வாழ்க்கை சரிதை
வாழ்க்கை சரிதை எப்போதும் ஆன்மீக பலத்தோடிருக்க போராடினோம்
ரால்ஃப் ப்ரூக்கமையர் சொன்னபடி
சிறையில் அடைக்கப்பட்டதற்குப் பிறகு முதல் கடிதம் என் நண்பரிடமிருந்து வந்தது. என் அம்மாவும், என் தம்பிகளான பீட்டர், யாகென், மான்ஃப்ரேட் ஆகியோரும்கூட கைதுசெய்யப்பட்டதாக அவர் எழுதியிருந்தார். அதனால், அப்பா, அம்மா, அண்ணன்மார் யாரும் இல்லாமல் என் குட்டித் தங்கைகள் இருவரும் தன்னந்தனிமையில் தவித்தார்கள். கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த அதிகாரிகள் எங்கள் குடும்பத்தை ஏன் இப்படிச் சித்திரவதை செய்தார்கள்? எப்போதும் ஆன்மீக பலத்தோடிருக்க எங்களுக்கு எது உதவியது?
அமைதியாய் கழிந்த எங்கள் பிள்ளைப் பருவத்தை இரண்டாம் உலகப் போர் என்ற புயல் காற்று சிதைத்துச் சின்னாபின்னமாக்கியது; போரின் கொடூரத்தை நாங்கள் நேருக்கு நேர் பார்த்தோம். அப்பா ஜெர்மானிய படையில் சேர்ந்தார், போர்க் கைதியாக இறந்துபோனார். இதனால் ஒரு வயதுக் குழந்தையிலிருந்து 16 வயதுப் பிள்ளைவரை எங்கள் ஆறு பேரையும் பராமரிக்கும் பொறுப்பு என் அம்மா பெர்டாவின் தலையில் விழுந்தது.
அம்மா போய்க்கொண்டிருந்த சர்ச், மதத்தின் மீது அவருக்கு இருந்த பற்றை அடியோடு அகற்றிவிட்டது; கடவுள் என்ற பேச்சை எடுத்தாலே பிடிக்காத அளவுக்கு அவரை மாற்றிவிட்டது. ஆனால், 1949-ல் ஒருநாள் இல்ஸா ஃபுக்ஸ் என்ற பெண்மணி கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி பேசுவதற்கு எங்கள் வீட்டுக்கு வந்தார்; பார்ப்பதற்குக் குள்ளமாக இருந்தாலும் அவர் கெட்டிக்காரர். அவர் கேள்விகள் கேட்ட விதமும், நியாயங்காட்டி விஷயங்களை விளக்கிய விதமும் அம்மாவின் ஆர்வத்தைத் தூண்டிவிட்டது. பைபிள் படிப்பு, அம்மாவுக்கு நம்பிக்கை அளித்தது.
என்றாலும், ஆரம்பத்தில் பையன்களாகிய எங்கள் யாருக்கும் நம்பிக்கை ஏற்படவில்லை. காரணம், நாசிக்களும் பிற்பாடு கம்யூனிஸ்டுகளும் அருமையான வாக்குறுதிகளை அள்ளி வீசினார்கள்; ஆனால் எதையுமே சாதிக்கவில்லை. இது எங்களுக்கு ஏமாற்றத்தையே அளித்தது. புதியதாக எந்த வாக்குறுதிகளைக் கேட்டாலும் பையன்களாகிய நாங்கள் எல்லாரும் சந்தேகப்பட்டோம்; என்றாலும், போருக்கு ஆதரவு அளிக்காததற்காக யெகோவாவின் சாட்சிகளில் சிலர் சித்திரவதை முகாம்களில் இருப்பதை அறிந்து நெகிழ்ந்துபோனோம். மறுவருடமே அம்மாவும் பீட்டரும் நானும் முழுக்காட்டுதல் பெற்றோம்.
