‘யெகோவாவைப் பற்றிய போதனையைக் கேட்க’ தேசங்கள் தயார்படுத்தப்பட்டன
“ஆளுநர் விசுவாசியானார்; யெகோவாவைப் பற்றிய போதனையைக் கேட்டு மலைத்துப்போனார்.”—அப். 13:12.
1-3. ‘எல்லாத் தேசத்தாருக்கும்’ நற்செய்தியை பிரசங்கிப்பது சீடர்களுக்கு ஏன் சுலபமாக இருந்திருக்காது?
இயேசு கிறிஸ்து தம்முடைய சீடர்களிடம், ‘எல்லாத் தேசத்தாரையும் சீடர்களாக்குங்கள்’ என்ற கட்டளை கொடுத்தார். இது ஒரு சாதாரண வேலையா? இல்லவே இல்லை. அவர்கள் ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை உலகமெங்கும் உள்ள எல்லாத் தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்க’ வேண்டியிருந்தது.—மத். 24:14; 28:19.
2 சீடர்கள் இயேசுமீது அதிக அன்பு வைத்திருந்தார்கள், நற்செய்தியையும் உயர்வாக மதித்தார்கள். இருந்தாலும், ‘இயேசு கொடுத்த கட்டளைப்படி செய்ய முடியுமா?’ என்று அவர்கள் ஒருவேளை யோசித்து இருந்திருக்கலாம். அதற்கு ஒரு காரணம், உலகம் முழுவதும் நற்செய்தியை சொல்வதற்கு அன்று சீடர்கள் கொஞ்சம் பேர்தான் இருந்தார்கள். இன்னொரு காரணம், இயேசுதான் கடவுளுடைய மகன் என்று அவர்கள் பிரசங்கிக்க வேண்டியிருந்தது, ஆனால் இயேசுவை யூதர்கள் கொலை செய்தது மக்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது. மூன்றாவதாக, சீடர்கள் ‘கல்வியறிவு இல்லாத சாதாரண ஆட்கள்’ என்று நிறையப் பேர் நினைத்தார்கள். (அப். 4:13) அன்று இருந்த யூத மதத் தலைவர்கள் பெரிய பெரிய மதப் பள்ளிகளில் படித்திருந்தார்கள், ஆனால் சீடர்கள் அந்த மாதிரி எந்த பள்ளியிலும் படிக்கவில்லை. அதுமட்டும் இல்லாமல் சீடர்கள் சொன்ன விஷயங்கள், மதத் தலைவர்கள் காலங்காலமாக சொல்லிக்கொடுத்த யூத பாரம்பரியத்தோடு கொஞ்சமும் ஒத்துப்போகவில்லை. இதனால், சீடர்கள் இப்படி யோசித்து இருக்கலாம்: ‘இஸ்ரவேல் மக்களே நம்மள மதிக்கலன்னா, ரோம சாம்ராஜ்யத்துல இருக்கிற மக்கள் மட்டும் நாம சொல்றத கேட்பாங்களா?’
3 அதோடு, சீடர்களை மக்கள் வெறுப்பார்கள், அடித்து துன்புறுத்துவார்கள், கொலைகூட செய்வார்கள் என்று இயேசு முன்பே சொன்னார். சொந்த பந்தங்களும் நண்பர்களும்கூட அவர்களை எதிர்ப்பார்கள் என்று சொன்னார். (லூக். 21:16, 17) இயேசுவின் சீடர்கள் என்று சொல்லிக்கொண்டு சிலர் பொய்யான விஷயங்களை சொல்லிக் கொடுப்பார்கள் என்றும் சொன்னார். அதுமட்டுமல்ல, அநியாயமும் அக்கிரமமும் நிறைந்திருந்த இடங்களில் சீடர்கள் நற்செய்தியை பிரசங்கிக்க வேண்டியிருந்தது. (மத். 24:10-12) இதுபோன்ற சவால்கள் இருந்ததால், ‘பூமியின் கடைமுனைவரையிலும்’ எப்படி சாட்சி கொடுக்க முடியும் என்று சீடர்கள் யோசித்து இருக்கலாம்.—அப். 1:8.
