இளைஞர்களே—சகாக்களின் தொல்லையை எதிர்த்து நில்லுங்கள்
‘உங்கள் பேச்சு எப்போதும் . . . சுவையாக இருக்க வேண்டும்; அப்போதுதான், ஒவ்வொருவருக்கும் எப்படிப் பதில் அளிக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.’—கொலோ. 4:6.
1, 2. மற்றவர்களிலிருந்து வித்தியாசமாக இருப்பதைக் குறித்து அநேக இளைஞர்கள் எப்படி உணருகிறார்கள், ஏன்?
“சகாக்களின் தொல்லை.” இதைப் பற்றி நீங்கள் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கலாம், சொல்லப்போனால் நீங்களே அந்தத் தொல்லைக்கு ஆளாகியிருக்கலாம். ஏதாவது ஒரு சமயத்தில், தவறு என்று உங்களுக்கு நன்றாகத் தெரிந்த ஒரு காரியத்தைச் செய்யும்படி யாராவது உங்களைக் கட்டாயப்படுத்தலாம். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? 14 வயது கிறிஸ்டோஃபர் இவ்வாறு சொல்கிறான்: “சில நேரத்தில் அங்கிருந்து ஓடிப் போய்விட்டால் நன்றாக இருக்குமே என்று தோன்றும். இல்லையென்றால், கூட படிக்கிற மற்ற பையன்கள் மாதிரி நானும் இருந்துவிட வேண்டும்; அப்போது என்னை யாரும் வினோதமாகப் பார்க்க மாட்டார்கள்.”
2 சகாக்கள் உங்கள்மீது ரொம்பவே செல்வாக்கு செலுத்துகிறார்களா? ஏன்? நீங்கள் அவர்களுடைய நட்பை நாட விரும்புவதாலா? அப்படி நீங்கள் விரும்புவதில் தவறொன்றும் இல்லை. சொல்லப்போனால், பெரியவர்கள்கூட தங்கள் சகாக்களோடு இருக்கவே விரும்புகிறார்கள். பெரியவர்களோ சிறியவர்களோ யாராக இருந்தாலும் சரி, மற்றவர்கள் தங்களை ஒதுக்குவதை விரும்ப மாட்டார்கள். உண்மையில், சரியானதைச் செய்யும்போது எல்லாச் சமயத்திலும் மற்றவர்கள் நம்மைப் புகழ்ந்து பாராட்ட மாட்டார்கள். இயேசுவும்கூட இப்படிப்பட்ட சூழ்நிலையை எதிர்ப்பட்டார். இருந்தாலும், அவர் எப்போதும் சரியானதையே செய்தார். சிலர் அவரைப் பின்பற்றி அவருடைய சீடரானார்கள், மற்றவர்களோ அவரை இகழ்ந்தார்கள், ‘மதிக்காமலும்’ போனார்கள்.—ஏசா. 53:3, பொது மொழிபெயர்ப்பு.
சகாக்களின் தொல்லை—எந்தளவு சக்தி வாய்ந்தது?
3. உங்கள் சகாக்களின் விருப்பத்திற்கு இணங்கிப்போவது ஏன் தவறு?
3 சில சமயங்களில், சகாக்கள் உங்களை ஒதுக்கிவிடக் கூடாது என்பதற்காக அவர்களோடு ஒத்துப்போக ஆசைப்படலாம். ஆனால் அது தவறு. கிறிஸ்தவர்கள் ‘அலைகளினால் அலைக்கழிக்கப்படுகிற குழந்தைகள்’ போல இருக்கக் கூடாது. (எபே. 4:14) சிறு பிள்ளைகள் சுலபமாக மற்றவர்களுக்கு இணங்கிவிடுவார்கள். ஆனால், இளைஞர்களாகிய நீங்கள் பெரியவர்களாக வளர்ந்துவருகிறீர்கள். ஆகவே, யெகோவாவின் நெறிகள் உங்களுக்கு நன்மையைத் தரும் என நீங்கள் உண்மையிலேயே நம்பினால் அதன்படி நடக்கக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். (உபா. 10:12, 13) இல்லையென்றால், மற்றவர்கள் உங்களை ஆட்டிப்படைக்க அனுமதிப்பது போல் இருக்கும். ஆம், மற்றவர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கிவிடும்போது நீங்கள் அவர்களுடைய கைப்பாவை ஆகிவிடுகிறீர்கள்.—2 பேதுரு 2:19-ஐ வாசியுங்கள்.
