வாழ்க்கை சரிதை
யெகோவாவின் சேவையில் ஆச்சரியங்கள் நிறைந்த வாழ்க்கை
எரிக் மற்றும் ஹேசல் பெவ்ரிஜ் சொன்னபடி
“இதன் மூலம் உனக்கு ஆறு மாத சிறை தண்டனை விதிக்கிறேன்.” இந்த வார்த்தைகள் என் காதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்க, இங்கிலாந்து, மான்செஸ்டரில் உள்ள ஸ்டிரேஞ்வேஸ் சிறைச்சாலைக்கு என்னை அழைத்து சென்றனர். அது 1950-ம் வருடத்தின் டிசம்பர் மாதம், அப்போது எனக்கு 19 வயது. நான் கட்டாய இராணுவ சேவையை மறுத்தது வாலிப வயதில் சந்தித்த மிகவும் கடினமான சோதனைகளுள் ஒன்றாகும்.—2 கொரிந்தியர் 10:3-5.
யெகோவாவின் சாட்சிகளின் முழுநேர பயனியர் ஊழியராக சேவை செய்ததால் இராணுவ சேவையிலிருந்து எனக்கு விலக்களிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பிரிட்டிஷ் அரசு ஊழியர்களாக எங்களை அங்கீகரிக்க மறுத்தது. இதன் காரணமாக நான் சிறையில் தனியாக அடைக்கப்பட்டேன். எனக்கு அப்பா ஞாபகம்தான் வந்தது. ஒரு விதத்தில், நான் ஜெயிலில் இருப்பதற்கு அவர்தான் காரணம்.
அப்பா ஒரு சிறைச்சாலை அதிகாரி. யார்க்ஷையரைச் சேர்ந்த அவருக்கு பலமான நம்பிக்கைகளும் மதிப்பீடுகளும் இருந்தன. இராணுவத்திலும் சிறைச்சாலையிலும் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களின் காரணமாக அவர் கத்தோலிக்க மதத்தை அடியோடு வெறுத்தார். அவர் 1930-களின் ஆரம்பத்தில்தான் முதல் முறையாக சாட்சிகளை சந்தித்தார். வீட்டிற்கு வந்திருந்த அவர்களை விரட்டுவதற்காக சென்றவர் அவர்களுடைய புத்தகங்களில் சிலவற்றோடு திரும்பி வந்தார்! பிறகு கான்ஸலேஷன் (இப்போது விழித்தெழு!) பத்திரிகைக்கு சந்தா செய்தார். சந்தாவை புதுப்பிக்கும்படி உற்சாகப்படுத்த சாட்சிகள் ஒவ்வொரு வருடமும் அவரை சந்தித்தனர். எனக்கு சுமார் 15 வயதாக இருக்கையில் அவர்கள் அப்பாவோடு மறுபடியும் ஒருமுறை சம்பாஷணையில் ஈடுபட்டனர், அதில் நான் சாட்சிகளின் பக்கத்தில் சேர்ந்துகொண்டேன். அப்போதுதான் பைபிளை படிக்க ஆரம்பித்தேன்.
எனக்கு 17 வயதாகையில் 1949, மார்ச் மாதத்தில் முழுக்காட்டுதல் பெறுவதன் மூலம் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருப்பதை வெளிப்படுத்தினேன். அதே வருடத்தின் பிற்பகுதியில், கிலியட் மிஷனரி பள்ளியில் சமீபத்தில் பட்டம் பெற்று நைஜீரியாவிற்கு சென்றுகொண்டிருந்த ஜான் மற்றும் மைக்கல் சருக்கை சந்தித்தேன். மிஷனரி ஊழியத்தில் அவர்களுக்கிருந்த ஈடுபாடு என்னை மிகவும் கவர்ந்தது. அவர்களுக்கே தெரியாமல் என் இருதயத்திலும் அதே மனப்பான்மை வளர அவர்கள் வித்திட்டுவிட்டனர்.
பைபிளை படிக்கையில் பல்கலைக்கழக படிப்பைத் தொடரும் ஆர்வம் இல்லாமல் போனது. லண்டனிலுள்ள சுங்க வரி மற்றும் ஆயத்துறை அலுவலகத்தில் வேலை செய்வதற்காக வீட்டைவிட்டு சென்றேன். ஒரு வருடத்திற்குள்ளாக, அரசு நிர்வாக பணியில் வேலை பார்த்துக்கொண்டு அதேசமயம் கடவுளுக்கு செய்த ஒப்புக்கொடுத்தலையும் நிறைவேற்ற முடியாது என்பதை உணர்ந்தேன். என் வேலையை ராஜினாமா செய்தபோது அந்த அலுவலகத்தில் பல வருடங்களாக வேலை செய்துவந்த ஒருவர், ‘உணர்ச்சிகளை பாழ்படுத்தும் வேலையை’ விட்டதற்காக என்னை பாராட்டினார்.