எங்கள் தம்பி மான்ஃப்ரேட்டும் முழுக்காட்டுதல் பெற்றான், ஆனால் பைபிள் சத்தியம் அவனுடைய இருதயத்தில் ஆழமாய் வேரூன்றியதாகத் தெரியவில்லை. 1950-ல் கம்யூனிஸ்டுகள் எங்கள் ஊழியத்திற்குத் தடைவிதித்தபோது, ஷ்டாஸி என்ற படுமோசமான இரகசிய போலீஸாரின் வற்புறுத்தலுக்கு அவன் இணங்கிப் போய்விட்டான்; சபை கூட்டங்கள் எங்கு நடக்கின்றன என்பதை அவர்களிடம் தெரிவித்துவிட்டான். அதனால்தான் என் அம்மாவும் என் தம்பிகளும் கைதுசெய்யப்பட்டார்கள்.
தடையுத்தரவின்போது சேவை
தடையுத்தரவு போடப்பட்டிருந்ததால் யாருக்கும் தெரியாமல் பைபிள் பிரசுரங்களை கிழக்கு ஜெர்மனிக்குள் நாங்கள் கொண்டு வந்தோம். அப்படிக் கொண்டுவரும் கூரியராக நான் சேவை செய்தேன். பெர்லின் நகரின் மேற்குப் பகுதியில் பிரசுரங்கள் தடைசெய்யப்படாதிருந்தன; எனவே எல்லை கடந்துபோய் அங்கிருந்து பிரசுரங்களை நான் எடுத்துக்கொண்டு வந்தேன். போலீஸாரின் கைகளில் சிக்காமல் பல தடவை தப்பினேன், ஆனால் 1950, நவம்பர் மாதம் அகப்பட்டுக்கொண்டேன்.
ஷ்டாஸி போலீஸார், ஜன்னல்கள் இல்லாத பாதாளச் சிறையில் என்னை அடைத்தார்கள். இரவில் என்னிடம் விசாரணை நடத்தினார்கள், அப்போது, சில சமயங்களில் என்னை அடிக்கவும் செய்தார்கள்; பகலிலோ என்னைத் தூங்க விடவில்லை. 1951-ல் மார்ச் மாதம் நடந்த நீதிமன்ற விசாரணையின்போது அம்மா, பீட்டர், யாகென் எல்லாரும் அங்கு வந்திருந்தார்கள்; அதுவரை என் குடும்பத்தாரைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாதிருந்தது. ஆறு வருட சிறைத் தண்டனை பெற்றேன்.
என் விசாரணை முடிந்து ஆறு நாட்கள் கழித்து பீட்டர், யாகென், அம்மா ஆகியோரும் கைதுசெய்யப்பட்டார்கள். பின்னர், என் 11 வயது தங்கை ஹன்னலாராவை சத்தியத்திலிருந்த ஒரு சகோதரியும், 7 வயது தங்கை சபீனாவை என் பெரியம்மாவும் கவனித்துக்கொண்டார்கள். ஷ்டாஸி காவலர்கள் அம்மாவையும் தம்பிகளையும் ஆபத்தான குற்றவாளிகளைப் போல் நடத்தினார்கள், அவர்களுடைய ஷூ லேஸுகளைக்கூட எடுத்துச்சென்றுவிட்டார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். விசாரணையின்போது அவர்கள் நின்றுகொண்டே இருக்க வேண்டியிருந்தது. அவர்கள் எல்லாரும்கூட ஆறு வருட சிறைத் தண்டனை பெற்றார்கள்.