4, 5. (அ) ஆரோன் எப்படிச் சகாக்களின் தொல்லைக்கு இணங்கிப்போனார், அதிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்? (ஆ) உங்களை இணங்க வைப்பதற்குச் சகாக்கள் என்னென்ன முறைகளைப் பயன்படுத்தலாம்?
4 ஒரு சமயத்தில் மோசேயின் அண்ணன் ஆரோனும்கூட சகாக்களின் தொல்லைக்கு இணங்கிவிட்டார். இஸ்ரவேலர் தங்களுக்கு ஒரு கடவுளை உண்டாக்கும்படி வற்புறுத்தியபோது அவர்களுக்குச் செய்துகொடுத்தார். ஆரோன் ஒன்றும் கோழையில்லை. முன்பு ஒரு சமயம் மோசேக்கு ஆதரவாக இருந்து எகிப்தை ஆண்ட பார்வோனையே நேருக்கு நேர் சந்தித்துப் பேசினார். அப்போது, ஆரோன் தைரியமாகக் கடவுளுடைய செய்தியை அவருக்குச் சொன்னார். ஆனால், சக இஸ்ரவேலர் வற்புறுத்தியபோது இணங்கிவிட்டார். சகாக்களின் தொல்லைக்கு இருக்கும் சக்தியைப் பார்த்தீர்களா? பார்வோனைத் தைரியமாக எதிர்த்து நிற்க முடிந்த ஆரோனால் சகாக்களின் தொல்லையை எதிர்த்து நிற்க முடியவில்லை.—யாத். 7:1, 2; 32:1-4.
5 இளைஞர்களோ தவறு செய்யத் தயங்காதவர்களோ மட்டுமே சகாக்களின் தொல்லையை எதிர்ப்படுவதில்லை என்பதை ஆரோனின் உதாரணம் காட்டுகிறது. சரியானதைச் செய்ய மனதார விரும்புகிறவர்களும் சகாக்களின் தொல்லைக்கு ஆளாகலாம், நீங்களும் அதற்கு விதிவிலக்கல்ல. சகாக்கள் உங்களைத் தப்புத்தண்டா செய்ய வைப்பதற்காக மிரட்டலாம், பழித்துப் பேசலாம், கேலி செய்யலாம். இப்படி எந்த வழிகளைக் கையாண்டாலும் சரி, சகாக்களின் தொல்லையைச் சமாளிப்பது கஷ்டமே. ஆனால், அதை வெற்றிகரமாகச் சமாளிக்க முதலாவது உங்கள் மதக் கொள்கையில் உறுதியாய் இருப்பது அவசியம்.
“உங்களை நீங்களே எப்போதும் ஆராய்ந்து பாருங்கள்”
6, 7. (அ) உங்கள் கொள்கைகளில் திட நம்பிக்கையுடன் இருப்பது ஏன் முக்கியம், அதை நீங்கள் எப்படி வளர்த்துக்கொள்ளலாம்? (ஆ) உங்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்திக்கொள்ள என்னென்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்?
