பெற்றோரே, உங்கள் முன்மாதிரி கற்பிப்பது என்ன?
“நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போலத் தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி, . . . அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.”—எபேசியர் 5:1, 2.
1. முதல் மனித தம்பதிக்கு என்ன வழிமுறைகளை யெகோவா கொடுத்தார்?
குடும்ப ஏற்பாட்டை ஆரம்பித்து வைத்தவர் யெகோவா தேவன். எல்லா குடும்பங்களுக்கும் அவரே மூலகாரணர். ஏனென்றால், முதல் குடும்பத்தை நிறுவியவரும் முதல் மனித தம்பதிகளுக்கு பிள்ளைகளைப் பிறப்பிக்கும் சக்தியைக் கொடுத்தவரும் அவரே. (எபேசியர் 3:14, 15) அவர்களுடைய பொறுப்புகளைப் பற்றிய அடிப்படை தகவல்களை ஆதாமுக்கும் ஏவாளுக்கும் கொடுத்தார். இந்தப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் தனிப்பட்டவர்களாக, தாங்களே முன்வந்து செயல்பட அவர்களுக்கு போதுமான சந்தர்ப்பத்தையும் கொடுத்தார். (ஆதியாகமம் 1:28-30; 2:6, 15-22) ஆதாமும் ஏவாளும் பாவம் செய்த பிறகு, குடும்பங்கள் எதிர்ப்பட வேண்டிய சூழ்நிலைகள் இன்னும் சிக்கலாயின. இருந்தபோதிலும், இப்படிப்பட்ட சூழ்நிலைகளை சமாளிக்க உதவும் வழிமுறைகளை அவருடைய ஊழியர்களுக்கு யெகோவா அன்போடு கொடுத்தார்.
2. (அ) எழுத்து வடிவ ஆலோசனைகளோடு, வாய்மூல போதனைகளையும் எந்த வகையில் யெகோவா வலியுறுத்தினார்? (ஆ) பெற்றோர் தங்களைத் தாங்களே என்ன கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும்?
2 நம்முடைய மிகச் சிறந்த போதனையாளராகிய யெகோவா தேவன், எதை செய்ய வேண்டும், எதை தவிர்க்க வேண்டும் என்பதை வெறுமனே எழுத்து வடிவில் மட்டும் கட்டளைகளைக் கொடுத்துவிட்டு அத்துடன் விட்டுவிடவில்லை. பூர்வ காலங்களில், எழுத்து வடிவ கட்டளைகளோடு வாய்மூலமாகவும் பல குறிப்புகளை தந்தார். ஆசாரியர்கள், தீர்க்கதரிசிகள், குடும்பத் தலைவர்கள் மூலமாக இவற்றைக் கொடுத்தார். இப்படி வாய்மூலமாக போதிப்பதற்கு இன்று கடவுள் யாரை பயன்படுத்துகிறார்? கிறிஸ்தவ மூப்பர்களையும் பெற்றோரையும். அப்படியானால், பெற்றோராக, யெகோவாவின் வழிகளை உங்களுடைய குடும்பத்திற்கு போதிக்கும் பொறுப்பை நீங்கள் சரிவர நிறைவேற்றி வருகிறீர்களா?—நீதிமொழிகள் 6:20-23.
3. குடும்பத் தலைவர்கள் திறமையாக போதிப்பதற்கு யெகோவாவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?
3 இப்படிப்பட்ட போதனைகள் குடும்பத்திற்கு எப்படி கொடுக்கப்பட வேண்டும்? இதில், யெகோவாவே சிறந்த முன்மாதிரி வகிக்கிறார். எது சரி, எது தவறு என்பதை தெளிவாக குறிப்பிடுகிறார். பலமுறை அவற்றை மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகிறார். (யாத்திராகமம் 20:4, 5; உபாகமம் 4:23, 24; 5:8, 9; 6:14, 15; யோசுவா 24:19, 20) சிந்தனையைத் தூண்டும் கேள்விகளைக் கேட்கிறார். (யோபு 38:4, 8, 31) உதாரணங்கள், உண்மையான வாழ்க்கை அனுபவங்கள் மூலம், நம்முடைய உணர்ச்சிகளைத் தூண்டி, நம்முடைய இருதயங்களை வடிவமைக்கிறார். (ஆதியாகமம் 15:5; தானியேல் 3:1-29) பெற்றோரே, உங்கள் பிள்ளைகளுக்கு போதிக்கும்போது, இந்த முன்மாதிரியை பின்பற்றுகிறீர்களா?