இதற்கு முன்பு மற்றொரு சோதனையை சந்தித்தேன். முழுநேர ஊழியம் செய்வதற்காக பொருளாதார பாதுகாப்பளித்த எனது வேலையை விடப்போவதை அப்பாவிடம் எப்படி சொல்வது? விடுமுறைக்காக வீட்டிற்கு வந்திருந்த ஒரு நாள் மாலை இந்த செய்தியை போட்டு உடைத்தேன். அப்பா பயங்கரமாக கத்தப் போகிறார் என எதிர்பார்த்தேன். ஆனால், “நீயே இந்த தீர்மானத்தை செய்திருக்கிறாய், நீயே அதன் விளைவுகளையும் சமாளிக்க வேண்டும். இதில் என்ன பிரச்சினை வந்தாலும் சரி என்னிடம் ஓடி வராதே” என அவர் சொன்னது பெரும் ஆச்சரியமாக இருந்தது. என்னுடைய டைரியில் 1950, ஜனவரி 1-ம் தேதியில் நான் எழுதியிருந்த குறிப்பு இதுவே: “பயனியர் செய்யப்போவதை அப்பாவிடம் கூறினேன். அவருடைய நியாயமான, உதவும் மனநிலை எனக்கு பெரும் ஆச்சரியத்தை தந்தது. அவர் காட்டிய தயவைக் கண்டு அழுதேவிட்டேன்.” என் வேலையை ராஜினாமா செய்த பிறகு முழுநேர பயனியராக ஊழிய நியமிப்பை ஏற்றுக்கொண்டேன்.
‘சிறிய குடிலும்’ ஊழிய நியமிப்பும்
கடவுள் மேலுள்ள என் பக்தியை சோதிக்கும் அடுத்த சோதனை வந்தது. லங்காஷையரில் பயனியர் செய்யும்படி நியமிக்கப்பட்டேன்; அங்கு ஒரு ‘சிறிய குடிலில்’ வேல்ஸைச் சேர்ந்த உடன் கிறிஸ்தவரான லாயிட் க்ரிஃபித்ஸுடன் தங்கியிருக்க வேண்டும். அந்த வீட்டை பற்றிய கனவுகளும் கற்பனைகளும் நிறைந்தவனாய் கவர்ச்சியற்ற, தொப்பலாக நனைந்த நகரமான பேக்கப்பிற்கு போய் சேர்ந்தேன். ஆனால் அந்த வீடு ஒரு கட்டடத்தின் அடித்தளம் என்பதை பார்த்தபோது என் கனவுகள் காற்றோடு கலந்தன! இரவு நேரங்களில் அங்கே எலிகளும் கரப்பான் பூச்சிகளும் எங்களுக்கு துணையாக வந்தன. மனதை மாற்றிக்கொண்டு வீட்டிற்கே திரும்பிவிடலாம் என்றுகூட தோன்றியது. ஆனால், இந்த சோதனையை தாங்கும் சக்திக்காக மனதிற்குள்ளேயே ஜெபித்தேன். உடனே, உள்ளான அமைதி என்னை சூழ்ந்தது; அந்த சூழ்நிலையை சாதகமாக நோக்க ஆரம்பித்தேன். இது யெகோவாவின் அமைப்பு கொடுத்த நியமிப்பு. உதவிக்காக யெகோவாவையே நம்பியிருப்பேன். அந்த சூழ்நிலையிலும் நிலைத்திருந்ததற்காக எவ்வளவு சந்தோஷப்படுகிறேன், அதை விட்டிருந்தால் என் வாழ்க்கை தலைகீழாக மாறியிருக்குமே!—ஏசாயா 26:3,4.
இராணுவ சேவையை மறுத்ததற்காக சிறையில் அடைக்கும் முன், அப்போது பொருளாதார ரீதியில் பின்தங்கியிருந்த ராசன்டேல் வேளியில் சுமார் ஒன்பது மாதங்களுக்கு பிரசங்கம் செய்தேன். ஸ்டிரேஞ்வேஸ் சிறைச்சாலையில் இரண்டு வாரங்கள் கழித்த பிறகு இங்கிலாந்தின் தென் கடற்கரையில் அமைந்த லூயஸ் சிறைக்கு மாற்றப்பட்டேன். கடைசியில் ஐந்து சாட்சிகள் அதே சிறையில் ஒன்றாக இருந்தோம், ஆகவே கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்பை சிறைச்சாலையிலேயே அனுசரிக்க முடிந்தது.
என்னை பார்க்க அப்பா ஒருமுறை வந்தார். பிரபலமான சிறை அதிகாரி சிறையில் அடைக்கப்பட்ட தன் மகனை பார்க்க வருவது அவருடைய கௌரவத்திற்கு பெரும் சவாலாக இருந்திருக்கும்! அப்பாவின் சந்திப்பிற்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். 1951, ஏப்ரல் மாதத்தில் நான் விடுதலை பெறும் நாள் வந்தது.
