ராஜ்ய ஆசீர்வாதங்களை நீங்களும் அனுபவிக்கலாம்
கிறிஸ்தவ அப்போஸ்தலன் பவுல் அப்போது புழக்கத்தில் இருந்த பிரபல மொழிகள் சிலவற்றை மிகவும் சரளமாக பேசினார். இன்றைய பல்கலைக்கழகப் படிப்புக்கு சமமாக படித்திருந்தார். ரோம குடிமகனுக்குரிய சகல சலுகைகளையும் உரிமைகளையும் அனுபவித்தார். (அப்போஸ்தலர் 21:37-40; 22:3, 28) அவருக்கிருந்த தகுதிக்கு அவர் செல்வ சீமானாகி பிரபலமடைந்திருக்கலாம். ஆனாலும் அவர், “எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன். . . . நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு . . . அவருக்காக எல்லாவற்றையும் . . . குப்பையுமாக எண்ணுகிறேன்” என்றார். (பிலிப்பியர் 3:7, 9, 11) பவுல் இவ்வாறு கூறியதற்கு காரணம்?
தர்சு பட்டணத்து சவுல் என முன்னர் அறியப்பட்டவரும், ‘இந்த மார்க்கத்தார்’ என்றறியப்பட்ட தொகுதியினரை துன்புறுத்தி வந்தவருமான பவுல், உயிர்த்தெழுதலுக்குப் பின்பு மகிமைப்படுத்தப்பட்ட இயேசுவை தரிசனத்தில் கண்டபோது விசுவாசியாக மாறினார். (அப்போஸ்தலர் 9:1-19) தமஸ்குவுக்குப் போகும் வழியில் ஏற்பட்ட இந்த அனுபவம், இயேசுவே வாக்குப்பண்ணப்பட்ட மேசியா அல்லது கிறிஸ்து, இவரே வாக்குறுதி அளிக்கப்பட்ட ராஜ்யத்தின் எதிர்கால ராஜா என்பதை பவுலுக்கு வெகு தெளிவாக புரிய வைத்தது. அது பவுலின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தையும் கொண்டுவந்தது. இது, மேற்குறிப்பிடப்பட்ட அவரது உறுதியான வார்த்தைகளிலிருந்து தெரிகிறது. சுருங்க சொன்னால், பவுலுக்கு உண்மையும் நேர்மையுமான இருதயம் இருந்ததால் மனந்திரும்பினார்.—கலாத்தியர் 1:13-16.
பைபிளில் “மனந்திரும்பு” என்ற வினைச்சொல், “அறிந்தபின்” என்ற அர்த்தம் தரும் கிரேக்கச் சொல்லிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது “முன்கூட்டி அறிவது” என்பதன் எதிர்ப்பதம். ஆகவே மனந்திரும்புதல் என்பது ஒருவர் தன் மனதை, மனப்பான்மையை, நோக்கத்தை மாற்றிக்கொள்வதையும், முந்தைய வழிகள் தவறானதால் அவற்றை நிராகரிப்பதையும் அர்த்தப்படுத்துகிறது. (அப்போஸ்தலர் 3:20; வெளிப்படுத்துதல் 2:5) தமஸ்குவுக்குப் போகும் வழியில் ஏற்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சம்பவத்தை மனதைத் தொடும் நிகழ்ச்சியாக அல்லது ஆன்மீக அனுபவமாக மட்டுமே பவுல் கருதவில்லை. கிறிஸ்துவை அறியாமல் வாழ்ந்த முந்தைய வாழ்க்கை எவ்வளவு வீணானது என்ற உண்மையை இது அவருக்கு உணர்த்தியது. இப்போது கிறிஸ்துவைப் பற்றி அறிந்ததிலிருந்து பயனடைவதற்கு தன் வாழ்க்கையில் மாற்றத்தை செய்ய வேண்டியதையும் அவர் உணர்ந்தார்.—ரோமர் 2:4; எபேசியர் 4:24.
