யெகோவா வழியை ஆயத்தம் செய்கிறார்
“ராஜ்யத்தைப் பற்றிய இந்த நற்செய்தி . . . பிரசங்கிக்கப்படும்.”—மத்தேயு 24:14, Nw.
1. முதல் நூற்றாண்டிலும் 20-ம் நூற்றாண்டிலும் பிரசங்க வேலையால் என்ன நிறைவேற்றப்பட்டிருக்கிறது?
யெகோவா அன்புள்ள கடவுள். “எல்லா வகை மனிதரும் இரட்சிக்கப்படவும் சத்தியத்தின் திருத்தமான அறிவை அடையவும் வேண்டும்” என்பதே அவருடைய சித்தம். (1 தீமோத்தேயு 2:4, NW) இது சர்வதேச பிரசங்க வேலையையும் போதிக்கும் திட்டத்தையும் அவசியப்படுத்தியிருக்கிறது. முதல் நூற்றாண்டில், இந்தப் பிரசங்க வேலை கிறிஸ்தவ சபையை ‘சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாக’ ஆக்கியது. (1 தீமோத்தேயு 3:15) அதன்பின் நீண்டகாலமாக விசுவாசத்துரோகம் இருந்ததால் சத்தியத்தின் ஒளி மங்கலானது. சமீப காலங்களில், இந்த ‘முடிவு காலத்தின்போது’ மெய்யான “அறிவு” மறுபடியும் பெருகியிருக்கிறது. இது லட்சக்கணக்கானோருக்கு பைபிள் ஆதாரமுடைய நித்திய இரட்சிப்பின் நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.—தானியேல் 12:4.
2. பிரசங்க வேலை சம்பந்தமாக யெகோவா என்ன செய்திருக்கிறார்?
2 கடவுளுடைய நோக்கத்தை தடைசெய்ய சாத்தான் இடைவிடாமல் முயற்சி செய்துகொண்டே இருக்கிறான். இருந்தபோதிலும், முதல் நூற்றாண்டிலும் இந்த 20-ம் நூற்றாண்டிலும் பிரசங்க வேலை ஆச்சரியப்படத்தக்க விதத்தில் வெற்றிநடை போட்டிருக்கிறது. இது ஏசாயா தீர்க்கதரிசனத்தை நினைவுபடுத்துகிறது. நாடுகடத்தப்பட்டிருந்த யூதர்கள் பொ.ச.மு. ஆறாவது நூற்றாண்டில் யூதா தேசத்திற்குத் திரும்பிவருவதைப் பற்றி ஏசாயா எழுதினார்: “பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவை சமமாக்கப்படும்.” (ஏசாயா 40:4) முதல் நூற்றாண்டிலும் இந்த இருபதாம் நூற்றாண்டிலும் பெரிய அளவில் பிரசங்க ஏற்பாடுகள் நிறைவேற்றப்படுவதற்கு யெகோவா வழியை ஆயத்தப்படுத்தி மேடுபள்ளங்களை சமமாக்கியிருக்கிறார்.
3. என்ன வழிகளில் யெகோவா தம் நோக்கங்களை நிறைவேற்றுபவராக இருக்கிறார்?
3 இது, நற்செய்தியை பிரசங்கிக்கும் வேலையை முன்னேற்றுவிக்க பூமியில் நிகழும் ஒவ்வொரு சம்பவங்களின்மீதும் யெகோவா நேரடியாக செல்வாக்குச் செலுத்தினார் என்று அர்த்தப்படுத்துவதில்லை. மேலும், நடக்கப்போகிற ஒவ்வொரு நுட்ப விவரத்தையும் அறிவதற்கு தமது முன்னறியும் திறமையை யெகோவா பயன்படுத்தினார் என்பதையும் அர்த்தப்படுத்துவதில்லை. எதிர்கால சம்பவங்களை முன்னதாகவே கணிக்கவும் அவற்றை கட்டுப்படுத்தவும் அவரால் முடியும் என்பது என்னவோ உண்மைதான். (ஏசாயா 46:9-11) ஆனால், சம்பவங்கள் தலைதூக்கும்போது அவற்றிற்கேற்றவாறு பிரதிபலிக்கவும் கடவுளால் முடியும். மந்தையை எப்படி வழிநடத்துவது, எப்படி பாதுகாப்பது என்பது அனுபவமிக்க மேய்ப்பனுக்கு அத்துப்படியாக இருக்கும். அதேபோல யெகோவா தம்முடைய ஜனங்களை வழிநடத்துகிறார். அவர்களை இரட்சிப்பினிடமாக வழிநடத்துகிறார், அவர்களுடைய ஆவிக்குரியத்தன்மையை பாதுகாக்கிறார். நற்செய்தியை உலகெங்கும் வெற்றிகரமாய் பிரசங்கிப்பதற்கு, சூழ்நிலைமைகளையும் மாற்றங்களையும் பயன்படுத்திக்கொள்ள அவர்களை உந்துவிக்கிறார்.—சங்கீதம் 23:1-4.
