வாழ்க்கை சரிதை
சின்ன வயதிலிருந்து சிருஷ்டிகரை நினைத்தல்
டேவிட் இஸட். ஹிப்ஷ்மன் சொன்னது
“என் வாழ்வின் அந்திமகாலத்திற்கு நான் வந்துவிட்டேன் என்றால், கடைசி வரை யெகோவாவுக்கு உண்மையுடன் இருந்திருக்கிறேன் என சொல்லலாம். மகிழ்ச்சி பொங்கிய இனிதான எங்கள் திருமண வாழ்க்கைக்காகவும் அருமை கணவருக்காகவும் யெகோவாவே உமக்கு நன்றி தெரிவிக்கிறேன்.”
இவை என்னுயிர் மனைவியின் டைரியில் எழுதப்பட்டிருந்த கடைசி வரிகள். இதை, 1992 மார்ச்-ல் என் மனைவியை பறிகொடுத்தபின் நான் பார்த்தேன். என் உள்ளத்தில் எப்படிப்பட்ட உணர்ச்சிகள் பொங்கியெழுந்திருக்கும் என கற்பனை செய்து பாருங்கள். இதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்புதான், ஹெலன் முழுநேர ஊழியத்தில் 60 ஆண்டுகள் பூர்த்தி செய்ததை குதூகலமாக கொண்டாடினோம்.
1931-ல், அ.ஐ.மா.-ல் ஒஹாயோ, கொலம்பஸில் நடந்த மாநாட்டில் நானும் ஹெலனும் பக்கத்தில் பக்கத்தில் உட்கார்ந்து நிகழ்ச்சிகளை கேட்ட அந்த நாள் இன்னும் என் நினைவில் பசுமையாகவே இருக்கிறது. ஹெலனுக்கு 14 வயதுகூட இருக்காது. ஆனால், என்னைவிட அவள் அந்த நிகழ்ச்சிக்கு அதிக முக்கியத்துவமும் மதிப்பும் காட்டினாள். ஊழியத்தில் ஹெலன் அதிக ஆர்வம் காட்டினாள். அவளும் அவளுடைய அம்மாவும் பயனியர்களாக ஆனது அதற்கு சரியான சான்று. முழு நேர சுவிசேஷகர்கள் யெகோவாவின் சாட்சிகளால் பயனியர்கள் என்றே அழைக்கப்பட்டனர். அமெரிக்க மாகாணங்களின் தெற்குப் பகுதியில் உள்ள கிராமப்புறங்களில் ஊழியம் செய்வதற்காக தங்களுடைய சொகுசான வீட்டையும்கூட துறந்தனர்.
என் கிறிஸ்தவ ஆஸ்தி
1910-ல், என் பெற்றோர் தங்களுடைய இரு சிறு பிள்ளைகளுடன் கிழக்கு பென்ஸில்வேனியாவில் இருந்து அம்மாகாணத்தின் மேற்குப் பகுதியில் உள்ள க்ரோவ் மாநகருக்கு குடிபெயர்ந்தனர். அங்கு ஓர் எளிய வீட்டை வாங்கி, அதில் குடிபுகுந்தனர். ரிஃபார்ம்ட் சர்ச்சின் அங்கத்தினர்களாகவும் ஆனார்கள். கொஞ்ச நாட்களிலேயே, வேல்ஸ் நாட்டவரான வில்லியம் இவான்ஸ் என்பவர் என் பெற்றோரை சந்தித்தார். இவர் ஒரு பைபிள் மாணாக்கர். யெகோவாவின் சாட்சிகள் அப்போது பைபிள் மாணாக்கர் என அழைக்கப்பட்டனர். அப்போது அப்பாவுக்கு வயது சுமார் 25. அம்மா, அப்பாவைவிட ஐந்து வருடங்கள் இளையவர். சிநேகப்பான்மையுடன் பழகும் இவர் சொன்ன செய்திக்கு அப்பா செவிகொடுத்தார். ஒரு நாள் அப்பா அவரை சாப்பாட்டிற்கு அழைத்திருந்தார். கற்றுவந்த பைபிள் சத்தியங்களை என் பெற்றோர் மிக விரைவில் ஆர்வமாக ஏற்றுக்கொண்டனர்.
சபைக்கு அருகில் இருக்க வேண்டுமென்பதற்காக, சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஷேரன் என்னும் நகரத்திற்கு அப்பா குடும்பமாக மாறிச் சென்றார். சில மாதங்களுக்குப் பிறகு, 1911-லோ அல்லது 1912-லோ, அப்பாவும் அம்மாவும் முழுக்காட்டுதல் பெற்றனர். உவாட்ச் டவர் சொஸைட்டியின் முதல் தலைவர், சார்ல்ஸ் டேஸ் ரஸல் முழுக்காட்டுதல் பேச்சு கொடுத்தார். டிசம்பர் 4, 1916-ல் நான் பிறந்தேன். “அன்பை பகிர்ந்துகொள்ள இன்னொரு குட்டி தம்பி” பிறந்திருக்கிறான் என்று சொல்லி, என் பெற்றோர் “நேசமுள்ள” என்ற அர்த்தம் உடைய டேவிட் என்று பெயர் வைத்தனர்.
