கடவுளிடம் செய்த என் சத்தியத்தைக் காப்பாற்றுதல்
ப்ரான்ஸ் குட்லைகீஸ் சொன்னது
நூற்றுக்கும் அதிகமான ராணுவ வீரர்களை உடைய எங்களுடைய பிரிவில் நால்வர்தான் உயிரோடு மிஞ்சினோம். மரணத்தின் வாசலில் இருந்த நான், ‘இந்தப் போர்ல மட்டும் தப்பிச்சுட்டேன்னா, வாழ்நாள் பூரா உமக்கு சேவை செய்வேன்’ என்று மண்டியிட்டு கடவுளிடம் சத்தியம் செய்தேன்.
ஐம்பத்தி நான்கு வருடங்களுக்கு முன், ஏப்ரல் 1945-ல், நான் இந்த சத்தியம் செய்தேன். அப்போது, ஜெர்மானிய ராணுவத்தில் இருந்தேன். இரண்டாம் உலக யுத்தம் முடிவடையும் நேரம் அது. பெர்லின் மீது, சோவியத் ராணுவம் முழுவீச்சில் மேற்கொண்ட தாக்குதல் அது. ஓடர் நதிக்கரையில் இருந்த ஸேலோ பட்டணம் அருகே எங்களுடைய போர்வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர். பெர்லினுக்கும் நாங்கள் இருந்த பட்டணத்திற்கும் இடையேயுள்ள தூரம் 65 கிலோமீட்டருக்கும் குறைவு. டமால் டுமீல் என்று பீரங்கி குண்டுகள் இராப்பகலாய் எங்களை நோக்கி சரமாரியாக வீசப்பட்டன. என்னுடைய பிரிவில் இருந்தவர்களில் கிட்டத்தட்ட எல்லாருமே கொல்லப்பட்டு விட்டனர்.
அந்த சமயத்தில்தான், என்னுடைய வாழ்க்கையில் முதன்முதலாக கண்ணீர் மல்க கடவுளிடத்தில் மன்றாடினேன். கடவுள் பக்திமிக்க என் அம்மா அடிக்கடி சொல்லும் ஒரு பைபிள் வசனத்தை நானும் அந்த சமயத்தில் நினைத்துக்கொண்டேன். அது, “ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்” என்பதே. (சங்கீதம் 50:15) போர்முனையில், உயிருக்கு பயந்து குழியில் பதுங்கிக் கொண்டிருந்தபோது, ஆரம்பத்தில் குறிப்பிட்ட சத்தியத்தை கடவுளிடம் செய்தேன். முதலில் ஜெர்மானிய ராணுவத்தில் சேர்ந்த வரலாற்றையும் பின்பு என் சத்தியத்தை காப்பாற்றிய கதையையும் சொல்கிறேன்.
லிதுவேனியாவில் வளருதல்
1918-ல், முதல் உலக யுத்தத்தின் போது, லிதுவேனியா தன்னை ஒரு சுதந்திர நாடாக அறிவித்தது. மக்களாட்சி அரசாங்கத்தை நிறுவியது. 1925-ல், பால்டிக் கடல் அருகே உள்ள மேமல் க்ளைபடா மாகாணத்தில் பிறந்தேன். நான் பிறப்பதற்கு ஒரு வருடம் முன்புதான் அந்த மாகாணமும் லிதுவேனியாவுடன் சேர்க்கப்பட்டது.
எனக்கும் என்னுடைய ஐந்து சகோதரிகளுக்கும் வசந்தகாலமாக திகழ்ந்தது குழந்தைப்பருவம். அப்பாவும் நாங்களும் உயிருக்குயிரான நண்பர்களாக பழகினோம். எப்படியெனில், வீட்டில் எதையும் எப்போதும் நாங்கள் ஒன்றாக சேர்ந்தே செய்வோம். எங்கள் பெற்றோர் இவான்ஜெலிக்கல் சர்ச்சை சேர்ந்தவர்கள். ஆனால், அவர்கள் சர்ச் சர்வீஸுக்கு போகமாட்டார்கள். ஏனெனில், அந்த சர்ச் ஊழியக்காருடைய மாய்மாலத்தன்மையால் அடிபட்டு அம்மா மிகவும் மனம் நொந்துபோயிருந்தார். இருந்தாலும், கடவுளையோ பைபிளையோ அவர் வெறுக்கவில்லை. அதனால், பைபிளை மிகவும் வாஞ்சையோடு வாசிப்பார்.
