உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w01 1/15 பக். 4-7
  • நற்பண்பை வளர்க்க வழி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நற்பண்பை வளர்க்க வழி
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஒழுக்கத் தராதரங்களுக்கு சரியான ஒரே ஊற்றுமூலர்
  • கடவுளுடைய தராதரங்களை நன்கு தெரிந்துகொள்ளுங்கள்
  • இதயப்பூர்வமாக கற்றுக்கொள்ளுங்கள்
  • உதாரணங்களிலிருந்து கற்றுக்கொள்ளுதல்
  • நாமும் வெற்றி பெறலாம்
  • நல்லொழுக்கத்தை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறீர்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • நம் விசுவாசத்திற்கு நாம் எவ்வாறு நற்பண்பைக் கூட்டி வழங்கலாம்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • நற்பண்பை ஏன் வளர்க்க வேண்டும்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • தீய ஒழுக்கம் நிறைந்த ஓர் உலகில் நல்லொழுக்கத்தைக் காத்துக்கொள்ளுதல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
w01 1/15 பக். 4-7

நற்பண்பை வளர்க்க வழி

“சீரிய பண்பு; நற்குணம்”​—⁠“நற்பண்பு” என்ற வார்த்தைக்கு நவீன அகராதிகள் அளிக்கும் விளக்கம் இது. நற்பண்பு என்பது, “சரியான செயல் மற்றும் சிந்தனை; நல்ல சுபாவம்.” சொற்களஞ்சிய ஆசிரியர் மார்வின் ஆர். வின்சென்ட் கூறுகிறபடி, “நற்பண்பு” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தையின் மூல கருத்து “எந்த சீரிய பண்பையும்” குறிக்கிறது. அதனால்தான் விவேகம், தைரியம், சுயக்கட்டுப்பாடு, பாரபட்சமின்மை, பரிவு, விடாமுயற்சி, நேர்மை, தாழ்மை, வாய்மை போன்ற நற்பண்புகள் போற்றி புகழப்படுகின்றன. “சரியான தராதரத்திற்கு இணங்க வாழ்வது” என்றும் நற்பண்புக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.

அப்படியானால், சீரிய பண்பு, நற்குணம், சரியான செயல் ஆகியவற்றிற்கு யாருடைய தராதரத்தை நாம் பின்பற்ற வேண்டும்? “ஒழுக்கத் தத்துவத்தைக் குறித்ததில் பிரபல குழுவின் கருத்தை” நியூஸ்வீக் பத்திரிகை கூறியது. அதன்படி, “பல அவநம்பிக்கைகளை பிறப்பித்த என்லைட்டன்மென்ட் என்ற இயக்கம், எது சரி எது தவறு என்பதை தனிநபருடைய விருப்பு வெறுப்புகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் கலாச்சாரத்திற்குமே விட்டுவிட்டது.” ஆனால், எது சரி எது தவறு என்பதை தீர்மானிக்க தனிநபருடைய விருப்பு வெறுப்புகளுக்கு விட்டுவிடுவது சரியானதா? இல்லவே இல்லை. நற்பண்பை வளர்ப்பதற்கு, நல்லது கெட்டதை தீர்மானிக்க நம்பகமான தராதரம் நமக்கு தேவை. அதாவது, ஒரு செயலோ மனப்பான்மையோ பண்போ சரியானதா அல்லது தவறானதா என்பதை தீர்மானிக்க நம்பகமான தராதரம் தேவை.

