போக்கிரிகள் அட்டூழியம் செய்வது—ஏன்?
இந்நிகழ்ச்சி சாவோ பாலோ நகரில் நடந்தது. அப்போதுதான் அழகான வர்ணமடித்திருந்த அச்சுவரில், “நான் என்ன சொல்ல.” என்ற வாசகம் கொட்டை எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தது. இது என்ன அட்டூழியம் என்று நினைக்கிறீர்களா? சோம்பி திரியும் போக்கிரிகளின் எத்தனையோ அட்டூழியங்களில் ஒன்றுதான் இப்படி சுவரில் கன்னாபின்னா என்று கிறுக்குவது.
பொறுப்பே இல்லாத போக்கிரிகள் சிலர் உங்கள் புதிய காரை அடித்து நொறுக்கிவிட்டதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். அல்லது அரசாங்க உடமைகளை நாசம் செய்வதை ஒருவேளை பார்க்கிறீர்கள். அப்போது, ஏன் இப்படி நாசம் செய்கிறார்கள்? இந்தப் புல்லுருவிகளின் தொல்லைகள் இப்படி எக்கச்சக்கமாக பெருகிவிட்டதே! என்று வியப்படைவீர்கள். பல இடங்களில், இந்தப் போக்கிரிகள், டெலிபோன் பூத்தில்தான் தங்கள் கைவரிசையைக் காட்டுகிறார்கள். போன்களை துண்டித்து அல்லது நாசம்செய்து ஆனந்த தாண்டவம் ஆடுகிறார்கள். பெரும்பாலும் இவர்கள் குறிவைப்பது பொதுமக்கள் பயணிக்கும் இரயில்கள் அல்லது பஸ்கள். போக்கிரிகள் எதையும் துச்சமாக நினைக்கிறார்கள். சிலநேரங்களில் நம் கண்ணெதிரிலேயே போக்கிரிகள் அட்டூழியங்கள் செய்வதை பார்க்கிறோம். அல்லது அவர்கள் அட்டகாசத்தால் ஏற்பட்ட நஷ்டங்கள் நம் தலையில் விழுகின்றன. இத்தகைய அட்டூழியங்களுக்கு அடிப்படை காரணம் என்ன?
ரியோ டி ஜனீரோ என்ற நகரை சேர்ந்த மார்கூa என்ற இளைஞனும் அவனுடைய டீமும் ஃபுட்பால் விளையாட்டில் தோற்றுவிட்டார்கள். அதனால் வெறுப்படைந்த மார்கூ, வெற்றி கனியைத் தட்டிப்பறித்து சென்ற டீமின் ரசிகர்கள் நிறைந்திருந்த பஸ்மீது சரமாரியாக கற்களை வீசினான். க்லௌஸ் என்பவனின் உதாரணத்தை கவனியுங்கள்! பரீட்சையில் பாஸாகவில்லையென்றதும், அவனுக்கு கோபம் ஜிவ்வென்று தலைக்கேறியது, கற்களைவீசி ஜன்னல்களை எல்லாம் அடித்து நொறுக்கி துவம்சம் செய்தான். ஆனால் அவனால் ஏற்பட்ட நஷ்டத்தை அவனுடைய அப்பாவே ஈடுசெய்ய வேண்டும் என்று பள்ளி அதிகாரிகள் கண்டிப்பாக சொன்னபோது, ஜன்னலை அடித்து நொறுக்கியபோது இருந்த ‘ஆவேசம்’ மாயமாய் மறைந்தது. இன்னொரு இளைஞனின் பெயர் இர்வின். அவன் படித்துக்கொண்டே, வேலையும் பார்த்துவந்தான். அவனையும், அவனுடைய நண்பர்களையும் பார்த்தால், இந்தப் பூனையும் பால்குடிக்குமா என்று நினைப்பார்கள். ஆனால், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு நாசம்விளைவிப்பதே அவனுக்கும், அவன் நண்பர்களுக்கும் பொழுதுபோக்கு. மகனின் ‘வீர சாகசங்கள்’ பற்றி இர்வினுடைய பெற்றோருக்கு எதுவுமே தெரியாது. வால்ட்டர் ஒரு அனாதை. சாவோ போலோவின் தெருக்களே அவனுக்கு ‘வசந்தமாளிகை.’ போக்கிரிகளின் கும்பலே அவனுடைய உயிர் நண்பர்கள். அவர்கள் செய்யும் அட்டூழியங்களில் இவனும் தோள்கொடுத்து நிற்பான். கராத்தேயும் கற்றுக்கொண்டான். இதுவரை பார்த்த உதாரணங்களிலிருந்து அட்டூழியங்கள் செய்வது போக்கிரிகளே என்று தெரிகிறது. அட்டூழியம் செய்ய தூண்டும் காரணத்தை அல்லது மனநிலையை பொருத்து அட்டூழியங்களின் அளவும் வேறுபடும்.
