சகாக்களின் சகவாசம்—சகாயமளிக்குமா?
நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்குப் பிரியமாக நடந்துகொள்ள வேண்டுமென்றே எல்லாரும் பொதுவாக விரும்புகிறோம். நாம் எவருமே வெறுப்பை சம்பாதித்துக்கொள்ள இஷ்டப்படுவதில்லை. மற்றவர்களால் ஒதுக்கப்படுவதையும் விரும்புவதில்லை. ஆகவே நம் சகாக்கள் நம்மீது பலவாறு செல்வாக்கு செலுத்துகிறார்கள்.
சகாக்கள் என்ற வார்த்தை, “சம நிலையிலுள்ளவர்களை, . . . அதே வயது, வகுப்பு அல்லது அந்தஸ்தில் உள்ளவர்களை” குறிக்கிறது. சகாக்களின் அழுத்தம் என்பது அவர்கள் நம் மீது செலுத்தும் செல்வாக்காகும். இந்தச் செல்வாக்கின் காரணமாக தெரிந்தோ தெரியாமலோ நம் சிந்தையும் செயலும் அவர்களுடையதைப் போல் மாறிவிடுகிறது. சகாக்களின் அழுத்தம் என்ற பதம் பொதுவாக கெட்ட கோணத்தில்தான் பயன்படுத்தப்படுகிறது. இருந்தாலும் சகாக்களின் செல்வாக்கால் சிறப்படையவும் முடியும். இதைத்தான் இப்போது பார்க்கவிருக்கிறோம்.
வயது வரம்பு இல்லை
சகாக்களின் செல்வாக்கால் பாதிக்கப்படுவது இளைஞர்கள் மட்டுமேயல்ல; எல்லா வயதினரும்தான். “மத்தவங்க எல்லாரும் செய்றாங்க, நான் மட்டும் செய்யக்கூடாதா?” “நான் மட்டும் ஏன் விநோதமா நடந்துக்கணும்?” “மத்தவங்க என்ன நெனப்பாங்க (சொல்வாங்க)?” “எல்லாரும் பாய்/கேர்ல் ஃப்ரண்ட்ஸ் வச்சுக்கறாங்க, கல்யாணமும் செஞ்சுக்கறாங்க. எங்கிட்டதான் ஏதோ குறையோ?” இப்படிப்பட்ட கேள்விகள் உங்களுக்குள் உதிக்கிறதென்றால் நீங்களும் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்றே அர்த்தம்.
எல்லா வயதினருமே அழுத்தத்தை சந்திக்க வேண்டியிருக்கலாம் என்றாலும் பருவ வயதினருக்குத்தான் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. உவர்ல்டு புக் என்ஸைக்ளோப்பீடியா இப்படிச் சொல்கிறது: “பெரும்பாலான இளைஞர்கள் அவர்களது வட்டத்தினரோடு, அதாவது நண்பர்களோடும் தெரிந்தவர்களோடும் மிகவும் நெருக்கமாகிவிடுகிறார்கள். தாய் தந்தையிடம் அல்ல, ஆனால் இந்த வட்டத்தினரிடமே நல்ல பெயர் எடுக்க இளைஞர்கள் ஆசைப்படுகிறார்கள். இதற்காக தங்களையேகூட மாற்றிக்கொள்ள இவர்கள் தயார்! நண்பர்கள் தங்களை விரும்பி அவர்களோடு சேர்த்துக்கொள்ளும்போது மட்டுமே, தங்களிடம் எந்தக் குறையும் இல்லை என எண்ணி திருப்தியடைகிறார்கள். ஆகவே நண்பர்களின் பிரியத்தைச் சம்பாதித்துக்கொள்ள, தங்கள் உடையைப் பற்றியும் லீடராய் இருப்பதற்கான திறமையைப் பற்றியும் பாய்/கேர்ல் ஃப்ரண்ட்ஸ் வைத்துக்கொள்வதைப் பற்றியும் சதா நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.”
