உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w01 1/1 பக். 4-7
  • போர் காயங்களை ஆற்றுதல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • போர் காயங்களை ஆற்றுதல்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • உள்நாட்டுப் போரில் ஈடுபட்டார்
  • எதிரிகள் நண்பர்களாகிறார்கள்
  • கொலைசெய்​—⁠பின்பு வீரமரணம் அடை
  • “நீர் இருப்பது உண்மையானால், தயவுசெய்து எனக்கு உதவி செய்யும்!”
  • ‘தேவனுடைய வார்த்தை ஜீவனும் வல்லமையுமுள்ளது’
  • ஆபிரகாம் ‘என் நண்பன்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2016
  • ஆபிரகாம் அன்பின் அடையாளம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
  • ஆபிரகாமுடைய விசுவாசத்தைக் கடவுள் சோதிக்கிறார்
    என்னுடைய பைபிள் கதை புத்தகம்
  • விசுவாசத்துக்கு வந்த சோதனை
    பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
w01 1/1 பக். 4-7

போர் காயங்களை ஆற்றுதல்

கொரில்லா படையில் 20 ஆண்டுகள் இருந்தவர் ஆப்ரஹாம்.a ஆனால் போரிடுவதை இப்போது நிறுத்திவிட்டார், இனி ஒருபோதும் போருக்கு போகவும் மாட்டார். சொல்லப்போனால், அவருடைய முன்னாள் எதிரிகள் இன்று அவருடைய நெருங்கிய நண்பர்கள். அவரை மாற்றியது எது? பைபிள். இருளில் இருந்த அவர்மீது அது நம்பிக்கை ஒளியை வீசியது, உட்பார்வை திறனை ஊட்டியது, மனித விவகாரங்களை கடவுளுடைய நோக்கிலிருந்து காண உதவியது. போர் செய்யும் ஆவலை பைபிள் எடுத்துப்போட்டது, அவர் தன்னுடைய துக்கத்திலிருந்தும் சோகத்திலிருந்தும் வெறுப்பிலிருந்தும் மனக்கசப்பிலிருந்தும் குணமடைய ஆரம்பித்தார். பைபிளில் இதயத்துக்கு இதமளிக்கும் சக்திவாய்ந்த மருந்து இருப்பதை கண்டுபிடித்தார்.

உணர்ச்சிப்பூர்வமான காயங்களை ஆற்றிக்கொள்ள பைபிள் எவ்வாறு ஒருவருக்கு உதவி செய்கிறது? ஏற்கெனவே ஆப்ரஹாமுக்கு ஏற்பட்டிருந்த பாதிப்புகளை பைபிளால் மாற்ற முடியவில்லை. ஆனால் கடவுளுடைய வார்த்தையை வாசித்து அதை தியானித்தபோது அவருடைய சிந்தனை படைப்பாளருடைய சிந்தனைக்கு இசைவாக ஆனது. இப்போது அவருக்கு எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கை பிறந்திருக்கிறது. வேறு விஷயங்கள் அவருடைய வாழ்க்கையில் முதலிடத்தைப் பிடித்துக்கொண்டன. கடவுளுக்கு முக்கியமானவையே இவருக்கும் முக்கியமானவையாக மாறிவிட்டன. அப்பொழுதே அவருடைய இதயத்திலிருந்த காயங்களும் ஆற ஆரம்பித்துவிட்டன. ஆப்ரஹாம் மாறுவதற்கு இப்படித்தான் உதவி கிடைத்தது.

உள்நாட்டுப் போரில் ஈடுபட்டார்

ஆப்ரஹாம் 1930-களில் ஆப்பிரிக்காவில் பிறந்தவர். இரண்டாம் உலகப் போருக்குப்பின் வலிமைமிக்க அண்டை நாடு இவர் நாட்டை ஆண்டுகொண்டிருந்தது. ஆனால் ஆப்ரஹாமின் நாட்டைச் சேர்ந்தவர்களில் அநேகர் சுதந்திர தாகம் கொண்டிருந்தார்கள். 1961-⁠ல் சுதந்திர போராட்ட இயக்கத்தில் ஆப்ரஹாம் சேர்ந்தார், வலிமைமிக்க அண்டை நாட்டுக்கு எதிராக கொரில்லா போரில் ஈடுபட்டார்.