ஒழுக்கத் தராதரங்களுக்கு சரியான ஒரே ஊற்றுமூலர்

ஒழுக்கத் தராதரங்களுக்கு சரியான ஒரேவொரு ஊற்றுமூலரே இருக்கிறார். அவர்தான் மனிதகுலத்தின் படைப்பாளராகிய யெகோவா தேவன். முதல் மனிதனாகிய ஆதாமை யெகோவா தேவன் படைத்தபின்பு, அவனுக்கு இந்தக் கட்டளையைக் கொடுத்தார்: “நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்.” (ஆதியாகமம் 2:16, 17) தம்முடைய படைப்புகளுக்கு எது நல்லது எது கெட்டது என்பதை தீர்மானிக்கும் முழு உரிமையும் தமக்கே உள்ளது என்ற கருத்தை வலியுறுத்தவே யெகோவா தேவன் இந்த மரத்திற்கு இப்படியொரு வித்தியாசப்பட்ட பெயரை வைத்தார். ஆகவே, ஒருவருடைய செயல்கள், தனிப்பண்புகள், நோக்குநிலை ஆகியவற்றை தீர்மானிப்பதற்கு அல்லது மதிப்பிடுவதற்கு, எது நல்லது எது கெட்டது என்பதைப் பற்றிய கடவுளின் தராதரங்களே அடிப்படையாக இருக்கின்றன. இப்படிப்பட்ட தராதரங்கள் இல்லையென்றால், எது நல்லது எது கெட்டது என்பதை நம்மால் வேறுபடுத்திப் பார்க்க முடியாது.

நன்மை தீமை அறியத்தக்க மரம் சம்பந்தமாக ஆதாம் ஏவாளுக்கு கடவுள் கொடுத்த கட்டளை அவர்களுக்கு ஒரு தெரிவை​—⁠கீழ்ப்படிவதா அல்லது கீழ்ப்படியாமல் இருப்பதா என்ற தெரிவை​—⁠முன்வைத்தது. அவர்களைப் பொறுத்தவரை நற்பண்பு என்பது அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிவதாகும். பிற்காலத்தில், தமக்கு பிரியமானவை எவை, பிரியமல்லாதவை எவை என்பதையும் யெகோவா வெளிப்படுத்தினார். அவற்றை நமக்காக பைபிளில் பதிவு செய்து வைத்தார். ஆகவே நற்பண்பை வளர்ப்பதற்கு, பைபிளில் உள்ள யெகோவாவின் நீதியான தராதரங்களை நாம் பின்பற்ற வேண்டும்.

கடவுளுடைய தராதரங்களை நன்கு தெரிந்துகொள்ளுங்கள்

நன்மை எது தீமை எது என்ற தராதரங்களை கடவுளே வகுத்திருக்கிறார், அவற்றை பைபிளின் வாயிலாக வெளிப்படுத்தியுமிருக்கிறார். அப்படியானால், நாம் அவற்றை நன்கு தெரிந்துகொள்ள வேண்டாமா? அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார்: “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் [“ஏவப்பட்டு,” NW] அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.”​—⁠2 தீமோத்தேயு 3:16, 17.

உதாரணமாக, சமுதாய வழக்கப்படி அடக்கத்தை காட்டிய குனீஹீட்டோவை சூப்பர்வைஸர் தவறாக புரிந்துகொண்டதைப் பற்றி முந்தின கட்டுரையில் குறிப்பிட்டதை சிந்தித்துப் பாருங்கள். வேதப்பூர்வ தராதரங்களை சற்று உன்னிப்பாக ஆராய்ந்தது, பிற்பாடு சமநிலையான மனப்பான்மைக்கு வர அவருக்கு உதவியது. அடக்கம் என்ற பண்பை வாழ்க்கையில் கடைப்பிடிக்கும்படி பைபிள் நம்மை உந்துவிக்கிறது. ஆனால் மட்டுக்குமீறிய தன்னம்பிக்கையையும் அகந்தையையும் அது கண்டனம் செய்கிறது. (நீதிமொழிகள் 11:2; மீகா 6:8) ‘கண்காணிக்கும் பொறுப்புக்குரிய’ தகுதிகளைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் சொல்கையில், அவர்கள் அந்தச் சிலாக்கியத்தை ‘நாடுகிறார்கள்’ என சொன்னார். (1 தீமோத்தேயு 3:1, பொது மொழிபெயர்ப்பு) இந்தச் ‘சிலாக்கியத்தை நாடும்போது,’ பெருமையோ அகந்தையோ கூடாது, அதேசமயத்தில் தான் அதற்கு தகுதியற்றவன் என்று தன்னையே மட்டம் தட்டவும் கூடாது.