4. சீடர்கள் நற்செய்தியை பிரசங்கித்ததால் என்ன நன்மை கிடைத்தது?
4 அந்த வேலையை செய்வது சீடர்களுக்கு சுலபமாக இல்லையென்றாலும், இயேசுவின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து எருசலேமிலும், சமாரியாவிலும் மட்டுமில்லாமல் மற்ற நாடுகளிலும் அவர்கள் நற்செய்தியை பிரசங்கித்தார்கள். கிட்டத்தட்ட 30 வருடங்களிலேயே அவர்கள் நிறைய இடங்களுக்கு போய் நற்செய்தியை பிரசங்கித்ததால்தான் அந்த செய்தி “வானத்தின் கீழிருக்கிற எல்லா மக்களுக்கும் பிரசங்கிக்கப்பட்டது” என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். மற்ற நாட்டில் இருந்த மக்களும் நற்செய்தியை கேட்டு இயேசுவின் சீடர்களாக ஆனார்கள். (கொலோ. 1:6, 23) உதாரணத்திற்கு, சீப்புரு தீவில் பவுல் பிரசங்கித்துக்கொண்டு இருந்தபோது, அங்கிருந்த ரோம ஆளுநர் “யெகோவாவைப் பற்றிய போதனையைக் கேட்டு மலைத்துப்போனார்.” சொல்லப்போனால் அவர் இயேசுவின் சீடராகவும் ஆனார்.—அப்போஸ்தலர் 13:6-12-ஐ வாசியுங்கள்.
5. (அ) சீடர்களுக்கு இயேசு என்ன வாக்கு கொடுத்தார்? (ஆ) முதல் நூற்றாண்டை பற்றி ஒரு சரித்திர புத்தகம் என்ன சொல்கிறது?
5 அவர்களுடைய சொந்த முயற்சியில் இந்த பிரசங்க வேலையை உலகம் முழுவதும் செய்ய முடியாது என்று சீடர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், அவர்களுக்கு வாக்கு கொடுத்திருந்தது போலவே இயேசு கடைசிவரைக்கும் அவர்களோடு இருப்பார் என்றும் கடவுளுடைய சக்தி உதவி செய்யும் என்றும் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். (மத். 28:20) அதோடு, அந்த சமயத்தில் இருந்த சூழ்நிலைமையும் பிரசங்க வேலையை செய்ய சீடர்களுக்கு உதவியது. அதைப் பற்றி ஒரு சரித்திர புத்தகம் இப்படி சொன்னது: ‘கிறிஸ்தவர்கள் நற்செய்தியை பிரசங்கிப்பதற்கு முதல் நூற்றாண்டுதான் சரியான சமயமாக இருந்திருக்கும். அதற்கு ஏற்ற சூழ்நிலையை கடவுள்தான் அமைத்துக் கொடுத்தார் என்று அவர்கள் பிறகு புரிந்துகொண்டார்கள்.’
6. (அ) இந்தக் கட்டுரையில் எதைப் பற்றி பார்க்கப் போகிறோம்? (ஆ) அடுத்த கட்டுரையில் எதைப் பற்றி பார்க்கப் போகிறோம்?
6 கிறிஸ்தவர்கள் நற்செய்தியை பிரசங்கிப்பதற்காக முதல் நூற்றாண்டில் இருந்த உலக சூழ்நிலைமையை கடவுள் மாற்றினாரா? அதைப் பற்றி பைபிள் எதுவும் சொல்வதில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், அன்று இருந்த எல்லாரும் நற்செய்தியை தெரிந்துகொள்ள வேண்டுமென்று யெகோவா விரும்பினார்; சாத்தானால் அதை தடுத்து நிறுத்த முடியவில்லை. முதல் நூற்றாண்டில் நற்செய்தியை பிரசங்கிக்க என்ன விஷயங்கள் சீடர்களுக்கு உதவியாக இருந்தது என்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். நம் காலத்தில் நற்செய்தியை பிரசங்கிக்க என்ன விஷயங்கள் உதவியாக இருக்கிறது என்று அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.
பாக்ஸ் ரோமானா
7. பாக்ஸ் ரோமானாவின் அர்த்தம் என்ன, இதை ஏன் ஒரு சிறந்த காலப்பகுதி என்று சொல்லலாம்?