கடினமான ஒரு வேலை
4, 5. நற்செய்தியைப் பிரசங்கிப்பது ஏன் சவாலான வேலை?
4 நோவாவின் நாளில் பேழை கட்டுவது உண்மையில் கடினமாக இருந்தது. அது போலவே, முதல் நூற்றாண்டிலும் தற்காலத்திலும் ராஜ்ய பிரசங்கிப்பு வேலை மிகப் பெரிய திட்டமாக இருந்திருக்கிறது. எந்த செய்தியாக இருந்தாலும், அதை எல்லா மக்களுக்கும் சொல்வது ஒன்றும் அவ்வளவு சாதாரண விஷயமல்ல. ஆனால் இது சவாலான ஒரு வேலை. முதல் நூற்றாண்டில், சீஷர்கள் சிலரே இருந்தார்கள். அவர்களுடைய தலைவராகிய இயேசு, ராஜதுரோகி என பொய் குற்றம் சாட்டப்பட்டு கொலைசெய்யப்பட்டார். யூத மதம் நன்றாய் ஸ்தாபிக்கப்பட்டிருந்தது. மகிமைபொருந்திய ஓர் ஆலயம் எருசலேமில் கம்பீரமாக நின்றது. கோவில்களையும் பூசாரிகளையும் கொண்ட யூத மதமல்லாத மற்ற மதங்களும் மத்திய தரைக்கடல் பகுதியில் நன்கு ஸ்தாபிக்கப்பட்டிருந்தன. அவ்வாறே, 1914-ல் ‘முடிவுகாலம்’ தொடங்கியபோது அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் சொற்ப எண்ணிக்கையில் இருந்தார்கள், கடவுளை சேவிப்பதாக உரிமைபாராட்டிய மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களோ பெரும் எண்ணிக்கையில் இருந்தார்கள்.—தானியேல் 12:9.
5 தம்மை பின்பற்றுவோர் துன்புறுத்தப்படுவார்கள் என்று இயேசு எச்சரித்தார். அவர் சொன்னார்: “உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்.” (மத்தேயு 24:9) அந்தப் பிரச்சினைகளோடுகூட, முக்கியமாய் இந்தக் “கடைசிநாட்களில்,” ‘கையாளுவதற்குக் கடினமான கொடிய காலங்களில்’ கிறிஸ்தவர்கள் வாழ்கிறார்கள். (2 தீமோத்தேயு 3:1, NW) மலைபோன்ற வேலை, துன்புறுத்துதல், கடினமான காலங்கள் ஆகியவை பிரசங்க வேலையை சவாலாகவும் கஷ்டமாகவும் ஆக்கியிருக்கின்றன. உண்மையில் மிகுந்த விசுவாசம் தேவைப்படுகிறது.
6. வெற்றிக்குரிய என்ன உறுதிமொழியை யெகோவா தம்முடைய ஜனங்களுக்குக் கொடுத்தார்?
6 பிரசங்க வேலையில் கஷ்டங்கள் இருக்குமென்று யெகோவா அறிந்திருந்தார். என்றபோதிலும், இந்த வேலையை எதுவும் நிறுத்தாது என்பதையும் அவர் அறிந்திருந்தார். முதல் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டிலும் கவனிக்கத்தக்க நிறைவேற்றத்தை கண்ட, நன்றாய் அறியப்பட்ட ஒரு தீர்க்கதரிசனத்தில் வெற்றி ஏற்கெனவே முன்னறிவிக்கப்பட்டது: ‘ராஜ்யத்தைப் பற்றிய இந்த நற்செய்தி குடியிருக்கப்பட்ட பூமி முழுவதிலும் பிரசங்கிக்கப்படும்.’—மத்தேயு 24:14, NW.
7. இந்தப் பிரசங்க வேலை முதலாம் நூற்றாண்டில் எவ்வளவு பரவலாக செய்யப்பட்டிருக்கிறது?