நான்கு வாரக் குழந்தையாய் இருக்கும்போதே, நான் என்னுடைய முதல் மாநாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டேன். அப்போது, என் அப்பாவும் என் அண்ணன்மார்களும் சபை கூட்டங்களுக்கு பல கிலோமீட்டர் தூரம் நடந்து செல்வர். அம்மா, என்னையும் அக்காவையும் ட்ராமில் அழைத்து செல்வார்கள். காலை, மதிய நிகழ்ச்சிகள் என கூட்டங்கள் நடத்தப்பட்டன. வீட்டில், காவற்கோபுரம், த கோல்டன் ஏஜ் பத்திரிகைகளில் வரும் கட்டுரைகளைப் பற்றியே எங்கள் பேச்சு இருக்கும். விழித்தெழு! பத்திரிகை அப்போது இந்த பெயரில்தான் வெளிவந்தது.
சிறந்த உதாரணங்களிலிருந்து நன்மையடைதல்
யாத்ரீகர்கள் என்று அப்போது அழைக்கப்பட்ட பிரயாணக் கண்காணிகள் அநேகர், எங்கள் சபையை சந்திக்க வந்தனர். சாதாரணமாக ஓரிரு நாட்கள் எங்களோடு இருப்பார்கள். என் நினைவில் இருந்து நீங்காத ஒரு பேச்சாளர் வால்டர் ஜே. தார்ன் என்பவர். ‘தம் இளம்பிராயத்திலேயே’ மகத்தான சிருஷ்டிகரை நினைத்தவர் அவர். (பிரசங்கி 12:1) நான் சிறுவனாக இருக்கும்போது, “ஃபோட்டோ-டிராமா ஆஃப் க்ரியேஷன்” என்ற ஸ்லைட்-ஷோ காட்டுவதற்கு, அப்பா போகும்போதெல்லாம் நானும் அவரோடு தொற்றிக்கொள்ளுவேன். மனிதகுலத்தின் சரித்திரத்தை விவரிக்கும் இந்த படத்தொகுப்பு நான்கு பாகங்களை உடையது.
சகோதரர் இவான்ஸுக்கும் அவரது மனைவி மிரியாமுக்கும் பிள்ளைகள் இல்லை. ஆனால், அவர்கள் எங்கள் குடும்பத்திற்கு ஆவிக்குரிய பெற்றோராகவும் தாத்தா பாட்டியாகவும் ஆனார்கள். என் அப்பாவை, வில்லியம் எப்போதும் “மகனே” என்றுதான் கூப்பிடுவார். அவரும் மிரியாமும் எங்கள் குடும்பத்திற்கு சுவிசேஷ வேலையில் ஆர்வத்தை ஊட்டி வளர்த்தனர். இருபதாம் நூற்றாண்டின் துவக்க காலத்தில், சகோதரர் இவான்ஸ், வேல்ஸூக்கு பலமுறை போய்வந்தார். ஸ்வான்சீயை சுற்றியுள்ள பகுதிகளில் சத்தியத்தின் விதையை விதைக்கும் நோக்கத்தோடு சென்றார். இதனால், அமெரிக்காவிலிருந்து வந்த போதகர் என்று அநேகரால் அங்கு அவர் அறியப்பட்டார்.
1928-ல், சகோதரர் இவான்ஸ் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, மேற்கு வர்ஜீனியாவின் மலைப்பகுதிகளில் பிரசங்கிக்க ஆரம்பித்தார். என்னுடைய அண்ணன்மார்கள், 21 வயது க்ளாரன்ஸும் 19 வயது கார்லும், அவரோடு ஊழியத்தில் சேர்ந்துகொண்டனர். ஆண்பிள்ளைகள் நாங்கள் நால்வருமே முழுநேர ஊழியத்தில் பல ஆண்டுகள் செலவிட்டோம். சொல்லப்போனால், எங்களுடைய இளம்பிராயத்தில் யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் பிரயாணக் கண்காணிகளாக சேவை செய்திருக்கிறோம். இப்போது 90-களில் இருக்கும் அம்மாவின் கடைசித் தங்கை, சமீபத்தில் இப்படியாக எனக்கு எழுதினார்கள்: “க்ரோவ் நகரத்திற்கு வந்ததற்காகவும் ஊழியத்திற்காக அவர் காட்டிய பக்தி வைராக்கியத்திற்காகவும் நாம் எல்லாருமே சகோதரர் இவான்ஸுக்கு ரொம்ப கடமைப்பட்டிருக்கிறோம் அல்லவா!” இளம்பிராயத்தில் இருந்தே தன் சிருஷ்டிகரை நினைத்தவர்களுள் என்னுடைய சித்தி மேரியும் ஒருவர்.