7 முதல் நூற்றாண்டில் ரோமர்களின் ஆட்சியின் கீழ் இருந்த நாடுகளில் சமாதானமான சூழ்நிலைமை இருந்தது. இந்த காலப் பகுதியைத்தான் பாக்ஸ் ரோமானா (அதாவது, ரோம சமாதானம்) என்று லத்தீன் மொழியில் சொல்வார்கள். அந்த சமயத்தில் ஒரு சின்ன கலவரம் வெடித்தால்கூட ரோம அரசாங்கம் அதை உடனே கட்டுப்படுத்திவிடும். ஆனால் இயேசு சொன்ன விதமாகவே ஒருசில பகுதிகளில் போர்கள் நடந்துகொண்டுதான் இருந்தது. (மத். 24:6) சொல்லப்போனால், கி.பி. 70-ல் ரோமர்களே எருசலேமை அழித்தார்கள். அதுமட்டுமல்ல, ரோம சாம்ராஜ்யத்தின் எல்லைப் பகுதியில் ரோமர்களுக்கும் மற்றவர்களுக்கும் சின்னச் சின்ன போர்கள் நடந்துகொண்டுதான் இருந்தது. இருந்தாலும், அவர்களுடைய ஆதிக்கத்தில் இருந்த நிறைய நாடுகள் ஒன்றோடு ஒன்று சமாதானமாக இருந்தது. அதனால் பிரசங்க வேலையை செய்வது சீடர்களுக்கு சுலபமாக இருந்தது. அவர்களால் எங்கு வேண்டுமானாலும் போக முடிந்தது, யாரிடம் வேண்டுமானாலும் நற்செய்தியை சொல்ல முடிந்தது. கிட்டத்தட்ட 200 வருடங்களுக்கு இப்படி சமாதானமான சூழ்நிலைமை இருந்தது. இதுவரை மனித சரித்திரத்திலேயே இத்தனை வருடங்களுக்கு மக்கள் சமாதானமாக இருந்ததில்லை என்று ஒரு புத்தகம் சொல்கிறது.
8. ரோமர்களின் ஆட்சியில் இருந்த சமாதானமான காலத்தை சீடர்கள் எப்படி நல்லபடியாக பயன்படுத்திக்கொண்டார்கள்?
8 மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆரிஜன் (Origen) என்ற பைபிள் ஆராய்ச்சியாளர், அந்த சமாதானமான காலத்தைப் பற்றி அவருடைய புத்தகத்தில் இப்படி எழுதினார்: ‘ரோமர்கள் பல நாடுகளை ஆட்சி செய்தார்கள். அதனால் அந்த நாடுகளில் எல்லாம் சீடர்களால் தடையில்லாமல் பிரசங்கிக்க முடிந்தது. அதோடு, அந்த சாம்ராஜ்யத்தில் இருந்த நாடுகள் ஒன்றோடு ஒன்று சண்டை போட்டுக்கொள்ளவில்லை; அங்கிருந்த மக்கள் எல்லாரும் சமாதானமாக இருந்தார்கள்.’ அதனால், அன்பைப் பற்றியும் சமாதானத்தை பற்றியும் சீடர்கள் பேசினபோது மக்கள் நன்றாக கேட்டார்கள். சீடர்கள் துன்புறுத்தப்பட்டாலும் சமாதானமான காலத்தை நல்லபடியாக பயன்படுத்திக்கொண்டார்கள், நற்செய்தியை எல்லா இடங்களிலும் சொன்னார்கள்.—ரோமர் 12:18-21-ஐ வாசியுங்கள்.
பயணம் செய்வது சுலபமாக இருந்தது
9, 10. முதல் நூற்றாண்டில் பயணம் செய்வது ஏன் சுலபமாக இருந்தது?
