உங்கள் கீழ்ப்படிதலை யெகோவா உயர்வாய்க் கருதுகிறார்
“என் மகனே, . . . நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து.” —நீதிமொழிகள் 27:11.
1. இன்று எவ்வகையான மனப்பான்மை உலகெங்கிலும் பரவியுள்ளது?
இன்று கீழ்ப்படியாமையும் மனம்போல் வாழும் மனப்பான்மையும் உலகெங்கிலும் பரவலாகக் காணப்படுகின்றன. இதற்கான காரணத்தை எபேசிய கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு விளக்குகிறார்: “நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள்.” (எபேசியர் 2:1, 2) சொல்லப்போனால் “ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய” பிசாசு எனும் சாத்தான், இந்த முழு உலகத்திலும் கீழ்ப்படியாமையின் ஆவியை, அதாவது மனப்பான்மையைப் பரவச் செய்திருக்கிறான். முதல் நூற்றாண்டிலேயே அவன் இவ்வாறு செய்து வந்தான்; ஏறக்குறைய முதல் உலகப் போர் ஆரம்பித்த சமயத்தில் பரலோகத்திலிருந்து அவன் வெளியேற்றப்பட்டது முதற்கொண்டு மிக மும்முரமாக இதைச் செய்து வருகிறான்.—வெளிப்படுத்துதல் 12:9.
2, 3. யெகோவாவுக்குக் கீழ்ப்படிய நமக்கு என்ன காரணங்கள் இருக்கின்றன?
2 என்றாலும், யெகோவா தேவன் நம் படைப்பாளராக, நம் உயிரைக் காப்பவராக, அன்பான பேரரசராக, நம் மீட்பராக இருக்கிறார்; அதனால் நம்முடைய இருதயப்பூர்வமான கீழ்ப்படிதலைப் பெறத் தகுந்தவர் அவரே என்பதை கிறிஸ்தவர்களாகிய நாம் அறிந்திருக்கிறோம். (சங்கீதம் 148:5, 6; அப்போஸ்தலர் 4:24; கொலோசெயர் 1:13; வெளிப்படுத்துதல் 4:11) தங்களுக்கு உயிர் தந்தவரும், விடுதலை அளித்தவரும் யெகோவாவே என்பதை மோசே காலத்தில் வாழ்ந்த இஸ்ரவேலர் அறிந்திருந்தார்கள். அதனால்தான் அவர்களிடம் மோசே இவ்வாறு கூறினார்: “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கற்பித்தபடியே செய்யச் சாவதானமாயிருங்கள்; வலதுபுறம் இடதுபுறம் சாயாதிருப்பீர்களாக.” (உபாகமம் 5:32) ஆம், அவர்களுடைய கீழ்ப்படிதலைப் பெற யெகோவா தகுதியானவராய் இருந்தார். ஆனாலும், அவர்கள் சீக்கிரத்திலேயே கடவுளுக்குக் கீழ்ப்படியாமற்போனார்கள்.
3 இப்பிரபஞ்சத்தைப் படைத்தவருக்கு நாம் கீழ்ப்படிவது எந்தளவு முக்கியம்? ஒருசமயம், சவுல் ராஜாவிடம் கூறும்படி சாமுவேல் தீர்க்கதரிசியிடம் கடவுள் இவ்வாறு சொன்னார்: ‘பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலே உத்தமம் [அதாவது சிறந்தது].’ (1 சாமுவேல் 15:22, 23) ஏன் அப்படிச் சொன்னார்?
‘பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதல் சிறந்தது’—எப்படி?
4. யெகோவாவுக்கு நாம் எதையாவது கொடுக்க முடியுமா, எந்த அர்த்தத்தில்?
