நோய் புரியாப் புதிர்
ஓமாஜி என்ற பச்சிளம் குழந்தை வாந்திபேதியில் துடிதுடித்தது. அதைக் கண்டு அவளுடைய தாய் ஹாவா, நீர்ச் சத்துக் குறைவு ஏற்பட்டுவிடுமோ என உள்ளம் பதறினாள். ஏனென்றால் கிராமத்திலிருக்கும் அவளுடைய நெருங்கிய உறவுக்கார பெண் ஒருத்தியின் குழந்தை சமீபத்தில் இப்படித்தான் இறந்தது. ஹாவாவுடைய மாமியார் அதாவது ஓமாஜியின் பாட்டியம்மா இவளை பில்லிசூனியக்காரரிடம் அழைத்துச் செல்ல விரும்பினார். “ஏதோ கெட்ட ஆவிதான் குழந்தையை வியாதியில் தள்ளி பாடாத பாடுபடுத்துகிறது. பாதுகாப்பிற்கு அவளுக்குத் தாயத்தைக் கட்டவும் நீ விடவில்லை, இப்போது பிரச்சினைகளில் அவதிப்பட வேண்டிருக்கிறது!” என்று புலம்பினார் அவர்.
இன்று உலகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இப்படிப்பட்ட சம்பாஷணைகள் காதில் விழுவது சகஜம்தான். பேய் பிசாசுகளே வியாதிக்குக் காரணம் என்பது லட்சக்கணக்கானோரது அபிப்பிராயம். அது உண்மையா?
புரியாப் புதிரின் பிறப்பு
காணக்கூடாத ஆவிகளே வியாதிக்குக் காரணம் என நீங்கள் ஒருவேளை தனிப்பட்ட விதமாக நம்பாமல் இருக்கலாம். பெரும்பாலான வியாதிகளுக்குக் காரணம் வைரஸ்களும் நுண்ணுயிரிகளுமே என்பதை விஞ்ஞானிகள் தெள்ளத் தெளிவாக்கியிருக்கும் போது ஏன் இப்படியெல்லாம் ஆட்கள் யோசிக்கின்றனர் என ஒருவேளை நீங்கள் வியப்புற்றிருக்கலாம். இருப்பினும் இந்தச் சின்னஞ்சிறிய நுண்ணியிரியைப் பற்றி ஆரம்பத்திலிருந்தே எல்லாரும் அறிந்திருக்கவில்லை என்பதை ஞாபகம் வையுங்கள். ஆண்டோனி வான் லியூவான்ஹுக் என்பவர் 17-ம் நூற்றாண்டில் நுண்ணோக்கியைக் கண்டுபிடித்த பின்புதான் நுண்ணுயிரிகளின் உலகமே மனிதக் கண்களுக்கு வெட்டவெளிச்சமானது. இருந்தாலும் 19-ம் நூற்றாண்டில் லூயி பாஸ்டரின் கண்டுபிடிப்புகளின் விளைவாகவே வியாதிக்கும் அதை உண்டுபண்ணும் நுண்ணுயிரிகளுக்கும் இடையே உள்ள உறவை விஞ்ஞான உலகம் புரிந்துகொள்ள ஆரம்பித்தது.
மனித சரித்திரத்தின் ஆரம்பத்திலிருந்து பல காலத்திற்கு வியாதிக்கான காரணத்தை மனிதன் அறியாதிருந்ததால் அநேக மூடநம்பிக்கைகள் முளைத்தெழ ஆரம்பித்தன; அப்படிப் பிறந்ததுதான் வியாதிகளுக்கெல்லாம் காரணம் பொல்லாத ஆவிகளே என்ற கோட்பாடும். இது இப்படியும் வளர்ந்திருக்கலாம் என த நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா கருத்துத் தெரிவிக்கிறது. பல வித மூலிகை வேர்களாலும் பச்சிலைகளாலும் ஏன், தங்கள் கையில் கிடைத்தவற்றை எல்லாம் உபயோகித்து வியாதியைக் குணமாக்க மருத்துவர்கள் ஆரம்ப காலத்தில் முயன்றனர் என்று அது சொல்கிறது. சில சமயங்களில் இப்படிப்பட்ட குருட்டு வைத்தியத்திற்குப் பலன் கிடைக்கத்தான் செய்தது. உண்மையான மருந்தை மற்றவர்கள் அறியாதிருக்க வேண்டி கண்கட்டுவித்தைபோல் மருத்துவர்கள் சிகிச்சையின் போது ஊர்ப்பட்ட மூடநம்பிக்கை சார்ந்த சாஸ்திர சடங்குகளை உட்புகுத்தினர். இவ்வாறு செய்வதன்மூலம் சிகிச்சைக்காக மக்கள் தங்களைத் தேடி வரும்படி மருத்துவர்கள் பார்த்துக்கொண்டனர். இப்படித்தான் மருத்துவம் புரியாப் புதிர் என்ற போர்வைக்குள் மறைந்துகொண்டது; மீமானிட சக்திகளிடம் உதவியை நாடும்படி மக்களும் தூண்டப்பட்டார்கள்.
இன்னும் அநேக தேசங்களில் இந்தப் பாரம்பரிய சிகிச்சை முறைகள் சாகா வரம்பெற்ற சீரஞ்சீவியாய் இருந்து வருகின்றன. மரித்த முன்னோர்களின் ஆவிகளே வியாதிக்குக் காரணம் என அநேகர் சொல்கின்றனர். கடவுளே நம் வியாதிக்குக் காரணர், நம் பாவங்களுக்கான தண்டனைதான் வியாதி என்பது இன்னும் சிலருடைய கருத்து. உயிரியல் ரீதியில் வியாதிக்கான காரணத்தை புரிந்துகொண்டிருக்கும், விவரம் தெரிந்த ஆட்கள்கூட இன்னமும் மீமானிட செல்வாக்குகளைக் குறித்து அஞ்சுகின்றனர்.
மாந்திரீகர்களும் நாட்டு வைத்தியர்களும் மக்களுடைய பயத்தை தங்களுக்குச் சாதகமாக்கிக்கொண்டு கொள்ளையடிக்கின்றனர். அப்படியென்றால் எதை நாம் நம்புவது? உடல்நலத்திற்கு ஆவிகளை நாடுவது கைகொடுத்து உதவுமா? பைபிளின் கருத்தென்ன?