உண்மையிலேயே ஒருவர் அக்கறை காட்டுகிறார்
ஆயிரமாயிரம் ஜனங்கள் உண்மையில் மற்றவர்கள்மீது அக்கறை காட்டுகிறார்கள். மற்றவர்களுடைய பிரச்சினைகளைப் பற்றி தங்களுக்கு அக்கறையில்லை என்பதுபோல சொரணையற்றவர்களாய் சுயநலத்தோடு இவர்கள் செயல்படுவதில்லை. மாறாக, பிறருடைய கஷ்டங்களை தணிக்க தங்களால் இயன்ற அனைத்தையும் செய்கிறார்கள்—சில சமயங்களில் தங்கள் உயிரையே பணயம் வைக்கிறார்கள். இது மாபெரும் வேலை, அவர்களுடைய கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சக்திகளால் சிக்கலாக்கப்படும் ஒரு மாபெரும் வேலை.
பசியை அடியோடு ஒழிக்க “பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து உறுதியோடு எடுக்கும் முயற்சிகளையும்”கூட பேராசையும் அரசியல் சூழ்ச்சிகளும் போர்களும் இயற்கை சேதங்களும் தவிடுபொடியாக்கி விடுகின்றன என சமூக சேவகர் ஒருவர் கூறுகிறார். பசியின் கொடுமையை ஒழிப்பது: இது பிறர்மீது அக்கறை காட்டும் ஜனங்கள் எதிர்ப்படும் பிரச்சினைகளில் ஒன்றே. நோய், வறுமை, அநீதி, போரால் விளையும் பெருந்துன்பம் ஆகியவற்றை அவர்கள் எதிர்த்துப் போராடுகிறார்கள். ஆனால் அவர்கள் வெற்றிக் கனியை ருசிக்கிறார்களா?
பசியையும் வேதனையையும் தணிக்க ‘பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து உறுதியோடு முயற்சி’ எடுப்பவர்கள் இயேசுவின் உதாரணத்தில் விவரிக்கப்பட்டுள்ள இரக்கமுள்ள சமாரியனை போல இருக்கிறார்கள் என சமூக சேவை நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். (லூக்கா 10:29-37) ஆனால் அவர்கள் எதைச் செய்தாலும், பலியாகிறவர்களின் எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டேதான் போகிறது என்று அவர் சொன்னார். அதனால் இவ்வாறு கேட்டார்: “அந்த நல்ல சமாரியன் பல வருஷமாக அதே வழியில் பிரயாணம் செய்து ஒவ்வொரு வாரமும் கள்ளர்களால் காயப்படுத்தப்பட்ட எவரையாவது வழியருகே கண்டால் அவன் என்ன செய்ய வேண்டும்?”
சீக்கிரத்திலேயே ‘பராமரிப்பு கொடுப்பவரே சோர்வு என்னும் கொடிய நோய்க்கு’ ஆளாகி, கவனிக்கும் பொறுப்பை ‘அம்போ’ என்று விட்டுவிடலாம். ஆனால் உண்மையில் பராமரிப்பு கொடுப்பவர்கள் கொஞ்சமும் சலிக்காமல் பணிவிடை செய்வது அவர்களுக்கு பெருமையிலும் பெருமை சேர்க்கிறது. (கலாத்தியர் 6:9, 10) உதாரணமாக, யெகோவாவின் சாட்சிகளை பாராட்டி பிரிட்டனின் ஜூயிஷ் டெலிகிராஃப் செய்தித்தாளுக்கு ஒருவர் இவ்வாறு எழுதினார்: நாஸி ஜெர்மனியில் “ஆஷ்விட்ச் கான்ஸன்ட்ரேஷன் முகாமின் கஷ்டங்களை சமாளிக்க ஆயிரக்கணக்கான யூதர்களுக்கு [யெகோவாவின் சாட்சிகள்] உதவினார்கள்.” அந்த எழுத்தாளர் மேலும் சொன்னார்: “உணவு பற்றாக்குறையாக இருந்தபோது அவர்கள் தங்களிடமிருந்த ரொட்டியை நம்முடைய (யூத) சகோதர சகோதரிகளுடன் பகிர்ந்து கொண்டார்கள்!” சாட்சிகள் தங்களிடமிருந்ததை எல்லாம் முடிந்தளவு மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டேயிருந்தனர்.
