பேயால் நோயா?
நோய் என்ற ஒன்று தோன்றியிருக்கவே கூடாது. பூரண சுகத்தோடு என்றென்றும் வாழவே கடவுள் நம்மை படைத்தார். ஆதி தாய் தகப்பனாகிய ஆதாம் ஏவாளை பாவத்திற்கு வழிநடத்திய சமயத்திலிருந்தே மனித குடும்பத்தை வாட்டியெடுக்கிற வியாதி, வேதனை, மரணம் ஆகியவற்றிற்குக் காரணமானவன் ஆவி சிருஷ்டியாகிய பிசாசாகிய சாத்தான்.—ஆதியாகமம் 3:1-5, 17-19; ரோமர் 5:12.
ஆவி உலகின் தலையீடே எல்லா வியாதிக்கும் நேரடிக் காரணம் என்பதை அது அர்த்தப்படுத்துகிறதா? முதல் கட்டுரையில் சிந்தித்தபடி அநேகர் அப்படித்தான் நினைக்கின்றனர். குழந்தை ஓமாஜியின் பாட்டியும் அப்படித்தான் நினைத்தார்கள். வெப்பமண்டலப் பிரதேசங்களில் பால்மணம் மாறா பிஞ்சுகளை கசக்கிப்பிழியும் வியாதியான ஓமாஜிக்கு வந்த கொடிய வாந்திபேதி உண்மையில் காணக்கூடாத ஆவிகளின் விளையாட்டா?
சாத்தானின் பங்கு
பைபிள் இந்தக் கேள்விக்கு மிகத் தெளிவாக பதிலளிக்கிறது. முதலாவதாக, இறந்துபோன நம்முடைய மூதாதையரால் உயிர்வாழ்வோரை ஒன்றும் செய்ய முடியாது என்று அது காட்டுகிறது. ஆட்கள் இறந்துபோகையில் அவர்கள் “ஒன்றும் அறியார்கள்.” இறந்தபின் வாழ்ந்துகொண்டிருக்கும் ஆவி எதுவும் அவர்களுக்குள் இல்லை. அவர்கள் கல்லறையில் ஆழ்ந்த நித்திரையில் இருக்கின்றனர்; அங்கு “செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.” (பிரசங்கி 9:5, 10) எந்த விதத்திலும் செத்தவர்கள் உயிரோடிருப்பவர்களை வியாதியில் தள்ள முடியாது!
எனினும், பொல்லாத ஆவிகள் இருக்கின்றன என பைபிள் சொல்கிறது. பிரபஞ்சத்தில் தோன்றிய முதல் கலகக்காரன், சாத்தான் என அறியப்படும் ஆவி சிருஷ்டியே. மற்றவர்கள் அவனோடு சேர்ந்துகொண்ட போது பேய்கள் என அழைக்கப்படலாயினர். சாத்தானாலும் பேய்களாலும் வியாதிப்படுத்த முடியுமா? முடிந்திருக்கிறது. வியாதியைச் சுகப்படுத்தும் இயேசுவின் அற்புதங்கள் சிலவற்றில் பேய்களைத் துரத்துவதும் உட்பட்டிருந்தன. (லூக்கா 9:37-43; 13:10-16) இருந்தபோதிலும், இயேசு குணப்படுத்திய பெரும்பாலான வியாதிகளுக்கு பேய்களே நேரடி காரணகர்த்தாக்கள் அல்ல. (மத்தேயு 12:15; 14:14; 19:2) அவ்விதமாகவே இன்றும், இயற்கையாக வியாதி வருகிறதே தவிர அதற்கு மீமானிட சக்திகளை காரணம்காட்ட முடியாது.
பில்லிசூனியத்தைப் பற்றி என்ன? “கர்த்தரின் [“யெகோவாவின்,” NW] நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்” என நீதிமொழிகள் 18:10 உறுதியளிக்கிறது. “பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்” என்கிறது யாக்கோபு 4:7. கடவுள் தமக்கு உண்மையுடன் இருப்பவர்களை பில்லிசூனியத்திலிருந்தும் எந்தவித மீமானிட சக்திகளிடமிருந்தும் பாதுகாப்பார். “சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்ற இயேசுவின் வார்த்தைகள் இதையும் மறைமுகமாக அர்த்தப்படுத்துகின்றன.—யோவான் 8:32.