4 யெகோவா படைப்பாளராக இருப்பதால் நம்மிடமுள்ள அனைத்துப் பொருட்களும் அவருக்குச் சொந்தமானவையே. அப்படியெனில், அவருக்கு நாம் எதையாவது கொடுக்க முடியுமா? நிச்சயம் கொடுக்க முடியும், பெருமதிப்புமிக்க ஒன்றை அவருக்கு நாம் கொடுக்க முடியும். அது என்ன? அதுதான் கீழ்ப்படிதல்; அதை நம்மால் கடவுளுக்குக் கொடுக்க முடியும். பின்வரும் அறிவுரையிலிருந்து இதை நாம் புரிந்துகொள்ளலாம்: “என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவு கொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து.” (நீதிமொழிகள் 27:11) நம்முடைய சூழ்நிலைகளும் பின்னணிகளும் வித்தியாசப்பட்டவையாய் இருந்தாலும், கடவுளுக்குக் கீழ்ப்படிவதன்மூலம் நாம் ஒவ்வொருவருமே பிசாசாகிய சாத்தானின் சவாலுக்குப் பதிலடி கொடுக்க முடியும்; அதாவது, சோதனைகள் வருகையில் மனிதர்கள் கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாய் இருக்க மாட்டார்கள் என்ற சாத்தானின் பொய்யான சவாலுக்கு நாம் பதிலடி கொடுக்க முடியும். இது அரும்பெரும் பாக்கியம் அல்லவா?
5. நாம் கீழ்ப்படியாமற்போனால் அது நம் படைப்பாளரை எப்படிப் பாதிக்கிறது? விளக்குங்கள்.
5 நாம் எடுக்கும் தீர்மானங்களில் கடவுள் அக்கறையுள்ளவராய் இருக்கிறார். நாம் அவருக்குக் கீழ்ப்படியாமற்போனால், அது அவரைப் பாதிக்கிறது. எப்படி? யாரேனும் அவ்வாறு ஞானமில்லாத விதத்தில் நடந்துகொள்வதைப் பார்க்கையில் அவரது மனம் விசனப்படுகிறது. (சங்கீதம் 78:40, 41) சர்க்கரை நோயாளி ஒருவர், தன்னுடைய நன்மைக்காக டாக்டர் கொடுத்த அறிவுரையை அசட்டை செய்து தான் சாப்பிடக்கூடாத உணவைச் சாப்பிடுகிறார் என வைத்துக்கொள்ளுங்கள். அவருடைய டாக்டருக்கு எப்படி இருக்கும்? அவ்வாறே, மனிதர்கள் யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமற்போகையில் அவருடைய மனம் வேதனைப்படுகிறது என்பதில் சந்தேகமில்லை; ஏனெனில், நம் ஜீவனுக்காக யெகோவா கொடுக்கும் அறிவுரையை ஒதுக்கித்தள்ளுவதால் வரும் தீய விளைவுகளை அவர் அறிந்திருக்கிறார்.
6. கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடக்க எது நமக்கு உதவும்?
6 நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட விதமாகக் கீழ்ப்படிந்து நடக்க எது நமக்கு உதவும்? சாலொமோன் ராஜா கேட்டதுபோல் நாம் ஒவ்வொருவரும் ‘கீழ்ப்படிதலுள்ள இருதயத்தை’ (NW) தரும்படி கடவுளிடம் கேட்பது சரியே. இஸ்ரவேலரை நியாயம் விசாரிக்கையில், ‘நன்மை தீமை இன்னதென்று வகையறுப்பதற்காக’ அத்தகைய இருதயத்தைத் தரும்படி அவர் கேட்டார். (1 இராஜாக்கள் 3:9) கீழ்ப்படியாமை எனும் மனப்பான்மை பரவியுள்ள இவ்வுலகில் நன்மை தீமையைப் பகுத்துணர வேண்டுமானால், ‘கீழ்ப்படிதலுள்ள இருதயம்’ நமக்குத் தேவை. ‘கீழ்ப்படிதலுள்ள இருதயத்தை’ வளர்த்துக்கொள்ள அன்பான ஏற்பாடுகளை கடவுள் செய்திருக்கிறார். பைபிளையும் பைபிள் படிப்புக்கு உதவும் பிற கருவிகளையும் நமக்குத் தந்திருக்கிறார்; அதோடு, கிறிஸ்தவ கூட்டங்களையும் அக்கறையுள்ள சபை மூப்பர்களையும்கூட ஏற்பாடு செய்திருக்கிறார். நாம் இவற்றையெல்லாம் நன்கு பயன்படுத்திக் கொள்கிறோமா?
7. யெகோவா ஏன் பலிகளைவிட கீழ்ப்படிதலை வலியுறுத்துகிறார்?
