இந்த உலகை யாராவது மாற்ற முடியுமா?
“எல்லாவற்றிற்கும் மேலாக, சமாதானமும் பாதுகாப்பும் வேண்டுமென ஏழை மக்கள் சொல்கிறார்கள்—அடுத்து, தங்கள் வாழ்க்கையை மேம்படுத்த வாய்ப்புகள் வேண்டுமென சொல்கிறார்கள். தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் நியாயமான கொள்கைகளை விரும்புகிறார்கள், அப்போதுதான் பணக்கார நாடுகளோ பணக்கார நிறுவனங்களோ ஆதிக்கம் செலுத்தி தங்களுடைய முயற்சிகளை முறியடிக்க முடியாது.”
இப்படித்தான் சர்வதேச நிவாரண ஏஜென்ஸி இயக்குநர் ஒருவர் ஏழைகளுடைய நம்பிக்கைகளையும் ஆசைகளையும் விவரித்தார். சொல்லப்போனால், உலகில் நிகழும் சோக சம்பவங்களுக்கும் அநீதிகளுக்கும் பலியான அத்தனை பேருடைய ஆசையையும் அவருடைய வார்த்தைகள் படம்பிடித்து காட்டுகின்றன. உண்மையான சமாதானமும் பாதுகாப்பும் நிறைந்த உலகிற்காக அவர்கள் ஏங்குகிறார்கள். இது என்றாவது நிஜமாகுமா? அடிப்படையில் நியாயமற்ற ஓர் உலகை மாற்றுவதற்குத் தேவைப்படும் சக்தியும் திறமையும் யாருக்காவது இருக்கிறதா?
மாற்றுவதற்கான முயற்சிகள்
மாற்றம் கொண்டுவர அநேகர் முயற்சி செய்திருக்கிறார்கள். உதாரணமாக, 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புளாரன்ஸ் நைட்டிங்கேல் என்ற ஆங்கிலேயப் பெண்மணி வியாதிப்பட்டவர்களைச் சுத்தமாக வைத்திருப்பதற்காகவும் கருணையுடன் கவனித்துக்கொள்வதற்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவருடைய நாளில்—ஆன்டிசெப்டிக்குகளும் ஆன்டிபயாடிக்குகளும் வருவதற்கு முன்பு—நாம் இன்றைக்கு எதிர்பார்க்கும் அளவுக்கு மருத்துவ கவனிப்பு இல்லை. “நர்ஸ்கள் கல்வியறிவற்றவர்களாகவும் சுத்தமற்றவர்களாகவும் குடிவெறிக்கும் ஒழுக்கயீனத்திற்கும் பேர்பெற்றவர்களாகவும் விளங்கினார்கள்” என ஒரு நூல் கூறுகிறது. நர்ஸிங் துறையை மாற்றுவதற்கு புளாரன்ஸ் நைட்டிங்கேல் எடுத்த முயற்சிகளில் வெற்றி பெற்றாரா? ஆம், வெற்றி பெற்றார். அவரைப் போலவே, சுயநலம் கருதாத, அக்கறையுள்ள மக்கள் அநேகர் வாழ்க்கையின் பல அம்சங்களில்—எழுத்தறிவு, கல்வி, மருத்துவம், வீட்டுவசதி, சத்துணவுத் திட்டங்கள் போன்றவற்றில்—சிறந்த வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதன் விளைவாக, வசதிவாய்ப்பற்ற கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கைத் தரம் குறிப்பிடத்தக்க விதத்தில் முன்னேற்றம் அடைந்திருக்கிறது.
