கீழ்ப்படிதல்—பிள்ளைப்பருவ முக்கிய பாடமா?
“பெற்றோருக்கு தனித்தன்மைமிக்க பிள்ளைகள் தேவை, கீழ்ப்படிதலை மட்டுமே காட்டும் பிள்ளைகள் அல்ல.” இது ஒரு செய்தித்தாளில் வெளிவந்த தலையங்கம். நியூ ஜீலாந்தில் செய்யப்பட்ட சுற்றாய்வின் அடிப்படையில் இந்தச் சிறிய கட்டுரை பிரசுரிக்கப்பட்டிருந்தது. “பதிலளித்தவர்களில் 22 சதவீதத்தினரே பிள்ளைகளுக்கு வீட்டில் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என நினைத்தனர்” என அது வெளிப்படுத்திற்று. நல்ல பழக்கவழக்கங்கள், சுதந்திரப் போக்கு, பொறுப்பு போன்றவற்றை பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்பது அதைப் பார்க்கிலும் அதிமுக்கியமானதாக இன்று பெற்றோர் கருதுவதையும் அந்தச் சுற்றாய்வு வெளிப்படுத்தியது.
தனித்தன்மைக்கும் சுயவிருப்பங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இந்தச் சகாப்தத்தில், கீழ்ப்படிதலைப் பற்றியும், பிள்ளைகளுக்கு அதைக் கற்றுக்கொடுப்பதைப் பற்றியும் பெரும்பான்மையோரிடம் நம்பிக்கையான கருத்து நிலவாததில் ஆச்சரியமில்லை. ஆனால் பிள்ளைப்பருவ கீழ்ப்படிதல் பத்தாம்பசலி முறை, இன்றைக்குப் பொருந்தாது என கருதி கவனம் செலுத்தாமல் இருந்துவிட வேண்டுமா? அல்லது கீழ்ப்படிதல் பிள்ளைகள் கற்று பயனடையும் ஒரு முக்கிய பாடமா? அதிலும் முக்கியமாய், பெற்றோருக்குக் காட்டும் கீழ்ப்படிதலை, குடும்ப ஏற்பாட்டை ஏற்படுத்திய யெகோவா தேவன் எவ்வாறு கருதுகிறார், அத்தகைய கீழ்ப்படிதலினால் வரும் சில நன்மைகள் யாவை?—அப்போஸ்தலர் 17:28; எபேசியர் 3:14, 15.
“இது நியாயம்”
“பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம்” என எபேசுவிலிருந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையிலிருந்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (எபேசியர் 6:1) ஆகவே இப்படிப்பட்ட கீழ்ப்படிதலுக்கான முதல் காரணம், எது சரி என்பதற்குரிய கடவுளுடைய தராதரத்தோடு ஒத்திருப்பதேயாகும். பவுல் குறிப்பிடுகிற பிரகாரம், “இது நியாயம்.”
இதற்கு இசைவாக, அன்போடு கூடிய பெற்றோரின் சிட்சையை அழகிய அணிகலனாக கடவுளுடைய வார்த்தை விவரிப்பதை நாம் காண்கிறோம். இது, “உன் சிரசுக்கு அலங்காரமான முடியும், உன் கழுத்துக்குச் சரப்பணியுமாயிருக்கும்” என்றும் “இது கர்த்தருக்குப் பிரியமானது” என்றும் குறிப்பிடுகிறது. (நீதிமொழிகள் 1:8, 9; கொலோசெயர் 3:20) இதற்கு நேர்மாறாக, பெற்றோருக்குக் கீழ்ப்படியாமை கடவுளின் அங்கீகாரத்தை இழக்க செய்கிறது.—ரோமர் 1:30, 32.
“உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும்”
பவுல் பின்வருமாறு எழுதினபோது கீழ்ப்படிதலின் மற்றொரு நன்மையைக் குறிப்பிட்டார்: “உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது.” (எபேசியர் 6:2, 3; யாத்திராகமம் 20:12) பெற்றோருக்குக் கீழ்ப்படிதல் எந்த விதங்களில் ஒருவருடைய சுகநலத்திற்கு வழி செய்யும்?
முதலாவதாக, பெற்றோருக்கு வயதும் அனுபவமும் கைகொடுப்பது உண்மையல்லவா? கம்ப்யூட்டர்களைப் பற்றி அல்லது பள்ளியில் கற்பிக்கப்படும் மற்ற விஷயங்களைப் பற்றி அவர்களுக்கு அதிகம் தெரியாதுதான்; ஆனால் வாழ்க்கையையும், அதில் எதிர்ப்படும் பிரச்சினைகளை சமாளிப்பதையும் பற்றி அதிகம் அறிந்திருக்கின்றனர். மறுபட்சத்தில் இளைஞர்களோ, முதிர்ச்சியால் வரும் நிதான சிந்தனையில் குறைவுபடுகின்றனர். ஆகவே அவர்கள் முன்யோசனையின்றி அவசரப்பட்டு தீர்மானம் செய்துவிடுகிறார்கள்; தவறான காரியங்களை செய்ய தூண்டுகையில் இணங்குவிடுகிறார்கள்; பின்னர் மோசமான விளைவுகளை அனுபவிக்கின்றனர். “பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்” என பைபிள் சரியாகவே சொல்கிறது. அதை எப்படி நீக்குவது? “அதைத் தண்டனையின் பிரம்பு அவனைவிட்டு அகற்றும்.”—நீதிமொழிகள் 22:15.