6 சகாக்களின் தொல்லையைச் சமாளிப்பதற்கு முதலில் உங்களுடைய மதக் கொள்கைகளும் நெறிகளும் சரியானவையே என்பதில் நீங்கள் திட நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். (2 கொரிந்தியர் 13:5-ஐ வாசியுங்கள்.) நீங்கள் பயந்த சுபாவம் உள்ளவர்களாக இருந்தாலும் தைரியமாக இருக்க அந்தத் திட நம்பிக்கை உங்களுக்கு உதவும். (2 தீ. 1:7, 8) ஒருவேளை நீங்கள் தைரியசாலியாக இருந்தால்கூட உங்களுடைய மதக் கொள்கைமீது அரைகுறை நம்பிக்கை வைத்திருந்தால் எதிர்த்து நிற்பது கஷ்டம்தான். எனவே, பைபிளிலிருந்து உங்களுக்குக் கற்பிக்கப்பட்ட விஷயங்கள் உண்மையிலேயே சத்தியம்தானா என ஏன் ஆராய்ந்து பார்க்கக்கூடாது? முதலில் அடிப்படை போதனைகளை ஆராய்ந்து பாருங்கள். உதாரணமாக, உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறது, அதோடு கடவுள் ஒருவர் இருக்கிறார் என நம்புவதற்கான காரணத்தை மற்றவர்கள் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அப்படியென்றால், ‘கடவுள் ஒருவர் இருக்கிறார் என நான் ஏன் நம்புகிறேன்?’ என்று கேட்டுக்கொள்ளுங்கள். இப்படிக் கேட்டுக்கொள்வதன் நோக்கம், சந்தேகத்தை எழுப்புவதற்கு அல்ல, உங்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்கே. அதேபோல, இந்தக் கேள்விகளையும் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘பைபிள் கடவுளுடைய சக்தியினால் அருளப்பட்டது என்று எனக்கு எப்படித் தெரியும்?’ (2 தீ. 3:16) ‘இது “கடைசி நாட்கள்” என்று நான் ஏன் நம்புகிறேன்?’ (2 தீ. 3:1-5) ‘யெகோவாவின் சட்டதிட்டங்கள் என்னுடைய நன்மைக்கே என்று எதன் அடிப்படையில் நம்புகிறேன்?’—ஏசா. 48:17, 18.
7 இதற்கெல்லாம் பதில் தெரியாதே என நினைத்து இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ள நீங்கள் ஒருவேளை தயங்கலாம். இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: ஏதோவொரு நோய் இருக்கிறதென டாக்டர் சொல்லிவிடுவாரோ என்று பயந்து மருத்துவப் பரிசோதனையே செய்துகொள்ளாமல் இருப்பது சரியா? பரிசோதனை செய்துகொண்டால்தான் உங்களுக்கு என்ன குறை இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து அதை சரிசெய்துகொள்ள முடியும். அதேபோல பைபிளில் உள்ள எந்த விஷயத்தை நம்புவது உங்களுக்குக் கடினமாக இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து அதை உறுதிசெய்து கொள்வதுதானே நல்லது?—அப். 17:11.
8. “பாலியல் முறைகேட்டிலிருந்து விலகியோடுங்கள்” என்ற கட்டளைக்குக் கீழ்ப்படிவதே ஞானமானது என எப்படி உறுதியாக நம்பலாம்? விளக்குங்கள்.
8 உதாரணமாக, “பாலியல் முறைகேட்டிலிருந்து விலகியோடுங்கள்” என்று பைபிள் அறிவுறுத்துகிறது. நீங்கள் இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிவது ஏன் ஞானமானது?’ உங்கள் சகாக்கள் அந்தப் பழக்கத்தில் ஈடுபடுவதற்கான காரணத்தை யோசித்துப் பாருங்கள். பாலியல் முறைகேட்டில் ஈடுபடுகிற ஒருவன் “தன் உடலுக்கு எதிராகவே பாவம் செய்கிறான்” என்று ஏன் சொல்லலாம் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள். (1 கொ. 6:18) இப்போது காரணங்களை அலசிப் பார்த்து, இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘எது மிகச் சிறந்த வழி? பாலியல் முறைகேட்டில் ஈடுபடுவதால் ஏதாவது பிரயோஜனம் இருக்கிறதா?’ இதைக் குறித்து இன்னும் கூடுதலாக யோசிக்க பின்வருமாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டிருந்தால் நான் எப்படி உணருவேன்?’ ஒருவேளை அப்போதைக்கு உங்கள் சகாக்களின் பிரியத்தைச் சம்பாதிக்கலாம்; ஆனால், பிற்பாடு உங்கள் பெற்றோருடனோ ராஜ்ய மன்றத்தில் சக கிறிஸ்தவர்களுடனோ இருக்கும்போது எப்படி உணருவீர்கள்? கடவுளிடம் ஜெபிக்க உங்களுக்கு மனம் வருமா? சக மாணவர்களைப் பிரியப்படுத்துவதற்காகக் கடவுளோடுள்ள நல்லுறவை விட்டுக்கொடுக்க துணிந்துவிடுவீர்களா?
