ஏன் நேரமே இல்லை?
நேரம். இந்த வார்த்தைக்கு சரியான விளக்கம் கேட்டால் தலையை சொறிவோம். ஆனால் போதுமான நேரம் இருக்கிறதா என்று கேட்டால் இல்லவே இல்லை என தலையை ஆட்டுவோம். அது பஞ்சாய் பறந்துவிடுகிறது என்பதும் நமக்கு தெரியும். சொல்லப்போனால், “எங்கங்க நேரம் கிடைக்குது” என்றுதான் அங்கலாய்ப்போம்.
இருப்பினும், 1877-ல் ஆங்கில கவிஞர் ஆஸ்டின் டாப்சன் இதற்கு சரியான விளக்கம் அளித்தார். அவர் சொன்னார்: “நேரம் போகிறது என்றா நீங்கள் சொல்கிறீர்கள்? இல்லை இல்லை, நேரம் இருந்துகொண்டேதான் இருக்கிறது, நாம்தான் போகிறோம்.” 1921-ல் டாப்சன் காலமானார். அவர் போய்ச் சேர்ந்து கிட்டத்தட்ட 80 வருஷங்கள் கடந்துவிட்டன. ஆனால் நேரமோ இன்னும் தொடர்கிறது.
நேரத்திற்கு பஞ்சமே இல்லை
மனித சிருஷ்டிகரைப் பற்றி பைபிள் நமக்கு சொல்கிறது: “பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும் உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர்.” (சங்கீதம் 90:2) அல்லது தி நியூ ஜெருசலேம் பைபிள் விளக்குகிறபடி, ‘நித்திய காலத்திற்கும் தேவனாயிருக்கிறீர்.’ ஆகவே, கடவுள் இருக்கும்வரை நேரமும் நீடித்திருக்கும்—என்றென்றும்!
நித்திய காலத்துக்குமான நேரம் கடவுள்வசம் இருக்கிறது. ஆனால் இதற்கு நேர் எதிரிடையாக மனிதனைப் பற்றி நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “எங்கள் அனைத்து வாழ்நாள்களும் உமது சினத்தால் முடிவுக்கு வந்துவிட்டன; எங்கள் ஆண்டுகள் பெருமூச்செனக் கழிந்துவிட்டன. எங்கள் வாழ்நாள் எழுபது ஆண்டுகளே; வலிமை மிகுந்தோர்க்கு எண்பது; அவற்றில் பெருமைக்கு உரியன துன்பமும் துயரமுமே! அவை விரைவில் கடந்துவிடுகின்றன, நாங்களும் பறந்து விடுகின்றோம்.”—சங்கீதம் [திருப்பாடல்கள்] 90:9, 10, பொது மொழிபெயர்ப்பு.
மனிதன் என்றென்றும் வாழவேண்டும் என்பதே கடவுளுடைய நோக்கம் என பைபிள் தெளிவாக போதிக்கிறது. அப்படியானால், இன்று வாழ்நாள் ஏன் மிக குறுகியதாக இருக்கிறது? (ஆதியாகமம் 1:27, 28; சங்கீதம் 37:29) வரையறையற்ற காலம் வாழவே கடவுள் நோக்கம் கொண்டார் என்றால், மிகச் சிறந்த சூழ்நிலையிலும் ஏன் மனிதர்கள் சராசரியாக 30,000 நாட்களுக்கும் குறைவாகவே வாழ்கிறார்கள்? ஏன் மனிதருக்கு கொஞ்ச காலமே இருக்கிறது? இந்தப் பரிதாப நிலைமைக்கு யார் அல்லது எது காரணம்? பைபிள் இதற்கு தெளிவான மற்றும் திருப்திகரமான பதில்களை தருகிறது. a
எப்போதுமே நேரம் இல்லை
சமீப ஆண்டுகளில் வாழ்க்கை ரொம்ப வேகமாக போகிறது என்பதை முதியோர் ஒப்புக்கொள்வர். கடந்த 200 வருடங்களில், ஒரு வாரத்திற்கான வேலைநேரம் 80-லிருந்து 38 மணிநேரமாக குறைந்துள்ளது என டாக்டர் ஸிபிளி ஃபிரிச் என்ற ஒரு பத்திரிகை எழுத்தாளர் குறிப்பிட்டார். “இருந்தாலும், நேரமே இல்லை என்ற அங்கலாய்ப்பு மட்டும் அடங்கவே இல்லை.” அவள் தெளிவுபடுத்துகிறாள்: “கொஞ்சம்கூட நேரமே இல்லை; காலம் பொன் போன்றது; மூச்சுவிடக்கூட நேரமில்லை; வாழ்க்கையே அரக்கபறக்கத்தான் போய்க்கொண்டிருக்கிறது.”