லூயஸிலிருந்து விடுதலை பெற்ற பிறகு வேல்ஸிலிருந்த கார்டிஃப்பிற்கு பயணம் செய்தேன். அப்போது அப்பா அங்குள்ள சிறைச்சாலையில் முக்கிய அதிகாரியாக பணி புரிந்தார். மூன்று பையன்களும் ஒரு பெண்ணும் உள்ள குடும்பத்தில் நான்தான் மூத்தவன். என்னையே ஆதரித்துக் கொண்டு பயனியர் ஊழியமும் செய்வதற்காக பகுதி நேர வேலை தேட வேண்டியிருந்தது. ஒரு துணி கடையில் வேலைக்கு சென்றேன், ஆனால் கிறிஸ்தவ ஊழியமே வாழ்க்கையில் எனது முக்கிய நோக்கமாகும். ஏறக்குறைய இந்த சமயத்தில்தான் அம்மா எங்களைவிட்டு பிரிந்து சென்றார். அது, 8 முதல் 19 வயது பிள்ளைகளாயிருந்த எங்களுக்கும் எங்கள் அப்பாவிற்கும் பேரிடியாக இருந்தது. வருத்தகரமாக எங்கள் பெற்றோர் விவாகரத்து செய்துகொண்டனர்.
நல்ல மனைவியை கண்டடைகிறவன் . . .
சபையில் அநேக பயனியர்கள் இருந்தனர். அவர்களுள், நிலக்கரி சுரங்கமிருந்த ராண்டா வேளியிலிருந்து வேலைக்காகவும் ஊழியத்திற்காகவும் தினமும் வந்து சென்ற ஒரு சகோதரியும் இருந்தார். அந்த அருமையான பயனியரின் பெயர் ஹேசல் கிரீன். நான் சத்தியத்தை அறிவதற்கு முன்பிருந்தே ஹேசல் சத்தியத்தில் இருந்தாள். 1920-களிலேயே அவளுடைய பெற்றோர் (இப்போது யெகோவாவின் சாட்சிகளாக அறியப்படும்) பைபிள் மாணாக்கர்களின் கூட்டங்களுக்கு சென்று கொண்டிருந்தனர். அவளுடைய கதையை இப்போது அவளே கூறட்டுமே.
“மதம் சுழல்காற்றை அறுவடை செய்கிறது என்ற ஆங்கில சிறு புத்தகத்தை 1944-ல் படிக்கும்வரை நான் பைபிளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவே இல்லை. கார்டிஃப்பில் நடந்த ஒரு வட்டார மாநாட்டிற்கு செல்லும்படி அம்மா என்னை தூண்டுவித்தார். பைபிளை பற்றி அதிகம் அறியாத போதிலும், ஒரு பொதுப் பேச்சை விளம்பரப்படுத்தும் அறிவிப்பு அட்டையை கழுத்தில் மாட்டிக்கொண்டு முக்கிய ஷாப்பிங் சென்டரில் நின்றுகொண்டிருந்தேன். பாதிரிகளும் மற்றவர்களும் ஏளனம் செய்தபோதிலும் அதை வெற்றிகரமாக செய்து முடித்தேன். 1946-ல் முழுக்காட்டப்பட்டு அதே வருடம் டிசம்பர் மாதத்திலிருந்து பயனியர் செய்ய ஆரம்பித்தேன். பிறகு 1951-ல் சிறையிலிருந்து அப்போதுதான் விடுதலையாகியிருந்த ஓர் இளம் பயனியர் கார்டிஃப் வந்து சேர்ந்தார். அவர்தான் எரிக்.
“நாங்கள் இருவரும் சேர்ந்து ஊழியம் செய்தோம். ஒருவருக்கொருவர் நன்றாக ஒத்துப்போனோம். வாழ்க்கையில் இருவருக்குமே கடவுளுடைய ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கமிருந்தது. ஆகவே 1952, டிசம்பர் மாதத்தில் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். இருவருமே முழுநேர பயனியர்களாக குறைவான வருமானம் பெற்றிருந்தும் அடிப்படை தேவைகள் எதுவுமே எங்களுக்கு குறைவுபடவில்லை. எங்களுக்கு தேவைப்படும் சமயம் பார்த்து, மளிகை சாமான்களில் அளவுக்கதிகமான ஜாம் அல்லது சோப்பு வாங்கிவிட்ட ஒரு சாட்சியிடமிருந்து சில சமயங்களில் அவை எங்களுக்கு இனாமாக வந்துசேரும்! அப்படிப்பட்ட நடைமுறையான உதவிகளுக்காக நாங்கள் எப்போதுமே நன்றியுள்ளவர்களாக இருந்தோம். ஆனால் எங்கள் வாழ்க்கையில் இன்னும் பெரிய ஆச்சரியங்கள் வரவிருந்தன.”