7 இது சம்பந்தமாக, தம் பூர்வகால மக்களிடம் யெகோவா சொன்னதை நினைவுபடுத்திப் பாருங்கள்; மிருக பலிகளைச் செலுத்துவதைவிட கீழ்ப்படிவது மிக மிக முக்கியம் என அவர்களுக்குச் சொன்னார். (நீதிமொழிகள் 21:3, 27; ஓசியா 6:6; மத்தேயு 12:7) யெகோவாதாமே மிருக பலிகளைச் செலுத்தும்படி கட்டளையிட்டிருந்தார் அல்லவா, அப்படியிருக்க அவரே ஏன் அவ்வாறு சொன்னார்? முதலாவதாக, பலி செலுத்துபவர் என்ன நோக்கத்துடன் அதைச் செலுத்துகிறார்? கடவுளைப் பிரியப்படுத்துவதற்காகவா, வெறும் சடங்கிற்காகவா? ஒருவர் உண்மையிலேயே கடவுளைப் பிரியப்படுத்த விரும்பினால், அவருடைய எல்லாக் கட்டளைகளுக்கும் கீழ்ப்படியக் கவனமாய் இருப்பார். மிருக பலிகள் கடவுளுக்குத் தேவையில்லை, ஆனால் நம் கீழ்ப்படிதலே அவருக்குத் தேவை; அதை அவர் உயர்வாய்க் கருதுகிறார்.
எச்சரிப்பூட்டும் உதாரணம்
8. சவுலை அரச பதவியிலிருந்து கடவுள் ஏன் நீக்கினார்?
8 சவுல் ராஜாவைப்பற்றிய பைபிள் பதிவு கீழ்ப்படிதலின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. சவுல், ஆரம்பத்தில் அடக்கமும் மனத்தாழ்மையுமுள்ள ராஜாவாக, ‘தன்னுடைய பார்வைக்குச் சிறியவராக’ இருந்தார். என்றாலும், பிற்பாடு அவர் கர்வமான ராஜாவாக மாறினார்; தவறான சிந்தையுடன் தீர்மானங்களைச் செய்தார். (1 சாமுவேல் 10:21, 22; 15:17) ஒரு சந்தர்ப்பத்தில், பெலிஸ்தர்களுக்கு எதிராக அவர் போரிட வேண்டியிருந்தது. அப்போது, யெகோவாவுக்குப் பலிசெலுத்துவதற்கும் அடுத்துச் செய்யவேண்டியவற்றை அறிந்துகொள்வதற்கும் தான் வரும்வரை காத்திருக்கும்படி சவுலிடம் சாமுவேல் சொல்லியிருந்தார். ஆனால், ராஜா எதிர்பார்த்த சமயத்திற்குள்ளாக சாமுவேல் வந்துசேரவில்லை, ஜனங்களும் அங்கிருந்து புறப்பட ஆரம்பித்தார்கள். அதைப் பார்த்த சவுல், ‘சர்வாங்க தகனபலியைச் செலுத்தினார்.’ அது யெகோவாவுக்குப் பிடிக்காத செயலாக இருந்தது. கடைசியில் சாமுவேல் வந்துசேர்ந்தபோது, தான் கீழ்ப்படியாமற்போனதற்கு சவுல் சாக்குப்போக்கு சொன்னார்; சாமுவேல் காலந்தாழ்த்தி வந்ததாலேயே, சர்வாங்க தகனபலியைச் செலுத்தி யெகோவாவின் தயவைப் பெறத் ‘துணிந்ததாக’ சொன்னார். சவுலைப் பொறுத்தவரை, அந்தப் பலியைச் செலுத்த சாமுவேல் வரும்வரை காத்திருக்கும்படி கொடுக்கப்பட்ட அறிவுரைக்குக் கீழ்ப்படிவதைவிட பலி செலுத்துவதுதான் மிக முக்கியமானதாய் இருந்தது. ஆகவே, அவரிடம் சாமுவேல் இவ்வாறு கூறினார்: “புத்தியீனமாய்ச் செய்தீர்; உம்முடைய தேவனாகிய கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையைக் கைக்கொள்ளாமற்போனீர்.” யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போனதால் சவுல் தன் அரச பதவியை இழந்தார்.—1 சாமுவேல் 10:8; 13:5-13.
9. சவுல் தொடர்ந்து கீழ்ப்படியாமையைக் காட்டியது எப்படி?
