தேறினவர்களாயும் முழு நிச்சயமுள்ளவர்களாயும் நிலைத்திருங்கள்
“தலைசிறந்த ஒரு படைப்பு”
யெகோவாவின் சாட்சிகள், தங்கள் நவீன நாளைய சரித்திரத்தின் தொடக்கம் முதல், இயேசு கிறிஸ்துவின் தீர்க்கதரிசனம் ஒன்றின்பேரில் அதிக கவனம் செலுத்தி வந்திருக்கின்றனர். “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்” என்பதே அத்தீர்க்கதரிசனம். (மத்தேயு 24:14) ‘கடைசி நாட்களின்’ தொடக்கம்—1914—நெருங்க நெருங்க, உண்மையுள்ள பைபிள் மாணாக்கர்கள் முழு நிச்சயமுள்ளவர்களாய் பரிசுத்த வேதவசனங்களின் அடிப்படையில் ஈடிணையற்ற உலகளாவிய கல்வி புகட்டும் வேலையை மேற்கொண்டனர்.—2 தீமோத்தேயு 3:1.
பூமியெங்கும் நற்செய்தியை அறிவிக்கும் நோக்கத்தை நிறைவேற்ற யெகோவாவின் ஊழியர்கள் உயிரோட்டமுள்ள, புதியதோர் முறையை துணிந்து பயன்படுத்தினார்கள். அதைப் பற்றி அதிகத்தைத் தெரிந்துகொள்ள, காலத்தில் சற்று பின்னோக்கி பயணம் செய்வோம்.
நற்செய்தியை அறிவிக்க புதியதோர் முறை
ஜனவரி 1914. நியூ யார்க் நகரில் இருண்ட ஆடிட்டோரியத்தில் 5,000 பேரில் ஒருவராக அமர்ந்திருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு முன் பெரியதோர் இயங்கு-படக்காட்சி திரை (motion-picture screen). நீண்ட கோட் அணிந்த நரைத்த முடியுடைய ஒருவர் திரைக்காட்சியில் தெரிகிறார். ஊமை திரைப்படங்களை நீங்கள் பார்த்ததுண்டு; ஆனால் இங்கு அந்த மனிதர் பேசுகிறார், அவர் பேசுவதை உங்களால் கேட்கவும் முடிகிறது. தொழில்நுட்பத்தில் சரித்திரம் படைத்த புதியதோர் கண்டுபிடிப்பைப் பார்க்கிறீர்கள்; தெரிவிக்கப்படும் செய்தியும் தனித்தன்மை வாய்ந்ததுதான். உவாட்ச் டவர் சொஸைட்டியின் முதல் தலைவர் சார்ல்ஸ் டேஸ் ரஸல் என்பவரே அந்த பேச்சாளர், “ஃபோட்டோ-டிராமா ஆஃப் கிரியேஷன்” என்பதே அந்த படைப்பு.
இயங்கு திரைப்படம், மக்களை சென்றெட்ட மிகுந்த சக்தி வாய்ந்த கருவியாக இருக்கும் என்பதை சி. டி. ரஸல் உணர்ந்தார். ஆகவே 1912-ல், ‘ஃபோட்டோ-டிராமா ஆஃப் கிரியேஷனை’ தயாரிக்க தொடங்கினார். முடிவில், ஒலியும் வண்ணமும் பெற்ற புகைப்பட ஸ்லைடுகளையும் படக்காட்சிகளையும் உடைய எட்டு மணிநேர காட்சியாக அது அமைந்தது.
இந்த “ஃபோட்டோ-டிராமா ஆஃப் கிரியேஷன்” நான்கு பாகங்களாக திரையிடும்படி உருவாக்கப்பட்டது. படைப்பில் தொடங்கி பூமிக்கும் மனிதகுலத்துக்கும் யெகோவா தேவன் வைத்திருக்கும் நோக்கம் கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியின் முடிவில் உச்சக்கட்டத்தை அடையும் வரையான மனித சரித்திரத்தினூடாக பார்வையாளர்களை கொண்டு சென்றது. இந்த தொழில்நுட்பம் வியாபார உலகில் வெற்றி பெறுவதற்கு இன்னும் பல ஆண்டுகள் செல்ல வேண்டியிருந்தது. இருந்தாலும், ‘ஃபோட்டோ-டிராமா ஆஃப் கிரியேஷனை’ கோடிக்கணக்கானோர் இலவசமாக கண்டு மகிழ்ந்தனர்.