எங்கள் வாழ்க்கையை மாற்றிய ஆச்சரியம்
ஹேசலும் நானும் சற்றும் எதிர்பாராத ஓர் ஆச்சரியம் 1954, நவம்பர் மாதத்தில் நிகழ்ந்தது: ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு சபைகளை சந்திக்கும் பயணக் கண்காணியாக சேவிப்பதற்கான விண்ணப்பத்தை லண்டனிலுள்ள யெகோவாவின் சாட்சிகளின் கிளை அலுவலகம் எனக்கு அனுப்பியிருந்தது. தவறுதலாக எங்களுக்கு அனுப்பியிருப்பார்கள் என நாங்கள் நினைத்ததால் சபையிலுள்ள யாரிடமும் அதைப் பற்றி சொல்லவில்லை. என்றாலும், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பிவிட்டு, என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்போடு காத்திருந்தோம். “பயிற்சி பெற லண்டன் வரவும்” என சில நாட்கள் கழித்து பதில் வந்தது!
லண்டன் கிளை அலுவலகத்தில் இருக்கையில், 23 வயதே நிரம்பிய எனக்கு ஆவிக்குரிய சிகரங்களாக தோன்றிய அருமையான சகோதரர்களோடு இருந்ததை நம்பவே முடியவில்லை. அவர்களுள் ப்ரைஸ் ஹியூஸ், எம்லன் வைன்ஸ், எர்னீ பீவர், எர்னீ கைவர், பாப் காஃப், க்லின் பார், ஸ்டான் மற்றும் மார்டன் உட்பர்ன், இன்னும் பலர் இருந்தனர்; இவர்களில் அநேகர் இப்போது இறந்துவிட்டனர். பிரிட்டனில் 1940, 1950-களில் வைராக்கியத்திற்கும் உத்தமத்தன்மைக்கும் உறுதியான அஸ்திவாரமிட்டவர்கள் இவர்களே.
இங்கிலாந்தில் வட்டார வேலை —சலிக்கவே இல்லை
பனி பெய்யும் குளிர்காலத்தில், 1954/55-ல் எங்களுடைய பயண ஊழியத்தை தொடங்கினோம். வட கடலின் குளிர்ந்த காற்று தாக்கும் இங்கிலாந்தின் சமவெளிப் பகுதியாகிய கிழக்கு ஆங்லீயாவிற்கு அனுப்பப்பட்டோம். அந்த சமயத்தில் பிரிட்டனில் 31,000 சாட்சிகளே இருந்தனர். அந்த முதல் வட்டாரம் எங்களுக்கு கடினமான அனுபவமாக இருந்தது. பெரும்பாலும் நாங்கள் சந்தித்த சகோதரர்களுக்கும் அது அவ்வாறே இருந்திருக்கும்; எனது அனுபவமின்மையும் யார்க்ஷையரை சேர்ந்தவர்களுக்கே உரிய ஒளிவுமறைவற்ற பேச்சும் சில சகோதரர்களை புண்படுத்தின. காலம் செல்லச் செல்ல, திறமையைவிட இரக்கமே முக்கியம், வழிமுறைகளைவிட மக்களே முக்கியம் என்பதை கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. மற்றவர்களுக்கு புத்துணர்ச்சியூட்டிய இயேசுவின் முன்மாதிரியை பின்பற்ற இன்றும் நான் முயலுகிறேன், ஆனால் எப்போதுமே வெற்றி பெறுவதில்லை.—மத்தேயு 11:28-30.
கிழக்கு ஆங்லீயாவில் 18 மாதங்கள் சேவித்த பிறகு இங்கிலாந்தின் வடகிழக்கிலுள்ள நியூகாஸில் அப்பான் டைன், நார்தம்பர்லாண்டு வட்டாரத்தில் சேவை செய்ய நியமிக்கப்பட்டோம். கண்ணைக் கவரும் அந்த பகுதியில் வாழும் அன்புள்ள மக்களை மிகவும் நேசித்தேன். அ.ஐ.மா., வாஷிங்டன், சீயாட்டலிலிருந்து வந்த மாவட்ட கண்காணியான டான் வார்ட் எனக்கு பேருதவியாக இருந்தார். அவர் கிலியட்டின் 20-வது வகுப்பில் பட்டம் பெற்றவர். பேச்சு கொடுக்கையில் படுவேகமாக பேசும் பழக்கம் எனக்கிருந்ததால் நிறுத்தி, நிதானமாக பேசவும் போதிக்கவும் அவர் எனக்கு கற்றுக்கொடுத்தார்.
எங்கள் வாழ்க்கையை மாற்றிய மற்றொரு ஆச்சரியம்
எங்கள் வாழ்க்கையை மாற்றிய ஒரு கடிதத்தை 1958-ல் பெற்றோம். அ.ஐ.மா., நியூ யார்க், சௌத் லான்ஸிங்கிலுள்ள கிலியட் பள்ளிக்கு வரும்படி அழைக்கப்பட்டோம். எங்களுடைய 1935-ம் வருட மாடலான ஆஸ்டின் செவன் காரை விற்றுவிட்டு, கப்பலில் நியூ யார்க் செல்வதற்கான டிக்கெட்டுகளை வாங்கினோம். முதலில், நியூ யார்க் நகரில் நடந்த யெகோவாவின் சாட்சிகளுடைய சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டோம். அங்கிருந்து ஒன்டாரியோவிலுள்ள பீட்டர்பராவிற்கு சென்று ஆறு மாதம் பயனியர் செய்தோம். பிறகு தெற்கு நோக்கி கிலியட் பள்ளிக்கு சென்றோம்.