மாநாடுகளுக்கு செல்லுதல்
1922-ல், சிடர் பாய்ன்ட், ஒஹாயோவில் நடைபெற்ற சரித்திரம் படைத்த மாநாட்டிற்கு அப்பாவும் க்ளாரன்ஸும்தான் செல்ல முடிந்தது. எனினும், 1924-க்குள், நாங்கள் ஒரு வாகனத்தை வாங்கிவிட்டதால், ஒஹாயோ, கொலம்பஸில் நடந்த மாநாட்டிற்கு நாங்கள் குடும்பமாக அதில் சென்றோம். அது எட்டு நாட்கள் நடந்த மாநாடு. அதில் எங்களுடைய சாப்பாட்டு செலவுக்கு எங்களுடைய சேமிப்பிலிருந்து நாங்கள் கொடுத்தோம். அதற்காக, நாங்கள் கோழி, முயல் போன்றவற்றை வளர்த்தோம். தேன்கூடுகளை பராமரித்தோம். ஆண்பிள்ளைகள் நாங்கள் எல்லாரும் நியூஸ் பேப்பர் போட்டு காசு சம்பாதித்தோம். சொந்தக்காலிலே நாங்கள் நிற்பதற்கு கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே எங்கள் பெற்றோரின் நோக்கம்.
1927-ல், கனடாவில் உள்ள டோரான்டோவில் நடந்த மாநாட்டின் சமயத்தில், எங்கள் குடும்பத்தில் இன்னும் ஒரு நபர் சேர்ந்திருந்தார். அது என்னுடைய தம்பி பால். அப்போது அவன் ஆறு மாதக்குழந்தை. எனவே, அவனைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு என் தலையில் விழுந்தது. என் சித்திக்கு துணையாக, தம்பியைப் பார்த்துக்கொள்ள நான் வீட்டில் இருக்க வேண்டியதாயிற்று. என் பெற்றோரும் மற்ற பிள்ளைகளும் மாநாட்டிற்கு சென்றனர். அதற்காக எனக்கு கிடைத்த டிப்ஸ் பத்து டாலர். அதில் நான் ஒரு புதிய டிரஸ் வாங்கிக்கொண்டேன். எங்களுக்கு தேவையான துணிமணிகளை நாங்களே வாங்கிக்கொள்ளவும் கூட்டங்களுக்கு நன்றாக டிரஸ் பண்ணிக்கொண்டு செல்லவும் நாங்கள் பயிற்றுவிக்கப்பட்டோம்.
1931-ல், ஒஹாயோ, கொலம்பஸில் நடந்த, நினைவை விட்டு நீங்காத மாநாட்டின்போது, க்ளாரன்ஸுக்கும் கார்லுக்கும் கல்யாணம் ஆகியிருந்தது. அவர்கள் தங்கள் மனைவிமார்களோடு பயனியர் ஊழியம் செய்துகொண்டிருந்தார்கள். இரு குடும்பமும் எளிமையான, நடமாடும் வீட்டில் வாழ்ந்தார்கள். மேற்கு வர்ஜீனியாவிலுள்ள வீலிங்கைச் சேர்ந்த க்ளேர் ஹவுஸ்டனை கார்ல் மணந்திருந்தார். அதனால்தான், அந்த மாநாட்டில், க்ளேருடைய தங்கை ஹெலன் பக்கத்தில் நான் உட்கார்ந்திருந்தேன்.
முழுநேர ஊழியம்
நான் 15 வயதாயிருக்கும்போது, 1932-ல் பள்ளிப் படிப்பை முடித்தேன். அதற்கு அடுத்த வருடம், பழைய கார் ஒன்றை என் அண்ணன் க்ளாரன்ஸிடம் கொண்டுபோய் கொடுத்தேன். அப்போது அண்ணன் தென் கரோலினாவில் பயனியர் ஊழியம் செய்துகொண்டிருந்தார். நானும் பயனியர் ஊழியத்திற்காக விண்ணப்பம் செய்தேன். க்ளாரன்ஸோடும் அவருடைய மனைவியோடும் சேர்ந்து ஊழியம் செய்ய ஆரம்பித்தேன். அந்த சமயத்தில், ஹெலன் கென்டகியில் உள்ள ஹாப்கின்வில்லில் பயனியர் ஊழியம் செய்துகொண்டிருந்தாள். முதன்முறையாக அவளுக்கு ஒரு கடிதம் எழுதினேன். அவள் எழுதிய பதில் கடிதத்தில், “நீங்கள் ஒரு பயனியரா?” என்று கேட்டு எழுதியிருந்தாள்.
