பஞ்சத்தின் கொடுமையிலிருந்து பசுமைக்கு
மன்வல் ட ஜஸுஷ் ஆல்மடா
நான்தான் எங்கள் வீட்டில் கடைக்குட்டி. 1916-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் குடும்பத்தின் பதினேழாவது பிள்ளையாக பிறக்கும் பாக்கியம் பெற்றேன். ஆனால் ஊட்டச்சத்து குறைவாலும் வியாதியாலும் என் உடன்பிறந்தோரில் ஒன்பதுபேர் இறந்துவிட்டனர்; ஆகவே அவர்களைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. மீதி இருந்த எட்டு பேரும் எங்கள் பெற்றோருடன் போர்ச்சுகல் நாட்டில் போர்டோ என்ற இடத்திற்கு அருகில் ஒரு அழகிய குக்கிராமத்தில் வாழ்ந்தோம்.
எங்கள் வீடு மிகச்சிறியது; அதில் ஒரு சிறிய அறையும் இன்னொரு படுக்கை அறையும் மட்டுமே இருந்தன. அரை கிலோமீட்டர் தூரத்தில் இருந்த ஒரு கிணற்றிற்கு சென்றுதான் குடிதண்ணீர் கொண்டுவர வேண்டும். சமைப்பதற்குரிய வசதிகள் எல்லாம் பழங்காலத்து பாணியே.
என்னுடைய அண்ணன்மார்கள் ஓரளவு வளர்ந்தவுடனேயே சோளக்காட்டில் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டனர். அவர்கள் இவ்வாறு சம்பாதித்ததால்தான் குடும்பத்தின் வயிற்றுப்பாட்டுக்காவது வழி கிடைத்தது. அவர்கள் செய்த உதவியால்தான் நான் மட்டுமாவது பள்ளியில் கால்வைக்க முடிந்தது. எங்கள் வாழ்க்கையே ஒரு போராட்டமாய் இருந்தது என்று சொன்னால் மிகையாகாது; என்றாலும் நாங்கள் கத்தோலிக்க சர்ச்சிற்கு தவறாமல் சென்றுவந்தோம்; அப்படியாவது எங்கள் குடும்பத்துக்கு விடிவு பிறக்காதா என்ற நம்பிக்கையில்தான்.
சர்ச்சில் மே மாதத்தில் நோவீனோ நடக்கும். அப்போது தொடர்ந்து ஒன்பது நாட்களுக்கு இருட்டோடு இருட்டாக அதிகாலையில் நாங்கள் சர்ச்சிற்கு நடந்து சென்று அங்கே ஜெபம் செய்தோம். அவ்வாறு செய்வதால் கடவுளிடமிருந்து ஆசீர்வாதம் வரும் என்று எண்ணினோம். அச்சமயத்தில் பாதிரியார் பரிசுத்தமானவர் என்றும் கடவுளுடைய பிரதிநிதி என்றும் நம்பினோம். ஆனால் போகப்போக எங்கள் நம்பிக்கையில் விரிசல் ஏற்பட்டது.
மேன்மையானவற்றை தேடும் படலம்
நாங்கள் மிகவும் ஏழைகளாக இருந்தமையால் சர்ச்சுக்கு வரி கட்ட இயலவில்லை; எங்கள் நிலை என்ன என்பதைத் தெரிந்தும் எங்கள் பாதிரியார் எங்களுக்கு துளி இரக்கம்கூட காட்டவில்லை. இதனால் நாங்கள் நொந்துபோனோம். இதனால் சர்ச்சைப் பற்றி நான் வைத்திருந்த அபிப்பிராயம் தலைகீழாக மாறிவிட்டது. ஆகவே, எனக்கு 18 வயதானபோது, வயலில் வேலை பார்த்துக்கொண்டும் சர்ச்சோடு சச்சரவு செய்துகொண்டும் நிம்மதியின்றி வாழ்க்கையை கழிப்பதைவிட அமைதியான வாழ்க்கை கிடைக்குமா என்று தேடும் படலத்தை ஆரம்பித்தேன். 1936-ஆம் ஆண்டு நான் வீட்டை விட்டு வெளியேறி போர்ச்சுகல் நாட்டின் தலைநகரான லிஸ்பனுக்கு வந்து சேர்ந்தேன்.
