வாழ்க்கை சரிதை
“நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே”
ஹெர்பர்ட் ஜென்னிங்ஸ் சொன்னபடி
“டீமா என்ற துறைமுகப் பட்டணத்திலிருந்து கானாவிலிருந்த உவாட்ச் டவர் சொஸைட்டியின் கிளை அலுவலகத்துக்கு நான் திரும்பி வந்துகொண்டிருந்தேன். இடையில் ஒரு இளம் மனிதன் என்னை நிறுத்தி டவுனுக்கு போவதற்கு லிஃப்டு கேட்டான். அவனை ஏற்றிக்கொண்டு, சாட்சிகொடுப்பதற்கு இந்தச் சந்தர்ப்பத்தை நான் பயன்படுத்திக் கொண்டேன். நான் நன்றாக சாட்சிகொடுத்துவிட்டதாக என் மனதில் நினைத்துக்கொண்டேன்! ஆனால், அவன் இறங்க வேண்டிய இடம் வந்தவுடன் டிரக்கிலிருந்து வெளியே குதித்து ஓடியே போய்விட்டான்.”
இந்தச் சம்பவம் நடந்தபோது ஏதோ ஒன்று என்னுடைய வாழ்க்கையில் நடந்துகொண்டிருப்பதை நான் உணர்ந்தேன். என்ன நடந்தது என்பதை சொல்வதற்கு முன்னால் கனடா நாட்டைச் சேர்ந்த நான் எவ்வாறு கானாவுக்கு வந்தேன் என்பதை சொல்லிவிடுகிறேன்.
அது 1949-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் மத்திபப் பகுதி. கனடாவில் டோரன்டோவின் வடக்கிலுள்ள புறநகர் பகுதியில் வாழ்ந்து வந்தேன். ஒரு புதிய வீட்டுக்கு தண்ணீர் வேண்டும். அப்போது கடுங்குளிராக இருந்தது. ஆகவே உறைந்துபோன நிலத்தை பல அடிகள் தோண்டி முடித்திருந்தோம். களைத்துப்போன நாங்கள் நெருப்பு மூட்டி அதைச் சுற்றி நின்று குளிர்காய்ந்து கொண்டு டிரக் வருவதற்காக காத்திருந்தோம். திடீரென்று எங்களோடு வேலை செய்த ஆர்னால்ட் லார்ட்டன், “யுத்தங்கள், யுத்தங்களின் செய்திகள்,” “உலகத்தின் முடிவு” என்றும் இன்னும் நான் கேள்வியே படாத சில விஷயங்களையும் சொல்ல ஆரம்பித்தார். உடனடியாக எல்லாரும் பேசுவதை அப்படியே நிறுத்திவிட்டார்கள். அனைவருக்கும் சங்கடமாக இருந்தது, சிலர் எதிரியைப் பார்ப்பது போல அவரை பார்த்தார்கள். ‘இவருக்கு எவ்வளவு தைரியம்! இங்கே யாருக்கும் இவர் பேசுவதை கேட்க விருப்பமில்லை, ஆனாலும் பேசிக்கொண்டிருக்கிறாரே’ என்று நான் யோசித்தது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால் ஏனோ அவர் சொன்ன காரியம் என் நெஞ்சத்தைத் தொட்டுவிட்டது. இரண்டாம் உலகப் போர் முடிந்து சில வருடங்கள் தான் ஆகியிருந்தன, தலைமுறை தலைமுறையாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருந்தபோதிலும் இதுபோன்ற காரியங்களை கேட்டதே இல்லை. நான் அவர் பேசுவதை கூர்ந்து கவனித்தேன், அவர் கொடுத்த விளக்கங்களில் அப்படியே மூழ்கிவிட்டேன்.