“அவர்கள் எங்களுடைய எதிரிகள். எங்களைக் கொல்ல திட்டமிட்டார்கள், ஆகவே அவர்களைக் கொல்ல நாங்கள் புறப்பட்டோம்” என்று ஆப்ரஹாம் விளக்குகிறார்.

ஆப்ரஹாமின் உயிருக்கு அடிக்கடி ஆபத்து ஏற்பட்டது, ஆகவே ஆயுதங்களோடு போராடிய 20 ஆண்டுகால போர் வாழ்க்கையை விட்டுவிட்டு 1982-⁠ல் ஐரோப்பாவுக்கு தப்பி ஓடினார். அப்பொழுது அவருக்கு கிட்டத்தட்ட 50 வயது. அவருக்கு அதிக நேரமும் இருந்தது. தன்னுடைய கடந்தகால வாழ்க்கை புத்தகத்தைப் புரட்டிப் பார்க்க ஆரம்பித்தார். அவருடைய ஆசை கனவுகள் என்ன ஆனது? எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது? ஆப்ரஹாம் யெகோவாவின் சாட்சிகளில் சிலரை சந்தித்தார், அவர்களுடைய கூட்டங்களுக்குச் செல்ல ஆரம்பித்தார். சில வருடங்களுக்கு முன் ஆப்பிரிக்காவில் ஒரு சாட்சி தனக்கு கொடுத்த துண்டுப்பிரதியை வாசித்தது இவருக்கு நினைவுக்கு வந்தது. பூமியில் வரப்போகும் பூங்காவனம் போன்ற பரதீஸ் நிலைமையையும் மனிதகுலத்தை ஆளப்போகும் பரலோக அரசாங்கத்தையும் பற்றி அது விவரித்தது. அது உண்மையாக இருக்குமா?

ஆப்ரஹாம் இவ்வாறு சொல்கிறார்: “போரில் நான் செலவழித்த வருஷங்கள் எல்லாம் வீண் என்பதை பைபிளிலிருந்து கற்றுக்கொண்டேன். கடவுளுடைய ராஜ்யம்தான் எல்லாரையும் நியாயமாக நடத்தக்கூடிய ஒரே அரசாங்கம் என்பதையும் கற்றுக்கொண்டேன்.”

ஆப்ரஹாம் யெகோவாவின் சாட்சியாக முழுக்காட்டுதல் பெற்றார். அதற்குப்பின் சில நாட்களுக்குள் ராபர்ட் என்ற பெயருடைய ஒருவரும் ஆப்பிரிக்காவிலிருந்து தப்பி ஆப்ரஹாம் வசித்துவந்த ஐரோப்பிய நகரத்துக்கு வந்தார். ராபர்ட்டும் ஆப்ரஹாமும் ஒரே போரில் எதிரெதிர் முனைகளிலிருந்து போர் செய்திருந்தார்கள். வாழ்க்கையின் உண்மையான நோக்கம் என்ன என்பதைப் பற்றி ராபர்ட் அடிக்கடி யோசித்துப் பார்த்திருந்தார். அவர் மதப்பற்றுள்ளவராக இருந்தார். பைபிளின் சில பகுதிகளை வாசித்திருந்ததால் யெகோவா என்பது கடவுளுடைய பெயர் என்பதை அறிந்திருந்தார். பைபிளை புரிந்துகொள்ள ராபர்ட்டுக்கு உதவிசெய்ய ஆப்ரஹாமின் சபையிலிருந்தவர்கள் முன்வந்தபோது அதை உடனடியாக ஏற்றுக்கொண்டார்.

ராபர்ட் இவ்வாறு விளக்குகிறார்: “யெகோவா, இயேசு ஆகிய இருவரும் தனித்தனி ஆட்கள் என்பதை சாட்சிகள் ஒப்புக்கொண்டு, அந்தப் பெயர்களை பயன்படுத்திய விதமே எனக்கு ஆரம்பத்திலிருந்து மிகவும் பிடித்திருந்தது. பைபிளிலிருந்து நான் ஏற்கெனவே கற்றுக்கொண்டிருந்ததற்கு இசைவாக இது இருந்தது. சாட்சிகள் மிகவும் நேர்த்தியாக உடை உடுத்துகிறார்கள், எந்த நாட்டவராக இருந்தாலும் மற்றவர்களிடம் தயவாக நடந்துகொள்கிறார்கள். இதெல்லாம் என் மனதை தொட்டது.”