7 முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கடவுளுடைய ஊழியர்கள் விசுவாசத்தாலும் பரிசுத்த ஆவியாலும் நிரப்பப்பட்டவர்களாக தங்களுக்கு நியமிக்கப்பட்ட வேலையை செய்துகொண்டே இருந்தனர். யெகோவா அவர்களோடு இருந்ததால், தாங்கள் எதிர்பார்த்த அளவிற்கும் அதிகமாக வெற்றியடைந்தார்கள். இயேசு மரணமடைந்து ஏறக்குறைய 27 ஆண்டுகள் கழிந்துவிட்டன. அச்சமயத்தில் கொலோசெயருக்கு பவுல் எழுதிய கடிதத்தில், நற்செய்தியைக் குறித்து அவரால் இவ்வாறு சொல்ல முடிந்தது: “வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டுவருகிறது.” (கொலோசெயர் 1:23) அதுபோலவே, இந்த இருபதாம் நூற்றாண்டின் முடிவின் சமயத்தில் 233 தேசங்களில் இந்த நற்செய்தி பிரசங்கிக்கப்பட்டு வருகிறது.
8. என்ன வகையான சூழ்நிலைமைகளில் நற்செய்தியை பலர் ஏற்றிருக்கின்றனர்? உதாரணங்கள் கொடுக்க முடியுமா?
8 சமீப பத்தாண்டுகளில் லட்சக்கணக்கானோர் இந்த நற்செய்தியை ஆர்வத்தோடு ஏற்றிருக்கிறார்கள். போர், தடையுத்தரவு, கடும் துன்புறுத்துதல் போன்ற மிக மோசமான சூழ்நிலைமைகளிலும் பலர் இவ்வாறு செய்திருக்கிறார்கள். முதல் நூற்றாண்டிலும் இதுவே உண்மையாக இருந்தது. உதாரணமாக, ஒரு சந்தர்ப்பத்தில் பவுலும் சீலாவும் பிரம்பால் கடுமையாக அடிக்கப்பட்டு சிறைச்சாலைக்குள் தள்ளப்பட்டார்கள். சீஷராக்குவதற்கு இது எப்பேர்ப்பட்ட கடினமான சூழ்நிலைமை! எனினும், பிரசங்க வேலை செய்வதற்காக யெகோவா அந்தச் சூழ்நிலைமையைப் பயன்படுத்தினார். பவுலும் சீலாவும் விடுதலை செய்யப்பட்டார்கள், அந்த சிறைச்சாலைக்காரனும் அவன் குடும்பத்தாரும் விசுவாசிகளானார்கள். (அப்போஸ்தலர் 16:19-33) நற்செய்தி பிரசங்கிக்கப்படுவதை எதிரிகளால் ஒருபோதும் தடுத்து நிறுத்த முடியாது என்பதையே இந்த அனுபவங்கள் பறைசாற்றுகின்றன. (ஏசாயா 54:17) இருப்பினும், கிறிஸ்தவ சரித்திரம் இரக்கமற்ற துன்பத்தாலும் துன்புறுத்துதலாலுமே நிறைந்ததாக இல்லை. முதல் நூற்றாண்டிலும் இந்த 20-ம் நூற்றாண்டிலும், நற்செய்தியை வெற்றிகரமாக பிரசங்கிப்பதற்கு வழியை திறந்துவைத்த சாதகமான சூழ்நிலைகள் சிலவற்றை இப்போது நாம் சிந்திக்கலாம்.
மத சூழமைவு
9, 10. முதல் நூற்றாண்டிலும் 20-ம் நூற்றாண்டிலும் நற்செய்தியை பிரசங்கிப்பதற்கான எதிர்பார்ப்பை யெகோவா எவ்வாறு உண்டாக்கினார்?
9 பிரசங்கிக்கும் இந்த உலகளாவிய வேலை செய்யப்பட்ட காலங்களை சற்று கவனியுங்கள். முதல் நூற்றாண்டிற்கு சற்று கவனத்தை திருப்புவோம். தானியேல் 9:24-27-ல் காணப்படுகிற 70 வார-வருடங்களைப் பற்றிய தீர்க்கதரிசனம் மேசியா தோன்றும் வருடத்தை துல்லியமாக குறிப்பிட்டது. அதுதான் பொ.ச. 29. சம்பவங்கள் நடக்கவிருந்த காலத்தை முதல் நூற்றாண்டு யூதர்கள் துல்லியமாக புரிந்துகொள்ளாதபோதிலும் மேசியாவின் வருகைக்காக எதிர்பார்த்திருந்தார்கள். (லூக்கா 3:15) பிரெஞ்சு மேன்யல் பிப்ளிக்கோ இவ்வாறு கூறுகிறது: “தானியேல் திட்டமாக குறிப்பிட்ட அந்த எழுபது வார-வருடங்கள் முடிவை நெருங்கிக்கொண்டிருந்ததை ஜனங்கள் அறிந்திருந்தார்கள்; கடவுளுடைய ராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று முழுக்காட்டுபவனாகிய யோவான் அறிவித்ததை கேட்டபோது ஒருவரும் ஆச்சரியப்படவில்லை.”
