போக்கிரிகளின் அட்டூழியத்தை அடியோடு அகற்றுவது எப்படி?
“டீனேஜர்கள் பெரியவர்களுக்கும் அவர்கள் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கும், அவமரியாதையையும் வெறுப்பையும் காட்டுவதற்காகவே அட்டூழியங்களை செய்கிறார்கள் என்ற கருத்து எப்போதும் நிலவுகிறது” என்று விளக்குகிறார்கள், ஆசிரியர்களான ஜேன் நார்மனும், மைரன் டிபிள்யூ. ஹாரிஸும். நிலைமையை இனி மாற்றவே முடியாது என்ற முடிவுக்கு பல இளைஞர்கள் வந்துவிடுகிறார்கள். ஆனால், “பெற்றோர்கள் பிள்ளைகளிடத்தில் அதிக நேரத்தை செலவிட்டால் அல்லது டீனேஜர்களுக்கு ரொம்ப போரடிக்காமல் இருந்தால், அவர்கள் செய்யும் அட்டூழியங்களையும் குறைக்க முடியும் என்று 3 பிள்ளைகளில் ஒரு பிள்ளை நினைப்பதாக” அந்த ஆசிரியர்கள் அறிவித்தார்கள். இளைஞர்களுக்கு வீட்டில் போரடிக்காமல் பார்த்துக்கொண்டால், அவர்களை நல்ல முறையில் பெற்றோர்கள் கண்டித்து வளர்த்தால் ஒருவேளை அட்டூழியங்களை குறைக்க முடியும். ஆனால் அட்டூழியத்தை அடியோடு அகற்ற முடியுமா?
இளைஞர்கள் பலர் தனியாக இருக்கும்போது தங்கள் வாலை சுருட்டிவைத்து, சமர்த்தாக இருப்பார்கள். ஆனால் கும்பலாக சேர்ந்துவிட்டால், இவ்வளவு ஏன், இரண்டு பேராக இருந்தாலே போதும் தங்கள் வாலை அவிழ்த்துவிடுவார்கள். மற்றவர்களின் கவனத்தை கவர முட்டாள்த்தனமான வேலைகளையும், அட்டகாசங்களையும் செய்வார்கள். இதேபோல்தான் நெல்சனும் இருந்தான். போதை பொருள் அல்லது மது உள்ளே இறங்கியதும் பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கி தூள்பறத்தி, தன்னுடைய கோபத்தையும், வெறுப்பையும் காட்டுவான். ஜோசே என்ற இளைஞனுக்கு, பண்ணைப் புரட்சியைப் பற்றியும், தொழிலாளர் உரிமைகளைப் பற்றியும் மாதா கோயில் பிரசங்கத்தில் கேட்டதும், அவனுக்கு ஆவேசம் பொங்கியது. அநியாயத்தை தட்டிக்கேட்பதற்காக, தொழிலாளர் வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டு, கும்பலோடு சேர்ந்து அட்டூழியங்களை செய்யவேண்டும் என்று நினைத்தான். ஆனால் இப்படி புரட்சியிலோ அட்டூழியத்திலோ இறங்குவதைவிட வேறொரு புதிய பாதை இருப்பது நெல்சனுக்கும் ஜோசேவுக்கும் தெரிய வந்தது.