9 இந்த அனுபவத்திலிருந்து சவுல் பாடம் கற்றுக்கொண்டாரா? இல்லை! பிற்பாடு, அமலேக்கியரைப் பூண்டோடு அழிக்கும்படி சவுலுக்கு யெகோவா கட்டளையிட்டார்; முன்பு, இந்த அமலேக்கியர் எந்தக் காரணமும் இன்றி இஸ்ரவேலரை வலியத் தாக்கியிருந்தார்கள். ஆகவே, அவர்களுடைய ஆடுமாடுகளைக்கூட தப்பவிடாமல் எல்லாவற்றையும் அவர் ஒழித்துக்கட்ட வேண்டியிருந்தது. ‘ஆவிலா துவக்கி சூருக்குப் போகும் எல்லைமட்டும் இருந்த அமலேக்கியரை மடங்கடித்த’ விஷயத்தில் யெகோவாவுக்கு அவர் கீழ்ப்படிந்தார். தன்னைச் சந்திக்க வந்த சாமுவேலிடம் அவர் வெற்றிக்களிப்பில் மிதந்தவாறு இப்படிச் சொன்னார். “நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்; கர்த்தருடைய வார்த்தையை நிறைவேற்றினேன்.” ஆனால், சவுலுக்கும் அவருடைய ஜனங்களுக்கும் திட்டவட்டமாகக் கொடுக்கப்பட்டிருந்த கட்டளைக்கு எதிர்மாறாக ராஜாவாகிய ஆகாகையும் “ஆடுமாடுகளில் முதல்தரமானவைகளையும், இரண்டாந்தரமானவைகளையும், ஆட்டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும்” அவர்கள் தப்பவைத்தார்கள். தான் கீழ்ப்படியாமற்போனதை நியாயப்படுத்தும் விதத்தில் சவுல் இவ்வாறு சொன்னார்: “ஜனங்கள் ஆடுமாடுகளில் நலமானவைகளை உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படிக்குத் தப்பவைத்தார்கள்.”—1 சாமுவேல் 15:1-15.
10. சவுல் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளத் தவறினார்?
10 உடனே சவுலிடம் சாமுவேல் இவ்வாறு கூறினார்: “கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம் [அதாவது, சிறந்தது].” (1 சாமுவேல் 15:22) அந்த மிருகங்களைக் கொன்றுவிட வேண்டுமென யெகோவா உறுதியாகச் சொல்லியிருந்ததால், அவை பலி செலுத்துவதற்கு ஏற்றவையாய் இருக்கவில்லை.
எல்லாக் காரியங்களிலும் கீழ்ப்படியுங்கள்
11, 12. (அ) வணக்கத்திற்காக நாம் எடுக்கும் முயற்சிகளை யெகோவா எப்படிக் கருதுகிறார்? (ஆ) ஒருவர், கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் நடந்துகொண்டு, அதே சமயத்தில் அவருடைய சித்தத்தைச் செய்வதாக நினைத்து தன்னைத் தானே எப்படி ஏமாற்றிக்கொள்ளக்கூடும்?
11 யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்கள் துன்புறுத்தலின் மத்தியிலும் உறுதியாய் நிலைத்திருக்கிறார்கள்; அலட்சிய மனப்பான்மை காட்டுகிற ஜனங்களிடமும் ராஜ்யத்தைப்பற்றி பிரசங்கிக்கிறார்கள்; வயிற்றுப்பாட்டிற்காக கடுமையாய் உழைக்க வேண்டியிருக்கிற போதிலும் கிறிஸ்தவ கூட்டங்களில் கலந்துகொள்கிறார்கள். இவற்றையெல்லாம் பார்க்கும்போது யெகோவாவின் மனம் எவ்வளவாய் பூரிப்படையும்! ஆம், இப்படிப்பட்ட முக்கியமான ஆன்மீகக் காரியங்களுக்கு நாம் கீழ்ப்படியும்போது அவருடைய இருதயம் மகிழ்ச்சியடைகிறது! யெகோவா மீதுள்ள அன்பினிமித்தம் அவரை வணங்குவதற்கு நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியையும் அவர் உயர்வாய்க் கருதுகிறார். நம் கடின உழைப்பை மனிதர்கள் கண்டுகொள்ளாமல் இருக்கலாம்; ஆனால் நாம் இருதயப்பூர்வமாகச் செய்யும் காரியங்களைக் கடவுள் கவனித்து அவற்றை நினைவில் வைக்கிறார்.—மத்தேயு 6:4.