4. சிட்சை கொடுக்கும் விஷயத்தில் யெகோவாவிடம் நாம் கற்றுக் கொள்வது என்ன, சிட்சை ஏன் அவசியம்?
4 சரியான காரியங்களுக்காக யெகோவா உறுதியாய் இருப்பவர். ஆனால், அபூரணத்தின் பாதிப்புகளை அவர் புரிந்து கொள்கிறார். எனவே, தண்டனை கொடுப்பதற்கு முன், அபூரண மனிதர்களுக்கு போதிக்கிறார். நினைப்பூட்டுகிறார். மறுபடியும் மறுபடியும் எச்சரிக்கிறார். (ஆதியாகமம் 19:15, 16; எரேமியா 7:23-26) அவர் சிட்சை கொடுக்கும்போதும், சரியான அளவே கொடுக்கிறார். அளவுக்கதிகமாக கொடுப்பதில்லை. (சங்கீதம் 103:10, 11; ஏசாயா 28:26-29) இந்த முறையில் நம்முடைய பிள்ளைகளை நடத்தினால், நாம் யெகோவாவை அறிந்திருக்கிறோம் என்பதற்கு அதுவே ஓர் அத்தாட்சி. பிள்ளைகளும் யெகோவாவை தெரிந்து கொள்வதை இது சுலபமாக்கும்.—எரேமியா 22:16; 1 யோவான் 4:8.
5. செவிகொடுத்து கேட்பதைப் பற்றி யெகோவாவின் மாதிரியிலிருந்து பெற்றோர் கற்றுக்கொள்ள வேண்டியதென்ன?
5 அற்புதமான விஷயம் என்னவென்றால், அன்புள்ள பரலோக தகப்பனாக, யெகோவா செவிகொடுக்கிறார். அவர் வெறுமனே ஆணையிடுபவர் மட்டுமல்ல. நம்முடைய இருதயங்களில் இருப்பவற்றை அப்படியே அவரிடம் கொட்டி தீர்க்க உற்சாகப்படுத்துகிறார். (சங்கீதம் 62:8) ஜெபத்தில் நாம் சொல்லும் அல்லது கேட்கும் காரியங்கள் சரியில்லை என்றால், உடனடியாக பரலோகத்தில் இருந்து சத்தமாக கடிந்துரைக்க மாட்டார். அவர் பொறுமையாக நமக்கு போதிக்கிறார். எனவே, ‘பிரியமான பிள்ளைகளைப்போலத் தேவனைப் பின்பற்றுங்கள்’ என்ற அப்போஸ்தலனாகிய பவுலின் அறிவுரை எவ்வளவு பொருத்தமானது. (எபேசியர் 4:31–5:1) தங்களுடைய பிள்ளைகளுக்கு போதிக்க முயலும் பெற்றோருக்கு யெகோவா வைக்கும் முன்மாதிரி என்னே சிறந்தது! நம் இருதயங்களில் ஆழப் பதிந்து, அவருடைய வழியில் நடக்க வைக்கும் மிகச் சிறந்த முன்மாதிரி.
முன்மாதிரியின் செல்வாக்கு
6. பெற்றோரின் மனப்பான்மையும் முன்மாதிரியும் பிள்ளைகளை எப்படி பாதிக்கிறது?
6 வாய்மூலம் கொடுக்கும் போதனைகளோடு, பெற்றோர் வைக்கும் முன்மாதிரியே இளைஞர்கள்மீது அதிக செல்வாக்கு செலுத்துகிறது. பெற்றோர் விரும்பினாலும்சரி விரும்பாவிட்டாலும்சரி, பிள்ளைகள் அவர்களுடைய முன்மாதிரியைத்தான் பின்பற்றுவார்கள். பெற்றோருக்கு இது மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால், சில சமயங்களில், அவர்கள் சொல்லிய அதே வார்த்தைகளை பிள்ளைகள் சொல்ல கேட்கும்போது, அதிர்ச்சியும் உண்டாகலாம். பெற்றோருடைய நடத்தையும் மனப்பான்மையும் ஆவிக்குரிய காரியங்களுக்கு ஆழ்ந்த போற்றுதலைக் காட்டுவதாக இருந்தால், அது பிள்ளைகளின்மீது நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.—நீதிமொழிகள் 20:7.
7. தகப்பனாக, யெப்தா தன்னுடைய மகளுக்கு என்ன விதமான முன்மாதிரியை வைத்தார், அதன் பலன் என்ன?