1939-ல், நாங்கள் வசித்துவந்த பாகத்தை ஜெர்மனி கைப்பற்றியது. 1943-ம் வருடத்தின் ஆரம்பத்தில், நான் ஜெர்மானிய ராணுவத்தில் சேர்ந்தேன். நடந்த சண்டைகள் ஒன்றில் நான் காயம் அடைந்தேன். ஆனால், குணமானதும் உடனே கீழ்த்திசைப் போர்முனைக்கு திரும்பினேன். இதற்குள், போரின் திசை மாறிப்போகவே, சோவியத் ராணுவத்தின் முன்னால் ஜெர்மானியர்கள் பின்வாங்க ஆரம்பித்துவிட்டனர். அறிமுகத்தில் குறிப்பிட்டபடி, இந்த சமயத்தில்தான் நான் மயிரிழையில் உயிர் தப்பினேன்.
என் சத்தியத்தைக் காப்பாற்றுதல்
போரின்போது, என் பெற்றோர், ஜெர்மனியில் உள்ள லீப்ஸிக்கிற்கு தென்கிழக்கில் இருக்கும் ஆஷாட்ஸ் நகரத்திற்கு சென்றனர். போர் களேபரத்தில், அவர்களை கண்டுபிடிப்பதே பெரும்பாடாய் இருந்தது. ஆனால், கடைசியில் நாங்கள் மறுபடியும் ஒன்றுசேர்ந்தது எப்பேர்ப்பட்ட மகிழ்ச்சி! இதற்கு சிறிது நாட்களுக்குப் பிறகு, 1947 ஏப்ரல் மாதம், யெகோவாவின் சாட்சி, மாக்ஸ் ஷூபர்ட் என்பவரின் சொற்பொழிவைக் கேட்க அம்மாவுடன் சென்றேன். உண்மையான மதத்தைக் கண்டுபிடித்துவிட்டதாக அம்மா நம்பினார்கள். சில கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு போய்வந்த பிறகு அம்மாவைப் போலவே நானும் அதுதான் உண்மை என நம்ப ஆரம்பித்தேன்.
இதற்குப் பிறகு கொஞ்ச நாட்களில், அம்மா ஏணியில் இருந்து கால்தவறி கீழே விழுந்தார்கள். அதனால் ஏற்பட்ட பலத்த காயங்களால், சில மாதங்களில் அம்மா இறந்துவிட்டார்கள். சாவதற்கு முன் ஆஸ்பத்திரியில் என்னைப் பக்கத்தில் கூப்பிட்டு, “என்னோட பிள்ளங்கள்ல அட்லீஸ்ட் ஒரு பிள்ளையாவது கடவுளைப் பற்றித் தெரிஞ்சிகிட்டு, அதுல நடக்கணும்னு நான் அடிக்கடி ஜெபித்திருக்கிறேன். இப்போ என் ஜெபத்திற்கு பதில் கிடைச்சிருச்சி. இனி நா நிம்மதியா சாவேன்” என்று மனம் நெகிழ்ந்து சொன்னார்கள். அம்மா உயிர்த்தெழுவதையும் அவருடைய ஜெபங்கள் எல்லாம் நிறைவேறிவிட்டன என்பதையும் அவர் தெரிந்துகொள்ளும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்!—யோவான் 5:28.