என்றாலும், கசப்பான இந்த உண்மையை நாம் புறக்கணித்துவிட முடியாது: போர், குற்றச்செயல், வியாதி, பஞ்சம், பேரழிவுகள் போன்றவற்றால் இன்றும் கோடிக்கணக்கானோர் அவதியுறுகிறார்கள். “வறுமை ஒவ்வொரு நாளும் 30,000 பேரை கொல்லுகிறது” என கன்சர்ன் என்ற ஐரிஷ் நிவாரண ஏஜென்ஸி கூறுகிறது. கடந்த காலத்தில் சீர்திருத்தவாதிகள் பலர் முயன்றபோதிலும், அடிமைத்தனமும்கூட தொடர்ந்து இருக்கிறது. “அட்லாண்டிக் கடல் கடந்து செய்யப்பட்ட அடிமை வியாபார காலத்தில், ஆப்பிரிக்காவிலிருந்து திருடப்பட்ட அனைத்து மக்களையும்விட இன்று அநேக அடிமைகள் இருக்கிறார்கள்” என தூக்கியெறியப்படக்கூடிய மக்கள்—உலக பொருளாதாரத்தில் புதிய அடிமைத்தனம் என்ற ஆங்கில நூல் கூறுகிறது.
முழுமையான மாற்றத்தை, ஆம் நிரந்தரமான மாற்றத்தை, ஏற்படுத்த எடுக்கப்படும் முயற்சிகளை எது தவிடுபொடியாக ஆக்கியிருக்கிறது? பணக்காரர்களோ வலிமைமிக்கவர்களோ ஆதிக்கம் செலுத்துவதாலா, அல்லது இதில் அதிகம் உட்பட்டுள்ளதா?
மாற்றத்திற்கு முட்டுக்கட்டைகள்
உண்மையிலேயே நியாயமான உலகை ஸ்தாபிக்க மனிதர் எடுக்கும் முயற்சிகள்மீது ஆதிக்கம் செலுத்துகிற முட்டுக்கட்டை பிசாசாகிய சாத்தானே என்று கடவுளுடைய வார்த்தை சொல்கிறது. இந்த “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்று” அப்போஸ்தலன் யோவான் கூறுகிறார். (1 யோவான் 5:19) சொல்லப்போனால், இப்போதுகூட சாத்தான் ‘உலகமனைத்தையும் மோசம் போக்கிக்கொண்டிருக்கிறான்.’ (வெளிப்படுத்துதல் 12:9) அவனுடைய தீய செல்வாக்கு நீக்கப்படும்வரை, தீமைக்கும் அநீதிக்கும் பலியாகிறவர்கள் இருப்பார்கள். இத்தகைய மோசமான சூழ்நிலை எப்படி உருவானது?
நம்முடைய ஆதி பெற்றோரான ஆதாமுக்கும் ஏவாளுக்கும் பூங்காவனம் போன்ற பரிபூரண பரதீஸ் பூமி ஒரு வீடாக கொடுக்கப்பட்டது—அது ‘மிகவும் நன்றாயிருந்த’ ஓர் உலகம். (ஆதியாகமம் 1:31) ஆனால் இதையெல்லாம் யார் கெடுத்தது? சாத்தான். மனிதருக்காக சட்டங்கள் வகுத்துக் கொடுப்பதற்குரிய கடவுளுடைய உரிமையை எதிர்த்து அவன் சவால்விட்டான். கடவுள் ஆளும் முறை நேர்மையற்றதென மறைமுகமாக கூறினான். எது நல்லது எது கெட்டது என்பதை தாங்களே தீர்மானித்து தன்னிச்சையாக நடப்பதை தெரிவு செய்யும்படி ஆதாமையும் ஏவாளையும் அவன் தூண்டினான். (ஆதியாகமம் 3:1-6) இது, நியாயமான உலகைப் படைப்பதற்கு மனிதன் எடுக்கும் முயற்சிகளுக்கு இரண்டாவது முட்டுக்கட்டையை—பாவத்தையும் அபூரணத்தையும்—கொண்டுவந்தது.—ரோமர் 5:12.
ஏன் அதை அனுமதிக்கிறார்?