7 பெற்றோருடைய முன்மாதிரியின் பலனை பைபிள் தெளிவாக விளக்குகிறது. அம்மோனியர்களை தோற்கடித்து, இஸ்ரவேலர்கள் வெற்றிவாகை சூட யெகோவா யெப்தாவை பயன்படுத்தினார். யெப்தா தகப்பனாகவும் இருந்தார். இஸ்ரவேலரோடு யெகோவாவின் செயல்தொடர்புகள் பற்றிய சரித்திரத்தை யெப்தா அடிக்கடி படித்திருந்திருப்பார் என்பதை அம்மோன் ராஜாவுக்கு அவர் கொடுத்த பதிலைப் பற்றிய பதிவு தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. அந்த சரித்திரத்தை அடிக்கடி தாராளமாக அவரால் மேற்கோள் காட்ட முடிந்தது. யெகோவாவில் உறுதியான விசுவாசத்தை காண்பித்தார். விசுவாசத்தையும் சுயதியாக மனப்பான்மையையும் அவருடைய மகள் வளர்த்துக் கொள்ள அவருடைய முன்மாதிரி உதவியது என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. திருமணம் செய்து கொள்ளாமல் யெகோவாவுக்கு தன்னையே அர்ப்பணித்து வாழ்நாள் முழுவதும் சேவை செய்வதை ஏற்றுக் கொண்டபோது இதை காட்டினாள்.—நியாயாதிபதிகள் 11:14-27, 34-40; ஒப்பிடுக: யோசுவா 1:8.
8. (அ) சாமுவேலின் பெற்றோர் என்ன சிறந்த மனப்பான்மையை காட்டினார்கள்? (ஆ) சாமுவேலுக்கு அது எப்படி நன்மை அளித்தது?
8 சிறு பிள்ளையாக, சாமுவேல் சிறந்த முன்மாதிரியாக விளங்கினார். வாழ்நாள் முழுவதும் கடவுளுக்கு விசுவாசமுள்ள தீர்க்கதரிசியாகவும் நிரூபித்தார். அவரைப் போலவே உங்களுடைய பிள்ளைகளும் வளர வேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்களா? சாமுவேலின் பெற்றோர், எல்க்கானாவும் அன்னாளும் வைத்த முன்மாதிரியை ஆராய்ந்து பாருங்கள். எல்லா விதத்திலும் முழுநிறைவு பெற்ற குடும்பமாக இல்லாத போதிலும், அவர்கள் பரிசுத்த கூடாரம் இருந்த இடமாகிய சீலோவிற்கு வழிபாட்டுக்காக தவறாமல் சென்றனர். (1 சாமுவேல் 1:3-8, 21) அன்னாள் எந்தளவு உள்ளார்ந்த உணர்ச்சிகளோடு ஜெபம் செய்தார் என்பதைக் கவனியுங்கள். (1 சாமுவேல் 1:9-13) கடவுளுக்கு செய்த எந்தவொரு பொருத்தனையையும் நிறைவேற்றுவதன் அவசியத்தை இருவருமே எப்படி எண்ணினார்கள் என்பதை சற்று உற்று கவனியுங்கள். (1 சாமுவேல் 1:22-28) சரியான பாதையில் நடக்க தேவையான குணங்களை வளர்த்துக் கொள்ள பெற்றோருடைய மிகச் சிறந்த முன்மாதிரி சாமுவேலுக்கு உதவியது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. யெகோவாவை பேருக்கு சேவித்துக் கொண்டு, அவருடைய வழிகளை அவமதித்த ஆட்களுக்கு மத்தியில் இருந்தபோதும், சாமுவேல் சரியான வழியில் நடந்தார். தக்க நேரத்தில், தம்முடைய தீர்க்கதரிசியாக இருக்கும் பொறுப்பை யெகோவா சாமுவேலிடம் ஒப்படைத்தார்.—1 சாமுவேல் 2:11, 12; 3:1-21.
9. (அ) தீமோத்தேயுவின் வீட்டில் நிலவிய என்ன சூழ்நிலை அவர் நல்லவிதத்தில் வளர உதவியது? (ஆ) தீமோத்தேயு எப்படிப்பட்ட மனிதனானார்?