இப்போது திருமணமானவர்கள் விஷயத்திற்கு வருவோமா. எந்த மாதிரி வீடு வாங்குவது அல்லது எந்த மாதிரி வீட்டை வாடகைக்கு எடுப்பது, எந்த மாடல் கார் வைத்துக்கொள்வது, குழந்தைகள் பெற்றுக்கொள்வதா வேண்டாமா: இப்படி பல விஷயங்களில், சகாக்களை மனதில் கொண்டே அவர்கள் முடிவெடுக்கிறார்கள். தங்கள் சமூகத்தினருக்கு, இனத்தவருக்கு அல்லது கூட்டாளிகளுக்கு எது பிரியமோ அதையே செய்கிறார்கள். சிலர், அக்கம்பக்கத்தினர் அல்லது நண்பர்களின் ஸ்டேட்டஸை எப்படியாவது அடைய வேண்டுமென, எக்கச்சக்கமாய் கடன் வாங்குகிறார்கள். ஆம், நம் லட்சியங்கள், சிந்தனைகள், தீர்மானங்கள் ஆகிய அனைத்தும், சகாக்கள் மறைமுகமாக நம்மீது செலுத்தும் செல்வாக்கிற்கு அத்தாட்சி. இந்த செல்வாக்கு அந்தளவு சக்திமிக்கது என்பதால், அதிலிருந்து சகாயமடைய முடியுமா? நாம் விரும்பும்படி நல்ல வழியில் செல்வதற்கு இந்தச் செல்வாக்கை சாதகமாக்கிக்கொள்ள முடியுமா? நிச்சயமாக முடியும்!
நல்ல சகவாசத்தால் நன்மை
நோயாளிகள் பக்கத்தில் உற்சாகமூட்டும் நபர்கள் இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை டாக்டர்களும் மற்ற உடல்நல வல்லுநர்களும் அறிந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையும்கூட நோயாளி சீக்கிரம் சுகமடைய உதவும். உதாரணத்திற்கு, ஊனமுற்ற ஒருவர், மீண்டும் குணமடைந்து இயல்பான மனநிலையைப் பெற வெகு காலம் உதவி அளிக்கப்படுகிறது. அவரைப் போலவே ஊனமுற்ற மற்றவர்களின் நல்ல முன்மாதிரியும் உற்சாகமுமே இவருக்கு உதவுகிறது. ஆகவே, நல்ல சூழ்நிலையில், நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாய் திகழுவோர் மத்தியில் இருப்பது, சகவாசத்தின் செல்வாக்கிலிருந்து நன்மையடைவதற்கான ஒரு வழியாகும்.
கிறிஸ்தவ சபையைப் பொறுத்தவரையிலும் இதுவே உண்மை. ஏனெனில் ஒன்றாக கூடிவரும்படி யெகோவா கட்டளையிட்டிருப்பதற்கான ஒரு காரணம், நல்ல சகவாசத்தால் நன்மையடையவே. ‘ஒருவரையொருவர் அன்புக்கும் நற்கிரியைக்கும் தூண்டி, உற்சாகப்படுத்துமாறு’ கடவுள் நமக்கு அறிவுறுத்துகிறார். (எபிரெயர் 10:24, 25, NW) இன்றைய உலகில் அநேக அழுத்தங்களையும் சோதனைகளையும் சந்திக்க வேண்டியிருப்பதால் இப்படிப்பட்ட உற்சாகம் மிக அவசியம். இத்தகைய அழுத்தங்களால், கிறிஸ்தவர்கள் தொடர்ந்து ஆவிக்குரிய பலமுடன் இருக்க ‘மும்முரமாக பிரயாசப்பட’ வேண்டும். (லூக்கா 13:24, NW) ஆகவே உடன் வணக்கத்தாரின் அன்பான ஆதரவு நமக்குத் தேவை, அதை நாம் போற்றுகிறோம். சிலருக்கு “மாம்சத்திலே ஒரு முள்” இருக்கலாம். அதாவது ஏதோ வியாதியோ ஊனமோ இருக்கலாம். (2 கொரிந்தியர் 12:7) இன்னும் சிலர், கெட்ட பழக்கங்களையோ சோர்வையோ விட்டொழிக்க போராடிக்கொண்டு இருக்கலாம். அல்லது வாழ்க்கையின் சவால்களை சமாளிக்க கஷ்டப்படலாம். ஆகவே யெகோவா தேவனோடு நெருக்கமாயிருப்பவர்களோடும் அவரை விரும்பி சேவிப்பவர்களோடும் நட்புகொள்வதே ஞானமானது. இப்படிப்பட்ட கூட்டாளிகளால் நாம் உற்சாகமடைந்து, ‘முடிவு பரியந்தம் உண்மையோடு சகித்திருப்போம்.’—மத்தேயு 24:13.
சரியான நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதால், அவர்கள் நம்மீது செலுத்தும் செல்வாக்கைக் கட்டுப்படுத்தலாம். அதுமட்டுமல்ல, கிறிஸ்தவ கூட்டங்களில் தோழர்களிடமிருந்து உற்சாகத்தைப் பெறுவதோடு, அருமையான ஆவிக்குரிய உணவையும் நடைமுறையான வழிகாட்டுதலையும் பெறுகிறோம். இது மேலும் நம்மை பலப்படுத்துகிறது.