‘ஆனால் பாவமும் அபூரணமும் வளருவதற்கு கடவுள் ஏன் அனுமதித்தார்?’ என சிலர் கேட்கலாம். ‘கலகம் செய்தவர்களை அழித்துவிட்டு மீண்டும் புதிதாக ஆரம்பிப்பதற்கு கடவுள் ஏன் தமது எல்லையற்ற அதிகாரத்தைப் பயன்படுத்தவில்லை?’ அது ஓர் எளிய தீர்வாக தொனிக்கலாம். என்றாலும், அதிகாரத்தைப் பயன்படுத்துவது பெரும் சர்ச்சைக்குரிய கேள்விகளை எழுப்பலாம். இவ்வுலகில் ஏழைகள் படும் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் அதிகார துஷ்பிரயோகம் ஒரு காரணம் என்பது உண்மை, அல்லவா? கொடுங்கோலன் ஒருவன் தனது கொள்கைகளோடு ஒத்துப்போகாத எவரையும் தீர்த்துக்கட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தும்போது நல்மனமுடைய ஆட்களின் மனதில் சந்தேகங்கள் எழும்புகிறது, அல்லவா?
தாம் அதிகார துஷ்பிரயோகம் செய்யும் ஒரு கொடுங்கோலர் அல்லர் என்பதை நல்மனம் படைத்தவர்களுக்கு கடவுள் உறுதிப்படுத்தினார். அதற்காக சாத்தானும் கலகக்கார மனிதர்களும் தெய்வீக சட்டங்களுக்கும் நியமங்களுக்கும் கீழ்ப்படியாமல் தன்னிச்சையாக செயல்பட அனுமதித்தார்—அதுவும் ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே. கடவுள் ஆளும் முறையே சரியானது என்பதை காலம் நிரூபிக்கும். அவர் நமக்கு விதிக்கும் எந்தத் தடைகளும் நமது நன்மைக்கே என்பதை அது காட்டும். சொல்லப்போனால், இவை உண்மை என்பதை கடவுளுடைய ஆட்சிக்கு எதிரான கலகத்தனத்தின் சோக விளைவுகள் ஏற்கெனவே எடுத்துக்காட்டிவிட்டன. கடவுள் தமக்கே உரிய நேரத்தில் தமது மிகுந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி துன்மார்க்கத்தை அடியோடு ஒழிக்க அவருக்கு நல்ல காரணம் இருப்பதை அவை நிரூபித்துவிட்டன. அது மிக விரைவில் நடக்கும்.—ஆதியாகமம் 18:23-32; உபாகமம் 32:4; சங்கீதம் 37:9, 10, 38.
கடவுள் செயல்படும் வரை, “ஏகமாய் தவித்துப் பிரசவ வேதனைப்படுகிற” நியாயமற்ற ஓர் உலகில் சிக்கியிருக்கிறோம். (ரோமர் 8:22) நிலைமைகளை மாற்ற நாம் என்னதான் செய்தாலும், சாத்தானை அழிக்கவும் முடியாது, நாம் படும் எல்லா துயரத்திற்கும் ஆணிவேரான அபூரணத்தை ஒழிக்கவும் முடியாது. ஆதாமிடமிருந்து சுதந்தரித்த பாவத்தின் விளைவுகளுக்கு பரிகாரம் கண்டுபிடிப்பது நம்முடைய சக்திக்கு அப்பாற்பட்டது.—சங்கீதம் 49:7-9.
இயேசு கிறிஸ்து நிரந்தர மாற்றத்தை உண்டாக்குவார்
இதனால் நிலைமை முற்றிலும் கைமீறிப் போய்விட்டதென அர்த்தமாகுமா? நிச்சயமாகவே இல்லை. நிரந்தர மாற்றத்தை உண்டாக்கும் பொறுப்பு, அழியக்கூடிய மனிதனைவிட அதிக வலிமைமிக்க ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் யார்? அவரே இயேசு கிறிஸ்து. மனித குடும்பத்தின் இரட்சிப்புக்குக் கடவுளால் நியமிக்கப்பட்ட அதிபதி என அவரை பைபிள் விவரிக்கிறது.—அப்போஸ்தலர் 5:31.