இன்னும் நிறைய தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் ஆர்னால்டை நான் விரைவில் சந்தித்தேன். அவரும் அவருடைய மனைவி ஜீனும் அனுபவமே இல்லாத 19 வயது பையனிடம் எவ்வளவு பொறுமையாகவும் தயவாகவும் இருந்திருக்கிறார்கள் என்பதை இப்பொழுது நான் எண்ணிப் பார்க்கிறேன். அவர்களிடம் பேசுவதற்காக முன்கூட்டியே சொல்லாமல் கொள்ளாமல் அடிக்கடி அவர்கள் வீட்டுக்குச் செல்வேன். அவர்கள் என் சிந்தனையை சீர்படுத்த உதவினார்கள். என்னுடைய இளம் மனதில் முன்னுக்குப்பின் முரணாக வந்துபோய் கொண்டிருந்த தராதரங்களையும் ஒழுக்கங்களையும் பிரித்துப் பார்க்க எனக்கு உதவினார்கள். தெரு ஓரத்தில் நின்று குளிர்காய்ந்து கொண்டிருந்த அந்தச் சம்பவத்துக்கு பத்து மாதங்களுக்குப் பின் 1950 அக்டோபர் 22 அன்று யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக நான் முழுக்காட்டுதல் பெற்று இப்போது டோரன்டோவின் பாகமாக இருக்கும் நார்த் யார்க்கிலுள்ள வில்லோடேல் சபையோடு கூட்டுறவுகொள்ள ஆரம்பித்தேன்.
உடன் வணக்கத்தாரோடு சேர்ந்து முன்னோக்கிச் செல்லுதல்
குடித்துவிட்டு வண்டியை ஓட்டிய ஒருவர் நேருக்குநேர் மோதியதால் அப்பா விபத்துக்குள் சிக்கியிருந்தார். ஆகவே அவரை சமாளிப்பது பெரும்பாடாக இருந்தது. இதனால் அம்மாவுக்கும் என்னுடைய இரண்டு தம்பிகளுக்கும் என் இரண்டு தங்கைகளுக்கும் வாழ்க்கை பெருங்கஷ்டமாக இருந்தது. இச்சூழ்நிலையில், புதிதாக நான் சேர்ந்திருக்கும் மதத்தில் எனக்கிருந்த ஈடுபாடு என் அப்பாவுக்கு தெரிய வந்தபோது வீட்டில் ஒரே ரகளை. ஆகவே என் பெற்றோரோடு சுமுகமான உறவை வைத்துக்கொள்வதற்கும் “சத்தியமார்க்”கத்தில் என்னை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்காகவும் வீட்டைவிட்டு வெளியேறுவதுதான் நல்லது என்று எனக்குப்பட்டது.—2 பேதுரு 2:2.
1951-ஆம் ஆண்டில் கோடையின் பிற்பகுதியில் ஆல்பர்ட்டாவில் கோல்மென் என்ற இடத்தில் இருந்த சிறிய சபைக்கு மாறினேன். ராஸ் ஹன்ட், கீத் ராபின்ஸ் என்ற இரண்டு இளைஞர்கள் அங்கே சுறுசுறுப்பாக முழுநேரமாக பிரசங்க வேலை செய்துகொண்டிருந்தார்கள். இவர்கள் ஒழுங்கான பயனியர் ஊழியம் செய்துகொண்டிருந்தார்கள். அதே வாலன்டரி ஊழியத்தை நானும் செய்வதற்காக அவர்கள் எனக்கு வழிகாட்டினார்கள். ஆகவே 1952, மார்ச் 1-ஆம் தேதி நான் ஒழுங்கான பயனியர்களின் அணியில் சேர்ந்துகொண்டேன்.
நான் பெற்றுக்கொண்ட உற்சாகத்தை நினைத்து பூரித்துப்போகிறேன். நான் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அதற்கான அருமையான வாய்ப்பை பயனியர் சேவை தந்தது. ஆல்பர்டாவில் லெத்பிரிஜ் சபையில் ஒரு வருட காலம் பயனியர் சேவை செய்தபின், பயண கண்காணியாக சேவிக்க எனக்கு அழைப்பு வந்தது. நான் இதை கொஞ்சம்கூட எதிர்பார்க்கவே இல்லை. மாங்டன், நியூ ப்ருன்ஸ்விக்கிலிருந்து க்யுபெக், காஸ்பி வரையாக கனடாவின் கிழக்கு கரையோரமாக இருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளை நான் சேவிக்க வேண்டியிருந்தது.
எனக்கு வயது 24, சத்தியத்துக்கோ புதிது. ஆகவே நான் சந்திக்க வேண்டிய சபைகளிலிருந்த முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால், நான் தகுதியற்றவன் என்றே உணர்ந்தேன். அடுத்து வந்த பல மாதங்கள் நான் மிகவும் கடினமாக உழைத்தேன். அதற்குப்பின் எனக்கு எதிர்பாராத மற்றொரு அழைப்பு கிடைத்தது.