ஆனால் எவ்வளவு ரொட்டியை பகிர்ந்தளித்தாலும் அது மனித துயரத்திற்கு முழுமையான முடிவை கொண்டுவராது என்பதே உண்மை. ஜனங்கள் இரக்கத்துடன் செய்த காரியங்களை மதிப்பு குறைவாக கருதுவதை இது அர்த்தப்படுத்தாது. துயரத்தை தணிக்கும் எந்தவொரு செயலும் மதிக்கத்தக்கதே. அந்த சாட்சிகள் தங்களால் முடிந்தவரை சக கைதிகளுடைய வேதனையை தணித்தனர். முடிவில் நாஸிஸம் ஒழிந்தது. இருந்தாலும், ஒடுக்குமுறைக்குக் காரணமான இந்த உலக ஒழுங்குமுறை தொடர்ந்து இருந்துகொண்டேதான் வருகிறது, அக்கறை காட்டப்படாத மக்களும் இன்னும் பெருகிக்கொண்டே இருக்கிறார்கள். உண்மையில், ‘பூமியில் சிறுமையானவர்களை தின்று மனுஷரில் ஏழ்மையானவர்களை விழுங்கும் வாள்போன்ற பற்களையும் தீட்டிய கத்திகளை போன்ற தாடை எலும்புகளையும் உடைய சந்ததியாருமுண்டு.’ (நீதிமொழிகள் 30:14, NW) ஏன் இந்த நிலை என ஒருவேளை நீங்களும் நினைக்கலாம்.
வறுமையும் அடக்குமுறையும் ஏன்?
இயேசு ஒரு சமயம் சொன்னார்: “தரித்திரர் எப்போதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள், உங்களுக்கு மனதுண்டாகும்போதெல்லாம் நீங்கள் அவர்களுக்கு நன்மை செய்யலாம்.” (மாற்கு 14:7) வறுமையும் அடக்குமுறையும் ஒழியவே ஒழியாது என இயேசு அர்த்தப்படுத்தினாரா? சில ஜனங்கள் நம்புவதுபோல, இரக்க குணம் படைத்தவர்கள் பிறரை எந்தளவுக்கு பராமரிக்கிறார்கள் என்பதை காண்பிப்பதற்கு சந்தர்ப்பமளிப்பதற்காக துயரத்தை கடவுள் தம்முடைய ஏற்பாட்டின் ஒரு பாகமாக வைத்துள்ளார் என இயேசு நம்பினாரா? இல்லை! இயேசு அதை நம்பவில்லை. இந்த ஒழுங்குமுறை இருக்கும்வரை வறுமை வாழ்க்கையின் ஒரு பாகமாக இருக்கும் என்றே குறிப்பிட்டுக்கொண்டிருந்தார். ஆனால் பூமியில் இருக்கும் இப்படிப்பட்ட நிலைமைகள் பரலோக தகப்பனின் ஆதி நோக்கமல்ல என்பதையும் இயேசு அறிந்திருந்தார்.