கிறிஸ்தவ கூட்டங்களுக்குச் செல்வது எப்போதுமே எளிதல்லதான். சிலருக்கு துணைவரின் உதவியோ ஆதரவோ இல்லாமல் இருக்கலாம். இன்னும் சிலருக்கு பிள்ளைகளை தயார்செய்து அழைத்துவர வேண்டியிருக்கலாம். மற்றவர்களுக்கு போக்குவரத்து ஒரு பிரச்சினையாக இருக்கலாம். ஆனால் இதை மறந்துவிடாதீர்கள்: இந்தத் தடைகளையெல்லாம் மேற்கொண்டுவிட்டால், உங்கள் சூழ்நிலையில் உள்ள மற்றவர்களுக்கு நீங்கள் உற்சாகத்தின் ஊற்றுமூலமாக இருப்பீர்கள். வேறு வார்த்தைகளில், நீங்களும் உங்களைப் போன்றவர்களும் நல்ல எடுத்துக்காட்டாக இருப்பதோடு, மற்றவர்கள்மீது நல்ல விதமான செல்வாக்கு செலுத்துவீர்கள்—எந்த விதத்திலும் மற்றவர்களை நிர்ப்பந்திக்கமாட்டீர்கள்.
அப்போஸ்தலனாகிய பவுலும் அநேக கஷ்டங்களையும் தடைகளையும் எதிர்ப்பட்டார். தன் முன்மாதிரியையும் முதிர்ச்சிவாய்ந்த மற்ற கிறிஸ்தவர்களின் முன்மாதிரியையும் பின்பற்றும்படி அவர் கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்தினார். அவர் சொன்னதாவது: “சகோதர சகோதரிகளே, நீங்கள் அனைவரும் என்னைப்போல் வாழுங்கள், நாங்கள் உங்களுக்குக் காட்டிய முன்மாதிரியின்படி வாழ்பவர்களைப் பின்பற்றுங்கள்.” (பிலிப்பியர் 3:17; 4:9; பொ.மொ.) தெசலோனிக்காவிலிருந்த கிறிஸ்தவர்கள் பவுலை பின்பற்றினர். இவர்களைப் பற்றி பவுல் எழுதினார்: “நீங்கள் மிகுந்த உபத்திரவத்திலே, பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தோடே, திருவசனத்தை ஏற்றுக்கொண்டு, எங்களையும் கர்த்தரையும் பின்பற்றுகிறவர்களாகி, இவ்விதமாய் மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள விசுவாசிகள் யாவருக்கும் மாதிரிகளானீர்கள்.” (1 தெசலோனிக்கேயர் 1:6, 7) நமது நம்பிக்கையான மனநிலையும் முன்மாதிரியும்கூட, நம்மோடு கூட்டுறவுகொள்பவர்கள்மீது அதேவிதமான பாதிப்பை ஏற்படுத்தலாம்.
வேண்டவே வேண்டாம் கெட்ட சகவாசம்
கெட்ட சகவாசத்தைத் தவிர்க்க வேண்டுமென்றால், ‘மாம்சத்தின்படி நடக்கிறவர்களோடு’ கூட்டு சேராமல் இருக்க வேண்டும். (ரோமர் 8:4, 5; 1 யோவான் 2:15-17) இல்லையென்றால் கெட்ட செல்வாக்கினால் நாம் யெகோவாவையும் அவரது ஞானமான ஆலோசனையையும் விட்டு விலகிவிடுவோம். நீதிமொழிகள் 13:20 இப்படிச் சொல்கிறது: “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.” கெட்ட சகவாசத்தால் வாழ்க்கையை சீரழித்துக்கொண்ட எவரையாவது உங்களுக்குத் தெரியுமா? உதாரணத்திற்கு, சில கிறிஸ்தவர்கள் தவறான கூட்டுறவால் பொருளாசை, ஒழுக்கக்கேடு, போதைப்பொருள் மற்றும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாதல் ஆகியவற்றில் சிக்கியிருக்கின்றனர்.