அட்டூழியத்தின் ஆணி வேர்
டீனேஜர்கள் சிலர் அட்டூழியம் செய்வதற்கான காரணத்தை கொஞ்சம் துருவி பார்க்கலாம். நிறைய விடலைப்பருவ இளசுகள் குழம்பிப்போய் கிடக்கிறார்கள். “இந்த உலகத்தை, குழப்பம் நிறைந்த, பைத்தியக்காரர்கள் நிறைந்த, மெண்டல் ஆஸ்பத்திரி என்று வர்ணிக்கிறார்கள்.” இளைஞரை பற்றி பலர் பலவிதமாக நினைத்தாலும், அவர்களைப் பற்றி ஓர் அறிக்கை இவ்வாறு கூறியது: “வாழ்க்கை எப்படி அமையுமோ என்ற பயம் டீனேஜர்களை பிடித்து வாட்டுகிறது. இந்த சின்ன வயசில் அவர்களுக்கு என்ன கவலை என்று பெரியவர்கள் தட்டிக்கழிக்கலாம். அது தவறு. [உலகத்தைப் பற்றி] அவர்கள் ரொம்பவும் கவலைப்படுகிறார்கள்.” ஒரு இளைஞன் தெரிந்தோ தெரியாமலோ அட்டூழியம் செய்கிறான் என்றால், அவனுடைய உள்ளத்தில் குமுறிக்கொண்டிருந்த ஏமாற்றங்களும், தீர்க்க முடியாத பிரச்சினைகளும் எரிமலையாக வெடித்து சிதறியது என்று அர்த்தம். அல்லது அவனுடைய தேவைகளை நிறைவு செய்யாததால் ஏற்பட்ட வெறுப்பால் அட்டூழியம் செய்கிறான் என்று அர்த்தம். இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஆசிரியர்கள் சர்வே நடத்திய போது, “அதில் தங்கள் கருத்தை சொன்ன, ஒருவர்கூட அட்டூழியத்தை ஆதரிக்கவும் இல்லை, அது நியாயம் என்று சொல்லவும் இல்லை. அட்டூழியம் செய்தவர்கள்கூட ஒன்றும் சொல்லவில்லை.”
பாவம், சில இளைஞர்கள்! அன்பான ஒரு வார்த்தை கேட்கமாட்டோமா? நம்மை பாராட்டி ஒரு சொல் சொல்ல மாட்டார்களா? என்று ஏங்குகிறார்கள். இவர்களுக்கு கல்வியும் சிம்மசொப்பனமாக ஆகிவிட்டது. தொழில் கல்வி பயின்றால்தான் அல்லது சிறப்பு பாடத்தில் உயர் பட்டம் பெற்றால்தான் வேலை கிடைக்கும் என்று சொல்லி சொல்லியே கல்வியின் அவசியத்தை அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆசிரியர்களும் சரி, பெற்றோர்களும் சரி, ஏன் நண்பர்கள்கூட குறைகூறுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். படி! படி! என்று மேலும் மேலும் சுமையை ஏற்றுகிறார்கள். ஓர் இளைஞனை அவனுடைய சாதனைகளை வைத்தே எடைபோடுகிறார்களே தவிர, அவனை மனிதனாக மதிப்பதில்லை. பல இளைஞர்கள் தங்களையே நொந்துகொள்கிறார்கள். அப்போதுதான் எதிர்ப்பை காட்டுகிறார்கள் அல்லது அட்டூழியம் செய்கிறார்கள். அப்படியென்றால், பெற்றோர்கள் அன்பு காட்டி, கண்காணித்து வளர்த்தால் இளைஞர்களது மனவேதைனை பெருமளவுக்கு குறையும் இல்லையா?