9, 10. உங்களுடைய கொள்கைகள் மீதுள்ள திட நம்பிக்கை சகாக்கள் மத்தியில் உறுதியாயிருக்க எப்படி உதவும்?
9 நீங்கள் ஓர் இளைஞராக இருப்பதால், “சிந்திக்கும் திறனை” வளர்த்துக்கொள்ள இதுவே சரியான காலம். (ரோமர் 12:1, 2-ஐ வாசியுங்கள்.) எனவே, ஒரு யெகோவாவின் சாட்சியாய் இருப்பது ஏன் அந்தளவு முக்கியம் என்பதைக் கவனமாகச் சிந்தித்துப் பார்க்க இந்தக் காலத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். அப்படிச் சிந்தித்துப் பார்க்கும்போது உங்களுடைய மதக் கொள்கைகள் மீதுள்ள நம்பிக்கை பலப்படும். அப்போது, சகாக்களுக்கு உடனடியாகவும் உறுதியாகவும் பதிலளிக்க முடியும். பின்வருமாறு சொன்ன ஓர் இளம் சகோதரியைப் போல நீங்களும் உணருவீர்கள்: “சகாக்கள் தொல்லை கொடுக்கும்போது முதலில் நான் யாரென்று அவர்களிடம் நேரடியாகச் சொல்லிவிடுகிறேன். என் மதம் எனக்கு ரொம்ப முக்கியம். என் சிந்தனை, லட்சியம், ஒழுக்க நெறி, ஏன் என்னுடைய முழு வாழ்க்கையுமே இதை மையமாக வைத்துத்தான் இருக்கிறது.”
10 ஆம், சரியானதைச் செய்வதில் உறுதியாய் இருப்பதற்கு முயற்சி தேவை. (லூக். 13:24) இதனால் ஏதாவது பிரயோஜனம் உண்டா என நீங்கள் யோசிக்கலாம். இதை மனதில் வையுங்கள்: சரியானதைச் செய்ய நீங்கள் தயங்குவதையோ அதை அவமானமாகக் கருதுவதையோ மற்றவர்கள் புரிந்துகொண்டால் இன்னும் அதிக தொல்லை கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால், நீங்கள் ஆணித்தரமாய்ப் பேசும்போது, சகாக்கள் உங்களுக்குத் தொல்லை கொடுப்பதை நிறுத்திவிடுவதைப் பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.—லூக்கா 4:12, 13-ஐ ஒப்பிடுங்கள்.
பதில் சொல்லும்முன் யோசியுங்கள்
11. சகாக்களின் தொல்லையைச் சமாளிக்க முன்கூட்டியே தயாராய் இருப்பதால் என்ன பயன்?
11 சகாக்களின் தொல்லையை எதிர்த்து நிற்க இன்னொரு முக்கிய வழி தயாராய் இருப்பது. (நீதிமொழிகள் 15:28-ஐ வாசியுங்கள்.) அப்படியென்றால், என்ன பிரச்சினை வரலாம் என முன்கூட்டியே யோசிக்க வேண்டும். சில நேரங்களில் முன்கூட்டியே தயாராய் இருப்பது பெரிய பிரச்சினையைச் சமாளிக்க உங்களுக்கு உதவும். உதாரணமாக, உங்கள் பள்ளியில் மாணவர்கள் சிலர் கொஞ்ச தூரத்தில் கும்பலாக நின்று புகைபிடிப்பதை நீங்கள் பார்ப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அங்கே சென்றால், அவர்கள் உங்கள் கையிலும் ஒரு சிகரெட்டைக் கொடுத்துக் குடிக்கச் சொல்வார்கள், அல்லவா? இதைத் தவிர்ப்பதற்கு என்ன செய்வீர்கள்? “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்” என்று நீதிமொழிகள் 22:3 குறிப்பிடுகிறது. நீங்கள் வேறு பக்கமாகச் சென்றுவிட்டால் அந்தப் பிரச்சினையையே தவிர்க்கலாம். அதனால், நீங்கள் பயந்து ஓடுகிறீர்கள் என்று அர்த்தமல்ல, இதுதான் புத்திசாலித்தனம்.