நான் எட்மீனியாவை சந்தித்தது அங்கேதான். நான் மதத்தால் ஏமாற்றப்பட்டதாக நினைத்தது உண்மை. இருந்தாலும், எங்கள் பாரம்பரிய முறைப்படி கத்தோலிக்க சர்ச்சில்தான் திருமணம் செய்துகொண்டோம். அதன் பின் 1939-ல் இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பமானது. யுத்தத்தின்போது நான் 18 பண்டகசாலைகளை பொறுப்புடன் நிர்வகித்தேன். சில சமயம் நாங்கள் பம்பரமாக சுழன்று ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 125 டிரக்குகளில் யுத்த சாமான்களை ஏற்றியிருக்கிறோம்.
யுத்தம் என்னை குலைநடுங்க வைத்தது; அதில் கத்தோலிக்க சர்ச் மும்முரமாக பங்கேற்றதோ கொடுமையிலும் கொடுமை! இந்த சமயத்தில்தான் எனக்கு பின்வரும் கேள்விகள் எழும்பின: ‘மனித குடும்பத்தைப் பற்றி உண்மையிலேயே கடவுளுக்கு அக்கறையிருக்கிறதா? நாம் எப்படி அவரை வணங்க வேண்டும்?’ எனக்குள் எழுந்த இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பல ஆண்டுகள் கழித்து, 1954-ஆம் வருடம் பதில் கிடைத்தது. நற்பண்புகள் நிறைந்தவரும் முதியவருமான யெகோவாவின் சாட்சி ஒருவர் எனக்கு பதிலளித்தார். அவரோடு நான் பேசிய அந்த நாள்முதல் என் வாழ்க்கை அடியோடு மாறிவிட்டது.
பைபிள் தரும் நம்பிக்கையால் சந்தோஷம்
இந்தக் கனிவான சாட்சியின் பெயர் ஜோசுவா. உலகத்தின் எல்லா பிரச்சினைகளையும் கடவுளுடைய ஆட்சி மட்டுமே தீர்த்து வைக்கும் என்றும் சமாதானத்தையும் பாதுகாப்பையும் அப்படிப்பட்ட ஆட்சியால் மட்டுமே மனிதகுலத்திற்கு அளிக்க இயலும் என்றும் விளக்கமாக எடுத்துரைத்தார். (மத்தேயு 6:9, 10; 24:14) அது என் காதில் தேன் வார்த்தது போல் இருந்தது, என்றாலும் நான் ஏற்கெனவே மதத்தால் சூடுபட்டிருப்பதால் அந்த விளக்கங்களை ஏற்றுக்கொள்ள தயங்கினேன். அவர் எனக்கு பைபிள் படிப்பு நடத்த முன்வந்தபோது அதை ஏற்றுக்கொள்ள இரண்டு நிபந்தனைகளை விதித்தேன்; ஒன்று, அவர் அதற்கு பணம் கேட்கக்கூடாது; மற்றொன்று, அரசியல் பேசக்கூடாது. அந்த நிபந்தனைகளை அவர் ஏற்றுக்கொண்டார்; பைபிள் படிப்பு இலவசம்தான் என்று எனக்கு உறுதி கூறினார்.—வெளிப்படுத்துதல் 22:17.
அதன்பின் எனக்கு ஜோசுவா மீது நம்பிக்கை வேகமாக வளர்ந்தது. என் சின்ன வயசிலிருந்தே நான் ஆசைப்பட்ட ஒன்றை அவரிடம் கேட்டேன்: “எனக்கு ஒரு பைபிள் வாங்கித்தர முடியுமா?” அதைப் பெற்றுக்கொண்ட பிறகு சிருஷ்டிகரின் பின்வரும் வாக்குறுதிகளை முதன்முறையாக வாசித்தபோது நான் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே கிடையாது. ‘இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. . . . அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்துவிடுவார். இனிமேல் சாவு இராது, துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது; முன்பு இருந்தவையெல்லாம் மறைந்து விட்டன.’—வெளிப்படுத்துதல் [திருவெளிப்பாடு] 21:3, 4, பொ.மொ.
