பேச்சு பரிமாற்றம்—குடும்ப ஆரோக்கியத்தின் சாவி
ராபர்ட் பாரன், 1778-ல் டபுள் ஆக்டிங், லீவர்-டம்லர் ரக பூட்டை கண்டுபிடித்து, விற்பனை உரிமையை பெற்றார். இதுவே நவீனகால பூட்டுகளுக்கெல்லாம் அடிப்படையாக இருக்கிறது. இவர் வடிவமைத்த பூட்டில், ஒரே சாவியால் பூட்டின் இரண்டு லீவர்களை ஒருசேர உயர்த்த முடியும்.
இதேபோல், குடும்ப வாழ்க்கை வெற்றியடைய கணவனும் மனைவியும் சேர்ந்தே செயல்பட வேண்டும். நல்ல குடும்பம் என்ற பெட்டகத்தை, நல்ல பேச்சு பரிமாற்றம் என்ற சாவியைப் போட்டு இருவரும் திறந்தால், அதில் தாம்பத்தியத்தின் பொன்னான தருணங்களை அனுபவித்து மகிழ முடியும்.
எப்படியெல்லாம் பேச்சை பரிமாற வேண்டும்?
பேசும்போது என்னவெல்லாம் பரிமாற வேண்டும்? பேச்சு பரிமாற்றத்தை (communication) பற்றி ஓர் அகராதி தரும் விளக்கம்: “பேச்சு, எழுத்து அல்லது அடையாளத்தின் மூலம் எண்ணங்களை, கருத்துக்களை அல்லது விஷயத்தை தெரிவித்தல் அல்லது பரிமாற்றம் செய்தல்.” எனவே, உணர்வுகளையும் கருத்துக்களையும் பகிர்ந்துகொள்வதே பேச்சு பரிமாற்றம். அப்படியென்றால் மனம்விட்டு பேசும்போது ஊக்கம்தரும், புத்துணர்ச்சியளிக்கும், மகிழ்ச்சியளிக்கும் நல்ல விஷயங்களையும், பாராட்டுக்குரிய, ஆறுதல் அளிக்கும் விஷயங்களையும் பரிமாற வேண்டும்.—எபேசியர் 4:29-32; பிலிப்பியர் 4:8.
நம்பிக்கை, நாணயம், பரஸ்பர புரிந்துகொள்ளுதல் போன்ற குணங்கள் இருந்தால், மடைதிறந்த வெள்ளம்போல் பாய்ந்து வரும் பேச்சு. திருமண பந்தத்தை நிரந்தர பந்தமாக நினைத்து, அதன் வெற்றிக்கு அயராது உழைத்தால் இந்தக் குணங்கள் ஓடிவந்து ஒட்டிக்கொள்ளும். தாம்பத்தியத்தை பற்றி 18-ம் நூற்றாண்டை சேர்ந்த, கட்டுரையாளர் ஜோசப் அடிசன் இவ்வாறு எழுதினார்: “பரஸ்பர ஆறுதலும் இன்பமும் கிடைக்கும் என்ற எண்ணத்தில், மணம் முடிக்க நினைக்கும் இருவர் மனித கடலில் வலைபோட்டு தேடி துணையை தேர்ந்தெடுக்கிறார்கள். இவ்வாறு தேர்ந்தெடுக்கையில், துணைவரது குறைகளையும் நிறைகளையும் மனதில் கொண்டு, வாழ்நாள் பூராவும் நகைச்சுவை உணர்வோடு, கனிவோடு, விவேகத்தோடு, தவறை மன்னித்து, பொறுமையோடு, மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும்.” இதுவல்லவோ மகிழ்ச்சியான மணவாழ்க்கை! இந்தப் பொன்னான குணங்கள் குடும்ப வாழ்க்கைக்கு அழகுசேர்ப்பவை. உங்கள் வாழ்க்கையும் இதுபோல் அமைய மனந்திறந்து பேசுங்கள்.