‘ஃபோட்டோ-டிராமாவிற்காக’ சிறந்த இசைப் பதிவுகளும் ஃபோனோக்ராஃப் ரெகார்டுகளில் 96 பேச்சுப் பதிவுகளும் தயாரிக்கப்பட்டன. உலக சரித்திரத்தை சித்தரிக்கும் கலைநயம் படைத்த படங்களைக் கொண்டு ஸ்டெரியாப்டிக்கன் ஸ்லைடுகள் தயாரிக்கப்பட்டன. புதிய ஓவியங்களும் வரைபடங்களும் நூற்றுக்கணக்கில் வரையப்பட்டன. சில வண்ண ஸ்லைடுகளும் ஃபிலிம்களும் கவனமாக கையால் வண்ணம் தீட்டப்பட்டன. இவ்வாறு பலமுறை செய்யப்பட்டு, கடைசியாக, நான்கு பகுதிகளை உடைய 20 செட்டுகள் தயாரிக்கப்பட்டன. இப்படி தயாரித்ததால், ‘ஃபோட்டோ-டிராமாவின்’ ஒரு பகுதியை ஒரே நாளில் 80 நகரங்களில் காண்பிக்க முடிந்தது!
திரைக்குப் பின்னால்
“ஃபோட்டோ-டிராமா” காட்சிகளை திரையிடுகையில் திரைக்குப் பின்னால் என்ன நடந்தது? பைபிள் மாணாக்கராகிய ஆலஸ் ஹாஃப்மன் என்ன நடந்ததென்று சொல்கிறார்: “சகோதரர் ரஸலின் காட்சியுடன் நாடகம் ஆரம்பித்தது. அவர் திரையில் தோன்றி, அவருடைய உதடுகள் அசைய தொடங்கியதும் ஃபோனோகிராஃப் இயக்கப்பட்டது. . . . அப்போது நாங்கள் அவருடைய குரலை கேட்டு அனுபவித்தோம்.”
டைம் லாப்ஸ் ஃபோட்டோகிராஃபியை குறிப்பிட்டு, ஸோலா ஹாஃப்மன் இவ்வாறு நினைவுகூர்ந்தார்: “சிருஷ்டிப்பின் நாட்கள் சித்தரிக்கப்பட்டதை மிகுந்த ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கு லில்லி மலர்கள் எங்கள் கண்கள் முன்னால் மலர்ந்து விரிவதை கண்டு மகிழ்ந்தோம்.”
யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு அங்கத்தினராகிய இசை பிரியர் கார்ல் எஃப். க்ளைன் இவ்வாறு சொல்கிறார்: “இந்தப் படக்காட்சிகள் திரையிடப்பட்டபோது, நார்ஸிஸஸ், ஹியூமரெஸ்க் போன்ற மிகச் சிறந்த இசை படைப்புகள் அவற்றோடு சேர்ந்து இசைக்கப்பட்டன.”
நினைவில் நிற்கும் வேறுசில சம்பவங்களும் நிகழ்ந்தன. “நகைச்சுவை மிக்க தவறுகள் சில சமயங்களில் எதிர்பாராமல் நிகழ்ந்ததுண்டு,” என்பதாக க்லேட்டன் ஜே. உட்வர்த் ஜூனியர் சொன்னார். “‘பட்சியைப்போல உன் மலைக்குப் பறந்துபோ’ என ஒருமுறை இசைத்தட்டு பாடிக் கொண்டிருந்தது. ஆனால் திரையிலோ வலியதோர் ஜைஜான்டோஸாரஸின் படம்; ஜலப்பிரளயத்திற்கு முன் வாழ்ந்த பெரிய ஸைஸ் மிருகம் அது”!
“ஃபோட்டோ-டிராமா ஆஃப் கிரியேஷன்” மட்டுமல்லாமல், விரைவில் “யுரேக்கா டிராமா” செட்டுகளும் தயாராயின. (பெட்டியைக் காண்க.) அவற்றின் ஒருவகை செட்டில், பிரசங்கங்களும் இசை பதிவுகளும் இருந்தன. மற்றொரு வகை செட்டில் இந்த ரெகார்டுகளோடுகூட ஸ்லைடுகளும் இருந்தன. ‘யுரேக்கா டிராமாவில்’ இயங்கு படக்காட்சிகள் இல்லையென்றாலும், மக்கள் அடர்த்தி குறைவான பகுதிகளில் மிகச் சிறப்பாக சாட்சிபகர உதவியது.