9 இளம்வயதிலேயே அப்போஸ்தலனாகிய பவுலின் கூட்டாளியாகிய தீமோத்தேயுவைப் போல் உங்கள் மகனும் ஆகவேண்டுமா? தீமோத்தேயுவின் தகப்பன் விசுவாசியல்ல. ஆனால், ஆவிக்குரிய காரியங்களுக்கான போற்றுதலை காண்பிப்பதில் அவருடைய அம்மாவும் பாட்டியும் சிறந்த முன்மாதிரி வைத்தார்கள். கிறிஸ்தவனாக, தீமோத்தேயுவின் வாழ்க்கையில் சிறந்த அஸ்திவாரத்தைப் போட இது நிச்சயமாகவே உதவியது. அவருடைய அம்மா ஐனிக்கேயாளும் பாட்டி லோவிசாளும் “பாசாங்குத்தனமில்லாத . . . விசுவாசத்தை” காட்டினர் என சொல்லப்பட்டிருக்கிறது. கிறிஸ்தவர்களாக அவர்கள் வாழ்க்கையில் நடித்துக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் எதை நம்பினார்களோ அதற்கு இசைவாக வாழ்ந்தார்கள். அதையேதான் தீமோத்தேயுவுக்கும் கற்றுக் கொடுத்தார்கள். நம்பிக்கைக்குரியவராக தீமோத்தேயு நிரூபித்தார். மற்றவர்களுடைய நலனில் உண்மையிலேயே அக்கறை காண்பித்தார்.—2 தீமோத்தேயு 1:5, NW; பிலிப்பியர் 2:20-22.
10. (அ) வீட்டிற்கு வெளியே உள்ளவர்கள் நம் பிள்ளைகளை எப்படி பாதிக்கலாம்? (ஆ) இப்படிப்பட்ட செல்வாக்குகள் நம் பிள்ளைகளின் பேச்சில் அல்லது மனப்பான்மையில் தலைகாட்ட ஆரம்பித்தால் நாம் எப்படி கையாள வேண்டும்?
10 வீட்டில் உள்ளவர்கள் மட்டுமல்ல, வெளியே இருக்கும் ஆட்களும் நம்முடைய பிள்ளைகளை பாதிக்கிறார்கள். அதாவது, பள்ளியில் அவர்களோடு படிக்கும் பிள்ளைகள். இளம் மனங்களை பக்குவப்படுத்தும் ஆசிரியர்கள். இனம் அல்லது சமுதாய பழக்க வழக்கங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என வாதிடும் பாரம்பரியத்தில் ஊறிப்போயிருக்கும் மக்கள். சாதனைகள் பல நிகழ்த்தி பிரபலமாக இருக்கும் விளையாட்டு நட்சத்திரங்கள். நிர்வாகத் திறமைக்காக புகழ்ந்து அவ்வப்போது செய்திகளில் பெயர் அடிபடும் அரசு அதிகாரிகள். இவர்களோடுகூட போரின் கொடுமைகளாலும் கோடிக்கணக்கான பிள்ளைகள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். நம்முடைய பிள்ளைகளின் பேச்சிலோ அல்லது மனப்பான்மையிலோ இப்படிப்பட்ட செல்வாக்குகளின் பாதிப்பு தலைதூக்கினால், அது நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்க வேண்டுமா? அதற்கு நாம் எப்படி பிரதிபலிக்கிறோம்? கோபத்தில் எரிந்து விழுவதோ அல்லது கடுகடுப்பான ஒரு சொற்பொழிவோ பிரச்சினையை தீர்த்துவிடுமா? கோபத்தில் உடனடியாக ஏதாவது பொரிந்து தள்ளுவதைவிட, ‘யெகோவா நம்மை நடத்தும் முறையில் ஏதாவது ஒன்று இந்த சூழ்நிலையை சமாளிக்க உதவுமா?’ என்று நம்மை நாமே கேட்டுக் கொள்வது சிறந்ததல்லவா!—ஒப்பிடுக: ரோமர் 2:4.
11. பெற்றோரின் தவறுகள் பிள்ளைகளுடைய மனப்பான்மையை பாதிப்பது எப்படி?