கீழ்ப்படிதல் தரும் நன்மைகள், பெற்றோர்-பிள்ளை உறவோடு நின்றுவிடுவதில்லை. மனித சமுதாயம் ஒழுங்காயும் பயனுள்ளதாயும் செயல்பட ஒத்துழைப்பு தேவை; அதற்கு ஓரளவு கீழ்ப்படிதல் அவசியம். உதாரணத்திற்கு, திருமண பந்தத்தில் ஒருவருக்கொருவர் தங்கள் உரிமைகளையும் உணர்ச்சிகளையும் மதிக்காமல் பிடிவாதம் பிடிப்பதைப் பார்க்கிலும், விட்டுக்கொடுக்க மனமுள்ளோராய் இருப்பது சமாதானத்தையும், ஒற்றுமையையும், சந்தோஷத்தையும் தரும். வேலை செய்யுமிடத்தில், பணிவுடன் கீழ்ப்பட்டு நடந்தால்தான், எந்த வியாபாரமும் அல்லது முயற்சியும் வெற்றி பெறும். அரசாங்க சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் கீழ்ப்படியும் ஒருவர் தண்டனையிலிருந்து தப்புவதோடு ஓரளவு பாதுகாப்பையும் அனுபவிக்கிறார்.—ரோமர் 13:1-7; எபேசியர் 5:21-25; 6:5-8.
அதிகாரத்திற்குக் கீழ்ப்படிய மறுக்கும் இளைஞர்களால் சமுதாயத்திற்கு உபயோகம் அல்ல, உபத்திரவமே மிச்சம். ஆனால், கீழ்ப்படிதல் என்ற பிள்ளைப்பருவ பாடமோ வாழ்நாள் பூராவும் பலனளிக்கும். பிள்ளைப்பருவத்திலேயே இதைக் கற்றுக்கொள்வதால் எவ்வளவு பிரயோஜனம்!
கீழ்ப்படிதலுக்கு மகத்தான பரிசு
கீழ்ப்படிதல், குடும்ப உறவில் சந்தோஷத்தையும் நிரந்தர நன்மைகளையும் தருகிறது. அதுமட்டுமா, எல்லாவற்றிற்கும் மேலான மிக முக்கிய உறவுக்கு, அதாவது தனிப்பட்டவருக்கும் சிருஷ்டிகருக்கும் இடையிலான உறவுக்கு அது அஸ்திவாரமாயும் அமைகிறது. ‘மகத்தான சிருஷ்டிகராகவும்’ ‘ஜீவ ஊற்றாகவும்’ யெகோவா தேவன் இருப்பதால் நாம் முழுமையாய் அவருக்குக் கீழ்ப்படிவது நியாயமானதே.—பிரசங்கி 12:1, NW; சங்கீதம் 36:9.
“கீழ்ப்படிதல்” என்ற இந்த வார்த்தை அதன் பல்வேறு சொல் வடிவங்களில் அநேக தடவை பைபிளில் உபயோகிக்கப்பட்டிருக்கிறது. மேலும், கடவுளுடைய பிரமாணங்கள், கட்டளைகள், கற்பனைகள், நியமங்கள், தீர்ப்புகள் ஆகியவை நூற்றுக்கணக்கில் உள்ளன. இவை யாவற்றிற்கும் கீழ்ப்படிதல் தேவை. கீழ்ப்படிதல் காட்டினால் மட்டுமே தமது அங்கீகாரத்தைப் பெற முடியும் என்ற கடவுளின் நோக்குநிலை நமக்கு நன்கு தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. ஆம், யெகோவாவிடம் உறவை வளர்த்துக்கொள்ள கீழ்ப்படிதல் மிக மிக முக்கியம். (1 சாமுவேல் 15:22) மனிதனின் இயல்பான போக்கு கீழ்ப்படிதல் அல்ல கீழ்ப்படியாமையே என்பது வருத்தகரமான உண்மை. “மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயது தொடங்கிப் பொல்லாததாயிருக்கிறது” என்று பைபிள் சொல்லுகிறது. (ஆதியாகமம் 8:21) ஆகையால் கீழ்ப்படிதலின் பாடத்தை பிள்ளைப் பருவத்தில் மட்டுமல்ல, வாழ்நாள் முழுவதுமே கற்க வேண்டும். அது மகத்தான பரிசை அளிக்கிறது.
அப்போஸ்தலன் பவுல் சொன்னதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். பெற்றோருக்குக் கீழ்ப்படியும்படியான கட்டளை, இரட்டை ஆசீர்வாதத்தை உள்ளடக்குகிறது. ‘உனக்கு நன்மை உண்டாகும்’ என்றும் ‘பூமியிலே உன் வாழ்நாள் நீடிக்கும்’ என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த ஆசீர்வாதம் நிச்சயம் என்பது நீதிமொழிகள் 3:1, 2-ல் காணப்படுகிறது: “என் மகனே, என் போதகத்தை மறவாதே; உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது. அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும், தீர்க்காயுசையும், சமாதானத்தையும் பெருகப் பண்ணும்.” கீழ்ப்படிகிறவர்கள் இப்போது யெகோவாவுடன் தனிப்பட்ட உறவை அனுபவிக்க முடியும், சமாதான புதிய உலகில் நித்திய ஜீவனைப் பெற முடியும். இதுவே கீழ்ப்படிதலுக்கான மகத்தான பரிசு.—வெளிப்படுத்துதல் 21:3, 4.
[பக்கம் 30, 31-ன் படங்கள்]
கீழ்ப்படிவது, குடும்பத்திலும் வேலை செய்யுமிடத்திலும் யெகோவாவிடத்திலும் சந்தோஷமான உறவுக்கு வழிசெய்கிறது