போக்கிரி பிள்ளைகள் சுவற்றில் கிறுக்குவதையும், அவர்கள் செய்யும் சிறுசிறு குற்றங்களையும் ஒருவேளை அதிகாரிகள் வேண்டுமென்றால் கண்டுகொள்ளாமல் இருக்கலாம். ஆனால், அட்டூழியத்தை அடக்க ஆசிரியர்களும், பள்ளியும் பொறுப்பேற்க வேண்டும் என்று அக்கறையுள்ள பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். சட்ட நடவடிக்கையைப் பற்றி, த உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு கூறுகிறது: “அட்டூழியம் செய்தால் அபராதம் விதிக்கலாம் அல்லது சிறையில் அடைக்கலாம். பிள்ளைகள் அட்டூழியம் செய்தால் அதற்கு பெற்றோர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று ஒருசில நாடுகளில் சட்டங்கள் உண்டு. ஆனால் பெருவாரியான அட்டூழிய செயல்களை தண்டிப்பதில்லை. பல வழக்குகளில் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரும் அளவுக்கு நஷ்டம் இருப்பதில்லை. இதுபோன்ற அட்டூழியங்களுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவதில்லை.” குற்றவாளிகளை எடுத்துக்கொண்டால், வெறும் 3 சதவிகிதத்தினர் மட்டுமே பிடிபடுகிறார்கள் என்று அறிக்கை ஒன்று காட்டியது.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சரிவர வளர்த்தாலே போதும், இளம் வயதினர் செய்யும் குற்றத்தை தடுத்து நிறுத்திவிடலாம். ஆனால் குடும்பங்கள் எல்லாம் சிதறுதேங்காயாக சிதறுகையில் சமுதாயம் ஆட்டம் காண்கிறது. “பெற்றோர்கள் பிள்ளைகளை சரிவர கவனிப்பதில்லை, நல்வழிப்படுத்தும் கட்டுப்பாடுகளை விதிப்பதில்லை, அவர்களோடு முகம்கொடுத்து பேசுவதில்லை, அவர்களை துச்சமாக நினைக்கிறார்கள், அவர்கள்மீது துளிக்கூட அக்கறை காட்டுவதில்லை.” அதனால்தான் தொல்லைத்தரும் இளைஞர்கள் உருவாகிறார்கள் என்று கூறுகிறார் ஆனா லூயீஸா வையரே டீ மாட்டோஸ். இவர் பிரேசிலில், சாவோ போலோ பல்கலைக்கழக பேராசிரியர்.
“அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்” என்று அன்றே சொல்லிவைத்தார் இயேசு. அதை இன்று கண்கூடாக காண்கிறோம். (மத்தேயு 24:12) பைபிளில் 2 திமொத்தேயு 3:1-4-ல் (பொது மொழிபெயர்ப்பு) அப்போஸ்தன் பவுல் இவ்வாறு எழுதினார்: “இறுதி நாள்களில் கொடிய காலங்கள் வரவிருக்கின்றன என அறிந்துகொள். தன்னலம் நாடுவோர், பண ஆசையுடையோர், வீம்புடையோர், செருக்குடையோர், பழித்துரைப்போர், பெற்றோருக்குத் கீழ்ப்படியாதோர், நன்றியற்றோர், தூய்மையற்றோர், அன்புணர்வு அற்றோர், ஒத்துப்போகாதோர், புறங்கூறுவோர், தன்னடக்கமற்றோர், வன்முறையாளர், நன்மையை விரும்பாதோர், துரோகம் செய்வோர், கண்மூடித்தனமாகச் செயல்படுவோர், தற்பெருமை கொள்வோர், கடவுளை விரும்புவதைவிட சிற்றின்பத்தை அதிகம் விரும்புவோர் ஆகியோர் தோன்றுவர்.” இந்த வசனங்கள் குறிப்பிடுகிற மனிதர்கள் இல்லை என்று யாராவது மறுக்க முடியுமா? இப்படிப்பட்ட மக்கள் மத்தியில் வாழ்வதால்தான் இளம் குற்றவாளிகள் பெருகுகிறார்கள் என்பது உண்மை. மாற்ற முடியாதது எதுவும் இல்லை. ஒரேயடியாக நம்பிக்கையை தளரவிடாதீர்கள். போக்கிரிகளின் அட்டூழியத்தை அடியோடு அழித்திட சமூகம் தவறிவிட்டது. ஆனால் தனிமனிதர்கள் பலர் மனம்மாறி, ரௌடித்தனமான செயல்களை எல்லாம் விட்டொழித்து ‘புதிய பாதையில்’ நடைபோடுகிறார்கள். இவர்கள் அட்டூழியம் செய்வதை அடியோடு நிறுத்திவிட்டார்கள்.