1953-ல், யெகோவாவின் சாட்சிகளில் என்னையும் வேறு சில கைதிகளையும் ராணுவ விமான ஓடுதளம் அமைக்கும் வேலையைச் செய்யச் சொன்னார்கள்; நாங்களோ மறுத்துவிட்டோம். அதனால் அதிகாரிகள் எங்களை 21 நாட்கள் தனிமைச் சிறையில் அடைத்தார்கள்; அதாவது, வேலையே கொடுக்காமல், கடிதங்களையே தராமல், மிகச் சிறிதளவே சாப்பாடு கொடுத்து தண்டித்தார்கள். கிறிஸ்தவ சகோதரிகள் சிலர் தங்களுக்குக் கிடைத்த அற்பசொற்ப உணவிலிருந்து கொஞ்சம் ரொட்டியை எடுத்துவைத்து யாருக்கும் தெரியாமல் எங்களுக்குக் கொடுத்தார்கள். இதன் பலனாக, அப்படிக் கொண்டுவந்து கொடுத்த சகோதரிகளில் அன்னீ என்பவளோடு அறிமுகமாக எனக்கு வாய்ப்பு கிடைத்தது; பின்பு அவள் என் மனைவியானாள்; 1956-ல் அவளும் 1957-ல் நானும் விடுதலை ஆன பிறகு எங்கள் திருமணம் நடந்தது. ஒரு வருடம் கழித்து எங்கள் மகள் ரூத் பிறந்தாள். பீட்டர், யாகென், ஹன்னலாரா ஆகியோரும் ஏறக்குறைய அதே சமயத்தில் திருமணம் செய்துகொண்டார்கள்.
விடுதலையாகி சுமார் மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கைதுசெய்யப்பட்டேன். உளவு பார்த்து தகவல் தெரிவிக்கும் ஆள்காட்டியாய் என்னை மாற்றுவதற்கு ஷ்டாஸி அதிகாரி ஒருவர் ரொம்பவே முயற்சி செய்தார். அவர் இவ்வாறு சொன்னார்: “ப்ரூக்கமையர் அவர்களே, கொஞ்சம் புத்திசாலித்தனமாய் யோசித்துப் பாருங்கள். சிறைவாசத்தைப் பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும், நீங்கள் மீண்டும் அந்தக் கஷ்டத்தையெல்லாம் அனுபவிப்பதை நாங்கள் விரும்பவில்லை. நீங்கள் எப்போதும்போல் ஒரு யெகோவாவின் சாட்சியாக இருக்கலாம், தொடர்ந்து படிக்கலாம், விருப்பப்படி பைபிளைப் பற்றி பேசலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கிடைக்கிற தகவல் அனைத்தையும் எங்களுக்குத் தெரிவிப்பதுதான். உங்கள் அருமை மனைவியையும் அன்பு மகளையும் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.” அந்தக் கடைசி வாக்கியம் என்னை ரொம்பவே நிலைகுலைய வைத்தது. ஆனால், நான் சிறைக்குப் போனாலும் என்னைவிட என் குடும்பத்தை நன்றாக கவனித்துக்கொள்ள யெகோவாவால் முடியுமென்று எனக்குத் தெரியும், உண்மைதான் யெகோவா கவனித்துக்கொண்டார்!
ரூத்தை மற்றவர்கள் பார்த்துக்கொள்ளும்படி செய்ய வேண்டும் என்பதற்காக, வார நாட்களில் பகல் முழுவதும் வேலை செய்யும்படி அன்னீயை அதிகாரிகள் வற்புறுத்த முயன்றார்கள். ஆனால் அன்னீ அதற்குச் சம்மதிக்கவில்லை, ரூத்தைப் பகலில் பார்த்துக்கொள்வதற்காக இரவில் அவள் வேலை செய்தாள். எங்கள் ஆன்மீக சகோதரர்கள் அதிக கரிசனையோடு நடந்துகொண்டார்கள், எக்கச்சக்கமான பொருள்களை என் மனைவிக்குக் கொடுத்தார்கள்; அவற்றில் சிலவற்றை மற்றவர்களுடனும் அவள் பகிர்ந்துகொள்ளுமளவுக்கு கொடுத்தார்கள். இதற்கிடையில், கிட்டத்தட்ட ஆறு வருடங்களை நான் சிறையில் கழித்தேன்.
சிறையில் விசுவாசத்தை விட்டுக்கொடுக்காதிருக்க . . .
மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டபோது என்னுடன் அறையைப் பகிர்ந்துகொண்ட யெகோவாவின் சாட்சிகள் சமீபத்தில் என்னென்ன விஷயங்கள் வெளியிடப்பட்டன என்பதை அறிய ஆவலாய் இருந்தார்கள். காவற்கோபுரத்தைக் கவனமாய் படித்ததாலும் கூட்டங்களில் தவறாமல் கலந்துகொண்டதாலும் அவர்களுக்கு ஆன்மீக உற்சாகம் அளிக்க முடிந்ததற்காக எவ்வளவாய் சந்தோஷப்பட்டேன்!
ஒரு பைபிளைத் தரும்படி காவலர்களிடம் கேட்டபோது, “வீடு புகுந்து திருடி சிறைத்தண்டனை பெற்றவனுக்கு தப்பிச் செல்ல கருவிகளைக் கொடுப்பது எந்தளவு ஆபத்தானதோ அந்தளவு ஆபத்தானது யெகோவாவின் சாட்சிகளுக்கு பைபிளைக் கொடுப்பது” எனச் சொல்லிவிட்டார்கள். முன்நின்று வழிநடத்தும் சகோதரர்கள் ஒவ்வொரு நாளும் சிந்திப்பதற்கு ஒரு பைபிள் வசனத்தைத் தேர்ந்தெடுப்பார்கள். வெட்டவெளியில் தினமும் அரை மணிநேரம் காலார நடக்கிற சமயத்தில் உடற்பயிற்சி செய்வதிலோ சுத்தமான காற்றை சுவாசிப்பதிலோ நாங்கள் ஆர்வம் காட்டவில்லை, அந்தத் தினத்திற்குரிய பைபிள் வசனத்திலிருந்து பயனடைவதிலேயே ஆர்வம் காட்டினோம். ஒருவருக்கொருவர் பேசாமல், 15 அடி தள்ளியே இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தபோதிலும்கூட அந்த வசனத்தை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ள வழிகளைக் கண்டுபிடித்திருந்தோம். எங்கள் அறைகளுக்குத் திரும்பியதும் ஒவ்வொருவரும் எவற்றையெல்லாம் கேட்க முடிந்ததென தெரிந்துகொண்டு, பின்னர் அந்நாளுக்குரிய பைபிள் கலந்தாலோசிப்பை நடத்தினோம்.
கடைசியில், ஆள்காட்டியாய் இருந்த ஒருவன், நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அதிகாரிகளிடம் சொல்லிக்கொடுத்துவிட்டான்; நான் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டேன். ஏற்கெனவே நூற்றுக்கணக்கான வசனங்களை மனப்பாடம் செய்து வைத்திருந்தது எவ்வளவு பிரயோஜனமாய் இருந்தது! எப்படியெனில், வேலை எதுவும் செய்யாமல் இருந்த அந்நாட்களில் பல்வேறு பைபிள் விஷயங்களைக் குறித்து தியானிக்க முடிந்தது. பின்னர் வேறொரு சிறைக்கு மாற்றப்பட்டேன்; அங்கே இரண்டு யெகோவாவின் சாட்சிகள் இருந்த அறையில் காவலர் என்னை அடைத்தார், சந்தோஷத்திலும் சந்தோஷம் என்னவென்றால் அவர் எங்களுக்கு ஒரு பைபிளையும் கொடுத்தார். ஆறு மாதங்களைத் தனிமைச் சிறையில் கழித்த பிறகு சக விசுவாசிகளோடு சேர்ந்து மீண்டும் பைபிள் விஷயங்களைக் கலந்தாலோசிக்க முடிந்ததற்காக ரொம்பவே நன்றியுள்ளவனாய் இருந்தேன்.