நல்ல பேச்சு பரிமாற்றத்திற்கு முட்டுக்கட்டைகள்
எத்தனையோ தம்பதிகள், நம்பிக்கைகளை மனதில் சுமந்து, மகிழ்ச்சிக் கடலை எதிர்பார்த்து மணவாழ்க்கையில் நுழைகிறார்கள். ஆனால் பலருக்கு, மகிழ்ச்சி மாயமாய் மறைந்துவிடுகிறது, நம்பிக்கை தளர்ந்துவிடுகிறது. நம்பிக்கை குடியிருந்த மனதில் ஏமாற்றமும், கோபமும், பகையும் கலந்த கசப்புணர்வு குடிபுகுந்துவிடும். கொடுமையிலும் கொடுமை என்னவென்றால், துணைவரை அடியோடு வெறுக்கவும் நேரிடலாம். அப்போது, “சாகும் வரை பிரியமாட்டோம்” என்று உறுதிமொழி எடுத்த ஒரே காரணத்திற்காக பல்லைக்கடித்துக்கொண்டு வாழவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. நல்ல குடும்ப வாழ்க்கைக்கு நல்ல பேச்சு பரிமாற்றம் தேவை. அப்படியென்றால், அதற்கு தடையாக இருக்கும் ஒருசில முட்டுக்கட்டைகளை தகர்த்தெறிய வேண்டும்.
மனம்விட்டு பேச நினைத்தால் முதல் வரும் முட்டுக்கட்டை பயம். இந்த விஷயத்தை சொன்னால் அல்லது இந்த விருப்பத்தை தெரிவித்தால் அவர் அல்லது அவள் என்ன நினைப்பாரோ/நினைப்பாளோ என்ற பயமே தலைதூக்குகிறது. எடுத்துக்காட்டாக, உடல்நிலை ஏதோ பயங்கரமாக மோசமாகிக்கொண்டு வருவதை பற்றி தெரியவந்தால், அதற்காக தன் துணைவர் தன்னை வெறுத்து ஒதுக்கிவிடுவாரோ/ளோ என்ற பயம் ஏற்படலாம். அது தனது தோற்றத்தை அல்லது செயலை பெருமளவுக்கு பாதிக்கும் என்ற விஷயத்தை துணைவரிடத்தில் எப்படி எடுத்துச் சொல்வது? இதுபோன்ற தருணங்களில், விஷயங்களை ஒளிவுமறைவின்றி பேசி, எதிர்காலத்திற்காக நன்கு நிதானமாக யோசித்து திட்டமிடுவது மிகமிக அவசியம். அந்தத் துணைவர்மேல் உங்களுக்கு தனி அக்கறை இருப்பதை வெளிக்காட்ட, கனிவோடு நடந்துகொண்டு, அவர்மீது உங்களுக்கிருக்கும் அன்பு ஒருபோதும் குறையாது என்பதை வாய்விட்டு சொல்லுங்கள். இப்படி செய்தால், மணவாழ்க்கையில் உண்மையான திருப்தி ஏற்படும். மணவாழ்க்கைக்கும் பின்வரும் நீதிமொழி அப்படியே பொருந்துகிறது: “நண்பன் எப்போதும் அன்பு காட்டுவான்; இடுக்கணில் உதவுவதற்கே உடன் பிறந்தவன் இருக்கின்றான்.”—நீதிமொழிகள் 17:17, பொ.மொ.
மனக்கசப்பு. இது மனம்விட்டு பேசுவதில் முளைக்கும் இன்னொரு முட்டுக்கட்டை. மன்னிக்கும் இரு மனங்களின் சங்கமமே மகிழ்ச்சிபொங்கும் திருமணம் என்று சொன்னது சரிதான். அப்படியென்றால், தம்பதிகள், அப்போஸ்தன் பவுல் கொடுத்த பின்வரும் நடைமுறையான அறிவுரையின்படி நடக்க அனைத்து முயற்சிகளும் எடுக்க வேண்டும்: “சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது” (எபேசியர் 4:26) இந்த அறிவுரையை கேட்டு நடக்க பணிவு தேவை. அப்போது மனதுக்குள் கோபத்தை அல்லது வெறுப்பை பூட்டிவைக்க மாட்டோம். நல்ல மணத்துணைவர்கள் அடிக்கடி கோபித்துக்கொண்டு, சண்டைபோட்டுக்கொண்டு, வெறுப்பை வளர்த்துக்கொண்டு இருக்க மாட்டார்கள். (நீதிமொழிகள் 30:33) அவர்கள் கடவுளின் முன்மாதிரியை பின்பற்றி, கோபத்தை மனதுக்குள் பூட்டி வைக்க மாட்டார்கள். (எரேமியா 3:12) இருவரும் நெஞ்சார ஒருவரைவொருவர் மன்னிப்பார்கள்.—மத்தேயு 18:35.