“நான் பயனியர்தான்; எப்பவுமே பயனியராக இருக்கணும்னுதான் ஆசைப்படறேன்” என பதில் எழுதினேன். அந்தக் கடிதத்தை ஹெலன், சாகும்வரை, ஏறக்குறைய 60 வருடங்களுக்கு பிறகும்கூட பத்திரமாக வைத்திருந்தாள். என்னுடைய பிராந்தியத்தில் இருந்த நீதித்துறையைச் சேர்ந்த அதிகாரிகளுக்கும் குருமார்களுக்கும் ராஜ்யம், உலகத்துக்கான நம்பிக்கை (ஆங்கிலம்) என்ற புக்லெட்டை விநியோகித்ததைப் பற்றி அந்த கடிதத்தில் எழுதியிருந்தேன்.
1933-ல், நடமாடும் ஒரு கூடாரத்தை அப்பா எனக்காக செய்தார். எட்டு அடி நீளமும் ஆறரை அடி அகலமும் உடையது அது. கேன்வாஸ் துணியை சுவர்போல் சுற்றி கெட்டியாக இழுத்துக்கட்டப்பட்டிருந்தது. முன்புறமும் பின்புறமும் ஒரு ஜன்னல் இருந்தது. இதுவே என் நடமாடும் குடியிருப்பு. பயனியர் ஊழியத்தில், அடுத்த நான்கு வருடங்களுக்கு என்னுடைய எளிமையான இருப்பிடமாக திகழ்ந்தது அது.
1934, மார்ச் மாதத்தில், க்ளாரன்ஸ், கார்ல், அவர்களுடைய மனைவிமார்கள், ஹெலன், அவள் அம்மா, க்ளாரன்ஸூடைய மனைவியின் தங்கை, நான்—நாங்கள் எட்டு பேர்—கலிபோர்னியாவிலுள்ள லாஸ் ஏஞ்சலிஸில் நடைபெற்ற மாநாட்டிற்கு மேற்கு நோக்கி பயணப்பட்டோம். என்னுடைய ட்ரெய்லரில் சிலர் வசதியாக தூங்கிக்கொண்டே பிரயாணம் செய்தார்கள். நான் என் குடியிருப்பு வண்டியிலேயே தூங்கினேன். மற்றவர்கள் லாட்ஜில் தங்கினார்கள். வண்டியில் சிறு கோளாறு ஏற்பட்டதால், நாங்கள் அந்த ஆறு நாள் மாநாட்டின் இரண்டாம் நாள்தான் லாஸ் ஏஞ்சலஸை அடைந்தோம். மார்ச் 26-ம் தேதி, நானும் ஹெலனும் யெகோவாவுக்கு செய்த எங்களுடைய ஒப்புக்கொடுத்தலை தண்ணீர் முழுக்காட்டுதல் மூலம் அடையாளப்படுத்தினோம்.
அந்த மாநாட்டில், உவாட்ச் டவர் சொஸைட்டியின் தலைவரான ஜோசஃப் எஃப் ரதர்ஃபார்ட், பயனியர்கள் எல்லாரையும் சந்தித்தார். பைபிள் சத்தியத்தின் சக்தி வாய்ந்த வீரர்கள் என எங்களை உற்சாகப்படுத்தினார். அந்த சந்தர்ப்பத்தில், பயனியர் ஊழியத்தில் தொடர்ந்திருக்க ஆதரவாக பண உதவி அளிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.
வாழ்க்கைக்கான கல்வி
லாஸ் ஏன்ஜலஸில் நடந்த மாநாடு முடிந்து நாங்கள் திரும்பியபோது, நாங்கள் எல்லாரும் ராஜ்ய செய்தியை தென் கரோலினா, வர்ஜீனியா, மேற்கு வர்ஜீனியா, கென்டகி போன்ற மாகாணங்கள் முழுவதிலும் உள்ள மக்களுக்கு சொன்னோம். பல வருடங்களுக்குப் பிறகு, அந்த சமயத்தைப் பற்றி ஹெலன் இப்படி எழுதினாள்: “ஆதரவுக்கு எந்த ஒரு சபையும் இல்லை. உதவி அளிக்க நண்பர்களும் இல்லை. ஏனென்றால், முன்பின் தெரியாத ஓர் இடத்தில் நாங்கள் எல்லாருமே அந்நியர்களாக இருந்தோம். ஆனால், ஒரு முக்கியமான கல்வியை பெற்றுவருகிறேன் என்பதை மட்டும் நான் அறிவேன். அதனால், நான் பணக்காரியாகிக் கொண்டு வந்தேன்.”