சகோதரர் ஷூபர்ட்டுடைய பேச்சைக் கேட்ட நான்கே மாதங்களில் 1947, ஆகஸ்ட் 8-ம் தேதி, லீப்ஸிக்கில் நடந்த மாநாட்டில் யெகோவா தேவனுக்கு ஒப்புக்கொடுத்ததற்கு அடையாளமாக முழுக்காட்டுதலும் பெற்றேன். கடவுளிடம் நான் செய்த சத்தியத்தை நிறைவேற்றும் முயற்சி படிகளில் கால்வைத்து ஏறத்துவங்கினேன். சீக்கிரத்தில், ஒரு பயனியரானேன். யெகோவாவின் சாட்சிகளுடைய முழுநேர ஊழியர்கள் இப்படித்தான் அழைக்கப்படுகின்றனர். அந்த சமயம், நாங்கள் இருந்த பகுதியில் சுமார் 400 பயனியர்கள் இருந்தார்கள். பிறகு, அது ஜெர்மானிய மக்களாட்சிக் குடியரசாக அல்லது கிழக்கு ஜெர்மனியாக மாறியது.
விசுவாசத்தின் ஆரம்பப் பரீட்சைகள்
ஆஷாட்ஸ் நகரத்தில் இருந்த என் பக்கத்துவீட்டுக்காரர் என்னை மார்க்ஸியக் கொள்கைக்கு இழுக்கப் பார்த்தார். ஜெர்மானிய சோஷியலிஸ்ட் ஐக்கியக் கட்சியில் (SED) நான் சேர்ந்தால், அரசாங்க செலவிலேயே பல்கலைக்கழக படிப்பை பெறலாமென ஆசைப் பன்னீர் தெளித்தார். சாத்தான் ஆசைக்காட்டியபோது இயேசு எப்படி ஒதுக்கித் தள்ளினாரோ அதுபோலவே நானும் அதை மறுத்துவிட்டேன்.—மத்தேயு 4:8-10.
1949, ஏப்ரல் மாதம் ஒரு நாள், நான் வேலை செய்யும் இடத்திற்கு இரண்டு போலீஸ்காரர்கள் வந்தார்கள். நான் அவர்களோடு வரவேண்டும் என சொன்னார்கள். சோவியத் இரகசிய துப்பறியும் இலாகாவின் உள்ளூர் அலுவலகத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்கள். மேற்கத்திய தனியுடைமை சக்திகளுக்கு நான் உதவுவதாக பழி சுமத்தினார்கள். நான் வீட்டுக்கு வீடு ஊழியத்தை தொடரலாம், ஆனால் சோவியத் யூனியனுக்கோ அல்லது சோஷியலிஸ்ட் ஐக்கியக் கட்சிக்கோ எதிராக பேசுபவரைப் பற்றியும் அல்லது யெகோவாவின் சாட்சிகளுடைய கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு செல்லுபவர்களைப் பற்றியும் தகவல்களை அவர்களுக்கு கொடுத்துக் கொண்டிருந்தால், நான் நிரபராதி என்று நிரூபிக்கலாம் என அவர்கள் சொன்னார்கள். அதற்கு ஒப்புக்கொள்ள மறுத்தபோது, என்னை ஜெயிலில் போட்டார்கள். பின்னர், ராணுவ கோர்ட் போன்ற ஒன்றின் முன்னால் கொண்டுபோய் நிறுத்தினார்கள். எனக்கு தரப்பட்ட தண்டனை: 15 வருட கடுங்காவல், அதுவும் சைபீரியாவில்!
நான் அமைதியாக இருந்தேன். அதிகாரிகளை இது மிகவும் கவர்ந்தது. கொடுக்கப்பட்ட தண்டனை அமலில் இருந்தது என்றாலும், நான் அவர்கள் சொல்லியபடி செய்ய தயாராக இருந்தால் வாரத்தில் ஒரு தடவை வந்து ரிப்போர்ட் பண்ணினால் போதும் என்று சொன்னார்கள். அனுபவம் மிக்க சாட்சிகளுடைய ஆலோசனையைப் பெறுவதற்காக மாக்டிபர்க்கிற்கு சென்றேன். அங்குதான் உவாட்ச் டவர் சங்கத்தின் கிளை அலுவலகம் இருக்கிறது. அந்தப் பிரயாணம் அவ்வளவு சுலபமல்ல. ஏனெனில், என்னை கண்குத்திப் பாம்பு போல் கவனித்துக் கொண்டே இருந்தார்கள். “எதிர்த்துப் போராடினால், வெற்றி கிட்டும். விட்டுக்கொடுத்தால், தோல்விதான் மிஞ்சும். இதைத்தான் கான்சென்ட்ரேஷன் முகாம்களில் a நாங்கள் கற்றுக்கொண்டோம்” என்று மாக்டிபர்க் கிளை அலுவலகத்தின் சட்டத்துறையில் சேவை செய்யும் எர்ன்ஸ்ட் வௌவர் சொன்னார். என்னுடைய சத்தியத்தைக் காப்பாற்ற இந்த புத்திமதி எனக்கு பெரிதும் உதவியது.