வியாபார நடவடிக்கைகளில் இந்த சீரிய பண்புகளை காட்டுவதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? இன்றைய வியாபார உலகில், அரசாங்க சட்டதிட்டங்களையும் வரி சம்பந்தமான சட்டங்களையும் ஏய்ப்பதற்கு நேர்மையற்ற வழிமுறைகளை கையாளுவது அல்லது குறுக்கு வழிகளை நாடுவது சர்வசாதாரணம். மற்றவர்களுடைய நடத்தை எப்படியிருந்தாலும், பைபிள் தராதரத்தின்படி, நம்மை ‘எல்லாவற்றிலும் நேர்மையாய் நடத்த’ வேண்டும். (எபிரெயர் 13:18, NW) ஆகவே, முதலாளிகளிடத்திலும், தொழிலாளிகளிடத்திலும், வாடிக்கையாளர்களிடத்திலும், அரசாங்கங்களிடமும் நேர்மையாகவும் பாரபட்சமின்றியும் நடந்துகொள்வதன் மூலம் நற்பண்பை நாம் வளர்க்கிறோம். (உபாகமம் 25:13-16; ரோமர் 13:1; தீத்து 2:9, 10) நேர்மை என்ற குணத்தால் நம்பிக்கையும், நல்லெண்ணமும் பிறக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஒப்பந்தங்களை எழுத்தில் எழுதிவிடுவதும்கூட உசிதமானது; அவ்வாறு செய்வது, ‘எதிர்பாரா சம்பவம்’ நேரிடுகையில், மனஸ்தாபங்களையும், சிக்கல்களையும் தடுக்கிறது.​—⁠பிரசங்கி 9:11, NW; யாக்கோபு 4:13, 14.

உடையும் சிகை அலங்காரமும் நாம் நற்பண்பை வளர்ப்பதற்கான மற்றொரு அம்சம். அந்தந்த கலாச்சாரத்திற்கு ஏற்ப உடைகளை தேர்ந்தெடுப்பதும் மாறுபடுகிறது. நவீன பாணிக்கு ஒத்துப்போக வேண்டிய கட்டாயமும் ஏற்படலாம். மாறிவரும் ஒவ்வொரு புதுப்புது பாணியையும் நாம் ஏன் பின்பற்ற வேண்டும்? ‘இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷம் தரிக்க வேண்டாம்’ என பைபிள் நமக்கு அறிவுரை கூறுகிறது. (ரோமர் 12:2) இதற்கென்று தனிச் சட்டங்களை வகுப்பதற்கு மாறாக, தேவ ஆவியினால் ஏவப்பட்டு அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு எழுதினார்: “ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரியாமல், தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே . . . தங்களை அலங்கரிக்க வேண்டும்.” (1 தீமோத்தேயு 2:9, 10) இந்த அடிப்படை தராதரம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொருந்துகிறது. இருந்தாலும், சமுதாய கண்ணோட்டத்திற்கு ஏற்றவாறும் ஒருவரது தனிப்பட்ட ரசனையைப் பொறுத்தும், பார்ப்பதற்கு அழகாக இருக்கும் வெவ்வேறான பாணிகளைப் பின்பற்ற வாய்ப்புண்டு.

கடவுள் வெளிப்படையாக கண்டனம் செய்யும் ஒழுக்கக்கேடான பழக்கவழக்கங்களையும் பைபிள் தெரிவிக்கிறது. 1 கொரிந்தியர் 6:9, 10-⁠ல் இந்த எச்சரிப்பை நாம் வாசிக்கிறோம்: “அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசி மார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.” முன்னால் குறிப்பிட்ட மரியாவுக்கு இந்த வேதவசனம் பெரிதும் உதவியது. படைப்பாளர் வகுத்திருக்கும் ஒழுக்க தராதரத்தின்படி, ஹ்வானுடன் தான் கொண்ட உறவு தவறு என்பதையும், கடவுள் தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால் இந்தத் தவறை விட்டுவிட வேண்டும் என்பதையும் அவள் புரிந்து கொண்டாள். ஆகவே, நற்பண்பை வளர்க்க வேண்டுமென்றால் யெகோவாவின் தராதரங்களை நன்கு அறிந்திருக்க வேண்டும் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