அவள் தொடர்கிறாள்: “வீட்டு சூழலில் இருந்தும் நண்பர்களிடமிருந்தும் பிரிந்து தன்னந்தனியே ஓர் இளம்பெண் தன் நேரத்தை எப்படித்தான் கடத்தமுடியும்? அது ஒன்றும் கடினமான காரியம் இல்லை. எனக்கு போர் அடித்ததாக ஞாபகமே இல்லை. நான் நிறைய படித்தேன். பைபிள் பிரசுரங்களை வாசிப்பதையும் படிப்பதையும் ஒருபோதும் நாங்கள் தவறவிடவே இல்லை. நான் அம்மாவோடேயே இருந்தேன். எங்களிடம் இருந்த பணத்தை வைத்து குடும்பத்தை எப்படி சிறந்த முறையில் நிர்வகிக்கலாம் என கற்றுக்கொண்டேன். அதுமட்டுமா! கடைக்கு போவது, கார் டயரில் காற்று போய்விட்டால் அதை மாற்றுவது, சமைப்பது, தைப்பது, பிரசங்கிப்பது என பல வேலைகளை கற்றுக்கொண்டேன். அதில் எனக்கு சற்றேனும் வருத்தமில்லை. அந்த காலம் திரும்பிவந்தால், அவற்றையெல்லாம் மறுபடியும் சந்தோஷமாய் செய்வேன்.”
அந்த சமயத்தில், ஹெலனும் அவளுடைய அம்மாவும் சிறிய ட்ரெய்லரில் வசிக்க பழகிக்கொண்டனர். மிக வசதியான, சொந்த வீடு இருந்தபோதிலும் அந்த சிறிய ட்ரெய்லரில் திருப்தியாக இருந்தனர். 1937-ல், ஒஹாயோ கொலம்பஸில் நடந்த மாநாட்டிற்குப் பிறகு, ஹெலனுடைய அம்மாவின் உடல்நிலை மோசமாகியது. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். நவம்பர் 1937-ல், மேற்கு வர்ஜீனியாவில் உள்ள அவருடைய பிராந்தியமான பிலிப்பியில் இறந்தார்.
திருமணம், தொடர்ந்து ஊழியம்
1938, ஜூன் 10-ம் தேதி, நானும் ஹெலனும் தம்பதிகள் ஆனோம். எளிமையான முறையில் எங்கள் திருமணம் நடந்தது. மேற்கு வர்ஜீனியாவிலுள்ள வீலிங்கிற்கு அருகில் இருக்கும் எல்ம் க்ரோவ் நகரத்தில், ஹெலன் பிறந்த வீட்டில் அந்த வைபவம் நடந்தது. பல வருடங்களுக்கு முன்பு, சத்தியத்தை எங்கள் குடும்பத்திற்கு அறிமுகப்படுத்திய எங்கள் அருமை சகோதரர் இவான்ஸ், திருமணப் பேச்சைக் கொடுத்தார். திருமணத்திற்கு பிறகு, கிழக்கு கென்டகியில் எங்கள் பயனியர் ஊழியத்தை செய்ய திட்டமிட்டோம். ஆனால், எங்களை ஆச்சரியத்தில் திணற வைத்த விஷயம் என்னவென்றால், பிரயாண வேலைக்கான அழைப்பு எங்களுக்கு வந்தது. மேற்கு கென்டகியிலும் டென்னஸ்ஸீயின் சில பகுதிகளிலும் உள்ள யெகோவாவின் சாட்சிகளை சந்தித்து, ஊழியத்தில் அவர்களுக்கு உதவியளிப்பதே எங்கள் வேலை. அப்போது, நாங்கள் சென்ற இடங்களில் இருந்த ராஜ்ய அறிவிப்பாளர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 75 தான்.
அந்த சமயத்தில், தேசப்பற்று எனும் களை அநேகருடைய எண்ணங்களில் விஷத்தை விதைத்தது. என்னுடைய கிறிஸ்தவ நடுநிலைகாரணமாக சீக்கிரத்தில் சிறையில் தள்ளப்படுவேன் என எதிர்பார்த்தேன். (ஏசாயா 2:4) எனினும், பிரசங்க வேலையில் நான் ஈடுபட்டிருந்ததால்தான், ராணுவத்தில் சேருவதில் இருந்து எனக்கு விலக்கு அளித்தது மட்டுமல்லாமல் முழுநேர ஊழியத்தில் தொடரும்படியும் அனுமதி கிடைத்தது.
நாங்கள் ரொம்ப சின்னவயதில் வட்டார ஊழியத்தை தொடங்கியதைப் பற்றி பேசாத ஆட்களே இல்லை. கென்டகியிலுள்ள ஹாப்கின்ஸ்வில்லில் ஒரு சகோதரி ஹெலனை அன்போடு கட்டித்தழுவி, வாழ்த்திவிட்டு, “என்னைத் தெரிகிறதா?” என்று கேட்டார். 1933-ல், அவருடைய கணவன் நடத்திவந்த கடையில் சந்தித்து, ஹெலன் சாட்சி கொடுத்தாள். அந்தப் பெண் சன்டே-ஸ்கூல் டீச்சர். ஆனால், ஹெலன் கொடுத்த புத்தகத்தை வாசித்துவிட்டு, பைபிள் சாராத போதனைகளை சொல்லிக் கொடுத்ததற்காக பிள்ளைகளிடம் மன்னிப்பு கேட்டார். சர்ச்சிலிருந்தும் விலகினார். பைபிள் சத்தியங்களை தன் அயலகத்தாரிடம் சொல்ல ஆரம்பித்தார். ஹெலனும் நானும் மேற்கு கென்டகியில் மூன்று வருடங்கள் வட்டார ஊழியத்தில் இருந்தோம். அந்த சமயத்தில், நாங்கள் அடிக்கடி அந்த சகோதரியின் வீட்டில் தங்கினோம். அந்த சகோதரியின் கணவரும் அதற்கு சம்மதித்தார்.