12. சகாக்கள் யாராவது தர்மசங்கடமான ஒரு கேள்வியைக் கேட்டால் எப்படிப் பதிலளிக்கலாம்?
12 ஒரு பிரச்சினையை நீங்கள் நேருக்கு நேர் சந்தித்தால் என்ன செய்வீர்கள்? உதாரணமாக, “இதுவரை நீ யாரோடும் செக்ஸ் வைத்துக்கொண்டதே இல்லையா?” என்று ஆச்சரியத்தோடு ஓர் இளைஞர் உங்களிடம் கேட்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அப்போது, கொலோசெயர் 4:6-ல் உள்ள இந்த அறிவுரையைப் பின்பற்றுவது ஞானமானது: “உங்கள் பேச்சு எப்போதும் இனிமையாகவும் சுவையாகவும் இருக்க வேண்டும்; அப்போதுதான், ஒவ்வொருவருக்கும் எப்படிப் பதில் அளிக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.” இந்த வசனம் குறிப்பிடுகிறபடி, அந்தக் கேள்விக்குப் பதிலளிப்பது சூழ்நிலையைப் பொறுத்தது. அதற்காக, நீங்கள் பைபிளிலிருந்து ஒரு பிரசங்கம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. உறுதியாக அதேசமயத்தில் நச்சென்று பதிலளித்தாலே போதும். உதாரணமாக, “யாரோடும் செக்ஸ் வைத்துக்கொண்டதே இல்லையா?” என்ற கேள்விக்கு “இல்லை,” அல்லது “அது என் சொந்த விஷயம்” என்று பதிலளிக்கலாம்.
13. பழித்துப் பேசிய ஒருவருக்குப் பதிலளிக்க விவேகம் ஏன் அவசியம்?
13 அதிகமாகப் பேசுவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லாத சூழ்நிலைகளில் இயேசுவும்கூட சுருக்கமாகவே பதிலளித்தார். சொல்லப்போனால், ஏரோதுவின் கேள்விக்கு அவர் எந்தப் பதிலும் அளிக்கவில்லை. (லூக். 23:8, 9) பெரும்பாலும், முக்கியமல்லாத கேள்விகளுக்கு மௌனமே சிறந்த பதில். (நீதி. 26:4; பிர. 3:1, 7) மறுபட்சத்தில், உங்கள் கொள்கைகளில் நீங்கள் விடாப்பிடியாய் இருப்பதைக் குறித்து, உதாரணத்திற்கு செக்ஸ் விஷயத்தில் உறுதியாக இருப்பதைக் குறித்து, ஒருவர் யோசிக்கலாம்; அவர் முதலில் உங்களைப் பழித்துப் பேசியிருந்தாலும் நீங்கள் ஏன் அப்படி விடாப்பிடியாக இருக்கிறீர்கள் எனத் தெரிந்துகொள்ள விரும்புவதை நீங்கள் உணரலாம். (1 பே. 4:4) அப்போது, நீங்கள் அதைக் குறித்து அவரிடம் விளக்கமாகப் பேசலாம். பயந்து பேசாமல் இருந்துவிடக் கூடாது. ஆம், ‘பதில் சொல்ல எப்போதும் தயாராய் இருக்க’ வேண்டும்.—1 பே. 3:15.
14. சில சூழ்நிலைகளில், சிந்திக்க வைக்கும் விதத்தில் எப்படிச் சாமர்த்தியமாகப் பதிலடி கொடுக்கலாம்?
14 சில சூழ்நிலைகளில், சிந்திக்க வைக்கும் விதத்தில் நீங்கள் பதிலடி கொடுக்கலாம். ஆனால், அதைச் சாமர்த்தியமாகச் செய்ய வேண்டும். உதாரணத்திற்கு, சிகரெட்டைக் கையில் வாங்கும்படி பள்ளி மாணவன் ஒருவன் உங்களை வற்புறுத்தினால், முதலில் “வேண்டாம்” என்று கூறிவிட்டு பிறகு “புத்திசாலியான நீயா புகைபிடிக்கிறாய், என்னால் நம்பவே முடியலையே!” என்று சொல்லலாம். சிந்திக்க வைக்கும் விதத்தில் எப்படிப் பதிலடி கொடுக்க முடியும் என்பதைக் கவனித்தீர்களா? நீங்கள் ஏன் புகைபிடிப்பதில்லை என்பதை விளக்குவதற்குப் பதிலாக, அவன் புகைபிடிப்பது சரியா என அவனையே யோசிக்க வைக்கிறீர்கள்.