‘யோபுவைப் பற்றி என்ன? அவர் வியாதிப்படக் காரணம் பொல்லாத ஆவி அல்லவா?’ என்பதாக சிலர் கேட்கலாம். உண்மைதான், யோபுவின் வியாதிக்கு சாத்தானே காரணம் என பைபிள் சொல்கிறது. ஆனால் யோபுவின் விஷயமோ விதிவிலக்கானது. பேய்களின் நேரடித் தாக்குதலிலிருந்து யோபுவைக் கடவுள் வெகு காலம் பாதுகாத்து வந்தார். பின்பு யோபுவை வியாதியினால் அடிக்கும்படி யெகோவாவிடம் சாத்தான் சவால்விட்டான். பெரும் விவாதங்கள் உட்பட்டிருந்ததால் யோபுவினுடைய விஷயத்தில் மாத்திரம் தம் வணக்கத்தானாகிய இவனுக்குக் கொடுக்கும் பாதுகாப்பை ஓரளவு யெகோவா விலக்கிக் கொண்டார்.
இருப்பினும் கடவுள் அனுமதிப்பதற்கும் ஓர் எல்லை இருந்தது. யோபுவை உபத்திரவிக்கும்படி சாத்தானை அனுமதிக்கையில் அவனால் கொஞ்ச நாட்களுக்கு யோபுவை வியாதியினால் ஆட்டிப்படைக்க முடிந்தது, ஆனால் அவரைக் கொல்ல முடியவில்லை. (யோபு 2:5, 6) இறுதியில் யோபுவின் துன்பங்கள் தீர்ந்தன. உத்தமத் தன்மையைக் காத்துக்கொண்டதற்காக யெகோவாவும் அவரை முழுநிறைவாக ஆசீர்வதித்து பலனளித்தார். (யோபு 42:10-17) யோபுவின் உத்தமத்தன்மை நிரூபணமாக்கிய நியமங்கள், வெகுகாலத்திற்கு முன்பே பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன; இவை எல்லாருக்கும் தெரிந்தவையே. இதுபோன்ற மற்றொரு பரீட்சைக்கு இனி அவசியமே இல்லாதளவுக்கு நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
சாத்தான் எப்படி செயல்படுகிறான்?
கிட்டத்தட்ட எல்லா சம்பவத்திலும் சாத்தானுக்கும் மனித வியாதிக்கும் இடையே இருக்கும் ஒரே சம்பந்தம், சாத்தான் முதல் தம்பதியினரை சோதித்ததும் அவர்களைப் பாவத்தில் விழத்தள்ளியதும்தான். சாத்தானும் அவனுடைய பேய்களுமே எல்லா வியாதிக்கும் நேரடி காரணம் அல்ல. என்றாலும், சிலசமயங்களில் புத்திசாலித்தனமற்ற தீர்மானங்களை எடுக்கவும் நம்முடைய விசுவாசத்தை விட்டுக்கொடுக்கவும் செய்வதன் மூலம் நாம் வியாதியடைய செய்கிறான் சாத்தான். அவன், ஆதாம் ஏவாளை பில்லிசூனியத்தில் ஈடுபடச் செய்யவில்லை, கொலை செய்யவில்லை, வியாதியில் தள்ளவில்லை. கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போகும்படி ஏவாளை இணங்கச் செய்தான். ஏவாளின் கீழ்ப்படியாமை என்னும் அடிச்சுவடை ஆதாமும் பின்பற்றினான். அதன் விளைவே வியாதியும் மரணமும்.—ரோமர் 5:19.
இஸ்ரவேல் தேசத்தாரை சபிக்க, பிலேயாம் என்னும் உண்மையற்ற தீர்க்கதரிசியை மோவாபின் ராஜா கூலிக்கு அழைத்தான். இஸ்ரவேலர்கள் மோவாபின் எல்லைகளில் பாளயமிறங்கியிருந்தது அவர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தது. பிலேயாம் இஸ்ரவேலை சபிப்பதற்கு முயன்றான், மிஞ்சியது படுதோல்வியே. ஏனெனில் அந்தத் தேசம் யெகோவாவின் பாதுகாக்கும் கரங்களில் இருந்தது. அதன்பின் இஸ்ரவேலர்களை விக்கிரகாராதனையிலும் பாலியல் ஒழுக்கக்கேட்டிலும் சிக்க வைக்க மோவாபியர்கள் முயன்றனர். இந்தத் தந்திரம் பலித்தது. இஸ்ரவேலர்கள் யெகோவாவின் பாதுகாப்பை இழந்தனர்.—எண்ணாகமம் 22:5, 6, 12, 35; 24:10; 25:1-9; வெளிப்படுத்துதல் 2:14.