10 இன்றைய நாகரீக காலத்தைப் பற்றியதென்ன? மிக முக்கியமான நிகழ்ச்சி பரலோகத்தில் இயேசு சிங்காசனத்தில் ஏற்றப்பட்டதாகும். இது ராஜ்ய அதிகாரத்தில் அவருடைய வந்திருத்தலின் தொடக்கத்தைக் குறிப்பிட்டது. இது 1914-ல் நடந்ததென்று பைபிள் தீர்க்கதரிசனம் காட்டுகிறது. (தானியேல் 4:13-17) தற்கால மதப்பிரிவுகள் சில இந்தச் சம்பவத்தை எதிர்நோக்கியிருந்தன. 1879-ல் இந்தப் பத்திரிகை பிரசுரிக்கப்பட்டபோது, தொடக்கத்தில் அதற்கு சூட்டப்பட்டிருந்த பெயரிலிருந்து இந்த எதிர்பார்ப்பு தெளிவாக தெரிந்தது. அதாவது, ஜயன்ஸ் உவாட்ச்டவர் அண்ட் ஹெரல்ட் ஆஃப் கிறைஸ்ட் பிரஸென்ஸ் [தமிழில், சீயோனின் காவற்கோபுரமும் கிறிஸ்துவின் வந்திருத்தலை அறிவிப்பதும்] என்பதே இப்பத்திரிகையின் ஆரம்பகால பெயர். இவ்வாறு, முதல் நூற்றாண்டிலும் தற்காலங்களிலும், நற்செய்தியை பிரசங்கிப்பதற்கான சூழ்நிலைமையை மத எதிர்பார்ப்புகள் ஏற்படுத்தின. a
11. நற்செய்தியை பிரசங்கிப்பதற்கு உதவியாக என்ன மத அஸ்திவாரங்கள் போடப்பட்டிருந்தன?
11 இந்த இரண்டு சகாப்தங்களிலும் கிறிஸ்தவர்களின் ஊழியத்திற்கு உதவியாக இருந்த மற்றொரு அம்சம் பரிசுத்த வேதவசனங்களை பலர் தெரிந்திருந்ததாகும். முதல் நூற்றாண்டில் யூத சமுதாயத்தினர் புறதேசங்கள் முழுவதிலும் சிதறியிருந்தார்கள். அந்தச் சமுதாயத்தினர் மத்தியில் அநேக ஜெப ஆலயங்கள் இருந்தன. அங்கு வேதவசனங்கள் வாசிக்கப்பட்டு விளக்கமளிக்கப்படுவதை கேட்பதற்கு ஜனங்கள் தவறாமல் கூடினார்கள். இதனால், ஜனங்களுக்கு ஏற்கெனவே இருந்த மத அறிவை பயன்படுத்தி, இன்னும் கூடுதலான அறிவை பூர்வ கிறிஸ்தவர்களால் புகுத்த முடிந்தது. (அப்போஸ்தலர் 8:28-36; 17:1, 2) நம்முடைய சகாப்தத்தின் ஆரம்பத்தில், அதைப்போன்ற நிலைமை பல நாடுகளில் இருப்பதைக் கண்டு யெகோவாவின் ஜனங்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். கிறிஸ்தவமண்டல எல்லை முழுவதிலும், முக்கியமாய் புராட்டஸ்டண்ட் நாடுகளில் பைபிள் பரவலாக கிடைத்தது. பல சர்ச்சுகளில் பைபிள் வாசிக்கப்பட்டது. லட்சோப லட்சம்பேர் சொந்தமாக தங்களுக்கு ஒரு பிரதியை வைத்திருந்தார்கள். பைபிள் ஏற்கெனவே ஜனங்களின் கைகளில் தவழ்ந்தது. ஆனால், தங்களிடம் இருந்த பைபிளை புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவி தேவைப்பட்டது.
சட்டத்தின் பயன்கள்
12. முதல் நூற்றாண்டில் ரோம சட்டம் எவ்வாறு ஒரு பாதுகாப்பாக இருந்தது?
