உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w99 11/15 பக். 28-31
  • உற்சாகமின்மை—சரிசெய்வது எப்படி?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உற்சாகமின்மை—சரிசெய்வது எப்படி?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நம் சுவிசேஷ ஊழியத்தில் உற்சாகமின்மை
  • நல்ல பலன்களைப் பெறுதல்
  • சரியான மனநிலையைக் காத்துக்கொள்ளுதல்
  • உற்சாகமின்மையும் உறவுகளும்
  • உற்சாகமிழக்கச் செய்யும் எண்ணங்கள்
  • மிகச் சிறந்த இரு நிவாரணிகள்
  • உற்சாகமின்மையை முறியடித்தல்
  • சோர்வை உங்களால் துரத்தியடிக்க முடியும்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2020
  • நாளானது சமீபித்து வருகையில் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
  • சோதனையை... சோர்வை... சமாளிக்க பலம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • சோர்வாக இருந்தாலும் சோர்ந்து விடுவதில்லை
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
w99 11/15 பக். 28-31

உற்சாகமின்மை—சரிசெய்வது எப்படி?

உற்சாகமின்மையை எதிர்த்து ஒருவர் எப்படி போராடலாம்? யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளைத் தவறாமல் சந்திக்கும் அநேக பயணக் கண்காணிகளிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது. அவர்கள் அளித்த பதில்கள், கிறிஸ்தவரைப் பாதிக்கும் உற்சாகமின்மை என்ற இந்“நோய்க்கான” காரணங்களையும் அதை மேற்கொள்வதற்கான “நிவாரணி”களையும் அலசியாராய நமக்குதவும்.

உற்சாகமின்மையை அடியோடு களைய வெறுமனே அதை ஆராய்வது மட்டுமே பலனளிக்காது. ஜெபிப்பதில் அல்லது தனிப்பட்ட படிப்பில் அக்கறையின்மை, கூட்டங்களுக்குச் சரிவர போகாமலிருத்தல், ஆர்வம் குன்றிய நிலை, கிறிஸ்தவ தோழர்களுக்கிடையே ஏதோ பாராமுகம் காட்டுதல் ஆகியவை இந்நோய்க்கான அறிகுறிகளில் அடங்கும். சுவிசேஷ ஊழியத்தில் ஆர்வம் தணிந்துபோவது அந்த நோய் முற்றிவிட்டதற்கான அறிகுறிகளில் ஒன்று. அறிகுறிகளை ஆராய்ந்து, அதற்கான சில “நிவாரணி”களைக் குறித்தும் சிந்திப்போம்.

நம் சுவிசேஷ ஊழியத்தில் உற்சாகமின்மை

சீஷராக்கும் ஊழியத்தில் உட்பட்டிருக்கும் கஷ்ட நஷ்டங்களை இயேசு கிறிஸ்து அறிந்திருந்தார். (மத்தேயு 28:19, 20) “ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல” தம்மைப் பின்பற்றுகிறவர்களை அனுப்பினார்; பிரசங்கிப்பதால் அவர்களுக்குத் துன்புறுத்துதல் வரும் என்பதையும் அறிந்திருந்தார். (மத்தேயு 10:16-23) ஆனால் அவர்கள் உற்சாகத்தை இழக்க அது ஒரு காரணமே இல்லை. சொல்லப்போனால், ஜெபத்தில் யெகோவாவை சார்ந்திருக்கும் கடவுளுடைய ஊழியர்களை அடிக்கடி துன்புறுத்துதல் பலப்படுத்தியிருக்கிறதே தவிர உற்சாகமிழக்க செய்ததில்லை.​—அப்போஸ்தலர் 4:29-31; 5:41, 42.

கிறிஸ்துவின் சீஷர்கள் எல்லா சமயத்திலும் கடும் துன்புறுத்துதலை எதிர்ப்படவில்லை; அதேசமயத்தில், அவர்கள் சென்ற இடத்திலெல்லாம் ஏகபோக வரவேற்பும் கிடைக்கவில்லை. (மத்தேயு 10:11-15) அதேபோலவே, இன்றும் யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசங்க வேலை எளிதானதாய் இல்லை. a கடவுளைப் பற்றிய பேச்சை அநேகர் தங்களுடைய தனிப்பட்ட விஷயமாக கருதுவதால் அதைப் பற்றி கலந்துபேச விரும்புவதில்லை. மத அமைப்புகளைப் பற்றிய ஒருவித தப்பெண்ணம் சிலருக்கு இருப்பதால் அப்படிப்பட்ட அமைப்புகளுடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள சிலர் விரும்புவதில்லை. அலட்சிய மனப்பான்மை, பலனின்மை, அல்லது வேறு பல பிரச்சினைகள் உற்சாகமின்மைக்குப் பக்கபலமாய் நிற்கும் காரணங்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. இந்த முட்டுக்கட்டைகளை எப்படி சமாளிக்கலாம்?

