உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w00 9/15 பக். 10-15
  • ‘அவருடைய வேளை இன்னும் வரவில்லை’

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ‘அவருடைய வேளை இன்னும் வரவில்லை’
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கடவுளுடைய சித்தத்தைச் செய்ய உறுதி பூண்டிருந்தார்
  • யெகோவாவின் வீட்டிற்கான பக்தி வைராக்கியம்
  • கலிலேயாவில் பெரியளவில் போதனை
  • யூதேயாவிலும் பெரேயாவிலும் தைரியமாய் சாட்சிபகருதல்
  • ஒருவரும் மறுக்க முடியாத அற்புதம்
  • பைபிள் புத்தக எண் 43—யோவான்
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
  • “வேளை வந்தது”!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
  • யோவான் முக்கியக் குறிப்புகள்
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
  • யூதேயாவுக்குப் போகிற வழியில் பெரேயாவில் கற்பிக்கிறார்
    இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
w00 9/15 பக். 10-15

‘அவருடைய வேளை இன்னும் வரவில்லை’

“அவருடைய வேளை இன்னும் வராதபடியினால் ஒருவனும் அவர்மேல் கைபோடவில்லை.”​—⁠யோவான் 7:⁠30

1. பூமியில் இயேசுவின் செயல்களை என்ன இரண்டு அம்சங்கள் கட்டுப்படுத்தின?

“மனுஷ குமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்” என்று அப்போஸ்தலரிடம் இயேசு கிறிஸ்து சொன்னார். (மத்தேயு 20:28) ரோம தேசாதிபதி பொந்தியு பிலாத்துவிடம் அவர் இவ்வாறு சொன்னார்: “சத்தியத்தைக் குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்.” (யோவான் 18:37) ஏன் மரிக்க வேண்டும், மரணத்திற்கு முன் என்ன வேலை செய்ய வேண்டும், எவ்வளவு காலம் செய்ய வேண்டும் ஆகியவற்றை இயேசு துல்லியமாக அறிந்திருந்தார். மேசியாவாக பூமியில் அவருடைய ஊழியம் மூன்றரை ஆண்டுகளே நீடித்தது. அது, யோர்தான் நதியில் (பொ.ச. 29-⁠ல்) முழுக்காட்டுதலுடன் தொடங்கி​—⁠அதாவது முன்னுரைக்கப்பட்ட அடையாள அர்த்தமுடைய 70-வது வாரத்தில் தொடங்கி​—⁠வாதனையின் கழுமரத்தில் மரித்த சமயத்தில்​—⁠அதாவது, 70-வது வாரத்தின் மத்திபத்தில் (பொ.ச. 33-⁠ல்)—முடி​வடைந்தது. (தானியேல் 9:​24-​27; மத்தேயு 3:​16, 17; 20:17-​19) ஆகவே, பூமியில் இயேசுவின் செயல்களை இரண்டு முக்கிய அம்சங்கள் கட்டுப்படுத்தின: பூமிக்கு வந்ததன் நோக்கத்தை அறிந்திருத்தல், ஒவ்வொன்றிற்கும் கடவுள் குறித்திருக்கும் காலத்தை அறிந்திருத்தல்.

2. சுவிசேஷங்களில் இயேசு எவ்வாறு சித்தரிக்கப்படுகிறார், தம்முடைய ஊழியத்தில் விழிப்புணர்வோடு இருந்ததை எவ்வாறு காண்பித்தார்?

2 சுவிசேஷங்கள் இயேசு கிறிஸ்துவை எப்படி சித்தரிக்கின்றன? பாலஸ்தீனா தேசம் முழுவதும் வலம்வந்து கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவித்த, வல்லமை வாய்ந்த கிரியைகளை நடப்பித்த மாமனிதராக சித்தரிக்கின்றன. அவருடைய சுறுசுறுப்பான ஊழியத்தின் ஆரம்ப கட்டத்தைப் பற்றி இவ்வாறு சொல்லப்படுகிறது: ‘அவருடைய வேளை இன்னும் வரவில்லை.’ இயேசுவே இவ்வாறு கூறினார்: ‘என் வேளை இன்னும் வரவில்லை.’ அவருடைய ஊழியத்தின் முடிவு நெருங்கும் தறுவாயில், “வேளை வந்தது” என்ற சொற்றொடரை பயன்படுத்தினார். (யோவான் 7:​8, 30; 12:23) தமக்கு நியமிக்கப்பட்ட ஊழியத்திற்கும் தம்முடைய தியாக மரணத்திற்குமுரிய வேளையை அல்லது காலத்தை இயேசு அறிந்திருந்தார். இது, அவர் சொன்னவற்றையும் செய்தவற்றையும் செல்வாக்கு செலுத்தியிருக்க வேண்டும். அது எப்படி என்பதை புரிந்துகொள்வது அவருடைய குணத்தையும் சிந்தனையையும் நாம் ஊடுருவிப் பார்க்க உதவும். அவருடைய ‘அடிச்சுவடுகளை இன்னும் நெருக்கமாக தொடர்ந்து வரும்படியும்’ நமக்கு உதவும்.​—⁠1 பேதுரு 2:​21.

