உங்கள் துணையுடன் பேச்சுத்தொடர்பு கொள்ள வழிகள்
‘நான் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது.’ ‘என் மனசுல உள்ளதை தெளிவா சொல்லல.’ உங்கள் கணவருடன்/மனைவியுடன் பேச முயன்று, கடைசியில் நீங்கள் எப்போதாவது இப்படி உணர்ந்திருக்கிறீர்களா? பேச்சுத்தொடர்பு என்பது வளர்த்துக்கொள்ள வேண்டிய ஒரு திறமை. இதை சிலர் எளிதில் வளர்த்துக்கொள்கிறார்கள், மற்றவர்களோ கஷ்டப்படுகிறார்கள். பேச்சுத்தொடர்பு கொள்வது கஷ்டமாக இருந்தாலும்கூட, உங்கள் கருத்துகளை இனிய முறையில் எடுத்துரைப்பதற்கு—ஆம், திறம்பட்ட விதத்தில் பேச்சுத்தொடர்பு கொள்வதற்கு—நீங்கள் கற்றுக்கொள்ள முடியும்.
துணையுடன் பழகும் விஷயத்தில், கலாச்சாரம் சிலசமயங்களில் மக்கள்மீது செல்வாக்கு செலுத்துகிறது. ‘ஆம்பிளை அதிகமா பேசக் கூடாது’ என ஆண்கள் ஒருவேளை கற்பிக்கப்பட்டிருக்கலாம். அப்படிப்பட்ட கலாச்சாரங்களில், அதிகமாக பேசுகிற ஆண்களை மற்றவர்கள் தாழ்வாகப் பார்க்கலாம், அற்பமானவர்களாக கருதலாம். உண்மைதான், ‘சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும் இருக்கக்கடவர்கள்’ என்று பைபிள் சொல்கிறது. (யாக்கோபு 1:19) என்றாலும், ஆண்கள் பெண்கள் இருவருக்குமே இந்த அறிவுரை பொருந்துகிறது. பேச்சுத்தொடர்பு என்றால் வெறுமனே பேசிக்கொண்டிருப்பது மட்டுமே அல்ல, அதில் நிறைய விஷயங்கள் உட்பட்டுள்ளன என்பதை இந்த வசனம் காட்டுகிறது. இரண்டு ஆட்கள் மணிக்கணக்காக பேசிக்கொண்டே இருக்கலாம், ஆனால் ஒருவர் சொல்வதை மற்றொருவர் செவிகொடுத்துக் கேட்கவில்லையென்றால் என்ன பிரயோஜனம்? ஒருவேளை அது அர்த்தமுள்ள பேச்சுத்தொடர்பாக இருக்காது. ஆகவே, மேற்குறிப்பிடப்பட்ட வசனத்தின்படி, நன்கு பேச்சுத்தொடர்பு கொள்வதில், செவிகொடுத்துக் கேட்கும் கலை முக்கிய பங்கு வகிக்கிறது.
“மெளனமான” பேச்சுத்தொடர்பு
சில சமுதாயங்களில், மனைவிமார் தங்களுடைய எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தக் கூடாது; கணவன்மார் வீட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஏதாவதொரு சந்தர்ப்பத்தில், தங்களுடைய துணைக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது என்பதை ஒருவர் ஊகிக்க வேண்டியிருக்கிறது. மனைவிமார் சிலர், கணவருடைய தேவைகளை உணர்ந்து அவற்றை செய்வதில் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள். இவர்களுடைய விஷயத்தில், கணவருக்கும் மனைவிக்கும் இடையே “மௌனமான” பேச்சுத்தொடர்பு நடக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட பேச்சுத்தொடர்பு ஒருவழிப்பாதையாக இருக்கிறது. கணவர் என்ன நினைக்கிறார், எப்படி உணருகிறார் என்பதை மனைவி பகுத்துணர கற்றுக்கொள்ளலாம், ஆனால் இதே திறமையை கணவரும் வளர்த்துக்கொள்ள வேண்டுமென்றோ மனைவியின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றோ எதிர்பார்க்கப்படுவதில்லை.