மௌன யுத்தம் எல்லாவிதமான பேச்சுத்தொடர்புக்கும் முட்டுக்கட்டை. முகத்தை தூக்கிவைத்துக் கொள்ளுதல், பெருமூச்சுவிடுதல், நடைப்பிணம்போல் உலாவருதல், வாயே திறக்காமல் இருத்தல் ஆகியவை மௌன யுத்த தளவாடங்கள் ஆகும். துணைவர் மௌன யுத்தத்தில் இறங்கிவிட்டால், மனதில் உள்ள வெறுப்பை வெளிக்காட்டுகிறார் என்று அர்த்தம். இப்படி முகத்தை தூக்கிவைத்துக்கொண்டு, பேசாமல் இருப்பதைவிட, உள்ளத்திலிருப்பதை கனிவோடு வெளியே சொன்னால் உங்கள் வாழ்க்கை உருப்படும்.
குடும்ப பந்தத்தில் உறவுகள் பேசும்போது, சரிவர கேட்காமல் இருப்பது அல்லது காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் இருப்பது பேச்சு பரிமாற்றத்தின் இன்னொரு முட்டுக்கட்டை. நாம் மிகவும் களைப்பாக இருக்கும்போது அல்லது நமக்கு அதிக வேலை இருக்கும்போது மற்றவர்கள் சொல்வதை காதுகொடுத்து கேட்க மனதிலும் உடலிலும் தெம்பு வேண்டும். சரிவர கேட்காமல், எதையாவது ஒன்றை தவறாக செய்துவிட்டால், “நான் படிச்சி படிச்சி சொன்னேன். காதுல வாங்கவேயில்ல” என்று ஒருவர் சொல்ல, அதற்கு அடுத்தவர், “இல்லையே, இப்பதான் சொல்(ற)றீங்க” என்று பதில் சொல்ல அங்கேதான் வெடிக்கும் பூகம்பம். மனம்விட்டு பேசாதிருந்தால் மழையென பொழியும் கஷ்டம்.
மனம்விட்டு பேச என்ன செய்ய வேண்டும்?
அன்பாக, மனம்விட்டு பேச நேரத்தை ஒதுக்குவது ரொம். . .ப முக்கியம்! சிலர், டிவி முன் உட்கார்ந்து கொண்டு மற்றவர்களின் வாழ்க்கையில் நடப்பதை பார்க்க பல மணிநேரங்களை அள்ளிவீசுகிறார்கள். ஆனால் தங்கள் வாழ்க்கையை கவனிக்க சில மணித்துளிகளை கிள்ளிப்போடுகிறார்கள். ஆகவே, மனம்விட்டு பேசவேண்டுமென்றால், முதலில் டிவியை அணைத்துவிட்டு வரவேண்டும்.
பேசுவதற்கு ஒருகாலம் என்றால், அமைதியாக இருக்கவும் ஒருகாலம் உண்டு. ஒரு நீதிமொழி இவ்வாறு சொல்கிறது: “ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; . . . மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு.” அதேசமயத்தில் சரியான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுவதும் முக்கியம். இதைத்தான் இன்னொரு நீதிமொழி இவ்வாறு சொல்கிறது: “ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!” (பிரசங்கி 3:1, 7; நீதிமொழிகள் 15:23) ஆகவே, உங்கள் கருத்தை சொல்ல அல்லது மனதின் வேதனைகளை கொட்ட எது ஏற்ற நேரம் என்பதை தீர்மானியுங்கள். உங்கள் மனதுக்குள் கேட்கவேண்டிய கேள்விகள் இதோ: ‘என் கணவர்/மனைவி களைப்பாக இருக்கிறா(ளா)ரா அல்லது சாவகாசமா, நல்ல மூடில் இருக்கிறா(ளா)ரா? நான் சொல்லப்போற விஷயத்தால் பூகம்பம் வெடிக்குமா? நான் போன முறை பேசினபோது அவ(ளு)ருக்கு பிடிக்காத என்ன வார்த்தைகளை உபயோகித்தேன்?’