என் தம்பி பீட்டர் வேறொரு சிறையில் இருந்தபோது சகித்திருக்க தனக்கு எது உதவியது என சொல்கிறான்: “புதிய உலகில் இருப்பதுபோல் நான் கற்பனை செய்துகொள்வேன், பைபிள் வசனங்களைச் சதா சிந்தித்துக்கொண்டே இருப்பேன். பைபிளிலிருந்து கேள்விகளைக் கேட்பது அல்லது பைபிள் வசனங்களைக் கேட்டு பரிசோதிப்பது என யெகோவாவின் சாட்சிகளான நாங்கள் ஒருவரையொருவர் பலப்படுத்திக் கொண்டோம். வாழ்க்கை அவ்வளவு எளிதாய் இருக்கவில்லை. சில சமயங்களில், சுமார் 12 சதுர மீட்டர் இடத்தில் நாங்கள் 11 பேர் அடைக்கப்பட்டோம். சாப்பிடுவது, தூங்குவது, குளிப்பது, மலஜலம் கழிப்பது என எல்லாமே அங்குதான். இதனால் அமைதி இழந்தவர்களாய், எளிதில் எரிச்சல் அடைந்தோம்.”
மற்றொரு தம்பியான யாகென் தன் சிறைவாச அனுபவங்களைச் சொல்கிறான்: “நம் பாட்டுப் புத்தகத்தைப் பார்க்காமலேயே எனக்குத் தெரிந்த பாடல்களையெல்லாம் பாடினேன். நான் மனப்பாடம் செய்திருந்த வசனங்களில் தினந்தோறும் ஒரு வசனத்தை தியானித்தேன். விடுதலையான பிறகு தவறாமல் ஆன்மீக போதனைகளைப் பெறுவதைப் பழக்கப்படுத்திக் கொண்டேன். தினந்தோறும் தினவசனத்தைக் குடும்பத்தாரோடு சேர்ந்து வாசிக்கிறேன். எல்லா கூட்டத்திற்கும் நாங்கள் தயாரித்தும் செல்கிறோம்.”
சிறையிலிருந்து அம்மா விடுதலை
இரண்டு வருடங்களுக்குச் சற்று கூடுதலாகச் சிறையில் இருந்த பிறகு அம்மா விடுதலை ஆனார். சுதந்திரமாய் இருந்த அச்சமயத்தில், ஹன்னலாராவுக்கும் சபீனாவுக்கும் பைபிள் படிப்பு நடத்தினார்; இவ்வாறு, தங்களுடைய விசுவாசத்திற்கு நல்ல அஸ்திவாரத்தை அமைத்துக்கொள்ள அவர்களுக்கு உதவினார். கடவுள் மீதுள்ள விசுவாசம் காரணமாக பள்ளியில் எழுந்த பிரச்சினைகளைச் சமாளிக்கவும் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். ஹன்னலாரா இவ்வாறு சொல்கிறார்: “என்ன வந்தாலும் சரியென்று கவலைப்படாமல் இருந்தோம், ஏனெனில் வீட்டில் நாங்கள் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்திக்கொண்டோம். எந்தத் துன்பத்தையும் எதிர்கொள்ள எங்கள் குடும்ப ஐக்கியம் எங்களுக்கு உதவியது.”
தொடர்ந்து ஹன்னலாரா இவ்வாறு சொல்கிறார்: “சிறையிலிருந்த எங்கள் அண்ணன்களுக்கு ஆன்மீக உணவையும் நாங்கள் கொடுத்தோம். காவற்கோபுரம் முழுவதையும் மெழுகுத் தாள்களில் சின்னச்சின்ன எழுத்துக்களில் எழுதினோம். இந்தத் தாள்களை தண்ணீர் புகாத தாளில் சுற்றினோம், மாதாமாதம் அனுப்பி வைத்த உலர்ந்த கொடி முந்திரிப் பழங்களுடன் சேர்ந்து இவற்றையும் அனுப்பினோம். அந்த முந்திரிப் பழங்கள் ‘ரொம்பவே சுவையாக’ இருந்ததாய் செய்தி வந்தபோது எவ்வளவாய் சந்தோஷப்பட்டோம்! நாங்கள் எங்கள் வேலையில் மூழ்கிப் போயிருந்தோம், அது உண்மையிலேயே அருமையான காலம் என சொல்லத்தான் வேண்டும்.”