இப்போது ஆளும் குழு அங்கத்தினராக இருக்கும் ஆல்பர்ட் ஷ்ரோடரும் இப்போது இறந்துவிட்ட மாக்ஸ்வெல் ஃபிரண்ட், ஜாக் ரெட்ஃபோர்ட் ஆகியோரும் பள்ளி போதனையாளர்களாக இருந்தனர். 14 நாடுகளைச் சேர்ந்த 82 மாணாக்கர்களோடு கூட்டுறவு கொண்டது அதிக உற்சாகமளித்தது. ஒருவர் மற்றவருடைய பண்பாட்டை ஓரளவு புரிந்துகொள்ள ஆரம்பித்தோம். ஆங்கிலம் கற்றுக்கொள்ள கஷ்டப்பட்ட வெளிநாட்டு மாணாக்கர்களோடு பழகியது, மற்றொரு மொழியை கற்கையில் நாங்கள் என்னென்ன கஷ்டங்களை சந்திப்போம் என்பதற்கு கண்கூடான அத்தாட்சியளித்தது. ஐந்து மாதங்களில் எங்கள் பயிற்சி முடியவே 27 நாடுகளுக்கு நாங்கள் நியமிக்கப்பட்டோம். பட்டமளிப்பு விழாவிற்கு பின்பு சில நாட்களுக்குள்ளாகவே ஐரோப்பாவிற்கு செல்லும் க்வீன் எலிசெபத் கப்பலில் பயணிக்க நாங்கள் நியூ யார்க் நகரத்திற்கு சென்றோம்.
முதல் மிஷனரி நியமிப்பு
நாங்கள் செல்ல வேண்டிய இடம் எது? போர்ச்சுகல்! 1959, நவம்பரில் நாங்கள் லிஸ்பன் வந்து சேர்ந்தோம். ஒரு புதிய மொழிக்கும் பண்பாட்டிற்கும் எந்தளவுக்கு ஒத்துப்போவோம் என்ற சவாலை இப்போது சந்தித்தோம். 1959-ல், சுமார் 90 லட்சம் ஜனங்கள் வாழ்ந்த போர்ச்சுகலில் 643 சாட்சிகள் சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்தனர். ஆனால் பிரசங்க வேலை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை. அங்கு ராஜ்ய மன்றங்கள் இருந்தபோதிலும் வெளிப்படையான அறிவிப்பு பலகைகள் இருக்கவில்லை.
மிஷனரியான எல்ஸா பீகோனீ எங்களுக்கு போர்ச்சுகீஸிய மொழியை கற்றுக்கொடுத்த பிறகு ஹேசலும் நானும் லிஸ்பனுக்கு அருகிலிருந்த ஃபாரு, இவுரா, பேஷா ஆகிய நகரங்களிலிருந்த சபைகளையும் தொகுதிகளையும் சந்தித்தோம். பின்னர் 1961-ல் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தன. ஷுவான் கொன்ஸால்விஷ் மாடேயுஸ் என்ற வாலிபருக்கு பைபிளை கற்றுக் கொடுத்து வந்தேன். இராணுவ சேவையில் ஈடுபடாமல் கிறிஸ்தவனாக நடுநிலை வகிக்க அவர் தீர்மானித்தார். அதற்கு பிறகு சீக்கிரத்திலேயே விசாரணைக்காக என்னை போலீஸ் தலைமை அலுவலகத்திற்கு அழைத்தார்கள். இப்போது மற்றொரு ஆச்சரியம்! சில நாட்கள் கழித்து, 30 நாட்களுக்குள் நாட்டைவிட்டு வெளியேறும்படி எங்களுக்கு அறிவிக்கப்பட்டது! உடன் மிஷனரிகளான எரிக் மற்றும் கிறிஸ்டீன் பிரிட்டன், டாம்னிக் மற்றும் எல்ஸா பீகோனீ ஆகியோருக்கும் அதே கதிதான்.
அதை எதிர்த்து மேல் முறையீடு செய்ததால் இரகசிய போலீஸ் மேலதிகாரியை சந்திக்க அனுமதிக்கப்பட்டோம். நாங்கள் எதற்காக வெளியேற்றப்படுகிறோம் என்பதை தெள்ளத்தெளிவாக விளக்கிய பின்பு எனது பைபிள் மாணாக்கரான ஷுவான் கொன்ஸால்விஷ் மாடேயுஸின் பெயரையும் அவர் குறிப்பிட்டார்! மனசாட்சியின் நிமித்தம் இராணுவத்தில் சேர மறுப்பதை பிரிட்டனைப் போல போர்ச்சுகலால் அனுமதிக்க முடியாது என்றும் கூறினார். ஆகவே நாங்கள் போர்ச்சுகலை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. அதற்கு பிறகு ஷுவானைப் பற்றி எந்த தகவலும் இல்லை. 26 வருடங்களுக்கு பிறகு, போர்ச்சுகலில் புதிய பெத்தேல் பிரதிஷ்டை செய்யப்பட்டபோது அவரையும் அவரது மனைவியையும் மூன்று மகள்களையும் சந்தித்தது எவ்வளவு மகிழ்ச்சியளித்தது! போர்ச்சுகலில் நாங்கள் செய்த ஊழியம் வீண் போகவில்லை!—1 கொரிந்தியர் 3:6-9.