ஏழ்மையும் நோயும் நீக்கப்படும் என்று பைபிளில் சொல்லப்பட்டிருந்த தெளிவான வாக்குறுதி என் மனதில் பசுமரத்தாணிபோல பதிந்தது. எலிகூ என்ற உண்மையுள்ள மனிதன் கடவுளைப் பற்றி இவ்வாறு சொன்னார்: அவர் “அதிகமாய் உணவினை அளிக்கின்றார்.” (யோபு 36:31, பொ.மொ.) தேவனுடைய நீதியான ஆட்சிமுறையில் பின்வரும் நிலைமைகள் இருக்கும் என்பதாக பைபிள் முன்னறிவித்தது, அங்கே “வாழ்பவர் எவரும் ‘நான் நோயாளி’ என்று சொல்லமாட்டார்.” (எசாயா 33:24, பொ.மொ.) மனிதவர்க்கத்தின் மீது யெகோவா தேவனுக்குத்தான் எப்பேர்ப்பட்ட அன்பு! இதனால் எனக்கும் அவருடைய வாக்குறுதிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற தாங்க முடியாத ஆவல் ஏற்பட்டுவிட்டது!
நான் முதன்முதலாக யெகோவாவின் சாட்சிகளின் கூட்டத்திற்கு 1954-ஆம் வருடம் ஏப்ரல் 17-ஆம் தேதி சென்றேன். அது ஒரு முக்கியமான கூட்டம்—இயேசு கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்பு. அதன்பின் நான் கூட்டங்களுக்கு ஒழுங்காக செல்ல ஆரம்பித்தேன். நான் கற்றுக்கொண்ட அருமையான விஷயங்களை வெகு சீக்கிரத்தில் மற்றவர்களிடம் சொல்ல ஆரம்பித்தேன். அப்போதெல்லாம், போர்ச்சுகலில் ஒவ்வொரு மாதமும் கடற்கரைக்கு அருகே நாங்கள் பிக்னிக் செல்வோம்; அச்சமயம் முழுக்காட்டுதலும் இருக்கும். ஆகவே, ஜோசுவா என்னிடம் பேச ஆரம்பித்து சரியாக ஏழாவது மாதம் நான் என் வாழ்க்கையை யெகோவாவிற்கு ஒப்புக்கொடுத்து கடலில் முழுக்காட்டுதல் பெற்றேன்.
1954-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் போர்ச்சுகல் முழுவதிலும் சுமார் நூறு சாட்சிகள் மட்டுமே இருந்தனர். ஆகவே முன்னின்று பிரசங்க வேலை செய்வதற்கு ஆண்களின் தேவை மிக அதிகமிருந்தது. நான் ஆவிக்குரிய முறையில் மிக வேகமாக முன்னேறினேன்; வெகு சீக்கிரத்திலேயே எனக்கு சபையில் அநேக பொறுப்புகள் அளிக்கப்பட்டன. நான் 1956-ல் லிஸ்பனிலிருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய இரண்டாவது சபையில் சபை ஊழியனாக நியமிக்கப்பட்டேன்; இப்போது அப்படிப்பட்ட பொறுப்புகளை ஏற்பவர்களை நடத்தும் கண்காணிகள் என்று அழைக்கின்றனர். இப்போது இந்தப் பட்டணத்திலும் இதன் அருகிலுள்ள இடங்களிலும் நூறுக்கும் அதிகமான சபைகள் இருக்கின்றன.
