‘கர்த்தர் மெய்யாகவே உயிர்த்தெழுந்துவிட்டார்’
இயேசு கொலை செய்யப்பட்டபோது அவருடைய சீஷர்கள் எவ்வளவாய் துக்கப்பட்டிருப்பர் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்! அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு அடக்கம் பண்ணின உயிரற்ற உடலைப் போலவே அவர்களுடைய நம்பிக்கையும் உயிரற்று இருந்தது. இயேசு, ரோமர்களின் ஆதிக்கத்திலிருந்த யூதர்களை விடுவிப்பார் என்ற எதிர்பார்ப்பும் கனவாகிவிட்டது.
ஆனால் அதோடு எல்லாம் முடிந்துவிடவில்லை. அப்படி முடிந்திருந்தால், மேசியா என உரிமைபாராட்டிய அநேகரின் சீஷர்களைப் போலவே இயேசுவின் சீஷர்களும் சுவடு தெரியாமல் மறைந்துபோயிருப்பர். ஆனால் இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டுவிட்டார்! அவருடைய மரணத்திற்கு பிறகு அநேக தடவை தம்முடைய சீஷர்களுக்கு தோன்றினார் என வேதாகமம் கூறுகிறது. அதன் காரணமாகவே சீஷர்களில் சிலர், “கர்த்தர் மெய்யாகவே உயிர்த்தெழுந்து”விட்டார் என்று உணர்ச்சிபொங்க கூறினர்.—லூக்கா 24:34.
இயேசுவே மேசியா என தாங்கள் நம்பியதை சீஷர்கள் மற்றவர்களிடம் நிரூபிக்க வேண்டியிருந்தது. அதை நிரூபிக்கும் உறுதியான அத்தாட்சியாக அவருடைய உயிர்த்தெழுதலையே அவர்கள் சுட்டிக்காண்பித்தனர். அதனால்தான், “கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக் குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள்” என பைபிளில் வாசிக்கிறோம்.—அப்போஸ்தலர் 4:33.
இந்த உயிர்த்தெழுதல் ஒரு மோசடியே என்பதை யாராவது ஒருவர் நிரூபித்திருந்தால், அதாவது சீஷர்களில் ஒருவரையே அவ்வாறு கூறும்படி செய்திருந்தால் அல்லது இயேசுவின் உடல் இன்னும் கல்லறையில் இருந்ததை காண்பித்திருந்தால், கிறிஸ்தவம் ஆரம்பத்திலேயே அழிந்துபோயிருக்கும். ஆனால் அவ்வாறு நிகழவில்லை. கிறிஸ்து உயிரோடிருக்கிறார் என்பதை அறிந்திருந்த சீஷர்கள் அவருடைய உயிர்த்தெழுதலைப் பற்றி எங்கும் தைரியமாய் பிரசங்கித்தனர். அதன் விளைவாக உயிர்த்தெழுப்பப்பட்ட கிறிஸ்துவில் ஆயிரக்கணக்கானோர் நம்பிக்கை வைத்தனர்.
இயேசுவின் உயிர்த்தெழுதலை நீங்களும் ஏன் நம்பலாம்? இது உண்மையில் நடந்த சம்பவம் என்பதற்கு என்ன அத்தாட்சி உள்ளது?
அத்தாட்சிகளை ஏன் ஆராய வேண்டும்?
பைபிளிலுள்ள நான்கு சுவிசேஷ பதிவுகளுமே இயேசுவின் உயிர்த்தெழுதலைப் பற்றி அறிவிக்கின்றன. (மத்தேயு 28:1-10; மாற்கு 16:1-8; லூக்கா 24:1-12; யோவான் 20:1-29)a கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்பதற்கு கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் மற்ற புத்தகங்களும் சாட்சி பகருகின்றன.
இயேசுவின் உயிர்த்தெழுதலைப் பற்றி அவருடைய சீஷர்கள் பிரசங்கித்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை! ஏனெனில், இயேசுவைக் கடவுள் உயிர்த்தெழுப்பியது உண்மையே. அது அன்றைய உலகம் கேள்விப்பட்டிராத ஓர் அற்புத செய்தியே! கடவுள் இருக்கிறார் என்பதையும், இயேசு இப்பொழுது உயிரோடு இருக்கிறார் என்பதையும் அது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கும்.