கிலியட் பள்ளிக்கும் கோல்டு கோஸ்ட்டுக்கும்
செப்டம்பர் மாதம், 1955-ல் நியூ யார்க், செளத் லான்சிங்கில் நடந்த உவாட்ச்டவர் பைபிள் ஸ்கூல் ஆஃப் கிலியட்டின் 26-வது வகுப்பில் சேர்ந்துகொள்ளும்படி எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த வகுப்பில் சுமார் 100 பேர் கலந்துகொண்டார்கள். எனக்குத் தேவையான தீவிர பயிற்றுவிப்பும் படிப்பும் ஐந்து மாத காலம் அங்கே கிடைத்தது. நிறைய சாதிக்க வேண்டும் என்று மிகுந்த ஆர்வத்தோடிருந்த அந்த தொகுதியில் என்னுடைய உற்சாகமும் பல மடங்கு அதிகமானது. இதே சமயத்தில்தான் இன்றுவரை என்னுடைய வாழ்வில் வசந்தமாயிருக்கும் மற்றொரு சம்பவமும் நடந்தது.
மிஷனரி ஊழியத்துக்காக தயாராகிக்கொண்டிருந்த அந்தத் தொகுதியில் ஐலீன் ஸ்டப்ஸ் என்ற பெயர்கொண்ட ஒரு இளம் சகோதரி இருந்தாள். அவளிடம் ஒரு உறுதி இருந்தது, யதார்த்தமாக நடந்துகொண்டாள், அடக்கமாக இருந்தாள், எப்போதும் அவள் முகத்தில் ஒரு புன்னகை இருந்தது, இதெல்லாம் அவளிடம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் அவளை திருமணம் செய்துகொள்ள விரும்பியதை அவளிடம் தெரிவித்தபோது அவள் பயந்தே போயிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் அவள் ஓடிவிடவில்லை. கோஸ்டா ரிகாவுக்கு அவள் மிஷனரியாக போகவிருந்தாள், நான் மேற்கு ஆப்பிரிக்காவில் கோல்டு கோஸ்ட்டுக்கு (இப்போது கானா) செல்லவிருந்தேன். நாங்கள் பரஸ்பரமாக இதை ஒப்புக்கொண்டோம்.
1956-ம் ஆண்டு மே மாதத்தில் ஒரு நாள் காலையில், நியூ யார்க், புரூக்ளினில் பத்தாவது மாடியில் இருந்த சகோதரர் நேதன் நாரின் அலுவலகத்தில் இருந்தேன். அப்போது அவர் உவாட்ச் டவர் சொஸைட்டியின் பிரெஸிடன்டாக இருந்தார். கோல்டு கோஸ்ட், டோகோலான்ட் (இப்போது டோகோ), ஐவரி கோஸ்ட் (இப்போது கோட்டீவார்), மேல் வோல்டா (இப்போது பர்கினோ ஃபாஸோ) கேம்பியா ஆகிய இடங்களில் பிரசங்க வேலையை மேற்பார்வையிடுவதற்கு கிளை ஊழியராக நியமனத்தை நான் அங்கே பெற்றுக்கொண்டேன்.
சகோதரர் நார் சொன்ன வார்த்தைகள், அவர் என்னிடம் நேற்று பேசியது போல இருக்கிறது. “உடனடியாக நீ பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அவசரம் வேண்டாம். அங்கிருக்கும் அனுபவமுள்ள சகோதரர்களிடமிருந்து கற்றுக்கொள். பிறகு நீ ஆயத்தமாக இருப்பதாக உணரும்போது நீ கிளை அலுவலக ஊழியராக சேவிக்க வேண்டும். . . . இதோ, உன்னுடைய நியமன கடிதம். நீ அங்கே போய்ச் சேர்ந்து ஏழு நாட்களுக்குப் பிறகு பொறுப்பேற்றுக்கொள்.”
‘வெறும் ஏழு நாட்கள்தானா’ என்று நான் யோசித்தேன். அப்படியானால், ‘‘‘அவசரம் வேண்டாம்” என்று அவர் சொன்னாரே அதற்கு என்ன அர்த்தம்?’ சப்தநாடியும் ஒடுங்கிப்போய் அங்கிருந்து கிளம்பினேன்.