9 ரோமர்கள் அவர்களுடைய சாம்ராஜ்யத்தில் இருந்த எல்லா நாடுகளையும் இணைக்கிற விதமாக ரோடுகள் (roads) போட்டார்கள். அந்த ரோடுகளின் மொத்த நீளம் 80,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக இருந்தது. இதனால் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு படைவீரர்களால் சுலபமாக போக முடிந்தது. எங்கேயாவது கலவரம் நடந்தாலோ மற்ற நாடுகள் போர் செய்ய வந்தாலோ அந்த இடங்களுக்கு அவர்களால் உடனடியாக போக முடிந்தது. கிறிஸ்தவர்களும் இந்த ரோடுகள் வழியாகத்தான் காடு, மலை, பாலைவனம் என்று எல்லா இடங்களுக்கும் போய் நற்செய்தியை சொன்னார்கள்.
10 ரோமர்கள் கடல் வழியாகவும் பயணம் செய்தார்கள். அவர்களுடைய சாம்ராஜ்யத்தில் நூற்றுக்கணக்கான துறைமுகங்கள் இருந்தன. ஒரு துறைமுகத்தில் இருந்து இன்னொரு துறைமுகத்திற்கு கடல், ஆறு, கால்வாய் வழியாக போனார்கள். 900-க்கும் அதிகமான கடல் வழி பாதைகளை ரோமர்கள் பயன்படுத்தினார்கள். இது கிறிஸ்தவர்களுக்கும் ரொம்ப உதவியாக இருந்தது. ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு போக அவர்களுக்கு பாஸ்போர்ட், விசா எல்லாம் தேவைப்படவில்லை. அதுமட்டுமில்லாமல் குற்றவாளிகளை ரோமர்கள் ரொம்ப கடுமையாக தண்டித்ததால் கொள்ளைக்காரர்கள் பயமும் அவர்களுக்கு இருக்கவில்லை. இந்த கடல் வழி பாதையில் நிறைய ராணுவ கப்பல்கள் வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருந்ததால் கடல் கொள்ளையர்கள் பயமும் அவர்களுக்கு இருக்கவில்லை. பவுல் கப்பலில் பயணம் செய்தபோதுகூட கடல் கொள்ளையர்களால் ஆபத்து வந்ததாக பைபிள் சொல்லவில்லை, புயல் காற்றினால் பாதிக்கப்பட்டார் என்றுதான் சொல்கிறது. அதனால் முதல் நூற்றாண்டில், ரோட்டில் பயணம் செய்வதும் கப்பலில் பயணம் செய்வதும் பாதுகாப்பாக இருந்தது.—2 கொ. 11:25, 26.
கிரேக்க மொழி
கோடெக்ஸில் வசனங்களை கண்டுபிடிப்பது சுலபமாக இருந்தது (பாரா 12)
11. நற்செய்தியை பிரசங்கிக்க, சீடர்களுக்கு கிரேக்க மொழி எப்படி உதவியாக இருந்தது?
11 ரோமர்கள் ஆட்சி செய்வதற்கு முன்பு கிரேக்க ராஜாவான மகா அலெக்ஸாண்டர் நிறைய நாடுகளை ஆட்சி செய்தார். அந்த நாடுகளில் எல்லாம் கிரேக்க மொழியைத்தான், முக்கியமாக கொய்னி கிரேக்கைத்தான், மக்கள் அதிகமாக பேசினார்கள். அதனால் அந்த மொழியிலேயே சீடர்கள் நற்செய்தியை பிரசங்கித்தார்கள். அதோடு, எகிப்தில் இருந்த யூதர்கள் எபிரெய வேதாகமத்தை ஏற்கெனவே கிரேக்க மொழியில் மொழிபெயர்த்து இருந்தார்கள். இதை செப்டுவஜன்ட் (Septuagint) என்று சொல்வார்கள்; இதைப் பற்றி மக்களும் நன்றாகத் தெரிந்து வைத்திருந்தார்கள். அதனால், எபிரெய வேதாகமத்தில் இருந்த வசனங்களை சீடர்களால் மக்களுக்கு விளக்க முடிந்தது. கிறிஸ்தவர்களும் பைபிளில் இருந்த மற்ற புத்தகங்களை கிரேக்க மொழியிலேயே எழுதினார்கள். ஏனென்றால், கிரேக்க மொழி சொல்வளம் நிறைந்த மொழியாக இருந்ததால் பைபிளில் இருக்கிற முக்கியமான விஷயங்களை விளக்குவது ரொம்ப சுலபமாக இருந்தது.
