ஓர் முக்கிய அறிவிப்பு
அக்டோபர் 7, 2000 அன்று நடைபெற்ற உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் பென்ஸில்வேனியாவின் வருடாந்தர கூட்டத்தின் முடிவில் ஓர் முக்கிய அறிவிப்பு செய்யப்பட்டது. நிகழ்ச்சி அக்கிராசினரான ஆளும் குழு உறுப்பினர் ஜான் ஈ. பார் இந்த அறிவிப்பை செய்தார். அதே தினம் சகோதரர்கள் தியோடர் ஜாரக்ஸ் மற்றும் டானியல் ஸிட்லிக் கொடுத்திருந்த பேச்சுகளின் அடிப்படையில் இந்த அறிவிப்பு செய்யப்பட்டது.—இப்பத்திரிகையில் பக்கங்கள் 12-16, 28-31 ஆகியவற்றைக் காண்க.
கருத்தாழமிக்க பின்வரும் குறிப்பை சகோதரர் பார் தெரிவித்தார்: “சட்டப்பூர்வ நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டிருப்பதை விட அதிமுக்கியமான, அதிகளவான கடமைகள் ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை’ வகுப்பிடமும் ஆளும் குழுவிடமும் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு சட்டப்பூர்வ நிறுவனத்திற்கும் வரைமுறைக்குட்பட்ட பொறுப்புகளே உள்ளதை அவற்றின் சாசனங்கள் காட்டுகின்றன. ஆனால் நமது எஜமான் இயேசு கிறிஸ்து, உண்மையுள்ள அடிமை வகுப்பாரை தமது எல்லா ‘ஆஸ்திகளின்’ மீதும், அதாவது பூமிக்குரிய ராஜ்ய அக்கறைகளின் மீதும் நியமித்திருக்கிறார்.”—மத்தேயு 24:45-47.
சகோதரர் பார் தொடர்ந்து பென்ஸில்வேனியா நிறுவனத்தைக் குறித்து சொன்னதாவது: “உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் பென்ஸில்வேனியா, 1884-ல் நிறுவப்பட்ட சமயத்திலிருந்தே நமது நவீனநாளைய சரித்திரத்தில் முக்கிய பாகம் வகித்திருக்கிறது. இருந்தாலும் அது ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை’ தேவைப்படும்போது பயன்படுத்தும் சட்டப்பூர்வ கருவி மட்டுமே.”
‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை’ வகுப்பினரிடம் கர்த்தரின் பூமிக்குரிய ஆஸ்திகள் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும், வழக்கமான நிர்வாகப் பொறுப்புகள் சிலவற்றை நிறைவேற்ற அவர்கள் ‘வேறே ஆடுகளை’ சேர்ந்த தகுதியுள்ள கண்காணிகளை அனுமதிக்க இது தடையாக இருப்பதில்லை என சகோதரர்கள் ஜாரக்ஸும் ஸிட்லிக்கும் தங்கள் பேச்சுகளில் விளக்கியிருந்தனர். (யோவான் 10:16) மேலும், யெகோவாவின் சாட்சிகள் பயன்படுத்தும் சட்டப்பூர்வ நிறுவனங்களின் இயக்குநர்களில் எவரேனும் அல்லது அனைவரும் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டும் என்பதற்கு எந்த வேதப்பூர்வ காரணமும் இல்லை.
இயக்குநர்களாகவும் அதிகாரிகளாகவும் சேவித்துவந்த யெகோவாவின் சாட்சிகளது ஆளும் குழு அங்கத்தினர்கள், ஐக்கிய மாகாணங்களில் ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை’ பயன்படுத்தும் அனைத்து சட்டப்பூர்வ நிறுவனங்களின் இயக்குநர் குழுக்களிலிருந்தும் சமீபத்தில் ராஜினாமா செய்ததாக சகோதரர் பார் குறிப்பிட்டார். அவர்களுக்குப் பதிலாக வேறே ஆடுகளைச் சேர்ந்த பொறுப்புள்ள சகோதரர்கள் ஓட்டெடுப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்தத் தீர்மானம் உண்மையிலேயே பயன்மிக்கது. ஏனெனில் உலகெங்கும் உள்ள சகோதர சகோதரிகளுக்கு ஆவிக்குரிய உணவையும் மற்ற ஆவிக்குரிய தேவைகளையும் அளிப்பதற்காக ஆளும் குழுவால் இப்போது இன்னும் அதிக நேரம் செலவழிக்க முடியும்.
அகமகிழ்ந்த கூட்டத்தாரிடம் அக்கிராசினர் முடிவாக இப்படிச் சொன்னார்: “அனுபவமுள்ள கண்காணிகளிடம் பல்வேறு சட்டப்பூர்வ மற்றும் நிர்வாக கடமைகள் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும் . . . அவர்கள் அனைவரும் ஆளும் குழுவின் ஆவிக்குரிய வழிநடத்துதலின் கீழேயே சேவிக்கிறார்கள். . . . யெகோவாவின் மகத்தான நாமத்திற்கு மகிமையும் புகழும் சேரும்படி அவரது சித்தத்தைச் செய்ய நாம் அனைவரும் எடுக்கும் ஒருங்கிணைந்த முயற்சிகளை அவர் ஆசீர்வதிக்குமாறு ஜெபிப்போமாக.”