அடுத்த சில நாட்கள் பறந்தே விட்டன. சீக்கிரத்தில் 21 நாள் பயணத்தைத் துவக்கிய சரக்கு கப்பல் ஈஸ்ட் ரிவர் வழியாக சொஸைட்டியின் புரூக்ளின் அலுவலகத்தைக் கடந்து கோல்டு கோஸ்ட்டுக்குச் சென்றுகொண்டிருந்தபோது அதன் டெக்கிலிருந்த காப்புக் கைப்பிடியின் அருகில் நின்றுகொண்டிருந்தேன்.
ஐலீனுக்கும் எனக்கும் எப்போதும் கடிதத் தொடர்பு இருந்து வந்தது. மறுபடியும் நாங்கள் 1958-ல் சந்தித்தோம், அதே வருடம் ஆகஸ்ட் 23-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டோம். இப்படி ஒரு துணை எனக்குக் கிடைத்ததற்காக நான் எப்போதும் யெகோவாவுக்கு நன்றி சொல்கிறேன்.
19 ஆண்டுகளாக உடன் மிஷனரிகளோடும் என்னுடைய ஆப்பிரிக்க சகோதர சகோதரிகளோடும் சங்கத்தின் கிளை அலுவலகத்தில் சேவை செய்ய கிடைத்த பாக்கியத்தை நான் வெகுவாக போற்றினேன். சில அங்கத்தினர்களையே கொண்ட பெத்தேல் குடும்பம் அந்தக் காலப்பகுதியில் சுமார் 25-க்கு உயர்ந்தது. அந்த நாட்களில் நாங்கள் அதிகமாக வேலை செய்ய வேண்டியிருந்தது, முக்கியமான பல சம்பவங்கள் நடந்தன, மிகவும் பயனுள்ளவையாக இருந்தன. ஆனால் நான் மறைக்காமல் இதையும் சொல்ல வேண்டும். வெக்கையையும் வேக்காட்டையும் சமாளிப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது. எனக்கு எப்போது பார்த்தாலும் வியர்த்துக்கொண்டிருந்தது, எப்போதும் உடம்பெல்லாம் நசநசவென்று இருந்தது, சில சமயங்களில் எனக்கு எரிச்சலாக வரும். ஆனாலும்கூட கானாவில் 1956-ல் இருந்த ராஜ்ய பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 6,000-த்தைக் கடந்து 1975-ல் 21,000 ஆக அதிகரித்தபோது இவ்வாறு சேவை செய்வது ஆனந்தமாகவே இருந்தது. இப்போதோ, 60,000-க்கும் மேலான சுறுசுறுப்பான சாட்சிகளை அங்கே காணும்போது என் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது.
“நாளை”—நாங்கள் எதிர்பார்க்காதது
1970 வாக்கில் என் உடம்புக்கு முடியவில்லை, என்னவென்று கண்டுபிடிக்கவும் முடியவில்லை. எல்லா மருத்துவ சோதனைகளும் செய்துகொண்ட பிறகும் “நல்ல ஆரோக்கியமாகத்தான் நீ இருக்கிறாய்” என்று சொன்னார்கள். அப்படியென்றால் ஏன் எனக்கு நன்றாகவே இல்லை, ஏன் எனக்கு இவ்வளவு சோர்வாக உள்ளது, ஏன் எனக்கு எப்போதும் அசெளகரியமாகவே உள்ளது என நினைத்தேன். இரண்டு காரியங்கள் பதில் தந்தன, எனக்கு மிகுந்த அதிர்ச்சியையும் தந்தன. ஆம் யாக்கோபு எழுதிய விதமாக அது இருந்தது: “நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே.”—யாக்கோபு 4:14.
முதலாவது, அந்த இளைஞனை நான் சந்தித்த அனுபவம். டவுனுக்கு நான் அவனுக்கு லிஃப்டு கொடுத்தபோது நான் அவனிடம் சாட்சிகொடுத்துக் கொண்டே வந்தேன். நான் வாயை மூடாமல் வேகமாகவும் உணர்ச்சிபொங்கவும் பேசிக்கொண்டே இருந்ததை கொஞ்சம்கூட உணரவே இல்லை. அவன் இறங்க வேண்டிய இடம் வந்தபோது டிரக்கை விட்டு குதித்து ஓடியே போய்விட்டபோது நான் மிகவும் திகைத்துப் போனேன். கானா நாட்டவரில் பெரும்பாலானவர்கள் இயல்பாகவே அமைதியானவர்கள், சாந்தமானவர்கள், எளிதில் சலனமடையாத பக்குவமுள்ளவர்கள். ஆகவே இந்த மனிதனிடம் எந்தக் குறையும் இருக்க முடியாது. நான் உட்கார்ந்து நன்றாக யோசித்துப் பார்த்தேன். என்னிடம் தான் ஏதோ பிரச்சினை இருப்பதாக தெரிந்தது. ஆனால் என்ன என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயமாகவே எனக்குப் பிரச்சினை இருந்தது.