இளைஞர்கள் நல்வழிக்கு நல் ஆலோசனை
அட்டூழியம் செய்த போக்கிரிகளும் மற்றவர்களும் எப்படி திருந்தினார்கள்? காலத்திற்கு ஏற்ற, நல் ஆலோசனை பைபிள் தருகிறது என்று சொன்னால் சில கல்வியாளர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நம்ப முடியவில்லை. இந்த நல் ஆலோசனையை கேட்ட முன்னாள் போக்கிரிகள், “கெடுமதி கொண்ட கும்பலைப் பின்பற்றாதே” என்ற கடவுள் கொடுத்த சட்டத்திற்கு அடிபணிந்து நடக்கிறார்கள். (யாத்திராகமம் [விடுதலைப் பயணம்] 23:2, பொ.மொ.) மத நம்பிக்கைகளும், மத கோட்பாடுகளும் பலருக்கு புதிராகவே இருந்தன. ஆனால் அவற்றைப் பற்றி கடவுளுடைய வார்த்தையிலிருந்து சரியாக புரிந்துகொண்டு, அறிவுக்கண் திறந்தபோது அப்படியே அசந்துபோனார்கள். அவர்கள் கற்ற விஷயம் அவர்களை அடியோடு மாற்றியது. சாவோ போலோவை சேர்ந்த ஜோசே என்ற இளைஞனின் அனுபவத்தை கேளுங்கள். உருவ வழிபாட்டில் நம்பிக்கையை ஊட்டி அவனை வளர்த்திருந்தார்கள். ஆனால், கடவுளுக்கு யெகோவா என்று பெயர் இருக்கிறது, அவர் உருவ வழிபாட்டை ஏற்றுக்கொள்வதில்லை என்று ஜோசே கற்றுக்கொண்ட உடனே போக்கிரி வாழ்க்கையை விட்டொழித்து, திருந்திவிட்டான். கடவுளுடைய பார்வையில் நல்லவைகளையே செய்ய தொடங்கினான்.—யாத்திராகமம் 20:4, 5; சங்கீதம் 83;17; 1 யோவான் 5:21; வெளிப்படுத்துதல் 4:11.
நாம் ஏற்கெனவே குறிப்பிட்ட நெல்சனை எடுத்துக்கொள்ளுங்கள். முன்பு ரௌடி கும்பலில் சேர்ந்து கொண்டு, மறியலில் ஈடுபட்ட போது, அவனுக்கு சதா ஏமாற்றமும் வெறுப்பும்தான் மிஞ்சியது. ஆனால் இப்போது அவனுக்கு எதிர்காலத்தைப் பற்றி உண்மையில் நம்பிக்கை பிறந்திருக்கிறது. இந்த நம்பிக்கை அவனுக்கு அளவிட முடியாத ஆறுதலை தந்திருக்கிறது. இதோ மனம் திறந்து கூறுகிறான்: “கெட்ட பசங்களோடு சேர்ந்துகொண்டு, போதை மருந்துக்கு அடிமையாகி இருந்தபோது, வீட்டில் என்னை யாருமே மதிக்கவில்லை. ஆனால் இப்போது எல்லாரும் என்னை தலைமேல் வைத்து கொண்டாடுகிறார்கள். ‘உன் அண்ணன்களுக்கு கொஞ்சம் நல்ல புத்தி சொல்லேம்பா’ என்று அப்பா என்னிடத்தில் கேட்கிறார். யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படிக்க தொடங்கியதால்தான் எனக்கு இந்த சந்தோஷம் கிடைத்தது. இப்போது வாழ்க்கையில் ஒரு பிடிப்பும் வந்துள்ளது.” எப்போதும் வன்முறை தலைவிரித்தாடுகிற பட்டண வாழ்க்கையில் பழகிப்போன மார்கூ போன்ற இளைஞர்களுக்கு, கடவுளுடைய அரசாங்கம் இந்தப் பூமியை அழகு கொஞ்சும் நந்தவனமாக (பரதீஸாக) மாற்றப்போகிறது என்ற சேதி மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது.—வெளிப்படுத்துதல் 21:3, 4.