கடவுளுடைய சித்தத்தைச் செய்ய உறுதி பூண்டிருந்தார்

3, 4. (அ) கானா ஊர் கலியாணத்தில் என்ன சம்பவிக்கிறது? (ஆ) திராட்ச ரசம் குறைவுபட்டதைப் பற்றி மரியாள் சொல்கையில் கடவுளுடைய குமாரன் ஏன் ஆட்சேபிக்கிறார், இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

3 அது பொ.ச. 29. இயேசு தம்முடைய சீஷர்களை தெரிந்தெடுத்து சில நாட்களே ஆகியிருந்தன. இப்போது இவர்கள் எல்லாரும் கலிலேயா மாகாணத்திலுள்ள கானா ஊரில் நடைபெறும் கலியாண விருந்துக்கு செல்கின்றனர். இயேசுவின் தாயார் மரியாளும் அங்கிருக்கிறார். விருந்தில் திராட்ச ரசத்திற்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. தன் மகனிடம் சொன்னால் ஏதாவது செய்வார் என நினைத்து மரியாள் அவரிடம்: ‘திராட்சை ரசம் தீர்ந்துவிட்டது’ என்று சொல்கிறார். ஆனால் இயேசு, “ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை” என்று பதிலளிக்கிறார்.​—⁠யோவான் 1:​35-​51; 2:​1-4, பொது மொழிபெயர்ப்பு.

4 “ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன”? என்று இயேசு கேட்பது, ஒரு கருத்துக்கு அல்லது ஆலோசனைக்கு மறுப்பு தெரிவிக்க பழங்காலத்தில் பொதுவாக கேட்கப்படும் கேள்வியாகும். மரியாளின் வார்த்தைகளுக்கு இயேசு ஏன் மறுப்பு தெரிவிக்கிறார்? சரி, ஏன் என்பதை இப்போது கவனிக்கலாம். 30 வயதான இயேசு, சில வாரங்களுக்கு முன்புதான் முழுக்காட்டப்பட்டு, பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டு, “உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்று முழுக்காட்டுபவனாகிய யோவானால் அறிமுகப்படுத்தப்பட்டார். (யோவான் 1:​29-​34; லூக்கா 3:​21-​23) ஆகவே அவரை அனுப்பினவராகிய ஈடற்ற உன்னத அரசரே இப்போது அவருக்கு கட்டளை பிறப்பிக்க வேண்டும். (1 கொரிந்தியர் 11:33) பூமியில் இயேசு செய்யும் ஊழியத்தை ஒருவரும், நெருங்கிய குடும்ப அங்கத்தினரும்கூட தடைசெய்ய முடியாது. மரியாளுக்கு இயேசு கொடுத்த பதில், பிதாவின் சித்தத்தைச் செய்வதில் அவர் காட்டிய உறுதியை வெளிப்படுத்தியது! நாமும் கடவுளுக்குச் செய்ய வேண்டிய ‘கடமையை முழுமையாய்’ நிறைவேற்ற அவ்வாறு உறுதி பூண்டிருப்போமாக.​—⁠பிரசங்கி 12:13, NW.

5. கானா ஊரில் என்ன அற்புதத்தை இயேசு கிறிஸ்து நடப்பிக்கிறார், இது மற்றவர்களை எப்படி பாதிக்கிறது?

5 தன் மகன் சொன்ன வார்த்தையிலுள்ள குறிப்பை புரிந்துகொண்டு, மரியாள் உடனடியாக விலகிச் சென்று, வேலைக்காரர்களிடம் இவ்வாறு சொல்கிறார்: “அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ அதின்படி செய்யுங்கள்.” இயேசு அந்தப் பிரச்சினையைத் தீர்க்கிறார். வேலைக்காரர்களை கற்சாடிகளில் தண்ணீர் நிரப்ப சொல்கிறார், அந்தத் தண்ணீர் மிகவும் சுவையான திராட்ச ரசமாக மாறுகிறது. இதுவே இயேசுவின் முதல் அற்புதம், கடவுளுடைய ஆவி அவர்மீது இருக்கிறது என்பதற்கு அடையாளத்தைக் கொடுக்கிறது. புதிய சீஷர்கள் இதைக் காண்கையில் அவர்களுடைய விசுவாசம் பலப்படுத்தப்படுகிறது.​—⁠யோவான் 2:​5-​11.