எங்களுடைய அடுத்த நியமிப்பு எங்கே? மறுபடியும் ஆச்சரியம்! அருகிலுள்ள ஸ்பெயினில்தான். கண்களில் நீர் ததும்ப 1962, பிப்ரவரி மாதத்தில் லிஸ்பனிலிருந்து ரயிலில் மாட்ரிட் சென்றோம்.
வேறொரு பண்பாட்டிற்கு இசைய பழகுதல்
ஸ்பெயினில், இரகசியமாக செய்யப்பட்ட ஊழியத்திற்கும் நடத்தப்பட்ட கூட்டங்களுக்கும் ஏற்றவாறு நாங்கள் பழகிக்கொள்ள வேண்டியிருந்தது. நாங்கள் பெரும்பாலும் அடுத்தடுத்துள்ள இரண்டு வீடுகளில் பிரசங்கித்ததே கிடையாது. ஒரு வீட்டில் ஊழியம் செய்த பிறகு மற்றொரு தெருவிலுள்ள இன்னொரு வீட்டிற்கு செல்வோம். அதனால் போலீஸுக்கோ பாதிரிகளுக்கோ எங்களை பிடிக்க முடியாமல் போனது. பாசிஸ, கத்தோலிக்க சர்வாதிகாரத்தில் நாங்கள் வாழ்ந்து வந்தோம், பிரசங்க வேலையும் தடை செய்யப்பட்டிருந்ததை நினைவில் வையுங்கள். வெளிநாட்டவர்களாக இருந்ததால், எளிதில் கண்டுபிடிக்க முடியாதபடி எங்களுக்கு ஸ்பானிய பெயர்களை சூட்டிக்கொண்டோம். ஆகவே, என் பெயர் பாப்லோ, ஹேசலின் பெயர் க்வானா ஆனது.
மாட்ரிட்டில் சில மாதங்கள் கழித்த பிறகு பார்சிலோனாவில் வட்டார ஊழியம் செய்யும்படி அனுப்பப்பட்டோம். அந்நகரிலுள்ள அநேக சபைகளை நாங்கள் சந்தித்தோம்; ஒவ்வொரு சபையிலும் பெரும்பாலும் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் செலவிட்டோம். ஒவ்வொரு புத்தக படிப்பு தொகுதியையும் ஒரு சபைபோல சந்திக்க வேண்டியிருந்ததால் சந்திப்புகள் செய்ய அவ்வளவு நீண்ட காலம் எடுத்தது. ஒரு வாரத்தில் பெரும்பாலும் இரண்டு தொகுதிகளை சந்தித்தோம்.
எதிர்பாராத சவால்
ஸ்பெயினில் மாவட்ட ஊழியம் செய்யும்படி 1963-ல் அழைக்கப்பட்டோம். ஊழியத்தில் சுறுசுறுப்பாயிருந்த ஏறக்குறைய 3,000 சாட்சிகளுக்கு சேவை செய்ய, அப்போது இருந்த ஒன்பது வட்டாரங்களை சந்திப்பதற்காக அந்த நாடு முழுவதும் பிரயாணப்பட வேண்டியிருந்தது. செவைல்லே அருகிலிருந்த காடுகளில், கிஜோன் அருகிலிருந்த பண்ணையில், மாட்ரிட், பார்சிலோனா மற்றும் லாகொருனாவிலுள்ள ஆற்றோரங்களில் இரகசியமாக நடத்தப்பட்ட வட்டார மாநாடுகளே எங்கள் நினைவில் நின்ற சில மாநாடுகளாகும்.
வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யும்போது பாதுகாப்பிற்காக அருகிலுள்ள தெருக்களின் அமைப்பை வரைப்படத்தில் பார்த்து வைத்துக்கொள்வேன். ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் தப்பிச் செல்வதற்கான வழிகளை அறிந்திருக்க வேண்டுமல்லவா? மாட்ரிட்டில் ஒரு முறை ஊழியம் செய்கையில் நானும் மற்றொரு சாட்சியும் ஒரு கட்டடத்தின் மேல்மாடியில் இருந்தோம், அப்போது திடீரென கீழே ஒரே கூச்சலாக இருந்தது. நாங்கள் கீழே வந்து பார்த்தபோது ஈகாஸ் டே மரீயா (மரியாளின் குமாரத்திகள்) என்ற கத்தோலிக்க பிரிவைச் சேர்ந்த இளம் பெண்களை பார்த்தோம். எங்களிடம் ஜாக்கிரதையாக இருக்கும்படி அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை எச்சரித்துக் கொண்டிருந்தார்கள். எங்களால் அவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லை; உடனே அங்கிருந்து செல்லாவிட்டால் போலீஸ் வந்து எங்களை பிடித்துவிடும் என்பதை அறிந்தேன். ஆகவே, உடனடியாக அங்கிருந்து தப்பினோம்!