12 பிரசங்க வேலைக்கு அரசாங்க சட்டத்திலிருந்தும் அடிக்கடி நன்மை கிடைத்திருக்கிறது. முதல் நூற்றாண்டு உலகத்தின்மீது ரோம பேரரசு ஆதிக்கம் செலுத்தியது. அதன் எழுதப்பட்ட சட்டங்கள் அன்றாட வாழ்க்கையில் அதிக பாதிப்பை ஏற்படுத்தின. இந்தச் சட்டங்கள் பாதுகாப்பு அளித்ததால் பூர்வ கிறிஸ்தவர்கள் பயனடைந்தார்கள். உதாரணமாக, ரோம சட்டத்தில் பவுல் மேல்முறையீடு செய்ததால், அவர் அடிக்கப்படுவதிலிருந்து காப்பற்றப்பட்டார், சிறைச்சாலையிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டார். (அப்போஸ்தலர் 16:37-39; 22:25, 29) ரோம சட்டத்தைப்பற்றி பவுல் குறிப்பிட்டவுடன் எபேசுவில் கோபாவேசம்கொண்ட அந்த கலகக் கூட்டம் அமைதியானது. (அப்போஸ்தலர் 19:35-41) பவுல் ரோம குடிமகனாக இருந்ததால், ஒரு சமயத்தில் எருசலேமில் நடந்த வன்முறையிலிருந்து காப்பாற்றப்பட்டார். (அப்போஸ்தலர் 23:27) மற்றொரு சமயத்தில், இராயனுக்கு முன்பாக தன் விசுவாசத்தைக் குறித்து விளக்கமளித்து, சட்டப்பூர்வ எதிர்வழக்காடுவதற்கு ரோம சட்டம் பவுலை அனுமதித்தது. (அப்போஸ்தலர் 25:11) இராயர்களில் பலர் கொடுங்கோலராக இருந்தனர். இருந்தாலும், ‘நற்செய்திக்காக எதிர்வழக்காடி சட்டப்பூர்வமாய் அதை ஸ்தாபிப்பதற்கு,’ பொதுவாக முதல் நூற்றாண்டு சட்டங்கள் அனுமதித்தன.—பிலிப்பியர் 1:7, NW.
13. நம்முடைய காலத்தில், எவ்வாறு பிரசங்க வேலைக்கு சட்டத்தால் நன்மை கிடைத்திருக்கிறது?
13 இன்றும் பல நாடுகளில் இது உண்மையாக இருக்கிறது. ‘சட்டத்தின் பெயரால் தொல்லைகளை’ உருவாக்குபவர்கள் இருக்கிறபோதிலும், பெரும்பான்மையான நாடுகளில் எழுதப்பட்ட சட்டங்கள் மத சுதந்திரத்தை ஓர் அடிப்படை உரிமையாக கருதுகின்றன. (சங்கீதம் 94:20, தமிழ் கத்தோலிக்க பைபிள்) சமுதாய ஒழுங்கமைப்புக்கு யெகோவாவின் சாட்சிகள் எவ்விதத்திலும் அச்சுறுத்தலாக இல்லை என்பதை உணர்ந்த பல அரசாங்கங்கள், சாட்சிகளுடைய வேலையை சட்டப்பூர்வமாக்கியிருக்கின்றன. சாட்சிகள் வெளியிடும் பிரசுரங்களின் பிரிண்டிங் வேலை ஐக்கிய அமெரிக்க குடியரசில் மிகுதியாக செய்யப்படுகிறது. காவற்கோபுரம் பத்திரிகை 120 ஆண்டுகளாக தொடர்ந்து அச்சிடப்படுவதை இங்குள்ள சட்டங்கள் சாத்தியமாக்கின.
சமாதானமும் சகிப்புத்தன்மையும் உள்ள காலங்கள்
14, 15. முதல் நூற்றாண்டில் நிலவிய ஓரளவான சமுதாய ஸ்திரத்தன்மை, பிரசங்க வேலைக்கு எவ்வாறு பயனளித்தது?
14 ஓரளவு சமாதானம் இருந்த காலங்களிலும் இந்தப் பிரசங்க வேலை செழிப்படைந்திருக்கிறது. முதல் நூற்றாண்டிலும் தற்காலத்திலும், ‘ஜனத்துக்கு விரோதமாய் ஜனம் எழும்பும்’ என்று இயேசு திருத்தமாக முன்னறிவித்தார். இருந்தபோதிலும், தீவிரமான ராஜ்ய பிரசங்கிப்பை சாத்தியமாக்கிய அமைதியான இடைக்காலங்களும் இருந்திருக்கின்றன. (மத்தேயு 24:7) முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள், பாக்ஸ் ரோமனா, அதாவது ரோம சமாதானத்தின்கீழ் வாழ்ந்தார்கள். ஒரு சரித்திராசிரியர் எழுதினார்: “மத்தியதரைகடல் பகுதியிலிருந்த ஜனங்களை ரோம் அவ்வளவு முழுமையாக வெற்றிகண்டதால், அந்தப் பகுதிகள் சதா போர்களால் பாதிக்கப்படுவதிலிருந்து விடுதலை பெற்றன.” இந்த ஸ்திரத்தன்மை ரோம சாம்ராஜ்யம் முழுவதிலும் போதியளவு பாதுகாப்புடன் பூர்வ கிறிஸ்தவர்கள் பயணம் செய்வதற்கு வழியைத் திறந்துவைத்தது.