11 இப்படிப்பட்ட சூழ்நிலைகளை அபூரண பெற்றோர் நூற்றுக்குநூறு சிறந்த முறையில் கையாளமுடியாது என்பது சரியே. நிறைய தவறுகள் நேர்வது சகஜமே. பிள்ளைகள் இதை தெரிந்து கொண்டால், பெற்றோரிடமாக இருக்கும் மரியாதையை இது கெடுத்துவிடுமா? கெடுக்கலாம். குறிப்பாக, பெற்றோர் தங்கள் தவறுகளை பூசிமெழுகிவிட்டு, பிள்ளைகளிடம் அதிகாரத்தை காட்டினால் அப்படி ஏற்படலாம். ஆனால், பெற்றோர் தாராளமாகவும் தாழ்மையாகவும் தங்களுடைய தவறுகளை ஒத்துக்கொண்டால், வித்தியாசமான பலன் கிடைக்கலாம். இப்படியாக, தங்களுடைய பிள்ளைகளுக்கு சிறந்த முன்மாதிரி வைக்கலாம். பிள்ளைகளும் அதேவிதமாக தங்களுடைய தவறுகளை ஒத்துக்கொள்ள கற்றுக் கொள்வார்கள்.—யாக்கோபு 4:6.
நம் முன்மாதிரி போதிப்பவை
12, 13. (அ) அன்பைப் பற்றி பிள்ளைகள் எதைக் கற்றுக்கொள்ள வேண்டும், மிகச் சிறந்த முறையில் இதை எப்படிக் கற்பிக்கலாம்? (ஆ) பிள்ளைகள் அன்பைப் பற்றி கற்றுக்கொள்வது ஏன் அவசியம்?
12 வாய்மூலமான போதனையோடு சிறந்த முன்மாதிரி வைக்கும்போது, பல மதிப்பு வாய்ந்த பாடங்களை சிறந்த முறையில் போதிக்க முடியும். இதோ ஒருசில!
13 தன்னலமற்ற அன்பை காண்பித்தல்: முன்மாதிரியால் வலியுறுத்தப்படும் மிக முக்கியமான பாடங்களில் ஒன்று, அன்பின் அர்த்தம். “அவர் [கடவுள்] முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்.” (1 யோவான் 4:19) அன்பின் பிறப்பிடம் அவரே. அன்பின் தலைசிறந்த எடுத்துக்காட்டும் அவரே. நியமங்கள் அடிப்படையிலான அகாப்பே அன்பு பைபிளில் 100-க்கும் அதிகமான தடவை குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மைக் கிறிஸ்தவர்களை அடையாளப்படுத்துகிற குணம் இதுவே. (யோவான் 13:35) கடவுளிடமும் இயேசு கிறிஸ்துவிடமும் மனிதர்கள் ஒருவருக்கொருவரும் இப்படிப்பட்ட அன்பை காண்பிக்க வேண்டும். நமக்கு பிடிக்காத மனிதர்களிடமும் இந்த அன்பை காட்ட வேண்டும். (மத்தேயு 5:44, 45; 1 யோவான் 5:3) இந்த அன்பு நம் இருதயத்தில் இருக்க வேண்டும். நம்முடைய வாழ்க்கையில் தெளிவாக காட்ட வேண்டும். அப்போதுதான் இந்த அன்பை நம் பிள்ளைகளுக்கு சிறந்த முறையில் போதிக்க முடியும். வார்த்தைகளைவிட செயல்களே அதிக சக்திவாய்ந்தவை. அன்பு, பாசம் போன்ற அதோடு சம்பந்தப்பட்ட குணங்கள், குடும்ப அங்கத்தினர்களிடையே நிலவுவதை பிள்ளைகள் காணவும் அனுபவிக்கவும் வேண்டும். இவை இல்லாமல், பிள்ளையின் சரீர, மன, உணர்ச்சி ரீதியான வளர்ச்சி பாதிக்கப்படும். குடும்பத்தில் மட்டுமல்ல, உடன் கிறிஸ்தவர்களுக்கும் அன்பையும் பாசத்தையும் எப்படி சரியான முறையில் காண்பிக்கலாம் என்பதை பிள்ளைகள் கற்றுக்கொள்ள வேண்டும்.—ரோமர் 12:10; 1 பேதுரு 3:8.
14. (அ) திறமையாக வேலை செய்ய பிள்ளைகளுக்கு எப்படிக் கற்றுத்தரலாம்? (ஆ) உங்கள் குடும்ப சூழ்நிலையில் இதை எப்படி செய்வீர்கள்?