12 என்றாலும், நாம் கடவுளை முழுமையாய்ப் பிரியப்படுத்துவதற்கு, நம் வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். வணக்க விஷயத்தில் கடவுள் எதிர்பார்க்கிற பெரும்பாலான காரியங்களைச் செய்துவருவதால், ஓரிரு காரியங்களை மீறினால் தவறொன்றுமில்லை என நினைத்து நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளக் கூடாது. உதாரணமாக, கடவுளை வழிபடுவது சம்பந்தப்பட்ட சில காரியங்களை இயந்திரத்தனமாகச் செய்துவருவதால், ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டாலோ படுமோசமான பிற தவறுகளைச் செய்தாலோ, தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியுமென நினைத்து ஒருவர் தன்னையே ஏமாற்றிக்கொள்ளக்கூடும். அது எப்பேர்ப்பட்ட தவறு!—கலாத்தியர் 6:7, 8.
13. தனிமையில் இருக்கும்போது, யெகோவாவுக்கு நாம் காட்டுகிற கீழ்ப்படிதலுக்கு என்னென்ன சோதனைகள் வரலாம்?
13 ஆகவே, நம்மைநாமே இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘என்னுடைய அன்றாட காரியங்களில், தனிமையில் செய்யும் காரியங்களிலும்கூட யெகோவாவுக்குக் கீழ்ப்படிகிறேனா?’ இயேசு இவ்வாறு குறிப்பிட்டார்: “கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.” (லூக்கா 16:10) ‘வீட்டில்’ மற்றவர்கள் நம்மைப் பார்க்காத சமயத்திலும்கூட நாம் ‘உத்தம இருதயத்தோடு நடந்துகொள்கிறோமா’? (சங்கீதம் 101:2) ஆம், வீட்டில் இருக்கும்போதுகூட நம்முடைய உத்தமத்தன்மை சோதிக்கப்படலாம். எப்படி? அநேக நாடுகளில் இன்று வீட்டுக்குவீடு கம்ப்யூட்டர் இருக்கிறது; ‘க்ளிக்’ செய்தாலேபோதும், திரையில் ஆபாசக் காட்சிகள் அடுக்கடுக்காய் வந்து நிற்கும். அப்படிப்பட்ட காட்சிகளை சில வருடங்களுக்கு முன்பெல்லாம் சினிமா தியேட்டருக்குப்போய் பார்க்க வேண்டியிருந்தது. அப்படியானால், இயேசுவின் வார்த்தைகளுக்கு நாம் செவிகொடுத்து அவருக்குக் கீழ்ப்படிவோமா? அவர் இவ்வாறு சொன்னார்: “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.” ஆம், ஒழுக்கக்கேடான காட்சிகளைத் தற்செயலாகப் பார்ப்பதைக்கூடத் தவிர்ப்போமா? (மத்தேயு 5:28; யோபு 31:1, 9, 10; சங்கீதம் 119:37; நீதிமொழிகள் 6:24, 25; எபேசியர் 5:3-5) வன்முறைக் காட்சிகள் நிறைந்த டிவி நிகழ்ச்சிகளைப் பற்றி என்ன சொல்லலாம்? ‘கொடுமையில் [அதாவது, வன்முறையில்] பிரியமுள்ளவனை என் உள்ளம் வெறுக்கிறது’ என கடவுள் சொல்லியிருப்பதால் நாமும் அவ்வாறே வெறுக்கிறோமா? (சங்கீதம் 11:5) தனிமையில் இருக்கும்போது மிதமிஞ்சிக் குடிப்பதைப்பற்றி என்ன சொல்லலாம்? குடிவெறியை பைபிள் கண்டிக்கிறது; அதே சமயத்தில், ‘மதுபானத்துக்கு அடிமையாகி விடாதிருக்கும்படியும்’ அது கிறிஸ்தவர்களை எச்சரிக்கிறது.—தீத்து 2:3; லூக்கா 21:34, 35; 1 தீமோத்தேயு 3:3.
14. பண விஷயத்தில் கடவுளுக்குக் கீழ்ப்படிகிறோம் என்பதைக் காட்டுவதற்கான சில வழிகள் யாவை?