உபசரித்ததால் விளைந்த நன்மைகள்
நானும் எட்மீனியாவும் ஏழைகள்தான் என்றாலும் நாங்கள் எப்போதுமே கிறிஸ்தவ சகோதரர்களை எங்கள் இல்லத்தில் வரவேற்போம். ஒரு முழுநேர ஊழியர் 1955-ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடக்கவிருந்த “வெற்றிபெறும் ராஜ்யம்” மாவட்ட மாநாட்டிற்கு செல்வதற்காக பிரேசில் நாட்டிலிருந்து வந்திருந்தார். போகும் வழியில் போர்ச்சுகலில் தங்கினார். அச்சமயம் பயணம் செய்வதற்கு சில தடைகள் ஏற்பட்டதன் காரணமாக எங்கள் வீட்டில் ஒரு மாதம் தங்கினார்; இதன் விளைவாக நாங்கள் எந்தளவிற்கு ஆவிக்குரிய முறையில் பயனடைந்தோம் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது!
ஹூகோ ரீமர், சார்லஸ் ஐக்கர் போன்றவர்கள் அந்தச் சமயத்தில் எங்கள் வீட்டிற்கு வந்து தங்கிய மற்ற விருந்தாளிகள். இவர்கள் அச்சமயம் நியூயார்க், புரூக்ளினில் யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்தனர். எங்கள் வீட்டில் இரவு உணவு அருந்தி, போர்ச்சுகீசிய சகோதரர்களுக்காக பேச்சுகளை கொடுத்தனர். புதிதாக பொரித்த குஞ்சுகள் இரைக்காக வாயை ஆ. . .வென்று திறந்து வைத்திருப்பதைப் போல் நாங்களும் மிக ஆவலுடன் அவர்கள் அளித்த அருமையான ஆவிக்குரிய உணவினை அருந்தி மகிழ்ந்தோம்.
யெகோவாவின் சாட்சிகளுடைய சபைக்கு வரும் வட்டாரக் கண்காணிகளும்கூட எங்கள் வீட்டில் தங்கினர். 1957-ஆம் ஆண்டு எங்கள் வீட்டிற்கு வந்தவர்களில் மறக்க முடியாத ஒருவர் ஆல்வரு பேரகோச்சேயா, இவர் மொராக்கோ நாட்டின் கிளை அலுவலகக் கண்காணி. சகோதரர்களை உற்சாகப்படுத்துவதற்காக இவர் போர்ச்சுகலுக்கு அனுப்பப்பட்டார். அவர் சபை புத்தகப்படிப்பில் கலந்துகொள்ள எங்கள் வீட்டிற்கு வந்தார். போர்ச்சுகலில் தங்கியிருக்கும் நாட்கள் முழுவதும் எங்கள் வீட்டில்தான் தங்க வேண்டும் என்று அவரிடம் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டோம். அவர் எங்கள் வீட்டில் ஒரு மாதம் தங்கினார்; அவர் எங்களோடு தங்கியிருந்த சமயத்தில் அவர் எங்களுக்கு அளித்த உதவியால் ஆவிக்குரிய முறையில் மேலும் பலப்பட்டதை உணர்ந்தோம். அதே சமயம் என் அன்பான மனைவி எட்மீனியா வாய்க்கு ருசியாக சமைத்துப்போட்டதால் அவர் போகும்போது குண்டாகிவிட்டார்!
நான் சிறுவனாக இருந்தபோது வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்திருக்கிறேன். ஆகவே அதன் ஆழமான பாதிப்பு என்னிடம் அதிகமாக இருந்தது. இருந்தாலும் யெகோவாவிற்கும் அவருடைய உண்மையுள்ள ஊழியர்களுக்கும் எவ்வளவு அதிகமாக நாம் கொடுக்கிறோமோ அந்தளவிற்கு ஆசீர்வதிக்கப்படுகிறோம் என்பதை அனுபவத்தில் கற்றுக்கொண்டேன். நாங்கள் யாருக்கெல்லாம் எங்களால் முடிந்த அளவிற்கு விருந்தோம்பல் செய்தோமோ அப்போதெல்லாம் இந்த உண்மையை அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.