14 வேலை செய்ய கற்றுக் கொள்ளுதல்: வாழ்க்கையின் அடிப்படை அம்சம் வேலை. தன்மேலேயே தனக்கு மதிப்பு உண்டாக வேண்டும் என்றால், ஒருவர் திறமையாக வேலை செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். (பிரசங்கி 2:24; 2 தெசலோனிக்கேயர் 3:10) ஒரு பிள்ளையை ஒரு வேலை செய்ய சொல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை எப்படி செய்ய வேண்டும் என்று சரியாக சொல்லித்தரவில்லை. ஆனால், அந்த வேலையை அந்தப் பிள்ளை சரிவர செய்யவில்லை என்று திட்டுகிறீர்கள். இப்படி செய்தால், எந்த வேலையையுமே அந்தப் பிள்ளை ஒழுங்காக கற்றுக்கொள்ள முடியாது. மாறாக, பெற்றோராகிய நீங்கள் பிள்ளைகளோடு சேர்ந்து வேலை செய்கிறீர்கள். நன்றாக செய்யும் சமயத்தில் அவர்களை பாராட்டுகிறீர்கள். இப்படி செய்யும்போது, பிள்ளைகள் திருப்தி அளிக்கும் வேலையை சீக்கிரத்தில் கற்றுக்கொள்வார்கள். ஆம், பெற்றோரின் முன்மாதிரியோடு அதற்கான விளக்கமும் கொடுக்கப்படவேண்டும். அப்படி செய்தால், பிள்ளைகள் திறமையாக வேலை செய்ய கற்றுக்கொள்வார்கள். அதுமட்டுமல்ல, பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது என்றும் ஒரு வேலையை எடுத்தால் அதை முடிக்கும்வரை அதில் எப்படி நிலைத்திருப்பது என்றும் கற்றுக்கொள்வார்கள். எந்த ஒரு தீர்மானத்தையும் எடுப்பதற்குமுன் அதை நன்கு ஆராய்ந்து செய்யவும் கற்றுக்கொள்வார்கள். இதே முறையில்தான் யெகோவா வேலை செய்கிறார் என்பதையும் நற்காரியங்களில் ஈடுபடுகிறார் என்பதையும் இயேசு தம்முடைய தகப்பனை பின்பற்றுகிறார் என்பதையும் பிள்ளைகள் மதித்துணர்வார்கள். (ஆதியாகமம் 1:31; நீதிமொழிகள் 8:27-31; யோவான் 5:17) ஒரு குடும்பம், விவசாயத்தை அல்லது ஒரு தொழிலை செய்கிறதென்றால், குடும்ப அங்கத்தினர்களில் சிலர் சேர்ந்து செய்யலாம். சமையல் செய்வது, பாத்திரங்களை கழுவுவது போன்ற வேலைகளை மகனுக்கோ அல்லது மகளுக்கோ தாய் சொல்லிக் கொடுக்கலாம். வெளியே வேலைக்குப் போகும் தகப்பன், வீட்டில் பிள்ளைகளோடு சேர்ந்து சில வேலைகளை செய்ய திட்டமிடலாம். வேலை சீக்கிரம் முடிந்தால் போதும் என்றில்லாமல், எதிர்கால வாழ்க்கைக்கும் உதவும் வகையில் பிள்ளைகளுக்கு பயிற்சி அளிப்பது எவ்வளவு இன்றியமையாதது!
15. விசுவாசத்தை பற்றிய பாடங்களை என்னென்ன வழிகளில் சொல்லிக் கொடுக்கலாம்? விளக்குங்கள்.
15 இன்னல்களுக்கு மத்தியில் விசுவாசத்தைக் காத்தல்: விசுவாசமும் நம் வாழ்க்கையின் முக்கிய பாகமாகும். விசுவாசம் பற்றி குடும்ப படிப்பில் சிந்திக்கும்போது, அதை எப்படி விளக்குவது என்பதை பிள்ளைகள் கற்றுக்கொள்ளலாம். அவர்களுடைய இருதயங்களில் விசுவாசத்தை வளர்க்க உதவும் அம்சங்களையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், கடும் சோதனைகளின் மத்தியிலும் அசைக்க முடியாத விசுவாசத்தை அவர்களுடைய பெற்றோர் காண்பிப்பதை அவர்கள் கண்கூடாக பார்க்கும்போது, அது வாழ்நாள் முழுவதும் அவர்களுடைய மனதிலிருந்து நீங்காது. யெகோவாவை சேவிப்பதை நிறுத்தவில்லை என்றால் வீட்டில் இருந்து துரத்திவிடப் போவதாக பனாமாவில் உள்ள ஒரு பைபிள் மாணாக்கரை அவருடைய கணவர் பயமுறுத்தினார். இருந்தாலும், தன்னுடைய நான்கு சிறு பிள்ளைகளோடு தவறாமல் ராஜ்ய மன்றம் செல்வார். இதற்கு அவர் 16 கிலோமீட்டர் நடந்தும் 30 கிலோமீட்டர் பஸ்ஸிலும் செல்ல வேண்டும். இதுவே, மிக அருகிலுள்ள ராஜ்ய மன்றம். இந்த முன்மாதிரியால் உற்சாகப்படுத்தப்பட்டு, அவருடைய குடும்பத்தில் சுமார் 20 பேர் சத்தியத்தை ஏற்றுக் கொண்டார்கள்.