கிறிஸ்தவ சபைக்குள்ளேயும், ஆகாத சகவாசத்தின் ஆபத்து உண்டு. ஆவிக்குரிய விதத்தில் பலவீனமாய் இருப்பவர்களோடு நெருக்கமான தோழமை கொண்டால் இந்த ஆபத்தில் சிக்கிக்கொள்வோம். (1 கொரிந்தியர் 15:33; 2 தெசலோனிக்கேயர் 3:14) இப்படிப்பட்டவர்களுக்கு, ஆவிக்குரிய விஷயங்களைப் பற்றி பேச பிடிக்காது; அப்படிப் பேசுபவர்களையும் கேலி செய்வார்கள். இவர்களோடு நெருக்கமாக பழகினால் நாமும் இவர்களைப் போலவே மாறிவிடுவோம். கொஞ்ச காலத்திற்குள் நம் சிந்தனையும் மனப்பான்மையும் அப்படியே அவர்களுடையதைப் போல மாறிவிடும். உண்மையான விசுவாசத்தோடு ஆவிக்குரிய முன்னேற்றம் செய்ய முயலுபவர்களை தாழ்வாக கருதவும் ஆரம்பிப்போம்.—1 தீமோத்தேயு 4:15.
யெகோவாவைப் பிரியப்படுத்த முயலுபவர்களை, ஆவிக்குரிய விஷயங்களை மகிழ்ந்து அனுபவிப்பவர்களை நண்பர்களாகக் கொண்டிருப்பது எவ்வளவு ஞானமானது! ‘பரத்திலிருந்து வருகிற ஞானத்தை’ காட்ட இப்படிப்பட்ட கூட்டாளிகள் நமக்கு உதவுவார்கள். இந்த ஞானம், ‘முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், . . . மாயமற்றதாயுமிருக்கிறது.’ (யாக்கோபு 3:17) அதற்காக, ஆவிக்குரிய முதிர்ச்சியுள்ள நபர்கள் ஆவிக்குரிய விஷயங்களைத் தவிர வேறு எதையுமே பேச மாட்டார்கள் என்று அர்த்தமல்ல. விழித்தெழு! பத்திரிகை போன்ற உவாட்ச் டவர் பிரசுரங்களில் வெளியாகும் பலதரப்பட்ட சுவாரஸ்யமான கட்டுரைகளை எடுத்துக்கொள்ளுங்கள். பேசுவதற்கு எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. உயிரையும் யெகோவாவின் கைவண்ணத்தையும் நேசிக்கிறோம் என்பதற்கு அடையாளமாக இப்படிப்பட்ட பலதரப்பட்ட கட்டுரைகளில் ஆர்வம் காண்பிக்கலாம்.
ஒரு நல்ல டென்னிஸ் வீரர் மற்ற திறமையான டென்னிஸ் வீரர்களோடு விளையாடி தன் திறமைகளை வளர்த்துக்கொள்கிறார். அதே விதமாய் சரியான சகவாசத்தால் நம் மனமும், உணர்ச்சியும் தட்டியெழுப்பப்படும். ஆவிக்குரிய உற்சாகமும் கிடைக்கும். மறுபட்சத்தில், கெட்ட நண்பர்கள், மாய்மாலமான வாழ்க்கை வாழ நம்மை வழிநடத்துவார்கள். சுத்தமான மனசாட்சியோடும் சுய கௌரவத்தோடும் சந்தோஷமாய் வாழ்வது எவ்வளவு மேல்!
நன்மை கண்ட சிலர்
பைபிள் போதனைகளையும் அதன் ஒழுக்க மற்றும் ஆன்மீக தேவைகளையும் கற்றுக்கொள்வது என்னவோ சிலருக்கு எளிதாக தெரியலாம். ஆனால் கற்றவற்றைக் கடைப்பிடிப்பதே கஷ்டம். நல்ல சகவாசத்தால் யெகோவாவை முழு இருதயத்தோடு சேவிக்க முடியும் என்பதை பின்வரும் உதாரணங்கள் காட்டுகின்றன.
தன் மனைவியோடு முழு நேர ஊழியம் செய்யும் ஒரு சாட்சியை எடுத்துக்கொள்ளலாம். தன் நண்பர்களால் தன் வாழ்க்கையின் லட்சியங்களே மாறின என அவர் சொல்கிறார். சிறு வயதிலிருந்தே அவரைச் சுற்றி கெட்ட சகவாசம்தான். ஆனால் ஊழியத்திலும் கிறிஸ்தவ கூட்டங்களிலும் தவறாமல் கலந்துகொள்ள தன்னை உற்சாகப்படுத்தியவர்களையே அவர் தன் நண்பர்களாக தேர்ந்தெடுத்தார். இவர்களோடேயே தொடர்ந்து பழகியதால் அவரால் ஆவிக்குரிய முதிர்ச்சியடைய முடிந்தது.