இரண்டாவதாக மற்றொரு சம்பவம் நடந்தது. ஒருநாள் மிகவும் மனம்விட்டு பேசியபின் ஐலீன் இவ்வாறு சொன்னாள்: “சரி, உடலில் ஒன்றுமில்லையென்றால் மனதில்தான் ஏதாவது பிரச்சினை இருக்க வேண்டும்.” ஆகவே என்னுடைய எல்லா நோய்குறிகளையும் கவனமாக யோசித்து எழுதி வைத்துக்கொண்டேன், பிறகு ஒரு மனோதத்துவ மருத்துவரிடம் சென்றேன். வரிசையாக நான் எழுதி வைத்திருந்ததை வாசித்தபோது அவர் இவ்வாறு பதிலளித்தார்: “இது ஒரு மாதிரியான கேஸ். மேனிக் டிப்ரஸிவ் சைக்கோஸிஸ், அதாவது பித்துவெறி சம்பந்தப்பட்ட உளச்சோர்வு நோய் உங்களுக்கு இருக்கிறது.”
அப்படியே நான் வாயடைத்துப் போனேன்! நிலைமை இன்னும் மோசமானது, அடுத்த இரண்டு வருடங்கள் நான் படாத பாடுபட்டேன். இதற்கு விடைதேடி அலைந்தேன். ஆனால் என்ன செய்வதென்பது ஒருவருக்கும் தெரியவில்லை. ஏமாற்றத்துக்கு மேல் ஏமாற்றம்தான்!
வாழ்க்கை முழுவதும் முழுநேர ஊழிய சிலாக்கியத்தை பற்றிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆவலாக எப்போதும் இருந்துவந்தது. நிறைய வேலைகளைச் செய்ய வேண்டி இருந்தது, நான் இருதயப்பூர்வமாகவும் மிகவும் ஊக்கமாகவும் பலமுறை ஜெபித்துக்கொண்டே இருந்தேன்: ‘யெகோவாவே, உமக்கு சித்தமிருந்து, நான் உயிரோடிருந்தால் இதை செய்வேன்.’ (யாக்கோபு 4:15, NW) அது அவருடைய சித்தமாக இருக்கவில்லை. ஆகவே உண்மை நிலைமையை புரிந்துகொண்டு நாங்கள் எங்களுடைய நெருங்கிய நண்பர்கள் பலரையும் விட்டுப்பிரிந்து கானாவிலிருந்து புறப்பட்டு கனடாவுக்கு ஜூன் 1975-ல் திரும்புவதற்கு ஏற்பாடு செய்தோம்.
யெகோவா அவருடைய மக்கள் மூலமாக உதவிக்கரம் நீட்டுகிறார்
நான் இல்லாமல் ஒன்றும் நடக்காது என்பதும் இல்லை, எனக்கு மட்டும்தான் பிரச்சினை என்பதும் இல்லை என்பதை நான் புரிந்துகொண்டேன். அப்போது 1 பேதுரு 5:9-ல் உள்ள வார்த்தைகளுக்கு அர்த்தம் என்னுள் பிறந்தது: “உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறி வருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே.” இதைப் புரிந்துகொண்ட பின்தான், நாங்கள் விரும்பாத இந்த மாற்றத்தின் மத்தியிலும் யெகோவா எவ்வாறு எங்கள் இருவரையும் ஆதரித்து வந்திருக்கிறார் என்பதை உணர ஆரம்பித்தேன். ‘சகோதரர்’ எவ்வளவு அழகாகவும் எத்தனை எத்தனை வழிகளிலும் எங்களுக்கு உதவிக்கரம் நீட்டினர்!