எதிரிகள் நண்பர்களாகிறார்கள்

முன்னாள் எதிரிகள் ராபர்ட்டும் ஆப்ரஹாமும் இப்போது ஆருயிர் நண்பர்கள். யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரே சபையில் அவர்கள் முழுநேர சுவிசேஷகர்களாக சேவை செய்கிறார்கள். “போர்க் காலத்தில், ஒரே மதத்தைச் சேர்ந்த அண்டை நாட்டவர்கள் எப்படி ஒருவரையொருவர் பகைக்க முடியும் என்று நான் அடிக்கடி யோசித்திருக்கிறேன்” என்று ஆப்ரஹாம் கூறுகிறார். “நானும் ராபர்ட்டும் ஒரே சர்ச்சை சேர்ந்தவர்களாக இருந்தோம், ஆனால் அப்போது ஒருவருக்கு விரோதமாக ஒருவர் போர் செய்தோம். இப்போதோ இருவரும் யெகோவாவின் சாட்சிகள், எங்களுடைய மதம் எங்களை ஒன்றுபடுத்தியிருக்கிறது.”

“அதுதான் வித்தியாசம். உண்மையான சகோதரத்துவத்தின் பாகமாக எங்களை ஆக்கியிருக்கும் ஒரு மதத்தில் இப்போது நாங்கள் இருக்கிறோம். நாங்கள் மறுபடியும் ஒருபோதும் போரிட மாட்டோம்” என்று ராபர்ட் கூறுகிறார். இந்த முன்னாள் எதிரிகளின் இதயங்களை பைபிள் மாற்றிவிட்டது. பகையும் கசப்பும் படிப்படியாக மறைந்து, நம்பிக்கையும் நட்பும் மலர்ந்துவிட்டது.

ஆப்ரஹாமும் ராபர்ட்டும் போரில் ஈடுபட்டிருந்த அதே சமயத்தில் வேறு இரண்டு இளைஞர்களும் அண்டை நாடுகளுக்கிடையில் நடந்துகொண்டிருந்த மற்றொரு போரில் எதிரெதிர் முனையில் இருந்தார்கள். சீக்கிரத்தில் அவர்களுடைய இருதயத்தின் காயத்தையும் ஆற்ற சக்திவாய்ந்த மருந்தைப் போல பைபிள் செயல்பட்டது. எப்படி?

கொலைசெய்​—⁠பின்பு வீரமரணம் அடை

காப்ரியேல் மதப்பற்றுள்ள ஒரு குடும்பத்தில் வளர்ந்தவர். அவருடைய தாய்நாடு புனிதமான போரில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது என்று அவருக்குக் கற்பிக்கப்பட்டது. ஆகவே 19 வயதில் இராணுவத்தில் சேர்ந்து, போர்க் களத்துக்கு தன்னை அனுப்பும்படி கேட்டுக்கொண்டார். மிகவும் கடுமையாக நடந்த போர்களில் 13 மாதம் இருந்தார், சில சமயங்களில் எதிரிகளிடமிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில்கூட இருந்திருக்கிறார். “குறிப்பாக ஒரு சம்பவம் என் நினைவுக்கு வருகிறது. எதிரிகள் அன்றிரவு தாக்குவார்கள் என்று எங்கள் கமாண்டர் சொன்னார். நாங்கள் அதிக பதற்றத்தில் இருந்ததால் இரவு முழுவதும் பீரங்கியால் சுட்டுக்கொண்டே இருந்தோம்” என காப்ரியேல் கூறுகிறார். கொலை செய்யப்பட வேண்டிய எதிரிகளாகவே தன்னுடைய அண்டை நாட்டவரை அவர் பார்த்தார். அவர் மேலும் சொல்வதாவது: “எத்தனை பேரை கொல்ல முடியுமோ அத்தனை பேரையும் கொன்றுவிட வேண்டும். பின்னர் என்னுடைய நண்பர்கள் பலரைப் போலவே வீரமரணம் எய்திட வேண்டும் என்பதே என் எண்ணமாக இருந்தது.”