இதயப்பூர்வமாக கற்றுக்கொள்ளுங்கள்

நற்பண்பு என்பது ஒரு தவறான செயலை ஏதோ கடமைக்கு தவிர்ப்பதை அர்த்தப்படுத்துவதில்லை. இதற்கு தார்மீக வலிமையுண்டு. நற்பண்புள்ள ஒருவர் நற்குணமுள்ளவர். “நற்பண்பை மனதளவில் மட்டுமல்ல, இதயத்தாலும் கற்றுக்கொள்ள வேண்டும்” என பேராசிரியர் ஒருவர் கூறுகிறார். அப்படியானால், நற்பண்பை வளர்க்க கடவுளுடைய வார்த்தையை நன்கு தெரிந்து வைத்திருந்தால் மட்டும் போதாது. அதில் எழுதப்பட்டிருப்பவற்றை தியானிக்க வேண்டும்; அப்படி செய்வதால் யெகோவா மீதுள்ள நன்றியுணர்வால் நம்முடைய இருதயம் பொங்கி வழியும். வேதப்பூர்வ நியமங்களை நம் வாழ்க்கையில் பொருத்துவதற்கும் உந்தப்படுவோம்.

“உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள்முழுதும் அது என் தியானம்” என சங்கீதக்காரன் உணர்ச்சிப் பொங்க கூறினார். (சங்கீதம் 119:97) அரசனாகிய தாவீதும் இவ்வாறு எழுதினார்: “பூர்வநாட்களை நினைக்கிறேன், உமது [கடவுளுடைய] செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்; உமது கரத்தின் கிரியைகளை யோசிக்கிறேன்.” (சங்கீதம் 143:5) அதுபோல நாமும், பைபிளையும் பைபிள் சார்ந்த பிரசுரங்களையும் படிப்பதோடு அவற்றை ஜெப சிந்தையுடன் தியானிப்பதும் அவசியம்.

ஊக்கமாக படிப்பதற்கும் அதைத் தொடர்ந்து தியானிப்பதற்கும் நேரம் கிடைப்பது உண்மையில் ஒரு சவாலாக இருக்கலாம். ஆனால் நற்பண்பை கடைப்பிடிப்பதற்கு மற்ற வேலைகளிலிருந்து நாம் நேரத்தை வாங்க வேண்டும். (எபேசியர் 5:15, 16, NW) 24 வயது ஆரன், வழக்கமாக காலையில் எழுந்திருக்கும் நேரத்தைவிட 30 நிமிடத்திற்கு முன்பே எழுந்துவிடுவதன் மூலம் நேரத்தை வாங்குகிறார். அதைப் பற்றி அவர் இவ்வாறு சொல்கிறார்: “முன்பெல்லாம் அந்த அரை மணிநேரத்தில் சும்மா பைபிளை வாசிப்பேன். ஆனால் தியானிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை சமீபத்தில்தான் உணர்ந்துகொண்டேன். அதனால் நான் இப்போது என்ன செய்கிறேன் என்றால், அந்த அரைமணி நேரத்தில், வாசித்தவற்றை தியானிக்க பாதிநேரம் ஒதுக்குகிறேன். இது ரொம்ப பிரயோஜனமாக இருக்கிறது.” மற்ற சமயங்களிலும் தியானிக்கலாம். தாவீது யெகோவாவுக்கு சங்கீதம் பாடுகையில், “இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன்” என்று பாடினார். (சங்கீதம் 63:6) “ஈசாக்கு சாயங்கால வேளையிலே தியானம்பண்ண வெளியிலே போயிருந்[தான்]” என பைபிள் விவரிக்கிறது.​—⁠ஆதியாகமம் 24:63.