15. சகாக்களிடமிருந்து எந்தச் சமயத்தில் நடையைக் கட்ட வேண்டும், ஏன்?
15 இப்படியெல்லாம் முயன்றும் தொல்லை விட்டபாடில்லை என்றால் என்ன செய்வீர்கள்? அந்த இடத்திலிருந்து நடையைக் கட்டுவதே மேல். அங்கேயே நின்றுகொண்டிருந்தால் ஏதாவதொரு விதத்தில் சகாக்கள் உங்களை இணங்க வைத்துவிடுவார்கள். ஆகவே, அங்கிருந்து கிளம்பிவிடுங்கள். அவர்களுக்கு முன் கூனிக்குறுகி விட்டோமே என நினைக்காதீர்கள். மாறாக, உங்களை ஆட்டிவைக்க இடங்கொடுக்காததை நினைத்து சந்தோஷப்படுங்கள். இப்படிச் செய்யும்போது, நீங்கள் சகாக்களின் கைப்பாவை ஆகிவிடாமல் யெகோவாவின் இதயத்தைச் சந்தோஷப்படுத்துகிறீர்கள்.—நீதி. 27:11.
‘நன்மை தரும் திட்டங்களை’ போடுங்கள்
16. யெகோவாவின் சாட்சி என சொல்லிக்கொள்கிற சிலரிடமிருந்து என்ன பிரச்சினைகள் வரலாம்?
16 சில சமயங்களில், பெயரளவுக்கு யெகோவாவின் சாட்சிகளாய் இருக்கிற இளைஞர்கள் ஒரு பார்ட்டிக்கு வரச் சொல்லி உங்களை வற்புறுத்தலாம். ஆனால், அதைக் கண்காணிக்க பெரியவர்கள் யாரும் இல்லை என்பது அங்கு சென்ற பிறகுதான் உங்களுக்குத் தெரிகிறது. அப்போது என்ன செய்வீர்கள்? அல்லது, அந்த பார்ட்டியில் மதுபானம் ஏராளமாய் வைக்கப்பட்டிருக்கிறது; சிலர் மனம்போல் குடிக்க ஆரம்பிக்கிறார்கள். அப்போது என்ன செய்வீர்கள்? இதுபோன்ற சூழ்நிலைகளில் பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். ஒரு டீனேஜ் கிறிஸ்தவப் பெண் இவ்வாறு சொல்கிறாள்: “நாங்கள் பார்த்துக்கொண்டிருந்த சினிமாவில் இரட்டை அர்த்தமுள்ள வசனங்கள் அதிகமாக இருந்ததால், நானும் என் தங்கையும் தியேட்டரைவிட்டு வெளியே வந்துவிட்டோம். எங்களோடு வந்திருந்த மற்றவர்களோ அங்கேயே இருந்துவிட்டார்கள். அம்மாவும் அப்பாவும் நாங்கள் செய்ததைப் பாராட்டினார்கள். ஆனால், மற்ற பிள்ளைகளோ நாங்கள் அவர்களைக் கேவலப்படுத்தி விட்டதாக நினைத்து எங்கள்மேல் கோபப்பட்டார்கள்.”
17. ஒரு பார்ட்டியில் கலந்துகொள்ளும்போது, பைபிள் நெறிகளின் அடிப்படையில் நீங்கள் என்ன செய்யலாம்?