நாங்கள் 1955-ஆம் ஆண்டு போர்டோவில் ஒரு மாநாட்டில் கலந்துகொண்டோம்; அப்போது 1958-ஆம் ஆண்டு நியூயார்க் நகரிலுள்ள யாங்கி ஸ்டேடியத்தில் நடக்கவிருந்த சர்வதேச மாநாட்டைப் பற்றிய அறிவிப்பை கேட்டோம். இதில் கலந்துகொள்வதற்கு போர்ச்சுகலிலிருந்து பிரதிநிதிகளை அனுப்புவதற்காக ஒவ்வொரு ராஜ்ய மன்றத்திலும் ஒரு நன்கொடைப் பெட்டி வைக்கப்பட்டது. அச்சமயம் போர்ச்சுகலில் குறைவான ராஜ்ய மன்றங்களே இருந்தன. அதில் கலந்துகொள்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளில் நானும் என் மனைவியும் இருந்தோம் என்பதைக் கேள்விப்பட்டபோது நாங்கள் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்போம் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? நாங்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஐக்கிய மாகாணங்களுக்கு சென்றோம். அப்போது யெகோவாவின் சாட்சிகளின் உலக தலைமை அலுவலகத்தை சுற்றிப் பார்த்தபோது நாங்கள் அடைந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை!
துன்புறுத்தலை சகித்துக்கொள்ளுதல்
1962-ஆம் வருடம் போர்ச்சுகலில் யெகோவாவின் சாட்சிகளின் வேலை தடைசெய்யப்பட்டது. எரிக் பிரிட்டன், டோமனிக் பிக்கோனி, எரிக் பெவரிஜ் மற்றும் அவர்களுடைய மனைவிமார்கள் வெளியேற்றப்பட்டனர். அதன்பின் எங்கள் கூட்டங்களை ராஜ்ய மன்றத்தில் நடத்தக்கூடாது என்று தடை விதித்தனர். அதனால் நாங்கள் ரகசியமாக வீடுகளில் கூட்டங்களை நடத்தினோம். அதேபோல, அச்சமயத்தில் போர்ச்சுகலில் பெரிய மாநாடுகளையும் நடத்த முடியாது. ஆகவே, இப்படிப்பட்ட மாநாடுகள் நடக்கும் மற்ற தேசங்களுக்கு சென்று மாநாடுகளில் கலந்துகொள்ள எங்கள் கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் விரும்பினர். அவர்கள் அவ்வாறு செல்வதற்கு ஏற்பாடு செய்யும் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது.
மற்ற தேசங்களுக்கு சென்று மாநாடுகளில் கலந்துகொள்ள ஏராளமான சாட்சிகளுக்கு ஏற்பாடுகளை செய்வது சுலபமான காரியமல்ல. ஆனாலும் அதற்காக பட்ட பிரயாசத்திற்கு கைமேல் பலன் இருந்தது. இதனால் போர்ச்சுகலில் வாழ்ந்த சகோதரர்களுக்கு அருமையான ஆவிக்குரிய நன்மைகள் கிடைத்தன. சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, இத்தாலி, பிரான்சு போன்ற தேசங்களுக்கு சென்று மாநாடுகளில் கலந்துகொண்டது அவர்களுக்கு எப்பேர்ப்பட்ட கட்டியெழுப்பும் அனுபவம்! இப்படிப்பட்ட மாநாடுகளில் கலந்துகொண்டதால் அங்கிருந்து திரும்ப வரும்போது பிரசுரங்களை எங்கள் நாட்டிற்குள் கொண்டுவர முடிந்தது. அந்த சமயங்களில், யெகோவாவின் சாட்சிகளது மதத்தை சட்டப்பூர்வமானதாக பதிவு செய்ய வேண்டி போர்ச்சுகல் நாட்டில் பலமுறை விண்ணப்பித்தோம். எங்கள் ‘படையெடுப்புகள்’ எல்லாம் தோல்வியுற்றன.