நற்பண்பை வளர்ப்பதில் தியானமும் பலன் தரும் அம்சம். ஏனென்றால், யெகோவா உணரும் விதமாகவே நாமும் உணருவதற்கும் அவருடைய கருத்துக்களையே நம்முடைய கருத்துக்களாக ஏற்றுக்கொள்வதற்கும் தியானம் உதவுகிறது. உதாரணமாக, வேசித்தனத்தை கடவுள் தடை செய்கிறார் என்பதை மரியா அறிந்திருந்தாள். ஆனால், ‘தீமையை வெறுத்து நன்மையைப் பற்றிக்கொண்டிருப்பதற்கு’ முக்கியமான பைபிள் வசனங்களை அவள் தியானிக்க வேண்டியிருந்தது. (ரோமர் 12:9) ‘விபச்சாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, பொருளாசை ஆகியவற்றை உண்டுபண்ணுகிற நம்முடைய அவயவங்களை அழித்துப்போடும்படி [‘மரத்துப்போகச் செய்யும்படி,’ NW]’ கொலோசெயர் 3:5 நம்மை ஊக்குவிக்கிறது. இந்த வசனத்தை வாசித்த பிறகே தன்னை மாற்றிக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை மரியா உணர்ந்தாள். மரியா தன்னைத்தானே இவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டியிருந்தது: ‘எப்படிப்பட்ட பாலுறவு வேட்கையை நான் மரத்துப்போகச் செய்ய வேண்டும்? கெட்ட ஆசைகளைத் தூண்டிவிடும் என்னென்ன காரியங்களையெல்லாம் நான் தவிர்க்க வேண்டும்? ஆண்களிடம் பழகும் விஷயத்தில் நான் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா?’

தியானம் என்பது ஒரு செயலால் ஏற்படும் விளைவை யோசித்துப் பார்ப்பதையும் அர்த்தப்படுத்துகிறது. “ஒருவனும் மீறாமலும் தன் சகோதரனை வஞ்சியாமலும் இருக்க” வேசித்தனத்தை விட்டு விலகும்படியும் இச்சையடக்கத்தை காத்துக்கொள்ளும்படியும் பவுல் கிறிஸ்தவர்களை ஊக்குவிக்கிறார். (1 தெசலோனிக்கேயர் 4:3-7) தியானித்துப் பார்ப்பதற்கு இதோ சில நல்ல கேள்விகள்: ‘இந்தக் காரியத்தை நான் செய்தால் எனக்கும் என்னுடைய குடும்பத்தாருக்கும், அல்லது மற்றவர்களுக்கும் என்ன பாதிப்பு ஏற்படும்? ஆன்மீக ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் உடல் ரீதியிலும் நான் எப்படி பாதிக்கப்படுவேன்? கடந்த காலத்தில் கடவுளுடைய சட்டங்களை மீறினவர்களுக்கு என்ன நடந்திருக்கிறது?’ இவ்வாறு சிந்தித்துப் பார்த்தது, மனவுறுதியுடன் தன்னுடைய நற்பண்பை காத்துக்கொள்வதற்கு உண்மையிலேயே மரியாவுக்கு உதவியது. இப்படி செய்வது நமக்கும் உதவும்.

உதாரணங்களிலிருந்து கற்றுக்கொள்ளுதல்

நற்பண்பை வகுப்பில் கற்றுக்கொள்ள முடியுமா? ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சிந்தனையாளர்களை குழப்பியிருக்கும் கேள்விகளில் ஒன்றுதான் இது. கிரேக்க தத்துவஞானி பிளேட்டோ இதை வகுப்பில் கற்றுக்கொள்ள முடியும் என நம்பினார். மறுபட்சத்தில், இதை அனுபவத்தால்தான் கற்றுக்கொள்ள முடியும் என அரிஸ்டாட்டில் விவாதித்தார். இவ்விரண்டையும் தொகுத்து ஒரு எழுத்தாளர் இவ்வாறு எழுதினார்: “சுருக்கமாக சொன்னால், நற்பண்புக்குரிய நெறிமுறைகளை தானாகவும் கற்றுக்கொள்ள முடியாது, பாடப் புத்தகங்களிலிருந்தும் கற்றுக்கொள்ள முடியாது. நற்பண்பை போற்றி புகழும் . . . சமுதாயங்களில் வாழ்வதாலேயே நல்ல சுபாவங்கள் வளருகின்றன.” ஆனால் உண்மையிலேயே நற்பண்புமிக்க ஆட்களை நாம் எங்கே காண முடியும்? நற்பண்புக்கு சில உதாரணங்களாக, புராணக் கதைகளில் வரும் ஹீரோக்களையோ மற்ற கதைகளையோ பல சமுதாயத்தினர் குறிப்பிட்டுக் காட்டுகிறார்கள். இருந்தாலும் நற்பண்பை வாழ்க்கையில் காட்டியவர்களைப் பற்றிய உண்மை உதாரணங்கள் பைபிளில் ஏராளமாக உள்ளன.