சில கலாச்சாரங்களில், பெண்களுடைய உணர்ச்சிகளை ஆண்கள் புரிந்துகொண்டு அதற்கேற்ப நடக்க முயலுகிறார்கள் என்பது உண்மைதான். இத்தகைய கலாச்சாரத்திலுள்ள தம்பதியரும்கூட, நல்ல பேச்சுத்தொடர்பின் வாயிலாக நன்மை அடையலாம்.
பேச்சுத்தொடர்பு இன்றியமையாதது
வெளிப்படையாகப் பேசுவதன் மூலம் தவறான அபிப்பிராயங்களைத் தவிர்க்கலாம். இஸ்ரவேலருடைய சரித்திரத்தின் ஆரம்பத்தில், ரூபன், காத் கோத்திரத்தாரும் மனாசேயின் பாதி கோத்திரத்தாரும் யோர்தான் நதிக்கு கிழக்கே வசித்து வந்தார்கள்; இவர்கள் யோர்தானின் ஓரத்தில் ‘ஒரு பெரிய பலிபீடத்தைக் கட்டினார்கள்.’ நதிக்கு மேற்கே இருந்த மற்ற கோத்திரத்தார் இதை தவறாகப் புரிந்துகொண்டார்கள்; தங்களுடைய சகோதரர்கள் விசுவாசதுரோகம் செய்துவிட்டதாக நினைத்துக்கொண்டு, இந்தக் “கலகக்காரர்களை” எதிர்த்துப் போரிட தயாரானார்கள். ஆனால் போரிடச் செல்வதற்கு முன்பு, கிழக்கே இருந்த கோத்திரத்தாருடன் பேச்சு வார்த்தை நடத்த ஒரு குழுவை அனுப்பிவைத்தார்கள். எவ்வளவு ஞானமான செயல்! அவர்கள் அந்தப் பலிபீடத்தைக் கட்டியது சட்ட விரோதமாய் தகன பலியிடுவதற்கோ போஜன பலியிடுவதற்கோ அல்ல என்பதை தெரிந்துகொண்டார்கள். மேற்கே இருந்த கோத்திரத்தார் பிற்காலத்தில் தங்களிடம் வந்து, ‘யெகோவாவிடத்தில் உங்களுக்குப் பங்கில்லை என்று சொல்லிவிடுவார்களோ’ என்று பயந்துதான் கிழக்கே இருந்த கோத்திரத்தார் அந்தப் பலிபீடத்தை கட்டினார்கள். அவர்களும் யெகோவாவை வழிபடுகிறவர்கள் என்பதற்கு சாட்சியாக அந்தப் பலிபீடம் இருந்தது. (யோசுவா 22:10-29) ஆகவே, அந்தப் பலிபீடத்திற்கு “சாட்சி” என பெயரிட்டார்கள்; யெகோவாவே உண்மையான கடவுள் என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டதற்கு அது ஒரு சாட்சியாக இருந்திருக்கலாம்.—யோசுவா 22:34, NW அடிக்குறிப்பு.
மேற்கிலிருந்த கோத்திரத்தாருக்கு இந்த விளக்கம் நம்பிக்கை அளித்தது; ஆகவே, கிழக்கிலிருந்த கோத்திரத்தாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் எண்ணத்தைக் கைவிட்டார்கள். ஆம், மனம்விட்டு பேசியதால் இரத்த வெள்ளம் புரண்டோடுவது தவிர்க்கப்பட்டது. பிற்காலத்தில், இஸ்ரவேலர் யெகோவா தேவனுக்கு எதிராக கலகம் செய்தார்கள்; அடையாள அர்த்தத்தில் அவரே அவர்களுடைய கணவராக இருந்தார்; ஆனாலும், இரக்கத்தோடு ‘நெஞ்சுருக அவர்களுடன் [யெகோவா] பேசினார்.’ (ஓசியா [ஓசேயா] 2:14, பொது மொழிபெயர்ப்பு) தம்பதியருக்கு எப்பேர்ப்பட்ட சிறந்த முன்மாதிரி! ஆம், உங்கள் துணையோடு மனம்விட்டு பேசுங்கள். அப்போதுதான் அவர்களால் உங்களுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள முடியும். முக்கியமாக, ஒத்துப்போகாத விஷயங்களை மனம்விட்டு பேசுவது மிக அவசியம். “வார்த்தைகளெல்லாம் உதட்டளவில்தான் பேசப்படுகின்றன என சிலர் சொல்கிறார்கள். ஆனால் மனதார பேசப்படும் வார்த்தைகள் விலையேறப்பெற்றவை” என மிஹாலிக் என்ற அமெரிக்க நிருபர் கூறுகிறார். “மனதில் உள்ளதை சொல்வது சிலருக்குக் கஷ்டமாக இருக்கலாம், ஆனால் அது தரும் பலன் பணத்தைவிட மதிப்புமிக்கது.”