யெகோவாவின் வீட்டிற்கான பக்தி வைராக்கியம்

6. எருசலேம் ஆலயத்தில் இயேசு ஏன் கோபமடைகிறார், என்ன நடவடிக்கை எடுக்கிறார்?

6 சீக்கிரத்தில் பொ.ச. 30-⁠ன் இளவேனிற் காலம் துளிர்க்கிறது. இயேசுவும் அவருடைய தோழர்களும் பஸ்காவை ஆசரிக்க எருசலேமுக்கு செல்கின்றனர். அங்கு முதன்முறையாக சீஷர்கள் இயேசுவின் மறுபக்கத்தைப் பார்க்கின்றனர். பேராசைபிடித்த யூத வியாபாரிகள் ஆலயத்திற்குள்ளேயே பலிகளுக்காக மிருகங்களையும் பறவைகளையும் விற்கின்றனர். அதுவும் மிக அதிக விலைக்கு விற்கின்றனர். இயேசு பொங்கியெழுந்து, விற்பனையாளர்களை சவுக்கினால் விரட்டியடிக்கிறார். பணம் மாற்றுவோரின் காசுக்களை கொட்டி, அவர்களுடைய மேசைகளை கவிழ்க்கிறார். புறாக்கள் விற்போரிடம்: “இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டு போங்கள்” என்று கட்டளையிடுகிறார். இயேசு இவ்வளவு ஆவேசமாக செயல்படுவதை அவருடைய சீஷர்கள் பார்த்தபோது, கடவுளுடைய குமாரனைப் பற்றிய இந்தத் தீர்க்கதரிசனம் அவர்களுடைய நினைவிற்கு வருகிறது: “உம்முடைய வீட்டைக் குறித்து உண்டான பக்தி வைராக்கியம் என்னைப் பட்சித்தது.” (யோவான் 2:​13-​17; சங்கீதம் 69:9) நாமுங்கூட அதே வைராக்கியத்தோடு, உலக சிந்தைகள் நம் வணக்கத்தை கறைபடுத்தாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

7. (அ) மேசியாவை சந்திக்க நிக்கொதேமுவை எது தூண்டுகிறது? (ஆ) சமாரிய பெண்ணுக்கு இயேசு சாட்சி பகருவதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

7 இயேசு எருசலேமில் இருக்கையில், அற்புதமான பல அடையாளங்களை நடப்பிக்கிறார், ஜனங்கள் பலரும் அவரில் விசுவாசம் வைக்கின்றனர். யூத உயர் நீதிமன்றத்தில் அங்கம் வகிக்கும் நிக்கொதேமுவும் இயேசுவிடம் மனம் கவரப்படுகிறார். அதிகம் கற்றுக்கொள்வதற்கு இரவில் அவரிடம் வருகிறார். இயேசுவும் அவருடைய சீஷர்களும் ‘யூதேயா தேசத்தில்’ ஏறக்குறைய எட்டு மாதங்கள் தங்கி, பிரசங்கித்தும் சீஷராக்கியும் வருகின்றனர். ஆனால் முழுக்காட்டுபவனாகிய யோவான் சிறைபடுத்தப்பட்ட பின்பு யூதேயாவை விட்டு கலிலேயாவுக்குச் செல்கின்றனர். சமாரியா மாகாணத்தின் வழியாக பயணம் செய்கையில், வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு இயேசு ஒரு சமாரிய பெண்ணுக்கு முழுமையாக சாட்சி கொடுக்கிறார். இது, சமாரியர் பலர் விசுவாசிகளாவதற்கு வழிவகுக்கிறது. நாமும் ராஜ்யத்தைப் பற்றி பேசுவதற்கு கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடாதிருப்போமாக.​—⁠யோவான் 2:​23; 3:​1-​22; 4:​1-​42; மாற்கு 1:​14.

கலிலேயாவில் பெரியளவில் போதனை

8. கலிலேயாவில் இயேசு என்ன வேலையைத் தொடங்குகிறார்?