அப்போதெல்லாம், வட்டார அசெம்பிளிகளை சிறிய அளவில் கொண்டிருந்தோம். இந்த அசெம்பிளிக்கு ஏ. ஹெச். மாக்மில்லன் வந்திருந்தார். ஹெலன் குழந்தையாய் இருந்தபோது, அவளுடைய பெற்றோரின் வீட்டில் அவர் தங்கியிருக்கிறார். எனவே, மாநாட்டின்போது, 16 அடி நீளமுடைய எங்களுடைய நடமாடும் வீட்டில் தங்கினார். அவருக்காக எக்ஸ்ட்ரா பெட்டும் இருந்தது. இவரும் தன் சிருஷ்டிகரை இளம்பிராயத்திலேயே நினைக்க ஆரம்பித்தவர். 1900-ல், தனது 23-ம் வயதில் யெகோவாவுக்கு தன்னை ஒப்புக்கொடுத்தார்.
1941, நவம்பர் மாதம் பிரயாணக் கண்காணிகளின் வேலை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. எனவே, கென்டகியிலுள்ள ஹேஸர்ட் நகரத்தில் பயனியராக நியமிக்கப்பட்டேன். மறுபடியும், என் அண்ணன் கார்லுடனும் அண்ணி க்ளேருடனும் நாங்கள் ஊழியத்தை தொடர்ந்தோம். இங்கே, ஹெலனுடைய அண்ணன் மகன் ஜோசஃப் ஹவுஸ்டன் எங்களோடு சேர்ந்து பயனியர் ஊழியத்தை ஆரம்பித்தார். சுமார் 50 வருடங்களுக்கு முழுநேர ஊழியத்தில் இருந்தார். நியூ யார்க், புரூக்ளினில் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை அலுவலகத்தில் சேவை செய்துகொண்டிருந்தபோது, 1992-ல், திடீரென மாரடைப்பால் இறந்தார்.
1943-ல், கனெடிகட்டில் உள்ள ராக்வில் நகரத்திற்கு மாற்றப்பட்டோம். நாங்கள் தென்பகுதியிலுள்ள பிராந்தியங்களிலேயே பிரசங்கம் செய்துகொண்டிருந்ததால், எனக்கும் ஹெலனுக்கும் அது முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. ராக்வில்லில், வாரத்தில் 20-க்கும் அதிகமான பைபிள் படிப்புகளை ஹெலன் நடத்திவந்தாள். சிறிது நாட்களில், ராஜ்ய மன்றத்திற்காக ஒரு சிறு அறையை வாடகைக்கு எடுத்தோம். பின்னர், ஒரு சிறு சபை அமைக்கப்படுவதற்கு இதுவே முக்கிய ஸ்தலமாக ஆகியது.
ராக்வில்லில் நாங்கள் சேவை செய்துகொண்டிருந்தபோது, நியூ யார்க்கிலுள்ள சவுத் லான்சிங்கில் இருக்கும் உவாட்ச்டவர் பைபிள் ஸ்கூல் ஆஃப் கிலியட்-ன் ஐந்தாவது பள்ளிக்கு அழைப்பு வந்தது. கென்டகியில், நாங்கள் பயனியர் செய்தபோது எங்களோடு பயனியர்களாக இருந்த ஆப்ரீ, பெர்தா பிவன்ஸும் இந்த பள்ளிக்கு வருவார்கள் என அறிந்து மிகவும் சந்தோஷப்பட்டோம்.
பள்ளியும் புதிய நியமிப்பும்
நாங்களே இளம் பிராயத்தில் இருந்தோம். என்றபோதிலும், எங்களோடு கிலியட் பள்ளிக்கு வந்தவர்கள் இன்னும் சிறுவயதினராய் இருந்தனர். ஆம், அவர்களும் தங்கள் இளம்பிராயத்திலேயே தங்கள் மகத்தான சிருஷ்டிகரை நினைத்தவர்கள். ஜூலை, 1945-ல், எங்களுக்கு பட்டம் அளிக்கப்பட்டது. இரண்டாம் உலக யுத்தம் முடிவை நெருங்கிக்கொண்டிருந்த சமயம் அது. எங்களுடைய மிஷனரி நியமிப்புக்காக நாங்கள் காத்துக்கொண்டிருந்த அந்த சமயத்தில், நியூ யார்க், புரூக்ளினில் உள்ள ஃப்ளாட்புஷ் சபையில் சேவை செய்தோம். இறுதியாக, 1946, அக்டோபர் 21-ம் தேதி, பிவன்ஸ் தம்பதியினர் உட்பட இன்னும் ஆறு பேரோடு சேர்ந்து குவாதமாலா நகரத்திற்கு, அதாவது எங்களுடைய புதிய நியமிப்புக்கு பறந்தோம். அந்த சமயத்தில், மத்திய அமெரிக்கா முழுவதிலுமே 50-க்கும் குறைவான சாட்சிகளே இருந்தனர்.