பாட்டன் முப்பாட்டன் காலத்தில் யாருமே கனவிலும் நினைத்துப்பார்க்காத சந்தர்ப்பங்களையும் சாத்தியங்களையும் புதிய சாதனைகள் திறந்து வைத்துள்ளன. ஆனால், ஏகப்பட்ட வேலையில் ஈடுபடுவதற்கு எந்தளவுக்கு அதிக சாத்தியமிருக்கிறதோ அந்தளவுக்கு அதிக ஏமாற்றமும் இருக்கிறது—ஏனெனில் அதைச் செய்வதற்கு இருக்கும் நேரமும் கொஞ்சமே. இப்போதெல்லாம், உலகின் பல பகுதிகளில், ஜனங்கள் கடிகாரத்தைப் பார்த்துப் பார்த்துதான் வாழ்க்கையையே ஓட்டுகிறார்கள், ஒரு வேலையை முடித்து அடுத்த வேலை என அவதியவதியாக தாவுகிறார்கள். அப்பா காலை 7:00 மணிக்கு வேலைக்கு சென்றாக வேண்டும், அம்மா காலை 8:30-க்கு பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்ப வேண்டும், தாத்தா காலை 9:40-க்கு டாக்டரிடம் போக வேண்டும், நாம் அனைவரும் மாலை 7:30 மணிக்கெல்லாம் ஒரு முக்கியமான கூட்டத்திற்கு ரெடியாக வேண்டும். அடுத்தடுத்து ஒவ்வொன்றையும் முடித்து வேகவேகமாக மற்றொன்றுக்கு தாவிக்கொண்டே இருப்பதால், ஓய்வு எடுப்பதற்கு நேரமே இருப்பதில்லை. பொழுது விடிஞ்சு பொழுது சாயும் வரை மெஷின் மாதிரி சதா வேலைசெய்து கொண்டே இருப்பதால் நாம் எரிச்சலடைகிறோம்.
நேரமே இல்லாதிருப்பது நமக்கு மட்டுமல்ல
கடவுளின் எதிராளியாகிய பிசாசாகிய சாத்தானுடைய சூழ்ச்சியே மனிதவர்க்கத்தின் ஆயுட்காலத்தை குறைத்துவிட்டது. இப்பொழுது அவனே தன்னுடைய பொல்லாப்புக்கு பலியாகியிருக்கிறான். (கலாத்தியர் 6:7, 8-ஐ ஒப்பிடுக.) மேசியானிய ராஜ்யத்தின் பிறப்பைப் பற்றி பேசுகையில் வெளிப்படுத்துதல் 12:12, நம்பிக்கைக்கான காரணத்தை நமக்கு அளிக்கிறது. அது இவ்வாறு சொல்கிறது: ‘ஆகையால் பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள். பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக் காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும் என்று சொல்லக்கேட்டேன்.’