இது நம்மை எவ்வாறு பாதிக்கிறது? “ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்” என இயேசு ஜெபம் செய்தார். (யோவான் 17:3) ஆகவே, இயேசுவையும் அவருடைய பிதாவையும் பற்றிய ஞானத்தை நாம் பெறுவோம், அது நமக்கு ஜீவனை அளிக்கும். அந்த ஞானத்தை உபயோகிக்கையில் நாம் மரித்தாலும்கூட மறுபடியும் உயிர் பெறுவோம், ஏனென்றால் இயேசுவும் உயிர்த்தெழுப்பப்பட்டாரே! (யோவான் 5:28, 29) அதோடு, கடவுளுடைய பரலோக அரசாட்சியில் பூங்காவனமான பூமியில் நித்திய காலமாக வாழும் நம்பிக்கையையும் நாம் பெறுவோம். ராஜாதி ராஜாவான, மகிமைப்படுத்தப்பட்ட இயேசு கிறிஸ்துவே அதன் அரசராக இருப்பார்.—ஏசாயா 9:6, 7; லூக்கா 23:43; வெளிப்படுத்துதல் 17:14.
ஆகவே, இயேசு உண்மையில் உயிர்த்தெழுந்தாரா இல்லையா என்பது அதிமுக்கியமான கேள்வியாகும். அது நம்முடைய தற்போதைய வாழ்க்கையையும் எதிர்கால நம்பிக்கையையும் பெரிதும் பாதிக்கும். அதனால்தான், இயேசு மரித்து உயிர்த்தெழுப்பப்பட்டார் என்பதை நிரூபிக்கும் நான்கு ஆணித்தரமான அத்தாட்சிகளை ஆராய்ந்து பார்க்கும்படி உங்களை அழைக்கிறோம்.
இயேசு கழுமரத்தில் நிஜமாகவே மரித்தார்
இயேசு கழுமரத்தில் அறையப்பட்டிருந்தும் அவர் உண்மையில் மரிக்கவில்லை என்று சந்தேகவாதிகள் சிலர் சாதிக்கின்றனர். அவர் மரிக்கும் தறுவாயில்தான் இருந்தார், குளிரான கல்லறையில் வைத்தபோதோ மயக்கம் தெளிந்து எழுந்தார் என்று கூறுகின்றனர். ஆனால் இயேசுவின் உயிரற்ற உடலே கல்லறையில் வைக்கப்பட்டது என அனைத்து அத்தாட்சிகளும் நிரூபிக்கின்றன.
பொதுவான ஓர் இடத்திலேயே இயேசு கொல்லப்பட்டதால் அவர் மரித்ததை நிரூபிக்க அநேக சாட்சிகள் இருந்தனர். அவரை கழுமரத்தில் அறைந்த நூற்றுக்கு அதிபதி அதில் ஒருவர். இயேசு உண்மையில் மரித்துவிட்டாரா என்பதை உறுதிசெய்வது அவருடைய வேலையே. அதோடு, அந்த அதிகாரி தன் வேலையிலும் கைதேர்ந்தவன். அதுமட்டுமல்ல, ரோம தேசாதிபதியான பொந்தியு பிலாத்து, இயேசு மரித்துவிட்டதை உறுதிசெய்துகொண்ட பிறகே உடலை அடக்கம் பண்ணுவதற்கு அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பிற்கு அனுமதி கொடுத்தார்.—மாற்கு 15:39-46.