நாம் மற்றவர்களிடத்தில் எதையாவது முறையிடும்போது, நம் முறையீட்டுக்கு அவர்கள் ஒத்துழைப்பு கொடுக்கும்போது அல்லது அதை ஒத்துக்கொள்ளும்போது அவர்களுக்கு ஏதேனும் ஆதாயம் கிடைத்தால் உடனே தலையை தலையை ஆட்டுவார்கள். இதை நாம் மறந்துவிடக்கூடாது. கணவன் மனைவிக்கு இடையில் மனப்போராட்டம் அதிகரித்துக் கொண்டிருப்பதாக வைத்துக்கொள்வோம். அப்போது யாராவது ஒருவர் இப்படி சொல்லக்கூடும்: “நீ(ங்க) சொன்னத கேட்டதுலேயிருந்து, என் மனசு வேதனையில வெந்துக்கிட்டு இருக்கு. உடனே பேசிதீர்த்துட்டா நல்லதுன்னு நான் நினைக்கிறேன்!” உண்மைதான் சூழ்நிலைக்கு ஏற்ப, உங்களுடைய வார்த்தைகளும் இருக்கும். ஆனால் மேலே சொன்னதை இப்படியும் சொல்லுங்களேன்: “[செல்லமாக அழைத்து] நாம பேசின விஷயத்தை பத்தியும் அதை சரிசெய்யறத பத்தியும் நல்லா யோசிச்சு பார்த்தேன்.” இந்த இரண்டு அணுகுமுறைகளில் உங்கள் துணைவருக்கு எது பிடிக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
ஒரு விஷயத்தை எப்படி சொல்கிறீர்கள் என்பது மிகமிக முக்கியம். அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “உங்கள் பேச்சு எப்பொழுதும் இனியதாயும் சுவையுடையதாயும் இருப்பதாக!” (கொலோசையர் 4:6, பொ.மொ.) பேசும்போது, குரலும், தேர்ந்தெடுக்கும் வார்த்தைகளும் இனிமையாக இருக்க முயற்சிசெய்யுங்கள். “இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஒளஷதமுமாகும்” என்பதை எப்போதும் மறந்துவிடாதீர்கள். (நீதிமொழிகள் 16:24)
வீட்டில் எதையும் சேர்ந்தே செய்யும் சில தம்பதிகளுக்கு பேசுவதற்கு ஏற்ற ரம்மியமான சூழ்நிலை அமையும். இப்படி ஒத்துழைத்து செயல்படும்போது, இருவருக்கும் பகிர்ந்துகொள்கிற உணர்வு ஏற்பட்டு, நல்லா மனம்விட்டு பேச நேரத்தை ஒதுக்கும்படி தூண்டப்படலாம். ஆனால் வேறுசில தம்பதிகளுக்கு, அமைதியான சூழ்நிலையில், எந்தவொரு வேலையும் செய்யாமல் தனிமையில் இருப்பது நல்லது. அப்போது இன்னும் தாராளமாக மனம்விட்டு பேசுவார்கள்.
மனமொத்த தம்பதிகள் பேசிக்கொள்வதை பார்த்தே நிறைய தெரிந்துகொள்ளலாம். அவர்களால் மாத்திரம் எப்படி அப்படி இருக்க முடிகிறது? அவர்கள் இப்படி மனம் ஒத்துப் போவதற்கும், ஜாலியா பேசுவதற்கும், அநேகமாக, அவர்கள் எடுத்த முயற்சி, காட்டிய பொறுமை, பொழிந்த அன்பான கரிசனையே காரணம். அவர்களும் வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்களிலிருந்து பாடம் கற்றிருப்பார்கள். ஏனெனில் நல்ல குடும்பம் தானாக அமைந்துவிடாது. ஆகவே, உங்கள் கணவன் அல்லது மனைவி சொல்லும் கருத்தை ஏற்று, அவர் அல்லது அவளது தேவைகளை மதித்து, கொந்தளிக்கும் உணர்ச்சிகளை புத்திசாலித்தனமாக பேசி தணிப்பது மிகமிக முக்கியம். (நீதிமொழிகள் 16:23) உங்களுக்கு திருமணமாகிவிட்டதா? அப்படியென்றால், வாழ்வதற்கு ரம்மியமான சூழ்நிலையையும் ஏற்படுத்திக்கொடுங்கள். அத்தகைய சூழ்நிலையில் தவறு நடந்தாலும் மன்னிப்பு கோருவது எளிது. இப்படி செய்தால் உங்களது இல்லறம் நல்லறமாகும்.
மணவாழ்க்கை என்றும் மகிழ்ச்சி பொங்கும் வாழ்க்கையாக இருக்க வேண்டும் என்று யெகோவா தேவன் விரும்புகிறார். (ஆதியாகமம் 2:18, 21) ஆனால், மணவாழ்க்கையை மணம்வீசும் வாழ்க்கையாக ஆக்கவேண்டியது மணம்முடித்த தம்பதியின் கைகளில்தான் உள்ளது. இல்லற வாழ்க்கையில் இணைந்த இரு அன்பான உள்ளங்களும், பேச்சுக் கலை என்ற சாவியைக் கொண்டு, வெற்றியின் கதவுகளை திறக்க இணைந்தே செயல்பட வேண்டும்.
[பக்கம் 22-ன் படம்]
டிவியை அணைத்துவிட்டால் ஆற அமர பேசலாம்
[பக்கம் 23-ன் படம்]
மனம்விட்டு பேசினால் தூய அன்பு தூரமாய் போகாது