தடையும் தண்டனையும்
1950, ஜூலையில், பிரயாணக் கண்காணியாக சேவை செய்ய அழைக்கப்பட்டேன். ஆனால், ஆகஸ்ட் 30-ம் தேதி, மாக்டிபர்க்கில் இருக்கும் எங்கள் கட்டிடங்களில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். எங்களுடைய பிரசங்க வேலையும் தடை செய்யப்பட்டது. எனவே, என்னுடைய நியமிப்பு மாற்றப்பட்டது. நானும் பவுல் ஹர்ஷ்பர்கரும் சுமார் 50 சபைகளில் சேவை செய்தோம். ஒவ்வொரு சபையோடும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தங்கி, தடையுத்தரவின்கீழ் ஊழியத்தை ஒழுங்கமைத்து தொடர்ந்து செய்ய சகோதரர்களுக்கு உதவினோம். அடுத்து வந்த மாதங்களில், ஆறு தடவை போலீஸிடமிருந்து தப்பினேன்.
இந்த சபைகள் ஒன்றில் உட்புகுந்த யாரோ ஒரு ஆளால், நாங்கள் ஷ்டாசியிடம், அரசு பாதுகாப்பு இலாகாவிடம் காட்டிக் கொடுக்கப்பட்டோம். எனவே, 1951 ஜூலையில், நானும் பவுலும் துப்பாக்கி ஏந்திய ஐந்து போலீஸாரால் தெருவில் கைது செய்யப்பட்டோம். எந்தளவு யெகோவாவுடைய அமைப்பின் மேல் சார்ந்து இருந்திருக்க வேண்டுமோ அந்தளவு நாங்கள் சார்ந்து செயல்படவில்லை என்பதை உணர்ந்தோம். ஒருபோதும் சேர்ந்து பிரயாணம் செய்ய வேண்டாம் என அனுபவமுள்ள சகோதரர்கள் ஆலோசனை சொல்லியிருந்தார்கள். மட்டுக்குமீறிய தன்னம்பிக்கை எங்களுடைய சுதந்திரத்தை பலிவாங்கியது! மேலும், கைது செய்யப்பட்டால் என்ன சொல்லவேண்டும் என்பதையும் ஏற்கெனவே நாங்கள் பேசியும் வைத்துக்கொள்ளவில்லை.
என்னுடைய விசுவாசத்தை விட்டுக்கொடுத்தோ அல்லது என்னுடைய சகோதரர்களை காட்டிக்கொடுத்தோ விடாமல் இருக்க உதவும்படி யெகோவாவிடம் தன்னந்தனியாக, சிறையிலே கண்கலங்க ஜெபித்தேன். அப்படியே தூங்கியும் விட்டேன். திடீரென என்னுடைய நண்பர் பவுலின் குரல் கேட்டு விழித்தேன். என்னுடைய அறைக்கு நேர்மேல் அறையில் அவரை ஷ்டாசி ஆட்கள் விசாரித்துக் கொண்டிருந்தனர். ஈரப்பதம் நிறைந்த, கதகதப்பான இரவு அது. பலகணி கதவு திறந்தே இருந்ததால், அவர்கள் பேசிக் கொண்டிருந்தது எல்லாம் லேசாக என் காதில் விழுந்தது. பிறகு, அவர்கள் என்னை விசாரித்தபோது, நானும் அதே பதில்களை கொடுத்தேன். அதிகாரிகளை அது ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. “ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன்” என்ற அம்மாவுக்குப் பிடித்த பைபிள் வசனம் திரும்ப திரும்ப ஞாபகத்துக்கு வந்துகொண்டே இருந்தது. அது, எனக்கு மிகவும் தைரியம் கொடுத்தது.—சங்கீதம் 50:15.