ஒருகாலத்தில் குண்டர்களின் கும்பலில் இருந்து, தெருக்களில் ரௌடியாக சுற்றி அட்டூழியம் செய்துகொண்டிருந்த வால்ட்டரும் திருந்திவிட்டான். மகிழ்ச்சியை மருந்துக்குக்கூட அறியாமல் அனாதையாக வளர்ந்த வால்ட்டருக்கு, சேற்றில் மலர்ந்த செந்தாமரைபோல் கடவுளுக்கென்று ஆட்கள் இருக்கிறார்கள் என்ற சேதி கேட்டு அவன் மனம் துள்ளியது. கடவுளுடைய ஆட்கள் பைபிள் கொள்கைகளை பின்பற்ற மனதார முயற்சி செய்கிறார்கள். மற்றவர்களிடத்தில் பரிவு காட்டி, பண்போடு நடந்துகொண்டு, அன்பை பொழிகிறார்கள். வால்ட்டர் இவ்வாறு விளக்குகிறான்: “இயேசு வாக்குக்கொடுத்தப்படி, இப்போது என் குடும்பம் ரொம்ப பெருசு. இதில் ‘சகோதர சகோதரிகள், அப்பா அம்மாக்கள்’ பல தினுசு. எதிர்காலத்துல, நீதியோடு ஆட்சி செய்யும் கடவுளுடைய அரசாங்கத்துல ஜனங்க சந்தோஷமா, ஒற்றுமையா இருப்பாங்க என்ற ஒளிமயமான எதிர்காலத்தை நெனச்சி வாழ முடியுது.”—மாற்கு 10:29, 30; சங்கீதம் 37:10, 11, 29.
புரட்சியை விட்டொழித்தால், புதிய பாதை
நாம் பார்த்த இவர்கள் ஒருகாலத்தில் போக்கிரிகளாய் அட்டூழியம் செய்து திரிந்தவர்கள்; திருந்திவிட்டு, சக மனிதர்களிடத்தில் பரிவோடும் அன்போடும் நடந்துகொள்கிறார்கள். இவர்கள், ‘தீமையை’ அடியோடு ‘வெறுக்கிறார்கள்’ (சங்கீதம் 97:10; மத்தேயு 7:12) அப்படியென்றால், நீங்கள் எப்படிப்பட்டவர்கள்? உலகெங்கும் பரவிக்கிடக்கும் அட்டூழியங்களால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களில் நீங்களும் ஒருவரா? கவலையை விடுங்கள். கடவுளுடைய வார்த்தையை படியுங்கள். அப்போது அன்புமிக்க பரலோக தந்தை யெகோவாவைப் பற்றியும், அவர் உங்கள்மீது பரிவுகாட்ட விரும்புகிறார் என்பதைப் பற்றியும் நன்றாக அறிந்து கொள்வீர்கள். (1 பேதுரு 5:6, 7) உங்களிடத்தில் தனிப்பட்ட குறைகள் இருக்கலாம் அல்லது நீங்கள் வறுமையில் வாடிக்கொண்டிருக்கலாம். ஆனாலும் ஆன்மீக ரீதியில் வளர கடவுள் உங்களுக்கு உதவுவார். இதை அனுபவ வாயிலாக கண்டால்தான் அருமை புரியும்!
பைபிள் சத்தியத்தை அறிந்துகொள்ளும் வாய்ப்பை எல்லா நாட்டு மக்களுக்கும் அளிக்கவே யெகோவாவும், அவருடைய பிள்ளை இயேசு கிறிஸ்துவும் மனதார விரும்புகிறார்கள். கடவுளுடைய வார்த்தையின் தாக்கம், அட்டூழியம் செய்பவர்களை உடனே திருத்திவிடுகிறது. அதுமட்டும் அல்ல. கடவுளுடைய சட்ட திட்டங்களை பின்பற்றுவதில் அவர்களுக்கு மேலும் உறுதுணையாக உள்ளது. இதன் காரணமாக, தூய்மைக்கும், நல் நடத்தைக்கும் பேர்போன சர்வதேச சகோதர கூட்டுறவில், அதாவது உலகளாவிய யெகோவாவின் சாட்சிகளுடைய சபையில் அங்கத்தினர்களாக உள்ளனர். எபேசியர் 4:24 (பொ.மொ.) இவ்வாறு சொல்கிறது: “கடவுளது சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்துகொள்ளுங்கள். அவ்வியல்பு உண்மையான நீதியிலும் தூய்மையிலும் வெளிப்படும்.” இவ்வார்த்தைகளுக்கு ஏற்றபடி இந்த உண்மை கிறிஸ்தவர்கள் வாழ்கிறார்கள். இப்படிப்பட்ட மக்கள் இந்த உலகம் முழுவதிலும் நிறைந்திருக்கும் காலம் வெகுதூரம் இல்லை. ஏனென்றால் வரவிருக்கும் பயங்கரமான அழிவில் இவர்கள் மாத்திரம் தப்பி, நிரந்தரமாக வாழப்போகிறார்கள்.—லூக்கா 23:43-ஐ ஒப்பிடுக.