15 ரோம பேரரசு ஜனங்களை அதன் பலத்த கட்டுப்பாட்டில் ஒன்றுபடுத்த முயன்றது. இந்த அரசியல் கொள்கை, பயணத்தையும் சகிப்புத்தன்மையையும் கருத்துப் பரிமாற்றங்களையும் முன்னேற்றுவித்தது மட்டுமின்றி சர்வதேச சகோதரத்துவ எண்ணத்தையும் வளர்த்தது. நாகரிக முன்னேற்றம் (ஆங்கிலம்) என்ற புத்தகம் சொல்கிறது: “[ரோம] பேரரசின் ஒற்றுமை அந்தப் பிரதேசத்தை [கிறிஸ்தவ போதகத்திற்கு] உகந்த ஒன்றாக்கியது. தேசிய தடைகள் தகர்த்தெறியப்பட்டன. ஒரு ரோம குடிமகன் முழு உலகத்தின் குடிமகனாக இருந்தான். . . . மேலும், மனித சகோதரத்துவத்தைப் போதிக்கும் மதம், சர்வதேச சகோதரத்துவத்திற்கான யோசனையை வளர்த்ததாக கருதப்படலாம்.”—ஒப்பிடுக: அப்போஸ்தலர் 10:34, 35; 1 பேதுரு 2:17.
16, 17. தற்காலங்களில் சமாதானத்தை முன்னேற்றுவிப்பதற்கான முயற்சிகளை எது தூண்டுவித்திருக்கிறது, பலர் என்ன முடிவுக்கு வந்திருக்கிறார்கள்?
16 நம்முடைய காலத்தைப் பற்றியதென்ன? சரித்திரத்திலேயே மிகவும் அதிக அழிவை உண்டாக்கிய போர்களை இந்த 20-ம் நூற்றாண்டு கண்டிருக்கிறது. சில நாடுகளில், பிராந்தியப் போர்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. (வெளிப்படுத்துதல் 6:4) எனினும், சமாதான புறா பறந்த காலங்களும் இருந்தன. கடந்த 50 ஆண்டுகளில், இவ்வுலகத்தின் பெரும் வல்லரசுகள் ஒன்றுக்கொன்று முழுமூச்சான யுத்தத்தில் ஈடுபடவில்லை. இந்த நிலைமை, அந்நாடுகளில் நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் பேரளவு உதவி செய்திருக்கிறது.
17 இந்த 20-ம் நூற்றாண்டில் நிகழ்ந்த பயங்கர போர்கள் ஓர் உலக அரசாங்கத்திற்கான தேவையை ஜனங்கள் உணரும்படி செய்திருக்கிறது. உலகப் போரின் பயம், சர்வதேச சங்கத்தையும் ஐக்கிய நாட்டு சங்கத்தையும் அமைக்க வழிநடத்தியது. (வெளிப்படுத்துதல் 13:14) அனைத்து நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பையும் சமாதானத்தையும் பெருகச் செய்வதே இந்த இரண்டு அமைப்புகளின் முக்கிய நோக்கம். இப்படிப்பட்ட தேவையை உணரும் ஜனங்கள் மெய்யான நிரந்தர சமாதானத்தைக் கொண்டுவரும் உலக அரசாங்கமாகிய கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை ஆவலோடு ஏற்றுக்கொள்வதில் விளைவடைகிறது.
18. மதத்தின்மீதுள்ள என்ன மனப்பான்மைகள் பிரசங்க வேலைக்கு ஆதரவாக இருந்திருக்கின்றன?
