நற்பண்பை ஏன் வளர்க்க வேண்டும்?
குனீஹீட்டோ—இவர் நடுத்தர வயதுடைய ஜப்பானிய மனிதர். இவர் சமீபத்தில் ஐக்கிய நாடுகளுக்கு மாறிச் சென்றிருந்தார்.a அங்கு போய்ச் சேர்ந்த சில வாரங்களுக்குள் ஓர் இக்கட்டான சூழ்நிலையை எதிர்ப்பட்டார். அது அவருடைய வேலைக்கே வேட்டு வைத்திருக்கும்! அப்படி என்ன எதிர்ப்பட்டார்? அவரே சொல்கிறார் கேளுங்கள்: “ஒரு பொறுப்பை கொடுத்து, அதைச் செய்ய முடியுமான்னு என்னுடைய சூப்பர்வைஸர் கேட்டார். அதை செய்ய முடியுமென்ற நம்பிக்கை எங்கிட்ட இருந்தது. ஆனால், ‘என்னால இதை செய்ய முடியுமான்னு தெரியல, முடிஞ்சவரை ‘ட்ரை’ பண்றேன்’ என்று சொன்னேன். அடக்க சுபாவம் ஒரு நல்ல பண்பு என்று சின்ன வயசிலிருந்தே எனக்கு சொல்லிக் கொடுத்திருந்தாங்க, அதனால் அப்படி சொன்னேன். அது, நான் எதற்கும் லாயக்கற்றவன், தன்னம்பிக்கை இல்லாதவன் என்பதுபோல் அந்த சூப்பர்வைஸருக்கு தோன்றியது. நான் பேசின விதத்தை அவர் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்பதை அறிந்தபோதுதான், என்னுடைய சுபாவத்தை நானும் கொஞ்சம் மாற்ற வேண்டும் என்பதை உணர்ந்தேன்.”
மரியா—இவள் ஒரு கல்லூரி மாணவி, படிப்பில் கில்லாடி, நியூ யார்க் நகரில் வசிக்கிறாள். தன்னை நாடிவரும் சக மாணவர்களுக்கு சளைக்காமல் எப்போதும் உதவி செய்வாள். ஹ்வான் என்ற மாணவனும் ஏதாவது உதவி கேட்டு அவ்வப்போது மரியாவிடம் வருவான். அத்துடன் அவள்மீது காதல் கொண்டதால் அவளை தன்பால் கவர முயன்றான். கற்பை காத்துக்கொள்ள வேண்டும் என்பதில் அவள் உறுதியாக இருந்தாள். ஆனால் அந்தோ பரிதாபம்! ஹ்வானின் மோக தூண்டிலுக்கு இரையாகி மரியா தன் கற்பை இழந்தாள்.
இன்றைய கதம்ப கலாச்சாரத்தில், ஒழுக்கம் சீர்குலைந்த உலகத்தில், நற்பண்பை காட்டுவது சவாலாகத்தான் இருக்கிறது. அப்படியானால் நற்பண்பை ஏன் வளர்க்க வேண்டும்? ஏனென்றால் நற்பண்புள்ள நடத்தை கடவுளைப் பிரியப்படுத்துகிறது. நாமும் அவருடைய தயவை பெறவே விரும்புகிறோம் அல்லவா?
நற்பண்புகளை வளர்க்கும்படி கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் அதன் வாசகர்களுக்கு அறிவுரை கொடுக்கிறது. உதாரணமாக, அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதுகிறார்: “நற்பண்பு எதுவோ, புகழ் எதுவோ அவற்றையே சிந்தித்துக் கொண்டிருங்கள்.” (பிலிப்பியர் 4:8, NW) ‘நம்முடைய விசுவாசத்தோடு நற்பண்பையும் வழங்க முழு ஆர்வத்தோடு முயற்சி செய்யும்படி’ அப்போஸ்தலன் பேதுருவும் நம்மை உந்துவிக்கிறார். (2 பேதுரு 1:5, NW) ஆனால் நற்பண்பு என்றால் என்ன? இதை வகுப்பில் கற்றுக்கொள்ள முடியுமா? நாம் இதை எப்படி வளர்க்கலாம்?
[அடிக்குறிப்பு]
a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.