விசாரணையைத் தொடர்ந்து, தீர்ப்பு வழங்கப்படுவதற்குமுன் ஹாலெ நகரில் உள்ள ஷ்டாசி சிறையிலும் பின்னர் மாக்டிபர்க்கிலும் நானும் பவுலும் ஐந்து மாதங்கள் காவலில் வைக்கப்பட்டோம். மாக்டிபர்க்கில் இருக்கும்போது, மூடப்பட்ட நம்முடைய அலுவலக கட்டிடங்களை அவ்வப்போது நான் பார்த்துக் கொண்டிருப்பேன். சிறையில் இருப்பதற்கு பதிலாக அங்கே சேவை செய்துகொண்டிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று ஆசைப்பட்டேன்! 1952, பிப்ரவரியில் எங்களுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது: “10 வருட சிறை தண்டனையும் 20 வருட குடியுரிமை ரத்தும்.”
சிறையில் விசுவாசத்தைக் காத்தல்
குறைந்தபட்சம் பத்து வருடங்கள் சிறை தண்டனைப் பெற்ற யெகோவாவின் சாட்சிகளுக்கென்றே பிரத்தியேகமான அடையாளம் கொடுக்கப்பட்டது. பேண்டின் ஒரு காலிலும் ஷர்ட்டின் ஒரு கையிலும் ஒரு சிவப்பு டேப் தைக்கப்பட்டது. அதோடு, சிறிய, வட்ட வடிவ சிவப்பு கார்ட்போர்டு சிறைக்கதவில் தொங்கவிடப்பட்டது. நாங்கள் பயங்கரமான குற்றவாளிகள் என காவலாளர்களை எச்சரிக்கவே!
படுபயங்கரமான குற்றவாளிகளாகவே அதிகாரிகள் எங்களை எண்ணினார்கள். பைபிளை வைத்திருக்க எங்களுக்கு அனுமதி கிடையாது. ஏனென்றால், “யெகோவாவின் சாட்சி ஒருவர் கையில் பைபிளை வைத்திருப்பது, குற்றவாளி ஒருவன் கையில் துப்பாக்கியை வைத்திருப்பதற்கு சமம்” என ஒரு காவலாளர் விளக்கினார். பைபிள் வசனங்களின் சில பகுதிகளை திரட்டுவதற்காக ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் எழுதிய புத்தகங்களை வாசித்தோம். ஏனென்றால், அவருடைய புத்தகங்களில் அநேக இடங்களில் பைபிள் வசனங்களை மேற்கோள் காட்டி இருந்தார். இந்த பைபிள் வசனங்களை மனப்பாடம் செய்துகொண்டோம்.
1951-ல், நான் கைதாவதற்கு முன், எனக்கும் எல்சா ரீமாவுக்கும் கல்யாணம் நிச்சயம் ஆகியிருந்தது. எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம் அவள் என்னை சிறையில் வந்து பார்த்தாள். மாதத்தில் ஒரு முறை, உணவுப் பொட்டலம் அனுப்பி வைத்தாள். அந்தப் பார்சலில் ஆவிக்குரிய உணவையும் மறைத்து அனுப்பி வைத்தாள். ஒரு தடவை, சாஸேஜ்கள் சிலவற்றில் காவற்கோபுரத்தில் இருந்து எடுக்கப்பட்ட கட்டுரைகளை வைத்திருந்தாள். காவலாளர்கள் பொதுவாக இந்த சாஸேஜ்களில் ஏதாவது மறைத்து வைக்கப்படிருக்கிறதா என்பதைப் பார்க்க அவற்றை வெட்டுவார்கள். ஆனால், இந்த தடவையோ பார்சல் அவர்களுடைய ட்யூட்டி முடிவதற்கு கொஞ்சம் நேரம் முன்புதான் வந்தது. அதனால், அவர்கள் அதை செக் பண்ணாமல் விட்டுவிட்டார்கள்.