14 பண விஷயங்களில்கூட நாம் ஜாக்கிரதையாய் நடந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, ஒருவிதத்தில் மோசடியாக இருக்கிற, திடீர் பணக்காரராக்கும் திட்டங்களில் நாம் சேர்ந்துகொள்வோமா? வரி செலுத்தாமல் இருப்பதற்காக, சட்டவிரோதமான குறுக்கு வழிகளைத் தேட முயலுகிறோமா? அல்லது, ‘யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியைச் செலுத்துங்கள்’ என்ற கட்டளைக்கு மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிகிறோமா?—ரோமர் 13:7.
அன்பினால் தூண்டப்பட்ட கீழ்ப்படிதல்
15. நீங்கள் யெகோவாவின் கட்டளைகளுக்கு ஏன் கீழ்ப்படிகிறீர்கள்?
15 கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதால் அநேக ஆசீர்வாதங்கள் கிடைக்கின்றன. உதாரணமாக, புகையிலையைப் பயன்படுத்தாதிருப்பதன் மூலமும், ஒழுக்கமாய் வாழ்வதன் மூலமும், இரத்தத்தின் பரிசுத்தத்தன்மைக்கு மதிப்புக் கொடுப்பதன் மூலமும் சில நோய்களை நாம் தவிர்க்கலாம். அதுமட்டுமல்ல, வாழ்க்கையின் பிற அம்சங்களிலும் பைபிள் சத்தியத்திற்கு இசைவாக நாம் நடக்கும்போது, பொருளாதார விஷயத்திலும் குடும்பத்திலும் சமுதாயத்திலும் நன்மை அடையலாம். (ஏசாயா 48:17) அத்தகைய நன்மைகள், கடவுளுடைய சட்டங்களின்படி நடப்பதால் கிடைக்கும் ஆசீர்வாதங்களே என உறுதியாகச் சொல்லலாம். இருந்தாலும், யெகோவாவுக்கு நாம் கீழ்ப்படிவதற்கான முக்கியக் காரணம், அவரை நாம் நேசிப்பதே. நாம் சுயநல காரணங்களுக்காக கடவுளைச் சேவிப்பதில்லை. (யோபு 1:9-11; 2:4, 5) யாருக்கு வேண்டுமானாலும் கீழ்ப்படிதலைக் காட்டக்கூடிய சுதந்தரத்தை கடவுள் நமக்குக் கொடுத்திருக்கிறார். ஆனால், யெகோவாவுக்குக் கீழ்ப்படியவே நாம் தீர்மானிக்கிறோம்; நாம் யெகோவாவைப் பிரியப்படுத்த விரும்புவதாலும் நல்லதைச் செய்ய முயலுவதாலுமே அப்படித் தீர்மானிக்கிறோம்.—ரோமர் 6:16, 17; 1 யோவான் 5:3.
16, 17. (அ) இயேசு எப்படி இருதயப்பூர்வமான அன்பினால் தூண்டப்பட்டு கடவுளுக்குக் கீழ்ப்படிதலைக் காட்டினார்? (ஆ) நாம் எவ்வாறு இயேசுவைப் பின்பற்றலாம்?
16 ஆழ்ந்த அன்பினால் தூண்டப்பட்டு யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதில் இயேசு மிகச் சிறந்த முன்மாதிரி வைத்தார். (யோவான் 8:28, 29) பூமியில் இருக்கும்போது, ‘தாம் பட்ட பாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்.’ (எபிரெயர் 5:8, 9) எப்படி? அவர் “மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.” (பிலிப்பியர் 2:7, 8) பரலோகத்திலே கடவுளுக்கு அவர் கீழ்ப்படிந்து நடந்திருந்தபோதிலும், பூமியில் அவருடைய கீழ்ப்படிதல் மேலுமாகச் சோதிக்கப்பட்டது. ஆகவே, தம்முடைய ஆன்மீக சகோதரர்களுக்கும் விசுவாசமுள்ள மற்றவர்களுக்கும் பிரதான ஆசாரியராய் சேவை செய்வதற்கு இயேசு எல்லா விதங்களிலும் தகுதிபெற்றிருக்கிறார் என்பதில் நாம் உறுதியாய் இருக்கலாம்.—எபிரெயர் 4:15; 1 யோவான் 2:1, 2.