18 சில சமயங்களில் கிறிஸ்தவர்கள் கொடுமையாக துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் முதல் நூற்றாண்டும் இருபதாம் நூற்றாண்டும் மத சகிப்புத்தன்மையை காட்டிய காலங்களையும் கொண்டிருக்கின்றன. (யோவான் 15:20: அப்போஸ்தலர் 9:31) ரோமர்கள் தாங்கள் கைப்பற்றின தேசத்திலுள்ள மக்களின் தெய்வங்களையும் தேவதைகளையும் தாராளமாக ஏற்றுக்கொண்டனர் அல்லது தங்களுக்கு ஏற்றவிதமாக மாற்றியமைத்துக் கொண்டனர். பேராசிரியர் ராட்னி ஸ்டார்க் எழுதினார்: “பல அம்சங்களில் ரோம் அதிக அளவில் மத சதந்திரத்தை அளித்தது. அமெரிக்க புரட்சிக்குப் பின்பு மறுபடியும் நிலவிய சுதந்திரத்தைப் பார்க்கிலும் அதிக அளவான மத சுதந்திரமாக அது இருந்தது.” இந்த நவீன காலங்களில், அநேக நாடுகளைச் சேர்ந்த மக்கள் மற்றவர்களின் கருத்துக்களை திறந்த மனதோடு ஏற்றுக்கொள்கிறார்கள். இதனால் யெகோவாவின் சாட்சிகள் கொண்டுவரும் பைபிள் செய்திக்கு செவிகொடுக்க ஆர்வமுள்ளவர்களாக இருக்கிறார்கள்.
தொழில்நுட்பத்தின் பங்கு
19. கோடெக்ஸ் முறையை பூர்வ கிறிஸ்தவர்கள் எவ்வாறு பயன்படுத்தினார்கள்?
19 இறுதியாக, தொழில்நுட்ப முன்னேற்றங்களிலிருந்து பயனடைய யெகோவா தம்முடைய ஜனங்களுக்கு எவ்வாறு உதவிசெய்திருக்கிறார் என்பதை கவனியுங்கள். ராக்கெட் வேகத்தில் முன்னேறும் தொழில்நுட்ப சகாப்தத்தில் பூர்வ கிறிஸ்தவர்கள் வாழவில்லை. இருந்தபோதிலும் அந்தக் காலத்தின் முன்னேற்றங்களுக்கு ஏற்ப கோடெக்ஸ் முறையை, அதாவது புத்தக முறையை பயன்படுத்திக்கொண்டனர். சிக்கலாக இருந்த சுருளின் இடத்தை இந்தக் கோடெக்ஸ் முறை ஏற்றது. தி பர்த் ஆஃப் கோடெக்ஸ் என்ற புத்தகம் குறிப்பிடுகிறது: “உலகப்பிரகாரமான இலக்கியங்கள் புஸ்தக சுருளை நீக்கி இந்தக் கோடெக்ஸ் முறையை தாமதமாகவும் கொஞ்சம் கொஞ்சமாகவும் ஏற்றன. இதற்கு நேர்மாறாக, கிறிஸ்தவர்கள் இந்தக் கோடெக்ஸ் முறையை விரைவாகவும் எல்லா இடங்களிலும் ஏற்றுக்கொண்டு பயன்படுத்தினர்.” இந்த நூல் மேலும் சொல்கிறது: “இரண்டாம் நூற்றாண்டில், இந்த கோடெக்ஸ் முறையை கிறிஸ்தவர்கள் பயன்படுத்தியது அவ்வளவு பரவலாக இருந்ததால், அது அறிமுகப்படுத்தப்பட்டது கி.பி. 100-க்கும் வெகு முன்னதாகவே இருக்க வேண்டும்.” சுருளைப் பார்க்கிலும் கோடெக்ஸ் முறையை பயன்படுத்துவது எளிதாக இருந்தது. வேதவசனங்களை விரைவாக கண்டுபிடிக்க முடிந்தது. பவுலைப் போல வேதவசனங்களை விளக்கிக் கூறுவதற்கு மட்டுமல்லாமல், போதிக்கும் விஷயங்களை ‘மேற்கோள்களைக்கொண்டு நிரூபிக்கவும்’ பூர்வ கிறிஸ்தவர்களுக்கு இது நிச்சயமாகவே உதவி செய்தது.—அப்போஸ்தலர் 17:2, 3, NW.
20. கடவுளுடைய ஜனங்கள் நவீன தொழில்நுட்பத்தை உலகளாவிய பிரசங்க வேலையில் எவ்வாறு பயன்படுத்தியிருக்கிறார்கள்? ஏன்?