1962-ஆம் ஆண்டில் மிஷனரிகளை நாட்டிலிருந்து வெளியேற்றிய பின்னர் ரகசிய போலீஸார் பிரசங்க வேலையை தடை செய்ய அதிக முயற்சிகள் எடுத்தனர். ஏராளமான சகோதரர்களும் சகோதரிகளும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு வரவழைக்கப்பட்டனர். இப்படிப்பட்ட சம்பவங்களைக் குறித்த அநேக அறிக்கைகள் இந்தப் பத்திரிகையிலும் இதன் கூட்டு பதிப்பான விழித்தெழு! பத்திரிகையிலும் பிரசுரிக்கப்பட்டன. a
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களில் ஒருவர் பயனியராக சேவை செய்தவர்; அவர் நான் நற்செய்தியை பிரசங்கித்தபோது அதை ஏற்றுக்கொண்டவர். அவருடைய பொருட்களை சோதனை செய்தபோது அவற்றில் என்னுடைய விலாசம் இருந்தமையால் போலீஸார் சூட்டோடு சூடாக என்னை வரச்சொல்லி விசாரித்தனர்.
அதன் பின்னர் இரண்டு போலீஸ் அதிகாரிகள் என் வீட்டை சோதனையிட்டனர். நான் வைத்திருந்த பைபிள் சம்பந்தமான புத்தகங்களையும் 13 பைபிள்களையும் பறிமுதல் செய்தனர். இதேபோல் ஏழு முறை வந்து தொந்தரவு செய்து எங்கள் இடத்தை சோதனையிட்டனர். ஒவ்வொரு முறையும் எக்கச்சக்கமான கேள்விகளைக் கேட்டுத்துளைத்தெடுத்தனர்.
கோர்ட் கேஸ்களில் உடன் கிறிஸ்தவர்களுக்காக சாட்சி சொல்வதற்கு பலமுறை அழைக்கப்பட்டிருக்கிறேன். நான் அதிக அளவில் உலகப்பிரகாரமான கல்வி பயிலவில்லை என்றாலும் ‘எல்லா எதிரிகளும் சேர்ந்து என்னை எதிர்க்கவும் அல்லது எனக்கு எதிராக வாதாடவும் முடியாத ஞானத்தை’ யெகோவா எனக்கு அளித்தார். (லூக்கா 21:15, NW) ஒருசமயம் நான் அளித்த வாக்குமூலத்தைக் கேட்ட நீதிபதி ஆச்சரியப்பட்டு நான் எவ்வளவு படித்திருக்கிறேன் என்று கேட்டார். நான் நாலாம் வகுப்பு வரைதான் படித்திருக்கிறேன் என்று சொன்னபோது நீதிமன்றத்தில் இருந்த எல்லோரும் சிரித்தார்கள்.
துன்புறுத்துதல் எந்தளவிற்கு அதிகரித்ததோ அந்தளவிற்கு ராஜ்ய செய்திக்கு செவிசாய்த்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. 1962-ல் 1,300-க்கும் குறைவாக இருந்த சாட்சிகள் 1974-ல் 13,000-க்கும் அதிகமானார்கள்! இதன் இடையே மே 1967-ல் வட்டாரக் கண்காணியாக சேவிக்கும்படி அழைக்கப்பட்டேன். இந்த வேலையின் பாகமாக, ஆவிக்குரிய முறையில் பலப்படுத்துவதற்காக நான் யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளை விஜயம் செய்தேன்.
பொக்கிஷக் குவியலை கண்டடைதல்
டிசம்பர் மாதம் 1974-ல் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலை போர்ச்சுகலில் சட்டப்படி பதிவு செய்யப்பட்டது; அதில் எனக்கும் ஒரு பங்கிருந்ததால் சந்தோஷப்பட்டேன். அதற்கு அடுத்த வருடம் நானும் என் மனைவியும் எஷ்டரீல் என்ற இடத்தில் இருந்த பெத்தேல் குடும்பத்தின் அங்கத்தினர்கள் ஆனோம். போர்ச்சுகல் கிளைக் காரியாலயக் குழுவில் ஒரு அங்கத்தினராகவும் நியமிக்கப்பட்டேன்.