12. (அ) கோடெக்ஸ் என்றால் என்ன, இதை பயன்படுத்துவது ஏன் சுலபமாக இருந்தது? (ஆ) கிறிஸ்தவர்கள் எந்த சமயத்தில் இருந்து கோடெக்ஸை பயன்படுத்த ஆரம்பித்தார்கள்?
12 முதல் நூற்றாண்டில் இருந்த கிறிஸ்தவர்கள் பைபிளைப் பற்றி சொல்லிக்கொடுக்க சுருள்களை பயன்படுத்தினார்கள். ஆனால், சுருள்களில் ஒரு வசனத்தை கண்டுபிடிப்பது ரொம்ப கஷ்டம். ஏனென்றால், அதை கண்டுபிடிக்க அந்த சுருளை முழுவதும் திறக்க வேண்டும், திரும்பவும் அதை சுருட்டி வைக்க வேண்டும். அதோடு, சுருள்களில் பொதுவாக ஒரு பக்கத்தில் மட்டும்தான் எழுதப்பட்டிருக்கும். அதனால் மத்தேயு புத்தகத்தை எழுதுவதற்கு மட்டுமே ஒரு முழு சுருள் தேவைப்பட்டது! சீக்கிரத்திலேயே மக்கள் கோடெக்ஸை (codex) பயன்படுத்த ஆரம்பித்தார்கள். அது பார்ப்பதற்கு புத்தகத்தை போல் இருந்தது. அதில் வசனங்களை தேடி கண்டுபிடிப்பது ரொம்ப சுலபமாக இருந்தது. கிறிஸ்தவர்கள் கோடெக்ஸை சீக்கிரமே பயன்படுத்த ஆரம்பித்ததாக சரித்திராசிரியர்கள் சொல்கிறார்கள். அதுவும் 2-வது நூற்றாண்டில் இருந்து இது ரொம்ப பிரபலமாக ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள்.
ரோம சட்டம்
13, 14. (அ) பவுல் ரோம குடிமகனாக இருந்ததால் அவருக்கு எப்படி பாதுகாப்பு கிடைத்தது? (ஆ) ரோம சட்டம் கிறிஸ்தவர்களுக்கு எப்படி உதவியாக இருந்தது?
13 முதல் நூற்றாண்டில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு ரோம சட்டமும் ரொம்ப உதவியாக இருந்தது. உதாரணத்திற்கு, பவுல் ஒரு ரோம குடிமகனாக இருந்ததால் அவருக்கு நிறைய தடவை பாதுகாப்பு கிடைத்தது. ஒருமுறை, எருசலேமில் ரோம படை காவலர்கள் பவுலை கைது செய்தார்கள். அவரை சாட்டையால் அடிக்க போனபோது, தான் ஒரு ரோம குடிமகன் என்று பவுல் சொன்னார். ரோம குடிமகனாக இருக்கிற ஒருவரை, விசாரணை செய்வதற்கு முன்பே தண்டிப்பது சட்டப்படி குற்றம் என்று அவர் சொன்னார். “இதைக் கேட்டதும், அவரைச் சித்திரவதை செய்து விசாரிக்கவிருந்த ஆட்கள் அவரைவிட்டு விலகினார்கள்; படைத் தளபதியோ, அவர் ஒரு ரோமக் குடிமகன் என்பதை அறிந்துகொண்டதாலும் அவரைக் கட்டி வைத்ததாலும் பயந்துபோனார்” என்று பைபிள் சொல்கிறது.—அப். 22:25-29.