தினமும் பைபிள் வாசிப்பதில் முன்மாதிரி
16. அன்றாட குடும்ப பைபிள் வாசிப்பு ஏன் பரிந்துரைக்கப்படுகிறது?
16 எந்த குடும்பமும் பின்பற்றத்தக்க மதிப்புமிக்க பழக்கங்களில் ஒன்று, தவறாமல் பைபிள் வாசிப்பதே. இந்தப் பழக்கம் பெற்றோருக்கு நன்மையளிக்கும். பிள்ளைகள் பின்பற்றுவதற்கு முன்மாதிரியாகவும் இது விளங்கும். முடிந்தால், தினமும் பைபிள் வாசியுங்கள். எவ்வளவு படிக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. எப்படி படிக்கிறீர்கள் என்பதும் தவறாமல் படிக்கிறீர்களா என்பதுமே முக்கியமான விஷயம். பிள்ளைகள், பைபிள் வாசிப்பதோடு, என்னுடைய பைபிள் கதைப் புத்தகத்தின் ஆடியோ கேஸட்டுகள் உங்கள் மொழியில் இருந்தால், அவற்றையும் கேட்கலாம். கடவுளுடைய வார்த்தையை தினமும் வாசிப்பது, கடவுளுடைய எண்ணங்களை எப்போதும் மனதில் வைத்திருப்பதற்கு நமக்கு உதவும். இப்படிப்பட்ட பைபிள் வாசிப்பை, தனிப்பட்டவர்களாக மட்டுமல்ல குடும்பமாக செய்யும்போது, யெகோவாவின் வழிகளில் நடக்க முழு குடும்பத்திற்கும் இது உதவும். இப்பழக்கத்தையே, சமீபத்தில் நடந்த “கடவுள் காட்டும் ஜீவ வழி” மாநாட்டில், “குடும்பங்களே—அன்றாட பைபிள் வாசிப்பை உங்கள் வாழ்க்கைமுறை ஆக்குங்கள்” என்ற நாடகம் அறிவுறுத்தியது.—சங்கீதம் 1:1-3.
17. எபேசியர் 6:4-ல் உள்ள புத்திமதியை பொருத்துவதற்கு, குடும்பமாக பைபிள் வாசிப்பதும் முக்கியமான வசனங்களை மனப்பாடம் செய்வதும் எப்படி உதவுகின்றன?
17 “பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற [“யெகோவாவுக்கேற்ற,” NW] சிட்சையிலும் போதனையிலும் [“மனக்கட்டுப்பாட்டிலும்,” NW] அவர்களை வளர்ப்பீர்களாக” என்று எபேசு கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார். (எபேசியர் 6:4) ஆகவே, குடும்பமாக பைபிளை வாசிப்பது, பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதிய இக்கடிதத்தின் வார்த்தைகளுக்கு இசைவாக இருக்கிறது. இது எதை அர்த்தப்படுத்துகிறது? “மனக்கட்டுப்பாடு” என்பதற்கு, “மனதை வைத்தல்” என்பதே நேரடியான அர்த்தம். எனவே, கிறிஸ்தவ தகப்பன்மார்கள் தங்கள் பிள்ளைகளில் யெகோவா தேவனுடைய மனதை வைக்கும்படி வலியுறுத்தப்படுகின்றனர். கடவுளுடைய எண்ணங்களை பிள்ளைகள் தெரிந்து கொள்ள உதவும்படி அறிவுறுத்தப்படுகின்றனர். முக்கியமான வசனங்களை மனப்பாடம் செய்யும்படி பிள்ளைகளை உற்சாகப்படுத்துவதன் மூலம் இதைச் செய்யலாம். இது, அவர்கள் யெகோவாவின் எண்ணங்களை தெரிந்து கொள்ள உதவும். பிள்ளைகளின் சிந்தைகள் யெகோவாவின் எண்ணங்களால் வழிநடத்தப்பட வேண்டுமென்பதே முக்கிய நோக்கம். பிள்ளைகளோடு பெற்றோர் இருந்தாலும்சரி இல்லாவிட்டாலும்சரி தெய்வீக தராதரங்களை பிரதிபலிக்கும் ஆசைகளையும் நடத்தையையும் இது படிப்படியாக அவர்களில் வளர்க்கும். அப்படிப்பட்ட சிந்தைக்கு பைபிளே அஸ்திவாரம்.—உபாகமம் 6:6, 7.