இந்தப் பூர்வகால பதிவிலிருந்து நாம் முக்கிய பாடம் ஒன்றைக் கற்றுக்கொள்ளலாம். கடவுளின் உதவியே பொல்லாத ஆவிகளின் நேரடித் தாக்குதலிருந்து அவருடைய உண்மையுள்ள வணக்கத்தாரைப் பாதுகாக்கிறது. இருப்பினும், தனிப்பட்டவர்கள் தங்கள் விசுவாசத்திலிருந்து வழுவிப்போகும்படி செய்ய சாத்தான் முயற்சிப்பான். ஒழுக்கக்கேடு என்னும் தூண்டிலில் சிக்க வைக்க அவன் வழிதேடலாம். அல்லது கெர்ச்சிக்கிற சிங்கம் போல் செயல்பட்டு, ஏதேனும் விதத்தில் ஜனங்களை பயமுறுத்தி கடவுளுடைய பாதுகாப்பை இழக்கும்படி செய்ய முயற்சிப்பான். (1 பேதுரு 5:8) அதன் காரணமாகத்தான் அப்போஸ்தலனாகிய பவுல் சாத்தானை “மரணத்துக்கு அதிகாரி” என அழைத்தார்.—எபிரெயர் 2:14.
வியாதியிலிருந்து பாதுகாப்பதற்காக தாயத்துகளையும் மாந்திரீக கயிறுகளையும் கட்ட வைப்பதற்கு ஓமாஜியின் பாட்டியம்மா ஹாவாவை இணங்க வைக்க முயன்றார். ஹாவா இணங்கிப் போயிருந்தால் என்ன ஏற்பட்டிருக்கும்? யெகோவா தேவனை முழுமையாக நம்பவில்லை என வெளிக்காட்டி இருப்பாள்; அதன் பின்னும் அவருடைய பாதுகாக்கும் கரங்களை அவள் ஒருபோதும் நம்பியிருக்க மாட்டாள்.—யாத்திராகமம் 20:5; மத்தேயு 4:10; 1 கொரிந்தியர் 10:21.
இணங்க வைக்கும் முயற்சியில் யோபுவையும்கூட சாத்தான் விட்டுவைக்கவில்லை. அவருடைய குடும்பத்தை, செல்வத்தை, ஆரோக்கியத்தை அபகரித்ததோடு அவன் திருப்தியடைந்துவிடவில்லை. “தேவனைத் தூஷித்து ஜீவனைவிடும்” என்று அவரது மனம் புண்படும்படி அவருடைய மனைவி திட்டவும் செய்தாள். (யோபு 2:9) பின்னர் அவருடைய போலி நண்பர்கள் மூவர் சந்திக்க வந்தனர். யோபுவின் வியாதிக்கு அவரே காரணம் என அம்மூவரும் ஒன்றாக உறுதிப்படுத்த பெருமளவு முயன்றனர். (யோபு 19:1-3) யோபுவின் பலவீனமான இந்த நிலையை சாத்தான் தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அவரை உற்சாகமிழக்கச் செய்வதற்கும் யெகோவாவின் நீதியின் பேரிலிருந்த நம்பிக்கையைக் குலைத்துப் போடுவதற்கும் முயன்றான். இருந்தபோதிலும், யோபு தொடர்ந்து யெகோவாவே துணை என அவரிடம் தஞ்சம் புகுந்தார்.—ஒப்பிடுக: சங்கீதம் 55:22.
வியாதிப்படுகையில், நாமும் சோர்வில் வீழ்ந்துவிடுவோம். அப்படிப்பட்ட சமயத்தில், நம்முடைய விசுவாசத்தை விட்டுக்கொடுக்கும் விதத்தில் நாம் நடந்துகொள்ள சாத்தான் உடனடியாக ஏதாவது செய்வான். எனவே வியாதிப்படுகையில், நம்முடைய துன்பத்திற்கு முக்கிய காரணம் சுதந்தரிக்கப்பட்ட அபூரணமே தவிர ஏதோ மீமானிட செல்வாக்கல்ல என்பதை எப்போதும் மனதில் வைக்க வேண்டியது முக்கியம். மரணமடைவதற்கு வெகு காலத்திற்கு முன்பே உண்மையுள்ள ஈசாக்குக்கு கண்பார்வை இழந்ததை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். (ஆதியாகமம் 27:1) இதற்குக் காரணம் முதிர்வயதே தவிர பொல்லாத ஆவிகள் அல்ல. பிரசவிக்கையில் ராகேல் இறந்துபோனாள்; இதற்குக் காரணம் மனித குறைபாடே தவிர சாத்தான் அல்ல. (ஆதியாகமம் 35:17-19) பூர்வ காலத்தில் வாழ்ந்த எல்லா உண்மையுள்ளவர்களும் ஒரு சமயத்தில் மரித்தனர்; காரணம், சுதந்தரிக்கப்பட்ட அபூரணமே தவிர மாயமந்திரமோ சாபங்களோ அல்ல.