பேச்சுத்தொடர்பு கொள்ளும் திறமை—வளர்ப்பது எப்படி?
‘கல்யாணம் ஆனதிலிருந்தே எங்க ரெண்டு பேருக்கும் இடையே பிரச்சினைதான்’ என்று சிலர் சொல்லலாம். ‘இவங்க எங்க சேர்ந்து வாழப்போறாங்க’ என்ற முடிவுக்கு மற்றவர்கள் வரலாம். திருமணத்திற்குப் பிறகு பேச்சுத்தொடர்பு கொள்ளும் திறமைகளை வளர்ப்பதெல்லாம் முடியாத காரியமென தம்பதியர் சிலர் நினைக்கலாம். என்றாலும், பெற்றோர் பார்த்து திருமணம் செய்துவைத்த தம்பதியரைப் பற்றி யோசித்துப் பாருங்கள். இப்படிப்பட்ட தம்பதியர் பெரும்பாலும் திருமணத்திற்குப் பிறகுதான் ஒருவருக்கொருவர் பேசவே ஆரம்பிக்கிறார்கள். அப்படியிருந்தும்கூட, காலப்போக்கில் பேச்சுத்தொடர்பு எனும் கலையில் சிறந்து விளங்குகிறார்கள். இதற்கு ஒரு சிறந்த உதாரணத்தைக் கவனியுங்கள்.
சுமார் 4,000 வருடங்களுக்கு முன்பு, கிழக்கத்திய நாட்டில் வாழ்ந்துவந்த பெற்றோர் தங்களுடைய மகனுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். மகனுக்குப் பெண் பார்க்க தங்களுடைய ஊழியக்காரரை தொலைதூரத்திற்கு அனுப்பி வைத்தார்கள். மணப்பெண் ரெபெக்காளை அந்த ஊழியக்காரர் அழைத்து வந்தார். மாப்பிள்ளை ஈசாக்கு அவர்களை வயல்வெளியில் சந்தித்தார். அந்த ஊழியக்காரர் ‘தான் செய்த சகல காரியங்களையும் ஈசாக்குக்கு விவரித்துச் சொன்னார்.’ பைபிள் பதிவு இவ்வாறு தொடருகிறது: ‘[“அதற்குப் பின்னர்,” NW] ஈசாக்கு ரெபெக்காளைத் தன் தாய் சாராளுடைய கூடாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய் [இதுதான் அக்கால திருமண வழக்கம்], அவளைத் தனக்கு மனைவியாக்கிக்கொண்டு, அவளை நேசித்தார்.’—ஆதியாகமம் 24:62-67.
முதலில், ஊழியக்காரர் விவரித்துச் சொன்னதையெல்லாம் ஈசாக்கு கேட்டார், ‘அதற்குப் பின்னரே’ ரெபெக்காளை மனைவியாக ஏற்றுக்கொண்டார். அந்த ஊழியர் நம்பகமானவராக இருந்தார், ஈசாக்கு வணங்கிய தேவனான யெகோவாவுக்குத் தன்னை அர்ப்பணித்தவராக இருந்தார். இவரை நம்புவதற்கு ஈசாக்கிற்கு நியாயமான காரணம் இருந்தது. அதன்பின், ஈசாக்கு தான் மணமுடித்த பெண் ரெபெக்காளை ‘நேசித்தார்.’