8 இயேசு தமது மரண ‘வேளைக்கு’ முன்பு, பரலோக தகப்பனின் சேவையில் நிறைய செய்ய வேண்டியதாக இருந்தது. யூதேயாவிலும் எருசலேமிலும் செய்ததைப் பார்க்கிலும் கலிலேயாவில் அதிகமாக ஊழியம் செய்ய தொடங்குகிறார். “கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்”குகிறார். (மத்தேயு 4:23) “மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது” என்ற ஆவலைத் தூண்டும் அவருடைய வார்த்தைகள், அந்த மாகாணம் முழுவதும் தொனிக்கின்றன. (மத்தேயு 4:17) சில மாதங்களுக்குள், முழுக்காட்டுபவனாகிய யோவானின் சீஷர்கள் இருவர், இயேசுவைப் பற்றி அறிந்துகொள்ள வருகின்றனர். அவர்களிடம் இயேசு இவ்வாறு சொல்கிறார்: “நீங்கள் போய், கண்டவைகளையும் கேட்டவைகளையும் யோவானுக்கு அறிவியுங்கள்; குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள், தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது. என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான்.”​—⁠லூக்கா 7:22, 23.

9. ஏன் ஜனங்கள் கிறிஸ்து இயேசுவிடம் திரண்டு வருகின்றனர், இதிலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்?

9 ‘இயேசுவின் கீர்த்தி சுற்றிலும் இருக்கிற தேசமெங்கும் பரவுகிறது.’ கலிலேயாவிலும் தெக்கப்போலியிலும் எருசலேமிலும் யூதேயாவிலும் யோர்தான் நதிக்கு அப்புறத்திலுமிருந்து ஜனங்கள் திரண்டு வருகின்றனர். (லூக்கா 4:​14, 15; மத்தேயு 4:​24, 25) அவருடைய அற்புத சுகப்படுத்தலுக்காக மட்டுமல்லாமல், அவருடைய அதிசயமான போதனைகளுக்காகவும் அவரிடம் வருகின்றனர். அவருடைய செய்தி, மனதைக் கவருவதாகவும் உற்சாகமூட்டுவதாகவும் இருக்கிறது. (மத்தேயு 5:1-​7:​27) இயேசுவின் வார்த்தைகள் இனிமையாகவும் மகிழ்ச்சியூட்டுவதாகவும் இருக்கின்றன! (லூக்கா 4:​22, NW) அவர் வேதவசனங்களிலிருந்து அதிகாரத்துடன் பேசுவதால் ஜனங்கள் ‘அவருடைய போதகத்தைக் குறித்து ஆச்சரியப்படுகின்றனர்.’ (மத்தேயு 7:28, 29; லூக்கா 4:​32) யார்தான் இப்பேர்ப்பட்ட மனிதரிடம் கவர்ந்திழுக்கப்படாமல் இருப்பர்! நேர்மை இருதயமுள்ளோரை சத்தியத்தினிடம் கவர்ந்திழுப்பதற்கு நாமும் போதிக்கும் திறமையை வளர்த்துக்கொள்வோமாக.

10. நாசரேத்து ஊரார் ஏன் இயேசுவை கொலை செய்ய முயலுகின்றனர், ஏன் முடியவில்லை?

10 என்றபோதிலும், இயேசு போதிப்பதை எல்லாருமே ஏற்றுக்கொள்வதில்லை. அவருடைய ஊழியத்தின் ஆரம்பத்தில், சொந்த ஊராகிய நாசரேத்திலுள்ள ஜெபாலயத்தில் போதிக்கிறபோது அவரை கொலை செய்ய முயற்சி எடுக்கப்படுகிறது. அவருடைய “கிருபையுள்ள வார்த்தைகளைக் குறித்து” அந்த ஊரார் அதிசயிக்கிறபோதிலும், அற்புதங்களைக் காணவே விரும்புகின்றனர். ஆனால், வல்லமைவாய்ந்த பல செயல்களை அங்கு நடப்பிப்பதற்கு மாறாக, இயேசு அவர்களுடைய தன்னலத்தையும் விசுவாசக் குறைவையும் அம்பலப்படுத்துகிறார். ஜெபாலயத்தில் இருந்தவர்கள் கோபம் தலைக்கேறியவர்களாய், இயேசுவைப் பிடித்து செங்குத்தான மலையுச்சியிலிருந்து தலைகீழாக தள்ளிவிடுவதற்கு வேகமாக அவரை இழுத்துச் செல்கின்றனர். ஆனால் இயேசு அவர்களுடைய பிடியிலிருந்து தப்பி, பத்திரமாக போய்விடுகிறார். ஏனென்றால் அவருடைய மரண “வேளை” இன்னும் வரவில்லை.​—⁠லூக்கா 4:​16-​30.