“பழிவாங்குவதற்காக அல்லது அரசியல் கருத்தை வெளிப்படுத்த அட்டூழியம் செய்கிறார்கள். இளைஞர்களும்சரி, பெரியவர்களும்சரி, சிலநேரங்களில் ‘விளையாட்டுக்காக’ குற்றச்செயலிலும் ஈடுபடுவார்கள்” என்று சொல்கிறது த உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா. ஆனால் போக்கிரிகளின் அட்டூழியத்தை ஏதோ இளைஞர்களின் விளையாட்டுத்தனம் என்று எடுத்துக்கொள்ள முடியாது. அவர்களது அட்டூழியம் உடமைகளுக்கு அழிவை உண்டாக்குவதோடு, உயிரையும் குடிக்கிறது. இளைஞர்களின் கும்பல் ஒன்று, ‘சும்மா ஜாலிக்காக’ தூங்கிக்கொண்டிருந்த ஒரு ஆள்மீது, எண்ணெய்யை ஊற்றி, நெருப்பு வைத்துவிட்டது. பாவம், அந்தத் தென் அமெரிக்க இந்தியர். மருத்துவமனையில் பரிதாபமாக உயிரை விட்டார். “நிறைய பிச்சைக்காரர்களை தெருவில் உயிரோடு எரிக்கிறார்கள். அதற்கு எந்தவொரு சட்டநடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை என்று அந்த இளைஞர்கள் தங்கள் தரப்பில் நியாயம் சொன்னதாக” அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. அட்டூழியத்தால் உயிர் போகிறதோ இல்லையோ, ஆனால், பொருள் சேதத்தையும், உணர்ச்சி ரீதியில் ஏற்படும் சேதத்தையும் அளவிட முடியாது. அப்படியென்றால் யார்தான் அட்டூழியத்தை அடக்குவது அல்லது அடியோடு அகற்றுவது?
அட்டூழியத்தை அடக்குவது யார்?
போக்கிரிகளின் அட்டூழியத்தை போலீஸும், பள்ளிகளும் அடக்குமா? அதிகாரிகள், போதை மருந்து கடத்தல் அல்லது கொலை போன்ற பெரிய பெரிய குற்றங்களை கவனிப்பதிலேயே மூழ்கிவிட்டு, ‘உயிர் சேதமில்லாத’ குற்றங்களை அவ்வளவாக கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். இதுவும்கூட அட்டூழியத்தை அடக்க முடியாமல் இருப்பதற்கு ஒரு காரணம். இளைஞர்கள் பிரச்சினையில் மாட்டும்போது மாத்திரம், பெற்றோர்கள், “தங்கள் பிள்ளைகளின் சகாக்களை அல்லது பள்ளிக்கூடத்தை அல்லது [பிள்ளைகளை] கையும்களவுமாக பிடித்த போலீஸை குற்றம்சாட்டுகிறார்கள்” என்கிறார் ஒரு போலீஸ் அதிகாரி. கல்வியும், சட்டமும் ஓரளவுக்கு அட்டூழியத்தை குறைக்கலாம். ஆனால் பெற்றோரின் மனநிலை மாறாமல் இருந்தால் என்ன பயன்? இளம் குற்றவாளிகளை கண்காணிக்கும் அதிகாரி ஒருவர் கூறுவதாவது: “பிள்ளைகளுக்கு சலிப்பு ஏற்படும்போதும், சந்தர்ப்பம் வாய்க்கும்போதும் அட்டூழியம் செய்கிறார்கள். இவை அடிப்படை காரணங்களாகும். [பிள்ளைகள்] இரவில் ரொம்ப நேரம் வெளியவே சுற்றுகிறார்கள். அவர்களுக்கு உருப்படியாக செய்ய ஒன்றும் இருப்பதில்லை. வீட்டிலும் கண்டிப்பது கிடையாது. எனவேதான் ரொம்ப நேரம் வெளியே அலைகிறார்கள்.”
பல இடங்களில் இந்தப் போக்கிரிகளின் அட்டூழியம் பெரும் தலைவலியாக உள்ளது. ஆனாலும் இப்பிரச்சினையை அப்படியே தலைகீழாக மாற்றவும் முடியும். நாம் மேலே குறிப்பிட்ட போக்கிரி இளைஞர்கள் அடியோடு மாறிவிட்டார்கள். இப்போது அவர்கள் எந்தவித சமூகவிரோத செயல்களிலும் ஈடுபடுவதில்லை. ஒருகாலத்தில் இளம் குற்றவாளிகளாக திரிந்த இவர்களை திருத்தியது எது? அட்டூழியத்தை குறைப்பது மட்டும் அல்ல, அதை அடியோடு நீக்க முடியும் என்றால் ஆச்சரியமாக உள்ளதா? அப்படியென்றால் எமது அடுத்த கட்டுரையை படித்து பாருங்களேன்!
[அடிக்குறிப்புகள்]
a பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.