பொருள் செல்வம் எங்களிடம் அதிகம் இல்லாவிட்டாலும் யெகோவா எங்களை கைவிடவே இல்லை. பொருள் விஷயத்திலும் மற்ற விதமாகவும் எங்களுக்கு உதவிக்கரம் நீட்ட கானாவிலுள்ள சகோதரர்களின் இருதயத்தை அவர் தூண்டினார். பலவிதமான உணர்ச்சிகளின் கலவையோடு எங்களை மிகவும் நேசித்து வந்தவர்களை விட்டுப்பிரிந்து, எதிர்பாராத ‘நாளை’ சமாளிக்க நாங்கள் கவனம் செலுத்த ஆரம்பித்தோம்.
ஐலீனின் அக்கா லெனோராவும் அவளுடைய கணவன் ஆல்வின் ஃப்ரீசனும் எங்களை அவர்கள் வீட்டில் தங்க வைத்து பல மாதங்கள் தாராளமாக செலவுசெய்து கவனித்துக் கொண்டார்கள். மிகவும் பிரபலமான ஒரு மனோதத்துவ மருத்துவர் மிகவும் நம்பிக்கையோடு இவ்வாறு சொன்னார்: “நீங்கள் ஆறு மாதத்தில் குணமாகிவிடுவீர்கள்.” ஒருவேளை தைரியம் இழக்காதிருப்பதற்காக அவர் அப்படி சொல்லியிருக்கலாம், ஆனால் ஆறு வருடங்கள் ஆகியும் நான் குணமடையவில்லை. இன்று வரை பைபோலார் மூட் டிஸ்ஆர்டர், அல்லது இருமுனை மனநிலை கோளாறு என்று இப்போது கண்ணியமாக அழைக்கப்படும் இந்த நோயினால் நான் கஷ்டப்படுகிறேன். இது கண்ணியமான ஒரு பெயராக இருந்தாலும் இந்தப் பெயர் எவ்விதத்திலும் நோயின் கடுமையை தணித்துவிடுவதில்லை என்பது அதனால் கஷ்டப்படுகிறவர்களுக்குத் தெரியும்.
இதற்குள் சகோதரர் நார் நோய்வாய்ப்பட்டிருந்தார், கடைசியாக ஜூன் 1977-ல் அவர் மரித்தும்விட்டார். ஆனாலும் அவர் நேரமும் முயற்சியும் எடுத்து நீண்ட கடிதங்களை எழுதி என்னை உற்சாகமூட்ட தவறவில்லை. ஆறுதலும் ஆலோசனைகளும் அதில் நிறைய இருந்தன. இன்னும் அந்தக் கடிதங்களை எல்லாம் நான் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். அவ்வப்போது மனதில் தோன்றிய நியாயமற்ற தோல்வி உணர்வுகளை அவருடைய வார்த்தைகள் அடக்கிவிட்டன.
1975-ன் முடிவில், விலைமதிப்பில்லா முழுநேர ஊழிய சிலாக்கியங்களை துறந்து என்னுடைய உடலை தேற்றுவதற்கு கவனத்தை செலுத்துவது அவசியமானது. சாதாரண பகல் வெளிச்சம்கூட என் கண்களை உறுத்தியது. திடீரென்று காதில் விழுந்த சப்தங்கள் துப்பாக்கி குண்டு சப்தம் போல பெரிதாக கேட்டது. கூட்டம் கூட்டமாக ஜனங்களை பார்ப்பது எனக்கு கஷ்டமாக இருந்தது. கிறிஸ்தவ கூட்டங்களுக்குச் செல்வது உண்மையில் ஒரு சவாலாக இருந்தது. ஆனால் ஆவிக்குரிய கூட்டுறவு எவ்வளவு முக்கியம் என்பது எனக்கு முழுமையாக தெரிந்திருந்தது. ஆகவே அனைவரும் உட்கார்ந்துவிட்ட பின் உள்ளே செல்வேன், அதே போல கூட்டத்தின் முடிவில் அனைவரும் கிளம்ப ஆரம்பிப்பதற்கு முன்னே நான் வெளியேறிவிடுவேன்.