14 பவுல் ரோம குடிமகனாக இருந்ததால்தான் பிலிப்பி ஊரில் இருந்த அதிகாரிகள் அவரை தயவாக நடத்தினார்கள். (அப். 16:35-40) எபேசுவில் ஒரு பெரிய கும்பல் சில கிறிஸ்தவர்களை பிடித்து வெறித்தனமாக தாக்க நினைத்தபோது, ஒரு அரசாங்க அதிகாரி அதை தடுத்து நிறுத்தினார். அப்படி செய்வது சட்ட விரோதமானது என்று சொல்லி அந்த கும்பலை எச்சரித்தார். (அப். 19:35-41) பவுல் செசரியாவில் இருந்தபோது ரோம குடியுரிமையை பயன்படுத்தி ரோம அரசரிடம் மேல்முறையீடு செய்தார். இதனால் ரோம அரசரிடமே நற்செய்தியை ஆதரித்து அவரால் பேச முடிந்தது. (அப். 25:8-12) ‘நற்செய்திக்காக வழக்காடி அதைச் சட்டப்பூர்வமாக நிலைநாட்டுவதற்காக’ கிறிஸ்தவர்கள் ரோம சட்டத்தை பயன்படுத்தினார்கள் என்று இதிலிருந்து நன்றாக தெரிகிறது.—பிலி.1:7.
பல நாடுகளில் பரவி இருந்த யூதர்கள்
15. முதல் நூற்றாண்டில் யூதர்கள் எங்கெல்லாம் பரவி இருந்தார்கள்?
15 முதல் நூற்றாண்டில் யூதர்கள் இஸ்ரவேல் தேசத்தில் மட்டுமல்ல பல நாடுகளிலும் வாழ்ந்து வந்தார்கள். உலகம் முழுவதும் நற்செய்தியை சொல்ல இதுவும் சீடர்களுக்கு உதவியாக இருந்தது. எப்படி என்று பார்க்கலாம்... ரொம்ப காலத்திற்கு முன்பே அசீரியர்கள் நிறைய யூதர்களை கைதிகளாக பிடித்துக்கொண்டு போனார்கள். அதற்குப் பிறகு பாபிலோனியர்கள் ஆட்சி செய்த சமயத்தில், மீதியிருந்த யூதர்களை பாபிலோனியர்கள் கைதிகளாக பிடித்துக்கொண்டு போனார்கள். பெர்சியர்கள் பாபிலோனை ஆட்சி செய்துகொண்டு இருந்தபோது பெர்சிய சாம்ராஜ்யம் முழுவதிலும் யூதர்கள் இருந்தார்கள். இதனால்தான் யூதர்கள் நிறைய நாடுகளில் பரவி இருந்தார்கள். (எஸ். 9:31) முதல் நூற்றாண்டில் ரோம சாம்ராஜ்யம் முழுவதிலும் யூதர்கள் வாழ்ந்தார்கள். ரோமர்கள் ஆட்சி செய்த எகிப்து, கிரீஸ், ஆசியா மைனர் (துருக்கி), மெசொப்பொத்தாமியா (ஈராக்), வட ஆப்பிரிக்காவில் இருந்த மற்ற பகுதிகளில் எல்லாம் யூதர்கள் வாழ்ந்தார்கள். அந்த சாம்ராஜ்யத்தில் இருந்த 6 கோடி மக்களில் 40 லட்சம் பேர் யூதர்கள் என்று ஒரு புள்ளிவிவரம் காட்டியது. யூதர்கள் இப்படி நிறைய நாடுகளில் பரவி இருந்தாலும் அவர்களுடைய வணக்க முறையை விட்டுவிடாமல் இருந்தார்கள்.—மத். 23:15.
16, 17. (அ) யூதர்கள் நிறைய நாடுகளில் பரவி இருந்ததால் அங்கிருந்த மக்கள் எப்படி பயனடைந்தார்கள்? (ஆ) கிறிஸ்தவர்கள் யூதர்களை எந்த விதத்தில் பின்பற்றினார்கள்?