சாட்சிபகர சிறந்ததோர் கருவி
1914-ன் முடிவில், வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவில் மொத்தமாக 90,00,000 பேருக்கு அதிகமானோர் ‘ஃபோட்டோ-டிராமாவை’ கண்டுகளித்தனர். பைபிள் மாணாக்கர்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்களாய் இருந்தாலும் முழு நிச்சயத்தோடு இருப்பதில் குறைவுபடவில்லை. இந்த புதிய கருவியை பயன்படுத்தி முழு நிச்சயமுள்ளவர்களாய் நற்செய்தியை அறிவித்தார்கள். திரையிடுவதற்காக பொருத்தமான இடங்களை வாடகைக்கு எடுக்கையில், அதற்குரிய செலவுகளை மனமுவந்து ஏற்றுக்கொண்டார்கள். ஆகவே கடவுளுடைய வார்த்தையையும் அவருடைய நோக்கங்களையும் பார்வையாளர்களுக்கு தெரியப்படுத்துவதில் “ஃபோட்டோ-டிராமா ஆஃப் கிரியேஷன்” பெரும் பங்கை வகித்தது.
சி. டி. ரஸலுக்கு ஒருவர் இவ்வாறு எழுதினார்: “அந்த டிராமா என் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது; பைபிளைப் பற்றிய என் அறிவில் திருப்புமுனை என்றுகூட சொல்லலாம்.” மற்றொருவர் சொன்னார்: “மத நம்பிக்கையை இழக்கும் படுகுழியில் விழ இருந்தேன்; கடந்த கோடைகாலத்தில் இங்கு காண்பிக்கப்பட்ட ‘ஃபோட்டோ-டிராமா ஆஃப் கிரியேஷன்’ என்னை காப்பாற்றியது. . . . உலகத்தால் தரமுடியாத மன சமாதானத்தை இப்போது அனுபவிக்கிறேன். உலகின் எல்லா செல்வத்துக்கு ஈடாகவும்கூட இதை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்.”
சொஸைட்டியின் தலைமை அலுவலகத்தின் நீண்டநாள் அங்கத்தினராகிய டெமீட்ரியஸ் பாப்பாஜார்ஜ் இவ்வாறு குறிப்பிட்டார்: “‘ஃபோட்டோ-டிராமா’ என்பது தலைசிறந்த ஒரு படைப்பு. அப்போதிருந்த பைபிள் மாணாக்கரின் குறைந்த எண்ணிக்கையையும் அதற்கேற்றபடி கிடைத்த குறைந்த அளவு நன்கொடைகளையும் வைத்து பார்க்கும்போது அப்படித்தான் சொல்ல வேண்டும். நிஜமாகவே யெகோவாவின் ஆவியே அதற்குத் துணைபுரிந்தது!”
[பக்கம் 8, 9-ன் பெட்டி/படங்கள்]
“யுரேக்கா டிராமா”
‘ஃபோட்டோ-டிராமாவை’ முதல்முதலாக காண்பித்து எட்டு மாதங்களுக்குப்பின், சொஸைட்டி, அதை “யுரேக்கா டிராமா” என்ற வேறொரு வடிவில் உருவாக்க வேண்டிய அவசியத்தை கண்டது. பெரிய நகரங்களில் முழு ‘ஃபோட்டோ-டிராமாவும்’ காட்டப்பட்டு வருகையில், “யுரேக்கா” செட்டுகள் அதே அடிப்படை செய்தியை கிராமங்களிலும் ஊரக பகுதிகளிலும் காண்பித்தன. ஒருவகையான “யுரேக்கா டிராமா,” பிரசங்க வேலையில் “சகோதரிகளுக்கு சிறந்த வாய்ப்பை” அளித்ததாக சொல்லப்பட்டது. ஏன்? ஏனென்றால், ஃபோனோக்ராஃப் ரெகார்டுகள் வைக்கப்பட்ட பெட்டியின் எடை 14 கிலோகிராம் மட்டுமே. என்றாலும், அதைப் போட்டுக் காட்ட வேண்டுமென்றால் ஒரு ஃபோனோக்ராஃபையும் எடுத்து செல்ல வேண்டியிருந்தது.