நல்ல பலன்களைப் பெறுதல்

ஊழியத்தில் நமக்குக் கிடைக்கும் சந்தோஷம் ஓரளவு நாம் பெறும் பலன்களின் மேல் சார்ந்திருக்கிறது. அப்படியென்றால், நம் ஊழியத்தை எப்படி இன்னும் பலன்மிக்கதாக்கலாம்? நாம் ‘மனுஷரைப் பிடிக்கிறவர்கள்.’ (மாற்கு 1:16-18) பூர்வ இஸ்ரவேலில் இருந்த மீனவர்கள், மீன்கள் எக்கச்சக்கமாய் கிடைக்கும் இரவு நேரத்தில்தான் மீன்பிடித்தனர். நாமும் நம்முடைய பிராந்தியத்தைப் பற்றி நன்கறிந்திருக்க வேண்டும்; அப்போதுதான் அநேகர் வீட்டிலிருக்கும் சமயத்திலும் நம்முடைய செய்திக்கு நன்கு செவிகொடுக்கும் மனநிலையில் இருக்கும்போதும் “மீன்பிடிக்க” செல்ல முடியும். அது மாலை நேரமாகவோ, வார இறுதி நாட்களாகவோ, வேறு ஏதேனும் ஒரு சமயமாகவோ இருக்கலாம். பகல் முழுக்க வேலைக்குச் செல்லும் மக்கள் வாழும் பகுதிகளில் இந்த வித ஊழியத்தில் ஈடுபடுவது நடைமுறையானது என்பது ஒரு பயணக் கண்காணியின் கருத்து. மாலை நேர ஊழியம் எப்போதும் பலன்களை அள்ளித் தருவதை அவர் கவனித்தார். மேலும், தொலைபேசியின் மூலம் அல்லது சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதன் மூலமும் அநேகரை நாம் சென்றெட்ட முடியும்.

ஊழியத்தில் தரித்திருத்தல் நல்ல பலன்களை வாரி வழங்குகிறது. கிழக்கு ஐரோப்பாவிலும் சில ஆப்பிரிக்க நாடுகளிலும் ராஜ்ய பிரசங்கிப்பு வேலை நல்ல முன்னேற்றம் கண்டிருக்கிறது; இது ‘அமோக விளைச்சலை’ ஏற்படுத்தியிருக்கிறது. அதேபோலவே, ஒருகாலத்தில் ‘தரிசாக’ பயனற்று இருந்த பகுதி அல்லது அடிக்கடி ஊழியம் செய்யப்பட்ட பகுதி என கருதப்பட்ட இடங்கள் “செழிப்பானதாக,” அநேக சபைகள் பிறக்க இன்று வழி செய்திருக்கின்றன. எனினும், உங்களுடைய பிராந்தியம் பெரும் பலன் தருவதாய் இல்லாவிட்டால் அப்போது என்ன செய்வது?

சரியான மனநிலையைக் காத்துக்கொள்ளுதல்

இயேசு வைத்த இலக்கை கண் முன் எப்போதும் நிறுத்திக் கொள்வது நல்லது; இது ஊழியத்தில் முகம் சுளிப்பவர்களைக் கண்டு உற்சாகமிழந்துவிடாமல் இருக்க நமக்குதவும். கூட்டங்கூட்டமாக ஜனங்களை மதம் மாற்ற அல்ல, மாறாக தகுதியானவர்களைத் தம்முடைய சீஷர்கள் தேடிக் கண்டுபிடிக்க வேண்டுமென்றே கிறிஸ்து விரும்பினார். பூர்வ கால தீர்க்கதரிசிகளுக்கு பெரும்பாலான இஸ்ரவேலர்கள் செவிகொடுக்காததைப் போலவே இன்றும் பெரும்பாலோர் நற்செய்தியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றே அவர் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டார்.​—எசேக்கியேல் 9:4; மத்தேயு 10:11-15; மாற்கு 4:14-20.