ஏப்ரல், 1949-ல், மிஷனரிகளாகிய எங்களில் சிலர் குவிஜால்டெனாங் நகரத்திற்கு சென்றோம். அது, நாட்டிலேயே பிரபலத்திலும் அளவிலும் இரண்டாவது இடத்தை பெற்ற நகரம் ஆகும். இது, கடல் மட்டத்திற்கு மேல் 2,300 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் உள்ளது. இங்கு வீசும் காற்று சுத்தமாகவும் புத்துணர்ச்சி அளிப்பதாகவும் இருக்கும். அங்கு நாங்கள் செய்த சேவையை குறித்து ஹெலன் இப்படியாக சுருக்கமாக எழுதியிருந்தாள்: “அங்கிருந்த பல்வேறு பட்டணங்களிலும் கிராமங்களிலும் பிரசங்கிக்கும் அரும்பெரும் வாய்ப்பு எங்களுக்கு கிட்டியது. அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து, தூரத்தில் உள்ள பட்டணங்களுக்கு பஸ்ஸில் செல்வோம். கேன்வாஸ் துணியால் ஆன ஜன்னல்களை உடையவை அந்த பஸ்கள். சுமார் எட்டு மணிநேரம் பிரசங்கிப்போம்.” குவிஜால்டெனாங்கில் உள்ள ஆறு சபைகள் உட்பட, இந்த இடங்கள் பலவற்றில் இன்று சபைகள் உள்ளன.
குவாதமாலாவில் உள்ள மூன்றாவது பெரிய நகரமாகிய பியூர்டோ போரியஸ் நகரத்தில் சேவை செய்வதற்கான அழைப்பு மிஷனரிகளுக்கு வந்தது. இது கரீபியன் கடலோரத்தில் உள்ள நகரம். குவாதமாலாவில் ஐந்து வருடங்கள் எங்களோடு சேவை செய்த எங்கள் அருமை பிவன்ஸ் தம்பதியினரும் இந்த புதிய இடத்திற்கு சென்றவர்களில் அடங்குவர். அந்த பிரிவு தாளா துயரத்தை தந்தது. எங்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றிடத்தையே ஏற்படுத்திவிட்டது. பிறகு, அந்த மிஷனரி வீட்டில் மிஞ்சி விடப்பட்டவர்கள் நானும் ஹெலனுமே. எனவே, நாங்கள் ஒரு சிறிய வீட்டிற்கு மாறினோம். 1955-ல், வெப்ப மண்டல நகரமாகிய மஜாடேனான்கோவிற்கு செல்ல வேண்டிய புதிய நியமிப்பை நானும் ஹெலனும் ஏற்றோம். 1953-ல், என்னுடைய கடைசி தம்பி பாலும் அவனுடைய மனைவி டலோரஸூம் கிலியட் பள்ளியில் பட்டம் பெற்று, இந்த நகரத்தில்தான் நாங்கள் போவதற்குமுன் சேவை செய்தனர்.
1958-ற்குள்ளாக, குவாதமாலா மூன்று வட்டாரங்கள், 20 சபைகள், 700-க்கும் அதிகமான சாட்சிகள் என அதிகரிப்பை கண்டது. நானும் ஹெலனும் பிரயாண வேலையில் மறுபடியும் பங்குகொண்டோம். குவிஜால்டெனாங்கில் உள்ள ஒரு சபை உட்பட, பல சபைகளையும் சிறு தொகுதிகளையும் நாங்கள் சந்தித்தோம். பிறகு, 1959, ஆகஸ்ட்-ல், குவாதமாலா நகரத்திற்கு திரும்பி வரும்படி அழைப்பு வந்தது. அங்கே கிளை அலுவலகத்தில் தங்கினோம். நான் கிளை அலுவலகத்தில் வேலை செய்ய நியமிப்பு பெற்றேன். ஹெலன் அடுத்த 16 வருடங்களுக்கு தன் மிஷனரி ஊழியத்தை தொடர்ந்தாள். பிறகு, அவளும் கிளை அலுவலகத்தில் வேலை செய்ய ஆரம்பித்தாள்.
மிகுதியான ஆசீர்வாதங்கள்
பல ஆண்டுகளுக்குமுன், யெகோவாவின் சேவையில் இருப்பவர்களில் நான்தான் மிக இளைஞன் என்பதுபோல் தோன்றியது. ஆனால், இப்போதோ நான்தான் மிகவும் வயதானவன். 1996-ல், பாட்டர்சனிலுள்ள கிளை அலுவலக பள்ளிக்கு சென்றபோது இது உண்மையாயிற்று. நான் இளைஞனாய் இருந்தபோது பல முதியவர்களிடம் இருந்து நான் உதவி பெற்றிருக்கிறேன். அதேவிதமாகவே, சமீப ஆண்டுகளில் தங்கள் இளம்பிராயத்தில் தங்கள் சிருஷ்டிகரை நினைக்க விரும்பும் பல இளைஞர்களுக்கு உதவுவதில் நான் அதிக மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன்.