ஈசாக்கும் ரெபெக்காளும் நன்கு பேச்சுத்தொடர்பு கொள்ளும் திறமைகளை வளர்த்திருந்தார்களா? அவர்களுடைய மகன் ஏசா, ஏத்தின் மகள்கள் இருவரை விவாகம் செய்தபின், குடும்பத்தில் பெரும் பிரச்சினை எழுந்தது. ஈசாக்கிடம் ரெபெக்காள், “ஏத்தின் குமாரத்திகளினிமித்தம் என் உயிர் எனக்கு வெறுப்பாயிருக்கிறது; இந்தத் தேசத்துப் பெண்களாகிய ஏத்தின் குமாரத்திகளில் யாக்கோபு [அவர்களுடைய இளைய மகன்] ஒரு பெண்ணைக் கொள்வானானால் என் உயிர் இருந்து ஆவதென்ன”? என்று “சொல்லிக்கொண்டே இருந்தாள்.” (ஆதியாகமம் 26:34; 27:46; NW) அவள் தன் கவலையைப் பற்றி தெள்ளத் தெளிவாக பேசினாள் என்பது தெரிகிறது.
கானானிய பெண்களில் ஒருத்தியை மனைவியாக தேர்ந்தெடுக்க வேண்டாம் என்று தன்னுடைய இரட்டைக் குமாரர்களில் ஒருவரான யாக்கோபிடம் ஈசாக்கு கூறினார். (ஆதியாகமம் 28:1, 2) ரெபெக்காள் தனது கருத்தை தெளிவாகச் சொல்லியிருந்தாள். மிகவும் உணர்ச்சிப்பூர்வமான ஒரு குடும்ப விவகாரத்தை இந்தத் தம்பதியர் நன்கு கலந்து பேசியிருந்தார்கள். இதனால், இன்றைக்கு நமக்கும் சிறந்த உதாரணமாய் திகழ்கிறார்கள். ஆனால், துணைவர் ஒத்துப்போகவில்லையென்றால் என்ன செய்யலாம்?
கருத்துவேறுபாடு ஏற்படுகையில்
உங்களுக்கும் உங்களுடைய துணைக்கும் இடையே பயங்கர கருத்துவேறுபாடு ஏற்பட்டால், ஒருவருக்கொருவர் பேசாமல் இருந்துவிடாதீர்கள். உங்களுடைய மௌனம் என்ன சேதியை சொல்லும் தெரியுமா? ‘நான் சந்தோஷமாக இல்லை, அதனால் நீயும் சந்தோஷமாக இருக்கக்கூடாது’ என்பதைத்தான். நீங்கள் மௌனமாக இருந்துவிட்டால், உங்களுடைய ஆசைகளையும் உணர்ச்சிகளையும் உங்கள் துணையால் புரிந்துகொள்ள முடியாமலே போய்விடலாம்.
நீங்களும் உங்களுடைய துணையும் பிரச்சினைகளை மனம்விட்டு பேசித் தீர்ப்பது அவசியம். முக்கியமாக, ஒத்துப்போகாத விஷயத்தை கோபப்படாமல் பேசுவது கஷ்டம்தான், ஆனாலும் பேசுவது முக்கியம். ஈசாக்கின் பெற்றோரான ஆபிரகாமும் சாராளும் ஒரு சமயம் அப்படிப்பட்ட சிக்கலான ஒரு சூழ்நிலையை எதிர்ப்பட்டார்கள். சாராள் மலடியாக இருந்தாள்; அதனால் அக்காலத்து வழக்கப்படி, தனது வேலைக்காரியாகிய ஆகாரை தன்னுடைய கணவருக்கு மறுமனையாட்டியாக கொடுத்து, சந்ததியை உருவாக்கச் சொன்னாள். ஆபிரகாமுக்கு இஸ்மவேல் என்ற ஒரு பையனை ஆகார் பெற்றுக்கொடுத்தாள். என்றாலும், பிற்பாடு சாராளே கர்ப்பவதியாகி, ஈசாக்கு என்ற மகனை ஆபிரகாமுக்குப் பெற்றாள். ஈசாக்கு பால்மறக்கும் பருவத்தில், அவனை இஸ்மவேல் பரிகாசம் செய்வதை சாராள் கவனித்தாள். ஆகவே, தன்னுடைய மகனுக்கு வரப்போகும் ஆபத்தை உணர்ந்து, ஆகாரையும் இஸ்மவேலையும் அங்கிருந்து துரத்தி விடும்படி ஆபிரகாமைத் தூண்டினாள். ஆம், சாராள் தன் மனதில் இருந்ததை வெளிப்படையாக பேசினாள். இருந்தாலும் அவளுடைய வார்த்தைகளைக் கேட்டு ஆபிரகாம் மிகவும் வேதனை அடைந்தார்.