17 நம்மைப்பற்றி என்ன? இயேசுவைப்போல, கடவுளுடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிவதற்கே நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். (1 பேதுரு 2:21) சில சமயங்களில் யெகோவாவின் கட்டளைகளுக்கு முரணானவற்றைச் செய்யும்படியான அழுத்தமோ ஆசையோ வரலாம்; இருந்தாலும்கூட யெகோவா மீதுள்ள அன்பினால் தூண்டப்பட்டு அவருடைய கட்டளைகளின்படி செய்யும்போது நாம் தனிப்பட்ட விதமாக திருப்தி காண்போம். (ரோமர் 7:18-20) சபையை நடத்துகிறவர்கள் அபூரணர்களாக இருக்கிறபோதிலும் அவர்கள் கொடுக்கும் அறிவுரைகளுக்கு மனதாரக் கீழ்ப்படிவதும் இதில் அடங்கும். (எபிரெயர் 13:17) நம் தனிப்பட்ட வாழ்க்கையில் யெகோவாவுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதை அவர் உயர்வாய்க் கருதுகிறார்.
18, 19. கடவுளுக்கு இருதயப்பூர்வமாகக் கீழ்ப்படியும்போது நாம் என்னென்ன காரியங்களைச் செய்வோம்?
18 இன்று, நாம் உத்தமமாய் இருக்க முயலுகையில் துன்புறுத்தல்கள் வரலாம்; அவற்றைச் சகிப்பதும் யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதில் உட்படலாம். (அப்போஸ்தலர் 5:29) அதோடு, பிரசங்கித்து சீஷராக்கும்படி யெகோவா கொடுத்த கட்டளைக்குக் கீழ்ப்படியும் விஷயத்திலும் முடிவுபரியந்தம் சகித்து நிலைத்திருப்பது அவசியம். (மத்தேயு 24:13, 14; 28:19, 20) இவ்வுலகத்தின் பிரச்சினைகள் நம்மைப் பாடாய்ப்படுத்தினாலும்கூட, நம் சகோதரர்களோடு ஒன்றுகூடி வருவதற்குச் சகிப்புத்தன்மை அவசியம். அத்தகைய காரியங்களில் கீழ்ப்படிதலைக் காட்ட நாம் எடுக்கும் முயற்சிகளை நம் அன்பான கடவுள் நன்கு அறிந்திருக்கிறார். என்றாலும், அவருக்கு நாம் முழுமையாய்க் கீழ்ப்படிந்திருப்பதற்கு, பாவம் செய்யும் மனப்போக்கைத் தவிர்க்கப் போராடுவதும், தீமையை விட்டுவிலகுவதும், அதே சமயத்தில் நன்மையை நேசிப்பதும் அவசியம்.—ரோமர் 12:9.
19 நன்றியுள்ள இருதயத்தோடும் அன்போடும் நாம் யெகோவாவைச் சேவிக்கும்போது, ‘அவர் தம்மைத் தேடுகிற நமக்குப் பலன் அளிக்கிறவராய் ஆகிறார்.’ (எபிரெயர் 11:6) பொருத்தமான பலிகள் அவசியமானவை, ஏற்கத்தக்கவை; ஆனால் யெகோவா மீதுள்ள அன்பினால் தூண்டப்பட்டு அவருக்கு முழுமையாகக் கீழ்ப்படிவதே அவருக்கு மிகவும் பிரியமானது.—நீதிமொழிகள் 3:1, 2.
நீங்கள் எப்படிப் பதிலளிப்பீர்கள்?
• யெகோவாவுக்கு நாம் ஒன்றைக் கொடுக்க முடியுமென்று ஏன் சொல்லலாம்?
• சவுல் என்னென்ன தவறுகளைச் செய்தார்?
• பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலே சிறந்தது என்பதை நீங்கள் எப்படிக் காட்டலாம்?
• யெகோவாவுக்குக் கீழ்ப்படிய எது உங்களைத் தூண்டுகிறது?
[பக்கம் 26-ன் படம்]
அறிவுரையை அசட்டை செய்கிற நோயாளியைக் கண்டால் டாக்டருக்கு எப்படி இருக்கும்?
[பக்கம் 28-ன் படம்]
சவுல் ராஜா யெகோவாவின் வெறுப்பைச் சம்பாதித்தது ஏன்?
[பக்கம் 30-ன் படம்]
தனிமையாக வீட்டில் இருக்கும்போதும் கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறீர்களா?