16 யூதர்கள் இப்படி பல நாடுகளில் பரவி இருந்ததால் அந்த நாட்டு மக்களுக்கு எபிரெய வேதாகமத்தைப் பற்றியும் யூதர்களுடைய மத நம்பிக்கைகளைப் பற்றியும் தெரிந்திருந்தது. உதாரணத்திற்கு, ஒரே ஒரு உண்மையான கடவுள்தான் இருக்கிறார், அவரை வணங்குகிறவர்கள் அவர் கொடுத்திருக்கிற கட்டளைகளின்படி வாழ வேண்டும் என்று தெரிந்து வைத்திருந்தார்கள். எபிரெய வேதாகமத்தை கடவுள்தான் கொடுத்தார் என்றும் அதில் மேசியாவை பற்றிய தீர்க்கதரிசனங்கள் இருக்கிறது என்றும் அவர்கள் புரிந்து வைத்திருந்தார்கள். (லூக். 24:44) அதனால், கிறிஸ்தவர்கள் நற்செய்தியை பிரசங்கித்தபோது அவர்கள் சொன்ன சில விஷயங்கள் யூதர்களுக்கும் யூதர்களாக இல்லாதவர்களுக்கும் ஏற்கெனவே தெரிந்திருந்தது. நற்செய்தியின் மீது ஆர்வம் காட்டின ஜனங்களை கண்டுபிடிப்பதற்காக பவுல் ஜெபக்கூடங்களுக்கு அடிக்கடி போனார். ஏனென்றால், கடவுளை வணங்குவதற்காகவும் பைபிள் வசனங்களை படித்து புரிந்துகொள்வதற்காகவும் யூதர்கள் அங்குதான் வந்தார்கள்.—அப்போஸ்தலர் 17:1, 2-ஐ வாசியுங்கள்.
17 யூதர்கள் கடவுளை வணங்குவதற்காக ஜெபக்கூடங்களிலோ, திறந்தவெளியிலோ கூடினார்கள். அவர்கள் அங்கு பாட்டு பாடினார்கள், ஜெபம் செய்தார்கள், பைபிளைப் பற்றி பேசினார்கள். முதல் நூற்றாண்டில் இருந்த கிறிஸ்தவர்களும் அதேபோல் செய்தார்கள். இன்று நாமும் அதேபோல்தான் சபை கூட்டங்களை நடத்துகிறோம்.
யெகோவா உதவி செய்தார்
18, 19. (அ) முதல் நூற்றாண்டில் இருந்த சூழ்நிலைமை கிறிஸ்தவர்களுக்கு எப்படி உதவியாக இருந்தது? (ஆ) இந்த கட்டுரையை படித்ததற்குப் பிறகு யெகோவாவை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
18 முதல் நூற்றாண்டில் இருந்தது போன்ற ஒரு காலப்பகுதி சரித்திரத்திலேயே இருந்ததில்லை. ஏனென்றால், ரோம சாம்ராஜ்யத்தில் ரொம்ப சமாதானமான சூழல் இருந்தது, நிறைய ஜனங்கள் ஒரே மொழியை பேசினார்கள், ரோம சட்டமும் மக்களுக்கு பாதுகாப்பை கொடுத்தது. அந்த சமயத்தில் பயணம் செய்வது மக்களுக்கு சுலபமாக இருந்தது, மற்ற நாடுகளில் இருந்த மக்களுக்கு யூதர்களைப் பற்றியும் எபிரெய வேதாகமத்தைப் பற்றியும் நன்றாகத் தெரிந்திருந்தது. கடவுள் கொடுத்த வேலையை தொடர்ந்து செய்வதற்கு இதெல்லாம் சீடர்களுக்கு உதவியாக இருந்தது.
19 இயேசு பூமியில் வாழ்வதற்கு சுமார் 400 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த பிளேட்டோ என்ற கிரேக்க தத்துவஞானி, ‘நம்மள படைச்ச கடவுளை பத்தி தெரிஞ்சுக்கிறது ரொம்ப கஷ்டம், அதுவும் அவரை பத்தி உலகத்துல இருக்கிற எல்லா மக்களுக்கும் சொல்றது நடக்காத காரியம்’ என்று சொன்னார். ஆனால் “மனிதர்களால் செய்ய முடியாத காரியங்களைக் கடவுளால் செய்ய முடியும்” என்று இயேசு சொன்னார். (லூக். 18:27) அப்படியென்றால், யெகோவாவின் உதவியால்தான் சீடர்களால் பிரசங்க வேலையை செய்ய முடிந்தது என்று நன்றாகத் தெரிகிறது. ‘எல்லாத் தேசத்தாருக்கும்’ நற்செய்தியை சொல்ல வேண்டும், தம்மைப் பற்றி எல்லாரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று யெகோவா இப்போதும் விரும்புகிறார். (மத். 28:19) நற்செய்தி இன்று உலகம் முழுவதும் எப்படி பிரசங்கிக்கப்படுகிறது என்று அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.