குவாதமாலாவில், யெகோவா அவருடைய மக்கள்மீது அபரிமிதமான ஆசீர்வாதங்களை தொடர்ந்து பொழிந்து வருகிறார். 1999-ல், குவாதமாலா நகரத்தில் 60-க்கும் மேற்பட்ட சபைகள் இருந்தன. வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என நாலா திசைகளிலும் இன்னும் பல சபைகளும் கடவுளுடைய ராஜ்யத்தினுடைய நற்செய்தியின் ஆயிரக்கணக்கான அறிவிப்பாளர்களும் இருக்கின்றனர். சுமார் 53 வருடங்களுக்கு முன், 50-க்கும் குறைவாக இருந்த ராஜ்ய அறிவிப்பாளர்கள் இப்போது 19,000-க்கும் அதிகமாக அதிகரித்துள்ளனர்!
நன்றிகாட்ட வேண்டிய காரியங்கள்
பிரச்சினை இன்றி வாழ்க்கையை ஓட்டிய ஆட்கள் எவருமே இல்லை. ஆனால், நாம் நம் ‘பாரத்தை கர்த்தர்மேல் வைத்துவிட’லாம். (சங்கீதம் 55:22) அன்பான நண்பர்களின் அருமையான ஆதரவு மூலமாக அவர் நம்மை காக்கிறார். உதாரணமாக, ஹெலன் இறப்பதற்கு சில வருடங்களுக்கு முன், எபிரெயர் 6:10 பொறிக்கப்பட்ட, வேலைப்பாடுகள் நிறைந்த அழகிய ஃபிரேம் ஒன்றை எனக்கு பரிசாக அளித்தாள். அந்த வசனம் சொல்வதாவது: “உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே.”
அதோடு அவள் சேர்த்திருந்த குறிப்பின் ஒரு பகுதி இப்படியாக வாசிக்கிறது: “என் அருமையானவரே, உங்களுக்கு கொடுப்பதற்கு என்னுடைய அன்பை தவிர என்னிடம் பெரியதாக எதுவுமில்லை. . . . இந்த வசனம் உங்களுக்கு ரொம்ப பொருந்தும். இதை உங்கள் மேஜைமேல் வையுங்கள். நான் கொடுத்தேன் என்பதற்காக அல்ல, ஆனால் பல ஆண்டுகளாக சேவை செய்யும் உங்களுக்கு இது தகும் என்பதற்காகவே.” இன்றைக்கும், குவாதமாலா கிளை அலுவலகத்தில் அந்த ஃப்ரேம் என் மேஜையை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.
என் இளம்பிராயத்தில் இருந்தே நான் யெகோவாவை சேவித்து வருகிறேன். இப்போது எனக்கு வயதாகிவிட்டது. இருந்தாலும், எனக்கு நியமிக்கப்பட்டுள்ள வேலைகளை செய்வதற்கு வேண்டிய நல்ல ஆரோக்கியத்தை கொடுத்திருப்பதற்காக நான் யெகோவாவுக்கு அதிக நன்றியை தெரிவிக்கிறேன். என்னுடைய பைபிள் வாசிப்பின்போது, என் அருமை ஹெலன் அவளுடைய பைபிளில் கோடிட்டு வைத்திருக்கும் வசனங்களை இப்போதும் நினைவுகூருகிறேன். அவற்றில் ஒன்று சங்கீதம் 48:14: “இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார்.”
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவரும் அவர்களை புதிய உலகில் மறுபடியும் வரவேற்கும் அந்த நாளைப் பற்றி சந்தோஷமான விஷயத்தை நான் மற்றவர்களுக்கு சொல்லுவதில் மிகுந்த மகிழ்ச்சி காண்கிறேன். அப்பப்பா! எப்படிப்பட்ட எதிர்பார்ப்பு! “சிறுமைப்பட்டவர்களுக்கு ஆறுதல் செய்கிற”வர் யெகோவா. (2 கொரிந்தியர் 7:6) அதை அவர் நிரூபிப்பதை மனதிற்கு கொண்டுவரும்போது மகிழ்ச்சி வானில் சிறகடித்து பறப்போம்.
[பக்கம் 25-ன் படம்]
மேலிருந்து வலது பக்கமாக: 1910-ல், அம்மா, அப்பா, அத்தை ஈவாவும், அண்ணன்மார்கள் கார்லும் க்ளாரன்ஸும்
[பக்கம் 26-ன் படங்கள்]
ஹெலனுடன் 1947-ல், 1992-ல்