அந்த சமயம் ஸ்பெயினில் இருப்பது கிளர்ச்சியூட்டுவதாய் இருந்தது. விசேஷ பயனியர்கள் உட்பட அங்கிருந்த அருமையான சகோதர, சகோதரிகளை உற்சாகப்படுத்த முயன்றோம். சிறைக்கு செல்லும் ஆபத்தும், உள்ளவற்றை இழக்கும் அபாயமும் இருந்தபோதிலும் அவர்கள் பெரும்பாலும் கடவுளுடைய ராஜ்ய நற்செய்தியை பிரசங்கித்து, சபைகளை உருவாக்கி பலப்படுத்த முயன்றனர்.
இந்த சமயத்தில் சில துயரமான செய்திகளும் வந்தன. ஹேசல் சொல்லட்டுமே: “உண்மையுள்ள சாட்சியாக இருந்த என் அம்மா 1964-ல் இறந்தார். கடைசியாக அவரை பார்க்கக்கூட முடியாமல் போனது பெரும் ஏமாற்றமாக இருந்தது. மிஷனரியாக சேவிப்பதால் செலுத்த வேண்டிய விலைகளில் இதுவும் ஒன்று. மற்ற அநேகருக்கும்கூட இவ்வாறே நிகழ்ந்துள்ளது.”
கடைசியில் சுதந்திரம்
பல வருட துன்புறுத்துதலுக்கு பிறகு கடைசியாக 1970, ஜூலை மாதத்தில் பிராங்கோ அரசு எங்கள் வேலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளித்தது. முதல் ராஜ்ய மன்றம் மாட்ரிட்டிலும் இரண்டாவது பார்சிலோனாவிலுள்ள லெசெப்ஸிலும் திறக்கப்பட்டபோது ஹேசலும் நானும் பரவசமடைந்தோம். பெரும்பாலும் அவற்றில் பெரிய ஒளியூட்டப்பட்ட அறிவிப்பு பலகைகள் இருந்தன. இப்போது எங்களுக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பதையும் இங்கேயே இருக்கப்போவதையும் எல்லாருக்கும் தெரிவிக்க விரும்பினோம்! இந்த சந்தர்ப்பத்தில் 1972-ல் ஸ்பெயினில் 17,000 சாட்சிகள் இருந்தனர்.
அப்போது இங்கிலாந்திலிருந்து மிகவும் உற்சாகமூட்டிய செய்தியை கேள்விப்பட்டேன். அப்பா, 1969-ல் எங்களை சந்திக்க ஸ்பெயின் வந்தார். ஸ்பானிய சாட்சிகள் அவரை நடத்திய விதம் அவரை மிகவும் கவர்ந்ததால் இங்கிலாந்து சென்ற பிறகு பைபிளை படிக்க ஆரம்பித்தார். பிறகு 1971-ல் அப்பா முழுக்காட்டுதல் பெற்றுவிட்டதை கேள்விப்பட்டேன்! ஒருமுறை நாங்கள் வீட்டிற்கு சென்றிருந்தபோது சாப்பிடுவதற்கு முன்பு அப்பா ஜெபம் செய்தார்; என் கிறிஸ்தவ சகோதரனாக அவர் ஜெபம் செய்தது என்னை மிகவும் நெகிழ வைத்தது. இந்த நாளுக்காகத்தான் 20 வருடங்களாக காத்திருந்தேன். என் தம்பி பாபும் அவனுடைய மனைவி ஐரிஸும் 1958-ல் சாட்சிகளானார்கள். அவர்களுடைய மகன் ஃபிலிப் இப்போது ஸ்பெயினில் தன் மனைவி ஜீனுடன் வட்டார கண்காணியாக சேவிக்கிறான். அந்த அருமையான நாட்டில் அவர்கள் வேலை செய்வதை காண்பது எங்களுக்கு பெருமகிழ்ச்சி தருகிறது.
சமீபத்திய ஆச்சரியம்
ஆளும் குழு அங்கத்தினர் ஒருவர் 1980, பிப்ரவரி மாதத்தில் மண்டல கண்காணியாக ஸ்பெயினுக்கு விஜயம் செய்தார். அவர் என்னோடு சேர்ந்து ஊழியம் செய்ய வேண்டும் என்று சொன்னது பெரிய ஆச்சரியமாக இருந்தது. அவர் என்னை கவனித்துக் கொண்டிருந்ததை நான் சற்றும் உணரவில்லை! பிறகு, நியூ யார்க், புரூக்லினிலுள்ள உலக தலைமையகத்திற்கு வரும்படி செப்டம்பரில் எங்களுக்கு அழைப்பு வந்தது! நாங்கள் வாயடைத்துப் போனோம். ஸ்பானிய சகோதரர்களைவிட்டு பிரிவது அதிக வருத்தம் தந்தாலும் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டோம். அப்போது அங்கே 48,000 சாட்சிகள் இருந்தனர்!