ஆசீர்வாதங்களுக்கு வழிநடத்திய மாற்றம்
முன்பு, கடவுளைப் பற்றிய பரிசேயர்களின் கருத்தே பவுலுக்கும் இருந்தது. ஏனெனில் அவரும் பரிசேயரே. அப்பிரிவினரின் நம்பிக்கைகளில் மனித தத்துவங்களும் பாரம்பரியங்களும் நிறைந்திருந்தன. எனவே, மத சம்பந்தமான தப்பெண்ணங்களினால் பவுலின் வைராக்கியமும் முயற்சிகளும் தவறான வழியில் விரயமானது. கடவுளுக்கு சேவை செய்வதாக நினைத்துக்கொண்டு உண்மையில் அவருக்கு எதிராக போர் செய்து வந்தார்.—பிலிப்பியர் 3:5, 6.
கிறிஸ்துவையும் கடவுளுடைய நோக்கங்களில் அவருடைய பங்கையும் பற்றி பவுல் திருத்தமாக அறிந்துகொண்டார். எனவே அவர் இப்போது தெரிவு செய்யும் கட்டத்திலிருந்ததை உணர்ந்தார். அவர் செய்ய வேண்டிய தெரிவு: அவர் பரிசேயனாகவே இருந்து தன் அந்தஸ்தையும் மரியாதையையும் காத்துக்கொள்வாரா அல்லது தன் வாழ்க்கையை மாற்றிக்கொண்டு கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற தேவையான அனைத்தையும் செய்ய ஆரம்பிப்பாரா? இதில் பவுல் சரியானதை தெரிவு செய்தார் என்பதே சந்தோஷமான விஷயம். “கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது” என அவர் சொன்னார். (ரோமர் 1:16) கிறிஸ்துவையும் ராஜ்யத்தையும் பற்றி வைராக்கியமாய் பிரசங்கிப்பவராக பவுல் மாறினார்.
பல ஆண்டுகளுக்குப் பின் உடன் கிறிஸ்தவர்களிடம் பவுல் இவ்வாறு சொன்னார்: “அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.” (பிலிப்பியர் 3:13, 14) கடவுளிடமிருந்து தன்னை வெகு தொலைவுக்கு இழுத்து சென்ற காரியங்களை விட்டுவிட்டு, அவருடைய நோக்கத்திற்கு இசைவான இலக்குகளை இருதயப்பூர்வமாக தொடர பவுல் விரும்பியதால் நற்செய்தியிலிருந்து பயனடைந்தார்.
நீங்கள் என்ன செய்வீர்கள்?
சமீபத்தில்தான் ஒருவேளை ராஜ்ய நற்செய்தியை நீங்கள் கேட்டிருக்கலாம். குறை ஏதுமில்லா பரதீஸில் என்றும் வாழும் நம்பிக்கை உங்களுக்கு சந்தோஷம் அளிக்கிறதா? நிச்சயம் அளிக்கும், ஏனென்றால் நம் எல்லாருக்குமே நீடித்து வாழ வேண்டும், சமாதானமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்ற இயற்கையான ஆசை உள்ளது. கடவுள், ‘நித்திய கால நினைவை நம் உள்ளத்தில் வைத்திருக்கிறார்’ என்று பைபிள் காட்டுகிறது. (பிரசங்கி 3:11, NW) ஆகவே சமாதானமாகவும் சந்தோஷமாகவும் என்றென்றும் வாழும் நாளுக்காக ஆவலாய் காத்திருப்பது இயல்பே. இந்த நம்பிக்கையைத்தான் ராஜ்ய நற்செய்தி அளிக்கிறது.
ஆனால் அந்த நம்பிக்கை நிறைவேற ராஜ்ய நற்செய்தியை நீங்கள் அலசி ஆராய வேண்டியது அவசியம். ‘தேவனுடைய நன்மையும், பிரியமும், பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று [உங்களுக்கு நீங்களே] நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்’ என அப்போஸ்தலன் பவுல் அறிவுரை கூறினார். (ரோமர் 12:2) ஆகவே பவுலைப் போல விஷயங்களை ஆராய்ந்தறிந்த பிறகு நீங்கள் தெரிவு செய்ய வேண்டும்.