‘ஆவிக்குரிய தேவையைக் குறித்து உணர்வுள்ளவர்கள்,’ ‘ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை’ நன்றி ததும்ப ஏற்றுக்கொள்கிறார்கள். (மத்தேயு 5:3; 24:14; NW) கடவுள் விரும்பும் விதத்தில் அவரை சேவிக்க அவர்கள் விரும்புகிறார்கள். எனவே நம் ஊழியத்தில் கிடைக்கும் பலன்கள், ஜனங்களின் இருதய நிலையையே பெருமளவு சார்ந்திருக்கிறது, நற்செய்தியை அறிவிக்கும் நம் திறமையின் மீதல்ல. நற்செய்தியை மற்றவர்கள் ஏற்கத்தக்க விதத்தில் அளிக்க வேண்டும் என்பது உண்மைதான். எனினும், பலனளிப்பவர் தேவனே; “என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்” என இயேசு சொன்னார்.​—யோவான் 6:44.

நம்முடைய சுவிசேஷ ஊழியம் யெகோவாவின் பெயரை யாவரும் அறியச் செய்கிறது. ஜனங்கள் கேட்டாலும்சரி கேட்காவிட்டாலும்சரி நம்முடைய பிரசங்க ஊழியம் யெகோவாவின் பவித்திரமான பெயர் பரிசுத்தப்பட உதவுகிறது. மேலும், நம்முடைய சுவிசேஷ ஊழியத்தின் மூலம் நாம் கிறிஸ்துவின் சீஷர்கள் என்றும் நம்முடைய நாளில் நடைபெறும் வெகு முக்கியமான வேலையில் பங்குகொள்ளும் பாக்கியம் பெற்றவர்கள் என்றும் நிரூபிக்கிறோம்.​—மத்தேயு 6:9; யோவான் 15:8.

உற்சாகமின்மையும் உறவுகளும்

குடும்பத்தில் அல்லது சபையில் நிலவும் சில உறவுகளில் ஏற்படும் விரிசல்கள் ஒருவரை சோர்வடையச் செய்யலாம். உதாரணத்திற்கு, யாரும் நம்மை புரிந்துகொள்ளவில்லை என்ற ஆதங்கம் ஏற்படலாம். உடன் விசுவாசிகளின் அபூரணத்தன்மையும் நம்மை உற்சாகமிழக்கச் செய்யலாம். அப்போதும் நம் உதவிக்கு வருவது பைபிளே.

உலகமுழுவதுமுள்ள ‘முழு சகோதரக்கூட்டத்தாரும்’ சேர்ந்து பெரிய ஆவிக்குரிய குடும்பத்தை உண்டுபண்ணுகின்றனர். (1 பேதுரு 2:17, தி.மொ.) ஆனால், ஆள்தன்மையின் முரண்பாடுகள் உரசல்களை ஏற்படுத்துகையில் ஒரே ஐக்கியப்பட்ட குடும்பத்தார் என்ற எண்ணம் மெல்ல மெல்ல மனதிலிருந்து விலகலாம். முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் இப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கு விதிவிலக்கானவர்கள் அல்ல என ஆதாரம் காட்டுகிறது; ஒன்றுபட்டு வாழும்படி அப்போஸ்தலனாகிய பவுல் திரும்பத் திரும்ப அவர்களுக்கு நினைப்பூட்டிக் கொண்டே இருந்தார். எயோதியாள், சிந்திகேயாள் என்ற இரு கிறிஸ்தவ பெண்களுக்கிடையே நிலவிய மனஸ்தாபத்தைத் தீர்த்துக்கொள்ளும்படி அவர்களுக்கு அவர் அறிவுரை கூறியது இதற்கு ஓர் உதாரணம்.​—1 கொரிந்தியர் 1:10; எபேசியர் 4:1-3; பிலிப்பியர் 4:2, 3.