தடையுத்தரவின்போது வாழ்க்கை
கிழக்கு ஜெர்மனியில் பல பத்தாண்டு கால தடையுத்தரவின்போது வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை பீட்டர் விவரிக்கிறார்: “சிறு சிறு தொகுதிகளாக சகோதரர்களின் வீடுகளில் நாங்கள் கூட்டங்களை நடத்தினோம்; வெவ்வேறு சமயங்களில் அங்கு போய்ச் சேர்ந்தோம், வெவ்வேறு சமயங்களில் வீடு திரும்பினோம். ஒவ்வொரு கூட்டத்தின்போதும் அடுத்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தோம். ஷ்டாஸி போலீஸார் சதா ஒட்டுக்கேட்டு வந்ததால் சாடைமாடையாகவோ, எழுதிக் காட்டியோ அந்த ஏற்பாடுகளை எல்லாருக்கும் தெரியப்படுத்தினோம்.”
ஹன்னலாரா இவ்வாறு சொல்கிறார்: “சில சமயங்களில், மாநாட்டு நிகழ்ச்சிகளின் கேஸட்டுகள் எங்களுக்குக் கிடைத்தன. அந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாம் நாங்கள் சந்தோஷமாய்க் கூடிவந்தோம். பல மணிநேர பைபிள் போதனைகளைக் கேட்பதற்கு எங்கள் சிறிய தொகுதியைச் சேர்ந்தவர்கள் கூடிவந்தார்கள். பேச்சாளர்களைப் பார்க்க முடியாவிட்டாலும் நாங்கள் நிகழ்ச்சிகளைக் கூர்ந்து கவனித்தோம், குறிப்புகள் எடுத்துக்கொண்டோம்.”
பீட்டர் இவ்வாறு சொன்னார்: “பிற நாடுகளிலுள்ள எங்கள் கிறிஸ்தவ சகோதரர்கள் பைபிள் பிரசுரங்கள் எங்களுக்குக் கிடைப்பதற்காக அதிக சிரமம் எடுத்துக்கொண்டார்கள். 1989-ல் பெர்லின் சுவர் தகர்க்கப்படுவதற்கு முந்தைய பத்தாண்டுகளின்போது எங்களுக்காக விசேஷித்த விதத்தில் சிறிய அளவு பிரசுரங்களைத் தயாரித்தார்கள். கிழக்கு ஜெர்மனிக்கு ஆன்மீக உணவை எடுத்துவருவதற்காகச் சிலர் தங்கள் கார்களையும், பணத்தையும், தங்கள் சுதந்திரத்தையும்கூட பறிகொடுத்தார்கள். ஒருநாள் இரவு நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஒரு தம்பதியர் வரவே இல்லை. போலீஸார் அவர்களிடமிருந்த பிரசுரங்களைக் கண்டுபிடித்து அவர்களுடைய காரைப் பறிமுதல் செய்திருந்தார்கள். ஆபத்துகள் இருந்தபோதிலும், சுமுகமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக பிரசங்க வேலையை நாங்கள் நிறுத்தவே இல்லை.”
1950-ல் எங்களைக் காட்டிக்கொடுத்த என் தம்பி மான்ஃப்ரேட், திரும்பவும் விசுவாசத்தைப் பெறவும், எப்போதும் விசுவாசத்தோடு இருக்கவும் தனக்கு எது உதவியது என்பதைச் சொல்கிறான்: “சில மாதங்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட பிறகு விடுதலை ஆனேன்; பின்பு மேற்கு ஜெர்மனிக்குக் குடிமாறிச் சென்றேன், சத்தியத்தை விட்டு விலகினேன். 1954-ல் மீண்டும் கிழக்கு ஜெர்மனிக்கு வந்தேன், மறுவருடம் திருமணம் செய்துகொண்டேன். சீக்கிரத்திலேயே என் மனைவி பைபிள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டாள், 1957-ல் முழுக்காட்டுதல் பெற்றாள். காலப்போக்கில், என் மனசாட்சி உறுத்த ஆரம்பித்தது, என் மனைவியின் உதவியோடு மீண்டும் சபைக்குத் திரும்பினேன்.