வெளி ஊழியத்தில் கலந்துகொள்வது மற்றொரு சவாலாக இருந்தது. சில சமயங்களில், கதவருகே சென்ற பிறகுகூட பெல்லை அடிக்க எனக்கு தைரியம் வராது. ஆனாலும் இதை நான் நிறுத்திவிடப் போவதாக நினைக்கவில்லை, ஏனென்றால் நம்முடைய ஊழியம் நமக்கும் நாம் சொல்வதை கேட்கும் ஆட்களுக்கும் இரட்சிப்பை கொண்டுவரும் என்பது எனக்குத் தெரியும். (1 தீமோத்தேயு 4:16) கொஞ்ச நேரத்துக்குப்பின், என்னுடைய உணர்ச்சிகளை நான் கட்டுப்படுத்திக் கொள்வேன், அடுத்த வீட்டுக்குச் சென்று மறுபடியுமாக முயற்சி செய்வேன். ஊழியத்தில் தொடர்ந்து கலந்து கொள்வதன் மூலம் ஓரளவு ஆவிக்குரிய ஆரோக்கியத்தைக் காத்துக்கொண்டதால், உடல் நலக்குறைவை சமாளிக்கவும் பலம் கிடைத்தது.
பைபோலார் மூட் டிஸ்ஆர்டர் என்பது தீராத நோயாக இருப்பதால், இவ்வுலகில் நிரந்தரமாக நான் சமாளிக்க வேண்டிய ஒரு நோயாக இது இருக்கும் என்பதை புரிந்துகொண்டேன். 1981-ல் ஆங்கில விழித்தெழு!-வில் மிகவும் சிறப்பான தொடர் கட்டுரைகள் வந்தன.a அதை படிப்பதன் மூலம் இந்த நோயின் தன்மையை நான் நன்றாக புரிந்துகொண்டேன், அதை சமாளிப்பதற்கு பயனுள்ள முறைகளை நான் கற்றுக்கொண்டேன்.
சமாளிக்க கற்றுக்கொள்ளுதல்
இதெல்லாவற்றிலும் என் மனைவி பல தியாகங்களைச் செய்து ஈடுகொடுத்தாள். நீங்கள் இதுபோன்ற சூழ்நிலைமையில் இருந்து யாரையாவது கவனித்துக்கொள்ள வேண்டியிருந்தால் அவள் சொல்லும் சில செய்திகள் உங்களுக்கு உதவியாக இருக்கும்:
“நோயாளிக்கு திடீர் திடீரென்று மூட் மாறும். சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும், புது புது திட்டங்களையும் கருத்துக்களையும் சொல்லும் இந்த நோயாளி, சில மணிநேரங்களுக்குள் சோர்வுற்ற, எதிர்மறையான குணங்களுள்ள, கோபமுள்ள ஒரு நபராக மாறிவிடலாம். இதை நோய் என்று எடுத்துக்கொள்ளாவிட்டால், அவரைக் கவனித்துக் கொள்பவருக்கு எரிச்சல் வரும், அவர் குழம்பிப் போய்விடுவார். ஆகவே அடிக்கடி வேகமாக திட்டங்களை மாற்ற வேண்டியிருக்கும், ஏமாற்றம் அல்லது ஒதுக்கப்பட்ட உணர்வோடு ஒருவரின் போராட்டம் ஆரம்பமாகிறது.”
வழக்கத்துக்கு மாறாக நான் கொஞ்சம் தெம்பாக உணர்ந்தால், எனக்கு பயம் வந்துவிடும். நான் மிகவும் உற்சாகமாக இருந்தால், சீக்கிரத்தில் மனச்சோர்வு வந்துவிடும் என்பது உடனடியாக எனக்குத் தெரியும். என்னுடைய விஷயத்தில் மனச்சோர்வே உற்சாகத்தைவிட நல்லது, ஏனென்றால் மனச்சோர்வு இருந்தால் பல நாட்களுக்கு நான் பொதுவாக ஓரிடத்தைவிட்டு நகரவே மாட்டேன், ஆகவே தேவையில்லாமல் எதையாவது செய்து மாட்டிக்கொள்ள மாட்டேன். அளவுக்கு அதிகமாக உற்சாகமாக இருந்தால் ஐலீன் என்னை எச்சரிப்பாள், அதிகமாக துயரத்தில் நான் ஆழ்ந்துவிட்டால் என்னிடம் ஆறுதலாக பேசி எனக்கு மிகவும் ஆதரவாய் இருப்பாள்.
நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும் சமயத்தில் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு நோயாளி தன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கும் ஆபத்து இருக்கும். சோர்வாக இருக்கும் சமயத்தில் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வார் அல்லது இந்த மனக்கோளாறு உண்டாகும்போது மற்றவர்களின் உணர்ச்சிகளை அல்லது பிரதிபலிப்புகளை புரிந்துகொள்ளாமல் போய்விடுவார். முன்பெல்லாம் எனக்கு மனக்கோளாறும் உணர்ச்சிக்கோளாறும் இருப்பதை ஏற்றுக்கொள்வதே கடினமாக இருந்தது. ஏனெனில் நான் செய்த முயற்சியில் தோல்வி ஏற்பட்டதால் அல்லது மற்றவர்கள் பிரச்சினை கொடுத்ததால்தான் நான் இப்படி பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்று நினைத்தேன். உள்ளுக்குள் பிரச்சினை இல்லை, வெளியேதான் பிரச்சினை இருந்தது என்ற இந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ள நான் போராட வேண்டியிருந்தது. ‘என்னைச் சுற்றி எதுவும் மாறிவிடவில்லை. பிரச்சினை உள்ளேதான் இருக்கிறது, வெளியில் அல்ல’ என்று நான் அடிக்கடி எனக்கு நினைப்பூட்டிக்கொள்வது அவசியமாக இருந்தது. படிப்படியாக என்னுடைய சிந்தனை மாறியது.
வருடங்கள் செல்ல செல்ல, எங்கள் இருவரிடையேயும் சரி, மற்றவர்களுடனும் சரி, என்னுடைய நிலைமையைப் பற்றி எதையும் மறைக்காமல் வெளிப்படையாக பேச கற்றுக்கொண்டோம். நம்பிக்கையான மனநிலையைக் காத்துக்கொண்டு இந்த நோய் எங்கள் வாழ்க்கையை பெரிதாக கட்டுப்படுத்த அனுமதிக்கக்கூடாது என்பதற்காக முயற்சி செய்து வருகிறோம்.
“நாளை”—மேம்பட்ட ஒன்று
ஊக்கமான ஜெபங்களின் மூலமாயும் பல சமயங்கள் போராடியும் நாங்கள் யெகோவாவின் ஆசீர்வாதம், அவருடைய ஆதரவு ஆகியவற்றிலிருந்து நன்மை அடைந்திருக்கிறோம். எங்கள் இருவருக்குமே இப்போது வயதாகிவிட்டது. ஒழுங்காக மருத்துவ கண்காணிப்பை நான் பெற்று வருகிறேன். பரவாயில்லை, நிறுத்திவிடாமல் நிதானமான அளவில் மருந்து மாத்திரைகளை உட்கொண்டு என் உடல்நிலையை கட்டுக்குள் வைத்து வருகிறேன். ஊழிய சிலாக்கியம் எதுவானாலும் அதில் எங்களுக்கு சந்தோஷம்தான். நான் தொடர்ந்து சபை மூப்பராக இருந்து வருகிறேன். விசுவாசத்தில் எப்போதும் மற்றவர்களுக்கு ஆதரவாக இருக்க நாங்கள் எப்போதும் முயன்று வருகிறோம்.
உண்மைதான், யாக்கோபு 4:14 சொல்கிறபடி, “நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே.” இந்தக் காரிய ஒழுங்குமுறை இருக்கும்வரை அது அப்படித்தான் இருக்கும். ஆனால், யாக்கோபு 1:12-லுள்ள வார்த்தைகளும் உண்மையே: “சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்.” இன்று நாமனைவரும் உறுதியாக இருந்து நாளைக்காக யெகோவா தரவிருக்கும் ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்வோமாக.
[அடிக்குறிப்பு]
a ஆங்கில விழித்தெழு! 1981, ஆகஸ்ட் 8-ல் “வாழ்க்கையை நீங்கள் சமாளிக்க முடியும்,” 1981, செப்டம்பர் 8-ல் “மனச்சோர்வை நீங்கள் எவ்வாறு எதிர்த்துப் போராடலாம்,” 1981, அக்டோபர் 22-ல் “கடும் மனச்சோர்வை சமாளித்தல்” கட்டுரைகளையும் காண்க.
[பக்கம் 26-ன் படம்]
தனிமை தேடி என் கலைக்கூடத்தில்
[பக்கம் 26-ன் படம்]
என் மனைவி ஐலீனோடு
[பக்கம் 28-ன் படம்]
1963-ல் கானாவிலுள்ள டீமாவில் நடந்த “நித்திய நற்செய்தி” அசெம்பிளியில்