11. (அ) இயேசு பேசுவதைக் கேட்க ஏன் மதத் தலைவர்கள் சிலர் வருகின்றனர்? (ஆ) ஓய்வுநாளை மீறியதாக இயேசு ஏன் குற்றம் சாட்டப்படுகிறார்?

11 மதத் தலைவர்களாகிய வேதபாரகரும் பரிசேயரும் சதுசேயரும் இன்னும் பிறரும் இயேசு பிரசங்கிக்கிற இடத்திற்கு அடிக்கடி வருகின்றனர். அவர்களில் பெரும்பான்மையர் அங்கிருப்பது செவிகொடுத்துக் கேட்டு கற்றுக்கொள்வதற்கு அல்ல, ஆனால் குற்றம் கண்டுபிடித்து அவரை சிக்க வைப்பதற்கே. (மத்தேயு 12:38; 16:1; லூக்கா 5:​17; 6:​1, 2) உதாரணமாக, பொ.ச. 31-⁠ல் பஸ்காவுக்காக எருசலேமுக்குச் சென்றிருக்கையில், 38 ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்டிருந்த ஒரு மனிதனை இயேசு சுகப்படுத்துகிறார். அவர் ஓய்வுநாளை மீறியதாக யூத மதத் தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதற்கு இயேசு இவ்வாறு பதிலளிக்கிறார்: “என் பிதா இதுவரைக்கும் கிரியைசெய்து வருகிறார், நானும் கிரியைசெய்து வருகிறேன்.” கடவுளை பிதா என்று அழைத்து அவருடைய குமாரனாக உரிமை பாராட்டியதால் தேவதூஷணம் சொல்லியதாக இப்போது யூதர்கள் அவரை குற்றம் சாட்டுகின்றனர். அவரைக் கொல்ல வகை தேடுகின்றனர், ஆனால் அவரும் அவருடைய சீஷர்களும் எருசலேமை விட்டு கலிலேயாவுக்குச் சென்றுவிடுகின்றனர். அதுபோலவே நாமும், ராஜ்யத்தைப் பற்றி பிரசங்கிப்பதும் சீஷராக்குவதுமான ஊழியத்தில் முழு மூச்சோடு ஈடுபடுகையில், எதிரிகளோடு தகாத சச்சரவில் இறங்காமல் ஞானமாய் செயல்படுவோமாக.​—⁠யோவான் 5:​1-​18; 6:⁠1.

12. கலிலேயா பிராந்தியத்தில் எவ்வளவு பெரியளவில் இயேசு ஊழியம் செய்கிறார்?

12 பெரும்பாலும் அடுத்த ஒன்றரை ஆண்டுகள், இயேசு தம்முடைய ஊழியத்தின் பெரும்பாகத்தை கலிலேயாவிலேயே செய்கிறார். யூதரின் மூன்று வருடாந்தர பண்டிகைகளுக்கு ஆஜராவதற்கு மட்டுமே எருசலேமுக்குச் செல்கிறார். மொத்தத்தில், மூன்று பிரசங்க பயணங்களை அவர் கலிலேயாவில் மேற்கொண்டிருக்கிறார்: முதலாவது 4 புதிய சீஷர்களுடன், இரண்டாவது 12 அப்போஸ்தலருடன், அடுத்து பெரியளவில் செய்யப்பட்ட ஊழியத்தில் பயிற்றுவிக்கப்பட்ட அப்போஸ்தலருடன். கலிலேயாவில் எவ்வளவு பரவலாக சத்தியத்திற்கு சாட்சி கொடுக்கப்படுகிறது!​—⁠மத்தேயு 4:​18-​25; லூக்கா 8:​1-3; 9:​1-6.

யூதேயாவிலும் பெரேயாவிலும் தைரியமாய் சாட்சிபகருதல்

13, 14. (அ) எந்த சந்தர்ப்பத்தில் யூதர்கள் இயேசுவைப் பிடிக்க முயற்சி செய்கின்றனர்? (ஆ) சேவகர்கள் ஏன் இயேசுவை கைது செய்யவில்லை?

13 அது பொ.ச. 32-⁠ன் இலையுதிர் காலம், இயேசுவின் “வேளை” இன்னும் வரவில்லை. கூடாரப் பண்டிகை சமீபித்திருக்கிறது. “இவ்விடம்விட்டு யூதேயாவுக்குப் போம்” என்று இயேசுவின் உடன்பிறந்த சகோதரர்கள் இப்போது அவரை உந்துவிக்கின்றனர். எருசலேமில் பண்டிகைக்காக கூடிவந்திருப்போர் யாவருக்கும் முன்பாக இயேசு அற்புதங்களை செய்துகாட்ட வேண்டுமென அவர்கள் விரும்புகின்றனர். ஆனால், அதனால் வரும் ஆபத்தை இயேசு அறிந்திருக்கிறார். ஆகவே, தம்முடைய சகோதரர்களிடம் இவ்வாறு சொல்கிறார்: “என் வேளை இன்னும் வராதபடியால் நான் இந்தப் பண்டிகைக்கு இப்பொழுது போகிறதில்லை.”​—⁠யோவான் 7:​1-8.