18. பைபிளை வாசிக்கும்போது, பின்வருவனவற்றுக்கு என்னென்ன தேவை என்பதைக் குறிப்பிடுங்கள்: (அ) தெளிவாக புரிந்து கொள்ள? (ஆ) புத்திமதியில் இருந்து நன்மையடைய? (இ) யெகோவாவின் நோக்கங்களுக்கு இசைய நடக்க? (ஈ) ஜனங்களுடைய செயல்களைப் பற்றியும் மனப்பான்மைகளையும் பற்றி சொல்வதில் இருந்து நன்மையடைய?
18 பைபிள் நம் வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்த வேண்டுமானால், அதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். வாசிக்க வேண்டிய பகுதியை பல தடவை படித்தால்தான் சிலரால் புரிந்துகொள்ள முடியும். குறிப்பிட்ட சில சொற்றொடர்களை தெளிவாக புரிந்துகொள்ள, அகராதியை அல்லது வேதாகமங்களின்பேரில் உட்பார்வை (ஆங்கிலம்) புத்தகத்தை நாம் பயன்படுத்த வேண்டும். ஒரு ஆலோசனை அல்லது கட்டளை பற்றிய வசனமாக இருந்தால், அதற்கு பொருத்தமான இன்றைய சூழ்நிலையைப் பற்றி பேச நேரம் ஒதுக்குங்கள். பிறகு, ‘இந்த ஆலோசனையைப் பொருத்துவதால் நாம் எப்படி நன்மை அடைய முடியும்?’ என்று கேளுங்கள். (ஏசாயா 48:17, 18) யெகோவாவின் நோக்கங்களில் ஏதாவதொன்றைப் பற்றி சொல்கிற வசனமாக இருந்தால், ‘இது நம்முடைய வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது?’ என்ற கேள்வியை கேளுங்கள். ஜனங்களின் செயல்களையும் மனப்பான்மைகளையும் விளக்குகிற ஒரு பதிவை வாசிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். வாழ்க்கையில் என்னென்ன பிரச்சினைகளை அவர்கள் எதிர்ப்பட்டார்கள்? அவற்றை எப்படி சமாளித்தார்கள்? அவர்களுடைய முன்மாதிரியில் இருந்து நாம் எப்படி நன்மை பெறலாம்? இன்று நம் வாழ்க்கையில் இந்தப் பதிவு எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை சிந்திக்க நேரம் ஒதுக்குங்கள்.—ரோமர் 15:4; 1 கொரிந்தியர் 10:11.
19. தேவனைப் பின்பற்றுபவர்களாக, நம் பிள்ளைகளுக்கு என்ன செய்வோம்?
19 கடவுளுடைய எண்ணங்களை நம் மனதிலும் இருதயத்திலும் பதிய வைக்க என்னே சிறந்த வழி! ‘பிரியமான பிள்ளைகளைப் போல், தேவனைப் பின்பற்றுகிறவர்களாக’ ஆவதற்கு இது உண்மையிலேயே உதவும். (எபேசியர் 5:1) நம்முடைய பிள்ளைகளால் பின்பற்றத் தகுந்த முன்மாதிரியை நாம் நிச்சயம் வைக்க முடியும்.
உங்கள் மனதிலிருக்கிறதா?
◻ யெகோவாவின் முன்மாதிரியில் இருந்து பெற்றோர் நன்மையடைவது எப்படி?
◻ பிள்ளைகளுக்கு வாய்மூல போதனைகளோடு பெற்றோருடைய சிறந்த முன்மாதிரியும் ஏன் அவசியம்?
◻ பெற்றோருடைய முன்மாதிரி கற்பிக்கும் சில சிறந்த பாடங்கள் யாவை?
◻ குடும்ப பைபிள் வாசிப்பிலிருந்து நாம் எப்படி முழுமையாக நன்மையடையலாம்?
[பக்கம் 10-ன் படம்]
பைபிள் வாசிப்பை அநேகர் குடும்பமாக அனுபவிக்கின்றனர்