நமக்கு வரும் ஒவ்வொரு வியாதிக்கும் காணக்கூடாத ஆவிகளே காரணம் என நாம் கற்பனை செய்ய ஆரம்பித்தால் அதுவே நம்மை விழவைக்கும் கண்ணி ஆகும். இது ஆவிகளைப் பற்றிய வேண்டாத பயத்தை நமக்குள் தூண்டிவிடும். அதன்பிறகு வியாதிப்படுகையில் பேய்களிடமிருந்து விலகியிருப்பதற்குப் பதிலாக அவற்றை சாந்தப்படுத்த முயலுவதில் இறங்கிவிடுவோம். சாத்தானுக்கு பயந்து ஆவியுலகத் தொடர்புடைய காரியங்களை நாடும்படி இணங்கினால் அது உண்மை கடவுளான யெகோவாவுக்கு நம்பிக்கை துரோகம் செய்வதாக இருக்கும். (2 கொரிந்தியர் 6:15) கடவுளிடம் நமக்கு ஆரோக்கியமான பயம் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட பயம் நம்மை வழிநடத்த நாம் அனுமதிக்க வேண்டும். இந்த எதிரியைப் பற்றிய மூடநம்பிக்கை சார்ந்த பயம் நம்மை வழிநடத்த அனுமதிக்கக்கூடாது.—வெளிப்படுத்துதல் 14:7.
ஓமாஜி என்னும் பச்சிளங்குழந்தைக்குப் பொல்லாத ஆவிகளிடமிருந்து விலகியிருக்க ஏற்கெனவே சிறந்த பாதுகாப்பு கிடைத்திருந்தது. அப்போஸ்தலனாகிய பவுலின்படி, அக்குழந்தையை “பரிசுத்தமான”வளாக கடவுள் கருதுகிறார்; ஏனெனில் அவளுடைய தாய்தான் விசுவாசி ஆயிற்றே. தன் மகளுக்குப் பரிசுத்த ஆவியைத் தந்து உதவும்படி கடவுளிடம் அந்தத் தாய் ஜெபிக்க முடியும். (1 கொரிந்தியர் 7:14) இப்படிப்பட்ட திருத்தமான அறிவை பெறும் பாக்கியம் ஹாவாவுக்கு இருந்ததால் ஓமாஜிக்கு தாயத்துகளைக் கட்டி சமாளிக்கலாம் என நினைக்காமல் நல்ல மருத்துவ சிகிச்சையை அவளால் நாடமுடிந்தது.
வியாதிக்கான பல காரணங்கள்
அநேகர் ஆவிகளை நம்புவதில்லை. அவர்கள் சுகவீனமடைகையில், அவர்களுக்கு வசதியிருந்தால் டாக்டரிடம் செல்கின்றனர். வியாதிப்பட்டவர் டாக்டரிடம் போயும் குணமாகாமல் போவதும் உண்டு. டாக்டர்கள் அற்புதங்களை நிகழ்த்தி குணப்படுத்த முடியாது. ஆனால் சுகப்படுத்தக்கூடிய வியாதிகளுக்குக்கூட டாக்டரிடம் செல்ல மூடநம்பிக்கை பழக்கமுள்ள பலர் தயங்குகின்றனர். இதனால் காலதாமதம் ஆவதும் உண்டு. அவர்கள் ஆவிக்கொள்கை சார்ந்த சுகப்படுத்தும் முறைகளை முதலில் முயற்சிப்பார்கள், சரிப்பட்டுவரவில்லை என்றால் கடைசியில்தான் டாக்டரிடம் செல்வார்கள். இதுவே அநேகருக்குச் சாவுமணி அடிக்கிறது.