இதுதான் பிரச்சினை என்றால், நம்முடைய சகோதர சகோதரிகளுக்கிடையில் உண்மையான அன்பு என்னும் சுடர் அணைந்துவிடாமலிருக்க எப்படி அதன் திரியைத் தூண்டிவிடலாம்? அவர்களுக்காகவும் கிறிஸ்து மரித்திருக்கிறார், நம்மைப் போலவே அவர்களும் அவருடைய மீட்பின் பலியில் விசுவாசத்தை அப்பியாசிப்பவர்கள் என்பதை நமக்கு நாமே நினைப்பூட்டிக்கொள்ள வேண்டும். நம்முடைய சகோதரர்களில் அநேகர், நமக்காக தங்கள் ஜீவனையும் ஆபத்துக்குள்ளாக்கி கொள்வதன் மூலம் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற தயாராக இருக்கிறார்கள் என்பதையும் நாம் மனதில் வைக்கலாம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, பிரான்ஸிலுள்ள பாரிஸில், ஓர் இளம் சாட்சி ராஜ்ய மன்றத்திற்கு வெளியே வெடிகுண்டு இருந்த ஒரு சூட்கேஸை எடுத்துக் கொண்டு சிட்டாய் பறந்தார். அநேக மாடி படிக்கட்டுகளைத் தாண்டி மின்னல் வேகத்தில் ஓடிச்சென்று அந்த சூட்கேஸை நீரூற்றில் தூக்கி வீசினான்; அங்கே அது வெடித்துச் சிதறியது. தன்னுடைய ஜீவனையே ஆபத்துக்குள்ளாக்கிக் கொண்டு இப்படி ஒரு செயலைச் செய்ய எது அவனைத் தூண்டியது என கேட்ட போது, “நம்முடைய உயிர்கள் ஆபத்திலிருப்பதை உணர்ந்தேன். நாம் எல்லாருமே கொல்லப்படுவதற்குப் பதிலாக நான் ஒருவன் சாவது எவ்வளவோ மேல் என நினைத்தேன்” என அவன் பதிலளித்தான். b இயேசுவின் அடிச்சுவட்டை இம்மியும் பிசகாமல் பின்பற்ற விரும்பும் இப்படிப்பட்ட தோழர்கள் நமக்கிருப்பது நாம் செய்த பாக்கியம்தான்!

மேலும், இரண்டாம் உலக போரின் போது சித்திரவதை முகாம்களிலிருந்த யெகோவாவின் சாட்சிகளிடையே நிலவிய ஒற்றுமையைக் குறித்து நாம் யோசித்துப் பார்க்கலாம். c வெகு சமீபத்தில், மலாவியில் இருக்கும் நம்முடைய சகோதர சகோதரிகள் விசுவாசத்திலிருந்து வழுவாமல் உண்மை கிறிஸ்தவர்களாக தங்கள் உத்தமத்தைக் காத்துக்கொண்டனர். இக்கட்டான நிலைமைகளில் அவ்விதமாகவே நம்முடைய சபையிலுள்ள சகோதரர்களும் செயல்படுவார்கள் என்ற மனநிலை அன்றாடம் எதிர்ப்படும் மனக்கவலைகளையும் கஷ்டங்களையும் தூசிபோல தட்டிவிட்டு செல்ல அல்லது அந்தளவுக்கு பொருட்படுத்தாமலிருக்க நம்மைத் தூண்டவில்லையா? நாம் கிறிஸ்துவின் சிந்தையை வளர்த்துக்கொண்டால், உடன் வணக்கத்தாருடனான நம்முடைய அன்றாட உறவுகள் உற்சாகம் ஊற்றெடுக்கும் செழிப்பான சோலையாய் இருக்கும்; “வறண்ட” பாலைவனமாய் இருக்காது.

உற்சாகமிழக்கச் செய்யும் எண்ணங்கள்

“நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம் போல் இருக்கும்.” (நீதிமொழிகள் 13:12) சில யெகோவாவின் சாட்சிகள், இவ்வுலகத்தின் முடிவு சீக்கிரம் வராததால் ‘கண்கள் பூத்துவிட்டதைப்’ போல் உணர்கின்றனர். உலகத்தார் அநேகரைப் போலவே கிறிஸ்தவர்களும் இந்தக் காலத்தை “கையாளுவதற்கு கடினமான கொடிய கால”மாய் கருதுகின்றனர்.​—2 தீமோத்தேயு 3:1-5, NW.

எனினும் உலகத்தாரைப் போலில்லாமல் கிறிஸ்தவர்கள், இந்தக் கஷ்டங்கள் நிறைந்த நிலைமையை இயேசுவின் வந்திருத்தலுக்கான ‘அடையாளமாக’ கருதவேண்டும்; இது இந்தப் பொல்லாத உலகிற்கு, கடவுளுடைய ராஜ்யம் சீக்கிரத்தில் முடிவைக் கொண்டுவரும் என்பதைக் குறித்துக் காட்டுகிறது. (மத்தேயு 24:3-14) ‘மிகுந்த உபத்திரவத்தின்போது’ சூழ்நிலை இன்னும் மோசமாகப் போவது என்னவோ உண்மைதான். எனவே, இப்போது சூழ்நிலை மோசமானாலும் இச்சம்பவங்கள் சந்தோஷத்தின் ஊற்றாய் அமையும்; ஏனென்றால் வரவிருக்கும் கடவுளுடைய புதிய உலகத்தைக் குறித்து அவை அறிவிக்கின்றன.​—மத்தேயு 24:21; 2 பேதுரு 3:13.