நம்பத்தக்க பைபிள் காலக்கணக்கின்படியும் பைபிள் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தின்படியும் நாம் இப்பொழுது அந்தக் ‘கொஞ்சக் காலத்தின்’ முடிவில் வாழ்ந்து வருகிறோம். சாத்தானின் காலம் சீக்கிரத்தில் முழுமையாக முடிவடையப்போவதை அறிவதில் எவ்வளவு மகிழ்ச்சி! அவன் செயலற்ற நிலைக்குள்ளாக்கப்பட்டபின், கீழ்ப்படிதலுள்ள மனிதர்கள் மீண்டும் பரிபூரண நிலையை அடைவர். மேலும் ஆரம்பத்தில் யெகோவா நோக்கம்கொண்ட நித்திய ஜீவனை அடையலாம். (வெளிப்படுத்துதல் 21:1-4) நேரமே இல்லை என்ற பிரச்சனை இனி ஒருபோதும் இராது.
நித்திய ஜீவன்—என்றென்றும் வாழ்வது—எதை அர்த்தப்படுத்தும் என்பதை உங்களால் கற்பனை செய்துபார்க்க முடிகிறதா? செய்யாமல் விட்டுவிட்ட வேலைகளைப்பற்றி உங்களை நீங்களே நொந்துகொள்ள வேண்டியிருக்காது. இன்னும் அதிக நேரம் தேவைப்படுமானால், நாளையோ அடுத்த வாரமோ அல்லது அடுத்த வருஷமோ, உங்களுக்கு முன்னால் கோடிக்கணக்கான ஆண்டுகள், ஏன் நித்திய காலமே இருக்கிறது!
இப்பொழுது இருக்கும் நேரத்தை ஞானமாக பயன்படுத்துதல்
மனிதர்களை ஆட்டிப் படைப்பதற்கு கொஞ்சம் காலம்தான் இருக்கிறது என்பதை சாத்தான் அறிந்திருக்கிறான். ஆகையால், கடவுளுடைய ஸ்தாபிக்கப்பட்ட ராஜ்யத்தின் நற்செய்திக்கு செவிசாய்க்க நேரமில்லாத அளவுக்கு ஜனங்கள் பிஸியாக இருக்கும்படி செய்விக்கிறான். எனவே, பின்வரும் தெய்வீக புத்திமதிக்கு நாம் செவிசாய்க்க வேண்டும்: “நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போல் கவனமாய் நடந்து கொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள் [“காலத்தை வாங்குங்கள்,” NW]. ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்.”—எபேசியர் 5:15-17.
எந்தவித நிரந்தர நன்மையையும் கொண்டுவராத பிரயோஜனமற்ற நாட்டங்களில் நேரத்தை வீணடிக்காமல் அதிமுக்கியமான காரியங்களுக்கு நம் நேரத்தை ஞானமாக பயன்படுத்துவது எவ்வளவு முக்கியம்! மோசேக்கு இருந்த அதே மனநிலையை நாமும் வளர்த்துக்கொள்ள வேண்டும். அவர் இருதயப்பூர்வமான வார்த்தைகளால் இவ்விதமாய் யெகோவாவிடம் வேண்டினார்: “நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்.”—சங்கீதம் 90:12.
இன்றைய உலகில் எல்லாரும் பிஸியாக இருப்பது உண்மையே. ஆனால் கடவுளுடைய ராஜ்யத்தில் நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ள கடவுள் நம்மிடம் கேட்பதை கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்காக உங்களுடைய மதிப்புமிக்க நேரத்தை கொஞ்சம் பயன்படுத்தும்படி யெகோவாவின் சாட்சிகள் உங்களை தூண்டுகிறார்கள். ‘கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்வதற்கு’ முறைப்படியாக பைபிளை படிக்க வாரத்தில் ஒரு மணிநேரம் செலவிடுங்கள். பின்வரும் வார்த்தைகளின் நிறைவேற்றத்தை நீங்கள் தனிப்பட்ட விதமாக அனுபவிக்க அது உங்களுக்கு உதவலாம்: “தீமையை விட்டு விலகி, நன்மை செய்; என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய். நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:27, 29.
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச் டவர் பைபிள் அன்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்ட நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகத்தில் 6-ம் அதிகாரத்தை காண்க.