே இல்லை, அது நம்முடைய கற்பனையின் விளைவே’ என்கிறார் ஒரு தத்துவஞானி. நம்முடைய அவ்வளவு அனுபவமும் நேரத்தின்மீதே சார்ந்திருக்க, அது வெறுமனே நம்முடைய கற்பனையின் விளைவுதான் என சொல்ல முடியுமா?
நேரம்—பைபிளின் கருத்து
நேரத்தை மனிதன் முழுமையாக புரிந்துகொள்ள முடியாது என்பதனால் தானோ என்னவோ அதைப் பற்றிய எந்தவொரு விளக்கத்தையும் பைபிள் தருவதில்லை. விண்வெளியின் எல்லை நம் புத்திக்கு எட்டாதிருப்பதைப் போலவே இதுவும் நம் புத்திக்கு எட்டாமல் இருக்கிறதல்லவா? கடவுள் மட்டுமே முழுமையாக புரிந்துகொள்ள முடிந்தவற்றில் நேரமும் ஒன்று. ஏனென்றால் அவர் மட்டுமே, “அநாதியாய் என்றென்றைக்கும்” உயிரோடிருக்கிறவர்.—சங்கீதம் 90:2.
பைபிள், நேரத்தை வரையறுக்கவில்லை என்றாலும் நேரம் நிஜமான ஒன்று என்றே அது கூறுகிறது. ஆரம்பத்தில் கடவுள், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் போன்ற ‘சுடர்களைப்’ படைத்தார் என அது கூறுகிறது; அவை நேரத்தைக் குறிப்பவையாக, “அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும்” கணிப்பதற்காக படைக்கப்பட்டன. பைபிளில் பதிவுசெய்யப்பட்ட அநேக நிகழ்ச்சிகள் காலவோட்டத்தில் குறிப்பாக எந்தச் சமயத்தில் நிகழ்ந்தன என்பது தெளிவாக பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. (ஆதியாகமம் 1:14; 5:3-32; 7:11, 12; 11:10-32; யாத்திராகமம் 12:40, 41) நித்திய காலம் என்ற கடவுளுடைய ஆசீர்வாதத்தை, அதாவது என்றென்றும் வாழும் நம்பிக்கையை நாம் பெறவேண்டுமென்றால் நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும் பைபிள் கூறுகிறது.—எபேசியர் 5:15, 16.
நித்திய ஜீவன்—அது சாத்தியமா?
நேரத்தை முழுமையாக புரிந்துகொள்ள முயலுவதே அநேகருக்கு கடினமாயிருக்கிறது. எனவே நித்திய ஜீவன் அல்லது என்றென்றும் வாழ்வது என்ற எண்ணம் அவர்களை இன்னும் அதிகமாக குழப்புகிறது. இதற்கு ஒரு காரணம், நேரம் என நாம் அறிந்திருப்பதெல்லாம் பிறப்பு, வளர்ச்சி, முதுமை, மரணம் என்ற சுழற்சியோடு சம்பந்தப்பட்டிருப்பதனால் இருக்கலாம். ஆகவே, நேரம் கடந்துபோவதை நாம் வயதாவதோடு சம்பந்தப்படுத்தியே பார்க்கிறோம். வேறு விதமாக சிந்தித்துப் பார்ப்பது, நேரம் பற்றிய நம் கருத்தின் வரம்பை மீறுவதாகவே அநேகருக்கு தோன்றுகிறது. ஆகவே, ‘உயிருள்ள ஒவ்வொரு சிருஷ்டியும் முதுமையடைகையில் மனிதன் மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்கமுடியும்?’ என்ற கேள்வியை எழுப்புகின்றனர் சிலர்.
இவ்வாறு நியாயம் பேசுபவர்கள், மற்ற சிருஷ்டிகளைவிட மனிதன் எத்தனையோ விதங்களில் ஏற்கெனவே வித்தியாசப்பட்டிருக்கிறான் என்ற உண்மையை மறந்துவிடுகின்றனர். உதாரணமாக, மனிதனுக்கிருக்கும் பகுத்தறிவு மிருகங்களுக்கு இல்லை. அவற்றிற்கு படைப்புத் திறன் இருப்பதாக சிலர் உரிமைபாராட்டினாலும் இயல்புணர்வை மீறி அவற்றால் ஒன்றுமே செய்யமுடியாது. மனிதனுக்கிருக்கும் கலை ரசனை, அன்பு காட்டுதல், மனமார பாராட்டுதல் போன்ற திறமைகளும் அவற்றிற்கு இல்லை. இந்தக் குணங்களும் திறமைகளும் வாழ்க்கையை அதிக சுவை மிகுந்ததாக்குகின்றன. இவையனைத்தையும் அதிகமாக பெற்றிருக்கும் மனிதன், வாழ்க்கை என்று வரும்போது ஏன் கூடுதலான நேரத்தையும் பெற்றிருக்கக் கூடாது?
மறுபட்சத்தில், சிந்தனை திறனில்லா மரங்கள் சில சமயங்களில் ஆயிரக்கணக்கான வருடங்கள் வாழ்கின்றன; ஆனால் அறிவுத்திறனுள்ள மனிதனோ சராசரியாக 70 முதல் 80 வருடங்கள்தான் வாழ்கிறான் என்பது வேடிக்கையாக இல்லையா? படைப்பாற்றலோ கலைத்திறனோ இல்லாத ஆமைகள் 200-க்கும் அதிகமான வருடங்கள் வாழும்போது இந்தத் திறமைகளை ஏராளமாக பெற்றிருக்கும் மனிதன் அவற்றைவிட பாதிக்கும் குறைவான வருடங்களே வாழ்வது எந்த விதத்தில் நியாயம்?
நேரத்தையும் நித்தியத்தையும் மனிதன் முழுமையாக புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் நித்திய ஜீவன் என்ற நம்பிக்கை பைபிளில் உறுதியாக ஆதாரம் கொண்டதே. ஏன், “நித்திய ஜீவன்” என்ற வார்த்தை சுமார் 40 தடவை பைபிளில் உள்ளதே. ஆனால், மனிதன் என்றென்றும் வாழவேண்டும் என்பதே கடவுளுடைய நோக்கம் என்றால் அது ஏன் இன்றுவரை உண்மையாகவில்லை? இந்தக் கேள்விக்கான பதிலை அடுத்தக் கட்டுரையில் ஆராய்ந்து பார்ப்போமா?