வறுமை, அநீதி, ஒடுக்குமுறை போன்றவற்றால் பீடிக்கப்பட்ட ஓர் இடமாக அல்ல, எழில் கொஞ்சும் பூங்காவனம் போன்ற ஒரு பரதீஸாக இருப்பதற்காகவே யெகோவா இந்தப் பூமியை படைத்தார். நம்முடைய வாழ்க்கையின் சந்தோஷத்திற்கு அற்புதகரமான ஏற்பாடுகளைச் செய்வதன்மூலம் மனித குடும்பத்தின்மீது எந்தளவுக்கு அக்கறை கொண்டிருக்கிறார் என்பதை காட்டினார். ஏன், நம்முடைய முதல் பெற்றோராகிய ஆதாமும் ஏவாளும் வாழ்ந்த தோட்டத்தின் பெயரையே சிந்தித்துப் பாருங்கள்! அது ஏதேன் என அழைக்கப்பட்டது; “இன்பம்” என்பது அதன் பொருள். (ஆதியாகமம் 2:8, 9) உயிர் வாழ்வதற்குத் தேவையானதை மட்டும் கொடுத்து, சோகம் தவழும் ஒடுக்குதல் நிறைந்த சூழ்நிலையில் மனிதர்களை யெகோவா வாழவைக்கவில்லை. சிருஷ்டிப்பின் முடிவில் தாம் உண்டாக்கியவற்றை பார்த்து ‘மிகவும் நன்றாயிருக்கிறது’ என யெகோவா அறிவித்தார்.—ஆதியாகமம் 1:31.
சரி, அப்படியானால், வறுமையும் ஒடுக்குமுறையும் வேறுபல துன்பங்களும் பூமி முழுவதும் ஏன் தலைவிரித்தாடுகின்றன? நம்முடைய ஆதி பெற்றோர் கடவுளுக்கு எதிராக கலகம் செய்ய தெரிவு செய்ததே தற்போதைய பொல்லாத ஒழுங்குமுறைக்கு காரணம். (ஆதியாகமம் 3:1-5) கடவுள் தம்முடைய சிருஷ்டிகளிடமிருந்து கீழ்ப்படிதலை எதிர்பார்ப்பது சரியா என்ற கேள்வியை அது எழுப்பியது. ஆகவே, குறிப்பிட்ட காலத்திற்கு ஆதாமின் சந்ததியார் சுதந்திரமாக இருக்க யெகோவா அனுமதித்திருக்கிறார். மனித குடும்பத்தின்மீது கடவுள் இன்னும் அக்கறை காட்டினார். அவருக்கு எதிராக செய்யப்பட்ட கலகத்தால் உண்டாகவிருந்த எல்லா தீங்கையும் துடைத்தழிக்க ஏற்பாடு செய்தார். வெகு சீக்கிரத்தில் வறுமையையும் அடக்குமுறையையும்—சொல்லப்போனால், எல்லா துயரங்களையும்—யெகோவா முடிவுக்கு கொண்டுவருவார்.—எபேசியர் 1:8-10.
மனித சக்திக்கு அப்பாற்பட்ட பிரச்சனை
மனிதனை படைத்தது முதற்கொண்டு, நூற்றாண்டுகளினூடே மனிதவர்க்கம் யெகோவாவின் தராதரங்களைவிட்டு அதிக தூரம் வழிவிலகிச் சென்றுவிட்டது. (உபாகமம் 32:4, 5) கடவுளுடைய சட்டங்களையும் நியமங்களையும் தொடர்ந்து புறக்கணித்ததால் மனிதர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு, “மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகிறான்.” (பிரசங்கி 8:9) துன்பப்படும் மக்களை தொல்லைபடுத்தும் அனைத்திலிருந்தும் விடுபட்ட நீதியான சமுதாயத்தை படைப்பதற்கான எல்லா முயற்சிகளும், கடவுளுடைய அரசுரிமைக்கு கீழ்ப்படியாமல் தங்களுடைய சொந்த வழியில் நடக்க விரும்புகிறவர்களுடைய சுயநலத்தினால் தடைசெய்யப்படுகின்றன.