இன்னும் சிலர் அறியாமையால் அகால மரணத்தைத் தழுவலாம். அவர்களால் நோய் அறிகுறிகளை பகுத்தறிய முடியாது; வியாதியைத் தவிர்க்க என்ன நடைமுறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதும் தெரியாது. தேவையில்லாமல் துன்பத்தில் சிக்கிக்கொள்வதைத் தவிர்க்க ‘நாலும்’ தெரிந்திருப்பது உதவும். வியாதிப்பட்ட தங்கள் கண்மணிகளை படிப்பறிவுள்ள தாய்களைக் காட்டிலும் படிப்பறிவில்லா தாய்களே பெரிதும் இழக்கின்றனர். ஆம் அறியாமை பலிவாங்கிவிடுகிறது.
அசட்டையாக இருப்பது வியாதிக்கான மற்றொரு காரணம். உதாரணமாக, ஈக்கள் மொய்க்கும் பண்டங்களை சாப்பிடுவது அல்லது சமைக்க ஆரம்பிக்கும் முன் சுத்தமாக கைகளைக் கழுவாமல் இருப்பது போன்ற காரணங்களாலேயே அநேகர் வியாதிப்படுகின்றனர். மலேரியா பரவும் இடங்களில் கொசுவலைகளைப் பயன்படுத்தாமல் தூங்குவது வியாதியை விலைகொடுத்து வாங்குவதைப் போல் இருக்கும்.a ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, “வந்தப் பின் காப்பதை விட வருமுன் காப்பது மேல்” என்பது எப்போதுமே உண்மை.
மோசமான வாழ்க்கைமுறை லட்சக்கணக்கானோர் நோய் அடையவும் அகால மரணத்தை முத்தமிடவும் வைத்திருக்கிறது. குடிவெறி, பாலியல் ஒழுக்கக்கேடு, போதைப் பொருட்கள், புகையிலை என அனைத்துமே பலரின் ஆரோக்கியத்தைச் சீரழித்திருக்கின்றன. இப்படிப்பட்ட கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி ஒருவர் வியாதிப்பட்டால், யாரோ மாயமந்திரத்தை ஏவிவிட்டதால் அல்லது துஷ்ட ஆவி தாக்கியதால்தான் கஷ்டப்படுகிறார் என்றா சொல்ல முடியும்? இல்லை. யானை தன் தலையில் தானே மண்ணள்ளிப் போட்டுக் கொள்வது போல் அந்த ஆளே அவருடைய வியாதிக்குக் காரணமாகிறார். ஆவிகளின் மேல் பழிசுமத்துவது மோசமான வாழ்க்கைப்போக்கின் விளைவுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள மறுப்பதைக் குறிக்கிறது.
எல்லாமே நம் கையில் இல்லை என்பது என்னவோ உண்மைதான். உதாரணமாக, கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகளால் அல்லது தூய்மைக் கேட்டால் வியாதி வரலாம். இதுதானே குழந்தை ஓமாஜிக்கும் ஏற்பட்டது. வாந்திபேதிக்கான காரணத்தை அவளுடைய தாய் அறியவில்லை. அவளுடைய குழந்தைகள் மற்ற குழந்தைகளைப் போல் ஆ. . .ஊ. . .ன்னா. . . வியாதியில் விழுந்துவிடுபவர்கள் அல்ல. அதற்குக் காரணம் அவளுடைய வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தபத்தமாக வைத்துக் கொண்டாள், சமைக்க ஆரம்பிப்பதற்கு முன் எப்போதும் கைகளை நன்கு கழுவினாள். எல்லா குழந்தைகளுமே அவ்வப்போது சுகவீனமடைவது சகஜம்தான். சுமார் 25 வகை தொற்றுகள் வாந்திபேதியை உண்டுபண்ணுகின்றன. ஓமாஜியைத் தாக்கியது எந்த வகை நோய் என்று யாருக்குமே தெரியாமலும் போகலாம்.
நித்திய தீர்வு
வியாதிக்குக் காரணம் கடவுள் அல்ல. “தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல.” (யாக்கோபு 1:13) தம்முடைய வணக்கத்தாரில் யாரேனும் வியாதிப்பட்டால் அவரை யெகோவா கைவிடுவதில்லை; ஆவிக்குரிய விதமாக பலப்படுத்துகிறார். “படுக்கையின்மேல் வியாதியாய்க் கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார்; அவனுடைய வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவீர்.” (சங்கீதம் 41:3) கடவுள் பரிவிரக்கமுள்ளவர். அவர் நமக்கு உதவவே விரும்புகிறார், உபத்திரவப்படுத்த அல்ல.