காலியான கல்லறை
இயேசு உயிர்த்தெழுந்ததை அவருடைய சீஷர்கள் எப்படி அறிந்தனர்? காலியாக இருந்த கல்லறையே அதற்கு முதல் அத்தாட்சி. இந்த அத்தாட்சியைப் பற்றி இன்றுவரை எந்தச் சந்தேகமும் எழவில்லை. அதுவரை உபயோகிக்கப்பட்டிராத புதிய கல்லறையில்தான் இயேசு அடக்கம் பண்ணப்பட்டார். அவர் கொல்லப்பட்ட இடத்திற்கு அருகிலேயே அது இருந்ததால் அந்தக் காலத்தில் அதைக் கண்டுபிடிப்பதும் சுலபமாகத்தான் இருந்திருக்கும். (யோவான் 19:41, 42) இயேசு மரித்த இரண்டாம் நாள் காலையில் அவருடைய நண்பர்கள் கல்லறைக்கு வந்தபோது அவருடைய உடல் அங்கே இல்லை என்றே எல்லா சுவிசேஷங்களும் கூறுகின்றன.—மத்தேயு 28:1-7; மாற்கு 16:1-7; லூக்கா 24:1-3; யோவான் 20:1-10.
காலியான கல்லறையைக் கண்டு இயேசுவின் நண்பர்கள் மட்டுமல்ல அவருடைய எதிரிகளும் திகைத்துப் போனார்கள். இயேசுவைக் கொலை செய்து, அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காக அவருடைய எதிரிகள் படாதபாடுபட்டார்கள். அதை சாதித்த பிறகு அந்தக் கல்லறைக்கு முத்திரை போட்டு, காவல் காக்க பெரும்பாடுபட்டார்கள். ஆனாலும், வாரத்தின் முதல் நாள் காலையில் அந்தக் கல்லறை காலியாக இருந்தது.
இயேசுவின் நண்பர்களே அவருடைய உடலை கல்லறையிலிருந்து எடுத்துச் சென்றுவிட்டார்களா? அதற்கு வாய்ப்பே இல்லை. ஏனென்றால், அவர் மரித்த பிறகு அவர்கள் பெரும் துயரத்தில் ஆழ்ந்திருந்தார்கள் என சுவிசேஷங்கள் கூறுகின்றன. அதுமட்டுமா, அது ஒரு மோசடியாக இருந்திருந்தால் அதற்காக துன்பப்படவும் உயிரைக் கொடுக்கவும் அவருடைய சீஷர்கள் தயாராக இருந்திருப்பார்களா?
அப்படியென்றால் கல்லறையை காலி பண்ணியது யார்? இயேசுவின் எதிரிகள் அவருடைய உடலை எடுத்திருக்கவே மாட்டார்கள். அப்படியே எடுத்திருந்தாலும், இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டு இப்போது உயிரோடு இருக்கிறார் என அவருடைய சீஷர்கள் கூறியபோது அதைப் பொய்யென நிரூபிக்க உடலை நிச்சயம் காண்பித்திருப்பார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஏனென்றால் கடவுளே அவரை உயிர்த்தெழுப்பியிருந்தார்.
பல வாரங்கள் கழித்து பேதுரு பின்வருமாறு சாட்சி கொடுக்கையில் இயேசுவின் எதிரிகள் அதை எதிர்த்து குரல்கொடுக்கவில்லை: “இஸ்ரவேலரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்; நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைக் கொண்டு தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார். அப்படியிருந்தும், தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள். தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது. அவரைக் குறித்துத் தாவீது: கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக நிறுத்தி நோக்கிக்கொண்டிருக்கிறேன்; . . . அதினாலே . . . என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்; என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர் . . . என்று சொல்லுகிறான்.”—அப்போஸ்தலர் 2:22-28.
உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசுவை அநேகர் பார்த்தனர்
சுவிசேஷ எழுத்தாளனாகிய லூக்கா, அப்போஸ்தலர் புத்தகத்தில் பின்வருமாறு கூறினார்: “[இயேசு] பாடுபட்ட பின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி, தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்.” (அப்போஸ்தலர் 1:3) உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசுவை அவருடைய சீஷர்களில் அநேகர் ஒரு தோட்டத்தில், சாலையில், உணவருந்துகையில், திபேரிய கடற்கரையில் என பல சந்தர்ப்பங்களில் கண்டனர்.—மத்தேயு 28:8-10; லூக்கா 24:13-43; யோவான் 21:1-23.