மற்றொரு பிரச்சினையும் இருக்கிறது—அதுதான் முட்டாள்தனமான மூடநம்பிக்கை என அநேகர் ஒதுக்கித் தள்ளுவது. கடவுளுக்கு எதிராக கலகத்தைத் தூண்டுகிறவன், மோசமான மற்றும் சுயநலமான காரியங்களுக்கு ஜனங்களை இன்னும் ஊக்குவித்து கொண்டிருக்கிறான். அவன்தான் பிசாசாகிய சாத்தான். இயேசு அவனை “இந்த உலகத்தின் அதிபதி” என அழைத்தார். (யோவான் 12:31; 14:30; 2 கொரிந்தியர் 4:4; 1 யோவான் 5:19) அனைத்து துயரங்களுக்கும் முக்கிய காரணமான சாத்தான், “உலகமனைத்தையும் மோசம்போக்குகிற”வன் என அப்போஸ்தலனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷத்தில் அடையாளம் காட்டப்பட்டுள்ளான்.—வெளிப்படுத்துதல் 12:9-12.
சில ஜனங்கள் சக மனிதர்களுக்கு எவ்வளவுதான் அக்கறை காட்டினாலும், அவர்கள் பிசாசாகிய சாத்தானையோ அல்லது பலியாட்கள் அதிகரித்துவரும் இந்த ஒழுங்கு முறையையோ ஒருபோதும் மாற்றிவிட முடியாது. அப்படியானால் மனிதவர்க்கத்தின் பிரச்சினைகளை தீர்க்க என்ன தேவை? அக்கறை காட்டுவதற்கு ஒருவர் இருந்தால் மட்டும் போதாது. சாத்தானையும் அநீதி நிறைந்த அவனுடைய முழு ஒழுங்குமுறையையும் முற்றிலும் நீக்க விருப்பமும் வல்லமையும் உள்ள ஒருவர் தேவை.
“உம்முடைய சித்தம் . . . பூமியிலேயும் செய்யப்படுவதாக”
இந்தப் பொல்லாத ஒழுங்கு முறையை அழிக்கப்போவதாக கடவுள் வாக்குறுதி அளித்திருக்கிறார். இதைச் செய்வதற்கு விருப்பமும் வல்லமையும் அவரிடம் இருக்கிறது. (சங்கீதம் 147:5, 6; ஏசாயா 40:25-31) தீர்க்கதரிசன பைபிள் புத்தகமாகிய தானியேலில் இவ்வாறு முன்னறிவிக்கப்பட்டுள்ளது: “பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை. . . . அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்”—ஆம், என்றென்றைக்கும் நிலைநிற்கும். (தானியேல் 2:44) நல்நோக்குடைய இந்த நிரந்தர பரலோக அரசாங்கத்தை மனதில் கொண்டு, இயேசு தம்முடைய சீஷர்களுக்கு கடவுளிடம் ஜெபம் செய்ய கற்றுக்கொடுக்கையில் இவ்வாறு சொன்னார்: “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.”—மத்தேயு 6:9, 10.
யெகோவா உண்மையில் மனித குடும்பத்தின்மீது அக்கறை காட்டுவதால் அப்படிப்பட்ட ஜெபங்களுக்கு பதிலளிப்பார். 72-ம் சங்கீதத்தின் தீர்க்கதரிசன வார்த்தைகளின்படி, இயேசுவின் அரசாட்சியை ஆதரிக்கும் ஏழ்மையானவர்களுக்கும் சிறுமைப்படுத்தப்பட்டவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நிலையான விடுதலையை கொண்டுவர கடவுள் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு அதிகாரம் வழங்குவார். எனவே, சங்கீதக்காரன் ஏவுதலால் இவ்வாறு பாடினார்: “ஜனத்தில் சிறுமைப்படுகிறவர்களை அவர் [கடவுளுடைய மேசியானிய அரசர்] நியாயம் விசாரித்து, ஏழையின் பிள்ளைகளை இரட்சித்து, இடுக்கண் செய்கிறவனை நொறுக்குவார். . . . கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார். பலவீனனுக்கும் எளியவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார். அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்; அவர்களுடைய இரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாயிருக்கும்.”—சங்கீதம் 72:4, 12-14.