இந்தக் கருத்துவேறுபாடு எப்படித் தீர்க்கப்பட்டது? பைபிள் பதிவு இவ்வாறு பதில் அளிக்கிறது: “அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி: அந்தப் பிள்ளையையும், உன் அடிமைப் பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்க வேண்டாம்; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்; ஆதலால் சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள்” என்றார். யெகோவாவின் வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிந்து, அதன்படியே ஆபிரகாம் செய்தார்.—ஆதியாகமம் 16:1-4; 21:1-14.
‘அப்படியானால், கடவுள் நம்மிடம் பேசினால் நாமும் சுலபமாக ஒரு முடிவுக்கு வரலாம்!’ என்று நீங்கள் ஒருவேளை நினைக்கலாம். தாம்பத்திய பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் மற்றொரு முக்கிய வழியை இது நமக்குக் காட்டுகிறது. தம்பதியர் கடவுளுக்குச் செவிகொடுக்கலாம். எப்படி? கடவுளுடைய வார்த்தையை ஒன்றுசேர்ந்து படித்து, அதை அவரிடமிருந்து வரும் வழிநடத்துதலாக ஏற்றுக்கொள்வதன் மூலமே.—1 தெசலோனிக்கேயர் 2:13.
மணவாழ்வில் பலவருட அனுபவமிக்க கிறிஸ்தவ மனைவி ஒருவர் இவ்வாறு கூறினார்: “பல சந்தர்ப்பங்களில், திருமண ஆலோசனை பெற இளம் பெண்கள் என்னிடம் வரும்போது, ‘நீயும் உன்னுடைய கணவரும் ஒன்றுசேர்ந்து பைபிள் படிக்கிறீர்களா?’ என்று கேட்பேன். திருமணத்தில் பிரச்சினை இருக்கிற பெரும்பாலோருக்கு அந்தப் பழக்கமே இல்லை.” (தீத்து 2:3-5) அவருடைய குறிப்பிலிருந்து நாம் அனைவரும் நன்மை அடையலாம். உங்களுடைய துணையுடன் சேர்ந்து தவறாமல் பைபிள் படியுங்கள். அப்படிச் செய்வதன் மூலம் ஒவ்வொரு நாளும் எப்படி நடந்துகொள்வது என்பதைப் பற்றி கடவுளுடைய வார்த்தை சொல்வதை உங்கள் காதுகள் “கேட்கும்.” (ஏசாயா 30:21) ஆனால் ஓர் எச்சரிக்கை: உங்களுடைய துணை கடைப்பிடிக்கத் தவறுகிறார் என நீங்கள் நினைக்கிற வசனங்களை சதா சுட்டிக்காட்டுவதன் மூலம் உங்களுடைய துணையை தண்டிப்பதற்கு பைபிளை ஒரு தடியாக பயன்படுத்தாதீர்கள். மாறாக, நீங்கள் வாசிப்பதை எப்படி இருவருமே கடைப்பிடிக்கலாம் என்பதைக் காண முயலுங்கள்.