ஆனால் காலப்போக்கில் காப்ரியேலுக்கு விரக்தி ஏற்பட்டது. அவர் மலைகளுக்கு ஓடிப்போய், பதுங்கிப் பதுங்கிச் சென்று எல்லையை தாண்டி, போரிடாத ஒரு நாட்டை அடைந்தார்; பின்னர் அங்கிருந்து ஐரோப்பாவுக்கு பயணப்பட்டார். வாழ்க்கை ஏன் இவ்வளவு கஷ்டமாக உள்ளது, பிரச்சினைகள் கடவுளிடமிருந்து வரும் தண்டனையா என்று அவர் கடவுளிடம் கேட்டுக்கொண்டே இருந்தார். அவர் யெகோவாவின் சாட்சிகளை சந்திக்க நேர்ந்தது. வாழ்க்கையில் ஏன் இவ்வளவு பிரச்சினைகள் என்பதற்கான காரணத்தை அவர்கள் பைபிளிலிருந்து அவருக்குக் காண்பித்தார்கள்.​—⁠மத்தேயு 24:3-14; 2 தீமோத்தேயு 3:1-5.

பைபிளை அதிகமதிகமாக படிக்க படிக்க, காப்ரியேலுக்கு அது உண்மை என்பது புரிந்தது. “நாம் பரதீஸான பூமியில் என்றுமாக வாழலாம் என்பதை கற்றுக்கொண்டேன். இதில் ஆச்சரியம் என்னவென்றால், சிறுவயது முதல் இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கைக்காகத்தான் நான் ஏங்கினேன்” என்று சொல்கிறார். பைபிள் காப்ரியேலுக்கு ஆறுதலை அளித்தது, இதுவரை கலங்கிக்கொண்டிருந்த அவருடைய இதயத்தை அமைதிப்படுத்தியது. ஆழப் பதிந்திருந்த உள்ளக் காயங்கள் ஆற ஆரம்பித்தன. முன்னாள் எதிரியான டேனியேலை அவர் சந்திப்பதற்குள் அவரிடமிருந்த பகைமை உணர்ச்சி மறைந்தே போனது. ஆனால் டேனியேல் எப்படி ஐரோப்பாவுக்கு வந்தார்?

“நீர் இருப்பது உண்மையானால், தயவுசெய்து எனக்கு உதவி செய்யும்!”

டேனியேல் ஒரு கத்தோலிக்கராக வளர்க்கப்பட்டவர். 18-வது வயதில் இராணுவத்திலிருந்து அவருக்கு அழைப்பு வந்தது. காப்ரியேலும் இவரும் ஒரே போரில் எதிரெதிர் பக்கங்களில் போரிட்டுக் கொண்டிருந்தார்கள். போர்க் களத்தின் அருகில் இவர் பீரங்கி வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தபோது நேராக ஒரு ஏவுகணை வந்து அதை தாக்கியது. அவருடைய நண்பர்கள் கொல்லப்பட்டார்கள், இவர் பலத்த காயமடைந்தார். கைதியாக கொண்டு செல்லப்பட்டார். பல மாதங்கள் மருத்துவமனையிலும் முகாமிலும் இருந்தார், பின்னர் நடுநிலைமை வகிக்கும் வேறொரு நாட்டுக்கு நாடுகடத்தப்பட்டார். தனிமையிலும் ஆதரவில்லாமலும் இருந்தபோது தற்கொலை செய்துகொள்ள அவருக்குத் தோன்றியது. கடவுளிடம் டேனியேல் இவ்வாறு ஜெபித்தார்: “நீர் இருப்பது உண்மையானால், தயவுசெய்து எனக்கு உதவி செய்யும்!” அடுத்த நாளே யெகோவாவின் சாட்சிகள் அவரை சந்தித்தார்கள், அவருடைய பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது. கடைசியாக, அவர் ஓர் அகதியாக ஐரோப்பாவுக்குச் சென்றார். மறுபடியுமாக சாட்சிகளோடு கூட்டுறவு கொண்டு டேனியேல் பைபிளை படித்தார். அவர் கற்றுக்கொண்ட காரியங்கள் கவலையையும் கசப்பையும் களைவதற்கு உதவின.