மனித விவகாரத்தில் கடவுளுடைய ராஜ்யம் தலையிடப்போவதை மனதளவில் தள்ளிப்போட்டுக் கொண்டே போவது பொருள் சம்பந்தமான காரியங்களுக்கு அதிக நேரத்தை செலவிட ஒரு கிறிஸ்தவரைத் தூண்டும். அவருடைய வேலையும் பொழுதுபோக்குமே அவருடைய எல்லா நேரத்தையும் சக்தியையும் உறிஞ்சிக்கொள்ள அனுமதிப்பாரானால், ஆவிக்குரிய பொறுப்புக்களைச் சரிவர நிறைவேற்றுவது அவருக்குக் கடினமாகிப் போகும். (மத்தேயு 6:24, 33, 34) இத்தகைய மனநிலை ஏமாற்றத்திற்கு வழிநடத்தி உற்சாகமின்மையில் போய் முடிவடையும். “இந்த உலகத்தில், புதிய உலகத்தில் வாழ்வதைப் போல் வாழ முயற்சிப்பது நடைமுறைக்கு ஒத்துவராதது” என பயணக் கண்காணி ஒருவர் சொன்னார்.

மிகச் சிறந்த இரு நிவாரணிகள்

அறிகுறிகளின் உதவியால் நோய் ஊர்ஜிதம் செய்யப்பட்டால் ஒருவர் எப்படி நல்ல நிவாரணியை கண்டுபிடிக்கலாம்? மிகச் சிறந்த வழிகளில் ஒன்று தனிப்பட்ட படிப்பு. ஏன்? “நாம் செய்கிறதை, ஏன் செய்கிறோம் என்பதை அது நமக்கு தொடர்ந்து நினைப்பூட்டுகிறது” என ஒரு பயணக் கண்காணி குறிப்பிட்டார். “கட்டாயத்தின் பேரில் பிரசங்கிக்கிறோம் என்றால் காலப்போக்கில் அது பாரமானதாகிவிடும்” என்கிறார் இன்னொருவர். முடிவு காலத்தை நெருங்கும் சமயத்தில் நம்முடைய பங்கைக் குறித்து தெளிவான நோக்குநிலை நமக்குத் தேவை; அதற்கு பயனுள்ள தனிப்பட்ட படிப்பு நமக்கு உதவுகிறது. அதே கருத்தில், கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் உண்மையான சந்தோஷத்தைப் பெற ஆவிக்குரிய விதமாக நன்கு போஷிக்கப்பட்டவர்களாய் இருக்க வேண்டிய தேவையை பைபிள் மீண்டும் மீண்டும் நமக்கு நினைப்பூட்டுகிறது.​—சங்கீதம் 1:1-3; 19:7-10; 119:1, 2.

உற்சாகமூட்டும் மேய்ப்பு சந்திப்புகளைச் செய்வதன் மூலம் மூப்பர்கள், உற்சாகமின்மையில் மூழ்கிப் போகாமலிருக்க மற்றவர்களுக்கு உதவலாம். நாம் ஒவ்வொருவரும் பெரும் போற்றுதலுக்குரியவர்கள், யெகோவாவின் ஜனங்களில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் என்பதை இத்தகைய தனிப்பட்ட சந்திப்புகளின்போது மூப்பர்கள் சுட்டிக்காட்டலாம். (1 கொரிந்தியர் 12:20-26) உடன் கிறிஸ்தவர்களைப் பற்றிக் குறிப்பிடுகையில் ஒரு மூப்பர் சொன்னதாவது: “அவர்களின் மதிப்பை வலியுறுத்திக் காட்டுவதற்கு, அவர்களுடைய கடந்தகால சாதனைகளை நான் ஞாபகப்படுத்துவேன். அவர்கள் யெகோவாவின் கண்மணிகள், அவர்களுக்காகவே அவருடைய குமாரனின் இரத்தம் சிந்தப்பட்டிருக்கிறது என்பதையும் குறிப்பிடுவேன். இந்த விதமான குறிப்புகள் எப்போதுமே பலனளித்திருக்கின்றன. இதற்கு பைபிளிலிருந்து தக்க ஆதாரத்தை ஒருமுறை காட்டிவிட்டால், உற்சாகமிழந்தவர்கள் குடும்ப ஜெபம், படிப்பு, பைபிள் வாசிப்பு என புதிய இலக்குகளை நிர்ணயிக்கும் நிலைக்கு திரும்புவார்கள்.”​—எபிரெயர் 6:10.

