ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை
இந்தியா—“வேற்றுமையிலும் ஒற்றுமை”
“வேற்றுமையிலும் ஒற்றுமை” என்பதே இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டை விவரிக்க பயன்படுத்தப்படும் பிரபலமான ஸ்லோகன். கலாச்சாரம், மொழி, மதம், இனப் பிரிவுகள், உடை, உணவு என பெரும் வேற்றுமைகள் நிறைந்த இந்த பரந்த தேசத்தில் ஒற்றுமையை முயன்று அடைவது இமாலயப் பணி. ஆனால், இந்தியாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளின் நிர்வாக அலுவலகத்திலுள்ள வாலண்டியர்கள், பல மாநிலங்களிலிருந்தும் யூனியன் பிரதேசங்களிலிருந்தும் வந்தவர்கள், பல்வேறு மொழிகளைப் பேசுகிறவர்கள். எனினும் அத்தகைய ஒற்றுமையை அங்கு காணலாம்.
• ராஜ்ராணியைப் பற்றி நாம் முதலில் அறிவோம். இந்த இளம் பெண், இந்தியாவின் வடமேற்கு முனையிலுள்ள பஞ்சாபிலிருந்து வந்தவள். ராஜ்ராணி பள்ளியில் படிக்கையில் அவளுடைய தோழி ஒருத்தி யெகோவாவின் சாட்சிகளிடம் பைபிள் படிக்க ஆரம்பித்தாள். அந்தத் தோழி இளம் ராஜ்ராணிக்கு பைபிளில் ஆர்வத்தை ஏற்படுத்த முயன்றாள். அந்தத் தோழிக்கு ஆங்கிலம் நன்கு தெரியாது. ஆனால் அந்த சமயத்தில் காவற்கோபுரம் பத்திரிகை பஞ்சாபி மொழியில் இல்லை. எனவே அந்த ஆங்கில பத்திரிகையில் உள்ளதை தனக்கு மொழிபெயர்த்து சொல்வதற்கு ராஜ்ராணியின் உதவியை நாடினாள். காவற்கோபுரத்திலுள்ளதை வாசித்தது ராஜ்ராணியை வெகுவாக கவர்ந்ததால், தன் பெற்றோருடைய எதிர்ப்பின் மத்தியிலும் யெகோவா தேவனுக்குத் தன் வாழ்க்கையை ஒப்புக்கொடுக்கும் அளவுக்கு முன்னேற்றம் செய்தாள். இன்று இந்திய பெத்தேலில் சேவை செய்கிறாள். சத்தியத்திற்குத் தன் கண்களைத் திறக்க உதவிய அதே வேலையைத்தான் அவள் செய்து வருகிறாள். ஆம், கிறிஸ்தவ பிரசுரங்களை பஞ்சாபியில் மொழிபெயர்க்கிறாள்!
• அடுத்து பிஜோவைப் பற்றி அறிந்துகொள்வோம். இவர் இந்தியாவின் வேறொரு பகுதியை அதாவது, கேரளாவின் தென்மேற்குப் பகுதியைச் சேர்ந்தவர். தேசிய கொண்டாட்டங்களில் நடுநிலைமை வகித்ததால் பிஜோ உயர்நிலைப் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதற்காக தொடரப்பட்ட நீதிமன்ற வழக்கில் நீண்ட நாட்களுக்குப் பின்பு மெய் வணக்கத்திற்கு மாபெரும் வெற்றி கிட்டியது. எனவே பிஜோவால் பள்ளிக்குத் திரும்பவும் செல்ல முடிந்தது.a பின்னர் கல்லூரியிலும் காலடி எடுத்து வைக்க முடிந்தது. எனினும், கல்லூரியிலிருந்த ஒழுக்கக்கேடான சூழ்நிலை அவருடைய மனசாட்சியை உறுத்தியதால் முதல் ஆண்டிலேயே கல்லூரியை விட்டு விலகினார். இப்போது பத்து ஆண்டுகளாக பெத்தேலில் சேவை செய்கிறார். உயர் கல்வியைப் படித்திருந்தால் கிடைத்திருக்கும் நன்மையைப் பார்க்கிலும், வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் பெத்தேல் குடும்பத்தில் இருப்பதால் அதிக நன்மையை அடைந்திருப்பதாக உணருகிறார்.
• கடைசியாக நார்மா மற்றும் லில்லியை சந்திப்போம். இருவருமே 70 வயதைக் கடந்தவர்கள், பல வருடங்கள் விதவைகளாய் இருப்பவர்கள். இருவருமே முழுநேர ஊழியத்தில் 40-க்கும் அதிகமான வருடங்களை செலவழித்தவர்கள். லில்லி, சுமார் 20 வருடங்களாக தமிழ் மொழிபெயர்ப்பாளராக கிளை காரியாலயத்தில் வேலை செய்து வருகிறார். நார்மா, 13 வருடங்களுக்கு முன் தன் கணவன் இறந்த பிறகு பெத்தேல் வந்தார். சுறுசுறுப்பாகவும் கடினமாகவும் வேலை செய்வதில் இருவருமே முத்தான முன்மாதிரிகள். அதோடு, முழு பெத்தேல் குடும்பத்தின் ஒற்றுமைக்கும் பங்களிக்கின்றனர். விருந்தினரை உபசரிப்பதில் அவர்களுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. பெத்தேல் குடும்பத்திலுள்ள இளைய தலைமுறையுடன் தங்கள் நீண்டகால கிறிஸ்தவ வாழ்க்கையின் சந்தோஷங்களை பகிர்ந்துகொள்வதிலும் அதிகமாய் மகிழ்கின்றனர். இளைஞரும் நட்புறவு கொள்வதற்காக அவர்களை தங்கள் ரூம்களுக்கு அழைத்து, தேவைப்படும்போது உதவிசெய்வதன் மூலம் அவர்களுக்கு கைமாறு செய்கின்றனர். என்னே அருமையான லட்சிய மாதிரிகள்!
பல இடங்களில் சச்சரவையும் ஒற்றுமையின்மையையும் உண்டாக்குகிற வேற்றுமைகளை சமாளித்து வந்திருக்கும் இந்த வாலண்டியர்கள், இந்தியாவிலுள்ள ஒற்றுமையான பெத்தேல் குடும்பத்தில் சந்தோஷமாய் தோளோடு தோள் சேர்ந்து உழைத்து, மற்றவர்களுக்காக சேவை செய்கின்றனர்.—சங்கீதம் 133:1.
[அடிக்குறிப்பு]
[பக்கம் 8-ன் படத்திற்கான நன்றி]
பின்னணி: Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.