யெகோவாவே நற்பண்புக்கு தலைசிறந்த உதாரணமாக திகழ்கிறார். அவர் எப்போதும் நற்பண்புடன் நடந்து கொள்கிறார், நீதியும் நன்மையுமானதையே செய்கிறார். நாமும் ‘தேவனைப் பின்பற்றி’ நற்பண்பை வளர்க்கலாம். (எபேசியர் 5:1) கடவுளுடைய குமாரன் இயேசு கிறிஸ்துவும், ‘தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி நமக்கு மாதிரியைப் பின்வைத்துப் போனார்.’ (1 பேதுரு 2:21) அதோடு, ஆபிரகாம், சாராள், யோசேப்பு, ரூத், யோபு, தானியேல் மற்றும் அவருடைய மூன்று எபிரெய கூட்டாளிகள் போன்ற உண்மையுள்ள அநேகரைப் பற்றிய பதிவுகள் பைபிளில் உள்ளன. நவீன நாளில் யெகோவாவின் ஊழியர்கள் மத்தியில் நற்பண்புக்கு இலக்கணமாக திகழ்பவர்களையும் மறந்துவிட முடியாது.

நாமும் வெற்றி பெறலாம்

கடவுளுடைய பார்வையில் நற்பண்பை வெளிக்காட்டும் செயலை நாம் செய்ய முடியுமா? சுதந்தரிக்கப்பட்ட அபூரணத்தின் காரணமாக சில சமயங்களில் நமக்குள்ளேயே போராட்டம் இருக்கலாம். நம்முடைய மனதுக்கும் மாம்சத்துக்கும் இடையே​—⁠அதாவது நற்பண்புக்கு எடுத்துக்காட்டான செயல்களைச் செய்ய விரும்புவதற்கும் நம்முடைய பாவமுள்ள மனப்போக்கிற்கும் இடையே​—⁠கடுமையான போராட்டம் எழலாம். (ரோமர் 5:12; 7:13-23) ஆனால் கடவுளுடைய உதவியால் இந்தப் போராட்டத்தை வெல்லலாம். (ரோமர் 7:24, 25) யெகோவா தம்முடைய வார்த்தையையும் பைபிள் சார்ந்த பிரசுரங்களையும் தந்துள்ளார். வேத வசனங்களை ஊக்கமாக படித்து அவற்றை ஜெப சிந்தையுடன் தியானிப்பதன் மூலம் நம்முடைய இருதயம் சுத்தமாகும். அப்பேர்ப்பட்ட சுத்த இருதயத்திலிருந்தே நற்பண்புமிக்க எண்ணங்களும், வார்த்தைகளும் செயல்களும் பிறக்கின்றன. (லூக்கா 6:45) யெகோவா தேவன் மற்றும் இயேசு கிறிஸ்துவின் உதாரணங்களின் அடிப்படையில் நாம் தெய்வீக குணாதிசயத்தை வளர்க்கலாம். இன்று கடவுளை உண்மையோடு சேவித்து வருபவர்களிடமிருந்தும் நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம்.

நற்பண்பை வெளிக்காட்டும் காரியங்களையும் புகழத்தக்க மற்ற காரியங்களையுமே ‘சிந்தித்துக் கொண்டிருக்கும்படி’ அப்போஸ்தலன் பவுல் தம்முடைய வாசகர்களுக்கு அறிவுரை கூறினார். இப்படி செய்வதால் கடவுளுடைய ஆசீர்வாதம் நிச்சயமாக கிடைக்கும். (பிலிப்பியர் 4:8, 9) யெகோவாவின் உதவியோடு நற்பண்பை வளர்ப்பதில் நாமும் வெற்றி பெறலாம்.

[பக்கம் 6-ன் படம்]

தியானிப்பதை உங்களுடைய பைபிள் படிப்பின் பாகமாக்குங்கள்

[பக்கம் 7-ன் படம்]

இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றி தெய்வீக குணாதிசயத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்