காப்ரியேலும் டேனியேலும் இப்போது நல்ல நண்பர்கள், யெகோவாவின் முழுக்காட்டப்பட்ட சாட்சிகளாக ஆவிக்குரிய கருத்தில் சகோதரர்களாக இணைந்திருக்கிறார்கள். “யெகோவாமீது நான் வைத்திருக்கும் அன்பும் பைபிள் அறிவும், காரியங்களை அவர் நோக்கும் விதமாக நோக்குவதற்கு உதவி செய்திருக்கின்றன. டேனியேல் இனி என்னுடைய எதிரி இல்லை. பல வருடங்களுக்கு முன் அவரை சந்தோஷத்தோடு கொலை செய்திருப்பேன். பைபிள் இதற்கு நேர் எதிரானதை எனக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது​—⁠அவருக்காக நான் மரிக்கவும் தயார்” என்று காப்ரியேல் கூறுகிறார்.

“பல்வேறு மதங்களையும் தேசங்களையும் சேர்ந்த ஆட்கள் ஒருவரையொருவர் கொலை செய்வதை நான் பார்த்தேன். அதோடு, எதிர் பக்கத்தில் அதே மதத்தைச் சேர்ந்தவர்களையே மக்கள் கொலை செய்வதையும் பார்த்தேன். இதை பார்த்தபோது, இதற்கெல்லாம் கடவுள்தான் காரணம் என்று நான் நினைத்தேன். ஆனால் இப்போது எனக்குத் தெரியும், எல்லா போர்களுக்கும் பின்னாலிருப்பது சாத்தான்தான். நானும் காப்ரியேலும் இப்போது ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள். நாங்கள் இனி ஒருபோதும் சண்டை போட மாட்டோம்!” என்று டேனியேல் சொல்கிறார்.

‘தேவனுடைய வார்த்தை ஜீவனும் வல்லமையுமுள்ளது’

ஆப்ரஹாம், ராபர்ட், காப்ரியேல், டேனியேல் என்பவர்கள் ஏன் இப்படி மாறிவிட்டார்கள்? தங்கள் இருதயங்களில் ஆழமாக வேர் கொண்டிருந்த பகையையும் சோகத்தையும் அவர்கள் எவ்வாறு ஒழித்துக்கட்டினார்கள்?

இவர்கள் ஒவ்வொருவரும் “ஜீவனும் வல்லமையும்” வாய்ந்த பைபிளை வாசித்து, தியானித்து அதிலுள்ள சத்தியத்தைக் கற்றதே இதற்கு காரணம். (எபிரெயர் 4:12) மனித குலத்தின் படைப்பாளர்தான் பைபிளின் நூலாசிரியர். செவிகொடுத்துக் கேட்டு கற்றுக்கொள்ள விருப்பமுள்ள ஒருவரின் இருதயத்தை எவ்வாறு நல்லபடியாக மாற்றுவது என்பது அவருக்குத் தெரியும். “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; . . . அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.” பைபிள் தனக்கு வழிகாட்ட ஒரு வாசகர் அனுமதிக்கும்போது அவரது மதிப்பீடுகளும் தராதரங்களும் முற்றிலும் மாறிவிடுகின்றன. காரியங்களை யெகோவா எப்படி நோக்குகிறார் என்பதை கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறார். இதனால் அவருக்கு அநேக நன்மைகள் கிடைக்கின்றன, போர் காயங்களும் ஆறிவிடுகின்றன.​—⁠2 தீமோத்தேயு 3:⁠16, 17.

எந்தவொரு தேசமோ இனமோ மற்றொன்றைவிட உயர்ந்ததாகவோ தாழ்ந்ததாகவோ இல்லை என்று கடவுளுடைய வார்த்தை விளக்குகிறது. ‘தேவன் பட்சபாதமுள்ளவரல்ல, எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன்.’ இதை ஏற்றுக்கொள்ளும் ஒருவர் இன அல்லது தேசிய வெறுப்புணர்ச்சிகளை படிப்படியாக மேற்கொண்டு விடுவார்.​—⁠அப்போஸ்தலர் 10:34, 35.