போர்ச்சுகலிலும் எங்கள் மேற்பார்வையில் இருக்கும் இடங்களிலும் பிரசங்க வேலை முன்னேற்றமடைவதைப் பார்ப்பது எப்பேர்ப்பட்ட சந்தோஷமான அனுபவம்! எங்கள் மேற்பார்வையில் இருக்கும் இடங்களாவன: அங்கோலா, அஜோரஸ், கேப் வர்டே, மடீரா, சாவோ டோம், பிரின்ஸிபி. பல ஆண்டுகளாக இந்தப் பிராந்தியங்களுக்கு போர்ச்சுகலில் இருந்து பல மிஷனரிகள் அனுப்பப்பட்டிருக்கின்றனர்; இங்கே ராஜ்ய செய்திக்கு நல்ல ஆர்வம் காட்டப்பட்டிருக்கிறது. இந்த இடங்களிலெல்லாம் சேர்த்து மொத்தமாக 88,000-க்கும் அதிகமான ராஜ்ய பிரசங்கிகள் இருக்கிறார்கள் என்பதையும் போர்ச்சுகலில் மட்டும் 47,000-க்கும் அதிகமான ராஜ்ய பிரசங்கிப்பாளர்கள் தற்போது இருக்கின்றனர் என்பதையும் அறியும்போது எவ்வளவு சந்தோஷப்படுகிறோம்! இந்த நாடுகளில் 1998-ல் நினைவு ஆசரிப்பு நாளுக்காக 2,45,000-க்கும் அதிகமானோர் வந்தனர் என்று கேள்விப்பட்டபோது நாங்கள் சந்தோஷத்தின் எல்லைக்கே சென்றோம்; நான் 1954-ல் சாட்சியானபோது 200-க்கும் குறைவானவர்கள்தான் இருந்தனர்.
“ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது [யெகோவாவின்] பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது” என்று குறிப்பிட்ட சங்கீதக்காரருடைய வார்த்தைகளை நானும் எட்மீனியாவும் மனப்பூர்வமாக அங்கீகரிக்கிறோம். (சங்கீதம் 84:10) நான் எவ்வாறு ஏழையாக என்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்தேன் என்பதையும் அதன்பின் எப்படிப்பட்ட ஆவிக்குரியப் பொக்கிஷங்களை அனுபவித்தேன் என்பதையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தீர்க்கதரிசியாகிய ஏசாயா சொன்னவிதமாகவே உணருகிறேன்: ‘கர்த்தாவே, [“யெகோவாவே,” NW] நீரே என் தேவன்; உம்மை உயர்த்தி, உமது நாமத்தைத் துதிப்பேன்; நீர் அதிசயமானவைகளைச் செய்தீர் . . . நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும் ஆனீர்.’—ஏசாயா 25:1, 4.
[அடிக்குறிப்புகள்]
a ஆங்கிலத்தில், விழித்தெழு! மே 22, 1964-ல் பக்கங்கள் 8-16, மற்றும் காவற்கோபுரம், அக்டோபர் 1, 1966, பக்கங்கள் 581-92 ஆகியவற்றைப் பார்க்கவும்.
[பக்கம் 24-ன் படம்]
மேலே: 1958-ஆம் வருடம் நியூ யார்க்கில் நடக்கும் மாநாட்டிற்கு பிரதிநிதிகளை அனுப்புவதைப் பற்றிய அறிவிப்பை லிஸ்பனில் சகோதரர் ஆல்மடா அறிவிக்கிறார்
நடுவே: பாரிசில் நடந்த “பூமியில் சமாதானம்” சர்வதேச மாநாட்டில் ஊழியர்களின் கூட்டத்தை நடத்துவது எப்படி என்பதை விளக்கிக்காட்டுவது
கீழே: பிரான்சு நாட்டில் நடந்த ஒரு மாவட்ட மாநாட்டுக்கு செல்வதற்காக தயார் நிலையில் வாடகை பஸ்கள்
[பக்கம் 25-ன் படம்]
போர்ச்சுகல் கிளை அலுவலகத்தில் காலை வழிபாட்டை நடத்துதல்
[பக்கம் 25-ன் படம்]
போர்ச்சுகல் கிளை அலுவலகம், 1988-ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது
[பக்கம் 26-ன் படம்]
என்னுடைய மனைவியுடன்
[பக்கம் 26-ன் படம்]
புரூக்ளின் பெத்தேலிலிருந்து வந்த சகோதரர் ஹூகோ ரீமரின் பேச்சுகள் எங்களை உற்சாகப்படுத்தின