அட்டூழியமே இல்லாத புதியதோர் உலகம் உருவாகிறது
அட்டூழியத்தை அடியோடு அகற்ற முடியும் என்று நினைக்கிறீர்களா? ஆகா! அந்த அற்புதம் எப்படி நிகழும் என்கிறீர்களா? இன்றைக்கு இருக்கும் அக்கிரமங்களை கடவுளுடைய அரசாங்கம் விரைவில் அகற்றவிருக்கிறது. பூமியில் குடியிருப்போர், கடவுளுடைய நேர்மையான சட்டங்களை வேண்டுமென்றே மீறினால், கண்டிப்பாக தண்டனை பெறுவார்கள். (ஏசாயா 24:5, 6-ஐ ஒப்பிடுக.) “அக்கிரமக்காரர் ஏகமாய் அழிக்கப்படுவார்கள்.” அப்போது, நல்லவர்கள் மட்டும் காப்பாற்றப்படுவார்கள். யெகோவா “அவர்களுக்கு உதவிசெய்து, அவர்களை விடுவிப்பார்; அவர்கள் அவரை நம்பியிருக்கிறபடியால், அவர்களைத் துன்மார்க்கருடைய கைக்குத் தப்புவித்து இரட்சிப்பார்.”—சங்கீதம் 37:38-40.
உண்மைதான், அட்டூழியத்தின் ஆணி வேர்களை பிடுங்கி எறிய முடியும். குற்றச்செயல், அராஜகம், அவதி, அநீதி என எதுவும் இருக்காது. இவற்றிற்கு பதிலாக, சமாதானம், உண்மையான நீதி, அமைதி, பாதுகாப்பு நிறைந்த வாழ்க்கை புதிய உலகில் இருக்கும். எசாயா 32:18-ல் (பொ.மொ.) சொல்லியிருக்கும் வாக்கு உண்மையில் நிறைவேறும்: “என் மக்கள் அமைதிசூழ் வீடுகளிலும் பாதுகாப்பான கூடாரங்களிலும் தொல்லையற்ற தங்குமிடங்களிலும் குடியிருப்பர்.” மற்றவர்களிடத்தில் பரிவும், அன்பும் காட்டும் மக்களே, அழகான, உலகளாவிய பரதீஸில் குடியிருப்பார்கள்.
லட்சக்கணக்கான மக்கள் கடவுளோடு நெருங்கிய உறவை வளர்த்து வருகிறார்கள். இவர்களோடு சேர்ந்து, திருந்திவிட்ட போக்கிரிகளும் கடவுளோடு நெருக்கமான உறவை அனுபவித்து வருகிறார்கள். இப்போதெல்லாம் இவர்கள் அட்டூழியத்தின் பக்கம் தலைவைத்துக்கூட படுப்பதில்லை. நீங்களும்கூட கடவுளுடைய வார்த்தை தரும் நல் ஆலோசனையை ஏற்று, கடவுள் உருவாக்கவிருக்கும் புதிய உலகில் வாழ்வதற்கான தகுதியைப் பெற விரும்புகிறீர்களா? “நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” என்று யெகோவா சொன்னதை அந்தக் காலத்தில் வாழ்ந்த சங்கீதக்காரன் பதிவுசெய்திருக்கிறார். நீங்களும்கூட இதைக்கேட்டு நடக்கலாமே!—சங்கீதம் 32:8.
[பக்கம் 7-ன் படம்]
பெற்றோரின் கவனிப்பும் அன்பும் இளைஞர்களுக்கு அரண்