சீக்கிரத்தில் தற்போதைய மனித ஆட்சியை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக மேசியானிய ராஜ்யத்தை கடவுள் கொண்டு வரப்போகிறார் என்பதை பைபிள் தீர்க்கதரிசனங்கள் காண்பிக்கின்றன. கடவுள் இந்த அரசாங்கத்தின் மூலம், “பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணு”வார். போர்களை ஊக்குவித்து மக்களை போரிடத் தூண்டும் அமைப்புகள் அடியோடு நீக்கப்படும். போரில் பலியானவர்கள் உயிர்த்தெழுப்பப்படுவார்கள், பரதீஸிய பூமியில் வாழும் வாய்ப்பை பெற்றுக்கொள்வார்கள். வலிந்து சண்டை செய்ய வருபவரை அல்லது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துபவரைப் பார்த்து ஓட வேண்டிய அவசியம் இனி யாருக்கும் இருக்காது.​—⁠சங்கீதம் 46:9; தானியேல் 2:44; அப்போஸ்தலர் 24:⁠15.

அப்போது வாழும் மனிதர்களைப் பற்றி பைபிள் இவ்வாறு சொல்கிறது: “வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத் தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள். அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனி புசிக்கிறதுமாயிருப்பதில்லை; . . . அவர்கள் விருதாவாக உழைப்பதில்லை; அவர்கள் துன்பமுண்டாகப் பிள்ளைகளைப் பெறுவதுமில்லை.” ஈடுசெய்ய முடியாத சேதமும் ஆற்ற முடியாத காயமும் இருக்காது. இந்த நம்பிக்கையில் விசுவாசம் வைக்கையில் ஒரு நபரின் இருதயத்திலுள்ள துக்கமும் சோகமும் படிப்படியாக நீங்கிவிடுகிறது.​—⁠ஏசாயா 65:21-23.

பைபிள்தான் இதயத்துக்கு இதமான சக்திவாய்ந்த மருந்து. அதன் போதனைகள் போர் காயங்களை ஏற்கெனவே ஆற்றிக்கொண்டு வருகின்றன. முன்னாள் எதிரிகள் ஒரே சர்வதேச சகோதரத்துவத்தில் இணைக்கப்பட்டு வருகிறார்கள். கடவுளுடைய புதிய ஒழுங்குமுறை வரும் வரை இது தொடரும். அப்போது மனிதரின் இருதயங்களில் வெறுப்பும் கசப்பும் சோகமும் துக்கமும் இருக்கவே இருக்காது. “முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை” என படைப்பாளர் வாக்குறுதி அளிக்கிறார்.​—⁠ஏசாயா 65:⁠17.

[அடிக்குறிப்பு]

a கட்டுரையில் சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

[பக்கம் 4-ன் சிறு குறிப்பு]

“போரில் நான் செலவழித்த அந்த வருஷங்கள் எல்லாம் வீண் என்பதை பைபிளிலிருந்து கற்றுக்கொண்டேன்”

[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]

முன்னாள் எதிரிகளின் இருதயங்களை மாற்ற பைபிளுக்கு வல்லமை இருக்கிறது

[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]

பகையும் கசப்பும் படிப்படியாக மறைந்து, நம்பிக்கையும் நட்பும் மலர்ந்துவிட்டது

[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]

பைபிள் தனக்கு வழிகாட்ட ஒரு வாசகர் அனுமதிக்கும்போது அவரது மதிப்பீடுகளும் தராதரங்களும் முற்றிலும் மாறிவிடுகின்றன

[பக்கம் 7-ன் படம்]

முன்னாள் எதிரிகள் இன்று சர்வதேச சகோதரத்துவத்தில் இணைந்திருக்கின்றனர்

[பக்கம் 4-ன் படத்திற்கான நன்றி]

அகதிகள் முகாம்: UN PHOTO 186811/J. Isaac

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்