செயல்படுவதற்கு கடவுளால் ‘நியமிக்கப்பட்ட காலம்’ வருவதற்காக அவர் இப்பொழுது காத்துக் கொண்டிருக்கிறார். (வெளிப்படுத்துதல் 11:18, NW) குறிப்பாக அவர் என்ன செய்வார்? ‘உலகத் தோற்றமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் உரைத்தவைகள் எல்லாவற்றையும் நிறைவேற்றுவார்.’ (அப்போஸ்தலர் 3:21) உதாரணமாக, இயேசு ‘தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் விடுவிப்பார். . . . அவர்கள் உயிரைக் கொடுமையினின்றும் வன்முறையினின்றும் விடுவிப்பார்.’ (சங்கீதம் [திருப்பாடல்கள்] 72:12-16, பொது மொழிபெயர்ப்பு) இயேசு கிறிஸ்துவின் மூலம், ‘உலகின் கடையெல்லைவரை போர்களைத் தடுத்து நிறுத்துவதாக’ கடவுள் வாக்குறுதி அளிக்கிறார். (சங்கீதம் 46:9, பொ.மொ.) சுத்திகரிக்கப்பட்ட பூமியில் வாழும் ‘நகரவாசிகள் வியாதிப்பட்டிருக்கிறேன் என்று சொல்வதில்லை’ என அவர் வாக்குறுதி அளிக்கிறார். பார்வையற்றவர்களும் காதுகேளாதவர்களும் முடவர்களும்—வியாதியால் பாதிக்கப்பட்ட அனைவரும்—பூரண ஆரோக்கியத்தைப் பெறுவார்கள். (ஏசாயா 33:24; 35:5, 6; வெளிப்படுத்துதல் 21:3, 4) கடந்த நூற்றாண்டுகளில் இறந்தவர்களும்கூட பயனடைவர். அநீதிக்கும் ஒடுக்குதலுக்கும் பலியானவர்களை மீண்டும் உயிருக்குக் கொண்டுவருவதாக அவர் வாக்குறுதி அளிக்கிறார்.—யோவான் 5:28, 29.
இயேசு கிறிஸ்து ஏதோ அரைகுறையான தற்காலிக மாற்றத்தைக் கொண்டுவரப் போவதில்லை. உண்மையிலேயே நியாயமான உலகுக்கு தடையாக இருக்கும் எல்லா முட்டுக்கட்டைகளையும் ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்டுவார். பாவத்தையும் அபூரணத்தையும் நீக்குவார், பிசாசான சாத்தானையும் அவனுடைய கலகத்தனமான போக்கைப் பின்பற்றுகிற எல்லாரையும் அழிப்பார். (வெளிப்படுத்துதல் 19:19, 20; 20:1-3, 10) தற்காலிகமாக கடவுள் அனுமதித்திருக்கிற வேதனையும் துன்பமும் “மறுபடியும் உண்டாகாது.” (நாகூம் 1:9) கடவுளுடைய ராஜ்யம் வருவதற்காகவும் அவருடைய சித்தம் ‘பரலோகத்தில் செய்யப்படுவது போல பூமியிலேயும் செய்யப்படுவதற்காகவும்’ ஜெபிக்கும்படி இயேசு கற்றுக்கொடுத்தபோது இதுதான் அவருடைய மனதில் இருந்தது.—மத்தேயு 6:10.
“ஆனால், ‘தரித்திரர் எப்போதும் நம்மிடத்தில் இருப்பார்கள்’ என்று இயேசுவே சொல்லவில்லையா? எப்போதும் அநீதியும் வறுமையும் இருக்கும் என்பதை அது அர்த்தப்படுத்துகிறது அல்லவா?” என நீங்கள் ஒருவேளை கேட்கலாம். (மத்தேயு 26:11) ஆம், எப்போதும் ஏழைகள் இருப்பார்கள் என்று இயேசு சொன்னது உண்மைதான். ஆனால், இந்தப் பொல்லாத உலகம் நீடித்திருக்கும்வரை ஏழைகள் எப்போதும் இருப்பார்கள் என்பதையே அவர் அர்த்தப்படுத்தினார்; இதை அவர் சொன்ன வார்த்தைகளின் சூழமைவும் கடவுளுடைய வாக்குறுதிகளும் காட்டுகின்றன. வறுமையும் அநீதியும் நிறைந்த உலகை எந்தவொரு மனிதனாலும் ஒருபோதும் ஒழிக்க முடியாது என்பதை அவர் அறிந்திருந்தார். இவை அனைத்தையும் தாம் மாற்றுவார் என்பதையும் அவர் அறிந்திருந்தார். முற்றிலும் புதிய ஓர் உலகை—வேதனையோ வியாதியோ வறுமையோ மரணமோ இல்லாத ‘புதிய வானத்தையும் புதிய பூமியையும்’—விரைவில் அவர் கொண்டுவருவார்.—2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 21:1.