நாங்கள் புறப்படுகையில் ஒரு சகோதரர் பாக்கெட் உவாட்ச் ஒன்றை எனக்கு பரிசளித்தார். அதில் இரண்டு வேதவசனங்களை பொறித்திருந்தார்—“லூக்காஸ் 16:10; லூக்காஸ் 17:10.” அவையே எனக்கு முக்கிய வசனங்கள் என்று கூறினார். சிறிய காரியங்களில் உண்மையாய் இருப்பதை லூக்கா 16:10-ம், நாம் “அப்பிரயோஜனமான ஊழியக்காரர்” ஆதலால் பெருமைப்பட காரணமேதுமில்லை என்பதை லூக்கா 17:10-ம் வலியுறுத்துகின்றன. யெகோவாவின் சேவையில் நாம் எதை செய்தாலும், ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர்களாக நம் கடமையை மட்டுமே செய்திருப்பதை எப்போதும் உணர்ந்திருக்கிறேன்.
ஆரோக்கியத்தில் ஆச்சரியம்
எனக்கு இருதய கோளாறுகள் 1990-ல் ஆரம்பித்தன. கடைசியில், அடைப்பட்டிருந்த இரத்தக்குழாயை சரிசெய்ய குழாய் ஒன்று உள்ளே நுழைக்கப்பட்டது. ஆரோக்கியத்தில் குறைவுபட்ட இந்த கடினமான காலங்களில் ஹேசல் பல வழிகளிலும் எனக்கு பக்கபலமாக இருந்தாள். என்னால் தூக்க முடியாத பைகளையும் சூட்கேஸ்களையும் பெரும்பாலும் அவளே தூக்கி வந்தாள். பிறகு, 2000, மே மாதத்தில் எனக்கு பேஸ்மேக்கர் வைக்கப்பட்டது. அதனால் இப்போது எவ்வளவு நன்றாக உள்ளது!
யெகோவாவின் கரம் குறுகியதல்ல என்பதையும் நாம் விரும்பும் நேரத்தில் அல்ல, அவருடைய குறித்த காலத்தில் தமது நோக்கங்களை நிறைவேற்றுவார் என்பதையும் கடந்த 50 வருடங்களாக ஹேசலும் நானும் அனுபவத்தில் கண்டிருக்கிறோம். (ஏசாயா 59:1; ஆபகூக் 2:3) எங்கள் வாழ்க்கையில் அனுபவித்த ஆச்சரியங்களில் பெரும்பாலானவை சந்தோஷத்தையும் சில வருத்தத்தையும் அளித்தன; என்றாலும் இவை எல்லாவற்றிலும் யெகோவா எங்களை தாங்கினார். இங்கு, யெகோவாவின் ஜனங்களுடைய உலக தலைமையகத்தில் ஆளும் குழு அங்கத்தினர்களோடு தினந்தோறும் கூட்டுறவு கொள்ளும் வாய்ப்பு இருப்பதால் நாங்கள் அதிக சந்தோஷப்படுகிறோம். ‘நாங்கள் இங்கு இருப்பது உண்மைதானா?’ என என்னை நானே சில சமயங்களில் கேட்டுக்கொள்வேன். அது உண்மையில் தகுதியற்ற தயவே. (2 கொரிந்தியர் 12:9, NW) யெகோவா எங்களை சாத்தானின் தந்திரங்களிலிருந்து தொடர்ந்து காப்பாற்றி, இந்த பூமியின் மீது அவருடைய நீதியுள்ள ஆட்சியில் மகிழ்ச்சியை அனுபவிக்கும்படி பாதுகாப்பார் என்பதில் நாங்கள் நிச்சயமாக இருக்கிறோம்.—எபேசியர் 6:11-18; வெளிப்படுத்துதல் 21:1-4.
[பக்கம் 26-ன் படம்]
என் சிறைவாசத்தை ஆரம்பித்த மான்செஸ்டரிலுள்ள ஸ்டிரேஞ்வேஸ் சிறைச்சாலை
[பக்கம் 27-ன் படம்]
இங்கிலாந்தில் வட்டார ஊழியத்தில் எங்களுடைய ஆஸ்டின் செவன் காருடன்
[பக்கம் 28-ன் படம்]
1962-ல் ஸ்பெயின், மாட்ரிட், தெர்சிடீல்யாவில் நடைபெற்ற இரகசிய அசெம்பிளி
[பக்கம் 29-ன் படம்]
புரூக்லினில் எங்களுடைய சாட்சிகொடுக்கும் மேஜை முன்