20 நம்முடைய நூற்றாண்டில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மலைக்க செய்திருக்கின்றன. கம்ப்யூட்டர்களும் அதிவேக பிரிண்டிங் மெஷின்களும் பைபிள் இலக்கியங்களை பல மொழிகளில் ஒரே சமயத்தில் பிரசுரிக்க உதவியிருக்கின்றன. நவீன தொழில்நுட்பம் பைபிள் மொழிபெயர்ப்பு வேலையை விரைவுபடுத்தியிருக்கிறது. பைபிள் இலக்கியங்களை பூமியெங்கும் விரைவாக எடுத்துச் செல்வதை லாரிகளும் ரயில்களும் கப்பல்களும் விமானங்களும் சாத்தியமாக்குகின்றன. தொலைபேசிகளும் ஃபாக்ஸ் சாதனங்களும் துரித செய்திபோக்குவரத்தை சாத்தியமாக்கியிருக்கின்றன. யெகோவா தமது ஆவியின் மூலம் தம்முடைய ஊழியர்கள் இப்படிப்பட்ட தொழில்நுட்பங்களை நடைமுறையில் பயன்படுத்தி, நற்செய்தியை உலகமுழுவதும் பரப்புவதற்கு வழிநடத்தியிருக்கிறார். இந்த விஞ்ஞான உலகில் நவீனமானவை எதுவாக இருந்தாலும் அதைப் பயன்படுத்த வேண்டும், தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசையில் இவற்றை பயன்படுத்துகிறதில்லை. மாறாக, பிரசங்க வேலையை இன்னும் திறம்பட்ட விதமாக செய்வதற்கு என்ன தேவை என்பதே இவர்களுடைய முதன்மையான மற்றும் அதிமுக்கியமான அக்கறையாக இருக்கிறது.
21. எதைப் பற்றி நாம் திடநம்பிக்கையுடன் இருக்கலாம்?
21 ‘ராஜ்யத்தைப் பற்றிய இந்த நற்செய்தி குடியிருக்கப்பட்ட பூமி முழுவதிலும் பிரசங்கிக்கப்படும்’ என்று இயேசு முன்னறிவித்தார். (மத்தேயு 24:14, NW) அந்த தீர்க்கதரிசனத்தின் ஒரு நிறைவேற்றத்தை பூர்வ கிறிஸ்தவர்கள் கண்டார்கள். அதேபோல, இன்று நாம் இத்தீர்க்கதரிசனத்தின் மிகப் பெரிய நிறைவேற்றத்தை காண்கிறோம். சாதகமான காலங்களிலும் சாதகமற்ற காலங்களிலும், மாறுபடும் சட்டங்கள் மற்றும் மனப்பான்மைகள் மத்தியிலும், போர்க் காலங்களிலும் சமாதானமான காலங்களிலும், எல்லா வகையான தொழில்நுட்ப முன்னேற்றங்களின் மத்தியிலும் நற்செய்தி பிரசங்கிக்கப்பட்டிருக்கிறது, பிரசங்கிக்கப்பட்டும் வருகிறது. யெகோவாவின் ஞானமும் வியப்பூட்டும் முன்னறிவும் உங்களை பரவசத்தால் நிரப்புகிறது அல்லவா? பிரசங்க வேலை யெகோவாவின் கால அட்டவணைப்படி செய்து முடிக்கப்படும். நீதிமான்களுக்கு என்றென்றைக்கும் ஆசீர்வாதமுண்டாக கடவுளுடைய அன்புள்ள நோக்கம் நிறைவேற்றப்படும் என்பதில் நாம் அதிக நிச்சயமாக இருக்கலாம். ஆம், நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்து அதில் என்றும் வாழ்வார்கள். (சங்கீதம் 37:29; ஆபகூக் 2:3) நாம் யெகோவாவின் நோக்கத்திற்கு இசைய வாழ்ந்தால், அந்த நீதிமான்கள் மத்தியில் நாமும் இருப்போம்.—1 தீமோத்தேயு 4:16.
[அடிக்குறிப்புகள்]
a இந்த மேசியானிய தீர்க்கதரிசனங்கள் இரண்டிற்கும் கூடுதலான விளக்கத்தைப் பெற, தயவுசெய்து உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்தில் பக்கங்கள் 36, 97, மற்றும் 98-107 பார்க்கவும்.
மறுபார்வைக்கான குறிப்புகள்
◻ நற்செய்தி பிரசங்கிப்பது ஏன் சவாலான ஒரு வேலை?
◻ அரசாங்க ஏற்பாடுகள் மற்றும் ஓரளவு சமுதாய ஸ்திரத்தன்மையால் எந்த விதத்தில் கிறிஸ்தவர்களுடைய வேலை பயனடைந்திருக்கிறது?
◻ பிரசங்க வேலையில் யெகோவாவின் ஆசீர்வாதம் என்ன எதிர்கால வளர்ச்சிகளை நமக்கு வாக்களிக்கிறது?