17 பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு நடக்கும்போது தர்மசங்கடமான நிலை ஏற்படலாம் என்பதை மேற்கண்ட அனுபவம் காட்டுகிறது. ஆனாலும், சரியானதைச் செய்வதில் உறுதியாய் இருங்கள். தயாராய் இருங்கள். ஒரு பார்ட்டிக்குப் போகும்போது அங்கு ஏதாவது விபரீதமாக நடந்தால், உடனே அங்கிருந்து வெளியேற முன்னரே திட்டமிடுங்கள். சில இளைஞர்கள் அங்கிருந்து சீக்கிரமாய்க் கிளம்புவதற்காக, ‘சும்மா ஒரு ஃபோன் பண்ணுங்க, நான் வந்துடறேன்’ என்று பெற்றோரிடம் சொல்லி வைக்கிறார்கள். (சங். 26:4, 5) அப்படிப்பட்ட ‘திட்டங்கள் நன்மை தரும்.’—நீதி. 21:5, NW.
“உன் இளமையிலே சந்தோஷப்படு”
18, 19. (அ) நீங்கள் சந்தோஷமாய் இருக்க யெகோவா விரும்புகிறார் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? (ஆ) சகாக்களின் தொல்லைக்கு இணங்கிவிடாமல் இருப்பவர்களைக் குறித்து கடவுள் எப்படி உணருகிறார்?
18 வாழ்க்கையை அனுபவித்து மகிழும் விதமாகவே யெகோவா உங்களைப் படைத்திருக்கிறார்; நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார். (பிரசங்கி 11:9-ஐ வாசியுங்கள்.) ஆனால், உங்களுடைய சகாக்கள் பலர் ‘பாவத்தினால் வரும் தற்காலிகச் சந்தோஷங்களைத்தான்’ அனுபவிக்கிறார்கள் என்பதை நினைவில் வையுங்கள். (எபி. 11:25) நீங்கள் இதைவிட மேம்பட்ட சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டுமென்று உண்மைக் கடவுளான யெகோவா விரும்புகிறார். நீங்கள் காலமெல்லாம் சந்தோஷமாய் இருக்க அவர் ஆசைப்படுகிறார். ஆகவே, யெகோவா வெறுக்கிற ஒரு காரியத்தைச் செய்ய மனம் துடித்தாலும், அவர் எதிர்பார்க்கிற விதமாக நடந்துகொள்வது நிரந்தர நன்மை தரும் என்பதை நினைவில் வையுங்கள்.
19 ஆகவே, இளைஞர்களாகிய நீங்கள் இப்போது சகாக்களின் அபிமானத்தைச் சம்பாதித்தாலும், வருடங்கள் போகப் போக அவர்களில் பெரும்பாலோர் உங்களுடைய பெயரைக்கூட மறந்துவிடலாம். அதற்கு நேர்மாறாக, சகாக்களின் தொல்லைக்கு நீங்கள் இணங்கிவிடாமல் இருக்கும்போது யெகோவா அதைக் கவனத்தில் கொள்வார்; அது மட்டுமல்ல, உங்களையும் நீங்கள் உண்மையோடு நடந்துகொண்டதையும் மறக்கவே மாட்டார்; “வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிப்பார்.” (மல். 3:10) அதோடு, ஏதாவதொரு விஷயத்தில் இப்போது நீங்கள் குறைவுபட்டிருந்தால் அதைச் சரிக்கட்ட தமது சக்தியைத் தாராளமாய் வழங்குவார். ஆம், சகாக்களின் தொல்லையைச் சமாளிக்க யெகோவா உங்களுக்கு உதவுவார்!
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• சகாக்களின் தொல்லைக்கு எந்தளவு சக்தி இருக்கிறது?
• சகாக்களின் தொல்லையைச் சமாளிக்க திட நம்பிக்கை ஏன் அவசியம்?
• சகாக்களின் தொல்லையைச் சமாளிக்க நீங்கள் எப்படித் தயாராய் இருக்கலாம்?
• நீங்கள் உண்மையோடு நடந்துகொள்வதை யெகோவா மதிக்கிறார் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?
[பக்கம் 8-ன் படம்]
பொன் கன்றுக்குட்டியை உண்டாக்க ஆரோன் இணங்கியது ஏன்?
[பக்கம் 10-ன் படம்]
தயாராய் இருங்கள்—என்ன பேசுவதென்று முன்கூட்டியே தீர்மானியுங்கள்