சிக்கலான ஒரு பிரச்சினையைத் தீர்க்க வேண்டியதாக இருந்தால், அந்த விஷயத்தைப் பற்றி உவாட்ச் டவர் பப்ளிகேஷன்ஸ் இன்டெக்ஸில் எடுத்துப் பாருங்கள்.a ஒருவேளை வயதான பெற்றோரை நீங்கள் கவனித்துக் கொண்டிருக்கலாம், அது உங்களுடைய மணவாழ்க்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்தியிருக்கலாம். உங்களுடைய துணை என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதைப் பற்றி வாக்குவாதம் செய்துகொண்டிருப்பதற்குப் பதிலாக, ஏன் ஒன்றுசேர்ந்து இன்டெக்ஸை எடுத்துப்பார்க்கக் கூடாது? முதலாவதாக, “பெற்றோர்” என்ற முக்கிய தலைப்பில் பாருங்கள். “வயதான பெற்றோரை கவனித்தல்” போன்ற உபதலைப்புகளைக்கூட எடுத்துப்பார்க்கலாம். யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்களிலிருந்து அது சம்பந்தமான கட்டுரைகளை ஒன்றுசேர்ந்து வாசியுங்கள். இதனால் நீங்கள் பெறும் நன்மைகள் உங்களை நிச்சயம் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். உண்மை கிறிஸ்தவர்கள் அநேகருக்கு அது உதவி செய்திருக்கிறது.
அங்கு சொல்லப்பட்டுள்ள கட்டுரைகளை வாசிக்கும்போது, பிரச்சினைகளை உங்களால் எதார்த்தமாய் பார்க்க முடியும். இவற்றைக் குறித்து கடவுளுடைய நோக்குநிலை என்ன என்பதை சுட்டிக்காட்டும் வேதவசனங்கள் உங்கள் கண்ணில்படும். அவற்றை பைபிளில் எடுத்துப் பாருங்கள், ஒன்றுசேர்ந்து வாசியுங்கள். அப்போது, உங்களுடைய பிரச்சினைக்கு கடவுள் கொடுக்கும் ஆலோசனைகளை நீங்கள் கேட்பீர்கள்!
எப்போதும் நல்ல பேச்சுத்தொடர்பு வைத்துக்கொள்ளுங்கள்
சில காலமாக பயன்படுத்தாதிருந்த ஒரு கதவைத் திறப்பதற்கு எப்போதாவது முயற்சி செய்திருக்கிறீர்களா? துருப்பிடித்த அதன் கீல்கள் முதலில் கீச்கீச்சென்று சத்தம் போடும், இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக திறந்துவிடும். ஆனால் அந்தக் கதவை எப்போதும் பயன்படுத்தினால்? அதன் கீல்களுக்கு எப்போதும் கிரீஸ் தடவினால்? அதைத் திறப்பது சுலபமாக இருக்கும், அல்லவா? பேச்சுத்தொடர்பு என்னும் கதவைப் பொறுத்ததிலும் இதுவே உண்மை. பேச்சுத்தொடர்பு கொள்வதை நீங்கள் பழக்கமாக்கிக் கொண்டால், பேச்சுத்தொடர்பு எனும் கதவின் கீல்களுக்கு கிறிஸ்தவ அன்பு எனும் கீரிஸ் தடவினால், உங்களுடைய எண்ணங்களை நீங்கள் அதிக சுலபமாய் எடுத்துச்சொல்ல முடியும்—உங்கள் மத்தியில் கருத்துவேறுபாடுகள் அதிகரிக்கும் சமயத்திலும்கூட.
இதை நீங்கள் எப்படியாவது ஆரம்பித்தாக வேண்டும். பேச்சுத்தொடர்பு கொள்வது ஆரம்பத்தில் அதிக கஷ்டமாக இருந்தாலும், அதற்காக முயற்சி செய்யுங்கள். கடைசியில் உங்களுடைய துணையுடன் நல்ல உறவை அனுபவித்து மகிழ்வீர்கள், ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொள்வீர்கள்.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 7-ன் படம்]
கருத்துவேறுபாடு வரும்போது, நீங்கள் கடவுளுடைய வழிநடத்துதலை நாடுகிறீர்களா?