அந்த சமயத்தில், நானும் கார்ல் ஹைன்ட்ஸ் க்ளேபரும் ஒரு சிறிய அறையில் இருந்தோம். எங்களோடு சாட்சிகள் இல்லாத மற்ற மூன்று பேரும் இருந்தார்கள். அவர்களுக்கு தெரியாமல் காவற்கோபுரத்தை எப்படி படிப்பது? ஏதோ ஒரு புத்தகத்தைப் படிப்பதுபோல் நடித்தோம். ஆனால், உள்ளே காவற்கோபுர கட்டுரைகளை மறைத்து வைத்திருந்தோம். இந்த அருமையான ஆன்மீக உணவை சிறையில் இருந்த மற்ற சாட்சிகளுடனும் பகிர்ந்து கொண்டோம்.
சிறையில் இருக்கும்போது, கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி மற்றவர்களுக்கு சொல்லக் கிடைத்த அரிய சந்தர்ப்பங்களை நாங்கள் நழுவ விடவில்லை. இதனால், என்னுடைய அறையில் இருந்தவர்களில் ஒருவர் விசுவாசியான போது நான் மிகவும் பூரித்துப்போனேன்.—மத்தேயு 24:14.
முழுநேர ஊழியத்திற்கு திரும்புதல்
1957, ஏப்ரல் 1-ம் தேதி, ஆறு வருட சிறைதண்டனைக்குப் பிறகு விடுதலை பெற்றேன். இரண்டு வாரங்களுக்குள், எல்சாவை மணந்தேன். நான் விடுதலைப் பெற்றதைக் கேள்விப்பட்ட ஷ்டாசி, மறுபடியும் என்னை சிறைக்குள் தள்ள வழிபார்த்துக் கொண்டிருந்தது. அதைத் தவிர்க்க, நானும் எல்சாவும் மேற்கு பெர்லினுக்கு வந்தோம்.
மேற்கு பெர்லினுக்கு நாங்கள் வந்து சேர்ந்தபோது, எங்களுடைய எதிர்கால திட்டங்கள் என்ன என்பதை சங்கம் அறிய விரும்பியது. எங்கள் இரண்டு பேரில் ஒருவர் பயனியராகவும் இன்னொருவர் ஏதாவது ஒரு வேலையில் சேர்வதாகவும் விளக்கினோம்.
“நீங்கள் ரெண்டு பேருமே பயனியர்களாக விருப்பமா?” என்று கேட்டனர்.
“அது சாத்தியம் என்றால், நாங்கள் உடனே ஆரம்பிப்போம்” என்று சொன்னோம்.
எனவே, 1958-ல், விசேஷ பயனியர் சேவையை துவக்கினோம். எங்களுடைய செலவுகளுக்காக ஒரு சிறிய தொகை ஒவ்வொரு மாதமும் கொடுக்கப்பட்டது. எங்களோடு பைபிளை படித்தவர்களில் சிலர், யெகோவாவின் ஊழியர்களாக ஆவதற்காக தங்களுடைய வாழ்க்கையில் மாற்றங்கள் செய்வதைப் பார்க்கும்போது நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை! அடுத்த பத்து வருடங்களை விசேஷ பயனியர் சேவையில் கழித்தோம். கணவன் மனைவியாக ஒன்று சேர்ந்து வேலை செய்வதை இந்த ஊழியம் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தது. எல்சா எல்லா சமயத்திலும் எனக்கு கைகொடுத்தாள். நாங்கள் சேர்ந்தே வாசித்தோம், சேர்ந்தே படித்தோம், சேர்ந்தே ஜெபித்தோம். காரை ரிப்பேர் செய்வதாக இருந்தாலும்கூட சேர்ந்தே செய்தோம்.
1969-ல், பிரயாண வேலைக்கான நியமிப்பை பெற்றோம். வாராவாரம் ஒவ்வொரு சபையாகச் சென்று, அதன் அங்கத்தினர்களுடைய தேவைகளை கவனிக்கும் பொறுப்பை ஏற்றோம். “உங்களுடைய நியமிப்பில் நீங்கள் வெற்றிபெற வேண்டும் என்றால், சகோதரர்களுடன் சகோதரராக இருங்கள் போதும்” என்று பிரயாண வேலையில் அனுபவம் மிக்க யோஸஃப் பார்ட் என்பவர் ஆலோசனை கொடுத்தார். அந்த ஆலோசனையை நடைமுறைப்படுத்த முயற்சித்தேன். அதன் விளைவாக, உடன் விசுவாசிகளோடு சுமுகமான, அன்பான உறவை வளர்த்துக்கொள்ள முடிந்தது. தேவை ஏற்படும் சமயத்தில் ஆலோசனைகள் சொல்வதையும் அது சுலபமாக்கியது.