மேய்ப்பு சந்திப்புகளின்போது, கடவுளை திருப்தி செய்யவே முடியாது என்ற எண்ணத்தை ஏற்படுத்தாமல் இருக்க மூப்பர்களுக்கு கவனம் தேவை. அதற்கு மாறாக, இயேசுவைப் பின்பற்றுவோரின்மீது சுமத்தப்பட்ட சுமை இலகுவானது என்பதைக் காண உற்சாகமிழந்த உடன் வணக்கத்தாருக்கு மூப்பர்கள் உதவ வேண்டும். ஆம், நம்முடைய கிறிஸ்தவ ஊழியம் சந்தோஷத்தின் பிறப்பிடம்.​—மத்தேயு 11:28-30.

உற்சாகமின்மையை முறியடித்தல்

அதற்கான காரணம் எதுவாக இருந்தாலும் உற்சாகமின்மை எனும் கொள்ளை நோய்க்கு எதிராக போர்க்கொடி உயர்த்த வேண்டும். எனினும், இந்தப் போராட்டத்தில் நாம் மட்டுமே தனித்தில்லை என்பதை நினைவில் வைக்க வேண்டும். நாம் உற்சாகமிழந்திருந்தால், நம் உடன் தோழர்களின், முக்கியமாய் மூப்பர்களின் உதவியை நாம் ஏற்றுக்கொள்வோமாக. அவ்வாறு செய்வதன்மூலம் உற்சாமின்மையின் உணர்ச்சிகளை குறைத்துக்கொள்ள முடியும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, உற்சாகமின்மையை மேற்கொள்ள உதவிக்காக யெகோவாவை நாட வேண்டியது அவசியம். ஜெப சிந்தையோடு யெகோவாவை சார்ந்திருந்தால், உற்சாகமின்மையை முற்றிலுமாக முறியடிக்க அவர் நமக்கு உதவலாம். (சங்கீதம் 55:22; பிலிப்பியர் 4:6, 7) எப்படியிருந்தாலும், பின்வருமாறு பாடிய சங்கீதக்காரனின் உணர்வை அவருடைய ஜனமாக நாமும் பகிர்ந்துகொள்ளலாம்: “கெம்பீர சத்தத்தை அறியும் ஜனங்கள் பாக்கியமுள்ளவர்கள்; கர்த்தாவே, அவர்கள் உம்முடைய முகத்தின் வெளிச்சத்தில் நடப்பார்கள். அவர்கள் உம்முடைய நாமத்தில் நாடோறும் களிகூர்ந்து, உம்முடைய நீதியால் உயர்ந்திருப்பார்கள். நீரே அவர்கள் பலத்தின் மகிமையாயிருக்கிறீர்; உம்முடைய தயவினால் எங்கள் கொம்பு உயரும்.”​—சங்கீதம் 89:15-17.

[அடிக்குறிப்புகள்]

a “வீட்டுக்கு வீடு ஊழியத்தின் சவால்” என்ற கட்டுரையை 1981, மே 15 ஆங்கில காவற்கோபுரத்தில் காண்க.

b உவாட்ச்டவர் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட 1985, பிப்ரவரி 22 தேதியிட்ட ஆங்கில விழித்தெழு!-வில் பக்கங்கள் 12, 13-ஐக் காண்க.

c 1980, ஆகஸ்ட் 15 ஆங்கில காவற்கோபுரத்தில் வெளிவந்த “நான் ‘மரண அணிவகுப்பிலிருந்து’ தப்பினேன்” என்ற கட்டுரையையும், “நாசி ஜெர்மனியில் உத்தமத்தைக் காத்தல்” என்ற 1985, ஜூன் 22 ஆங்கில விழித்தெழு!-வில் வெளிவந்த கட்டுரையையும் காண்க.

[பக்கம் 14-ன் படம்]

அன்பான மூப்பர்களின் உற்சாகமூட்டும் மேய்ப்பு சந்திப்புகள் உற்சாகமின்மையை மேற்கொள்ள கிறிஸ்தவர்களுக்கு உதவும்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்