மற்றொரு சாட்சி எழுதுகிறார்: “கல்யாணமான பிறகு நானும் என் மனைவியும் வேறொரு சபைக்குச் சென்றோம். அங்கே ஒரு தம்பதியினர் ஒழுங்கான பயனியர் ஊழியம் செய்துவந்தனர். அவர்களுக்கும் எங்கள் வயதேதான். அவர்களது முன்மாதிரியால் நாங்களும் முழுநேர ஊழியம் செய்ய ஆரம்பித்தோம். பின்பு சபையிலுள்ள மற்றவர்களை பயனியர் செய்யும்படி நாங்களும் உற்சாகப்படுத்தினோம். இதனால் அநேகர் எங்களோடு பயனியர் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.”
தேவராஜ்ய இலக்குகள் கொண்டவர்களோடு நட்பு கொள்வது யெகோவாவிற்குக் கீழ்ப்படிவதை சுலபமாக்கும். நல்ல சகவாசத்தின் இன்னொரு நன்மை இது. இளைஞனாக முழு நேர ஊழியம் செய்ய ஆரம்பித்து பின்பு பயணக் கண்காணியானார் ஒரு சகோதரர். இப்போது அவர் உவாட்ச் டவர் சங்கத்தின் கிளைக்காரியாலயம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அவர் கூறுகிறார்: “என்னுடைய சிறுவயது நினைவுகளில் நீங்காமல் நிற்கும் ஒன்று, முழுநேர ஊழியர்கள் எங்கள் வீட்டிற்கு வந்துபோனது. நினைக்க நினைக்க தெவிட்டாதவை அவை. விருந்தாளிகளுக்கு எப்போதுமே எங்கள் வீடு திறந்திருந்தது. எனக்கு பத்து வயதாய் இருக்கும்போது, ஒரு வட்டாரக் கண்காணி எனக்கு ஊழியப் பையை அன்பளிப்பாக கொடுத்தார். இப்போதுகூட அந்த பைமீது எனக்கு தனி பிரியம்.”
தனது இளைமைக் காலத்தைப் பற்றியும் அவர் இப்படிச் சொல்கிறார்: “எங்கள் சபையில் அநேக இளைஞர்கள் சபை வேலைகளைச் செய்ய ஆவலாய் இருந்தனர். அவர்களது உற்சாகம் எங்களையும் தொற்றிக்கொண்டது.” தளிராய் இருந்த இந்த இளைஞன், ஓங்கிய மரம்போன்ற கிறிஸ்தவனாக வளருவதற்கு நல்ல நண்பர்கள் உதவிபுரிந்தனர். பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளை உற்சாகப்படுத்தும், நல்ல முன்மாதிரியுள்ள நண்பர்களை வீட்டிற்கு அழைக்கிறீர்களா?—மல்கியா 3:16.
மேற்குறிப்பிடப்பட்ட நபர்களைப் போல் அனைவருமே முழுநேர ஊழியம் செய்ய முடியாது என்பது உண்மைதான். ஆனால் அனைவரும் யெகோவாவை ‘முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் முழு மனதோடும்’ அன்புகூர கற்றுக்கொள்ளலாம். (மத்தேயு 22:37) இப்படிப்பட்ட அன்பை வளர்த்துக்கொள்வதில் பெரும் பங்கு வகிப்பது, நாம் தெரிவுசெய்யும் சகாக்கள் வட்டம். நித்திய ஜீவனுக்கான நம் எதிர்பார்ப்பும் இதையே சார்ந்திருக்கிறது.
வாழ்க்கையில் உண்மையான வெற்றிபெற மிகச் சிறந்த, எளிய வழியை சங்கீதக்காரன் சொன்னார்: “துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும் [“வெற்றிபெறும்,” NW].”—சங்கீதம் 1:1-3.
என்னே அருமையான உத்தரவாதம்! நாம் அபூரணர்கள், தவறு செய்பவர்கள் என்பது உண்மையே. இருந்தாலும், யெகோவா நம்மை வழிநடத்த அனுமதித்து; அவர் தந்திருக்கும் நல்ல சகவாசத்தின்—‘உலகெங்கிலுமுள்ள நம் சகோதர சகோதரிகளின்’—கூட்டுறவை நன்மைக்கேதுவாக முடிந்தளவு பயன்படுத்தினோம் என்றால் வாழ்க்கையில் வெற்றிபெறுவோம்.—1 பேதுரு 5:9, பொ.மொ.
[பக்கம் 24-ன் படம்]
நல்ல கூட்டுறவிற்கு சிறந்த இடம், கிறிஸ்தவ சபை
[பக்கம் 25-ன் படம்]
பெற்றோரே, நல்ல நண்பர்களோடு பழகும்படி பிள்ளைகளை உற்சாகப்படுத்துங்கள்