வியாதிக்கு நித்திய தீர்வு யெகோவாவின் கரங்களில் இருப்பது உண்மை. அதுவே இயேசுவின் மரணமும் உயிர்த்தெழுதலும். இயேசுவின் கிரயபலியின் மூலம் நல்லிருதயமுள்ளோர் பாவமுள்ள நிலையிலிருந்து மீட்கப்பட்டிருக்கின்றனர்; இறுதியில், நந்தவனத்தைப் போன்ற அழகிய பூமியில் பூரண ஆரோக்கியத்தையும் நித்திய ஜீவனையும் பெறும் வாய்ப்பு இருக்கிறது. (மத்தேயு 5:5; யோவான் 3:16) கடவுளுடைய ராஜ்யம் சாதிக்கவிருக்கும் உண்மையான சுகப்படுத்துதலின் ஒரு முன்காட்சியே இயேசு நடத்திய அற்புதங்கள். அதோடு மட்டுமல்ல கடவுள் சாத்தானையும் அவனுடைய பேய்களையும் பூண்டோடு அழித்துவிடுவார். (ரோமர் 16:20) யெகோவாவில் விசுவாசம் வைப்பவர்களுக்கு விவரிக்க முடியாதளவு அற்புதமான ஆசீர்வாதங்கள் காத்திருப்பது உண்மையே. நாம் இப்போது செய்ய வேண்டியதெல்லாம் பொறுமையோடு சகித்திருப்பதே.
அதற்கிடையில், நடைமுறை ஞானத்தையும் ஆவிக்குரிய வழிநடத்துதலையும் பைபிளின் வாயிலாகவும் உலகமுழுவதுமுள்ள உண்மை வணத்தாராகிய சகோதரத்துவத்தின் வாயிலாகவும் யெகோவா தந்துகொண்டிருக்கிறார். ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும் கெட்ட பழக்கங்களைத் தவிர்ப்பதற்கான வழிவகைகளை நமக்குக் காட்டுகிறார். பிரச்சினைகள் தலைதூக்குகையில் உதவிக் கரம் நீட்டி ஓடோடிவரும் உண்மை நண்பர்களையும் நமக்குக் கொடுத்திருக்கிறார்.
மீண்டும் யோபுவைப் பற்றி சற்று சிந்திப்போம். சூனியக்காரரிடம் யோபு சென்றிருப்பாரேயானால் அது போல மோசமான காரியம் வேறு இருந்திருக்காது! அவர் கடவுளின் பாதுகாப்பை இழந்திருப்பார், தான் எதிர்ப்பட்டுக் கொண்டிருந்த கடுமையான சோதனைக்குப் பின் பெறவிருந்த அனைத்து ஆசீர்வாதங்களையும் இழந்திருப்பார். கடவுள் யோபுவை மறந்துவிடவில்லை; அதேபோல் நம்மையும் மறக்க மாட்டார். “யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்” என்கிறார் சீஷனாகிய யாக்கோபு. (யாக்கோபு 5:11) நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காமல் நிலைத்திருந்தால் நாமும் அபரிமிதமான ஆசீர்வாதங்களை கடவுளுடைய ஏற்ற காலத்தில் பெற்றுக்கொள்வோம்.
ஓமாஜி குட்டிக்கு என்ன நேர்ந்தது? காவற்கோபுர பத்திரிகையின் துணை பத்திரிகையான விழித்தெழு!-வில், நீரிழப்பை ஈடுசெய்யும் பானத்தை b (Oral rehydration therapy) பற்றி வெளியிடப்பட்ட கட்டுரை அவளுடைய அம்மாவின் நினைவுக்கு வந்தது. அதிலிருந்த அறிவுரைகளை பின்பற்றி ஓமாஜிக்கு அந்தப் பானத்தை தயாரித்துக் கொடுத்தாள். இப்போது இந்த சின்னஞ்சிறு சிட்டு நன்றாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறாள்.
[அடிக்குறிப்புகள்]
a கிட்டத்தட்ட 50 கோடி ஆட்களை மலேரியா தொற்றுகிறது. பெரும்பாலும் ஆப்பிரிக்காவில், சுமார் 20 லட்சம் பேர் ஒவ்வொரு வருடமும் இவ்வியாதியால் இறக்கின்றனர்.
b விழித்தெழு! ஜூலை 8, 1986, பக்கங்கள் 12-14-ல் வெளிவந்த “உயிரைக் காக்கும் உப்புச் சத்துள்ள பானம்!” என்ற கட்டுரையைக் காண்க.
[பக்கம் 7-ன் படம்]
நோய்க்கு நித்திய தீர்வு யெகோவாவின் கரங்களில் மட்டுமே