14 கலிலேயாவில் சிறிதுகாலம் தாமதித்திருந்து, இயேசு எருசலேமுக்கு “வெளியரங்கமாய்ப் போகாமல் அந்தரங்கமாய்ப்” போகிறார். பண்டிகையில் யூதர்கள் அவரைத் தேடி: “அவர் எங்கேயிருக்கிறார்?” என்று கேட்கின்றனர். பண்டிகை பாதி முடிந்த பின்பு, இயேசு தேவாலயத்திற்குப் போய் தைரியமாக போதிக்கத் தொடங்குகிறார். அவரை சிறையில் போடுவதற்கோ அல்லது ஒருவேளை கொல்வதற்கோ அவரைப் பிடிப்பதற்கு வகைதேடுகின்றனர். ஆனால், “அவருடைய வேளை இன்னும் வராதபடியினால்” அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்போது பலர் இயேசுவில் விசுவாசம் வைக்கின்றனர். அவரைப் பிடித்து வருவதற்கு பரிசேயர் அனுப்பிய சேவகருங்கூட வெறுங்கையோடு திரும்பிவந்து: “அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை” என்று சொல்கின்றனர்.​—⁠யோவான் 7:​9-​14; 30-​46.

15. இயேசுவின் மீது வீசுவதற்கு யூதர்கள் ஏன் கற்களை எடுக்கின்றனர், அடுத்தபடியாக என்ன பிரசங்க ஏற்பாட்டை இயேசு தொடங்குகிறார்?

15 பண்டிகை சமயத்தில் பிதாவைப் பற்றி ஆலயத்தில் இயேசு போதிக்கையில், இயேசுவுக்கும் அவருடைய யூத எதிரிகளுக்கும் இடையே முரண்பாடுகள் தொடருகின்றன. இயேசு தாம் மனிதனாவதற்கு முந்தைய வாழ்க்கையைப் பற்றி சொன்ன விஷயங்களின் பேரில் யூதர்கள் சீற்றமடைந்து, பண்டிகையின் கடைசி நாளில் அவர்மீது வீசுவதற்கு கற்களை எடுக்கின்றனர். ஆனால் அவர் ஒளிந்து, எவ்வித தீங்குமின்றி தப்பித்துக்கொள்கிறார். (யோவான் 8:​12-​59) எருசலேமுக்கு வெளியில் தங்கி, யூதேயாவில் தீவிர சாட்சிபகரும் ஏற்பாட்டை இயேசு தொடங்குகிறார். 70 சீஷர்களை தெரிந்தெடுத்து, அவர்களுக்குப் போதனை கொடுத்தப் பின்பு, ஊழியம் செய்ய இரண்டிரண்டு பேராக அனுப்புகிறார். இயேசு தம்முடைய அப்போஸ்தலருடன் செல்வதற்கு திட்டமிடுகிற ஒவ்வொரு இடத்துக்கும் பட்டணத்துக்கும் அவர்கள் முன்னதாகவே செல்கின்றனர்.​—⁠லூக்கா 10:​1-​24.

16. பிரதிஷ்டை பண்டிகையின்போது என்ன ஆபத்திலிருந்து இயேசு தப்பித்துக்கொள்கிறார், எந்த வேலையில் மறுபடியும் சுறுசுறுப்பாய் ஈடுபடுகிறார்?