எதிர்காலத்தைக் குறித்து சில கருத்துக்களை நீங்கள் ஏற்கெனவே நம்பி வந்திருக்கலாம். சவுலுக்கும்தான் அப்போஸ்தலன் பவுலாக மாறுவதற்கு முன்பு கடவுளுடைய சித்தத்தைப் பற்றி சொந்த கருத்துக்கள் இருந்தன. அற்புதகரமாய் கடவுள் காரியங்களை வெளிப்படுத்தும்படி எதிர்பார்க்காமல் நீங்களே ஏன் நியாயமாக சிந்திக்கக்கூடாது? உங்களை இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘மனிதகுலத்தையும் பூமியையும் பற்றிய கடவுளுடைய விருப்பத்தை நான் உண்மையில் அறிந்திருக்கிறேனா? என் நம்பிக்கைக்கு ஆதாரத்தை என்னால் அளிக்க முடியுமா? அந்த ஆதாரத்தை கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளோடு ஒப்பிட்டுப் பரிசீலிக்கையில் செல்லுபடியாகுமா?’ உங்கள் மத நம்பிக்கைகளை இப்படி ஆராய்ந்தால் எந்த விதத்திலும் நீங்கள் நஷ்டமடையப் போவதில்லை. சொல்லப்போனால், நீங்கள் இதைத்தான் செய்ய வேண்டும், ஏனென்றால் இப்படி செய்யும்படியே, “எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்” என்றே பைபிளும் நம்மை ஊக்குவிக்கிறது. (1 தெசலோனிக்கேயர் 5:21) கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதானே மிக முக்கியம்.—யோவான் 17:3; 1 தீமோத்தேயு 2:3, 4.
நமக்கு நித்திய எதிர்காலம் இருப்பதாக மதத்தலைவர்கள் வாக்குறுதி அளிக்கலாம். ஆனால் அந்த வாக்குறுதிக்கு பைபிள் போதனைகளில் ஆதாரமில்லை என்றால் கடவுளுடைய ராஜ்யத்தின் ஆசீர்வாதங்களை பெற முடியாது. இயேசுவின் பிரசித்திப் பெற்ற மலைப்பிரசங்கத்தில் அவர் அதைக் குறித்து பெரிதும் எச்சரித்திருக்கிறார்: “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.”—மத்தேயு 7:21.
கடவுளுடைய ராஜ்ய ஆசீர்வாதங்களைப் பெற, பிதாவின் சித்தத்தின்படி செய்வதே முக்கியம் என இயேசு வலியுறுத்தியதை கவனியுங்கள். வேறு வார்த்தைகளில் சொன்னால், தேவபக்தியின் தோற்றம் இருந்தால் கடவுளது அங்கீகாரமும் இருக்கும் என சொல்ல முடியாது. எனவே, இயேசு இப்படி தொடர்ந்து கூறினார்: “அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.” (மத்தேயு 7:22, 23) ராஜ்யத்தின் நற்செய்தியைத் திருத்தமாக புரிந்துகொண்டு, அதற்கேற்ப நடப்பதை நிச்சயப்படுத்திக் கொள்வதே முக்கியம் என்பது தெள்ளத்தெளிவான உண்மை.—மத்தேயு 7:24, 25.
இதோ, உதவி
யெகோவாவின் சாட்சிகள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை பிரசங்கித்து வருகின்றனர். இவர்கள், ராஜ்யம் என்பது என்ன, அது தரும் ஆசீர்வாதங்கள் என்ன, அதை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் ஆகியவற்றை திருத்தமாக அறிய உலகெங்கும் உள்ளவர்களுக்கு உதவி வருகின்றனர். பிரசுரங்கள் வாயிலாகவும் நேரடியாக போதிப்பதன் வாயிலாகவும் இதை செய்து வருகின்றனர்.
யெகோவாவின் சாட்சிகள் பிரசங்கிக்கும் செய்திக்கு செவிசாய்க்கும்படி உங்களுக்கு அழைப்புவிடுக்கிறோம். நற்செய்தியை ஏற்று, அதற்கேற்ப நடப்பதன் மூலம் நீங்கள் மகத்தான ஆசீர்வாதங்களைப் பெறலாம். அந்த ஆசீர்வாதங்களை இப்போது மட்டுமல்ல, கடவுளுடைய ராஜ்யம் பூமி முழுவதையும் ஆளும்போதும் பெறலாம்.—1 தீமோத்தேயு 4:8.
இது செயல்படுவதற்கான சமயம், இதோ, கடவுளுடைய ராஜ்ய ஆசீர்வாதங்கள் சமீபத்தில்!
[பக்கம் 7-ன் படங்கள்]
பிரசுரங்கள் வாயிலாகவும் நேரடியாகவும் யெகோவாவின் சாட்சிகள் கடவுளுடைய ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கித்து வருகின்றனர்