‘நன்மை செய்ய மறவாதிருங்கள்’
மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கு நாம் என்னதான் முயற்சி செய்தாலும் அதில் ஒரு பலனுமில்லை என்பதை இது அர்த்தப்படுத்துகிறதா? இல்லை. மற்றவர்கள் சோதனைகளையும் துன்பங்களையும் அனுபவிக்கும்போது உதவிக்கரம் நீட்டும்படி பைபிள் நம்மை ஊக்குவிக்கிறது. “நன்மை செய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே” என பண்டைக்கால ராஜாவான சாலொமோன் எழுதுகிறார். (நீதிமொழிகள் 3:27) “நன்மை செய்யவும், தானதர்மம் பண்ணவும் மறவாதிருங்கள்” என அப்போஸ்தலன் பவுல் உந்துவிக்கிறார்.—எபிரெயர் 13:16.
பிறருக்கு உதவ நம்மால் முடிந்ததை செய்யும்படி இயேசு கிறிஸ்துதாமே நம்மை ஊக்குவித்தார். கள்ளர் கையில் அடிபட்டு, பொருட்களையெல்லாம் பறிகொடுத்து பரிதாபமாய்க் கிடந்த ஒரு மனிதனை சந்தித்த சமாரியனைப் பற்றிய உதாரணத்தை அவர் சொன்னார். அந்தச் சமாரியன் “மனதுருகி” தன்னுடைய சொந்த வளங்களைப் பயன்படுத்தி, அடிபட்டுக் கிடந்த மனிதனுடைய காயங்களுக்குக் கட்டுப்போட்டு, அவன் குணமாவதற்கு உதவியதாக இயேசு கூறினார். (லூக்கா 10:29-37) இரக்க குணம் படைத்த அந்தச் சமாரியன் இந்த உலகை மாற்றிவிடவில்லை, ஆனால் மற்றொருவனுடைய வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை உண்டாக்கினான். நாமும் அதையே செய்யலாம்.
ஆனால், வெறும் உதவியைவிட இயேசு கிறிஸ்துவால் நிறைய செய்ய முடியும். அவரால் மாற்றத்தை உண்டாக்க முடியும், அதை அவர் வெகு விரைவில் செய்வார். அப்படி செய்யும்போது, இன்று அநீதிக்குப் பலியானவர்கள் தங்களுடைய வாழ்க்கையை மேம்படுத்த முடியும், உண்மையான சமாதானத்தையும் பாதுகாப்பையும் அனுபவித்து மகிழ முடியும்.—சங்கீதம் 4:8; 37:10, 11.
இத்தகைய நிலைமை வருவதற்காக நாம் காத்திருக்கும் வேளையில், இந்த நியாயமற்ற உலகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும்—ஆன்மீக ரீதியிலும் உடல் ரீதியிலும்—நம்மால் இயன்ற ‘நன்மையை செய்ய’ ஒருபோதும் தயங்காதிருப்போமாக.—கலாத்தியர் 6:10.
[பக்கம் 5-ன் படங்கள்]
நர்ஸிங் துறையில் புளாரன்ஸ் நைட்டிங்கேல் உண்மையிலேயே சிறந்த மாற்றங்களைச் செய்தார்
[படத்திற்கான நன்றி]
Courtesy National Library of Medicine
[பக்கம் 7-ன் படங்கள்]
கிறிஸ்துவைப் பின்பற்றுவோர் பிறருக்கு நன்மை செய்கிறார்கள்
[பக்கம் 4-ன் படத்திற்கான நன்றி]
The Star, Johannesburg, S.A.