“சத்தியத்தை விட்டு விலகுவதற்கு முன் என்னை அறிந்திருந்த கிறிஸ்தவ சகோதரர்கள், நான் மீண்டும் கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தபோது, எதுவுமே நடக்காததுபோல் அன்போடு என்னை ஏற்றுக்கொண்டார்கள். புன்முறுவலுடன் வரவேற்று, ஆரத் தழுவிக்கொண்டது என்னை நெகிழ வைத்தது. யெகோவாவோடும் என் சகோதரர்களோடும் மீண்டும் சமாதான உறவை அனுபவிக்க முடிந்ததற்காக நான் ரொம்பவே சந்தோஷப்படுகிறேன்.”
தொடரும் ஆன்மீகப் போராட்டம்
சத்தியத்திற்காக எங்கள் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் கடும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம். என் தம்பி பீட்டர் இவ்வாறு சொல்கிறார்: “எப்போதும் இல்லாதளவுக்கு இப்போது கவனத்தைச் சிதறடிக்கும் பல்வேறு காரியங்களும் பொருளாதார கவர்ச்சிகளும் நம்மைச் சூழ்ந்திருக்கின்றன. தடையுத்தரவின்போது, உள்ளதைக் கொண்டு நாங்கள் திருப்தியாக இருந்தோம். உதாரணத்திற்கு, சொந்த காரணங்களுக்காக ஒரு புத்தகப் படிப்புத் தொகுதியை விட்டுவிட்டு வேறொரு தொகுதிக்கு மாறிச் செல்ல நாங்கள் யாருமே விரும்பவில்லை. கூட்டம் வெகு தூரத்தில் நடத்தப்படுவதாகவோ வெகு தாமதமாய் நடத்தப்படுவதாகவோ யாருமே குறைகூறவில்லை. எல்லாரும் ஒன்றாக கூடிவர முடிந்ததற்காகச் சந்தோஷப்பட்டோம். எங்களில் சிலர் கூட்டம் முடிந்து வீடு திரும்ப எங்கள் முறை வரும்வரை காத்திருந்தோம்; இதற்கு இரவு 11:00 மணியானாலும்கூட கவலைப்படவில்லை.”
1959-ல் 16 வயது சபீனாவுடன் மேற்கு ஜெர்மனி செல்ல அம்மா தீர்மானித்தார். காரணம், ராஜ்ய பிரஸ்தாபிகள் அதிகம் தேவைப்பட்ட இடத்தில் சேவை செய்ய அவர்கள் இருவரும் ஆசைப்பட்டார்கள்; பாடன்-வர்டம்பர்க்கிலுள்ள எல்வாங்கன் நகருக்குச் செல்லும்படி கிளை அலுவலகம் அவர்களுக்கு ஆலோசனை கொடுத்தது. சுகவீனத்தின் மத்தியிலும் அம்மா காட்டிய பக்தி வைராக்கியத்தைப் பார்த்து, 18 வயதில் சபீனா பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்தாள். சபீனாவுக்குத் திருமணம் ஆனதும், அதிகளவு பிரசங்க ஊழியத்தில் ஈடுபடுவதற்காக அம்மா தனது 58-வது வயதில் கார் ஓட்டக் கற்றுக்கொண்டார். 1974-ல் இறக்கும்வரை இந்த ஊழியத்தைப் பொக்கிஷமாய்ப் போற்றினார்.