நம்முடைய நாளோடு சம்பந்தப்பட்ட ஒரு தரிசனத்தில், கடவுளால் ஸ்தாபிக்கப்பட்ட முற்றிலும் புதிய ஒழுங்கு முறையான “புதிய வானத்தையும் புதிய பூமியையும்” அப்போஸ்தலன் யோவான் கண்டார். துயரப்படும் மனிதவர்க்கத்திற்கு எப்பேர்ப்பட்ட ஓர் ஆசீர்வாதம்! யெகோவா என்ன செய்வார் என்பதை முன்னறிவிக்கையில் யோவான் இவ்வாறு எழுதினார்: “பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது. சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.”—வெளிப்படுத்துதல் 21:1-5.
ஆம், இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமாதலால் நாமும்கூட நம்பலாம். வறுமை, பட்டினி, ஒடுக்குதல், வியாதி மற்றும் எல்லா அநீதியையும் இந்தப் பூமியிலிருந்து துடைத்தழிக்க சீக்கிரத்தில் யெகோவா நடவடிக்கை எடுப்பார். இந்தப் பத்திரிகை பைபிளிலிருந்து அடிக்கடி சுட்டிக்காட்டியபடி, இந்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேறும் காலத்தில் நாம் வாழ்கிறோம் என ஏராளமான அத்தாட்சிகள் காட்டுகின்றன. கடவுளுடைய வாக்குப்பண்ணப்பட்ட புதிய உலகம் மிக அருகில் உள்ளது! (2 பேதுரு 3:13) சீக்கிரத்தில் யெகோவா “மரணத்தை ஜெயமாக விழுங்குவார்.” மேலும் ‘எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைப்பார்.’—ஏசாயா 25:8.
அது நடக்கும் வரையில், இப்போதும்கூட உள்ளப்பூர்வமாக அக்கறை காட்டும் ஜனங்கள் இருப்பதற்காக நாம் மகிழ்ச்சியடையலாம். மகிழ்ச்சிக்கான மிக முக்கியமான காரணம் என்னவெனில், யெகோவா தேவன்தாமே உண்மையில் அக்கறை காட்டுகிறார். அவர் விரைவில் எல்லா ஒடுக்குதல்களையும் துயரங்களையும் நீக்கிவிடுவார்.
யெகோவாவின் வாக்குறுதிகளில் நீங்களும் முழு நம்பிக்கை வைக்கலாம். அவரது ஊழியராகிய யோசுவா அதைத்தான் செய்தார். அவர் முழுநம்பிக்கையுடன் கடவுளுடைய பூர்வ ஜனங்களிடம் சொன்னார்: “உங்கள் தேவனாகிய கர்த்தர் [“யெகோவா,” NW] உங்களுக்காகச் சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை என்பதை உங்கள் முழு இருதயத்தாலும் உங்கள் முழு ஆத்துமாவாலும் அறிந்திருக்கிறீர்கள்; அவைகளெல்லாம் உங்களுக்கு நிறைவேறிற்று; அவைகளில் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை.” (யோசுவா 23:14) ஆகவே இந்த ஒழுங்குமுறை தொடர்ந்திருக்கையில், நீங்கள் எதிர்ப்பட வேண்டிய சோதனைகள் உங்களை ஆட்கொண்டுவிட அனுமதிக்காதீர்கள். யெகோவா உண்மையிலேயே அக்கறை உள்ளவராய் இருக்கிறபடியால் உங்கள் எல்லா கவலைகளையும் அவர்மீது போட்டுவிடுங்கள்.—1 பேதுரு 5:7.
[பக்கம் 7-ன் படங்கள்]
கடவுளின் வாக்குப்பண்ணப்பட்ட புதிய பூமியில் வறுமை, ஒடுக்குதல், வியாதி மற்றும் அநீதி இருக்காது