16 பொ.ச. 32 பனிக் காலத்தில், இயேசுவின் “வேளை” நெருங்கி வருகிறது. பிரதிஷ்டை பண்டிகைக்காக அவர் எருசலேமுக்கு வருகிறார். யூதர்கள் அவரை கொலை செய்ய இன்னும் தேடிக் கொண்டிருக்கின்றனர். இயேசு ஆலய மண்டபத்தில் உலாவிக்கொண்டிருக்கையில், அவரை சூழ்ந்துகொள்கின்றனர். தேவதூஷணம் சொல்வதாக மறுபடியும் குற்றஞ்சாட்டி, அவரை கொல்வதற்குக் கற்களை எடுக்கின்றனர். ஆனால், முந்தின சந்தர்ப்பங்களில் செய்ததுபோல் இப்பொழுதும் இயேசு தப்பித்துக்கொள்கிறார். சீக்கிரத்தில் அவர் திரும்பவும் வெளிப்படையாக போதிக்கிறார். இந்த தடவை யூதேயாவிலிருந்து யோர்தானுக்கு அக்கறையிலிருக்கும் பெரேயா மாகாணத்தில் பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் போதிக்கிறார். அநேகர் அவர் மீது விசுவாசம் வைக்கின்றனர். ஆனால், தம்முடைய மிக நேசமான நண்பன் லாசருவைப் பற்றிய செய்தியை கேள்விப்பட்டு யூதேயாவுக்கு திரும்புகிறார்.​—⁠லூக்கா 13:33; யோவான் 10:20-​42.

17. (அ) பெரேயாவில் பிரசங்கிக்கையில் என்ன அவசர செய்தியை இயேசு பெறுகிறார்? (ஆ) இயேசு தாம் எடுக்க வேண்டிய நடவடிக்கையின் நோக்கத்தையும், சம்பவங்களின் காலத்தையும் அறிந்திருக்கிறார் என்று எது காட்டுகிறது?

17 அந்த அவசர செய்தி யூதேயாவிலுள்ள பெத்தானியாவில் வாழ்கிற லாசருவின் சகோதரிகளாகிய மார்த்தாள் மற்றும் மரியாளிடமிருந்து வருகிறது. “ஆண்டவரே, நீர் சிநேகிக்கிறவன் வியாதியாயிருக்கிறான்” என்று செய்தி கொண்டுவந்தவன் சொல்கிறான். “இந்த வியாதி மரணத்துக்கு ஏதுவாயிராமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாயிருக்கிறது; தேவனுடைய குமாரனும் அதினால் மகிமைப்படுவார்” என்று இயேசு பதிலளிக்கிறார். இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கென்றே, இயேசு தாம் தங்கியிருந்த இடத்தில் கூடுதலாக இரண்டு நாட்கள் தங்குகிறார். பின்பு அவர் தம்முடைய சீஷர்களிடம்: “நாம் மறுபடியும் யூதேயாவுக்குப் போவோம் வாருங்கள்” என்று சொல்கிறார். மனமில்லாமல் அவர்கள்: “ரபீ, இப்பொழுதுதான் யூதர் உம்மைக் கல்லெறியத் தேடினார்களே, மறுபடியும் நீர் அவ்விடத்திற்குப் போகலாமா”? என்று சொல்கின்றனர். ஆனால் இயேசு, ‘பகல் வெளிச்சத்தின்,’ அதாவது பூமிக்குரிய தம்முடைய ஊழியத்திற்கு கடவுள் குறித்திருக்கும் காலத்தின் மீதமுள்ள பாகம் குறுகியதாக இருக்கிறதென்று தெரிந்திருக்கிறார். தாம் என்ன செய்ய வேண்டும், ஏன் செய்ய வேண்டும் என்பதை அவர் திட்டமாய் அறிந்திருக்கிறார்.​—⁠யோவான் 11:​1-​10.

ஒருவரும் மறுக்க முடியாத அற்புதம்

18. பெத்தானியாவுக்கு இயேசு வந்து சேரும்போது அங்கிருந்த நிலைமை என்ன, அவர் வந்துசேர்ந்த பின்பு என்ன நடக்கிறது?

18 பெத்தானியாவில், இயேசுவை மார்த்தாள் முதலில் சந்தித்து இவ்வாறு சொல்கிறாள்: ‘ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரித்திரான்.’ மரியாளும் அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தவர்களும் பின்னால் வருகின்றனர். எல்லாரும் அழுகின்றனர். “அவனை எங்கே வைத்தீர்கள்?” என்று இயேசு கேட்கிறார். “ஆண்டவரே வந்து பாரும்” என்று பதிலளிக்கின்றனர். அந்தக் கல்லறையினிடம்​—⁠ஒரு கல்லால் மூடப்பட்டிருந்த கல்லறையினிடம்​—⁠அவர்கள் வந்து சேர்ந்தபோது, இயேசு இவ்வாறு சொல்கிறார்: “அந்தக் கல்லை எடுத்துப்போடுங்கள்.” இயேசு என்ன செய்யப்போகிறார் என்பதை மார்த்தாள் புரிந்துகொள்ளாமல், “ஆண்டவரே, இப்பொழுது நாறுமே, நாலு நாளாயிற்றே” என்று ஆட்சேபிக்கிறாள். ஆனால் இயேசு: “நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா?” என கேட்கிறார்.​—⁠யோவான் 11:17-​40.