இரண்டாவது முறை கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் சிறையில் கழித்த பிறகு 1965-ல் மேற்கு ஜெர்மனிக்கு நாடுகடத்தப்பட்டேன்; இது என் வீட்டாருக்குத் தெரியாது. எனினும், காலப்போக்கில் என் மனைவி அன்னீயும் மகள் ரூத்தும் அங்கு வந்துவிட்டார்கள். பிரஸ்தாபிகள் அதிகம் தேவைப்படும் இடத்திற்குச் செல்ல விரும்புவதாக கிளை அலுவலகத்திடம் நாங்கள் தெரிவித்தபோது பவெரியாவிலுள்ள நியோட்லிங்கன் என்ற இடத்திற்கு எங்களைப் போகச் சொன்னார்கள். அங்கு எங்கள் மகள் ரூத்தும் மகன் யோஹன்னஸும் வளர்ந்தார்கள். அன்னீ பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்தாள். அவளுடைய நல்ல முன்மாதிரியைப் பார்த்து, பள்ளிப் படிப்பு முடிந்த கையோடு ரூத்தும் பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்தாள். எங்கள் பிள்ளைகள் இருவருமே பயனியர்களைத் திருமணம் செய்துகொண்டார்கள். இப்போது அவர்களுக்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். ஆக, எங்களுக்கு அழகான ஆறு பேரப்பிள்ளைகள் இருக்கிறார்கள்.
1987-ல் வாய்ப்பு கிடைத்தபோது, முன்னதாகவே வேலையிலிருந்து ஓய்வுபெற்று, அன்னீயுடன் சேர்ந்து ஊழியம் செய்ய ஆரம்பித்தேன். மூன்று வருடங்களுக்குப் பிறகு செல்டர்ஸ் கிளை அலுவலக வளாகத்தின் விஸ்தரிப்பு பணியில் உதவுவதற்காக அழைக்கப்பட்டேன். அதன் பிறகு, கிழக்கு ஜெர்மனியின் பாகமாக முன்பிருந்த கிளவ்கௌவ் என்ற இடத்தில் யெகோவாவின் சாட்சிகளுடைய முதல் அசெம்பிளி ஹாலைக் கட்டுவதில் நாங்கள் உதவினோம்; பின்னர் அதைப் பராமரித்துப் பாதுகாக்க நியமிக்கப்பட்டோம். உடல்நலக் காரணங்களால், எங்கள் மகள் கூட்டுறவு கொள்கிற நியோட்லிங்கன் சபைக்கு வந்துவிட்டோம், இப்போது இங்கு பயனியர்களாகச் சேவை செய்து வருகிறோம்.
என் தம்பி தங்கைகள் எல்லாரும் அருமையான கடவுளாகிய யெகோவாவை சேவித்து வருவதையும், எங்கள் குடும்ப அங்கத்தினர்களில் பெரும்பாலானவர்கள் சத்தியத்தில் இருப்பதையும் நினைக்கும்போது எனக்கு ஆனந்தமாக இருக்கிறது. நாம் எப்போதும் ஆன்மீக பலத்தோடு இருக்கும்போது, சங்கீதம் 126:3-ல் காணப்படும் வார்த்தைகள் எவ்வளவு உண்மை என்பதை ருசிப்போம்; இதை உருண்டோடிய வருடங்களிலிருந்து நாங்கள் கற்றிருக்கிறோம். அந்த வசனம் சொல்வதாவது: “கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; இதினிமித்தம் நாம் மகிழ்ச்சியாயிருக்கிறோம்.”
[பக்கம் 13-ன் படம்]
1957-ல் எங்கள் திருமணத்தின்போது
[பக்கம் 13-ன் படம்]
1948-ல் எங்கள் குடும்பத்தாருடன்: (முன்புறம், இடமிருந்து வலம்) மான்ஃப்ரேட், பெர்டா, சபீனா, ஹன்னலாரா, பீட்டர்; (பின்புறம், இடமிருந்து வலம்) நான், யாகென்
[பக்கம் 15-ன் படங்கள்]
தடையுத்தரவின்போது பயன்படுத்தப்பட்ட சிறிய அளவு பிரசுரம்; ‘ஷ்டாஸியின்’ ஒட்டுக்கேட்கும் கருவி
[படத்திற்கான நன்றி]
Forschungs- und Gedenkstätte NORMANNENSTRASSE
[பக்கம் 16-ன் படம்]
என் தம்பி தங்கைகளுடன்: (முன்புறம், இடமிருந்து வலம்) ஹன்னலாரா, சபீனா; (பின்புறம், இடமிருந்து வலம்) நான், யாகென், பீட்டர், மான்ஃப்ரேட்