1972-ல், எல்சாவுக்கு கேன்ஸர் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு, ஆபரேஷன் செய்யப்பட்டது. பிறகு, மூட்டுவாதத்தால் அவதிப்பட்டாள். வலியால் அவஸ்தைப்பட்டாலும், ஒவ்வொரு வாரமும் சபைகளுக்கு என்னோடு வந்தாள். அவளால் முடிந்தளவு சகோதரிகளோடு சேர்ந்து ஊழியத்தில் ஈடுபட்டாள்.
தேவைகளுக்கேற்ற மாற்றங்கள்
1984-ல், என்னுடைய மாமனாரையும் மாமியாரையும் கவனிக்க வேண்டிய கட்டாயம் எழுந்தது. நான்கு வருடங்கள் கழித்து அவர்கள் சாகும்வரை, அவர்களை பார்த்துக் கொள்வதற்காக பிரயாண வேலையில் இருந்து விலகினோம். (1 தீமோத்தேயு 5:8) பிறகு, 1989-ல், எல்சா படுத்த படுக்கையாகி விட்டாள். எப்படியோ ஓரளவு குணமடைந்தாள். ஆனாலும், வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் நான்தான் செய்ய வேண்டியதாயிற்று. சதா வலியில் துடித்துக் கொண்டிருக்கும் ஒருவரை எப்படி கவனித்துக் கொள்வது என்பதை இன்னும் நான் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன். மனம், உணர்ச்சி ரீதியான வேதனைகள் மத்தியிலும், ஆவிக்குரிய விஷயங்களுக்கான எங்கள் அன்பை நாங்கள் ஒருபோதும் இழக்கவில்லை.
இன்றும் நாங்கள் பயனியர்களாக இருக்கிறோம் என்பதற்கு நன்றியுடன் இருக்கிறோம். இருப்பினும், நாம் எவ்வளவு செய்ய முடிகிறது என்பதோ அல்லது என்ன சிலாக்கியங்களில் இருக்கிறோம் என்பதோ முக்கியமல்ல. ஆனால், விசுவாசத்தில் நிலைத்திருப்பதே முக்கியம். இதை எங்கள் வாழ்க்கை அனுபவத்தில் கற்றுக் கொண்டோம். நம்முடைய கடவுளாகிய யெகோவாவுக்கு வெறுமனே ஒருசில வருடங்கள் மாத்திரமல்ல, நித்தியத்துக்கும் சேவை செய்யவே நாங்கள் விரும்புகிறோம். எதிர்காலத்திற்கான அருமையான பயிற்சிதான் எங்கள் அனுபவம். மிக இக்கட்டான சந்தர்ப்பங்களிலும் தம்மைத் துதிக்க யெகோவா எங்களுக்கு பெலத்தை தந்திருக்கிறார்.—பிலிப்பியர் 4:13.
[அடிக்குறிப்புகள்]
a ஆகஸ்ட் 1, 1991 காவற்கோபுரம் (ஆங்கிலம்) பிரதியில் பக்கங்கள் 25 முதல் 29 வரையில் எர்ன்ஸ்ட் வௌவருடைய வாழ்க்கை சரிதம் வெளிவந்தது.
[பக்கம் 23-ன் படம்]
மாக்டிபர்கில் சிறைப்படுத்தப்பட்டேன்
[படத்திற்கான நன்றி]
Gedenkstätte Moritzplatz Magdeburg für die Opfer politischer
[பக்கம் 23-ன் படம்]
Gedenkstätte Moritzplatz Magdeburg für die Opfer politischer Gewalt; Foto: Fredi Fröschki, Magdeburg
[பக்கம் 23-ன் படம்]
1957-ல், எங்கள் திருமணத்தின்போது
[பக்கம் 23-ன் படம்]
எல்சாவுடன் இன்று