19. லாசருவை உயிர்த்தெழுப்புவதற்கு முன்பு இயேசு ஏன் யாவரறிய ஜெபிக்கிறார்?

19 லாசருவின் கல்லறையை மூடியிருந்த அந்தக் கல்லை விலக்கியபோது, இயேசு தாம் செய்யப்போவது கடவுளுடைய வல்லமையால் என்பதை ஜனங்கள் அறியும்படி, சத்தமாய் ஜெபிக்கிறார். பின்பு, உரத்தக் குரலில்: “லாசருவே, வெளியே வா” என்று கூப்பிடுகிறார். பிரேத சீலைகளால் கட்டப்பட்டிருந்த லாசரு வெளியே வருகிறான். “இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள்” என்று இயேசு சொல்கிறார்.​—⁠யோவான் 11:41-​44.

20. லாசருவை இயேசு உயிர்த்தெழுப்பியதை கண்ணாரக் கண்டவர்கள் எப்படி பிரதிபலிக்கின்றனர்?

20 இந்த அற்புதத்தைக் கண்டபோது, மார்த்தாளையும் மரியாளையும் ஆறுதல்படுத்த வந்திருந்த யூதர் பலர், இயேசுவில் விசுவாசம் வைக்கின்றனர். மற்றவர்களோ நடந்ததைச் சொல்ல பரிசேயரிடம் செல்கின்றனர். பரிசேயர் எப்படி பிரதிபலிக்கின்றனர்? உடனடியாக அவர்களும் பிரதான ஆசாரியர்களும் ஆலோசனை சங்கத்தை அவசரமாய் கூட்டுகின்றனர். “நாம் என்ன செய்கிறது? இந்த மனுஷன் அநேக அற்புதங்களைச் செய்கிறானே. நாம் இவனை இப்படி விட்டுவிட்டால், எல்லாரும் இவனை விசுவாசிப்பார்கள்; அப்பொழுது ரோமர் வந்து நம்முடைய ஸ்தானத்தையும் ஜனத்தையும் அழித்துப்போடுவார்களே” என்று கதிகலங்கி சொல்கின்றனர். ஆனால் பிரதான ஆசாரியனாகிய காய்பா அவர்களை நோக்கி: “உங்களுக்கு ஒன்றும் தெரியாது; ஜனங்களெல்லாரும் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்குமென்று நீங்கள் சிந்தியாமலிருக்கிறீர்கள்” என்று சொல்கிறார். ஆகையால், அந்நாள்முதல் இயேசுவைக் கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டுகின்றனர்.​—⁠யோவான் 11:45-​53.

21. லாசருவை உயிர்த்தெழுப்பிய இந்த அற்புதம் எதற்கு முன்னோடியாக அமைகிறது?

21 பெத்தானியாவுக்குப் போக தாமதித்ததால் பிரமிக்கத்தக்க அற்புதத்தை இயேசுவால் நடப்பிக்க முடிகிறது. கடவுளின் வல்லமையோடு, நான்கு நாட்களாக மரித்தவனாயிருக்கிற ஒரு மனிதனை உயிர்த்தெழுப்புகிறார். மதிப்புமிக்க ஆலோசனை சங்கத்தாரும்கூட இதை மறுக்க வழியில்லாமல் அற்புதம் நடப்பித்தவருக்கு மரணத் தீர்ப்பளிக்கின்றனர்! இவ்வாறு இந்த அற்புதம், இயேசுவின் ஊழியத்தில் ஒரு முக்கிய திருப்புகட்டத்திற்கு முன்னோடியாக அமைகிறது; அதாவது, ‘அவருடைய வேளை இன்னும் வரவில்லை’ என்ற காலப்பகுதியிலிருந்து “வேளை வந்தது” என்ற காலப்பகுதிக்கு மாறுகிறது.

நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?

• கடவுள் நியமித்த ஊழியத்தில் இயேசு விழிப்போடு இருந்ததை எவ்வாறு காட்டினார்?

• திராட்ச ரசம் குறைவுபட்டதை தாயார் சொல்லும்போது இயேசு ஏன் ஆட்சேபிக்கிறார்?

• இயேசு எதிரிகளை கையாண்ட விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

• லாசருவை காப்பாற்றுவதற்கு இயேசு ஏன் தாமதிக்கிறார்?

[பக்கம் 12-ன் படங்கள்]

இயேசு தம் சக்தியை கடவுள் அளித்த வேலைக்கென்றே செலவிட்டார்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்