இயேசுவை பார்த்ததாக கூறும் பதிவுகள் அனைத்தும் பொய் என சந்தேகவாதிகள் சந்தேகத்தைக் கிளப்புகின்றனர். இது எழுத்தாளர்களின் கற்பனை கதையே என்று கூறுவதன் மூலம் அல்லது இந்த விவரிப்புகளில் இருப்பதாக தோன்றும் முரண்பாடுகளை சுட்டிக்காட்டுவதன் மூலம் இதைச் செய்கின்றனர். உண்மை என்னவென்றால், சுவிசேஷங்கள் மத்தியில் காணப்படும் சில வேறுபாடுகள் அந்த எழுத்தாளர்கள் எந்த மோசடியும் செய்யவில்லை என்பதற்கே அத்தாட்சியளிக்கின்றன. கிறிஸ்து இந்தப் பூமியில் இருக்கையில் நடந்த விஷயங்களைப் பற்றி ஒரு எழுத்தாளர் கொடுக்கும் விவரங்களை மற்றொரு எழுத்தாளரின் விவரங்கள் பூர்த்திசெய்கையில் இயேசுவைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள நமக்கு உதவுகிறது.
இயேசு உயிர்த்தெழுந்த பிறகு தோன்றியது எல்லாம் வெறும் மாயத்தோற்றங்கள் தானா? அந்தக் கேள்விக்கே இடமில்லை, ஏனென்றால் அநேகர் அவரைப் பார்த்தனர். மீன் பிடிப்பவர்கள், பெண்கள், ஓர் அரசாங்க ஊழியர், இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததை முதலில் நம்பாமல், மறுக்க முடியாத அத்தாட்சியைப் பார்த்த பிறகே நம்பிய அப்போஸ்தலன் தோமா போன்றோர் அதில் அடங்குவர். (யோவான் 20:24-29) அநேக சந்தர்ப்பங்களில் உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசுவை அவருடைய சீஷர்கள் உடனடியாக அடையாளம் கண்டுகொள்ளவில்லை. ஒரு சமயம் 500-க்கும் அதிகமான ஆட்கள் அவரைப் பார்த்தனர். அப்போஸ்தலன் பவுல், உயிர்த்தெழுதலை ஆதரித்து பேசுகையில் இந்த சம்பவத்தை அதற்கு ஆதாரமாக கூறியபோது இயேசுவைப் பார்த்திருந்தவர்களில் அநேகர் உயிருடன் இருந்தனர்.—1 கொரிந்தியர் 15:6.
உயிருள்ள இயேசு மக்களை மாற்றுகிறார்
இயேசுவின் உயிர்த்தெழுதல் ஆர்வத்தைத் தூண்டுவதற்குரிய அல்லது காரசாரமாக விவாதிப்பதற்குரிய விஷயம் மட்டுமே அல்ல. அவர் இன்று உயிரோடிருக்கிறார் என்ற உண்மை உலகம் முழுவதிலுமுள்ள அநேகருக்கு பல நன்மைகளை அளித்திருக்கிறது. முதல் நூற்றாண்டிலும் சரி இன்றும் சரி, கிறிஸ்தவத்தை அசட்டை செய்த அல்லது அதை முற்றிலுமாக எதிர்த்த எண்ணற்றோர் தங்களை மாற்றிக்கொண்டு பின்னர் இதுவே உண்மை மதம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையைப் பெற்றிருக்கின்றனர். அவர்கள் மனம் மாறியதற்கு காரணம்? மகிமையுள்ள ஆவி சிருஷ்டியாக பரலோகத்தில் வாழ்வதற்கென்று இயேசுவை கடவுள் உயிர்த்தெழுப்பினார் என அவர்கள் வேதாகமத்தை ஆராய்ந்து அறிந்துகொண்டதே. (பிலிப்பியர் 2:8-11) அவர்கள் இயேசுவிலும் இரட்சிப்பிற்காக யெகோவா ஏற்பாடு செய்திருக்கும் கிரய பலியிலும் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். (ரோமர் 5:8) இவர்கள், கடவுளுடைய சித்தத்தை செய்வதாலும் இயேசுவின் போதனைகளுக்கு இசைவாக வாழ்வதாலும் உண்மையான சந்தோஷத்தைக் கண்டிருக்கின்றனர்.
முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவர்களுடைய வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள். அவர்கள் அந்தஸ்தோ, அதிகாரமோ, ஆஸ்தியோ பெறுவதைப் பற்றி கனவுகூட காண முடியாது. ஆனால், அநேக கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்தின் காரணமாக, ‘தங்கள் ஆஸ்திகளையும் சந்தோஷமாய்க் கொள்ளையிடக் கொடுத்தார்கள்.’ (எபிரெயர் 10:34) கிறிஸ்தவம் என்றாலே தியாகமும், துன்புறுத்தலும், சில சமயங்களில் உயிரையே தியாகம் செய்வதும் உட்பட்டிருந்தது.
கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கு முன்பு சிலருக்கு பெரும் அந்தஸ்தும் ஆஸ்தியும் பெற ஏராளமான வாய்ப்புகள் இருந்தன. தர்சுவைச் சேர்ந்த சவுல், புகழ்பெற்ற நியாயப்பிரமாண போதகரான கமாலியேலிடம் கல்வி பயின்றார். அதன் காரணமாக யூதர்களின் மத்தியில் பிரபலமானவராய் இருந்தார். (அப்போஸ்தலர் 9:1, 2; 22:3; கலாத்தியர் 1:14) அப்படியிருந்தும் சவுல், அப்போஸ்தலன் பவுலாக மாறினார். அவரும் இன்னும் பலரும் இந்த உலகம் அளித்த அந்தஸ்தையும் அதிகாரத்தையும் துச்சமாக கருதினர். ஏன்? கடவுளுடைய வாக்குறுதிகளையும் இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்பட்டார் என்ற உண்மையையும் சார்ந்த நிச்சய நம்பிக்கையின் செய்தியை பரப்புவதற்காகவே. (கொலோசெயர் 1:28) இவ்வாறு, சத்தியத்திற்காக துன்பப்படவும் அவர்கள் தயாராக இருந்தனர்.
இன்றுள்ள லட்சக்கணக்கானோர் விஷயத்திலும் இதுவே உண்மை. இவர்களை உலகம் முழுவதிலும் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் நீங்கள் காணலாம். கிறிஸ்துவின் மரணத்தை நினைவுகூரும் வருடாந்தர ஆசரிப்பிற்கு சாட்சிகள் உங்களை கனிவோடு வரவேற்கின்றனர். இது ஏப்ரல் 8, 2001, ஞாயிற்றுக்கிழமை மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு நடைபெறும். அந்த நிகழ்ச்சிக்கும் அவர்களுடைய இராஜ்ய மன்றத்தில் நடைபெறும் மற்ற அனைத்து கூட்டங்களுக்கும் நீங்கள் வருவதை அவர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர். ஏனென்றால் பைபிளைப் பற்றிய கலந்தாலோசிப்புகள் அங்கே நடைபெறும்.
இயேசுவின் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் பற்றி மட்டுமல்ல அவருடைய வாழ்க்கையையும் போதனைகளையும் பற்றி அதிகத்தை நீங்கள் ஏன் கற்றுக்கொள்ளக் கூடாது? தம்மிடம் வரும்படி அவர் நம்மை அழைக்கிறார். (மத்தேயு 11:28-30) யெகோவா தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் பற்றி திருத்தமான அறிவைப் பெற இப்பொழுதே முயலுங்கள். அவ்வாறு செய்தீர்கள் என்றால் கடவுளுடைய அன்பான குமாரனுடைய ராஜ்யத்தில் நீங்களும் முடிவில்லாத வாழ்க்கையைப் பெற முடியும்.
[அடிக்குறிப்பு]
a சுவிசேஷ பதிவுகள் நம்பகமானவையா என்பதற்கான அத்தாட்சிக்கு மே 15, 2000 தேதியிட்ட காவற்கோபுரத்தில் “சுவிசேஷங்கள்—சரித்திரமா கட்டுக்கதையா?” என்ற கட்டுரையைக் காண்க.
[பக்கம் 7-ன் படம்]
இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவதால் லட்சக்கணக்கானோர் உண்மையான சந்தோஷத்தை அனுபவிக்கின்றனர்
[பக்கம் 6-ன் படத்திற்கான நன்றி]
From the Self-Pronouncing Edition of the Holy Bible, containing the King James and the Revised versions